வாதனைகள் சில சோதனைகள்

 வாதனைகள் சில சோதனைகள்

பொ. கருணாகரமூர்த்தி
ஓவியம்: வி.பி. வாசுகன்

 

லோ வணக்கம்” / “வணக்கம்…”, “நலமாயிருக்கீங்களா” – இந்த மாதிரி ஒரு இயல்பான உரையாடலாகத்தான் முகநூலில் எமது நட்பு ஆரம்பித்தது. பின்னர் ஒரு நாள்…

“என்னை உங்களுக்குத் தெரியாது… ஆனால், உங்களை எனக்குத் தெரியும்” என்றாள்; எனக்குத் ‘திக்’ கென்றது.

“உங்களின்ர ‘பச்சைத் தேவதையின் கொலுசு’ படித்தனான். உங்க அனுபவங்களைப் பார்க்க அந்தக் கதை வெறும் புனைவு மாதிரித் தெரியேல்லை.”

“அப்படியா… அதொரு இலக்கியப் பத்திரிகையில் வந்த கதையாச்சே, எப்படி உங்களுக்கு வாசிக்கக் கிடைச்சுது”

“அப்ப நாங்கள் இலக்கியப் பத்திரிகைகள் படிக்கப்படாது எங்கிறியளோ?”

“நான் அந்த அர்த்தத்தில சொல்லேல்லை, அவை லேசில எல்லா இடத்திலயும் கிடைக்காது. எனக்கு இன்னும் உங்கள் இலக்கிய ரசனைகள் டேஸ்டுகள் தெரியாதல்லவா… நீங்களும் சேலத்தில இருப்பதாய்ச் சொல்லிறியள், இலங்கைத் தமிழ் பேசிறியள் எல்லாம் அதிசயமா இருக்கிறதால கேட்டன்…”

ஆனானப்பட்ட சென்னையில கணையாழியும் சுபமங்களாவும் எந்தக் கடையில் கிடைக்குமென்று எவருக்கும் தெரியவில்லை. அதை வாங்குவதற்கு ஒரு வாரமா ஒரு சித்திரை வெய்யிலில் அலைந்த அனுபவம் எனக்குண்டு. ‘டீக்’காய் உடுத்திக் கழுத்துப்பட்டி சகிதம் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு கனவானை நிறுத்தி விசாரித்தேன்.

“அண்ணே, சுபமங்களா எங்கே கிடைக்கும்.”

“ஆப்படீன்னா என்ன?”

“அதுவொரு தமிழ்ச் சஞ்சிகை.”

அவரது வாயில் ‘சுபமங்களா’ நுழையவில்லை.

“அப்பிடீன்னு சஞ்சிகை எதுவும் கிடையாது, ஒருவேளை மலையாளமாயிருக்கும்.”

கடைசியாக ஆனந்தவிகடனுக்குப் போன் பண்ணித்தான் விபரம் அறிந்தேன்.

முகநூல் நண்பியின் உரையாடல் தொடர்ந்தது.

“அண்ணே, இப்ப இந்த போன்லயிருந்து நான் கனநேரம் கதைக்கேலாது. நான் பிறகொரு சமயம் உங்களோட கதைக்கிறன், எனக்கு உங்களோட ‘ஷேர்’ பண்ண. நிறைய இருக்கு… Until then bye bye Wish you a Good day.” தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அவளுக்குச் சரளமாக ஆங்கிலமும் வரும்போலத் தெரிந்தது.

பிறகொருநாள் உள்பெட்டியில், “அண்ணே உங்களிடம் நான் ஒரு 10 நிமிஷம் பேசணும்; இப்போ நான் உங்ககூடப் பேசலாமா” என்று கேட்டுவிட்டு மெஸெஞ்சரில் அழைத்தாள்.

“அண்ணே… நான் ஒரு பெரிய தப்பைச் செய்துபோட்டுக் கிடந்து பரிதவிக்கிறன், நீங்கள்தான் என்னைக் கரையேற்றி விடவேண்டும்.”

“தப்பிலயிருந்து எப்படிக் கரையேற்றிறது, அப்படீன்னா எத்தனையோ கொலைக் குற்றவாளிகள்…”

நான் முடிக்க முதலே தொலைக்காட்சி நெறியாளர் மாதிரி இடையிட்டாள். “தப்பிலயிருந்து கரையேற முடியாதுன்னு தெரியும்; சாகும்வரையில நாந்தான் அதை அனுபவிக்கணும். புரியுதண்ணா… அந்தத் தப்பால நான் படும் சஞ்சலங்களிலிருந்து எனக்குக்கொரு ‘றிலீஃபோ’… விடுதலையோ நீங்கள்தான் பெற்றுத்தரவேணும். என்னைப்போல வேற ஆக்களும் இதுமாதிரித் தவறுகள் செஞ்சிருக்கிறாங்கதான், ஆனால், என்னுடைய தப்பே இவ்ளோ பெரிய வாதனையா என் தலையில் விடியுமென்று நான் எதிர்பார்க்கேல்லை.”

அவளை யாராவது கொத்தடிமையாக வைத்துப் படுத்துகிறார்களோ; அவளது வார்த்தைகள் சிக்கல் கொள்ளக்கொள்ள எனக்குள்ளும் கிலேசம் பரவத் தொடங்கிற்று.

“நான் நீர் நினைக்கிறா மாதிரி இரக்ஷகனோ ஆபத்பாந்தவனோ எதுவுங் கிடையாது… எனக்குச் சொல்லக்கூடிய வகையிலான தப்பென்றால் அதைச் சொல்லும் நான் இப்ப U-Bahn என்கிற ஒரு Tunnel டிரெயினில்  போய்க் கொண்டிருக்கிறன். நான் தமிழ்ல சளசளக்கச் சனமெல்லாம் என்னை வேடிக்கை பார்க்குது, இன்னும் இரண்டு நிமிஷத்தில நான் இறங்கவும் வேணும்டா. உம்மிட்ட மின்னஞ்சல் முகவரியும் இருக்குத்தானே, போன்ல சொல்லக் கஷ்டமாக இருந்தால் நீர் எனக்குச் சொல்ல நினைக்கிற எல்லாத்தையும் எழுதிவிடும். என் சின்ன மூளைக்கு ஏதாகிலும் தீர்வு பிடிபட்டால் என்ன செய்யலாங்கிற யோசனையை நானும் எழுதிறன். சரியா…”

“உங்கள் கதைகளின் பிரகாரம் நீங்கள் கஷ்டத்தில இருக்கிறவங்களுக்கு வலிந்து உதவக்கூடிய மனசுள்ளவரென்டு கண்டதாலதான் உங்களோட என்னுடைய பிரச்சினையைப் பகிருறேன். என்னால் தமிழில நிறைய எழுதேலாது, போன் கதைக்கிறதுதான் வசதி, பிறகு எடுக்கிறன்… பை பை.” தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அன்றிரவே திரும்பவும் அழைத்தாள்.

“கீர்த்தனா தெரியும் கீர்த்திகா தெரியும், கீர்த்தன்யாங்கிற உம்மபெயர் வித்தியாசமாயிருக்கு… அதை நான் என்னுடைய அடுத்த கதாநாயகிக்கு வைக்கவா…”

“என் முழுக்கதையும் கேட்டிங்கன்னா உங்களுக்கு ஒரு பெரிய நாவலுக்கான ப்ளொட்டே கிடைக்கும் சேர்…”

“நீர் ‘சேர் சேர்’ என்று என்னோட கதைக்கிறது எனக்கு ‘ஒட்’டாயிருக்கு… Weird Mam, அதையும் நீர் மாத்தணும்.”

“அப்போ நான் உங்களை இஞ்சத்தைய ஆக்கள் ஸொல்ற மாதிரி ‘மாமா’ன்னு ஸொல்லட்டே.”

“ஒரு சின்னப் பொண்ணு மாமான்னு கூப்பிட்டா யாருக்குத்தான் கசக்கும்… ஆனா, எனக்கு 40 வயசாக்கும்… அதையும் மனசில வைச்சிண்டு உமக்கு எப்பிடித் தோணுதோ அப்பிடிச்சொல்லும்.”

“தாங்க்ஸ்…மாமா.”

“நாங்கள் மாமா.. 2006இல முள்ளிவாய்க்கால் சம்பவங்களுக்கு முதலே இந்தியாவுக்கு அகதிகளாக வந்து, இராமநாதபுரம் மாவட்டம் – மண்டபம் முகாமில ஒருமாதம் வரையில் தொங்கிக் கிடந்து இழுபட்டு, பின் திருச்சி மாவட்டம் – கொட்டப்பட்டு முகாமுக்கு வந்துசேர்ந்தோம். அப்போ எனக்கு 12 வயதுதான். புறப்பட்டதிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்ததையிட்டு வருத்தப்படாத நாளேயில்லை.

மொத்தக் குடும்பமும் ஒரே போட்டில போகப்படாதென்று அப்பா அடுத்தநாள் வேறொரு போட்டில வந்ததால அவரை இன்னொரு முகாமுக்கு அனுப்பிட்டாங்கள். பிறகு வைகோ, ராமதாஸ் வரையில போய்த்தான் எங்களை ஒரே முகாமில் விட்டாங்கள்.

அப்போ நான் ஏழாவது படிச்சுக் கொண்டிருந்தன், தமிழில படிச்ச எனக்கு இவங்கட தமிழ் பிடிபடவே நாளாச்சு… அதால இவங்கள் என்னை ஆறாவதிலதான் விட்டாங்கள். இழுத்துப் பறிச்சு ஒருவாறு பத்தாவது வந்தனா…”

“இப்போ சுத்தமான தமிழகத்துப் பெண்ணாயாயிட்டாப்பல…”

“நீள மயிரும் வெள்ளைத் தோலுமாய் கொஞ்சூண்டு அம்சமா… இவங்க பாஷையில் ‘கும்’முனு இருந்தனா, முகாமுக்கு வெளியிலும் உள்ளயுமாகப் பெடியங்கள் என்னையே சுத்திச்சுத்தி வந்துகொண்டிருந்தாங்கள். சாரமதின்னு ஒரு டான்ஸ் டீச்சர் முகாமில இருக்கிற புள்ளங்களுக்கு ஃப்றீயா டான்ஸ் சொல்லிக் கொடுத்தாங்க.”

“என்ன பரதநாட்டியமா…?”

“பின்னே என்ன ஹிப் ஹாப் டான்ஸா… படுத்தாதீங்க மாமா.” சிணுங்கினாள்.

“சரி… மேல சொல்லும்.”

“அவரோட வகுப்புக்குப் போனா, போகையில நாலுபேர் வரெக்க ஆறுபேர் எனக்கு எஸ்கோர்ட் மாதிரித் தொடரத் தொடங்கிட்டாங்க… இதைப் பார்த்த அம்மா இந்த ஆட்டமும் கூத்தும் நமக்கு வாணாம்… கலாபரிபாலனங்களெல்லாம் நமக்கானதல்ல, அது ஒத்துவராது…  பிழைக்கற வழியைப் பார்ப்போம்னு என்னையக் கிளாஸுக்கே போகவிடாம நிறுத்திட்டாங்க. என் காலேஜிலேயே மேல் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒருத்தன்தான், ‘நீ இல்லேன்னா செத்துப்புடுவேன்’னு விடாமல் தொல்லை தந்திட்டிருந்தான்.

‘உனக்குப் பின்னாலதான் என்னுடைய வாழ்க்கையும் உலகமும் விரியுது, நீ இல்லாத நான் வெறும் பூஜ்ஜியம்’ என்றெல்லாம் கஞ்சா தடவின வார்த்தைகளாக எடுத்து விட்டான், அவனது மயக்கு மொழிகளில மயங்கி நான் அவன் விரிச்ச காதல்வலையில மெல்லமெல்ல விழுந்திட்டேன். சாப்பாட்டிலகூடக் கவனமில்லாமல்… பாட்டும் குதிப்புமாய் என்னுடைய சாங்கங்களைக் கவனிச்ச அம்மாதான் முதல்ல என்னையெக் கேட்டா, ‘ஏன்டி நீ எவனையாவது ’லவ்’ பண்றியா’ன்னு. அம்மாவும் அப்பாவைக் காதலிச்சுத்தான் கட்டினவ. கட்டினதோ ஓடினதோ… பாம்பின் காலைப் பாம்பறிஞ்சிட்டுது. அப்பா ஒரு தலித்து, அவர்களது ஒரு கலப்புத் திருமணம்.

அது உடுமலைப்பேட்டையில் சங்கரின் ஆணவக்கொலை விழுந்த டைம். எனக்கேற்பட்ட பயத்தில் என்னை வளைய வந்துகொண்டிருந்தவனுக்குச் சொன்னேன்: ‘நான் ஒரு கலப்புத் திருமணத்தில பிறந்த பொண்ணு. உங்க குடும்பத்துக்கு விஷயம் தெரிய வந்தால் அவங்க என்னையப் போட்டுத்தள்ளிவிடச் சாத்தியம். அதால இந்தக் காதல் கருமாதி ஒன்றும் வேண்டாம். என்னெய விட்டுடு’ன்னு சொன்னேன்.

‘அவனோ ஹே… லூஸு, இதெல்லாம் பூவுன்னு ஊதிவிடுற சமாச்சாரம்டா, உலகம் எவ்ளோ மாறிடிச்சு. உங்க முகாமுக்குள்ளாறதான் இன்னும் எதுவும் மாறல்லைப்போல இருக்கு. நாங்கூட கலப்புத் திருமணத்தில் பிறந்த பையன்தான். எங்கம்மா பிராமின், அப்பா நாடார், இப்ப என்னாங்கறே’ என்றான். நம்பிட்டேன். பின்னாலதான் தெரிஞ்சுது… அவனுக்குத் தன் ஜாதியே சரியாய்த் தெரியலை. அவன் நிஜத்தில முக்குலத்தோரோ என்னவோ, அது எனக்குப் புரியாதுன்னாக்கும் வாய்க்கு வந்தபடி ‘நாடார்’ என்றிட்டிருக்கிறான். கூடவே தங்கள் குடும்பம் ஒரு மார்க்ஸிய, பெரியாரியக் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு முற்போக்குக் குடும்பமென்றும் அடித்துச் சொன்னான்.

‘நான் சீதனம் போன்ற விஷயங்களில் எல்லாம் மிக மிக முற்போக்குவாதி. உன்னை ஒரு குண்டுமணி நகைகூடக் கொண்டுவா’ என்று கேட்கமாட்டேன் என்று என் கையைப் பிடித்து அடித்தான். ‘அகதி முகாம் வாழ்க்கையில அரிசி ரேஷனுக்கே அக்கப்போர்… உனக்குச் நகையெல்லாம் சீர் செய்வாங்களாக்கும்’ என்றேன்.

எவன்னாலும் அம்மா ஆரம்பத்திலிருந்தே ‘இதெல்லாம் வேணாம்டி’ என்று மறுத்துக்கொண்டேதான் இருந்தா. போருக்குப் பிறகு நாடு சுமுகமான நிலைக்குத் திரும்பிடும் போலயிருக்கு, இந்த ஆண்டிலேயே நாம் ஊருக்குத் திரும்பிடுவம். ஒரு இந்தியத் தமிழனை நீ கட்டினால், நீ இங்கே நானும் அக்காளவையும் அங்கேயென்று பிறகெல்லாம் இடியப்பச் சிக்கலாயிடும் புரிஞ்சுக்கோ’வென்று ஒவ்வொரு இரவும் எனக்கு ஓதிட்டே இருந்தா.

எங்க அகதிக முகாம்ல குடும்பத்தில் பெரியவர்களுக்கு மாசம் 12 கிலோ அரிசியும் தலைக்கு 400 ரூபா பணமும் கிடைச்சுது. அதைக்கொண்டு ரேஷன் சாமன்கள்தான் வாங்கலாம்.

அப்பாவும் ஒரு முனகலுமில்லாமல், ஒப்பந்த அடிப்படையில வீடுகளுக்குப் போய் சுவர்களுக்கு வெள்ளை / பெயின்ட் / டிஸ்டெம்பர்கள் அடிக்கிற வேலைகள் பண்ணிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் கூடப்போய் வந்துகொண்டிருந்தார். மூவாயிரமோ சிலமாதங்களில் ஐயாயிரங்கூடச் சம்பாதித்தார். வாழ்க்கை பசி பட்டினி இல்லாமத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. அப்பா ஊரில கள்ளுமட்டும் குடிச்சுக் கொண்டிருந்தார். இங்கே அதுகூட இல்லாமல் தலைவலி காய்ச்சலே தெரியாமல் நல்ல சுகதேகியாகவிருந்த அப்பாவெங்கிற ஆறடி உயர ஆஜானுபாகுவான மனுஷன் எங்கள் காதல் கருமாதி எதையும் தெரிஞ்சுகொள்ளாமலே ஒருநாள் வந்த மாரடைப்பில அடங்கிப்போனார். அப்பா இறந்ததும் அகதிகளுக்கான நிவாரண உதவிகளுடன் ஒழுக்கு வீட்டுக்குள்ள வாழுறதே வாதனையாய்ப் போச்சு.

அம்மாவுக்கொரு தங்கையும் தம்பியும் கனடாவில இருக்கினம். அம்மா அவர்களுக்குப் போன் எடுத்து ‘கீர்த்தன்யா யாரோடையோ ஓடப்போறன் என்டு நிற்கிறாள்டா…’ என்று போட்டுவைத்தார். அப்பா தலித்தென்ற காரணத்தால் அவருடைய இறுதிச் சடங்குகளுக்களில்கூட வந்து எட்டிப்பாராத மாமா தினமும் போன் எடுத்து என் காதுகளில் தொன்கணக்கில் அட்வைஸுகளாக இறக்கினார். சாத்தியமோ தெரியாது, ‘எங்க சொல்வழி கேட்டியென்றால் நான் செல்லத்தைக் கனடாவுக்குக் கூப்பிடுவன்’ என்றெல்லாம் சொன்னார்.

நாங்கள் எழுதிக் கொடுத்திட்டுச் சிலோனுக்கே போகப்போவதாக அவனிடம் சொன்னேன், ஓவென்று அழுதான்… எனக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு அனாதைப் பெண்ணையோ, அகதிப் பெண்ணையோதான் கல்யாணம் பண்ணணும் என்றொரு இலட்சியம் இருக்குது. அதுக்காகவேனும் என்னை நீ கட்டிக்கமாட்டியாவென்று என் காலைக் கட்டினான். ‘என்னையவிட எத்தனையோ அழகான அகதிப் பெண்கள் எங்க முகாமிலயும் இன்னுமுள்ள நூறு முகாங்களிலும் இருக்கிறாங்க… அவாளுகளில ஒருத்தியைப் பார்த்துக்கட்டிக்க ராஜா… என்னைய விட்டிடு’ என்றேன் அவனுக்கு.”

“உனக்குத் தெரியாதுடி ‘கீர்த்தன்யா’… உன்னைப் பார்த்தவொரு கணத்திலயிருந்து உன்னை மனத்துள்ள மானசீகமாக என் மனைவியாய் வரிச்சிட்டு உங்கூட என்னுள்ளே வாழ்ந்து கொண்டிருக்கேன்டி, ஸ்ரீலங்காவில பிறந்த உன்னை எனக்கத்தான் தேவதைகள் இங்கே அனுப்பியிருக்கென்று நம்புறேண்டி… அப்பிடி என்னைய விட்டுப்போயிடாதடி, நீ போயிட்டால் எனக்கும் இந்த வாழ்க்கை சூனியமாகிவிடும்டி, நடைப்பிணமாயிடுவேன், அப்புறம் எனக்கும் சாகிறதைத் தவிர வேறு மார்க்கமிராது” என்றெல்லாம் கெஞ்சினான்.

அன்றைக்குத்தான் அவன் என்னையக் ‘கீர்த்தன்யா’ என்று பெயர்சொல்லி அழைத்தது. எனக்குள்ளே ஒரு மின்சாரம் பாய்ந்த மாதிரி… அக்கணத்திலிருந்து என் இதயமும் வேறொரு மாதிரியான சந்தத்தோட துடிக்க ஆரம்பிச்சுது. அவந்தான் என்கரம் பற்றப் பிறந்த ராஜகுமாரனோ என்றெல்லாம் என்மனம் தனக்குத்தானே கற்பிக்க ஆரம்பிச்சது மாமா… பிறகெல்லாம் தூக்கம் வராத இரவுகள்தான். என்னையறியாமலே கண்களால் வழிந்து தலையண நனைந்துவிடும். ‘ஏன்தான் இப்படி ஈழத் தமிழரில குறிப்பாய் ஏதிலிகள் மேல பிரியமாயிருக்கிற, படித்த, சாதி சம்பிரதாயங்களைக் கடந்த, முற்போக்கான, ஒரு கனவானைப்போல பண்பான, என்னையொரு பூவைபோலத் தாங்கச் சித்தமாயிருக்கிற, என்மேல் பித்தாக இருக்கிற ஒரு இளைஞனை எதுக்காக வெறுக்கிறார்’களென என்னைப் பெற்றவா, சுற்றத்தின் மேலயும் எனக்கு எரிச்சலுங் கோபமுமாய் வந்தது.

என்னைப் பெற்ற அம்மா, சுற்றங்கள், அறிஞ்சவை தெரிஞ்சவை எல்லாற்றை கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டிட்டு இவனோட சென்னைக்கு எடுபட்டேன். சினிமாவில ஓடுறவைக்கு நடக்கிறமாதிரி ஒரு ஆறுமாதம் வரையில எங்கள் இருவரையும் அவனுடைய மாமன்காரன் ஒருத்தர்தான் தன்வீட்டில தங்கவைச்சு ஆதரிச்சார். அவருக்குத் தொடர்ந்தும் சுமையாக இருக்கப்படாதென்று இவனும் நானும் தொடர்ந்து வேலை தேடியதில் ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு பிறெஸில இவனுக்கு மட்டும் வேலை கிடைக்கவும் நுங்கம்பாக்கத்தில பிரசாந் ஹொஸ்பிட்டலுக்குப் பின்பக்கமா, கூவத்தின் நாத்தத்தோட ஒன்றரை அறையில இருந்த ஒரு ஒட்டுக்குடித்தன வீட்டில் குடியேறினோம் கொஞ்சநாள்ல எனக்கும் ஒரு கின்டர்கார்டனில வேலை கிடைச்சுது, ஒரு மாசத்தில என்னுடைய ‘தமிழ் சரியில்லை’யென்று நிற்பாட்டிட்டாங்கள். மூன்று வருஷ சென்னை வாழ்க்கையில் இரண்டு பிள்ளைகளும் பிறந்திட்டதால என்னால வேலையொன்றுக்கும் போக முடியல. குழந்தைகளின் பராமரிப்போட சரி. வீட்டு வாடகைகள், குழந்தைகளின் மெடிகல் செலவீனங்களென வாழ்க்கை தள்ளாட ஆரம்பிக்கையில் கொரோனாவின் தாக்கமும் லொக் டவுண்களுமாகச் சென்னை வாழ்க்கை தாக்குபிடிக்காமல் போக அவனுடைய ஊரான சேலத்துக்கு இடம்பெயர்ந்தம். இங்க அவனுடைய குடும்பத்துக்குச் சொந்தமான வீடிருக்கு, அதிலதான் வாடகைப் பிரச்சனை இல்லாம இருக்கிறம்.”

“அப்போ அம்மா இன்னும் முகாமில தனியத்தான் இருக்கிறாங்களா.”

“ம்ம்ம்… நல்லாய்ச் சொன்னீங்க மாமா… இந்த ஓடுகாலி முண்டை என்னிக்கு அம்மாவை விட்டுத் தொலைஞ்சனோ அந்த ஆண்டே அவ சந்திரஹாஸன் ஐயாவின்ட உதவியால எழுதிக் கொடுத்திட்டு ஊருக்குப் போயிட்டா, அவவுக்கு இப்போ விதவைகள் உதவிப் பணம் சமுர்த்தி* பணம் எல்லாம் கிடைக்குது, அங்கே மூத்தக்கா, நடுவிலக்காவோட கரவெட்டியில நல்லபடி வாழுறா.”

“அப்பச் சரி… இப்ப உமக்குள்ள முதலான பிரச்சனைதான் என்ன.”

“இவன் இங்கே வந்தாப்போல – பாலம் – என்கிற ஒரு பப்ளிஷிங் கொம்பனியில கொஞ்சநாள் வேலை பார்த்தான். ஆரம்பத்தில புறூஃப் றீடராய்த்தான் இருந்தான். பிறகு அவங்களுக்கான சில மொழிபெயர்ப்பு வேலைகளையும் செய்தான். இவனுடைய மொழிபெயர்ப்புத்தான் சரியில்லையோ அல்லது அவர்களை இவனால அனுசரிச்சுப் போக முடியலையோ மூன்று மாதத்தில அந்த வேலைக்கும் முழுக்குப்போட்டான்.”

“ம்ம்ம்… சொல்லும்.”

“இப்ப இவன் இங்க உழைக்கப் போறானில்லை… உடம்பும் கள்ளப்பட்டு எப்பவும் அடைக்கோழி மாதிரி வீட்டுக்குள்ளயே கிடக்கிறான். எங்க நாடு மாதிரியில்லை மாமா, உழைக்கத் தயாரா இருந்தால் இங்கே ஏதாவதொரு வேலை செய்து பிழைச்சிடலாம். ஒரு பெட்டிக்கடையோ, வெத்திலைக் கடையோ போட்டாலே சுமாரான வருமானம் வரும். அரசின் ‘நூறு நாள் வேலைத் திட்டம்’ என்று ஒன்றிருக்கு, அதில நானாய் இவனைத் தள்ளிக்கொண்டு போய்ப் பதிஞ்சதில அவங்க ரேஷன் கடையில பில் போடிற, சாமான்களை ஸ்டொக் எடுக்கிற / செக்பண்ணிற இப்படியானதொரு வேலை கொடுத்தாங்க. அந்தக் கடைத்தூசி தனக்கு ஒத்துவரேல்லையென்று சொல்லி ஒரு வாரங்கூடத் தாக்குப் பிடிக்காம வீட்டை வந்திட்டான். வீட்டுகளுக்கு வெள்ளையடிக்கப்போனால்க்கூட ஐநூறோ அறுநூறோ கொடுப்பாங்க மாமா, இவன் போறானில்லை. ‘நான் எம்.ஏ. இங்கிலீஷ் லிட்டரேச்சர்… போய் ஏணியில் ஏறி எப்புடிடி சுவத்துக்கு வெள்ளையடிப்பேன்’ எங்கிறான்.

“நீ ஏணியில் ஏறாம கீழை மட்டும் அடி, மேலெ அடிக்கிறதை மத்தாக்கள் பாத்துப்பாங்க”ன்னா மொறைக்கிறான்.

“எங்கட மாமா பி.டெக். படிச்சவர், ரொறொண்டோவில டென்னிஸ் போல் பொறுக்கிக் கொடுக்கிறராம் தெரியுமோ” என்றால் அதெல்லாம் லேபர் டிக்னிட்டி உள்ள நாடுகள், அங்க பொறுக்கலாம் நம்மூர்ல முடியுமா” எங்கிறான்.

அப்பா இறந்ததோடு சித்தியும், தலித்தான அப்பாவின் இறுதிச் சடங்குகளுக்கே வரமறுத்த மாமாவும் அப்பப்ப அனுப்பிற இருநூறோ முன்னூறோ டொலருகளில மானங்கெட்டு வயித்தைக் கழுவிக் காலம் போக்கிறன். இவன் இப்பவும் ‘அவங்களை இன்னும் கொஞ்சக்காலத்துக்கு உதவி செய்யச்சொல்லு, பிறகுபார் நான் எப்பிடி உழைக்கிறேன்”னு பீத்தறான் மாமா. எதுவும் பண்றானில்லை.

‘அடே… அங்கே சித்தியும் ஒரு சீனியர் சிட்டிஷன் ஹோம் ஒன்றில செவிலி வேலை பார்த்துத்தான் பிழைக்கிறாவாம், ’நானும் பிள்ளைகளும் என் சோம்பேறிப் புருஷனும் தின்னுறதுக்குக் காசு அனுப்புங்கோவென்று எந்த முகத்தை வைச்சுக்கொண்டு அவங்களைக் கேட்பேன் சொல்லு’ என்றால் முறைக்கிறான்.”

“சோம்பேறியாய் இருப்பதைவிட வேற ஏதாவது கெட்ட பழக்கங்கள்… சிகரெட் தண்ணி இப்பிடி…”

“அப்பிடித் தண்ணிப் பழக்கம் ஒன்றுமில்லை, இன்னும் ஒருநாளும் அது அவனில மணக்கேல்லை. கல்லூரி நண்பர்களிடம் பழகினதாம்… சிகரெட் பிடிக்க மட்டும் விருப்பம். அதுவும் நான் வாங்கிகொடுத்தாதான் உண்டு. இல்லேன்னா ‘தேமே’ன்னு இருப்பான். சிலவேளை பார்க்கப் பாவமாயுமிருக்கும். சிட்டி லைப்றரிக்குப்போய் சேகுவேரா, கார்ல்மார்க்ஸ், தாஸ்தயெவ்ஸ்கி, கணையாழி, அம்ருதா, கவிதைப் புத்தகங்களென்று ஒருசுமை புத்தகங்களாய் எடுத்துக்கொணாந்து வைச்சு வாசித்துக் கொண்டிருப்பான். ஷோக்காளிகள், கூட்டாளிகள் பின்னால எல்லாம் போகமாட்டான்.”

“அப்போ அவன்ல எதைப் பார்த்து மயங்கினீராம்…”

“முதல்ல அவன்ர சாமர்த்தியங்கலந்த வக்கணையான பேச்சுத்தான், ‘இந்தா எலெக்ஷன் வரட்டும், அடுத்த மாதமே எனக்கு தனியார் பள்ளிக்கூடத்தில டீச்சிங் போஸ்ட் கிடைச்சிடும். நான் நிர்மாணிக்கப்போகிற சொர்க்கத்துக்கு இன்னும் இரண்டு கி.மீட்டர் தொலைவுதான்…’ என்கிற மாதிரிக் கதைகளை எடுத்து விட்டானா, மயங்கிட்டன்.

“கப்பல்லயோ சவூதிப் பக்கமோ போவேன்டா என்றால், ‘ஏன் அப்ப பார்த்து நீ சிலோனுக்கு ஓடவா’ எங்கிறான்.

அவனுக்கு நான் சிலோனுக்குப் போகவுங்கூடாது, இங்கேயே இருந்து யாரிடமிருந்தாவது பணம் வரவழைத்துக்கொண்டு அவனோடயே இருக்கணும். ‘ராஜா ராணி’ படம் பார்த்தீங்களா மாமா, அதில ஆர்யா இருப்பாரே படுசோம்பேறியா, வீட்டில புரண்டுபுரண்டு படுத்துக்கிட்டு. ஆனால், காதல் பண்றதில மட்டும் சுறுசுறுப்பா தீவிரமா அந்த ஆர்யா மாதிரியே சோம்பேறியா இருக்கான் மாமா.

எங்கப்பாவே கரவெட்டி கோபரேடிவ் யூனியன்ல ஒபிஸரா இருந்தவர், இங்க எத்தனையோ பேருக்கு சைக்கிள் றிப்பேர் பண்ணி / ஓயில் சேர்விஸ் பண்ணிக் கொடுத்துக் காசு பார்த்திருக்கார். இவன் உடம்பை வசைக்கவே பஞ்சிப்படறான்.”

கீர்த்தன்யாவின் முகநூலில் அவள் ‘புரொஃபைல்’ பக்கத்தைப் பார்த்தேன், நாலு வயதில் ஒரு ஆணும் இரண்டு வயதில் ஒரு பெண்ணுமாக இரண்டு அழகான குழந்தைகள் மொழுமொழுவென்று, அவள் புருஷனும் துல்கர் சல்மான் மாதிரி வாட்டசாட்டமாயும் எந்தப் பெண்ணையும் கவரும்படியான அழகனாயுமிருந்தான். அவனோடு அவள் சொல்றமாதிரியொரு சோம்பேறித்தனத்தைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

“அவனுக்கென்று குடும்பச் சுமைகள் ஏதாவது…”

“அப்படியான கடமைகள் பொறுப்புகள் இருந்தாலாவது இவன் ஒருவழிப்பட்டிருப்பான். அவனுக்கப்படி ஒரு இழவுமில்லை, அதுதான் அவனது பிரச்சனை. இவனுக்கு மூத்தது இரண்டு தமக்கைக்காரியள், இரண்டு பேரும் வசதியான இடங்களில வாழ்க்கைப்பட்டு நல்லாயிருக்காளவை. இவன் கடைக்குட்டி. தகப்பனும் நேரத்துக்கே செத்துப்போக தாய்க்காரி நோகவிடாம செல்லமாய் வளர்த்திருக்காப்பல, பொறுப்பில்லாமல் அம்பலத்து ஆடு மாடு மாதிரி வளந்திட்டான். தாய், இரண்டு மகள்களுடனும் மாறி மாறி இருக்கிறார். இவனுக்கு ஒரு பொறுப்போ சுமையோ எதுவுமில்லை, அதுதான் இப்படிக் குட்டிச்சுவராகிட்டான்.”

“சரி அவனுக்கு விருப்பமான விஷயங்கள், நல்ல குணங்கள்தான் என்ன…”

“சாப்பாடுன்னா மீன் குழம்பு, பொரியல் இரண்டும் பிடிக்கும், மாங்காய்போட்ட நம்மபாணிச் சொதியையும் நல்லா ருசிச்சுச் சாப்பிடுவான். மச்சந்தான் வேணுமென்றெல்லாம் அடம்பிடிக்கமாட்டான். உருளைக்கிழங்கென்றாலும் இரண்டு நெய்த்தலிக் கருவாட்டைப் போட்டுத் தீயலாக வைத்துக் கொடுத்தாலோ / சீனிச் சம்பல் அப்பளத்தோடு சோறுகொடுத்தாலோ முனகாமல் சாப்பிட்டிட்டு எழும்பிப்போவான். எப்போவாவது கடையில இருந்து சாமான்கள் வாங்கிவரும்போது யாராவது மறித்துப் பசிக்குதென்று முனகினால் பாதிச் சாமான்களை அவங்களுக்கே தூக்கிக் கொடுத்திடுவான். மழை பெய்தால் ஜன்னல் பக்கமாய் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து சிகரெட் பிடித்தபடி அது ஓயுமட்டும் பார்த்துக் கொண்டிருப்பான்.”

“மற்றும்படி இப்ப உமக்கு என்னதான் ஆகவேணும், அதைச் சொல்லும்”

“ஊரோச்சம் வீடு பட்டினி மாமா… அநேகமாய் ஒவ்வொரு நாளும் ஒரு நேரந்தான் நானும் குழந்தைகளும் சாப்பிடறோம். (இதைச் சொல்கையில் அவளுக்குப் பீறிட்டுக்கொண்டு வந்த அழுகையால் மேலும் பேச முடியாமல் திணறினாள்.) சொறி மாமா… அப்புறமா கூப்பிடறேன்” என்றுவிட்டுப் போனை வைத்துவிட்டாள்.

மிகவும் பொருண்மியமுடையில் இருக்கிறாள் என்பது தெரிந்தது. வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் மூலம் 250 யூரோ அனுப்பிவைத்தேன்.

மறுநாள் கிடைத்ததும் உடனே போன் எடுத்தாள்.

“ரொம்ப ரொம்ப ரொம்பத் தாங்க்ஸ் மாமா… நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல, இப்படி என் கிரிடிகல் டைம்ல ஹெல்ப் பண்ணுவீங்கன்னு… இவனுக்கு யார் பணம் அனுப்பினதுன்னே தெரியாது, எங்க மாமாதான் அனுப்பியிருக்கார்னு நெனெச்சுக்கிட்டு இருக்கான்… பணம் கெடச்சதும் என்ன சொன்னான் தெரியுமா, உங்க சித்தியையும் 200 டாலர் அனுப்பச் சொல்லிக்கேளுடி, எனக்கு வேலை கெடச்சதும் மொத்தமாய்த் திருப்பிடலாங்கறான்…

“இப்போ பத்து வருஷமாய் எங்கள் குடும்பத்தைத் தாங்கிவாறாங்க, இனிமேலும் இங்கிதங்கெட்டு அவரைப் பாரப்படுத்தினா, ‘அடேய்… அச்சுணைக்கெட்ட கூத்தி, தன் புருஷனை ஆட்டாமல் வைச்சிக்கொண்டிருக்கச் சொல்லிட்டு என்னைய மட்டும் முறிக்கிறாளே’யெண்டு நினைக்கமாட்டாவா சித்தி; சித்தப்பா சலிச்சுக்கமாட்டாரா” என்றால் வழமைபோல அசடு வழியுறான் மாமா.

என் குடும்பத்தினருக்கு சாதியம் பற்றிய நவீன காலத்துக்கான நிலைப்பாடுகள் இல்லாவிட்டாலும், அவர்கள் சொன்ன அருமையான புத்திமதிகளையாவது கேட்டிருந்தால் இத்தனை வாதனைகளுடனானதொரு வாழ்க்கையைத் தேடியிருக்க வேண்டாமேன்று இப்போ தோன்றுது. என்னிலும் பெரிய தவறு இருக்கு, என் பெற்றோரின் சொல்லை உதாசீனப்படுத்தி என் தலையில நானே மண்ணையள்ளிப் போட்டின்டிட்டன். நான் ஒரு பாவி, என் பெற்றோருக்குச் செய்த துரோகத்துக்கு எனக்கு எந்தப் பிறவியிலும் பாவவிமோசனம் கிடைக்காது மாமா.”

எங்கேதான் பிடித்தாளோ… ‘வாதனை’, ‘பின்னடைவு’, ‘நரகம்,’ ‘பாவம்’, ‘உத்தரிப்பு’ என்கிற சொற்களைத் தன் பேச்சு முழுவதும் கலந்துதூவிப் பிரயோகித்தாள்.

“The past is past… இனி என்ன செய்யலாங்கறீர்.”

“ப்ளீஸ் கோச்சுக்காதீங்க மாமா… இனிமேல் நீங்க எனக்கு பணம் எல்லாம் அனுப்ப வேணாம்… அது நான் இதுக்காகத்தான் உங்களைப்போன்ல அழைச்சேன்னாகிடும்… நீங்க சப்போர்ட் செய்யவேண்டிய குடும்பங்கள் உங்களுக்கும் ஊரில நிறைய இருக்கும்… எனக்கு நீங்கள் எனக்கு ஒரேயொரு உதவிமட்டும் செய்தாகணும்… எனக்கு நீங்கள் இவங்கிட்டயிருந்து விடுதலை பெற்றுத்தரணும். அப்படி நீங்களும் பெற்றுத்தராவிட்டால் எனக்கு இரண்டு வழிகள்தான் இருக்கு, லாரிக்கோ ரயிலுக்கோ முன்னால பாயிறது, இல்ல போட் ஏறி நேவிக்காரன் சுட்டாலும் பிள்ளையளோட ஊருக்கே போயிடறது.”

“அதெல்லாம் எனக்குச் சரியாய்ப் படேல்லை…”

“ஏன் அப்பிடிச் சொல்றீங்க…”

“இப்படி லூஸுத்தனமாய்க் கதைக்கிறதென்றாலோ, முந்தித் தன்னிச்சையாய் முடிவெடுத்ததுப்போல இப்பவும் சொந்தமாய்த்தான் முடிவுகள் எடுப்பீரென்டால் என்னோட ஆலோசனைகள் உமக்கு இனித் தேவைப்படாது.”

“இந்த உலோகத்திலேயே என்னை ஒருத்தருக்கும் பிடிக்காதுதான் மாமா… நீங்களும் என்னைக் கைகழுவி விடுறியளோ…”

பின்புலத்தில் விசும்பல் கேட்டது.

“இலங்கைக்கேதான் போயிட்டாலும் அங்கே போய்ச் சேர்ந்த பின்னால பேசாமல் இந்தியாவிலயே இருந்திருக்கலாம் என்கிற நினைப்புத்தான் வரும். எப்போதும் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்.”

“இப்ப அம்மா நாலு வருஷங்களாய் நிவாரணங்கள், சமுர்த்தி உதவிகளோட என்ன மாதிரிச் சீவிக்கிறா; ஆக மிஞ்சினால் பிள்ளைகளை அம்மாவோடயோ அக்காளவையோடயோ விட்டிட்டு நான் நெசவுக்குப் போவன், பீடிசுற்றப் போவன், பன்னவேலைக் கூடங்களுக்குப் போவன்.”

“அதையே உங்க செய்யேலாதோ…”

“பிள்ளையளோட என்னண்டு மாமா…” என்றுவிட்டு விசும்பினாள். பின் சற்றே இடைவெளிவிட்டு, “இந்தக் குழந்தைகள் மட்டும் எனக்கு ஜனித்திராவிட்டால் நான் நாலு வீடுகளில பற்றுப் பாத்திரங்கள் தோய்த்தோ சமையல்வேலை செய்தோ பிழைச்சிடுவன். இதெல்லாம் நானே வலிந்து விலைகொடுத்து வாங்கின ‘வாதனைகள்’” என்றுவிட்டு மீண்டும் அழுதாள்.

 

“நீர் முறைப்படி பிரிஞ்சு போறதென்றால் உம்முடைய புருஷனுடைய சம்மதத்தோடதான் அதைச் செய்யலாம். அதுக்கு நான் வீடியோ போனிலோ, கொன்ஃபரன்ஸ் போனிலோ அவரோட லைஃபா கதைக்க வேணும்.”

“என்னையே போகக்கூடாது என்றிருக்கிறவன் எப்படி மாமா உங்களோட கதைப்பான்…”

“சரி… உமக்குச் செல்லுபடியான பாஸ்போர்ட் இருக்கோ.”

“இருக்கு.”

“எத்தனையாம் ஆண்டு உங்கே போன்னீங்கள்.”

“இரண்டாயிரத்து ஆறில.”

“உங்க போயே 15 வருஷமாச்சு, எப்பிடிப் பாஸ்போர்ட் செல்லுபடியானதாய் இருக்கும். இடையில எப்பவென்றாலும் ரினிவல் செய்தனீங்களோ.”

“அப்பிடி ஒரு ஞாபகமும் இல்லை. அப்பா அடிக்கடி கொன்சுலேட்டுக்கோ எங்கேயோ போய்வாறவர், ஒருவேளை புதுப்பிச்சாரோ தெரியேல்ல. நான் சிலோனுக்கு ஓடிவிடுவனோங்கிற பயத்தில அதை அவனே பிடுங்கி வைச்சிருக்கிறான், அவன் இல்லாத நேரமாய் எடுத்துச் செக் பண்ணிட்டுச் சொல்றன் மாமா.”

“‘செக்’ பண்ணாவிட்டாலும் பரவாயில்லை, 2006இல் எடுத்த பாஸ்போர்ட் ரினிவல் செய்யாவிட்டாலும் 2016இல காலாவதியாகியிருக்கும். சரி அப்ப உன்னுடைய பிள்ளைகளின்ர பெயருகள் பாஸ்போர்ட்டில Endorse பண்ணேல்லையே.”

“இல்லை… அப்பிடியின்றுஞ்செய்யேல்ல.”

“குழந்தைகளுக்கு பேர்த் சேர்டிஃபிகேட்டுகளாவது இருக்கா.”

“இல்லை ஆஸ்பத்திரிப் பதிவுகள்தான் இருக்கு. இஞ்ச அதை வைச்சுத்தான் பாஸ்போர்ட் எடுக்கிறவை.”

“அது இந்தியக் குழந்தைகளுக்கு ஓகே… ஆனால், நம்மவருக்கு அது போதாதம்மா, பேர்த் சேர்டிஃபிகேட்ஸ் எடுத்து அவர்களை உம்முடைய பாஸ்போர்ட்டிலோ, மனுஷனுடைய பாஸ்போர்ட்டிலோ பதிஞ்சிருந்தாலே நீர் குழந்தைகளுடன் ஒரு நாட்டுக்குப் போகலாம்.”

“அவனுக்கெ எங்கே இருக்கு பாஸ்போர்ட்… ரேஷன் அட்டையும் ஆதார் அட்டையுந்தான் வைச்சிருக்கான்.”

இப்போ எனக்கு சந்தேகம் வலுத்தது.

“ஏன் உமக்கு ஆதார் அட்டை இல்லை.”

“நாங்கள்தான் இன்னும் ஒஃபிஷியலா பதிவுத் திருமணம் செய்யேல்லையே.”

‘அதுக்குள்ள பிள்ளைகள் மட்டும் பெத்துக்கிட்டாயாக்கும்’ என்றுதான் வாயில் வரப் பார்த்தது, அடக்கிக்கொண்டேன்.

“இப்ப நீர் ஊருக்குப் போறதென்றால்… எமேர்ஜென்ஸி பாஸ்போர்ட் என்றொரு பாஸ்போர்ட் இருக்கு, அதை எடுத்துக்கொண்டு நீ போகலாம். ஆனால், பேர்த்சேர்டிஃபிகேட் இல்லாத குழந்தைகளை அதில் பதிய இயலாது.”

“ஒருநாள் இவன் ‘நீ அறுதியாய் சிலோனுக்குத்தான் போறதென்று முடிவெடுத்திட்டால் நான் பாஸ்போர்ட் எடுத்து அதில பிள்ளைகளைப் பதிஞ்சு உன்னைய சிலோனில கொண்டுவந்து விடுறேன்’ என்டவன்.”

“அப்படித்தான் அவர் கொண்டுவந்துவிட்டாலும் இந்தியாவில பதிவுள்ள ஒரு பிள்ளைக்கு இலங்கையில லேசில அடையாள அட்டையோ, இலங்கைக் குடிமக்கள் என்கிற பிரஜாவுரிமையோ கிடைத்துவிடாது. அங்கே இப்போ ஆட்பதிவுகள் எல்லாம் டிஜிட்டலைஸ்ட் பண்ணியிட்டாங்கள். போலியான ஆவணங்கள் தயாரிப்பதென்பது கனவிலும் சாத்தியப்படாது. அடுப்பிலயிருந்து நெருப்புக்க விழுந்திடாதை கிளி and please don’t try to paly any childish silly games.”

அவள் நடப்பிலுள்ள சட்ட திட்ட முறைகள் எதையும் அறியாமல் இன்னும் 12 வயதிலேயே இருந்தாள்.

“நீர் எமேர்ஜென்ஸி பாஸ்போர்ட் எடுக்கிறதுக்கும் உம் புருஷன் பாஸ்போர்ட் எடுக்கிறதுக்கும் அதில உங்க பிள்ளைகளைப் பதியிறதுக்கும் நான் ஜெர்மனியிலிருந்துகொண்டு என்ன செய்யலாங்கிறீர்… ‘பி பிராக்டிகல்’மா.”

அன்றைக்கும் நிறைய அழுதுவிட்டுத்தான் போனை வைத்தாள்.

அடுத்த நாள், “இவனோட இனி எனக்கு வாழமுடியாது மாமா, நாங்கள் இப்ப ஆறேழு மாசமா ஒருத்தரோட ஒருத்தர் கதைக்கிறதேயில்லை.”

“இது எப்படியாச்சு…”

“நீ ஆம்பிளையா ஒரு நாளைக்கு நூறு ரூபா என்றாலும் உழைச்சுக் கொண்டுவராத வரையிலும் என் மூஞ்சியைப் பார்த்துப் பேசாத… கதைக்காத’ என்று சொல்லி நானாகவே அவனைவிட்டு விலகியிட்டன்.”

“அப்ப யார்தான் கடைகண்ணிக்குப் போகிறது, சாமானுகள் வாங்கிறது… யார் சமையல் பண்றது… எப்படிச் சமாளிக்கிறீர்கள்.”

“ஏதோ முன்னயெல்லாம் அவந்தான் சாமான், சாமானாய் வாங்கியந்து குவிச்சமாதிரி நெனச்செல்லோ கேட்கிறியள். முன்னயும் நான்தான், இப்பவும் நான்தான், சித்தி மாமாவின் உதவி இல்லாட்டி எப்போவோ செத்துச் சாம்பல் மேடாயிருப்பம்.”

மீண்டும் அவளுக்கு அழுகை வெடிக்கிறது, “சரி… அழாதையும். கொளுத்தாடுவாற நேரங்களில அவனுக்குக் கைகால் நீட்டிற பழக்கமும் இருக்கோ…”

“அவனுக்கு ஆரம்பத்திலேயே தெளிவாய்ச் சொல்லி வைச்சிருக்கன், அப்படி ஏதும் பண்ணினாக்க… மாலதி அக்கா செய்தமாதிரித்தான் செய்வனென்டு.”

“அப்பிடி என்னதான் செய்தா மாலதி…”

“புழல் முகாமில அவகல்யாணம் செய்து மூணே மாசம் புருஷனோட எதுலயோ தகராறு வந்திட்டாப்பல. அவன் ஒரு கட்டத்தில அவளுக்குக் கையை நீட்டிட்டான். அன்னிக்கிரவே அவ சயனைட் கடிச்சுச் செத்துட்டா.

இவன் அந்த அளவுக்கெல்லாம் போகமாட்டான் என்றுதான் நெனக்கிறன் மாமா… நேத்து மட்டும் எங்க பிடிச்சானோ ஒரு கோழி கொணாந்து தானே உரிச்சும் தந்தான், சமைச்சுக்கொடுத்தன் சாப்பிட்டான். நான் வியாழன் வெள்ளியில கவிச்சி சாப்பிடமாட்டன், அதனால் எனக்கு சோயாவிலயொரு குழம்பு வைச்சு அப்பளமும் சுட்டனான். இவனுக்கொரு வருமானமில்லாததால ஒரு அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில கைமாத்தோ கடனோ வேண்டக்கூடப் பயமாயிருக்கு. நான் ஒரு இளவரசியைபோல வாழ்ந்தனான் மாமா, சிலோனில எனக்கு அரிசி என்ன விலையென்றே தெரியாது. இஞ்சவந்து இத்தனை உத்தரியப்படுறன். எனக்கு வேறொரு உதவியும் வேண்டாம்… நீங்கள் நினைச்சாச் செய்யலாம் மாமா, இங்கேயுள்ள ஏதாவதொரு அகதிகளுக்கான அமைப்பைத் தொடர்புகொண்டு என்னை இவனிட்டயிருந்து விடுதலை செய்து வடமராட்சிக்கே அனுப்பி வைச்சிடுங்கோ, உங்களுக்குக்கோடி புண்ணியம் கிடைக்கும் ப்ளீஸ் ப்ளீஸ், ப்ளீஸ்… எனக்கு அப்பா இருந்திருந்தால் இத்தனை வாதனைகள் வந்திராது, அவருடைய நிழல்ல ஒரு ராணி மாதிரி வாழ்ந்திருப்பன், என்ர மதியையும் மயக்கிப் பாதையை மாற்றிவைச்ச கடவுள் என்னுடைய தெய்வத்தையும் தன்னோட அழைச்சிட்டான்.”

சென்னையிலுள்ள சில சட்டவாளர்கள், தீவிர மாதரமைப்பு மற்றும் சமூக சேவைகள் செயற்பாட்டாளர்களிடம் பேசிப் பார்த்தேன்.

‘கடவுச் சீட்டுகள், பிறப்புப் பதிவுகள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரப் பதிவுகள் எல்லாம் இலங்கைத் தூதரகம் சம்பத்தப்பட்ட வேலைகள். அவற்றுக்கு நாங்கள் எதுவுஞ் செய்வதற்கில்லை. மற்றைய விடயங்கள் இது ஒரு தனியனின் பிரச்சனையல்ல, ஒரு குடும்பத்தின் பிரச்சனை. இப்பிடி எம்மவரே பல இலட்சம் பேர் இருக்காங்க சார், இதுக்கு நாங்கள் என்ன செய்யலாம்.’ என்றுவிட்டுக் கழன்றுவிட்டார்கள்.

அதையே கீர்த்தன்யாவிடமும் சொல்லிப் பார்த்தேன்.

“இதுவெறும் அகதிப் பிரச்சனை மட்டுல்ல, ஒரு குடும்பத்தின் பிரச்சனை. உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு… ஒரு குடும்பத்தைப் பிரிச்சுவைக்க எந்த அமைப்பும் முன்வராது. ஒரு குடும்பத்தைப் பிரிச்சு அதில தாயையும் பிள்ளையையும் சிலோனுக்கு அனுப்பி வைக்கிறது என்னால சாத்தியப்படுமோ தெரியேல்லடா.”

கீத்தன்யாவின் வார்த்தையில் அவளின் வாதனைகளும் அவலங்களும் முகநூல் போகும் வேளைகளில் எல்லாம் என் மனதையும் அலைக்க ஆரம்பித்திருந்தன. ‘பேச்சுக்களில் நிரம்பக் கோபக்காரிபோலத் தெரிந்தவள் ஆற்றாமையின் உச்சத்தில் ஏதும் பூச்சி மருந்தைக் குடித்துச் செத்துப் போய்விடுவாளோ’ என்கிற பயமும் உள்ளூர என்னைத் தொட்டிருந்தது. முகம் தெரியாத ஒருத்தியின் துன்பங்களை என் மனதில் ஏற்றிக்கொண்டு திரிவது பெருஞ்சோதனையாக இருந்தும் எதுவும் செய்யமுடியாத கையறு நிலையிலிருந்தேன்.

இரண்டு மூன்று மாதங்கள் மெல்ல நகர்ந்திருந்தன, அவளிடமிருந்து போனோ புலம்பல்களோ எதுவும் வரவில்லை. ஒருஇரவு பின்சாமத்தில் விழிப்பு ஏற்படவும் கழிப்பறை சென்றுவந்து கணினியில் அமர்ந்து ஐ.பி.சி. செய்தியை வைத்தேன்.

நள்ளிரவில் வள்ளமொன்றின் மூலம் தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளில் ஒரு இளந்தாயும் இரண்டு பிள்ளைகளுமுட்பட அறுவர் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கொவிட்- 19 சோதனையில் அக்குழந்தைகளின் தாயுக்கு தொற்று இருப்பது கண்டமையால் அவர் தடுப்புக்காவலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்; பிள்ளைகள் இருவரும் ஆதரவற்ற ஏதிலிக் குழந்தைகள் காப்பகமொன்றில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் செய்தி போனது.

‘பிடிவாதக்காரியான கீர்த்தன்யாதான் வள்ளத்தில போய்த் தொலைஞ்சிருக்கிறாள்போல இருக்கு, பாதிச்சோதனை தீர்ந்தது’ என்று என்னளவில் சமாதானமாகி, அவளாலான மனச்சுமை இறங்கியதென்று சிறுநிம்மதியுடன் இருந்தேன்.

திடுப்பென ஒரு நாள் அதிகாலையில் இந்திய நம்பர் ஒன்றிலிருந்து போன் வந்தது, அவள்தான் பேசினாள்.

ஆச்சரியத்தைக் காட்டாமல் இயல்பாய், “எப்படிடா இருக்கிறாய் கிளி…” என்றேன்.

“நல்லாயிருக்கிறேன் மாமா, இப்ப இங்க சேலத்தில புத்தகக் கண்காட்சி ஒன்று நடக்குதல்லோ…”

“அறிஞ்சேன் சொல்லும்.”

“முந்தி இவர் வேலைபார்த்த பப்ளிகேஷன் இவரை ஒரு ஸ்டோலுக்கு இன்சார்ஜாக நியமிச்சிருக்காங்க, புக்ஸ் விற்பனையின்படி ஏதோ கொமிஷன் பேஷிஸில் சம்பளம் கொடுக்கிறாங்க. நேராய்க்கொண்டுவந்து என்னிடமே தந்திடுறார்… ‘வழுதி’ is a Gem of men you know… கண்காட்சியின் பிற்பாடும் புக் ஷொப்பை அதிலயே நிரந்தரமாக வைக்கப்போறங்களாம். தமிழர்கள் நிறையப் பேர் புக்ஸ் வாசிச்சாங்கன்னா பிழைச்சுப்போம்” என்றுவிட்டுக் கலகலவென்று முதன்முறையாக என்னிடம் சிரித்தாள்.

‘அவன்’ ‘இவன்’ என்ற அவளது ஒருமை ‘விளி’கள் இப்போ ‘அவர்’ ‘இவர்’ என்று மாறியிருந்ததோடு அவரது பெயரையும் ‘வழுதி’ என்று அவள் இப்போதுதான் முதன்முறையாக அழுத்தமான பலுக்கலோடு சொன்னாள்.

“இன்னோரு விஷேசம் மாமா… நான் இப்ப ஆறு மாசம் முழுகாம இருக்கேன், ட்வின்ஸ் பேபியாம் டாக்டர் சொல்லிற்றா…”

பிறகும் கலகலத்துக் கனகதாரையாக என்மேல் சிந்தினாள், சித்தத்தால் நாத்திகனானாலும்… தேஷில் தோய்ந்துகொண்டு “வாதனைகள் பல சோதனைகள் ரகுநாதனை நினைந்திடில் நாடுமோ…” என்று பாடவேணும் போலிருந்தது.

 

*****

*சமுர்த்தி: இலங்கை அரசு வேலையற்றவர்களுக்கு வழங்கும் நிவாரணம்.

“பொ. கருணாகரமூர்த்தி” karunah08@yahoo.com

Amrutha

Related post