கிடைக்காத நோபல் பரிசு!
டோரிஸ் லெஸ்ஸிங்
தமிழில்: ஸிந்துஜா
இன்னும் சேதப்படுத்தபடாத அடர்த்தியான காடு அங்கே இருக்கிறது என்று சொல்லப்பட்ட இடத்தில் சுழன்றடிக்கும் புழுதிப் புயலைப் பார்த்தபடி நான் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறேன். துண்டிக்கப்பட்ட மரக்கட்டைகளை, தீயில் எரிந்தது போக நின்ற மிச்சங்களை நேற்று நான் காரில் வரும் போது பார்த்தேன். 1956இல் அந்த இடத்தில் மரங்கள் செறிந்தடர்ந்த மிக அற்புதமான காடு இருந்தது. இப்போது அது அழிந்துவிட்டது. மனிதர்கள் உண்ண வேண்டியிருக்கிறது. அதற்காகத் தீ மூட்ட விறகுகள் எப்போதும் தேவைப்படுகின்றன.
இது எண்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் வடமேற்கு ஜிம்பாப்வேயின் சித்திரம். லண்டனில் ஆசிரியராக வேலை பார்த்த ஒரு சிநேகிதனைப் பார்க்க வந்திருக்கிறேன். அவன், “ஆப்பிரிக்காவுக்கு உதவ வேண்டும்” என்று இங்கே வந்திருக்கிறான். அவன் ஒரு மென்மையான லட்சியவாதி. ஆனால், அவன் இங்கே வந்து பள்ளி என்ற இடத்தில் கண்டவை அவனுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது. இந்தப் பள்ளியும் சுதந்தரத்துக்குப் பிறகு கட்டப்பட்ட பள்ளிகளில் ஒன்று. செங்கல்களை வைத்து கட்டப்பட்ட நான்கு பெரிய அறைகள் அடுத்தடுத்து நின்றன. நான்காவது அறையின் முடிவில் ஒரு சிறிய பாதி அறை. அதுதான் நூலகம். இந்த வகுப்பறைகளில் கரும்பலகைகள் இருந்தன.
என் நண்பன் சாக்பீஸ்களை எப்போதும் தன் பாக்கெட்டுகளில் வைத்திருந்தான். வெளியில் வைத்தால் திருட்டுப் போய் விடுகின்றன. வகுப்பறையில் உலக உருண்டையோ வரைபடமோ கிடையாது. நோட்டுகள், புத்தகங்கள், பயிற்சி நூல்கள், பால்பாயிண்ட் பேனாக்கள் எதுவும் கிடையா. மாணவர்கள் விரும்பிப் படிக்கும் புத்தகங்கள் எதுவும் நூலகத்தில் இல்லை. அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் டன் கணக்கில் அச்சிடப்பட்ட குப்பைகளை அனுப்பி வைத்திருந்ததை அடுக்கிப் போட்டிருந்தார்கள். ஒருவர் தூக்குவதற்குக்கூட சிரமப்பட வேண்டிய கனமான புத்தகங்கள். அமெரிக்காவில் வெள்ளையர்களால் நிராகரிக்கப்பட்ட நாவல்கள் இந்த நூலகத்துக்கு வந்து குவியும்.
தரிசு நிறத்தை போன்ற நிலத்தில் விளைந்துள்ள புல்லை ஒரு ஆடு மேய முயன்று கொண்டிருக்கிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி நிதியைத் திருடியதால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். எப்படி இம்மாதிரி ஆட்கள் மற்றவர் கண்களிலிருந்து தாம் செய்யும் தவறுகள் தெரியாமல் போய்விடும் என்று நம்புகிறார்கள்?
என் நண்பனிடம் பணம் எப்போதும் இருப்பதில்லை. ஏனெனில், மாணவர்களும் ஆசிரியர்களும் அவனிடம் கடன் வாங்கி விட்டுத் திரும்பத் தரமாட்டார்கள். மாணவர்கள் ஆறிலிருந்து இருபத்தியாறு வயது வரை நிரம்பியவர்கள். சிறு வயதில் பள்ளிக்கூடத்துக்குச் செல்ல முடியாமல் போனவர்கள், இப்போது பள்ளியில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். சில மாணவர்கள் – அது வெய்யிலோ மழையோ – நதிகளைக் கடந்து தினமும் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களால் வீட்டுப் பாடங்களைச் சரியாக செய்ய முடிவதில்லை. ஏனென்றால், அவர்கள் வசிக்கும் கிராமங்களில் மின்சார வசதி கிடையாது. எரியும் விறகுக் கட்டையின் வெளிச்சத்தில் படிப்பது என்பது இயலாத காரியம். மாணவிகள் காலையிலும் மாலையிலும் வீட்டுக்குத் தண்ணீர் பிடித்துக் கொண்டு வர வேண்டும். சமையலுக்கு உதவ வேண்டும்.
நான் என் நண்பனுடன் அவனது அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது மனிதர்கள் வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் படிக்கப் புத்தகங்கள் தருமாறு கெஞ்சுகிறார்கள். என்னிடம் ஒருவன், “நீங்கள் லண்டனுக்குத் திரும்பிச் சென்ற பின் புத்தகங்கள் அனுப்புங்கள்” என்கிறான். “எங்களுக்குப் படிக்கக் கற்றுத் தந்தார்கள். ஆனால், படிக்கப் புத்தகங்கள் இல்லை. ”
நான் பார்த்த ஒவ்வொருவரும் புத்தகத்தை வேண்டுபவர்களாக இருந்தார்கள்.
நான் அங்கு சில நாட்கள் இருந்தேன். எப்போதும் வீசும் தூசிக் காற்று, உடைந்திருந்த தண்ணீர்க் குழாய்கள், நீர் பிடித்துக்கொண்டு வர தொலை தூரம் நடந்து செல்லும் பெண்கள். லண்டனிலிருந்து வந்த இன்னொரு லட்சியவாதி ஆசிரியருக்குப் பள்ளி நிலைமைகளைப் பார்த்ததும் ஜுரம் வந்துவிட்டது.
கடைசி நாளன்று ஆடு வெட்டினார்கள். அதைச் சிறு துண்டுகளாக்கி ஒரு பெரிய பானையில் வைத்து சமைத்தார்கள். ஆட்டு இறைச்சியும் கஞ்சியும் பரிமாறப்படும் ஆண்டு இறுதி நாள் விருந்து அது. நான் அவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும் போது காரில் எறிக் கிளம்பினேன். துண்டிக்கப்பட்ட மரக் கட்டைகளையும் தீயில் எரிந்து சாம்பலாகி நின்ற மிச்சங்களையும் கடந்தபடி சென்றேன்.
இந்தப் பள்ளியின் பெரும்பாலான மனவர்களுக்குப் பரிசு எதுவும் கிடைப்பதில்லை என்றே நான் நம்புகிறேன்.
மறுநாள் காலையில் நான் வட லண்டனில் இருந்த ஒரு பள்ளியில் உரையாற்ற வேண்டியிருந்தது. இந்தப் பள்ளியின் பெயர் அனைவரும் அறிந்த ஒன்று. மிக நல்ல பள்ளி. அந்தப் பள்ளி உறுதியான கட்டிடங்களைப் பெற்றிருந்தது. மிகப் பெரிய நூலகமும்கூட.
ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம் அந்தப் பள்ளிக்கு வந்து உரையாற்றுவார். புகழ் பெற்ற மனிதர்கள் அந்தப் பள்ளிக்கு வந்து உரையாற்றுவது எப்போதும் நடக்கும் விஷயம். அப்போது மாணவ மாணவிகளின் பெற்றோர், உறவினர் என்று பலரும் வருவர்.
நான் இந்தப் பள்ளியில் பேசும் போது புழுதி படர்ந்த வடமேற்கு ஜிம்பாப்வே பள்ளியின் நினைவு என் மனதெங்கும் நிறைந்திருந்தது. அந்த ஆங்கிலேயக் குழந்தைகளிடம் ஜிம்பாப்வே பள்ளியைப் பற்றிக் கூறினேன். படிக்க வசதியில்லாத வகுப்பறைகள், புத்தகங்களோ, உலக உருண்டையோ, வரைபடங்களோ இல்லாத பள்ளிகள். புத்தகங்களற்ற நூலகங்கள் பற்றிக் கூறினேன். அந்தப் பள்ளிகளின் மாணவர்கள் அவர்களது ஆசிரியர்களிடம் படிக்கப் புத்தகங்கள் தாருங்கள் என்று கெஞ்சுவதைப் பற்றிக் கூறினேன். ஆனால், இந்த ஆங்கிலேய மாணவர்கள் நான் சொல்வதைப் புரிந்துகொண்ட மாதிரி தோன்றவில்லை. அவர்களின் முகங்கள் சலனமற்றுப் பொம்மைகளைப் போல இருந்தன. நான் சொன்னவற்றில் சித்திரத்தை அவர்கள் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை அவர்களின் முகங்கள் காட்டின.
புழுதிப் புயல் படிந்திருக்கும் பள்ளி, குடிக்க நீரில்லாத வறட்சி, புத்தகங்களுக்கு இறைஞ்சும் மாணவர்கள் – இத்தகைய வறுமையை இந்தச் சிறப்புரிமை பெற்ற குழந்தைகளால் கற்பனை கூடச் செய்ய முடியாது.
நான் பேசி முடித்தேன். அவர்கள் மரியாதை நிமித்தம் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் சிலர் நிச்சயமாகப் பரிசுகளைப் பெறுவார்கள்.
என் பேச்சு முடிந்தது. நான் அங்கு இருந்த அந்தப் பள்ளி ஆசிரியர்களிடம் அங்கு நூலகம் உள்ளதா? மாணவர்கள் அதை உபயோகிக்கிறீர்களா என்று கேட்டேன். பல்கலைக் கழகங்களில் நான் வழக்கமாகப் பெறும் பதிலே இங்கும் தரப்பட்டது: “பெரும்பாலான மாணவர்கள் இந்த நூலகத்தை உபயோகிப்பதில்லை. சிலரே உபயோகித்தால்கூட அது பெரிய விஷயம்தான்.”
ஆம். நமக்குத் தெரிந்ததுதான். நம் எல்லோருக்கும்.
நாம் பிளவுண்ட ஒரு கலாச்சாரத்தில் இருக்கிறோம். நாம் நிச்சயமானவை என்று நம்புபவை மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டு விட்டன. இளைஞர்களும் யுவதிகளும் இவ்வளவு வருஷக் கல்விக்குப் பின்னரும் உலகைப் பற்றிய தெளிவான பார்வையும் ஞானமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாகக், கணினி பற்றி.
கணினியைக் கண்டுபிடித்தது ஒரு மகத்தான செயல். கணினி, தொலைக்காட்சி, இணையதளம் இவை எல்லாமே மகத்தான புரட்சியின் அடையாளம்! ஆனால், மனித குலம் எதிர்கொண்ட முதலான புரட்சி அல்ல இது. இதற்கு முன்பு ஏற்பட்ட அச்சுக் கலைப் புரட்சி புழக்கத்துக்கு வர பல பத்தாண்டுகள் அல்ல, அதைவிட அதிகமான காலம் தேவைப்பட்டது. எவ்வித முன் ஆராய்வும் கொள்ளாமல் அதை நாம் ஏற்றுக்கொண்டோம். அச்சுக் கலைப் புரட்சி மனிதனின் அறிவையும் செயல் திறனையும் அதிக உயரத்திற்குக் கொண்டு சென்றது. ஆனால், இப்போது கணினியின் கண்டுபிடிப்புக்குப் பிறகு அச்சுக்கலைக்கு என்ன நேர்ந்தது?
நாம் ஒரு கேள்வியும் கேட்காமல் கணினியின் பிறப்பை ஏற்றுக்கொண்டு சிலாகித்தோம். நமது வாழ்க்கை, சிந்தனைத் திறன் ஆகியவை இணையதளக் கண்டுபிடிப்பால் எவ்விதம் மாறியுள்ளன? ஒரு குறிக்கோளற்ற வெறுமையான அதன் இயல்புகளை நம் மீது சுமத்தி மயக்கிவிட்டது. சிறந்த அறிவாளிகளும்கூட அதன் பிடியில் சிக்கி அதனுடன் இழைந்து கிடக்கிறார்கள்! அதன் பிடியிலிருந்து வெளியே வரத் தெரியாமல் அல்லது வெளியே வர விரும்பாமல் கட்டுண்டு கிடக்கிறார்கள்.
ஒரு சாதாரண படிப்பறிவு கொண்டவன், கல்வி மீதும் இலக்கிய புதையல்கள் மீதும் மிகுந்த மதிப்பு கொண்டவனாகி விடுகிறான். அவனைப் பார்த்து மற்றவர்களும் படிப்பு மீது தங்களுக்குப் பிடிப்பும் மரியாதையும் இருப்பதாகக் கூறுகிறார்கள். வேலை பார்க்கிற ஆண்களும் பெண்களும் புத்தகத்திற்காக ஏங்கினர். பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டு இயங்கிய தொழிலாளர்களுக்கான நூலகங்கள் இதற்குச் சாட்சி.
புத்தகங்களை படிப்பது, கல்வி கற்பதன் ஒரு பகுதியாக இருந்தது. வயதானவர்கள் இளைஞர்களிடம் புத்தகம் படிப்பதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். ஏனெனில், இன்றைய இளைஞர்களுக்கு அதைப் பற்றிய பிரக்ஞை இல்லை. குழந்தைகளால் படிக்க முடியவில்லை என்றால் அவர்கள் படித்துப் பழகவில்லை.
இது ஒரு துக்கத்துக்குரிய விஷயம் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
“படிப்பு ஒரு மனிதனை முழுமைப்படுத்துகிறது” என்பது ஆன்றோர் வாக்கு. ஓர் ஆணிடத்திலும் ஒரு பெண்ணிடத்திலும் வரலாறு பற்றி, வாழ்க்கை பற்றி, மனிதர்களைப் பற்றிய படிப்பு தகவல் திரட்டுகளைத் தருகின்றது. அறிவின் சாரம் எழுவது அங்குதான்.
மேற்கில் வசிக்கும் நாம் மட்டும்தான் என்றில்லை. ஜிம்பாப்வேயில் வசிக்கும் ஒரு நண்பன் சொன்னான்: “அங்குள்ள ஒரு கிராமத்தில் மூன்று நாட்களாக ஜனங்கள் பட்டினியில் வாடினார்கள். ஆனால், அப்போதும் அவர்கள் புத்தகங்கள் படிப்பது பற்றி, அவற்றைப் பெறுவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்” என்று.
கிராமங்களுக்குப் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவள் நான். அந்த நிறுவனத்தில் சிலர் வேறொரு வேலைத் திட்டத்தின் கீழ் ஜிம்பாப்வேயின் அடித்தள மக்களைத் தொடர்புகொள்ள கிராமங்களுக்குச் சென்றனர். அவர்கள் சந்தித்த மக்கள், பொதுவாகக் கிராம மக்களின் மீது இருக்கும் கருத்துக்கு எதிராக புத்திசாலிகளாக விளங்கினார்கள். அவர்களில் பலர் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள். இன்னும் சிலர் விடுமுறையில் வந்திருந்த ஆசிரியர்கள், வயதானவர்கள். நானும் ஒரு சிறிய கணிப்பைக் கிராமப்புறத்தில் செய்தேன். கிராம மக்கள் எதைப் படிக்க விரும்புகிறார்கள் என்றறிய. முன்பு ஒரு முறை சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு குழு கண்ட முடிவுகளுடன் என்னுடையதும் ஒத்துப் போயிருந்தது.
நாம் ஐரோப்பாவில் படிக்க விரும்புவதையே இந்தக் கிராம மக்களும் படிக்க விரும்புகிறார்கள். எல்லா விதமான புத்தகங்களையும், விஞ்ஞானக் கதைகள், துப்பறியும் கதைகள், கவிதைகள், நாடகங்கள், தொழில் கற்றுக்கொள்வது எப்படி? கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள் என்று எதையும் தவிர்க்க அவர்கள் முயலவில்லை. ‘ஷேக்ஸ்பியர் எழுத்துக்கள் வேண்டும்’ என்று கேட்டார்கள். அவர்கள் கிடைத்ததைப் படித்து விடுகிறார்கள். அதனால்தான் ‘கேஸ்டர்பிரிட்ஜ் மேயர்’, ‘அனிமல் ஃபார்ம்’ ஆகியவை இந்தக் கிராமங்களில் பிரபலமாகியிருந்தன.
எங்கள் நிறுவனத்துக்கு ஆரம்பம் முதல் நார்வேயிலிருந்து உதவி கிடைத்தது. பிறகு சுவீடன். இம்மாதிரி உதவிகள் கிட்டியிரா விட்டால் எங்களால் அதிகப் புத்தகங்கள் அனுப்பியிருக்க முடியாது. எங்கிருந்தெல்லாம் புத்தகங்கள் கிடைத்தனவோ அவற்றை நாங்கள் உபயோகப் படுத்திக்கொண்டோம். ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இங்கிலாந்தில் சாதாரண பைண்டு புத்தகத்தின் விலை ஜிம்பாப்வேயில் ஒருவரின் மாதச் சம்பளத்துக்கு இணையானது. இதுகூட முகாபேயின் பயங்கரவாத ஆட்சிக்கு முன்பு. இப்போது பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதுவே பல வருஷத்துக்கான சம்பளமாக ஆகிவிட்டது. ஒரு புத்தகப் பெட்டியைக் கிராமத்துக்கு வண்டியை வைத்து எடுத்துச் செல்லுகையில் – இப்போது பெட்ரோலும் தங்கத்துடன் போட்டி போடுகிறது – உங்களை வரவேற்பது மகிழ்ச்சிக் கண்ணீருடன் அக்கிராமத்தின் மக்கள்.
ஒரு மரத்தின் கீழ் கட்டையைப் போட்டு நூலகம் அமைந்திருக்கும். புத்தகங்கள் வந்த ஒரு வாரத்துக்குள் வகுப்புகள் ஆரம்பித்து விடும். படிக்கத் தெரிந்தவர்கள் படிக்கத் தெரியாதவர்களுக்கு கற்பிப்பார்கள். எங்கோ ஒரு மூலையில் இருந்த ஒரு கிராமத்தில் – அங்கு வழக்கில் இருக்கும் மொழி டோங்கோ – அங்கிருந்த படித்த நாலைந்து பேர் அவர்களது டோங்கோ மொழியில் நாவலை மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். ஜிம்பாப்வேயில் ஆறு, ஏழு மொழிகள் புழக்கத்தில் உள்ளன. எல்லா நாவல்களும் -கொலை, குற்றம், பயங்கரம், காதல், பாலியல் நாவல்கள் – எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தன.
மக்கள் அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசைப் பெறுகிறார்கள் என்பது ஜிம்பாப்வேக்குப் பொருந்தி வராது. அவர்களின் புத்தக தாகமும் புத்தகங்கள் மீது கொண்ட மரியாதையும் முகாபேயின் ஆட்சிக்கு முன்பிருந்தவர்களிடமிருந்து வந்தது. அதாவது வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து. கென்யா முதல் கேப் ஆ ஃப் ஹோப் வரை இந்தக் காதலும் மரியாதையும் மக்களிடம் தென்படுவது ஆச்சரியமான ஒன்று.
நான் ஓலைக் கூரை வேய்ந்த குடிசையில் வளர்க்கப்பட்டவள். நாணல் புதர், வைக்கோல், ஓலை, மண்சுவர் இவற்றால் கட்டப்பட்டது எங்கள் இருப்பிடம். இங்கிலாந்தில் தாழ்த்தப்பட்ட சாக்சன் குடியிருப்பினரின் இடங்களில் உள்ளது போல. எங்கள் வீட்டில் அடுத்தடுத்துக் கட்டப்பட்ட நான்கு அறைகள். அவற்றையும் என் பெற்றோர் இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்திருந்த புத்தகங்கள் நிறைத்திருந்தன. இவற்றைத் தவிர அவ்வப்போது என் தாய் தபால் மூலம் எங்களுக்காகத் தருவித்த புத்தகங்கள் தபால் மூலம் வந்தன.
பெரிய பார்சலில் வரும் புத்தகங்களைப் பார்த்து குழந்தைகளான நாங்கள் குதூகலிப்போம். ஒரு மண்குடிசை வீடு. ஆனால், எங்கும் புத்தகங்கள். இன்றும்கூட எங்கள் மண் குடிசையைப் போலவும், மின்சாரம் தண்ணீர் ஆகியவை கிடைக்காமலும் உள்ள கிராமத்து வீடுகளில் வசிப்பவர்கள், “நான் ஒரு எழுத்தாளன் ஆக வேண்டும்” என்று எழுதுகிறார்கள். “ஏனென்றால் நானும் நீ வசித்த குடிசை வீடு போல ஒன்றில்தான் வசித்து வருகிறேன்!”
ஆனால், இங்குதான் சற்று சிரமம் இருக்கிறது.
எழுத்தாளனோ, எழுத்தோ புத்தகங்களற்ற வீடுகளிலிருந்து வருவதில்லை.
இங்கு ஒரு இடைவெளி இருக்கிறது. அதுதான் சிரமம்.
ஏற்கனவே இந்தப் பரிசைப் பெற்ற சிலரின் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். உதாரணமாக மகத்தான எழுத்தாளரான பாமுக். அவர் தனது தந்தை ஐநூறு புத்தகங்கள் வைத்திருந்ததாகச் சொல்லியிருக்கிறார். அவரது திறமை வெற்று வெளியிலிருந்து வந்து குதித்து விடவில்லை. அவர் ஒரு நீண்ட மரபின் தொடர்ச்சி.
வி.எஸ். நைபாலை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்கிறார்: இந்திய வேதாந்தம் அவரது குடும்ப வேரில் இறுகப் பின்னிப் பிணைந்திருந்தது என்று. அவரை எழுதும்படி அவரது தந்தை உற்சாகப்படுத்தினார். நைபால் ஒரு நீண்ட மரபுடன் இணைந்திருந்தார்.
நாம் ஜான் கோட்சீயை எடுத்துக்கொள்வோம். அவர் ஒரு நீண்ட மரபைச் சார்ந்தவர் மட்டுமல்ல. அவரே ஒரு மரபுதான். கேப்டவுனில் அவர் இலக்கியம் கற்பித்தார். அவருடைய வகுப்புகளில் ஒன்றில்கூட நான் கலந்துகொள்ளாமல் விட்டதற்கு எவ்வளவு வருந்தியிருக்கிறேன் தெரியுமா? அசாத்தியமான திறமையும் தைரியமான சிந்தனையும் கொண்டவர் அவர்.
எழுதவும் இலக்கியம் படைக்கவும் ஒருவருக்கு நூலகங்களுடனும் புத்தகங்களுடனும் மரபுடனும் மிகுந்த பரிச்சயம் இருக்க வேண்டும்.
என்னுடைய நண்பர் ஒருவர் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த கறுப்பின எழுத்தாளர். அவர் ஜாம் ஜாடிகளில், பழங்கள் அடைக்கப்பட்ட டின்களில் ஒட்டியிருக்கும் லேபிள்களை எழுத்துக் கூட்டிப் படித்துத் தானே கற்றுக்கொண்டவர். அவரது குடும்பம் கிராமத்தில் கறுப்பின மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்தது. சரளை மண் பூமி, உயரத்தில் எழும்பாத செடிகளால் ஆன புதர்கள். ஆகவே, அவரது மண் குடிசை வீடு மிக மோசமாயிருந்தது. நான் முன்பு சொன்ன மோசமான பள்ளியொன்றில் படித்தார். குப்பை மேட்டில் ஒரு ‘குழந்தைக் கலைக் களஞ்சியம்’ புத்தகம் கிழிந்து கிடந்தது. அதை எடுத்துப் படித்துத் தன் கல்வியை வலுப்படுத்திக் கொண்டார்.
1980இல் சுதந்தரம் அடைந்த போது கூட்டில் இருந்து வளர்ந்து இனிமையாகப் பாடும் பறவைகள் போல சில நல்ல எழுத்தாளர்களின் குழு ஒன்று ஏற்பட்டது. இவர்கள் வெள்ளையர் ஆண்ட பழைய ரொடீசியாவில் வளர்ந்தவர்கள். சிறந்த கல்வி தரும் மிஷன் பள்ளிகளில் படித்தார்கள். சர்வாதிகாரி முகாபேயின் ஆட்சியில் எழுத்தாளர்கள் உருவாக்கப்படவில்லை.
எழுத்தாளராக இலக்கியப் பயிற்சி பெற்று ஆவதற்கு எல்லோரும் கஷ்டமான பாதையில்தான் நடக்க வேண்டியிருந்தது. அச்சிடப்பட்ட லேபிள்களையும் கிழிந்த கலைக் களஞ்சியத்தையும் படித்துத் தானாகவே அறிவு பெற முனைந்தது ஒவ்வொருவரும் செய்யும் செயலாக இருந்தது. தமக்கு எட்டாத கல்வியை அடைய முயலும் இக் குடிசைவாசிகளை அவர்களின் இருப்பிடங்களை, குழந்தைகள், வேலை செய்து களைப்படைந்த தாய்மார், உணவுக்கும் உடைக்கும் போராடும் நிலைமை எல்லாம் சூழ்ந்திருக்கின்றன.
இவ்வளவு மோசமான நிலையிலும் எழுத்தாளர்கள் அங்கே உருவாகி வருகிறார்கள். இன்றைய ஜிம்பாப்வே என்பது நூறு வருஷங்களுக்குள் உருவாக்கப்பட்ட நாடு. இம்மனிதர்களின் மூதாதையர்கள் வாய் மூலமாகக் கதை மரபை வளர்த்தார்கள். ஓரிரு தலைமுறைகளில் இவ்வாய்மொழிக் கதைகள் அச்சு ரூபத்தைப் பெற்றுவிட்டன. என்ன ஒரு சாதனை! வெள்ளைக்காரர்களின் குப்பைகளும் சிதைவுக் கூளங்களுமாக இருந்த சூழலை ஒழித்துப் புத்தகங்கள் உருவாகியிருக்கின்றன. வெறும் தாள், புத்தகமாக மாறும் அற்புதம்!
எனக்கு ஆப்பிரிக்கப் புத்தக வெளியீட்டு விவரங்கள் அனுப்பப்படுகின்றன. சற்றே மேம்பட்ட வாழ்க்கை முறை நிலவும் வட ஆப்பிரிக்காவில் – இங்கு வசதியானவர்கள் எண்ணிக்கை அதிகம் – புத்தக வெளியீடு பற்றிப் பேசுவதே ‘கனவு கண்டது நடந்து விடும்’ என்ற வசீகரத்தை எழுப்புகிறது.
நான் இங்கு பேசுவது எல்லாம் எழுதப்படாத புத்தகங்கள் பற்றி. இக்குரல்கள் இன்றும் கேட்கப்படாதவை. பதிப்பாளர்கள் இல்லாததால் எழுத்தாளர்கள் எழுந்து நிற்க முடியாத நிலை. ஆழ்ந்த திறமையைக் கொண்டவர்களின் குரல்களை வெளிக் கொணராமல் போவது அளவிடமுடியாத பெரிய சேதாரம். ஒரு புத்தகம் வெளிவர, பதிப்பாளர், எழுத்தாளருக்கான முன்பணம், உற்சாகமூட்டுவது இவை தேவை. ஆனால், இவை எதுவும் கிடைக்காத சூழ்நிலை.
எழுத்தாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? கணினி மூலமா? மின்தட்டுச்சுப் பொறி மூலமா? அல்லது இறகை வைத்தா!? கையால் எழுதியா? ஆனால், உண்மையில் கேட்க வேண்டிய கேள்வி என்னவோ, “நீங்கள் சுதந்தரமாக எழுதுவதற்கான உங்கள் பிரத்தியேக இடத்தை, வெளியைக் கண்டுவிட்டீர்களா?”என்பதுதான். அந்த இடத்தில், வெளியில் உங்கள் செவிகள் கூர்மை கொள்ளும். உங்கள் கவனம் சிதறாது வார்த்தைகளில் மூழ்கியிருக்கும். உங்களின் பாத்திரங்கள், பேசும் வார்த்தைகள், கருப்பொருள், உத்வேகம் எல்லாம்!
ஒரு எழுத்தாளனுக்கு அவனது வெளி கிட்டாத வரை அவனது கவிதைகளும் கதைகளும் இன்னும் எழுதப்படாதவைதான். ஆனால், இதற்கு முற்றிலும் மாறான சூழ்நிலை ஒன்று இருக்கிறது. பெருநகரங்களில் ஒன்றான லண்டனில் எதிர்ப்படும் புதிய எழுத்தாளரைப் பற்றி வழக்கமாகக் கேட்கப்படுவது: அவள் அழகாய் இருக்கிறாளா? ஆண் என்றால், கவர்ந்திழுக்கும் அழகானா? வசப்படுத்த முடிந்தவனா? கேட்டு விட்டு இதை ஜோக் என்கிறார்கள். ஆனால், இது ஜோக் அல்ல.
இந்தப் புதிய எழுத்தாளர்கள் விரைவில் புகழ் அடைகிறார்கள். பணம் கிடைக்கிறது. அவர்களின் புகைப்படங்கள் உலகின் கவனத்தைக் கவ்வுகின்றன. அள்ளி வீசப்படும் புகழ்ச்சி மழையில் நனைகிறார்கள். ஆனால், நம்மைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள் இந்தப் புதியவர்களைப் பார்த்துப் பரிதாபம் கொள்ளுகிறோம். இவர்களுக்கு நாளை என்ன காத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரியாது.
பிரபலம் அடைந்த இவர்களில் பலர் மறுபடியும் எழுதியதில்லை. அல்லது அவர்கள் விரும்புவதை எழுத முடிந்ததில்லை. அப்போது அவனோ, அவளோ சொல்லுவது என்ன? நான் கேட்டிருக்கிறேன்: “இவ்வளவு துரதிர்ஷ்டமான நிலை என் வாழ்வில் நிகழ்ந்துவிட்டது.”
நாமோ மூத்த எழுத்தாளர்களாக அவர்கள் காதில் முணுமுணுக்க விரும்புகிறோம். ‘உனக்கான வெளி கிடைத்ததா? உனது ஆன்மாவின் உள்ளிருந்து கேட்கும் குரல் உனக்கு மட்டுமே கேட்கும். நீ கனவு காணும் இடம் கிடைக்கும் போது அதை விட்டுவிடாதே.’
என் மனம் முழுதும் ஆப்பிரிக்க நினைவுகள் படர்ந்து கிடக்கின்றன. வேண்டும் போது அவற்றை எடுத்துக் கொஞ்சுகிறேன். மாலையில் கதிரவன் கீழே விழும் தருணங்கள் – மஞ்சளும் ஆரஞ்சும் ஊதாவுமாய் மின்னியபடி வானவெளியெங்கும் பரவிக் கிடக்கும் காட்சி! கலஹாரியில் புதர்களினூடே சுழன்று சுழன்று ஆடும் வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள்! அல்லது சம்பேசி நதிக்கரையில் உட்கார்ந்து ஆப்பிரிக்கப் பறவைகளின் இன்னொலிகளைக் கேட்டும், நீரில் படியும் கறுப்பும் நீலமுமான அலைகளின் அசைவைப் பார்த்தும் செலவழிக்க விரும்பும் மாலைப் பொழுதுகள்! யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், சிங்கங்கள் மற்றும் பல விலங்கினங்கள் சுற்றும் காடுகள்! இரவு வானில் ஓய்வற்று மின்னும் நட்சத்திரங்கள்!
வேறு பல நினைவுகளும் உள்ளன. சுமார் பதினெட்டு வயதிருக்கும். அவன் நூலகம் என்று கருதி வந்து நின்ற இடத்தில் கண்களில் நீருடன் அந்த இளைஞன் நின்றான். அப்போது அங்கு வந்திருந்த ஓர் அமெரிக்கப் பயணி புத்தகம் எதுவுமில்லாத அந்த நூலகத்தைப் பார்த்து விட்டு ஒரு கூடை நிறைய புத்தகங்களை அமெரிக்காவிலிருந்து அனுப்பினார். அந்த இளைஞன் அவற்றை ஆவலுடன் முகர்ந்து முகர்ந்து பார்த்து விட்டு மூடி வைத்தான். “படிப்பதற்காக அல்லவா இவை அனுப்பப்பட்டன?” என்ற கேள்விக்கு அவன் “ஐயோ, அவை அழுக்காகி விட்டால் மறுபடியும் எங்கிருந்து அவற்றை நான் பெறுவது?” என்றான்.
இந்த இளைஞன் எங்களிடம் வந்து இங்கிலாந்திலிருந்து புத்தகங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டான். மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமாம். “நான் நான்கு வருஷங்கள் சீனியர் பள்ளியில் படித்தேன். ஆனால், எப்படிக் கற்றுக் கொடுப்பது என்று எனக்குச் சொல்லித் தரப்படவில்லை.”
நான் இன்னொரு பள்ளியில் பார்த்த ஆசிரியரிடம் புத்தகமோ, கரும் பலகையோ, சாக்பீஸோ இல்லை. அவர் கூழாங் கற்களை வைத்து, “இரண்டும் இரண்டும் நான்கு” என்று சொல்லித் தருகிறார். நான் பார்த்த இருபது வயதுகூட நிரம்பாத இளம்பெண் பாடப் புத்தகமோ எழுதுகோலோ நோட்டுகளோ எதுவுமின்றி பாடம் நடத்துகிறாள். அவள் கையில் ஒரு குச்சி இருக்கிறது. மண்ணில் அதை வைத்துக் கீறி ஏ, பி, சி, டி என்று எழுதிக் காண்பிக்கிறாள். மேலே இருந்து பொசுக்கும் சூரியனும் கீழே புரளும் புழுதியும் சாட்சிகளாக நின்று பார்க்கின்றன.
கல்விப் பசி கொண்டு திரியும் ஒரு பெரும் கூட்டத்தை நான் இங்கே ஆப்பிரிக்காவில் பார்க்கிறேன். பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும் என்று தவம் கிடக்கும் பெற்றோர்கள்.
தென்னாப்பிரிக்காவில் நீங்கள் ஒரு இந்தியக் கடைக்கு முன்பு நிற்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த இடத்தில் ஏழ்மையும் வறட்சியும் படர்ந்து கிடக்கின்றன. பெரும்பாலும் பெண்கள், வரிசையில் நின்று கொண்டு தண்ணீர்ப் பானையுடன் காத்திருக்கிறார்கள். அந்தக் கடைக்கு ஒவ்வொரு நாளும் தண்ணீர் லாரி வரும்.
கடைக்கார இந்தியன் கவுன்டரில் கை ஊன்றியபடி கூட்டத்தைப் பார்க்கிறான். அவன் பார்வை அங்கு நிற்கும் கறுப்பினப் பெண் ஒருத்தியின் மேல் விழுகிறது. அவள் ஒரு புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட தாள் ஒன்றைக் குனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் படிப்பது அன்னா கரினீனா.
அவள் மெதுவாக வார்த்தைகளை உச்சரித்தபடி படிக்கிறாள். அது ஒரு கஷ்டமான பக்கமாகத் தோன்றுகிறது. அவள் காலைப் பிடித்துக்கொண்டு அவளது இரு குழந்தைகள் நிற்கின்றன. கடைக்கார இளைஞன் உறுத்தப்பட்டவனாக அவள் தலையிலிருக்கும் ஸ்கார்ஃபைப் பார்க்கிறான். அந்த வெள்ளைத் துணி, தூசி பரவிப் பரவி மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. அவள் மார்பிலும் கைகளிலும் தூசி படர்ந்து கிடக்கிறது. தாகத்துடன் வரிசையில் நிற்பவர்களைப் பார்த்து இளைஞன் சங்கடப்படுகிறான். அவர்கள் அனைவருக்கும் போதுமான நீர் கிடைக்காது. தூசி தும்புகளுக்கு அப்பால் இறக்கும் மனிதர்களின் நிலையை நினைத்து அவனுக்குக் கோபம் வருகிறது. அவனுடைய மூத்த சகோதரன்தான் கடையைப் பார்த்து கொள்வது. இன்று அவனுக்கு சோர்வாய் இருந்ததால் ஒய்வு தேவை என்று கடையை இவனிடம் கொடுத்து விட்டு நகருக்குச் சென்றிருக்கிறான்.
இளைஞன் ஆச்சரியத்துடன் அந்தப் பெண்ணிடம் “நீ என்ன படிக்கிறாய்?” என்று கேட்கிறான்.
“ரஷ்யாவைப் பற்றியது” என்கிறாள் அவள்.
“உனக்கு ரஷ்யா எங்கே இருக்கிறது என்று தெரியுமா?” என்று கேட்கிறான். அவனுக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்.
அவள், அவன் கண்களை நேரே பார்த்துப் பெருமையுடன், “என் வகுப்பில் நான்தான் சிறந்த மாணவி என்று என் டீச்சர் சொல்லியிருக்கிறாள்” என்கிறாள்.
அந்தப் பெண் படிப்பதை மீண்டும் தொடர்கிறாள். அந்தப் பாராவை முடித்தாக வேண்டும்.
இளைஞன் இரு குழந்தைகளுக்கும் ஃபாண்டாவை எடுத்துத் தருகிறான். அவள் தடுத்து, “குளிர்பானம் தாகத்தை மேலும் ஏற்படுத்தும்” என்கிறாள்.
அவன் செய்யக் கூடாத காரியம் என்று தெரிந்தும் தனக்குப் பின்னால் இருந்த பிளாஸ்டிக் அண்டாவிலிருந்து நீரை எடுத்து இரு குவளைகளில் அந்தக் குழந்தைகளுக்குத் தருகிறான். அந்தக் குழந்தைகள் குடிக்கும் போது அந்தப் பெண்ணின் வாயும் கூடவே அசைவதை அந்த இளைஞன் பார்க்கிறான். அவளுக்கும் அவன் நீர் அருந்தத் தருகிறான். அவள் குடிக்கும் விதமும் வேகமும் அவனுக்குள் வருத்தத்தை எழுப்புகின்றன.
இப்போது அவள் தனது சொந்த நீர்க் குவளையை நீட்டுகிறாள். அவன் அதை நிரப்புகிறான், நீரை அவன் சிந்தி விடக் கூடாது என்ற கவலையுடன் அவளும் குழந்தைகளும் அவனைக் கவனிக்கின்றன.
அவள் மறுபடியும் குனிந்து அந்தப் பக்கத்தைப் பார்க்கிறாள். அந்தப் பாரா அவளை வசீகரிக்கிறது. வாய் விட்டுப் படிக்கிறாள்:
“வெள்ளைக் கைக்குட்டை சுற்றப்பட்டிருந்த கறுப்புத் தலைமயிருடன் இருந்த வரென்கா தன் குழந்தைகளைக் கனிவுடன் பார்த்தாள். அதே சமயம் அவள் மிகவும் விரும்பிய, திருமணம் செய்துகொள்ளத் துடித்த இளைஞனின் வரவுக்காக அவள் மனம் காத்திருந்தது. கோஸ்னிசெவ் அவள் அருகே நடந்தபடி அவள் அழகை ஆராதிக்கும் பார்வையை வீசியபடி நெருங்கினான். அவளைப் பார்க்கும் போது அவள் பேசிய இனிமையான பேச்சுக்களும் அவளைப் பற்றி அவன் அறிந்தனவும் அவன் நினைவுக்கு வந்தன. அவள் மீது அப்போது எழுந்த பரவசம் முன்பொரு காலத்தில் அவனது இளைமைப் பருவத்தில் அவனுக்கு ஏற்பட்ட அரிதான உணர்ச்சியை ஞாபகமூட்டிற்று. அவள் அருகாமை தந்த உணர்வு தாங்க முடியாத கிளர்ச்சியை ஏற்படுத்திற்று. அவள் வைத்திருந்த கூடையில் ஒரு பெரிய காளான் தண்டைத் தைரியமாகப் போட்டான். அவன் பிறகு அவள் விழிகளை உற்று நோக்கினான். ஒரே சமயத்தில் மகிழ்ச்சியையும் சற்றுப் பயத்தையும் அவள் முகம் பிரதிபலித்தது. அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டது. மௌனமாய், அர்த்தம் பொதிந்த ஒரு புன்னகையை வீசினான்.”
அந்தப் பெண் வீட்டுக்குக் கிளம்பும் நேரம் நேரம் வந்து விட்டது. அவளது கிராமத்தை அடைய நான்கு மைல்கல் நடக்க வேண்டும். வெளியே நிற்கும் பெண்கள் இரைச்சலிட்டுக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் நிற்கிறார்கள். கடைக்காரன் அவர்களைக் கவனித்தபடி நிற்கிறான். இரண்டு குழந்தைகளுடன் திரும்பத் தனது கிராமத்துக்குச் சென்று தன் துயர வாழ்க்கையில் மூழப் போகும் அந்தப் பெண்ணைக் கடைக்காரன் நினைத்துப் பார்க்கிறான். அந்தக் கிழிந்த பக்கங்களை நீயே வைத்துக் கொள் என்று கூறியிருக்கலாம் என்று நினைக்கிறான். ஆனால், அதை அவள் படித்துப் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கவில்லை.
அன்னா கரீனினாவின் கிழிந்த பக்கங்கள் எங்கோ ஒரு கோடியில் இருக்கும் இந்தக் கிராமத்தின் கடைக்கு எப்படி வந்து சேர்ந்தன? இம்மாதிரிதான்:
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரி ஒருவர் கடல்களையும் சமுத்திரங்களையும் கடந்து பயணிக்க வேண்டியிருக்கும் போது வழியில் படிக்க ஒரு புத்தகம் வாங்குகிறார். விமானத்தில் முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்து அவர் கையில் இருக்கும் புத்தகத்தை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கிழிக்கிறார். அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் தன்னைக் கவனிப்பதைக் கவனித்தபடி. பிறகு சுற்றியுள்ளோருக்குக் கேட்கும் குரலில், “நீண்ட பயணம் செய்யும் போது இது என் வழக்கம். ஒரு கனத்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு யார் அலைவது?” ஒவ்வொரு பாகத்தையும் படித்து முடித்ததும், விமானத்தில் சாதாரண வகுப்பில் அமர்ந்திருக்கும் அவருடைய செகரட்டரிக்கு அனுப்பி விடுகிறார். ரஷ்யாவின் பிரசித்துப் பெற்ற நாவலின் கிழிக்கப்பட்ட பக்கங்கள் கடைசியாக விமானத்தின் பின்புறத்தை அடைகின்றன.
இதற்கிடையில் இந்தியக் கடையின் கவுன்ட்டர் அருகே ஒரு பெண் வந்து நிற்கிறாள். அவள் ஜீன்ஸ் அணிந்து அதற்கு மேல் கம்பளி மேலாடை அணிந்திருக்கிறாள். அந்த நவீன மங்கையின் அருகே அவளது இரு குழந்தைகள் அவள் உடையைப் பிடித்துக் கொண்டு நிற்கின்றன.
அவள் கடைக்காரரைப் பார்த்து நன்றியைத் தெரிவிக்கும் பார்வையை வீசுகிறாள். அவன் தன்னை விரும்புவதையும் தன் மீது பரிதாபம் கொண்டுள்ளதையும் அவள் அறிவாள். அவள் கடையை விட்டு வெளியேறுகிறாள்.
மலையெனக் குவிந்திருக்கும் புழுதியின் மேல் ஜாக்கிரதையாக அடி வைத்து இரு குழந்தைகளையும் பிடித்துக் கொண்டு நடந்தாள். இது கஷ்டம்தான். ஆனால், பழகி விட்டது. அவள் சிந்தனை அவள் படித்த கதையின் மேல் இருந்து கொண்டிருந்தது. அதைப் பற்றி யோசித்தாள். கதையில் வரும் பெண்ணும் தன்னைப் போலத்தான். வெள்ளை ஸ்கார்ஃபுடன் இரு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு நடக்கும் அவள் தன்னைப் போலத்தான். தானே அவளாக இருக்கக் கூடும். அந்த ரஷ்யப் பெண்ணாக. அந்தக் கடைக்காரனும் அவளை விரும்புகிறான். அவளைத் திருமணம் செய்துகொள்ளக் கேட்கப் போகிறான். அவள் அந்தப் பாராவைத் தவிர மேலே படிக்க முடியாமல் போய்விட்டது. ஆம், ஒரு மனிதன் என்னைத் தேடி வருவான். இந்தக் கஷ்டங்களிலிருந்து என்னை விடுதலை செய்து என்னையும் என் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு போவான். ஆம். அவன் என்னைக் காதலித்துக் காப்பாற்றுவான்.
அவள் மேலே நடக்கிறாள். தண்ணீர்ப் பானை அவள் தோள்களுக்கு வலியைத் தருகிறது. பாதி வழியில் பானையைக் கீழே இறக்கி விட்டு கையை உதறிக் கொள்கிறாள். பானைக்குள் இருக்கும் தண்ணீர் போடும் ‘கலக்’ ‘புலக்’ சத்தத்தைக் குழந்தைகள் கேட்கிறார்கள். அவர்கள் அந்தப் பானையைத் தொட்டுத் தொட்டு ஆட்டம் போடுகிறார்கள். “பொறு, பொறு” என்று குழந்தைகளிடம் சொல்லுகிறாள். பிறகு மறுபடியும் பானையைத் தூக்கிக் கொண்டு மேலே நடக்கிறாள். பானையைத் திறந்தால் உள்ளே புழுதி போகும். வீட்டை அடையும் வரை அவளால் அந்தப் பானையைத் திறக்க முடியாது.
அவள் நினைக்கிறாள். ‘என் டீச்சர் அங்கு ஒரு நூலகம் இருப்பதாகவும், அது சூப்பர் மார்க்கெட்டை விடப் பெரிது என்றும், அதன் உள்ளே புத்தகங்கள் நிரம்பிக் கிடப்பதாகவும் சொன்னாள்.’ அந்த இளம்பெண் தனக்குத் தானே புன்னகை செய்தபடி மேலே நடக்கிறாள். புழுதிக் காற்று அவள் மேலே வீசுகிறது. ‘நான் புத்திசாலிதான்!’ என்று அவள் நினைத்துக்கொள்கிறாள். டீச்சரும் பள்ளியிலேயே நான்தான் சிறந்த புத்திசாலி என்று சொன்னாள். ‘என் குழந்தைகள் புத்திசாலிகளாக இருப்பார்கள். என்னைப் போலவே! நான் அவர்களைப் புத்தகங்கள் நிரம்பிய நூலகத்துக்கு அழைத்துச் செல்வேன். அவர்கள் நல்ல பள்ளிக்குச் செல்வார்கள். அவர்கள் ஆசிரியர்களாக ஆவார்கள். என் டீச்சர் நீயும் டீச்சராகலாம் என்று என்னிடம் சொன்னாள். என் குழந்தைகள் தொலை தூரம் சென்று நல்ல வேலை பார்ப்பார்கள். நிறையப் பணம் சம்பாதிப்பார்கள். அவர்கள் ஒரு பெரிய நூலகத்தின் அருகே வசிப்பார்கள். நல்ல வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.’
அந்த ருஷ்ய நாவலின் கிழிந்த பக்கங்கள் எப்படி அந்த இந்தியக் கடையில் வந்து சேர்ந்தது என்று நீங்கள் கேட்கலாம்.
அது ஒரு அழகான கதை. யாராவது ஒருவர் ஒரு நாள் சொல்லக்கூடும்.
அந்த ஏழைப் பெண் சுமையுடன் நடந்து செல்கிறாள். வீட்டை அடைந்ததும் குழந்தைகளுக்குத் தண்ணீர் தருவாள். அவளும் கொஞ்சம் குடிப்பாள். ஆப்பிரிக்காவின் வறட்சி மிகுந்த நாட்களில் புழுதியினூடே அவள் வாழ்க்கை தொடரும்.
நாம் உழைத்துத் தேய்ந்தவர்கள். நம் உலகில் நாம் பயமுறுத்தப்பட்டவர்கள். முரண்பட்டு, வெறுப்பில் தோய்ந்து வாழப் பழகிவிட்டோம். சில வார்த்தைகளை, சிந்தனைகளை நாம் தொட்டுப் பார்த்ததில்லை. அவை வழக்கொழிந்தவையாக ஆகிவிட்டன. ஆனால், வீர்யம் இழந்த சில வார்த்தைகளை மீட்க நாம் பிரயத்தனப்படுகிறோம்.
இலக்கியத்துக்கான பெரும் புதையல் நமக்கு வெளியே இருக்கின்றது. எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் தொடங்கி இந்தப் புதையல் எங்கும் பரவிக் கிடக்கிறது. தேடினால் செல்வம் கொழிக்கும் புதையலாக அது மாறிவிடும். யாரெல்லாம் அதிர்ஷ்டசாலிகளோ அவர்கள் தம் தேடலில் வெற்றி பெறுகின்றனர். இத்தகைய புதையல் இல்லாமலிருந்திருந்தால் எத்தகைய வறியவர்களாக, காலிப் பாண்டமாக நாம் இருப்போம்?
மொழிகள் பெரும் மரபுச் சொத்தாகக் கவிதைகளையும் சரித்திரங்களையும் அடக்கிக் கொண்டிருக்கின்றன. அவை தீர்ந்து போகும் சாத்தியம் என்பது எப்போதும் எங்கும் நடக்காது. அவை எப்போதும் எங்கும் உலவுகின்றன.
உயில் எழுதப்பட்டுக் கிடைக்கும் சொத்துக்கள் போல கதைகளும் கவிதைகளும் பழைய கதை சொல்லிகளிடமிருந்து நமக்கு கிடைத்திருக்கின்றன. சிலரின் பெயர் நமக்குத் தெரிந்திருக்கலாம். பலரின் பெயர் தெரிந்திருக்காமலே இருக்கும். ஒரு காட்டைச் சரி செய்யச் செல்லும் இந்தக் கதைசொல்லிகள் காட்டில் பரவும் தீயைப் பார்க்கிறார்கள், நடனமாடுகிறார்கள், பாடுகிறார்கள்.
நமது வம்சாவளி தீயிலும் மந்திரத்திலும் ஆவியிலும் எழுந்தது. இப்போதும் அது அங்கேயே நின்று பிரகாசிக்கிறது.
எந்த நவீனக் கதைசொல்லியையும் கேளுங்கள், அவர்கள் தீயைத் தொட்டவர்கள் என்று கூறுவார்கள். உத்வேகம் என்னும் தீயை. காலத்தின் பல மடிப்புகளுக்குள் சென்று நமது ஆதி பரம்பரை ஆரம்பித்த தினத்திலிருந்து மென்மேலும் வளர்ந்து பெருகி உலகை உருவாக்கிய பெருஞ் செயலை அறிந்தவர்கள் அவர்கள்.
ஒவ்வொருவரின் உள்ளும் ஒரு கதைசொல்லி இருக்கிறான் (ள்).
அந்தக் கலைஞர் நம்முடன்தான் இருக்கிறார். இந்த உலகம் யுத்தத்தால் அதன் பயங்கரத்தால் பாதிக்கப்படுவதாக எடுத்துக்கொள்ளுங்கள். நம் நகரங்களை வெள்ளம் ஆட்கொள்ள கடல் மேலெழுகிறது. ஆனால், கதைசொல்லி அங்கேயே இருப்பார். ஏனெனில், நமது கற்பனை நல்லதையும் கெட்டதையும் நினைத்துப் பார்க்க வழி செய்கிறது. நாம் அடிபடும் போதும், அலைக்கழிக்கப்படும் போதும், ஏன் அழிக்கப்படும் போதும் நம் கதைகள் நம்மை மீண்டும் உருவாக்குகின்றன. கதைசொல்லி என்னும் கலைஞர்தான் நம் கனவின் கடவுள், மாயையை உருவாக்குபவர். பீனிக்ஸ் பறவையைப் போல சாம்பலிலிருந்து உயிர் பெற்று எழும் வல்லமை வாய்ந்தவர்.
புழுதியில் நெடுந்தூரம் செல்லும் அந்த இளம் பெண்ணும் அவளது குழந்தைகளின் கல்வி பற்றிய கனவும் அவளை விட நமக்கு சிறந்த வாழ்வு கிட்டிவிட்டது என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைக்கிறதா? வேளைக்கு நமக்குக் கிடைத்து விடும் உணவு, அலமாரி நிறைய அமர்ந்திருக்கும் உடைகள் ஆகியவற்றின் நினைப்பில் புதையுண்டு நம் தேவைகள் பூர்த்தியாகி விட்டன என்று இறுமாந்து கிடக்கிறோமா?
எனக்கென்னவோ அந்த யுவதியும் அவளைப் போன்ற பெண்மணிகளும் புத்தகங்கள் மேல் கொள்ளும் தாகம், மூன்று வேளை உணவு கிடைக்காவிட்டாலும் கல்வி மீது கொண்டிருக்கும் பிரேமை – இவைதான் நம்மைப் பற்றி நமக்கு வரையறுத்துக் காட்டும் என்று நம்புகிறேன்.
“ஸிந்துஜா” <weenvy@gmail.com>