டி. கண்ணன் கவிதைகள்

 டி. கண்ணன் கவிதைகள்

1
சற்றே குழப்பிக் கொள்
பவழ மல்லி பூக்களை பறி
அல்லது
பறிப்பது போல் பாவனை செய்
சிறுகாலை குளியல் மற்றும்
பல் துலக்கம் தவிர்த்தால் நலம்
உனக்கு மனிதர் தேவை என்று
இன்று அதிகாலை நெருக்கமாய் உணர்ந்தாய்
உன் அருகாமை கடற்கரையில் சிறுநீர் கழி
கடலோரம் நீ பெய்த சிறுநீரும் அலையாகும்
சற்றே குழப்பிக் கொள்
வியர்த்தால் குளி
பசித்தால் புசி
அயர்ந்தால் உறங்கு
உன் எதிரி
நான் அல்லவென்று
தெளிவு பிறந்துவிடும்
சற்றே குழப்பிக்கொள்

 

2
நிரந்தரத்துவம்
அவள் போட்ட கோலமொன்று
(8 புள்ளி 7 வரிசை (நன்கு வளர்ந்து பெருத்த ராஜஹம்சம்))
கனவில் வந்தது
நிரந்தரப்படுத்த அதனை
செல்பேசியில் சிறை பிடித்தாள்
நிரந்தரப்படுத்த இது போதாது என்று
மேலும் ஒரு கனவு
நிரந்தரத்துவத்தின் தீராத வாசனையை
கோலத்தில் தூவ
கவிஞனைத் தேடி
அவள் இனி
அலையத் தொடங்கினாள்

 

3.
தெரு ஊர்ந்தது
அதை பெரிதாக்கியது அந்தி
பஞ்சத்தின் வந்தேறிகள் பதற்றத்துடன்
நுழைந்து கொண்டிருந்தார்கள்
விடியக் காத்திருந்தது இருள்
தூரத்தே
சாமி புறப்பாட்டின்
வேட்டு
கனவின் மலர்களா
யதார்த்தத்தின் கவிதைகள்?
அல்லது
யதார்த்தத்தின் மலர்களா
கனவின் கவிதைகள்
மோதிக் கொண்டன இரண்டும்
பிறை நிலாவில்
தொங்கிக் கொண்டிருந்தன
முதிர்ந்த முலைகள்

 

4.
பாவங்களை கழுவும்
குற்றவுணர்ச்சி பிரதிகளை
வாசித்துக் கொண்டிருந்தான் அவன்
செய்த குற்றங்களை
தான் மறக்க
புகழால் ஈடுகட்டிக் கொண்டிருந்தான்
மற்றொருவன்
குற்றவுணர்ச்சி பிரதிகள் தோல்வியடைந்தன
புகழ் மேலும் ஓங்கியது
இருவரும் வெவ்வேறானவர்கள் அல்லர்தான்
வட்டப்பாதையில் சிக்கி மீண்டது
சவமாய் கிளி

 

“டி. கண்ணன்” <krishnaswamy164@gmail.com>

Related post