பொய்த்தேவு – இந்திரா பார்த்தசாரதி
நீல வானம். இதமான வெய்யில். இளங்காற்று. புல் தரை. இயற்கையின் அருளில் தோய்ந்து மகிழ்ந்து விளையாடும் மழலைச் செல்வம். அவர்கள் விளையாடுவதைக் கண்டு உவகையில் ஆழ்ந்த பெண்கள், ஆண்கள்.
பொழுது சாயத் தொடங்கியது.
“போகலாம்” என்றான் ஒருவன்.
புறப்பட்டார்கள்.
“இடப்பக்கம் போக வேண்டாம். அங்குதான் அந்தக் குகை இருக்கிறது.”
“எந்தக் குகை?”
“சபிக்கப்பட்ட குகை.”
“புரியவில்லை.”
“ஒரு கோபக்காரத் தெய்வம் சிலரைச் சபித்து அந்த இருண்ட குகைக்குள் அடைத்துவிட்டது.”
“போய்ப் பார்க்கலாமா?”
“வேண்டாம், ஆபத்து.”
“நான் போகத்தான் போகிறேன்.”
“நானும்.”
“நானும்.”
ஐந்தாறு பேர் சேர்ந்து கொண்டார்கள்.
நீண்ட வழி. போய்க்கொண்டே இருந்தார்கள்.
இருட்டிவிட்டது.
“யார் எக்கேடு கெட்டால் என்ன, நாம் போய்விடுவோம்.”
“தப்பு… அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம்.”
“இருட்டிவிட்டதே!”
“சரி, இன்றிரவு இங்குக் கழித்துவிட்டுக் காலையில் போவோம்.”
“கோபக்காரத் தெய்வம் இங்கு வந்தால்?”
“அந்தத் தெய்வத்துக்கு அதிகார வரம்பு இங்கு இருக்காது.”
அந்த இடத்தில் இரவைக் கழித்தார்கள்.
காலை. சூரிய ஒளி, ‘புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாகியது.’ கதிரவன் கீழ் வானத்தில் வண்ணக் கவிதை ஒன்றை எழுதியிருந்தான். பறவைகள், இரை தேடி, குதூகலமாகப் பறந்து சென்றன.
“உலகம் அற்புதம்.”
“குகை மனிதர்கள் இருக்கும்போது உலகம் அற்புதமா?”
“பூமி என் படுக்கை. ஆகாயம் என் உத்தரம்.”
“குகையில் இன்னும் மனிதர்கள் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள்.”
“அவர்களை விடுவித்து, உலகைக் கண் விழித்துப் பார்க்கச் செய்வோம்.”
எல்லோரும் மறுபடியும் நடக்கத் தொடங்கினார்கள்.
“குகை அதோ! குகை அதோ!”
இருட்டினால் மூடியிருந்த நீண்ட குகை.
“உள்ளே போகலாமா?”
உடம்பில் ஒட்டும் இருட்டு.
ஒருவர் பின்னால் ஒருவராய் நேர்க் கோட்டில் சென்றார்கள்.
“இராவணன் ஆட்சியில் சூரியன் அவன் அனுமதியுடந்தான் உள்ளே நுழைய முடியுமாம்.”
“இங்குந்தான்… இது இராவணன் ஆட்சியோ?”
“மெதுவாகப் போங்கள். பழந்தின்னி வௌவால்கள் பறக்கின்றன.”
“இக்குகையின் குடிமக்கள் பழந்தின்னி வௌவால்கள்தாமோ?”
“இருக்கலாம். இருட்டின் ஆட்சியில் வேறு யார் குடிமக்களாக இருக்க முடியும். ஆந்தைகளையும் வௌவால்களையும் தவிர.”
அவர்கள் பேசுவது எதிரொலித்தது.
“இருட்டில் போய்க்கொண்டேயிருந்தால்?”
“வெளிச்சத்தை மறந்துவிடுவோம்.”
“இருட்டை நேசிக்கத் தொடங்கிவிடுவோம். இருட்டே ஞானம்.”
அவர்கள் மேலும் நடந்தார்கள். நடக்க நடக்க குகை மேலும் மேலும் உருவாகிக் கொண்டு இருப்பது போல் தோன்றியது.
“திரும்பி விடலாம்.”
“வைத்த காலைப் பின் வாங்கக்கூடாது?”
“இருட்டில் முன் ஏது, பின் ஏது?”
“கதிரவன் முத்தமிடும் புல்லைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.”
“சூரியனைச் சிறை பிடிக்கும் புல்.”
“இப்பொழுது மலர்கள் சூரிய ஓளியில் நீராடும்.”
“நம்மோடு வர மறுத்தவர்கள் புனலில் குளித்துக் கொண்டிருப்பார்கள்.”
“பண்ணிசையாய் அலை பாயும் ஆறு.”
“பறந்து கொண்டிருக்கும் புள்ளினங்கள்.”
“ஒற்றைக் காலில் தவம் செய்யும் கொக்கு.”
“காற்றலையில் சுருதியில் இழியும் குயிலின் சோகம்.”
அவர்கள் மேலும் நடந்தார்கள்.
“அதோ இருட்டை முரணும் ஒளிச் சாம்பல்… அதுவா நாம் போக வேண்டிய இடம்?”
அவர்கள் ஸ்தம்பித்து நின்றார்கள்.
ஒரு மெல்லிய திரை குறுக்கும் நெடுக்குமாக இருந்தது. உத்தரத்திலிருந்து தொங்கிய ஒரு சிறு கை விளக்கு.
திரைக்கு அப்பால் பலர் உறைந்து போன நிலையில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் நிழல் திரையில் விழுந்து அவர்களைப் பெரும் பூதங்களாகக் காட்டியது.
ஒருவன் திரையைச் சற்று விலக்கி எட்டிப் பார்த்தான்.
அவர்களுடைய கால்களும் கைகளும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் திரும்ப முடியாத படி இருப்புப் பட்டயம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாது. நிழல்களைத் தாம் பார்க்க முடியும். அவர்களைப் பொருத்த வரையில், நிழல்தான் யதார்த்தம்.
நிழல்களை நிஜமாக நம்பச் சபிக்கப் பட்டவர்கள். நிழல்களைப் பார்ப்பதே அவர்கள் வாழ்க்கையின் இலட்சியம்.
என்ன கொடூரமான உள்ளம் அந்தக் கோபக்காரத் தெய்வத்துக்கு இருந்திருக்க வேண்டும்!
அவர்களை இந்நிலையில் கண்டவன் மற்றவர்களுக்குச் சொன்னான். எல்லாரும் எட்டிப் பார்த்தார்கள்.
“அவர்களை விடுவிப்போம்.”
“கறுப்புத் தெய்வம்?”
“போராடுவோம்… அவர்களுடன் பேசிப் பார்ப்போம்.”
“நீ பேசு.”
“யார் நீங்கள்?”
பதிலில்லை.
மறுபடியும் “யார் நீங்கள்?”
“நீங்கள் யார்?” எதிர் கேள்வி.
“உங்களை விடுவிக்க வந்திருக்கிறோம்.”
“அப்படியென்றால்?”
“உங்கள் தளைகளை நீக்க.”
“அப்படியென்றால்.”
“கையிலும் காலிலும் போடப்பட்டிருக்கும் சங்கிலிகளையும் கழுத்துப் பட்டயத்தையும் நீக்க வந்திருக்கிறோம்.. நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்.”
“இவைகள் எங்கள் உடம்புடன் பிறந்தவை. எங்கள் அங்கங்கள்.”
“இல்லை. இவைகள் உங்களுக்குப் பூட்டப் பட்டவை.”
“நம்ப மாட்டோம்.. நீங்கள் சொல்வது பொய்.”
“எது நிஜம், எது பொய் என்று உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் நிஜ உருவம் உங்களுக்குத் தெரியுமா?”
“அதோ தெரிகின்ற கறுப்பு உருவம்.”
“இல்லை. அது தோற்றம். பொய். பயம் உங்கள் கையையும் காலையும் கட்டிப் போட்டிருக்கிறது. உத்தரத்திலிருந்து தொங்கும் விளக்குப் பொய்ப் பிரசாரம் செய்து நிழலை நிஜமெனக் காட்டி உங்களை நம்ப வைக்கிறது.”
“இதுவே எங்கள் சொர்க்கம்.”
“இதுவே உங்கள் நரகம். உங்களில் ஒருவனை விடுவிக்கிறோம். அவனே எங்களுடன் வந்து எது உண்மை என்று உங்களுக்கு அறிவிப்பான். சரியா?”
மௌனம்.
“சொல்லுங்கள். இது சரியா?”
மௌனம்.
“யாரும் வரத் தயாராக இல்லையா?”
“எங்கள் கோபக்காரத் தெய்வம் தினந்தோறும் வந்து எங்களுக்கு உணவு கொண்டு வந்து வாயில் ஊட்டுகிறது. விலங்களைக் கழற்றிச் சுத்தம் செய்து மீண்டும் மாட்டுகிறது. இதுவே நாங்கள் பழகிய வாழ்க்கை. எதற்காக உங்களுடன் வர வேண்டும்?”
“சூரிய ஒளி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”
“அப்படியென்றால்?”
“குளிர்ந்த காற்று என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”
“அப்படியென்றால்?”
“விண்ணில் சுதந்திரமாய்ப் பறந்து திரியும் புள்ளினங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?”
“அப்படியென்றால்?”
“கண்ணுக்கு எட்டியவரை பச்சைக் கம்பளமாய் இருக்கும் புல் தரையில் புரண்டு செல்வது பற்றி உங்களுக்குத் தெரியுமா?”
“அப்படியென்றால்?”
“அப்படியென்றால் உங்களில் ஒருவன் என்னுடன் வரட்டும். அவன் புரிந்துகொண்டு மற்றவர்களுக்குச் சொல்வான்.”
“நான் வருகிறேன்” என்றான் ஒருவன்.
அவனுடைய தளைகள் அகற்றப்பட்டன. அவன் அவர்களுடன் திரையைத் தாண்டிச் சென்றான்.
அவனால் முதலில் நடக்க முடியவில்லை. தடுமாறினான். அவர்கள் அவனைக் கைத் தாங்கலாய் அழைத்துச் சென்றார்கள்.
குகையை விட்டு வெளியே வந்ததும் அவன் கத்தினான்.
“என்ன இது! கண்களைக் குத்துகின்றது!”
“சூரிய வெளிச்சம்.”
அவன் கண்களை மூடிக்கொண்டான்.
“முதலில் அதை அணையுங்கள்”.
“அணைக்க முடியாது. இதுதான் இயற்கை.”
“என் குகையில் தெரியும் இருட்டுதான் எனக்கு வெளிச்சம்”.
“அப்படி நீ பழகிவிட்டய்!”
“என்ன இது, என் மீது வீசுகிறது?”
“காற்று.”
“என் குகையில் வீசுவதுதான் காற்று.”
“இல்லை. அது பழந்தின்னி வௌவால்கள் பறப்பதினால் உண்டாகும் புழுக்கம்.”
“என்னால் பார்க்க முடிவில்லையே!”
“கொஞ்சம் கொஞ்சமாய்க் கண்களைத் திறந்து பார்.”
“என் கை கால்கள் அசைகின்றன. பயமாக இருக்கிறது.”
“அசைவதுதான் இயற்கை. இப்பொழுது உனக்குத் தளைகள் இல்லை.”
“தளைகள்தான் இயற்கை.”
“இல்லை.”
“என்னால் உங்களை இப்பொழுது பார்க்க முடிகிறது. ஆனால், வித்தியாசமாகத் தெரிகிறீர்கள்.”
“இதுதான் இயற்கை.”
“மேலேதெரிவது என்ன?”
“ஆகாயம்.”
“இவை?”
“மலர்கள்.”
“எத்தனைச் சிறிய உருவம், எவ்வளவு அழகாக ஓடுகின்றன? இவை?”
“அணில்கள்.”
“அவை?”
“பறவைகள்.”
“ஆஹா! எவ்வளவு அழகாக பறக்கின்றன! இவை?”
“வண்ணத்துப்பூச்சிகள்.”
“பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன!”
“உங்கள் உலகம் அழகாக இருக்கிறது. மனத்தை இன்பத்தில் ஆழத்துகிறது.”
“இது உங்களுடைய உலகமும்தான்.”
“நான் இதுவரை இருந்தது?.”
“குகை. அது உலகமன்று.”
“நான் எப்படி அங்குப் போனேன்? எனக்குத் தளையிட்டது யார்?”
“நீயேதான். தவறான தெய்வத்துக்கு அடி பணிந்தாய்.”
“அவர்கள்?”
“அவர்களும்தான்.”
“புரியவில்லை.”
“நீங்கள் அடிபணிவதற்காகவும் பயப்படுவதற்காகவும் உரத்த கோஷங்களை மந்திரங்களாக நினைத்துக் கூவி கூவிப் பொய்த்தெய்வங்களை உருவாக்கிக் கொண்டீர்கள். பொய்த் தெய்வங்கள் பொல்லாத தெய்வங்கள்.”
அவன் சிறிது நேரம் சிந்தித்தான்.
அவன் ஆகாயத்தைப் பார்த்தான். காற்றைச் சுவாசித்தான்.
முகத்தில் மலர்ச்சி.
“வாருங்கள். அவர்களையும் அழைத்துக் கொண்டு வருவோம்” என்றான்.
இந்திரா பார்த்தசாரதி <parthasarathyindira@gmail.com>