டோரிஸ் லெஸ்ஸிங்: சமரசங்களை மறுத்து எழுந்த வியக்தி
ஸிந்துஜா
காரை விட்டு இறங்கி அடியெடுத்து வைக்க அந்தப் பெண்மணி சிரமப்பட்டாள். அவள் வயதானவளாய் இருந்ததாலும், டாக்சி நின்ற இடத்துக்கு வெகு கீழே தரை இருந்ததாலும் இந்தச் சிரமம் ஏற்பட்டிருந்தது. காரின் மேல்பகுதி மீது தலை இடித்து விடக்கூடாது என்று அவள் கவனமாக மிகவும் குனிந்து இறங்க முயற்சிக்கையில் அவள் கழுத்தில் சுருட்டியிருந்த நீண்ட ஸ்கார்ஃப் கீழே சரிந்து தரையைத் தொட முயன்றது. அவள் வயதானவளாக மட்டுமில்லாது குட்டையாகவும் இருந்தாள். அவளது வெள்ளைக் கேசம் பின் பக்கம் வாரிக் கட்டப்பட்டிருக்க, விறைப்பான கணுக்கால்களை ஸ்டாக்கிங்குகள் மூடியிருந்தன. டாக்சியின் கதவைப் பிடித்துக்கொண்டு அவள் கீழே இறங்க முயற்சித்த போது டிரைவர் தன் சீட்டில் இருந்து எம்பி அவளுக்கு உதவ முயன்றான். ஆனால், அவள் அவன் கைகளுக்கு எட்டாத தூரத்தில் இருந்தாள். அவள் மெதுவாகக் காரை விட்டிறங்கி, வாடகை எவ்வளவு என்று டிரைவரிடம் கேட்டாள். அவளுடைய பாக்கெட்டில் கையை விட்டுப் பணத்தை எடுத்து நிமிர்ந்த போதுதான் முகத்துக்கு எதிரே இருந்த காமிராவைப் பார்த்தாள். ‘என்ன இது போட்டோ?’ என்ற அவள் கேள்விக்கு காமிராவின் பின்னால் இருந்த மனிதர் “உங்களைத்தான் போட்டோ எடுக்கிறோம்!” என்றார்.
பிறகு அவளுக்கு முன்னால் மைக்ரோபோனை நீட்டி “உங்களுக்கு நியூஸ் தெரியுமா?” என்று கேட்டார். “2007ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு உங்களுக்கு கிடைத்திருக்கிறது!”
“ஓ கடவுளே!” என்றார் டோரிஸ் லெஸ்ஸிங்.
டோரிஸ் லெஸ்ஸிங் உலக மகா யுத்தத்துக்குப் பிந்திய கட்ட எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இருபதாம் நூற்றாண்டின் பிரச்சினைகளைக் கவனித்து அவரது எழுத்து கட்டமைக்கப்பட்டது. அவரது ஆரம்ப கால நாவல்கள் – ஆப்பிரிக்காவைச் சுற்றி எழுப்பப்பட்டன – சமூகத்தில் ஆழப் பதிந்திருந்த நிறவெறி அரசியலுக்கு எதிராக எழுந்தவை. பின்னர் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எழுந்த பாலியல் புரட்சியும் பெண் விடுதலை எழுச்சியும் அவரது எழுத்துக்களில் முக்கியத்துவம் பெற்றன. பெண் விடுதலை இயக்கத்தில் அவர் முழு மூச்சுடன் இறங்கி இயங்கினார்.
“வன்முறையின் குழந்தைகள்” என்னும் அவரது தொடர் எழுத்தில் குடும்பச் சூழலில் கட்டிப் போடும் உறவு முறைகளை எதிர்த்து எழுதினார். கம்யூனிசத்தில் அச்சமயம் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அவரது நாவல்கள் தொடர் சுயசரிதையை அடக்கி வெளிவந்தன. தொடரின் முதல் நாவலில் கதாநாயகி மார்த்தா க்வெஸ்ட் அவளுடைய தாயின் வாழ்க்கையைப் பார்த்துவிட்டுத் தனக்குத் திருமணமே வேண்டாம் என்கிறாள். ஆனால், அவளுக்கு இளம் வயதிலேயே திருமணம் நிகழ்ந்து விடுகிறது. இரண்டாவது நாவலில், திருமண வாழ்க்கையில் அவள் அடையும் ஏமாற்றங்களால் மார்த்தா திருமண பந்தத்திலிருந்து விடுபட்டு வெளியே வந்துவிடுகிறாள். மூன்றாவது நாவல் முழுக்க முழுக்க மார்த்தாவின் எண்ண ஓட்டமும் தீர்மானங்களும்தான். மார்க்ஸீயத்தின் மீது மார்த்தா கொள்ளும் ஈடுபாட்டையும் அவளது அரசியல் பிரவேசத்தையும் நாவல் விவரிக்கிறது. இந்த நாவலை லெஸ்ஸிங் முடிக்கும் போது நிஜ வாழ்க்கையில் அவர் கம்யூனிசத்தின் மேல் நம்பிக்கை இழந்து கட்சியை விட்டு வெளியேறி விட்டார்.
லெஸ்ஸிங்கின் உலகப் புகழ்பெற்ற ‘தி கோல்டன் நோட்புக்’ நாவலை 1962இல் எழுதினர். பெண் விடுதலை, நிறவெறி எதிர்ப்பு ஆகிய ‘எரிக்கும் பிரச்சினை’களை இந்த நாவல் தீர்க்கமாகப் பரிசீலித்தது. அன்றைய வளர்ந்து வந்த (இளம்) பெண் எழுத்தாளர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட வியக்தியாக லெஸ்ஸிங் வலம் வந்தார். நாவலில் வரும் அன்னா உல்ஃப் ஒரு பெண் எழுத்தாளர். அவளது சொந்த வாழ்க்கையும், அவளுடைய கலைத் தாகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு செயலாற்றுவதை இந்நாவல் பரிசீலிக்கிறது. கதாநாயகியின் அபிப்பிராயத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது தனித் தனிப் பிரிவில் – பெண், காதலி, குடும்பத் தலைவி, எழுத்தாளர், அரசியல்வாதி என்று – இயங்குகிறது. இந்தப் பிரிவுகளினால் ஆன வாழ்க்கையை அவள் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வண்ண நோட்டுப் புத்தகம் எடுத்து வைத்துப் பதிவு செய்கிறாள். இந்த ஒவ்வொரு பிரிவிலும் வரையப்படும் அனுபவங்கள் அவளுடைய வாழ்க்கையிலிருந்தே எழுவது. இறுதியில் அன்னா உல்ஃப்புக்கு மனச் சோர்வு ஏற்படுகிறது. இந்த மனச்சிதைவே அவளுக்கு அவளை யாரென்று அடையாளம் காட்ட அவள் உணரும் ‘பரிபூரண நிலையை’ கடைசி நோட்டுப் புத்தகத்தில் எழுதுகிறாள்.
இந்நாவலில் வரும் அன்னாவின் பாத்திரம் மூலம் லெஸ்ஸிங் தெரிவித்த கருத்துக்கள் மிகுந்த அதிர்ச்சி அலைகளை எழுப்பின. அன்னா ஓரிடத்தில், “ஒவ்வொரு பெண்ணும் அவளது ஆழ்மனதில் தனக்கு உடலுறவில் திருப்தி தராத கணவனை நிராகரித்து இன்னொருவருடன் உறவுகொள்வதைத் தனது உரிமையாக எண்ணுகிறாள்” என்று சொல்லுகிறாள்.
இந்த நாவலில் பெண்கள் சுய இன்பம் அனுபவிப்பதில் தவறு ஏதும் இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. அன்றிருந்த பெண்கள் இதழ்கள் தொடாத விஷயங்களை லெஸ்ஸிங் எடுத்தாள்கிறார். ஆர்கஸம் பற்றிய அன்னாவின் எண்ணங்கள் பல உதாரணங்களுடன், வாக்கு மூலங்களுடன், தீவிரங்களுடன் பேசுகின்றன. அறுபதுகளின் ஆரம்பத்தில் இத்தகைய எழுத்து அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.
இதற்குப் பிறகு லெஸ்ஸிங் எழுதிய இரு நாவல்களில் ஒன்றில் கதாநாயகன் அவனது சாதாரண வாழ்க்கையின் ஞாபகங்களை இழந்து லண்டன் தெருக்களில் சுற்றுகிறான். இன்னொரு நாவலில் கதாநாயகியின் மருத்துவர்கள் அவள் மனச்சிதைவால் பீடிக்கப்பட்டிருக்கிறாள் என்று தீர்மானிக்கையில், அவள் தனது அத்தகைய மனநிலையில் வாழ்வின் பரிபூரணத்தை உணருகிறாள்.
எழுபதுகளின் பிற்பகுதியில், எண்பதுகளின் ஆரம்பத்தில் லெஸ்ஸிங் ஃபேண்டஸி கதைகளையும், பல நாவலாசிரியர்கள் அன்று தொடத் தயங்கிய விஞ்ஞானக் கதைகளையும் எழுதினார். ஆனால், சிறிது காலம் கழித்து யதார்த்த நாவல்களை எழுதத் துவங்கிவிட்டார். அவற்றை ஜேன் சோமர்ஸ் என்னும் புனைப்பெயரில் பல பதிப்பாளர்களுக்கு அனுப்பினார். எல்லாம் திரும்பி வந்தன. மிகக் குறுகிய அளவில் அச்சடிக்கப்பட்ட பிரதிகளும் விற்கவில்லை. வந்த விமரிசனங்களில் ஒன்று, “ஆசிரியை டோரிஸ் லெஸ்ஸிங்கைப் போல எழுத முயன்றிருக்கிறார்” என்றது! ஆனால், அதன் பின் உண்மை வெளியே தெரிய வந்ததும், இரு புத்தகங்களும் பெருத்த அளவில் வாசக வரவேற்பைப் பெற்றன.
நோபல் பரிசுக்குப் பல வருடங்கள் டோரிஸ் லெஸ்ஸிங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஆரம்ப காலங்களில் நோபல் பரிசுக் கமிட்டி ஒரு நாளும் டோரிஸ் நோபல் பரிசை அடைய முடியாது என்று தெளிவாக்கியிருந்தது. அதனால்தான் பரிசு கிடைத்தது என்று சொன்ன நிருபர்களிடம் அவர் பேசுகையில், “இந்தப் பரிசு நயமற்றது; முட்டாள்தனமானது; மரியாதையை எழுப்ப இயலாதது” என்று கிண்டலாகக் கூறினார்.
நோபல் பரிசுக்கான அவரது உரை மிக வசீகரமானது; சிந்தனைச் செழிப்பையும் மானுட நேயத்தையும் பிரதிபலிக்கும் அவ்வுரை ஒரு சிறுகதையைப் போல் அமைந்திருப்பதை வாசகர்கள் காண முடியும்.
“ஸிந்துஜா” <weenvy@gmail.com>