பின்நகர்ந்த காலம் 1: பத்திரிகையும் எழுத்தும்
வண்ணநிலவன்
‘பின் நகர்ந்த காலம்’ என்ற தலைப்பில், எனது வரலாறு போலவும், அதனுடன் சேர்ந்த நவீன தமிழ் இலக்கிய உலக வரலாறு போலவும் அமைந்த கட்டுரைத் தொடரை ‘நட்பு’ இணைய இதழில் 2010 முதல் 2012 ஆகஸ்ட் வரை எழுதினேன். அத்தொடர், நான் 1976 ஜூன் 22-இல் ‘துக்ளக்’ பத்திரிகையில் பணியில் சேருவது வரை வந்திருந்தது. அதன் தொடர்ச்சி இனி…
‘துக்ளக்’ பத்திரிகை 1970 ஜனவரி பொங்கல் முதல் வெளிவர ஆரம்பித்திருந்தது. அப்போது நான் திருநெல்வேலியில் இருந்தேன். பாளையங்கோட்டை அட்வகேட் டி.எஸ். ஸ்ரீனிவாசகம் அவர்களிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவருக்கு மருமகன் முறையாக வேண்டிய செல்வக்குமாரும் நானும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இரண்டு பேருமே நல்ல வாசகர்கள். எந்தப் புதுப் பத்திரிகை வெளிவந்தாலும் உடனே வாங்கிவிடுவோம்.
‘சோ’வை ஆசிரியராகக் கொண்டு ‘துக்ளக்’ பொங்கல் முதல் வெளிவருகிறது என்ற விளம்பரம் தமிழ் தினசரிகளில் வெளிவந்திருந்தது. இரண்டு கழுதைகள் ‘துக்ளக்’ பத்திரிகை வெளிவருவதைப் பற்றிப் பேசிக்கொள்வது போல் விளம்பரங்கள் வெளிவந்திருந்தன. சோ நடித்த திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். அதனால், அவரது பத்திரிகை பற்றிய எதிர்பார்ப்பு எங்களிடம் இருந்தது. அவர் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்ததால் பத்திரிகையிலும் நகைச்சுவை தாராளமாக இருக்கும் என்று நினைத்தோம்.
1970 பொங்கல் அன்று காலையில், குளித்துச் சாப்பிட்டு விட்டு, நானும் செல்வக்குமாரும் திருநெல்வேலி ஜங்ஷனுக்குச் சென்று ‘துக்ளக்’ பத்திரிகையை வாங்கினோம். அதன்பின்னர் இரண்டு பேரும் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று பிளாட்பாரம் பெஞ்சில் உட்கார்ந்து ஒரே பத்திரிகையை சேர்த்து வாசித்தோம். அக்காலத்தில் பிரபலமாக இருந்த ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘கல்கி’ போல் இல்லாமல் வடிவமைப்பிலும் விஷயத்திலும் ‘துக்ளக்’ ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அன்று முதல் குமார் இதழ் தவறாமல் ‘துக்ளக்’வாங்கிவிடுவார். அப்போது துக்ளக் மாதம் இருமுறை பத்திரிகையாக வெளிவந்தது.
‘சோ’வின் பிரபல நாடகமான ‘முகமது பின் துக்ளக்’ அக்கால அரசியலை நையாண்டி செய்து எழுதப்பட்டது. இது திரைப்படமாகவும் தயாரானது. திரைப்படமாகத் தயாரானபோது ஆளும் கட்சியின் எதிர்ப்புகளை அப்படம் எதிர்கொள்ள நேர்ந்தது. தயாரிப்பாளர், இயக்குநர், சோ போன்ற ஒரு சிலரைத் தவிர, படத்தில் பணிபுரிந்த இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்தனர். காரணம் அவர்களுக்கு வந்த பயமுறுத்தல். இதைப் பற்றியெல்லாம் அப்போது செய்திகள் வெளிவந்தன. பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே படம் தணிக்கையாகித் திரையிடப்பட்டது. அந்தப் படத்தை எனது வழக்கறிஞர் ஸ்ரீனிவாசகத்துடன் சேர்ந்து இரவு 10.30 மணிக்காட்சியில் பார்த்தேன். திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டரில் படத்தைத் திரையிட்டிருந்தார்கள்.
இப்படி ‘துக்ளக்’பத்திரிகை உடனும் அதன் ஆசிரியர் சோவுடனும் என்னுடைய மானசீக நெருக்கம் 1970 முதலே ஏற்பட்டிருந்தது. ஆனால், அப்போதெல்லாம் அவருடைய ‘துக்ளக்’ பத்திரிகையிலேயே வேலைக்குச் சேர்வேன் என்பதை நான் நினைத்தே பார்த்ததில்லை.
‘துக்ளக்’ அலுவலகம் அப்போது சென்னை அண்ணா சாலையில் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு எதிரே இருந்த சிறு கட்டிடத்தில், அதாவது ‘விகடன்’ வளாகத்திற்குள்ளேயே
இயங்கி வந்தது. ‘விகடன்’ அலுவலகத்தை ஒட்டி, பேங்க் ஆஃப் மதுரா அலுவலகம் இருந்தது. ‘துக்ளக்’ அலுவலகத்தில் ஆசிரியர் சோவுக்கு அடுத்த இடத்தில், துக்ளக்கில் ‘விஸிட்டர்’ என்ற பகுதியை எழுதிவந்த ‘அனந்த்’ என்ற அனந்த கிருஷ்ணனும், மதலையும் பணிபுரிந்து வந்தனர். மதலை டைப்பிஸ்டாகவும், அலுவலக உதவியாளராகவும் பணிபுரிந்து வந்தார். அனந்த கிருஷ்ணனுக்கும் மதலைக்கும் தனித்தனி அறைகள் இருந்தன. ஆசிரியரின் அறை மேற்புறம் இருந்தது. எனக்கு வராந்தா போன்ற நீண்ட பகுதியில், வரவேற்பு அறையாக இருந்த இடத்தில் இடத்தை ஒதுக்கியிருந்தார்கள். பரசுராமன், சுப்பிரமணியன், சேகர் என்று மூன்று அட்டெண்டர்கள்.
அப்போது ஆசிரியர் சோ சினிமாவிலும் நடித்து வந்தார். நாடகங்களும் நடத்தி வந்தார். அனேகமாகத் தினசரி மாலை சென்னையில் ஏதாவதொரு நாடக சபாவில் அவரது நாடகங்கள்
நடைபெற்று வந்தன. சினிமா, நாடகம், பத்திரிகை என்று மூன்றையும் சோ கவனித்து வந்தார்.
‘ஆனந்த விகடன்’ அச்சகத்தில்தான் துக்ளக்கும் அச்சாகி வந்தது. நான் துக்ளக்கில் சேர்ந்த சமயம் நாட்டில் எமர்ஜென்ஸி (அவசரநிலை) அமலில் இருந்தது. கருத்துச் சுதந்திரம் அடக்குமுறைக்கு உள்ளாயிற்று. ‘முரசொலி’, ‘துக்ளக்’இரு பத்திரிகைகளுக்கும் சொன்ஸார் இருந்தது. சென்ஸாரின் அனுமதியில்லாமல் எதையும் பிரசுரிக்க முடியாது என்ற நிலை. மொரார்ஜி தேசாய், ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க., ஸிண்டிகேட் காங்கிரஸ், தி.க. போன்ற பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
‘சோ’வும் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது. சட்டமன்றம் கலைக்கப்பட்டிருந்ததால் கவர்னர் ஆட்சி நடந்து வந்தது.
பத்திரிகைகளுக்கான சென்ஸார் அலுவலகம் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இருந்தது. பகலிலும் இரவிலும் சென்ஸார் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். ‘துக்ளக்’ பத்திரிகை அட்டைப்படம் முதல், விளம்பரங்கள் வரை தணிக்கை அதிகாரியின் அனுமதி பெற்ற பின்புதான் அச்சுக்குப் போகும். இதனால், துக்ளக்கில் வெளியிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், கார்ட்டூன்கள், அட்டைப்படம், வாசகர் கடிதம் உள்பட எல்லாவற்றையும் டைப் அடித்து, அவற்றை தணிக்கை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்றபின்பே அச்சுக்கோர்க்க கொடுக்க முடியும். அவர்கள் நிராகரித்து விட்டால், வேறு கேள்வி – பதில் அல்லது கட்டுரை, கார்ட்டூன்களை மீண்டும் தயாரித்து, அதிகாரிகளிடம் காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
இதனால், கால விரையமும் மனித உழைப்பும் வீணாகின. தணிக்கை அதிகாரிகளாக இருந்த செளம்ய நாராயணனும் திருநாவுக்கரசும் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்ப்பது போல் உன்னிப்பாகக் கவனித்தனர்.
“உங்களை நம்ப முடியாதுய்யா… ஏதாவது பொடி வச்சு எழுதிருவீங்க…” என்பார் செளம்ய நாராயணன். அரசையோ, பிரதமர் அல்லது கவர்னர் போன்றவர்களையோ விமர்சித்துப் பேசவோ, எழுதவோ கூடாது; முடியாது. இத்தனை வரையறைகளுக்கும் இடையே என்ன எழுதுவது, எதை எழுதுவது என்று தலையைப் பிய்த்துக் கொள்வோம்.
‘துக்ளக்’ பத்திரிகையில் எனக்கு ஃபுரூப் ரீடர் வேலைதான் என்றாலும், ஆசிரியர் சோ என்னை எல்லா வேலைகளிலும் ஈடுபடுத்துவார். டிஸ்கஷனில் எல்லாம் என்னையும் உடன் வைத்துக்கொள்வார். நான் சேர்ந்த இரண்டு மூன்று மாதங்களிலேயே ‘சந்திரன்’ என்ற பெயரில் என்னைத் தனியாகக் கட்டுரை எழுத அனுமதித்தார்.
சினிமா இயக்குநர் மகேந்திரன் ‘துக்ளக்’ பத்திரிகையில் சிறிது காலம் பணிபுரிந்தார். அப்போது அவர் நாடக, திரைக்கதை வசனகர்த்தாவாகவும் சினிமாவில் அறிமுகமாயிருந்தார். அவர் பணிபுரிந்தபோது ‘துக்ளக்’ பத்திரிகையில் ‘போஸ்ட்மார்ட்டம்’ என்ற தலைப்பில் சினிமா விமர்சனங்கள் வெளிவந்தன. அவற்றை மகேந்திரன் எழுதினார். அவருக்குப் பின்னர் சினிமா விமர்சனங்கள் வரவில்லை.
எனக்கு ருத்ரையா, ஜெயபாரதி (இருவரும் அப்போது இயக்குநர்கள் ஆகவில்லை) இருவரையும் நல்ல பழக்கம் என்பது சோவுக்குத் தெரியும். சினிமா சம்பந்தப்பட்ட நூல்களை நான் படிப்பதும் அவருக்குத் தெரியும். இதையெல்லாம் பார்த்த சோ மீண்டும் துக்ளக்கில் சினிமா விமர்சனப் பகுதியைத் தொடங்க முடிவு செய்தார். அதை நான் எழுதுவதென்று முடிவாகியது.
‘துக்ளக்’ பத்திரிகை கொள்கைப்படி பத்திரிகை நிருபர்களுக்காக நடத்தப்படும் பிரிவியூ காட்சிகளுக்கு நாங்கள் செல்வதில்லை. தியேட்டர்களில்தான் படங்களைப் பார்ப்போம். படங்களை நான், அனந்தகிருஷ்ணன், மதலை மூன்று பேரும் பார்ப்போம். படம் முடிந்தபிறகு படத்தைப் பற்றிய அவர்களது கருத்துக்களைக் கேட்டுக்கொள்வேன். விமர்சனத்தைக் கேலியும் குத்தலும் கலந்து நான் எழுதுவேன். ‘டாக்டர்’ என்ற பேரில் அந்த சினிமா விமர்சனங்கள் வெளிவந்தன.
‘துக்ளக்’ பத்திரிகையில் வெளிவரும் சினிமா விமர்சனங்களை, சம்பந்தப்பட்ட இயக்குநருக்கே அனுப்பி, அவர்களுடைய பதிலையும் பிரசுரிக்கும் வழக்கம் இருந்தது. சில சமயங்களில் அந்த விமர்சனங்களை நானே அந்த இயக்குநரிடம் எடுத்துச் சென்று பதிலை வாங்கி வர நேரும்.
தொடரும்
“வண்ணநிலவன்” <ramachandran.u49@gmail.com>