அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கும் முதல்வர்; இது சரியா? | பிரபு திலக்
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு, சமீபத்தில் பேசும்போது, “ஆந்திர மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி பெற்றுக்கொள்வோருக்கு சலுகைகள் அளிக்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது என முன்பிருந்த சட்டத்தை நீக்கியிருக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இனி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவருவோம். அதிக குழந்தைகளைப் பெறுவது உங்களுக்காக நீங்கள் செய்யவில்லை, தேசத்தின் நலனுக்காக செய்கிறீர்கள்” என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இதேபோன்ற ஒரு கருத்தைத் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். “இப்போது யாரும் 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துவது கிடையாது. அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஆனால், இன்று ஏன் அளவோடு பெற வேண்டும், நாமும் 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாமே என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது” என்று பேசியுள்ளார்.
இரு தென்னிந்திய மாநில முதலமைச்சர்களின் இந்த பேச்சு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களின் பேச்சில் வெளிப்படும் மக்கள் தொகை பெருக்கம் குறித்து கவலைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, ஒன்றிய அரசின் வரிப் பகிர்வு கொள்கை. மாநிலங்களுக்கு இடையில் வரி வருவாய் பகிர்ந்துகொள்ளப்படுவதற்கு முக்கியக் காரணியாக, அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக, நாடாளுமன்ற தொகுதிகள் மக்கள் தொகைக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யப்படுவது.
கடந்த 2023 மே 28 அன்று, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிப்பதை காணவிருக்கிறோம். அதனடிப்படையில் புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணிப்பது காலத்தின் தேவையாக இருந்தது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் 888 பேர், மாநிலங்களவையில் 384 பேர் அமரலாம்” என்று குறிப்பிட்டார்.
இதன்பின்னர் கடந்த 2023 செப்டம்பர் மாதம் இது குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்று கூறினார்.
இதனடிப்படையில், விரைவில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது நடக்கும்போது தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற அச்சம் ஆந்திரா, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகம் உள்பட அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கும் உள்ளது.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, ஒவ்வொரு பத்தாண்டுக்குப் பிறகும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறு சீரமைப்பு செய்ய முடிவுசெய்யப்பட்டது. தொகுதி எல்லை நிர்ணய சட்டத்தின்படி (Delimitation Act) இந்த தொகுதி மறு வரையறை மேற்கொள்ளப்படுகிறது.
மக்கள் தொகையின் அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும். அரசியல் சட்டத்தின் பிரிவு 81ன் படி, ஒரு மக்களவைத் தொகுதி என்பது 6,50,000 முதல் 8,50,000 வாக்காளர்களைக் கொண்டிருக்க வேண்டும். 1951ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 1952ஆம் ஆண்டு முதன்முதலில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 494 ஆக இருந்தது.
இதனையடுத்து 1963ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றது. அப்போது மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்தது. தொடர்ந்து, 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 1973ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் போது தொகுதிகளின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்தது. இதன் பின்னர் சிக்கிம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டும் இணைக்கப்பட்டு இந்த எண்ணிக்கை 543 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் பின்னர் இன்றுவரை தொகுதி மறுசீரமைப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம் உள்ளது.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு நிலவியது. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்தின. ஆனால், வட இந்தியாவில் சில மாநிலங்களைத் தவிர்த்து, மற்றவை இத்திட்டத்தில் முனைப்புக் காட்டவில்லை. எனவே, மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தென்னிந்திய மாநிலங்களில் குறைந்தது; வட இந்தியாவில் அதிகரித்தது.
எனவே, மக்கள் தொகை அடிப்படையில் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பை அமல்படுத்தினால் தென்மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை குறையும், வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்குத் தண்டனை; அதைச் செயல்படுத்தாத வட இந்திய மாநிலங்களுக்குப் பரிசு என்ற முரணான நிலை உருவானது. எனவே, தென்னிந்திய மாநிலங்கள் இதை எதிர்த்தன.
மேலும் இந்த சமசீரற்ற நிலைமையால் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்வதை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. 1976இல் நெருக்கடிநிலை அமலில் இருந்த காலகட்டத்தில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, மக்களவை எண்ணிக்கை மறு சீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார். இதற்காக அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 81இல் 42ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 1973ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையில் மாற்றம் செய்யாமல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடருவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குள் சீரான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சாத்தியமாகும் என்று நம்பப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
இதனால், 2002இல் பிரதமராக இருந்த வாஜ்பாயும் இந்திரா காந்தியைப் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும், 2001ஆம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மீண்டும் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை மறு வரையறை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டது. அப்போது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்தான் வாஜ்பாய் அரசு நீடித்தது. இதனிடையே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த திமுக தலைவர் கருணாநிதி, 1999 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசும்போது, “தமிழகத்துக்கு 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஒதுக்கப்பட்ட 39 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படாமல் எல்லைகளை மட்டும் மறுவரையறை செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு 02-06-1998ஆம் ஆண்டு கடிதம் எழுதப்பட்டது,” என்று சுட்டிக்காட்டினார்.
எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில மக்கள் தொகையில் சமவிகித நிலை இல்லாததால் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2026ஆம் ஆண்டு வரை மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
2026 நெருங்கும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கும் வடமாநிலங்களுக்கும் இடையே மக்கள் தொகையில் சமவிகித நிலை இல்லாத பழைய நிலையே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
24 செப்டம்பர் 2024 அன்று பாரத ஸ்டேட் வங்கி, ‘Precursor to Census 2024: The Fine Prints of a Rapidly Changing Nation’ என்ற ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 2024இல் இந்தியாவின் மக்கள் தொகை 138 – 142 கோடிக்குள் இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த மக்கள் தொகை அதிகரிப்பில் தென்மாநிலங்களின் பங்களிப்பு 15இலிருந்து 12 சதவீதமாக குறையும் எனவும் வட மாநிலங்களின் பங்களிப்பு 27இல் இருந்து 29 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர் 2021இல் நடைபெற்றிருக்க வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தெரியவரும். என்றாலும், 2011 கணக்கெடுப்பு படி, 1971-2011 இடைப்பட்ட காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளத்தில் 56% மட்டுமே அதிகரித்துள்ளது.
ஒரு பெண், குழந்தை பிரசவிப்பதன் சராசரி விகிதக் கணக்கீட்டையும் இதில் பொருத்திப் பார்க்கலாம். இதன்படி ஒரு பெண் 2.1 என்னும் விகிதத்தில் குழந்தை பெற்றுக்கொண்டால் மக்கள்தொகை நிலைபெறத் தொடங்குவதாக அர்த்தம். ஆந்திரம், கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அந்த நிலைக்கு வந்துவிட்டன. ஆனால், இந்த விகிதம் பிஹாரில் 3.2, உத்தரப் பிரதேசத்தில் 3 என்பதாக இருக்கிறது.
இந்த முரண்பாடான சூழலில் தொகுதி மறுசீரமைப்பு தென்னிந்திய மாநிலங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளே அதிகம். இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் சராசரியாக 15 லட்சம் பேருக்கு ஒரு மக்களவை உறுப்பினர் இருக்கிறார். இது உத்தரப் பிரதேசத்தில் 25 லட்சமாக இருக்கிறது.
சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், ‘2026ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதி எல்லை மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் , உத்தபிரதேசம் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு தற்போதைய தொகுதிகளான 80ஐ விடவும் கூடுதலாக 11 தொகுதிகள் சேர்த்து 91 தொகுதிகள் கிடைக்கும். பீகாருக்கு இப்போது உள்ள 40 தொகுதிகளுக்கு பதில் 50 தொகுதிகள் கிடைக்கும். அசாம், மகாராஷ்டிராவில் இப்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை தொடரும். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, இமாசலபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்” என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அரசியல் நிபுணர் அலிஸ்டர் மேக்மில்லன் (Alistair McMillan), 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 647 மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பதிவுசெய்திருந்தார். ஆனால், அப்போதும் தமிழகத்துக்கு 39 தொகுதிகள் என்றே அவருடைய கணக்கீடு கூறியது. ஆனால், இப்போது தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் இந்த 39இல் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
1957, 1962 மக்களவைத் தேர்தல்களின் போது தமிழ்நாட்டில் 41 மக்களவைத் தொகுதிகள் இருந்தன. 1973 தொகுதி மறுவரையின் போது இது குறைந்து 39 ஆனது குறிப்பிடத்தக்கது. எனவேதான், மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழ்நாடு வலியுறுத்தி வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் – கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா?” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காக அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆலோசனை வழங்குவது சரியா?
இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினை மக்கள் தொகை அதிகரிப்புதான். இந்தியாதான் உலகிலேயே தற்போது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு. இந்நிலையில், மேலும் மக்கள் தொகையை அதிகரிக்கச் சொல்வது சரியான ஆலோசனையாக இருக்காது. மாறாக, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களை மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென சொல்லலாம்.