தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் – பிரபு திலக்

 தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் – பிரபு திலக்

லகளாவிய பசி குறியீடு’ தொடர்பாகச் சென்ற மாதம் வெளியான அறிக்கையில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் இடம்பெற்றிருந்து சர்ச்சைக்குள்ளானது. நாடுகளில் நிலவும் பட்டினியைப் பொறுத்தவரைக்கும் 15 நாடுகள் மட்டுமே இந்தியாவைவிட மோசமான நிலையில் உள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் நமது அண்டை நாடான சீனா 5ஆவது இடத்திலும் இலங்கை 65வது இடத்திலும் பர்மா 71வது இடத்திலும் நேபாளம் 76ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 92ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் நிலை இந்த நாடுகளை மட்டுமல்ல, பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளதை இந்த பட்டியல் வெளிப்படுத்தியுள்ளது. அதாவது கோஸ்டாரிகா, சூரிநாம், கயானா, நிகராகுவா, கானா, எத்தியோப்பியா, பர்கின ஃபாஸோ, சூடான், ருவாண்டா போன்ற பின்தங்கிய ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகள்கூட மக்களின் பசியாற்றுவதில் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.

அயர்லாந்தைச் சேர்ந்த `கன்சர்ன் வேல்ர்ட்வைட்’ அமைப்பும் ஜெர்மனியைச் சேர்ந்த `வெல்ட் ஹங்கர் ஹில்ஃப்’ அமைப்பும் இணைந்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன. `குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்’ என்கிற தலைப்பில் ஆண்டுதோறும் உலக நாடுகளின் பட்டினி குறித்த அறிக்கையை இந்த அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன.தற்போது வெளியாகியுள்ளது 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கை.

பல்வேறு அளவீடுகள், புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பட்டினியையும் அதனால் உருவாகக்கூடிய சமூகப் பிரச்சினைகளையும் எதிர்கொள்வதற்கு இந்தப் புள்ளிவிவரங்கள் உதவக்கூடும் என்ற நோக்கில் இவை கணக்கிடப்படுகின்றன. எப்படிக் கணக்கிடுவது என்பதற்கு சில அளவுகோல்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் நான்கு விஷயங்களுக்கான தரவுகள் சேமிக்கப்படுகின்றன. முதலாவதாக, போதுமான சத்துணவு இல்லாத மக்களின் சதவீதம்; இரண்டாவது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருத்தல்; மூன்றாவது, குழந்தைகள் தங்கள் வயதிற்கேற்ற உயரமின்றி குன்றிப் போயிருத்தல்; நான்காவது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம். இந்த நான்கு காரணிகளைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதில் 10க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவை ‘கீழ்’ என்ற பிரிவில் பட்டியலிடப்படுகின்றன. 10 முதல் 20 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை ‘சுமார்’ என்ற பிரிவில் வைக்கப்படுகின்றன. 20 முதல் 35 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை ‘தீவிரமான’ என்ற பிரிவிலும் 35 முதல் 50 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை ‘ஆபத்தான’ என்ற பிரிவிலும் 50க்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவை ‘தீவிர ஆபத்தான’ என்ற பிரிவிலும் வைக்கப்படுகின்றன.

இந்தியா 27.5 மதிப்பெண்களுடன் பசி தீவிரமான நாடுகளில் ஒன்றாக உள்ளது.

முன்னதாக, 2016ஆம் ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களிலேயே, உலகில் வளர்ச்சிக் குறைபாடான குழந்தைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் இருந்தனர்.

2017இல், “இந்தியாவில் 5 வயதுக்கும் குறைவான 10 லட்சத்து 4 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளன. இதில், 68.2 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்துள்ளன” என்று, ‘டான்செட் சைல்ட் அண்ட் அடோலன்சன்ட் ஹெல்த்’ என்ற இதழில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்து.

சென்ற ஆண்டுகூட, 2020 ஏப்ரல் 17 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி, ரகுராம் ராஜன் மூவரும் இணைந்து எழுதிய கட்டுரையில், “இந்தியாவில் பெரும் மக்கள் கூட்டம் ஏழ்மைக்கும் பட்டினிக்கும் தள்ளப்படும். அவர்களை நாம் காப்பற்ற வேண்டும்” என்று எச்சரித்திருந்தார்கள்.

அக்கட்டுரையில் மேலும், “இப்போதைய கவலை, இதுவரையிலும் இருந்த கவலைகளையெல்லாம் விடப் பெரிய கவலை எதுவெனில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கடுமையான ஏழ்மைக்கோ அல்லது பட்டினிக்கோ தள்ளப்படலாம். கொரோனா பொது முடக்கத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாலும் வழக்கமாக அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளுக்கான அரசு வழிமுறைகள் தடைப்பட்டிருப்பதாலும் இது நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இது மிகக் கொடூரமானதாகும்.

மிகமுக்கியமாக ஏழைகளில் மிகக் கணிசமான பகுதியினர் பொதுவிநியோக பட்டியலிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக இது நடந்திருக்கிறது. உதாரணமாக, மிகச்சிறிய மாநிலமான ஜார்கண்டில்கூட 7 லட்சம் குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதியோர் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் எல்லாம் சரிபார்த்தல் நடைமுறைக்காகக் காத்துக் கிடக்கின்றன. இந்த தாமதத்தில் நியாயங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு நெருக்கடி காலகட்டத்தில் இது அவசியமற்றது’ என்று கூறியிருந்தனர்

கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் வெளியான ‘தேசிய குடும்ப சுகாதார ஆய்வு’ முடிவில்கூட இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது குறித்துச் சொல்லப்பட்டிருந்தது. உலக பொருளாதார மன்றமும் `கோவிட்-19 தொற்றால் உலகம் முழுக்க பட்டினி, வறுமை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் வெகுவாக அதிகரித்திருக்கிறது’ என்று சொல்லியிருந்தது.

இந்த எச்சரிக்கைகள் எல்லாவற்றையும் நமது அரசுகள் அலட்சியப்படுத்தியுள்ளதையே தற்போது வெளியாகியுள்ள ‘உலக பட்டினி பட்டியல்’ அம்பலப்படுத்தியுள்ளது. ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி. இங்கே பெரும் மக்கள் கூட்டமே உணவில்லாமல் உள்ளது ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பிரச்சினை என்பது செல்வம், சரியான முறையில் பங்கீடு செய்யப்படாததே என்பதையே இந்த அறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது. இந்திய மக்களில் 22 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையில், உலகப் பெரும் கோடீசுவரர்களில் 84 பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள் என்பதை இந்தப் பட்டியலுடன் சேர்ந்த அறிக்கை சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது.

‘2017 முதல் அடுத்த ஐந்து வருடங்களில், எடை குறைவான குழந்தைகள் பிறப்பை ஆண்டுக்கு 2 சதவிகிதமும், போதிய வளர்ச்சி இல்லாமல் குழந்தைகள் இருப்பதை 25 சதவிகிதமும், பெண்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்படுவதை ஆண்டுக்கு 3 சதவிகிதமும் குறைக்க’ ஒன்றிய அரசு நிர்ணயித்த இலக்கு எட்டப்படவில்லை என்பதுடன் மேலும் மோசமாகியுள்ளது.

ஆனால், “இந்தப் பட்டியல் அறிவியல்பூர்வமாகவோ கள எதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டோ தயாரிக்கப்படவில்லை” என்று ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், “உலகளாவிய பட்டினி குறியீட்டுப் பட்டியல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பு சரியான ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை என்றே நினைக்கிறோம்” என்று எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு இந்தப் பட்டியலில் 101ஆவது இடம் என்று சொல்லப்பட்டிருப்பது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்தியாவில் பசி, பட்டினியால் வாடுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நாம் அன்றாடம் நேரில் காணும் உண்மைதான். ஆகையால், இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றுவதை விட்டுவிட்டு, ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் பட்டினியையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும்.

இந்தியாவில் 5 பெண்களில் ஒருவர் எடை குறைவாக உள்ளார். எடை குறைவாகக் குழந்தைகள் பிறப்பதற்கும் குறைப் பிரசவத்துக்கும் இதுவும் காரணம். குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வரும் நாட்களில், அரசு தன்னிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி ஒருவர்கூட பட்டினியாக இல்லை என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பொதுவிநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும். தங்களது குடும்பங்களிலிருந்து தொலைதூரங்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் அரசு உணவகங்களை அமைக்க வேண்டும். சில மாநிலங்கள் ஏற்கெனவே செய்து கொண்டிருப்பது போலப் பள்ளிக் குழந்தைகளுக்கு, பள்ளிகளில் வழங்கப்படும் உணவுக்கு ஈடானவற்றை குழந்தைகளின் வீடுகளுக்கும் நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

மிக உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமானால், சமூக ரீதியிலான, பொருளாதார ரீதியிலான, அரசியல் ரீதியிலான பாகுபாடுகளையும் அரசு சரிசெய்ய வேண்டும்.

Amrutha

Related post