டோனி மாரிசனுடன் ஓர் உரையாடல்

 டோனி மாரிசனுடன் ஓர் உரையாடல்

ஆங்கில மூலம்: கிராண்டா இதழ்
தமிழில்: ஸிந்துஜா  

 

நியூயார்க்கில் டோனி மாரிசனின் இல்லத்தில் நடந்த இந்த நேர்காணலுக்கு அவர் விதித்த ஒரே நிபந்தனை தன்னைப் புகைப்படம் எடுக்கக் கூடாது என்பதுதான். எந்தவிதமான கேள்வியையும் கேட்கலாம் என்றார். பதில் அளித்த பின் அதைத் திருத்தி நகாசு பண்ணும் வேலையை அவர் விரும்பவில்லை. உள்ளத்தில் இருப்பதுதானே வாக்காக வருகிறது என்ற தன்னம்பிக்கை காரணமாக இருக்க வேண்டும். அவருடைய தனித்துவம் மிக்க எழுத்தைப் போலவே இசையின் ஒலியும் நுண்ணுணர்வும் தெறிக்கப் பதிலளித்தார். இனவெறி, வெள்ளைத்தோல், நினைவுக்கும் மறதிக்கும் இடையே நடக்கும் போராட்டம், செக்ஸ் எழுத்து ஆகியவற்றைப் பற்றிப் பேசினார். சிரித்துக்கொண்டும், இளம் பிராயத்தில் கற்றுக்கொண்ட பாட்டுக்களைப் பாடிக்கொண்டும் பேட்டி தந்த அவர், இன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் பெயரை உச்சரிக்க மறுத்தார். ஒரு மணிக் காலம் என்று தீர்மானித்திருந்த நேர்காணல் இரண்டு மணி நேரத்தை எடுத்துக்கொண்டு விட்டது.

பேட்டி கண்ட இருவரில் ஒருவரான சாரா லாடிப்போ மன்யிகா ஒரு ஆங்கில (பிரிட்டிஷ்) நைஜீரியப் பெண் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் எழுதி வரும் இவர் தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கிறார். மற்றொருவரான மரியோ கைஸர் கட்டுரைகள் எழுதும்

ஆண் எழுத்தாளர். ஜெர்மனியில் பிறந்து தற்போது நியூயார்க்கில் பணியாற்றுகிறார்.

டோனியின் இல்லத்தில் விருந்தினருக்கான பாத்ரூமில் நோபல் பரிசு கிடைத்தது பற்றித் தெரிவிக்கும் கடிதம் பிரேமிடப்பட்டுத் தொங்குகிறது. எதிர்ப்புறச் சுவரில் டெக்சாஸ் மாநில நீதிமன்றம் டோனியின் ‘பாரடைஸ்’ நாவலை மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகள் படிக்கக் கூடாது என்று தடை செய்த கடிதம், ஒரு பரிசைப் போலத் தொங்குகிறது. சிறைக்குள் அந்நாவல் கலவரத்தைத் தூண்டக்கூடும் என்று தடையாம்.

சாரா: உங்களை எப்படி அழைப்பது? புரஃபஸர், டாக்டர், திருமதி, மிஸ்?

டோனி மாரிசன்: டோனி!

சாரா: இந்தப் பேட்டிக்கு வாய்ப்பளித்ததுக்கு மிக்க நன்றி. நான் நைஜீரியாவைச் சேர்ந்தவள். சற்றுமுன் உங்கள் பாத்ரூமில் வோலே சோயிங்காவின் படத்தைப் பார்த்தேன். (அவர் நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர்)

டோனி மாரிசன்: ஆமாம். பாரீசில் நாங்கள் சந்தித்து மணிக்கணக்கில் பேசுவோம். இந்த சந்திப்பில் உலகப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்! சோயிங்காவுக்கு எந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்க வேண்டும் என்று தெரியும்!

சாரா: இப்போதும் அவர் அப்படித்தான்.

டோனி மாரிசன்: ஆமாம். அந்தக் குரலுடன் (உரத்த குரலில் சோயிங்காவைப் போலப் பேசிக் காண்பிக்கிறார். )

மரியோ: சாராவும் நானும் உங்கள் புத்தகங்கள் மூலம் நண்பர்களானோம். நாங்கள் ஒரு எழுத்தாளர் பட்டறையில் கலந்துகொண்ட போது நான் எனது பாட்டனார்களைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட அவர்கள் இறுதி வரை வீடு திரும்பவேயில்லை. அப்போது சாரா உங்களுடைய ‘ஹோம்’ நாவலையும் அதன் ஒலிப்பதிவு நாடாவையும் கொடுத்தாள்.

டோனி மாரிசன்: ஆமாம். நான் என் புத்தகங்களை வாய் விட்டு வாசிக்கிறேன். என் எழுத்துக்களை நானே என் குரலில் கேட்பதை மிகவும் விரும்புகிறேன். இதனால் என் வார்த்தைகள் எப்படி ஒலிக்க வேண்டும் என்று நான் அளவிட முடிகிறது. எனது புத்தகங்கள் பிரசுரமாக ஆரம்பித்த போது பதிப்பாளர் அவற்றை டிஸ்க்குகளில் பதித்தார். அவற்றை வாசித்த பெண்கள் மிகச் சிறந்த நடிகைகள் என்பதில் சந்திதேகமில்லை. ஆனால், அவர்கள் குரல்கள்? முதல் தடவையாக ஒன்றைக் கேட்ட போது என் பதிப்பாளரிடம், ‘இது சரியாக வரவில்லை’ என்றேன். அது ‘பிலவட்’ என்னும் நாவல் குறித்தது. ‘டட்-ட-ட-ட-டட்-பூம்-டட்- டட்-டட்-டட்-’ என்று ஆடியோவில் வருவதைக் காண்பித்து ‘சகிக்கவில்லை’ என்றேன். அதன் பிறகு நான் என் குரலில் வாசிக்க ஆரம்பித்த போதுதான் தெரிந்தது, அதுவரை ஒலியில் ஏற்றப்பட்டவை எல்லாம் என் சுருக்கப்பட்ட நாவல்களிலிருந்துதான் என்று. நானாக இழுத்துப் போட்டுக் கொண்ட தொந்திரவு என்று பொருமிக்கொண்டே செய்தேன்.

மரியோ: உங்களது சமீபத்திய நாவலான ‘காட் ஹெல்ப் தி சைல்ட்’ன் முதல் வரியே, ‘அது என் குற்றமல்ல’ என்று வருகிறது. ஒரு தாய் அப்போதுதான் தான் ஈன்றெடுத்த குழந்தையைப் பார்த்துக் கூறுகிறாள்.

டோனி மாரிசன்: ஆமாம். பயத்துடன்.

மரியோ: குழந்தையின் தோல்நிறம் தனது நிறத்தை விட அதிகக் கறுப்பாயிருக்கிறதே என்னும் பயத்துடன் அந்தத் தாய்……

டோனி மாரிசன்: அவளுடைய, குழந்தையினுடைய எதிர்காலம் பற்றி……

மரியோ: உங்களது மற்ற நாவல்களைப் போலில்லாது இந்த நாவலின் கதை நிகழ்காலத்தில் நடக்கிறது. எப்படி தோலின் நிறம் இந்த நாட்டை அழிக்க அல்லது ஆக்கக் கூடிய சக்தியைப் பெற்றுவிட்டது?

டோனி மாரிசன்: எங்களின் வாழ்வு அத்தகைய ஆரம்பத்தைக் கொண்டுவிட்டது. இந்த நாடு ஆப்பிரிக்கத் தொழிலாளர்களை இறக்குமதி செய்து அவர்களைக் கசக்கிப் பிழிந்து, வாங்கிக் கொண்ட வேலைக்குக் கூலி எதுவும் தராமல் இருந்ததோடு மட்டுமின்றி, அவர்களது குழந்தைகளையும் அடிமைகளாக ஆக்கி உழைக்கச் செய்து தன்னைப் பெரிதாக ஆக்கிக்கொண்டு விட்டது. நான் ‘எ மெர்சி’ என்ற நாவலில் சித்தரித்த அமெரிக்காவில், இனவெறி இந்த நாட்டின் அடையாளமாக இருக்கவில்லை. (அமெரிக்காவில் இருந்த) சேலம் நகரில் நடைபெற்ற சூனியக்காரர்கள் மீதான வேட்டைகளும் கலவரங்களும் நிகழ்ந்த காலத்துக்கும் சற்று முன்பாக இருந்த அமெரிக்காவில் மதத்தை முன்னிறுத்தி கொலைகள் நிகழ்ந்தன. மதவாதிகள் இவற்றைக் கண்டு கொதித்து எழுந்தார்கள் – நிறத்தை வைத்து அல்ல. ஆனால், அதற்குப் பின்? ‘ஆற்றுப்படுத்துகிறோம்’, ‘ஆறுதல் கூறுகிறோம்’ என்று பிரிவினையை ஏற்படுத்தி விட்டார்கள். வெள்ளையர்கள் வெள்ளையர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். யோசித்துப் பாருங்கள்: நீங்கள் ஜெர்மனியிலிருந்தோ ருஷ்யாவிலிருந்தோ அல்லது எங்கிருந்தோ இருந்து வந்தாலும் படகை விட்டு இறங்கி அமெரிக்கராக ஆக விழையும் போது நீங்கள் வெள்ளைத்தோல் கொண்டிருக்க வேண்டும். அவ்வளவுதான். இதுதான் இந்த நாட்டில் ‘வெள்ளையரல்லாத மக்களை’ உருவாக்கும் ஒருங்கிணைந்த சக்தி’யாகி விட்டது. இதே நிகழ்வு இப்போது ஐரோப்பாவிலும் தொடங்கியாயிற்று என்று நினைக்கிறேன். நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் சுவீடனிலிருந்து வந்தால் ஸ்வீடிஷ்காரர். ‘நான் வெள்ளை ஸ்வீடிஷ்காரன்’ என்று அவர் சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை.

மரியோ: புரிகிறது. நான் ஜெர்மன். ஆனால், இங்கு வரும்வரை ‘நான் வெள்ளைத் தோல்காரன்’ என்ற பிரக்ஞை எனக்கு இருந்ததில்லை.

டோனி மாரிசன்: இது முக்கியமான விஷயம். இனவெறி எதிர்ப்பாளரான ஃபிரடெரிக் டக்லஸ் வெள்ளையர்களிடம் சிறைப்பட்ட போது தன்னைச் சரியாக நடத்துமாறும் உடனே விடுதலை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். அவரது அந்த எழுத்து வெள்ளையர்களுக்கானது. எனக்கானது அல்ல. டால்ஸ்டாய் ஒஹையோ மாகாணத்திலுள்ள யுவதிகளுக்காக எழுதவில்லை. அது ரஷ்யர்களுக்கானது. நான் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களுக்காக எழுதுகிறேன். அது நன்றாக இருந்து ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேராதவர்களாலும் படித்து ரசிக்கப்பட்டால் நல்லது என்றே நினைக்கிறேன்.

சாரா: ஆமாம்.

டோனி மாரிசன்: இந்த சுவாரஸ்யமான விஷயத்தைப் பாருங்கள். ஐரோப்பாவில் இருப்பவர்கள் அமெரிக்காவில் விரும்புவது என்ன? கறுப்பினத்தவரிடமிருந்து வந்ததைத்தான்! ஜாஸ் இசை!! மொழியையும் கூட! நாங்கள் இல்லாத அமெரிக்காவை நினைத்துப் பார்க்க முடியாது. அம்மாதிரி இருந்தால் நான் இங்கே வர மறுத்து விடுவேன். நான் என் முதல் நூலை வெளிக் கொண்டுவர முயன்ற போது, ‘இனவெறி என்பது மிகுந்த வலியைத் தரக்கூடியது. நீங்கள் வெள்ளையரல்ல என்ற உண்மையுடன் சேர்ந்துகொண்டு, உங்கள் இளமையும், எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலைமையும் உங்களை கொன்று விடும் ஆபத்து இருக்கிறது’ என்று எழுத விரும்பினேன். கடைசியில் இவ்வளவு ஆண்டுகளாய், புத்தகங்களை படிப்பதிலும், அவற்றை மற்றவர்களுக்காக எடிட் செய்வதிலும், நூலகங்களில் வேலை பார்ப்பதிலும் செலவழித்த காலத்தை நினைத்துப் பார்த்த போது, ‘உன்னைப் பற்றி நீ எழுதவே இல்லையே?’ என்று காலம் என்னைப் பார்த்துக் கேட்டது போலிருந்தது. எனவே, நான் படிக்க வேண்டும் என்றால் நான் எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன்.

மரியோ: உங்களது ‘காட் ஹெல்ப் தி சைலட் நாவலில் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள். 1960களில் உங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அது குடி உரிமைகளுக்காக நீங்கள் போராடிய காலம். அப்போது அமெரிக்கா உங்கள் குழந்தைகளுக்குப் பிரகாசமான எதிர்காலத்தைத் தரும் என்ற நம்பிக்கை இருந்ததா?

டோனி மாரிசன்: இல்லையில்லை. நான் இங்கு வெகுகாலமாக இருக்கிறேன். இப்போதுதான் அமெரிக்காவில் வதை செய்யப்படும் எங்கள் மக்களை, கொலை செய்யப்படும் கறுப்பர்களைப் பற்றிய செய்திகளை வெளியிட முன்வந்திருக்கிறார்கள். முன்பு இதைப் பற்றிப் பேச எங்களுக்கு உரிமை இல்லாதிருந்தது. செய்தித்தாள்கள் மூச்சு விடா. இப்போது ட்ரேவான் மார்ட்டினும், கொல்லப்பட்ட மற்றொரு சிறுவனும் பத்திரிகைகளில் பேசப்படுகிறார்கள். என் வாழ்க்கையில் ஒரு ஐம்பது அறுபது வருஷங்களுக்கு இம்மாதிரி விஷயங்களைப் பொது வெளியில் பேசக் கூடாதென தடைகள் இருந்தது உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி வருத்தப்படக் கூடாதா? ஆனால், அதெற்கெல்லாம் அனுமதி கொடுக்கப்படவில்லை. இப்போது பல மாற்றங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், அதற்குள் இங்கு ‘குடியரசுத் தலைவர்’ என்று அழைக்கப்படும் ஒருவர், முன்னெடுத்து வைத்த காலைப் பின்னுக்குத் தள்ளுவதில் குறியாக நிற்கிறார். இது மிகவும் ஆபத்தான செயல். மட்டமான முயற்சியும்கூட. அவரைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்றுதான் என் மனம் விரும்புகிறது. ஆனால், அதையும் மீறி அவரை நினைத்தாலே எரிச்சல் மண்டுகிறது.

சாரா: ‘மறுபடியும் அமெரிக்காவைத் தலைசிறந்த’தாக ஆக்குவதா?

டோனி மாரிசன்:மறுபடியும் அமெரிக்காவைத் தலைசிறந்ததாக ஆக்குவது’ என்றால் ‘மறுபடியும் அமெரிக்காவை வெள்ளையர் நாடாக ஆக்குவது!’

சாரா: உங்கள் படைப்புகளைப் படிப்பதும் கேட்பதும் உங்கள் எழுத்தின் படிக்க வைக்கும், கேட்க வைக்கும் திறன் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்துக்களை ஒருவர் உரத்த குரலில் படிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

டோனி மாரிசன்: ஆம், என் வாசகர் தன் குரலைக் கேட்பதை மிகவும் விரும்புகிறேன். என் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அதைத்தான் செய்தார்கள். என் பாட்டனாரைப் பற்றிப் பெருமையாகச் சொல்லுவார்கள், அவர் பைபிளை அட்டை முதல் அட்டை வரை ஐந்து முறை படித்தவர் என்று. ஒரு கட்டத்தில் கறுப்பினத்தவர் படிப்பது என்பதும் குற்றமாக, சட்டத்திற்கு விரோதமானதாகக் கருதப்பட்டது. அதேமாதிரி ஒரு வெள்ளையர் கறுப்பருக்குக் கற்றுக் கொடுப்பதும் சட்டம் அங்கீகரிக்காத செயலாக இருந்தது. அப்படிச் செய்தால் ஒன்று அவர் அபராதம் கட்ட வேண்டும் அல்லது ஜெயிலுக்குப் போக வேண்டும்.

என் பாட்டனார் பள்ளிக்குச் செல்லவில்லை. அவர் ஒரே ஒரு முறை சென்றதும் இனிமேல் ஸ்கூலுக்கு வர மாட்டேன் என்று சொல்லுவதற்குத்தான்! அவருடைய சகோதரி அவருக்குக் கற்றுக் கொடுத்தாள். அவரை எல்லோரும் பெரிய தந்தை என்று அழைப்பார்கள். நானும் அவ்வப்போது நினைப்பதுண்டு, வேறு எதை அவரால் வாசித்திருக்க முடியும்? அவர் இருந்த இடத்தில் புத்தகங்களோ நூலகமோ இல்லாதிருந்தது. பைபிள் மட்டும்தான் கிடைத்தது. படிப்பதன் மூலம் அதிகாரத்தைத் தனது கைக்குள் கொண்டு வர முடியும் என்று அவர் நினைத்ததாக எனக்குத் தோன்றுகிறது.

என் வீட்டில் எல்லா இடங்களிலும் புத்தகங்கள் இறைந்து கிடந்தன. என் அம்மா ‘மாதப் புத்தக நூலக’த்தில்’ உறுப்பினராய் இருந்தாள். அவள் முயற்சிகள் அடிமைத்தனத்துக்கு எதிராக இருந்தன. குடும்பத்திலிருந்தவர்கள் படித்தார்கள், கதை சொன்னார்கள், பாடினார்கள். என் அம்மா பகல் இரவு என்றில்லாமல் எப்போதும் பாடிக் கொண்டிருப்பாள். துணிகளைத் துவைக்கும் போது, அவற்றை உலர்த்தும் போது, சமையல் செய்யும் போது என்று எப்போதும் அவள் பாடிக் கொண்டிருப்பாள். அது எனக்குத் தனி உத்வேகத்தைத் தந்தது. ஆனாலும், எனக்கு முப்பத்தியொன்பது வயதாகும் வரை நான் எழுதத் தொடங்கவில்லை. எழுத வந்த பிறகு என் வார்த்தைகள் இசையை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். என் கதையின் உள்ளடக்கத்திற்கு இசை உருகி இருக்க வேண்டும்.

சாரா: உங்கள் கதைகளில் நீங்கள் மறதிக்கும் ஞாபகத்துக்கும் நடுவில் நடக்கும் போராட்டத்தைச் சித்தரிக்கிறீர்கள். ‘பிலவட்’டில், ‘அது ஒன்றும் கடந்து சென்றுவிடக் கூடிய கதையல்ல’ என்று திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. ‘காட் ஹெல்ப் தி சைல்ட்’டில் ‘குணமாவதின் மிக மோசமான விளைவு ஞாபக சக்தியை இருத்திக் கொள்வதுதான்’ என்று எழுதுகிறீர்கள்.

டோனி மாரிசன்: மகிழ்ச்சியின் இடத்தை அடைவது என்பது – நான் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசினாலும் என் புத்தக மனிதர்கள் எப்போதும் வீழ்ந்தே கிடக்கிறார்கள் – அறிவை மேம்படுத்திக் கொள்வது என்பதுதான். முடிவை அடையும் முன் உங்களுக்கு அதை பற்றித் தெரிந்திராவிட்டால் அதுதான் ஞானம். அந்தத் தந்தியை மீட்ட முடிந்திருக்க வேண்டும். முன்பறியாததை இறுதியில் எதிர்பாராவிதமாய் அறிய நேரிடுவது உன்னதம். அந்தப் புத்தகத்திலும் வாழ்க்கையிலும் ஒருவழிப் பாதையே எதிர்ப்படுகிறது. வழியில் ஏதோ ஏற்பட எல்லோரும் விழித்தெழுகிறார்கள். ஆனால், ‘காட் ஹெல்ப் தி சைல்ட்’ என்பது எனக்குப் பிடிக்காத தலைப்பு.

மரியோ: நீங்கள் என்ன தலைப்பு கொடுக்க நினைத்தீர்கள்?

டோனி மாரிசன்: ஒரு தலைப்பு கொடுத்தேன். ஆனால், இப்போது அது ஞாபகமில்லை.

மரியோ: நீங்கள் மாற்றியிருக்க வேண்டியதுதானே!

டோனி மாரிசன்: ஐயோ! கொலை விழும்!

சாரா: நோபல் பரிசு பெற்றவர் என்ற முறையில் உங்களுக்குத் தனி அந்தஸ்து இருக்கிறதே.

டோனி மாரிசன்: அதெல்லாம் ஒன்றுமில்லை. (நடித்துக் காட்டுகிறார்) ‘எங்காவது எப்படியாவது தொலைந்து போங்கள்! ஆனால், இதுதான் என் தலைப்பு!’

‘இல்லையில்லை. உனக்கு அந்த உரிமையெல்லாம் கிடையாது!’

அவர்கள் கோடிக்கணக்கில் பணம் புரட்டுவார்கள். புத்தகம் வெளியிடுவது என்னவோ எனக்குச் செய்யும் பரோபகாரம் என்றுதான் நடந்துகொள்வார்கள். நானும் என் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் போய்ச் சேர்ந்த பின்னும் அவர்களுக்கு என் புத்தகங்கள் மூலம் பணம் கிடைத்துக் கொண்டிருக்கும். நான் இந்தத் தொழிலில் ரொம்ப காலம் வேலை பார்த்துவிட்டேன். எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அது சரி, நாம் எந்தப் புத்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்?

சாரா: ‘காட் ஹெல்ப் தி சைல்ட்’

டோனி மாரிசன்: அதுதான். எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக. அந்தப் பெண் படு கறுப்பு. ஆனால், அழகி. அவளுடைய காதலன் மகா சோம்பேறி. இரண்டு பேரும் தமக்குள் புதைந்துகொள்பவர்கள். அவர்கள் ஒரு புதிய இடத்திற்கு வருகிறார்கள். அங்கே அவர்கள் யாரோ ஒருவரைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. ‘நான், நான், நான்’ என்று எப்போதும் அவர்களிடம் தொற்றிக் கொண்டிருக்கும் ஜெபத்திலிருந்து விடுபட்டு வெளியே வர அந்த அனுபவம் அவர்களுக்கு உதவுகிறது. அதனால் அவர்கள் இறுதியில் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள். அவர்களிடையே நேசமும் உருவாகிறது.

மரியோ: அந்த நாவலில் ‘தோலின் முக்கியத்துவம்’ பற்றி எழுதுகிறீர்கள். அது எப்படி கறுப்பர்களுக்கு இடையேகூட ஒரு தனி இடத்தை அளிக்கிறது? பாரக் ஒபாமா இன்னும் கறுப்பாக இருந்திருந்தால் அவர் குடியரசுத் தலைவராக ஆகியிருக்க முடியுமா?

டோனி மாரிசன்: அவர் அவ்வளவு கறுப்பு இல்லை!

மரியோ: ஆனால், நீங்கள் குறிப்பிடும் சூடான் நாட்டுக் கறுப்பு இல்லையே அவர்?

டோனி மாரிசன்: ஆமாம். சூடான் நாட்டுக் கறுப்பு அலாதியானது. இங்கிதமானது! எத்தியோப்பியக் கறுப்பு மிக அழகானது. எல்லா எத்தியோப்பியர்களும் அழகானவர்கள்! அசிங்கமான எத்தியோப்பியர் என்று யாரும் கிடையாது. ஆனால், நான் பிறந்தது உருக்கு ஆலைகள் நிரம்பிய ஊர்!

 

மரியோ: லோரெய்ன், ஒஹையோ.

டோனி மாரிசன்: நிறைய அகதிகள் சூழ்ந்த ஊர். ஒரே ஒரு உயர்நிலைப் பள்ளி. என் குடும்பத்தில் கல்லூரிக்குச் சென்ற முதல் ஆள் நான்தான். நான் படித்த ஹோவர்ட் காலேஜில்தான் இந்த நிற அந்தஸ்து பற்றிக் கேள்விப்பட்டேன். அப்போது வாஷிங்டன் முழுவதிலும் கறுப்பின நடுத்தரக் குடும்பங்கள் நிறைந்திருந்தன. அவர்கள் புள்ளி விவரக் கணக்கு அலுவலகங்கள், மகளிர் கழகங்கள், மற்ற கம்பனிகளில் வேலை பார்த்தார்கள். கல்லூரியில் அவர்களைப் பற்றி மற்றவர்கள் பேசியது எனக்கு முட்டாள்தனமாகப் பட்டது. நிறத்தை வைத்து நண்பர்களைத் தேடிப் பிடிக்க நான் விரும்பவில்லை.

பின்னாளில் நான் அங்கேயே படிப்பு சொல்லிக் கொடுக்கச் சென்ற போது என் வகுப்பில் ஸ்டோக்லி கார்மிக்கேல் (பின்னாளில் மக்கள் குடியுரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு உலகப் புகழ்பெற்ற கறுப்பினத் தலைவரானவர்) மாணவராக இருந்தான். ‘நீ பட்டதாரியான பின் என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டேன். ‘எனக்கு இறையாண்மைக் கழகத்தில் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், நான் குடியுரிமை போராட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறேன்’ என்றான். அதனால், அரசியல் என்பது நிறம் பற்றியது அல்ல, மாறாக மனித உரிமைக்கு குரல் கொடுப்பது பற்றியது.

நான் மாணவியாய் இருந்த போது உலகம் அப்படித்தான் இருந்தது. வாஷிங்டனில் நாங்கள் – கறுப்பினப் பெண்கள் – ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் இருந்த பாத்ரூமைத்தான் உபயோகிக்க முடியும். வேறெந்த இடத்திலும் உள்ள பாத்ரூமுக்குள் நாங்கள் செல்ல முடியாது. பஸ்களில் ‘வெள்ளையருக்கு மட்டும்’ என்று போர்டு தொங்கும். அம்மாதிரி போர்டு ஒன்றைத் திருடி என் தாய்க்கு நான் ரகசியமாக அனுப்பினேன். வாஷிங்டன் ஒரு பிரிக்கப்பட்ட நகரம். நீரூற்றுக்கள் நிரம்பிய இடம். கறுப்பர்களுக்கு ஒன்று, வெள்ளையர்களுக்கு ஒன்று. நீரூற்றுக்களைப் போய்ப் பிரிப்பதில் உள்ள நீசத்தனம். அப்படிச் செய்வதால் அவர்கள் உயர்ந்த மனிதர்களாக ஆகிவிடுவார்களா?

மரியோ: டொனால்ட் டிரம்ப் ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடம் வோட்டு கேட்டு வரும் போது ‘நீங்கள் இழக்க இனிமேல் என்ன இருக்கிறது?’ என்று கேட்டது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

டோனி மாரிசன்: அது ஒரு முட்டாள்தனமான கேள்வி என்று நினைக்கிறேன். நாங்கள் இழக்கப் போவது எல்லாவற்றையும்தான். நீ எங்களைச் சுற்றி வெடிகுண்டுகளை எறிகிறாய். அந்த மனிதனின் தலைக்கனம்! அவருடைய அகராதியில் அவருக்குத் தெரிந்த சொற்கள் மொத்தம் 77. பிலிப் ராத் அதை எண்ணி உறுதி செய்திருக்கிறார்! 77 வார்த்தைகள்!

மரியோ: நாம் டிரம்பை விட்டு ஒபாமாவுக்கு வருவோம். அவரிடமிருந்து ‘சுதந்திரத்துக்கான குடியரசுத் தலைவரின் மெடல்’ வாங்கிய போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? அப்போது ஒபாமா உங்கள் காதில் என்ன முணுமுணுத்தார்?

டோனி மாரிசன்: அப்போது நீங்கள் அங்கே இருந்தீர்களா?

சாரா/மரியோ: இல்லை வீடியோவில் பார்த்தோம்.

டோனி மாரிசன்: என் காதில் முணுமுணுத்தார். உங்களிடம் சொல்லுகிறேன். இது முக்கியமான விஷயம்: அவர் சொன்னது என்னவென்று எனக்குத் தெரியாது!

மரியோ: ஆனால், நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டீர்களே!

டோனி மாரிசன்: ஆமாம், அங்கிருந்து கிளம்பிப் போகும் போது அவர் என்ன சொன்னார் என்று நினைவுபடுத்திப் பார்த்தேன். எனக்கே சங்கடமாகி விட்டது. நான் அதற்குப் பின் பாரீஸ் சென்ற போது பிரான்சிலிருந்த தூதுவரைப் பார்த்தேன். அப்போது இந்த மாதிரியான இக்கட்டு ஏற்பட்டதைச் சொன்னேன். அதற்கு அவர், ‘இதோ பார். ஒருமுறை ஒபாமா என்னிடம் 45 நிமிடம் உரையாடினார். ஆனால், அவர் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது!’ என்றார்.

சாரா: நீங்கள் ஒபாமாவைப் பார்த்து பிரமிப்படைந்திருக்க வேண்டும்.

டோனி மாரிசன்: உண்மைதான். ஒருமுறை ஒபாமா கலந்துகொண்ட பார்ட்டிக்கு என் மகனுடன் சென்றேன். அவன் அவரிடம், ‘நீங்கள் என் அம்மாவிடம் ஏதோ காதில் முணுமுணுத்தீர்களாம். அது என்ன என்று அவளுக்கு ஞாபகம் இல்லை என்று அவள் சொல்லுகிறாள். என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டிருக்கிறான். அதற்கு அவர், ‘அவளிடம் ஐ லவ் யூ என்றேன்!’ என்று பதிலளித்தாராம். நான் ஏன் முழித்தேன் என்று எனக்கு இப்போது தெரிகிறது. நீங்கள் ஒருவருடன் முக்கிய தருணத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கும் போது வேறு எந்தப் பிரக்ஞையும் எழுவதில்லை.

சாரா: நாம் காதலைப் பற்றி பேசுவோம். உங்கள் நண்பர் ஜேம்ஸ் பால்ட்வின்…..

டோனி மாரிசன்: ஓ, எஸ்.

சாரா: பால்ட்வின் ஒருமுறை, ‘கலைஞன் என்பவன் ஒரு காதலனைப் பிரதிபலிப்பவன். நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று அவன் சொன்னால் உனக்குத் தெரியாத உலகைக் காண்பிக்கிறேன் என்று அவன் சொல்வதாக அர்த்தம்’ என்று கூறியிருக்கிறார். ஒரு கலைஞன் செய்ய வேண்டியது என்ன?

டோனி மாரிசன்: பால்ட்வின் சொன்னது நகைப்புக்குரியது. இப்போது நான் சொல்வது சற்று ஆரவாரமாகப் படலாம். ஆனால், ஒரு கலைஞன் என்பவன் – ஓவியனோ எழுத்தாளனோ – புனிதன். கடவுளை போன்றவன். சாதாரண ஜனங்களின் உணர்வுகளுக்கும் அவர்களின் அறியும் தன்மைகளுக்கும் மேலான ஒழுங்குமுறை கொண்ட அவனை எதிர்கொள்ளும் தரிசனம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை. அது மற்றவர்களின் பார்வைகளுக்கு மேலெழுந்தது; அப்பாற்பட்டது.

எனக்கு ஓவியர்களை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. ஓவியனின் கைக்கும் மூளைக்கும் இடையே ஒளிரும் உள்ளொளியின் ரசாயனம்தான் என்ன? அதனால்தான் புரியவில்லை என்று குற்றம் சாட்டுபவர்களை நான் மதிப்பதில்லை. ஒரு விமரிசகனின் பாஷை கலைஞனின் நடமாட்டத்தை அவ்வளவு தெளிவாகக் கணித்து விடுவதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

சாரா: உங்கள் பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது பற்றி?

டோனி மாரிசன்: அதை அவர்களே வைத்துக்கொள்ளுகிறார்கள். சிலசமயம் நான் வைக்கும் பெயர்கள் படு அபத்தமாக இருக்கும். கடைசியில் அவை தானாகவே கழன்று விழுந்துவிடும். நான் ‘சாங் ஆஃப் சாலமன்’ எழுதிய போது அதில் வரும் ஒரு பெண் பாத்திரத்துக்கு பிலேட் என்று பெயர் வைத்தேன். எழுத ஆரம்பித்தபின் அவளே நாவலை ஆக்கிரமித்துக் கொண்டாள். நிற்காமல் பேசிக் கொண்டேயிருந்தாள். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்து, ‘இது என் நாவல். நீ வாயை மூடு’ என்று சொல்லும்படி ஆகிவிட்டது. ஒரு காட்சியில் அவள் இறந்துவிட்ட பாட்டிக்காக அழுது கொண்டே, ‘அவள் எல்லோராலும் விருப்பப்பட்டாள்’ என்று கூறுவாள். அவ்வளவுதான். அதற்குப் பின் அவளைப் பேச விடவில்லை. அவள் அந்த நாவலில் மற்ற பாத்திரங்களைக் கட்டுப்படுத்தும் சர்வ வல்லமை கொண்டிருந்தாலும் கூட.

மரியோ: உங்களுக்குப் பனிரெண்டு வயதாகும் போது கத்தோலிக்கராக ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு அந்தோணி என்று பெயர் சூட்டிக் கொண்டீர்கள். இது பின்னால் டோனியாகிவிட்டது. இந்தப் பெயர் அந்தோணி முனிவரைக் குறிப்பதா? அவர் உத்வேகத்துடன் கிறிஸ்துவ மதப் பிரசங்கங்கள் செய்தார். தவறியவர்களைக் கடைத்தேற்றம் செய்யும் முனிவராயிருந்தார். உங்களை பொறுத்தவரை தவறியவைகள் என்று ஏதாவது உண்டா?

டோனி மாரிசன்: ஆம், ஒன்று என் மகன். இரண்டாவது, சென்றுவிட்ட ஆனால், நான் திரும்பப் பெற விரும்பும் என் வாழ்வின் சில தருணங்கள்.

மரியோ: குறிப்பாக?

டோனி மாரிசன்: என் இளங்கலைப் படிப்புக் காலம். அங்கே கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. ஒரு நாடகக் குழுவில் இருந்தேன். பல இடங்களுக்குச் சென்றோம். நாட்டின் தென்பகுதிகளுக்குச் சென்றது அதுதான் முதல் தடவை. ஒரு ஹோட்டலில் தங்க வைத்தார்கள். அங்கு சென்று சற்றுக் கழித்துதான் தெரிந்தது, அது ஒரு விபசார விடுதி என்று. அடித்துப் பிடித்துக்கொண்டு எங்களை அழைத்துச் சென்றவர் ஒரு உள்ளூர் பாதிரியாரிடம் விஷயத்தைச் சொன்னார். பதினைந்து நிமிடங்களில் உதவி வந்துவிட்டது. தனி நபர் வீடுகளில் நாங்கள் தங்க வைக்கப்பட்டோம். நானும் என் சிநேகிதியும் சென்ற வீட்டில் இருந்த பெண் எவ்வளவு நல்லவள்! அந்த இடம்! எவ்வளவு அழகாக இருந்தது! அந்தப் வீட்டுப் பெண்மணி துணிகளைப் புதர்கள் மேல் இட்டு உலர்த்தியிருந்தாள். அந்த உடைகளிலிருந்து வந்த வாசனை! ஆஹா! அவள் சாப்பிடப் பிரமாதமான உணவுகள் கொடுத்தாள். நாங்கள் தந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டாள். கடைசியில் நாங்கள் கிளம்பும் போது தலையணைக்கு அடியில் பணத்தைப் புதைத்துவிட்டு வந்தோம்.

மரியோ: இது உங்கள் ‘ஹோம்’ நாவலை நினைவூட்டுகிறது.

டோனி மாரிசன்: ஆமாம். அந்த நாவலில் அவனைக் கறுப்பன் என்று குறிப்பாக நான் கூறவில்லை. ஆனால், என் பதிப்பாளர் ‘அவன் வெள்ளையனா அல்லது கறுப்பானா என்று தெரியவில்லையே? அப்படிக் காண்பிப்பது முக்கியம்’ என்றார். முதலில் நான் மறுத்தாலும் பிறகு ஒப்புக்கொண்டேன். ‘அந்த வெள்ளைக்காரியை முதலில் அவர்கள் சுட்டார்கள் என்று ‘பாரடைஸ்’ நாவலில் நிறத்தைக் குறிப்பிட்டு எழுதியது போல எழுதத் தீர்மானித்தேன். அம்மாதிரி எழுதுவது எதோ ஒரு விடுதலை உணர்ச்சியைத் தருவது போல இருந்தது. வெறுமனே ‘கறுப்பன்’ என்று எழுதுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. நிகழ்வுகளுடன் நிறத்தைச் சுட்டிக்காட்டி படிப்பவரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு எழுத்து இருக்க வேண்டும்.

என் தந்தையின் பாட்டி ஒரு செவிலித் தாயாக வேலை பார்த்தாள். உயரமான தோற்றம் உடையவள். அவளுக்குத் தெரியாத விஷயம் என்று எதுவுமே கிடையாது. எப்போதாவது எங்களைப் பார்க்க வருவாள். கையில் ஒரு பிரம்பு வைத்திருப்பாள். அதை வைத்து என்னையும் என் சகோதரியையும் சுட்டிக்காட்டி, ‘இவை இரண்டும் எதற்காக இப்படி வெளிறிக் கிடக்கின்றன?’ என்பாள். நாங்கள் எங்களுடைய நிறத்தைப் பற்றி அப்போது பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தோம். பெரிய பாட்டி நல்ல அட்டைக் கறுப்பு. ஆனால், மினுமினுக்கும் கறுப்பு! அசல் ஆப்பிரிக்க நிறம் அவளது. எங்கள் நிறம் என்னவோ தேய்ந்து மங்கிப் போய்விட்டது போல அவள் பார்த்தாள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சாரா: நாம் செக்ஸ் பற்றி பேசலாமா?

டோனி மாரிசன்: ஓ, தாராளமாக. அதைப் பற்றிப் பேசி ஆயிரம் ஆண்டு காலம் ஆகிவிட்ட மாதிரி இருக்கிறது!

சாரா: நீங்கள் பாலுறவுக் காட்சிகளை மிகவும் வருணித்து எழுதியிருக்கிறீர்கள்!

டோனி மாரிசன்: ஆமாம். நான் மற்றவர்களைவிட அதை நன்றாக எழுதுவதாக நினைக்கிறேன்.

சாரா: எப்படி?

டோனி மாரிசன்: மருத்துவர்களின் குறிப்புகளைப் போல் செக்ஸ் காட்சிகளை மற்றவர்கள் எழுதுகிறார்கள். மார்பகங்கள், ஆண் குறி என்று அங்க வர்ணனைகள் மாத்திரம் பாலுறவுக் காட்சிகளை நிர்ணயித்து விடாது. உடலுறவு கொள்ளும் செயலை இயந்திரத்தனமாகப் பிரதிபலிப்பது எளிமையானது. என்னுடைய ‘தி ப்ளூ ஐ’யில் அந்தப் பெண் ஒரு

வாலிபனிடம் உறவுகொள்ள முயலும் போது அவளை எந்தக் கட்டுப்பாடுகளும் தடுத்து நிறுத்துவது இல்லை. ‘தந்தத்’தின் தோலை அவள் வெறியுடன் இழுத்துக் கவ்வுகிறாள். ஆமாம். அவள் அவனுக்குக் கீழே செல்ல அஞ்சுவதில்லை. செக்ஸை மற்றொரு செயலுடன் இணைத்துப் பார்ப்பதில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது.

சாரா: ‘பிலவட்’ நாவலில் சோளக் கருது தின்பதை சஜஸ்டிவ் ஆக எழுதியிருப்பீர்கள்.

டோனி மாரிசன்: ஆம். சோளக் கருதுகள் காற்றில் அசைந்தசைந்து ஆடுவதாகவும் மற்றவர்கள் அதை பார்த்துக் கொண்டிருப்பதாகவும்…..

சாரா: உங்கள் வருணனை: ‘நாய்களைப் போல் விறைப்பாக அந்தக் கருதுகள் பகலில் நடனமாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தகிப்பை ஏற்படுத்திற்று!’

டோனி மாரிசன்: டென்சில் வாஷிங்டனை ‘பிலவட்’டில் நடிக்கக் கேட்டதாகவும் அதற்கு அவர், ‘கறுப்பர்கள் சிறைச்சாலை வெள்ளை அதிகாரிகளுடன் வாய்வழிப் பாலுறவு கொள்ளும் படத்தில் என்னால் நடிக்க முடியாது’ என்று கூறிவிட்டதாகவும் யாரோ சொன்னார்கள். அது ஏதோ வினோதமான செயல் என்று அவர் நினைத்துவிட்டார் போல! சோட் ரோஸ்மேரி பள்ளியில் 1960ஆம் வருஷத்திலிருந்து பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து எல்லோரும் கற்பழித்தார்கள் என்பது சரித்திரம். டென்சில் ஏன் அப்படிக் கூறவேண்டும்? போகட்டும். என் கவலை எல்லாம் எப்படி இந்தக் காட்சிகளை அழகாக நெருக்கமாக எடுக்க முடியும் என்பது பற்றித்தான். அந்த செக்ஸ் காட்சியை அல்ல அதன் மூலம் ஏற்படும் தாக்கங்களைத்தான் மற்றவர்கள் உண்மையில் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மரியோ: உங்களின் அடுத்த புத்தகம் என்ன?

டோனி மாரிசன்:ஜஸ்டிஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். ஆனால், அது நீதி பரிபாலனம் பற்றியது அல்ல. ஒரு குடும்பமும் அதிலிருக்கும் அடிமை எஜமானன் பற்றியதுமான நாவல். அவன் பெயர் குட் மாஸ்டர். அவன் மற்ற அடிமைகளும் அதே பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கிறான். ஆனால், அவன் மிக மட்டமான மனிதன் என்று மற்றவர்கள் அவனை வெறுக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு பெண்களுக்கும் ஒரு பையனுக்கும் தகப்பனாக இருப்பவன், தனது குழந்தைகளுக்கு கரேஜ், ஃப்ரீடம், ஜஸ்டிஸ் என்று பெயர் வைக்கிறான். ஆனால், பள்ளியில் கரேஜ் கேரி ஆகிறாள். ஃப்ரீடம் ப்ரீதா ஆகிறாள். ஜஸ்டிஸ் ஜூஸ் ஆகிறான். பெயர்கள் முக்கியம் என்று கருதும் எங்களுக்கு வேறு பெயர்கள் சூட்டப்படுகின்றன. அப்படிக் கூப்பிடப்படும் பெயர்களும் சரியானவையாக இருப்பதில்லை. உங்கள் பலகீனத்தைப் பெயராக மாற்றும் சித்திரவதை.

மரியோ: நீங்கள் உங்களை அமெரிக்க எழுத்தாளர் என்பதை விட ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர் என்று அழைக்கப்படுவதைத்தான் விரும்புவதாகக் கூறியிருக்கிறீர்களே!

டோனி மாரிசன்: அப்படியா?

மரியோ: ஆமாம்.

டோனி மாரிசன்: அமெரிக்கா? நான் என்னை இந்த நாட்டுடன் இணைத்துப் பார்க்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். எழுத்தாளர் எட்கர் டாக்டரோவ்வுடன் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கு பெற்றேன். அவர்தான் என்னை அறிமுகப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது, ‘டோனி ஒரு கறுப்பின எழுத்தாளர் என்று நான் நினைக்கவில்லை! அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்றும் நான் நினைக்கவில்லை! நான் நினைப்பது என்னவென்றால்…..’ என்று நிறுத்தினார். நான் குறுக்கிட்டு, ‘வெள்ளைக்கார ஆண் எழுத்தாளர்!’ என்றேன். வந்திருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.

எட்கர் டாக்டரோவ் என்னைச் சிறு வட்டத்துக்குள் அடைக்க விரும்பவில்லை. ஆனால், கறுப்பு இனம், பெண் இவற்றை விட்டால் வேறு என்ன இருக்கிறது? வெள்ளை மனிதர்கள்தான். டாக்டரோவ் என்னைப் பற்றிச் சொல்ல விரும்பியது நான் ஒரு எழுத்தாளர் என்பதையே. அதைத்தான் நான் என் அடையாளமாகப் பார்க்கிறேன்.

*****

ஆகஸ்ட் 2019இல் தனது எண்பத்தெட்டாம் வயதில் காலமான டோனி மாரிசன் தலை சிறந்த அமெரிக்க நாவலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர். பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் கௌரவப் பேராசிரியர். உலகப் புகழ் பெற்ற ராண்டம் ஹவுஸ் பதிப்பகத்தில், ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதல் ஆசிரியராகப் பதினேழு ஆண்டு காலம் பணியாற்றி மிகச் சிறந்த எழுத்தாளர்களை வெளியுலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர். நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதி. 2017ல் கிராண்டா இதழில் வெளியான அவரது நேர்காணல் இது.

 

ஸிந்துஜா” <weenvy@gmail.com>

Amrutha

Related post