நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: 21இ சுடலை மாடன் கோவில் தெரு – சந்தியா நடராஜன்

 நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: 21இ சுடலை மாடன் கோவில் தெரு – சந்தியா நடராஜன்

‘10 டவுனிங் தெரு’ என்ற முகவரி எப்படி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டதோ, அந்த முகவரி உச்சரிக்கப்படும்போது எத்தகைய அரசியல் உணர்வலைகள் எழுகிறதோ அந்தளவுக்கு தமிழ் படைப்புலகத்தில் பெருமிதம் கலந்த முக்கியத்துவம் கொண்ட விலாசம், ‘21இ சுடலை மாடன் கோவில் தெரு’. அது திருநெல்வேலி நகரத்தின் இலக்கிய மையம். கம்யூனிஸ்ட் தோழர்களின் உற்சாக பூமி. இங்குதான் மனிதநேயம் என்ற ஒற்றைப் பண்பில் தனது படைப்பையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி 90 ஆண்டுகள் வாழ்ந்த தி.க.சி. என்ற மானுடன் தன் தவச்சாலையில் தனித்திருந்து செயல்பட்டார்.

‘தனித்திருந்து’ செயல்பட்டார் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட வேண்டும். அவர் முதுமைக் காலத்தில் தனிமையில் இருந்ததாகச் சொல்வது தவறு. ஏகாந்த நிலையில் எந்நேரமும் எழுச்சியோடு பேசிக் கொண்டிருந்தவருக்கு தனிமை ஏது? மனித உறவுகளில் தன் ஆன்ம சக்தியை முளையடித்து வைத்திருந்தவரை தனிமை எப்படி அண்டும்?

வானாந்திர வெளிகளில் தனித்திருக்கும் மனஅமைதியோடும் களிப்போடும் தன் குரல் ஒலியின் ஆரவாரத்தோடு ஒரு சமதர்ம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண பிரஜையை ஊரும் உலகமும் தங்களது குருவாகவும் கொற்றவனாகவும் ஏற்று மகிழ்ந்தது. ‘அப்படியா’ என்று கேட்டால் அப்படித்தான் என்று பதில் சொல்ல வேறு யாரும் முன்வரவேண்டிய அவசியத்தை தி.க.சி. விட்டுச் செல்லவில்லை. அவரது வாழ்வும் வாழ்ந்த விதமும் படைத்த இலக்கியமும் உருவாக்கிய ஆளுமைகளும் நேரடிச் சான்றுகள். எல்லாவற்றுக்கும் உச்சமாக அவரது இறுதி ஊர்வலத்தில் தேர்தல் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மயானம் அடையும் வரை ‘வீரவணக்கம் திகசிக்கு’ என்று முழங்கிச் சென்ற மூன்று தலைமுறை கம்யூனிஸ்ட்களின் குரல்கள் தி.க.சி. மீது இந்த மண் கொண்டிருந்த மரியாதையை காற்றில் எழுதிச் சென்றன. இந்த ஒலியால் மட்டுமே தி.க.சி.யின் உற்சாகக் குரலொலியை அவர் ஒடுங்கிவிட்ட நிலையில் வென்றெடுக்க முடிந்தது.

 

ல்லிக்கண்ணனால் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர் தி.க.சி. நெல்லை காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் கம்யூனிஸ்டுகளின் நண்பனாகவும் செயல்பட்ட சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சிதான் தி.க.சியை பொதுவுடைமை அரசியலுக்கு வழிகாட்டியவர். தி.க.சி.யும் கம்யூனிஸ்ட் தலைவர் இரா.நல்லக்கண்ணுவும் ஒரே ஆண்டில் பிறந்த (1925) தோழர்கள். இவர்கள் இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் அடியெடுத்து வைத்த காலம் கம்யூனிசம் என்றால் பயங்கரவாதம் என்று சர்க்கார் பொருள் கொண்டிருந்த காலம். 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியவில் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தத் தருணத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை பிணைத்துக் கொண்ட தி.க.சி இறுதிவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக தொடர்ந்தார்.

1944இல் தாம்கோஸ் வங்கியில் காசாளராகச் சேர்ந்த தி.க.சி. 1964இல் ஓய்வு பெறும் வரை 25 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவரது பணிக்காலம் முழுவதும் தன்னை தொழிற்சங்க இயக்கத்தில் அர்ப்பணித்துக் கொண்டு பல இன்னல்களுக்கு ஆளானார். கேரள மாநிலம் கொச்சின் நகரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். 1964இல் வங்கிப் பணிக்கு விடை கொடுத்துவிட்டு சோவியத் நாடு பத்திரிகையின் தமிழ்ப்பிரிவில் ஆசிரியர் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதே காலகட்டத்தில் 1965 முதல் 1972 வரை கம்யூனிஸ்ட் இயக்க பத்திரிகையான ‘தாமரை’யின் ஆசிரியராகச் செயலாற்றி தாமரையை கமழச் செய்தார். தி.க.சி.யின் ஆய்வுக் கட்டுரைகளும் விமர்சனங்களும் ‘தாமரை’யில் இடம் பெற்று வந்தன.

‘ஹிந்துஸ்தான்’, ‘அனுமான்’, ‘கிராம ஊழியன்’ போன்ற ஆரம்ப கால தமிழ் இதழ்களில் எல்லாம் பங்களித்து வந்த தி.க.சி., சிந்துபூந்துறை சண்முகம் அவர்கள் தொடங்கிய ‘நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ்’ மூலம் ரஷ்ய சீன அரசியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். ‘கார்ல் மார்க்சின் இல்வாழ்க்கை’, ‘போர்வீரன் காதல்’. ‘வசந்த காலத்திலே’, ‘குடியரசுக் கோமான்’ ஆகியவை தி.க.சி.யின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பு நூல்கள். ஏறக்குறைய 6 திறனாய்வு நூல்களை எழுதியுள்ளார். இப்படித் தொடர்ந்து அரசியல் களத்திலும் இலக்கியத் தளத்திலும் தளராது செயலாற்றி வந்த தி.க.சி.யின் படைப்பான ‘விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்’ என்ற நூலுக்கு சாகித்ய அகாதெமி 2000ஆம் ஆண்டில் விருது வழங்கி கௌரவித்தது. அது வெறும் நூலுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, மூப்பையும் பிணியையும் புறம்தள்ளி அரசியலிலும் இலக்கியத்திலும் நேர்மையை மட்டுமே துணைகொண்டு, தமிழ் இலக்கிய உலகில் புதிய முகங்களை வரவேற்று அரவணைத்து இதழியலில் புதிய வகைமைகளை அறிமுகப்படுத்தி, தன்னை ஒரு இலக்கிய இயக்கமாக மாற்றிக் கொண்ட படைப்பாளியின் ஆகிருதிக்கு அளிக்கப்பட்ட விருதாகவும் அதை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் வாழ்ந்த வாழ்வு ஓர் முன்னுதாரணம்; அவர் பேருள்ளமும பெருந்தன்மையும் மானுடப் மாண்புகள்.

தி.க.சி.யின் 90ஆவது பிறந்த நாளன்று (30.03.2017) தி.க.சி.யின் 1948ஆம் வருடத்திய நாட்குறிப்புகளைத் தொகுத்து ‘தி.க.சி.யின் நாட்குறிப்புகள்’ என்ற நூலை வெளியிட ஏற்பாடாகியிருந்தது. இந்நூலின் தொகுப்புப் பணியை தி.க.சி.யின் நிழலாக நின்று செய்து முடித்திருந்தார் வே. முத்துக்குமார். ‘சந்தியா பதிப்பகம்’ திரு. சௌந்தரராஜன் முழுவீச்சில் பதிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். என் கைபட்டு உருவான அந்த நூல் மார்ச் மாதம் 14ஆம் தேதி தி.க.சி.யின் கரங்களைச் சென்றடைந்தது. அவரது இலக்கிய வாழ்வின் இறுதியானதும் உச்சபட்ச மகிழ்ச்சி எய்திய நாளாகவும் அந்நூல் இருந்திருக்கும். அடுத்த சில தினங்களில் தி.க.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராகாமல் தளர்வுற்று வருவதைச் சூசகமாக கலக்கத்தை மறைத்த குரலில் தெரியப்படுத்தி வந்தார் வண்ணதாசன். ‘நான் பார்க்க வருகிறேன்’ என்று சொல்லாமல் திருநெல்வேலிக்குப் பயணப்பட்டேன். பாதிப் பயணத்தில் வரக்கூடாத செய்தி வந்து சேர்ந்தது. மார்ச் 25ஆம் தேதி இரவு அவரது சொந்த வீட்டில் அவரது உயிர் பிரிந்துவிட்டது. மறுநாள் காலை ‘21இ சுடலை மாடன் கோவில் தெரு’, தவச்சாலையில் அந்த உரத்தக்குரல் ஒலிக்க வில்லை. அந்த ஆலமரம் சாய்ந்திருந்தது, வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி என்கிற விழுதை பற்றிக்கொள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு.

Vikramathithyan, Vannadasan
விக்ரமாதித்யன், வண்ணதாசன்

செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்பார்கள். அதுபோல அவர் பெயர் சொல்ல ஒரு பிள்ளையை தமிழ் படைப்புலகத்திற்கு அளித்துச் சென்றிருக்கிறார் தி.க.சி. அவர்தான் ஆறடி உயர அவரது அன்பு மகன் வண்ணதாசன் என்கிற வசீகரன். அவையத்து முந்தி இருக்கிற மகன் ‘இவன் தந்தை என் நோற்றான்’ என வியக்கும் வகையில் தமிழின் சிறந்த கதைக்காரனாகவும் உன்னத கவிஞனாகவும் இருக்கிறார். தந்தையைப் போலவே மகனும் சாகித்திய அகாதெமி விருது வென்றவர். 2016ஆம் ஆண்டில் வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ என்ற தொகுப்புக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கியது. இதுவும் சந்தியா பதிப்பகம் வெளியிட்ட நூல் என்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சி மட்டுமல்ல; பெருமையும்கூட. ‘21இ சுடலைமாடன் கோவில் தெரு’ வீட்டில் இருதலைமுறைகளுக்கு இந்திய சர்க்காரின் அமைப்பான சாகித்திய அகாதெமி விருது வழங்கி கௌரவித்துள்ளது. தந்தையும் மகனும் நிகழ்த்திய இந்த சாதனை இந்திய இலக்கிய வரலாற்றில் வேறேங்கும் இடம்பெறவில்லை. இத்துனைக்கும் இவ்விருவரது செயல்பாடுகளும் தன்னிச்சையானவை. இருவரின் இலக்கியப் பாதைகளும் வெவ்வேறானவை. இருவேறு உலகங்களின் சுழற்சிகள்.

இருவருக்கும் பொதுவானவை என்று ஏதேனும் உண்டென்றால் அவை அன்பும் பேரன்பும் தான்; தந்தையின் அன்பு பேய்மழை. பெய்த மழையில் ஈரமான மணலின் வாசம் மகன் காட்டும் அன்பு. அது கமழும்; காட்சிப்படுத்தாது; உள்ளே உறைந்து கிடக்கும்; உருகிப் பிரவாகம் எடுக்கும், அவர் கைவிரல் பட்ட காகிதத்தில் கதைகளாய், கவிதைகளாய், கடிதங்களாய்; அவர் கதைகளில் வண்ணதாசன்; கவிதைகளில் கல்யாண்ஜி. சுற்றமும் நட்பும் வாஞ்சையோடு கல்யாணி என்று அழைக்கும். ஆவணங்களில் அவரது பெயர் கல்யாண சுந்தரம்.

22.08.1946இல் பிறந்த வண்ணதாசன் தந்தையைப் போலவே வங்கித் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். தனது வங்கி வாழ்க்கையையும் இலக்கிய வாழ்க்கையையும் தனித்தனியாகப் பிரித்து ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளாமல் வாழ்ந்தவர். அவர் அதிகபட்சமாக அலுவலக கம்யூட்டர் தாளை நான்காக மடித்து யாருக்காவது கடிதமெழுதியிருப்பார். இதைத் தவிர அவரது வாழ்க்கையை பிரத்யேகமாக வைத்திருந்தவர். அவரது ஜீவன வாழ்க்கையும் ஜீவித வாழ்க்கையும் அதனதன் நிலையில் பூரணமானவை. அவரது நோக்கு தீர்க்கமானது; நோக்கம் பவித்ரமானது.

வங்கிப் பணியின் இடமாற்ற உத்தரவுகளால் வண்ணதாசன் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்கள் நிலக்கோட்டை, அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, மதுரை, சென்னை, திருநெல்வேலி, செட்டிக்குறிச்சி என ஆறேழு இடங்கள் மட்டுமே. இந்த இடங்களில் இவர் கண்டு கொண்ட மனிதர்களே வண்ணதாசனின் கதைமாந்தர்கள். இவர்களது அகமன அதிர்வுகளே வண்ணதாசன் கதைகளில் புதையுண்டிருக்கிற கன்னி வெடிகள். ‘நான் பயணித்த தூரம் குறைவு, பார்த்த இடங்கள் குறைவு’ என்று நேர்ப்பேச்சுகளில் இவர் கூறி வந்தாலும் எதிர்ப்படும் மனித முகங்கள் ஒவ்வொன்றும் இவருக்கு ஒவ்வொரு உலகத்தைவிட்டுச் செல்கின்றன. அந்த ஒவ்வொரு உலகத்தின் பெருமூச்சும் பெருவியப்பும் இவருக்கு அனுபவங்களாகின்றன.

வண்ணதாசனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ 1976ஆம் ஆண்டு ‘அஃக்’ இலக்கிய இதழ் நடத்திய பரந்தாமனால் வெளியிடப்பட்டது. அச்சு நேர்த்திக்காக அல்லது வடிவமைப்பிற்காக தேசிய விருதை வென்றெடுத்த நூல் அது. இடைப்பட்ட இந்த 42 ஆண்டுகளில் அவரது கதைகள் அநேகமாக அனைத்து வகை தமிழ் இதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’, ‘கனிவு’, ‘மனுஷா மனுஷா’, ‘சமவெளி’, ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’, ‘உயரப்பறத்தல்’, ‘நடுகை’, ‘கிருஷ்ணன் வைத்த வீடு’, ‘பெய்தலும் ஓய்தலும்’, ‘ஒளியிலே தெரிவது’, ‘ஒரு சிறு இசை’, ‘நாபிக் கமலம்’, ‘கமழ்ச்சி’ ஆகியவை இதுவரை வெளிவந்துள்ள வண்ணதாசனின் பதினான்கு சிறுகதைத் தொகுப்புகள். ‘சின்னுமுதல் சின்னுவரை’ இவரெழுதிய ஒரே குறுநாவல்.

வண்ணதாசன் தனது நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு ‘சில இறகுகள் சில பறவைகள்’ என்றும் ‘வண்ணதாசன் கடிதங்கள்’ என்றும் வெளியாகியுள்ளன. தமிழில் இதுவரை வெளிவந்துள்ள கடித இலக்கியம் சார்ந்த நூல்களில் பெரிதும் பேசப்பட்டவை இந்நூல்கள் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.

‘அன்னம்’ பதிப்பகம் வெளியிட்ட நவகவிதை வரிசையில் முதல் தொகுப்பாக கல்யாண்ஜியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘புலரி’ வெளிவந்தது. அதுமுதலாக இன்றுவரை பத்துக்கும் மேற்பட்ட கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்புகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்துள்ள ‘ரணங்களின் மலர்ச்செண்டு’ முற்றிலும் மாறுபட்ட வடிவங்களையும் மொழிநடையையும் கொண்ட ஒரு கவித்துவ ரத யாத்திரை. இதை கோலகலமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் மூன்றாம் தலைமுறையினர்.

எல்லா உலக இலக்கியங்களும் மனித வாழ்வின் அர்த்தத்தை நோக்கிய தேடல்களாக அதன் புதிர்த்தன்மையை அவிழ்க்க முனையும் முயற்சிகளாகவே உள்ளன. ‘மகாபாரதம்’ என்றோ நிகழ்ந்ததல்ல, அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு கதைதான். மனிதர்களை முன்வைத்து வியாசரின் வரிகள் காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் எழுதப்படுகின்றன. மனிதன் அப்படியேதான் இருக்கிறான், யுகங்கள் மாறுகின்றன. இந்த சிக்கலை அல்லது இந்த விந்தையை அல்லது இந்த விடுகதையை வண்ணதாசன் இப்படி எழுதுகிறார்:

கடைசிவரை எல்லாம், ஆண் – பெண் விளையாட்டும், வயிறுக்கும் மனதுக்குமான இழுபறியும் தான், இடையில் இந்த மூளை விடுகிற வெற்றுச் சவால்களும் ஆடத் தூண்டுகிற பகடையாட்டங்களும். எந்தச் சூதும் முடிவதில்லை. எந்தச் சூதாடியும் நிஜத்தில் தோற்று கனவில் ஜெயித்து நிறுத்த முடியாத ஆட்டத்தில் நிலை குலைகிறான். தோற்றவன் கண்களில் ஜெயித்தவனை விட ஜெயம் மட்டுமே அதிகம் மினுங்குகிறது.

ஆக கம்யூனிச அரசியல் பார்வையில் தி.க.சி. மனிதனை தேடினார் என்றால் மகன் வண்ணதாசன் மனிதனின் அகஉலகை கண்டுகொண்டு புறஉலக உறவுகளோடு ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்.

Kalapriya, Vannadasan
வண்ணதாசன், கலாப்ரியா

21 சுடலை மாடன் தெருவில் வாழ்ந்த வண்ணதாசனை அதே தெருவில் 28ஆம் நம்பர் வீட்டில் வளர்ந்த சோமசுந்தரம் தனது இலக்கிய வாழ்வின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். தி.க.சி. ஏற்றிய தீபம் இன்னொரு அகல் விளக்கில் ஒளி கூட்டியது. அந்தத் தெருவெங்கும் தீபங்கள் ஒளிர்ந்தன.

இந்த சோமசுந்தரம்தான் கவிஞர் கலாப்ரியாவாக இடைகாலில் தனது வாழ்க்கையை நிலை நிறுத்தியபடி கடந்த 50 ஆண்டுகாலமாக நவீன கவிதையின் தற்கால சுடரொளியாயும் தணலாயும் கணன்று கொண்டிருக்கிறார்.

அழகாயில்லாததால்
அவள் எனக்குத்
தங்கையாகி விட்டாள்

என்ற கலாப்ரியாவின் ஆரம்ப கால கவிதை நான்கு மாமாங்கம் ஆகியும் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறையினரால் உச்சரிக்கப்பட்டு வருகிறது. இது ‘அஃக்’ இலக்கிய இதழில் 1972ஆம் வருடம் வெளியாகிய கவிதை. கலாப்ரியாவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘வெள்ளம்’ 1973ஆம் ஆண்டு பிரசுரமானது. அதைத் தொடர்ந்து ‘தீர்த்த யாத்திரை’ (1973), ‘மற்றாங்கே’ (1979), ‘எட்டயபுரம்’ (1983), ‘சுயம்வரம்’ (1985), ‘உலகெல்லாம் சூரியன்’ (1993), ‘அனிச்சம்’ (2000), ‘வனம் புகுதல்’ (2003), ‘எல்லாம் கலந்த காற்று’ (2007), ‘நான் நீ மீன்’ (2011), ‘உளமுற்ற தீ’ (2013), ‘தண்ணீர் சிறகுகள்’ (2014), ‘சொந்த ஊர் மழை’ (2015), ‘தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’ (2016), ‘பனிக்கால ஊஞ்சல்’, ‘பேனாவுக்குள் அலையாடும் கடல்’ (2017) என 17 கவிதைத் தொகுப்புகளும் ‘கலாப்ரியா கவிதைகள்’ என்ற பெருந்தொகுப்பு நூலும் வெளியாகியுள்ளன.

“நான் சொல்லப்படாதவற்றுடன் சொல்லக் கூடாதென்று ஒளித்து வைக்கப்பட்ட விஷயங்களையும் கவிதையாக்கினேன்” என்று வெளிப்படையாகப் பேசும் கலாப்ரியாவின் கவிதைகள் துயரத்தில் புரண்டு கொந்தளித்து எழும் சொற்களால் ஆனவை. “கடந்த காலம் என்பது என் இறுக்கமான ஆரம்ப ஓடு பாதை. துயர நினைவுகள் என் உயவு எண்ணெய்” என்று தனது படைப்பாக்கம் பற்றி தீர்க்கமாகப் பதிலளித்திருக்கிறார் கலாப்ரியா. அது முற்றிலும் உண்மை என்றே புரிந்துகொள்ள முடிகிறது. வெறும் துயரத்தை எழுதி வந்திருந்தால் மட்டும் கலாப்ரியா இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது. மனித வாழ்வு அநேகமாக எல்லா மனிதர்களுக்கும் தாரளமாக வழங்கி வரும் அலைக்கழிப்பையும் அவநம்பிக்கையையும் அதனால் அவதிக்குள்ளாகும் மனநிலையையும், எல்லோரும் தத்தம் மனநிலையாக உணரும் வகையில் கலாப்ரியா பதிவு செய்திருப்பதுதான் அவரது வெற்றிக்கான வழியாகப் புலப்படுகிறது.

சம்ஸார நிலையிலிருந்து நிர்வாண நிலைக்கு தன்னை எளிதில் கடத்திக் கொண்ட கலைஞனாக காட்சியளிக்கிறார் கலாப்ரியா. அவரால் ரோட்டரி சங்க செயற்பாடுகளிலும் கலந்துகொள்ள முடிகிறது. சாதாரண எம்.ஜி.ஆர். ரசிகன் மனோபாவத்தையும் அடையமுடிகிறது. சபரிமலைக்குப் புனிதப் பயணம் செல்லும் கலாப்ரியாவால் வெப்ப நாயகிகளை பற்றியும் எழுத முடிகிறது. உள்ளக் குமுறல்கள் அவரது வாழ்க்கை முறையின் சீர்வரிசையை கலைத்ததில்லை. வீசப்படுவது வெண்சாமரமோ விஷக்கணையோ அவரால் தடுமாறாமல் செயல்பட முடிகிறது. அவரது எல்லா செயல்பாடுகளுக்கும் கட்டற்ற சுதந்திரமான படைப்பாக்கங்களுக்கும் அவருக்கு உறுதுணையாக நிற்பது எல்லோராலும் ‘டீச்சர்’ என்று அழைக்கப்படுகிற அவரது மனைவி சரசுவதி. கலாப்ரியாவுக்கு டீச்சர் அமைந்தது ஒரு கொடுப்பினை.

கலாப்ரியாவின் மனத்தடைகள் அற்ற இலக்கிய உலகின் அகல நீளங்களை எப்போதும் ஆச்சரியத்துடன் அகம் மகிழ்ந்து இப்படி எழுதுகிறார் வண்ணதாசன்.

புதுக்கவிதை வரலாற்றில் மட்டுமல்ல; நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒருவகையில் தீராநதி. ஒரு வகையில் நகல் செய்யமுடியாத ஒரு வெளிச்சம். பின் தொடர மட்டுமே முடியும்.

தம்பி கொடுத்து வைத்தவர்தான். கலாப்ரியாவின் இன்னொரு தோழனும் தென்காசிக்காரரான நம்பி என்கிற விக்கிரமாதித்தன் எழுதிய மகாவாக்கியம் ஒன்று உண்டு. கலாப்ரியாவுக்கு இதைவிட சிறந்த மணிமகுடம் யார் சூட்ட முடியும்: அது இதுதான்:

இரண்டாயிரம் ஆண்டு தமிழ் கவிதையிலேயே காணக்கிடைக்காத உணர்வெழுச்சியும் துடியும் கட்டவிழ்ந்த மன வெளிப்பாடும் கொண்ட அபூர்வமான கவிதைகள் கலாப்ரியாவின் கவிதைகள்; முற்றிலும் மனத்தடைகளை உதிர்த்து உதறியெழுந்து நிற்கும் கவிதைகள்; கலாப்ரியாவின் கவித்துவம் ஒப்பிட இயலாதது என்பது மட்டுமில்லை. ஒரு இனத்தில் மொழியில் எப்பொழுதோ நிகழக்கூடியதுமாகும்.

‘வெள்ளம்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு கலாப்ரியா என்ற கவிஞன் கவிதையிலிருந்து உரைநடைக்கு தடம் மாறினார். 2009ஆம் ஆண்டில் அவருடைய ‘நினைவின் தாழ்வாரங்கள்’ என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது. அப்போது கவிஞர் தமிழச்சியின் நூல் வெளியீட்டு விழாவுக்காக சென்னை தியாகராய நகரில் ரெசிடென்சி ஹோட்டலில் கலாப்ரியா தங்கியிருந்தார். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ முதல் பிரதி அவரைச் சென்றடைந்த போது கவிஞர் ஷங்கர் ராம சுப்பிரமணியனும் இன்னும் சில நண்பர்களும் உடன் இருந்தனர். எல்லோரும் ஓர் ஏகாந்த நிலையில். கேக் வெட்டி கொண்டாடினோம். வாழ்வும் வாழ்வனுபவங்களும் பொதியப் பெற்ற கடந்த கால தாழி ‘நினைவின் தாழ்வாரங்கள்’. உரைநடையில் புரள ஆரம்பித்த அடுத்த நூல், ‘உருள் பெருந்தேர்’. தற்போது இந்த நூலை ‘ஆனந்த விகடன்’ மறுபிரசுரம் செய்துள்ளது. எம்.ஜி.ஆர். ரசிகனாகவும் தமிழ் சினிமா பித்தம் ஏறிய கவிஞனாகவும் திரிந்த கலாப்ரியாவின் ஞாபக அடுக்குகள் நிலைகுலையாதவை மட்டுமல்ல. இன்று வரை அதில் கொஞ்சமும் சேதாரம் இல்லை. இவரது மொழியும் நினைவுகளும் உரைநடையில் உச்சம் தொட இவருக்கு உதவி புரிந்தன. ‘சுவரொட்டி’, ‘காற்றின் பாடல் மறைந்து திரியும் நீரோடை’, ‘மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்’, ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ‘போகின்ற பாதையெல்லாம்’, ‘சில செய்திகள் சில படிமங்கள்’ என பல்வேறு தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இவை பெரும்பாலும் சினிமா கட்டுரைகள் அல்லது கவிதையியல் பற்றிய கட்டுரைகள்.

2017இல் கலாப்ரியாவின் மூன்றாவது அவதாரம் நிகழ்ந்தது. அவரது முதல் நாவல் ‘வேனல்’ 2017 சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவந்தது. புத்தகக் காட்சி மைதானத்தில் அண்ணன் கல்யாணியுடன் எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன் ஆகியோர் கைகோர்த்து மகிழ்ச்சியோடு வேனலை வரவேற்றார்கள். 2017ஆம் ஆண்டில் தான் கலைஞர் பொற்கிழி விருதும் கலாப்ரியாவுக்கு அளிக்கப்பட்டது. கலைமாமணி விருது, சிற்பி இலக்கிய விருது, ஜெயகாந்தன் விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளும் பெற்றவர் கலாப்ரியா.

ஊரின் பார்வையையோ நவநாகரிகத்தையோ சற்றும் பொருட்படுத்தாமல் ஒற்றைக் கோமணத்துடன் உழுது களைத்து கரையேறிச் செல்லும் விவசாயியைப் போலவும் காவிரியில் நீராடி மார்மீது கட்டிய ஒற்றைப் பாவாடையில் நீர் சொட்டும் தலைமுடியோடு சிறுசுகளோடு சிரித்துப் பேசி செல்லும் ஊர்க்காரி போலவும் தளங்களைப் பற்றியும் தடங்களைப் பற்றியும் எவ்வித அபிப்ராய பேதங்கள் இன்றி எல்லோருடனும் சாதாரண மனிதனாக வலம் வரும் கலைஞன் கலாப்ரியா இன்னும் நிறையவே சாதிப்பார். எல்லாப் பெருமைகளும் சுடலைமாடன் கோவில் தெருவுக்கே.

சந்தியா நடராஜன் <sandhyapathippagam@gmail.com>

Sandhya Natarajan

Amrutha

Related post