பார்ப்பனரா அல்லது பிராமணரா

 பார்ப்பனரா அல்லது பிராமணரா

செ. சண்முகசுந்தரம்

 

மிழ் அறிவுலகத்தில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் விவாதத்தின் மையப்பொருள், ‘பார்ப்பனர் என்று விளிப்பதா அல்லது பிராமணர் என்று அழைப்பதா?’. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடுப்பக்க முன்னாள் ஆசிரியரும், தற்போது ‘அருஞ்சொல்’ இணையதளத்தின் ஆசிரியருமாகிய சமஸின் ஒரு முகநூல் பதிவால் இந்த சர்ச்சை இப்போது மீண்டும் வெடித்திருக்கிறது.

பிராமணர் என அழைக்கும் பலரிலும் அவர்களுக்கே தெரியும் அச்சொல் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தாத, முரணான சொல் என்று. தமிழ்ச் சூழல் கடந்து வந்திருக்கும் பாதையில் அதன் ஆயிரமாயிரம் சொற்களும்கூட எண்ணற்ற திரிபுகளைக் கொண்டிருக்கத்தான் செய்யும்.

இன்று தமிழ் மொழியில் பார்ப்பனர் என்னும் சொல்லை விடப் பிராமணர் என்னும் சொல்தான் மிகுதியாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை. சமஸே சொல்கிறார்: “நான் பார்ப்பனர் என்னும் சொல்லைத்தான் உபயோகித்தேன். ஆனால், சாருநிவேதிதா என்னும் எழுத்தாளர் என்னை அழைத்து அச்சொல்லை மாற்றிக்கொள்ளுங்கள் எனக் கேட்டார். உடனே நானும் மாற்றிக் கொண்டேன்” என. ஏனென்றால், ‘பார்ப்பனர் என்னும் சொல் இழிவு சொல்; சொல்லத்தகாத சொல். பிராமணர்கள் அப்படி அழைப்பதை தங்களை இழிவுபடுத்தும் செயலாகக் கருதுகிறார்கள்’ என்கிறார்.

உண்மையில் இது தவறான வாதம். அந்தணர் பார்ப்பனரானது குறித்தும் பின்னர் பிராமணர் ஆனது குறித்ததுமான வரலாறு அறியாதவர்கள் மட்டுமே இப்படிப் பேசமுடியும்.

பிராமணர் என்று அழைப்பதும் பார்ப்பனர் என்று அழைப்பதும் அவரவர் விருப்பம். அதே நேரத்தில் பார்ப்பனர்கள் என அழைத்தால் அவர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்பதெல்லாம் பொய்மையில்தான் சேரும். எனக்கு நன்கு அறிமுகமான, சமீப காலங்களில் பிரபலமான ஒரு எழுத்தாள‌ர் இருக்கிறார். அவரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேச்சுவாக்கில் ‘பிராமணரா பார்ப்பனரா’ என்று விவாதிக்கத்தொடங்கினேன். அவர் பிராமணர் என்று அழைப்பதுதான் சரி என்று வாதித்தார். அப்படியும் அவர் ஒன்றும் வரலாறு அறியாதவர் அல்ல. பழைய வரலாறுகள்தான் அவர் எழுதும் நாவல்களின் மையமே.

“பிராமணர்களைப் பார்ப்பனர்கள் என அழைப்பது யார் என்று பார்த்தால் அவர்கள் பழமையான பெரியார்வாதிகளாக இருப்பார்கள். பழமையான கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களாக இருப்பார்கள். அசல் நாத்திகர்களும் இருப்பார்கள்.”

பார்ப்பனர்கள் என அழைப்பது பிடித்திருந்தும் பிராமணர்கள் என்றே அழைக்கும் தொகையினர் பலர். அதில்தான் நமது எழுத்தாள நண்பரும் வருவார்; சமஸ் போன்றவர்களும் வருவார்கள்.

பார்ப்பனர் என்பது கெட்ட வார்த்தை கிடையாது; அந்தணர், பார்ப்பனர் என்பன தூய தமிழ்ச் சொற்கள். சோ இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புகூட, பார்ப்பனர் என்று சொல்லப்படுவதற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். ‘துக்ளக்’ இதழில்தான் அப்படி எழுதியிருந்தார். திராவிட இயக்கத்தைச் சார்ந்திருக்கும் ஏராளமான பார்ப்பன சமூக அறிஞர்களும்கூட, பார்ப்பனர் என்னும் வார்த்தையை உபயோகித்திருக்கிறார்கள். இன்னமும் உபயோகிக்கிறார்கள்.

தமிழில் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெரிய வரலாறே உண்டு. சங்க இலக்கியத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும் பல சொற்கள் இன்று தமிழில் வழக்கத்தில் இல்லை. தூய தமிழில், சங்க தமிழில் உபயோகப்படுத்தப்பட்ட பல வார்த்தைகள் இன்று வழக்கொழிந்தமையால் அவ்வார்த்தைகள் அனைத்தும் இழிவானவை என அர்த்தம் கிடையாது. மொழி வரலாற்றில் எந்த ஒரு சொல்லும் எப்படி இழிவான சொல்லாக மாறமுடியும்? வேறு எந்த சமூகத்தை விடவும் இந்த தமிழ்ச் சமூகம் மட்டுமே தன்னுடைய இந்த தொடர்ச்சியான வாழ்வியலில் ஏராளமான முரண்களைச் சுமந்து வந்திருக்கிறது. மொழியாகட்டும், பண்பாடாகட்டும், வாழ்வியல் நெறிகளாகட்டும் – தமிழ்ச் சமுதாயம் கடந்து வந்திருக்கும் பாதைகளும் கூட கரடுமுரடானதாகவே இருந்து வந்திருக்கின்றன. இப்பாதையில் பல புதிர்களும் இருக்கும். அதை விடுவிக்கத் தொடங்கி முயற்சி செய்வோமானால் ஏராளமான உண்மைகளைக் கண்டுணரமுடியும்.

சங்ககாலத் தமிழ் மக்களின் நிலவியல் வரையறை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன‌. தமிழ்மக்களின் வாழ்க்கை முறைகளில் அகத்திணை ஏழும், புறத்திணை ஏழும் அடங்கும். இந்த 14 திணை வகைகளுமே மேல் கண்ட நிலவரையறைகளுக்கு உட்பட்டது. நாம் அறியாதது ஒன்றே ஒன்றுதான். தமிழர்களின் எந்த நிலவரையறைகளுக்குள்ளும் வராத, தமிழ் மக்களின் அகத்திணை, புறத்திணை மரபுகளுக்குள்ளும் ஒட்டாத, இவற்றுக்கெல்லாம் வெளியே தமிழ்ச் சமூகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தணர்கள் எப்படி காலப்போக்கில் தமிழ்ச் சமுதாயத்தில் உயரிய இடத்தை அடையமுடிந்தது?

அகத்திணையிலும் இல்லாத, புறத்திணையிலும் இடம்பெறாத இந்த அந்தணர் எப்படி தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுத்தளத்தைக் கைப்பற்ற முடிந்தது? காலப்போக்கில் சமுதாயத்தின் உயர்நிலையை நோக்கி நகர முடிந்தது? இப்புதிருக்கான விடை தொல்காப்பியத்தில் இருக்கிறது. தொல்காப்பியத்தின் அகத்திணையியலில் அல்ல, புறத்திணையியலிலும் அல்ல, மாறாக இறுதிப் பகுதியான மரபியலில் இதற்கான விடை கிடைக்கிறது. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட, அதாவது பார்ப்பனியம் தமிழகத்தின் அனைத்துத் தளங்களிலும் கோலோச்சத் தொடங்கிய அக்கால கட்டத்தில் இளம்பூரணர் உள்ளிட்ட தொல்காப்பிய ஆசிரியர்கள் பலரும் மேலோர், உயர்ந்தோர் என வரும் இடங்களிலெல்லாம் வருண அமைப்பு பற்றியே பேசுகின்றனர்.

மரபியல்தான் இந்த வருண படிநிலைகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. தொல்காப்பியத்திலேயே பேசப்படும் வருண பகுப்பாய்வு முறைக்கு இப்படித்தான் காலப்போக்கில் அறிஞர் குழாமின் ஒப்புதலும் கிடைக்கப்பெறுகிறது. இப்படித்தான் தமிழ்ச் சிந்தனை மரபில் வருணாசிரமம் உட்செலுத்தப்பட்டு நன்கு செரிக்க வைக்கப்படுகிறது. பின்னர் வந்த சோழர், பல்லவர் அரசுகள் இந்து சமய எழுச்சி அரசுகளாக உருமாற்றம் செய்யப்பட்டு பார்ப்பனர்களின் புனிதமும் வருணாசிரமத்தின் தூண்களும் நிலைநிறுத்தப்படுகின்றன.

சங்ககாலத் தமிழகத்தில் குறுநில அரசுகளின் நிர்வாகமும் எல்லைகளும் எப்போதும் குழப்பத்திலேயே நிலவிவந்ததை நம்மால் அவதானிக்க முடிகிறது. அப்படிப்பட்ட சூழலில்தான் தமிழ் நிலத்தின் நால்வகை நிலப் பாகுபாடுகளுக்குள்ளும் அடங்காத, எத்திணை வகையினுள்ளும் அடங்கிடாத, தமிழ் நிலத்தில் கால் வைத்து ஊன்றிக் கொண்டிருந்த அந்தணர்கள், நிலவிய சூழலை பயன்படுத்தி ஒரு உயரிய நிலையை நோக்கி நகரத் தொடங்கினர் அல்லது அதைத் தங்களுக்காக மட்டும் கட்டமைத்துக் கொண்டனர்.

பிராமணர்கள், அந்தணர்கள் என்று யாரை அழைப்பது என்பது குறித்து பண்டிதர் அயோத்திதாசர் கூறுகிறார்: “பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்னும் மூன்றையும் ஒழித்து இந்திரர்களாய் சருவவுயிர்களை உந்தன் உயிர்போல் ஆதரிக்கும் தன்மகுணமாம் சாந்தம் நிறைந்தவர்கள் எத்தேச, எப்பாஷை, எச்சாதி, எச்சமயத்தார்களாயிருப்பினும் பௌத்த தன்மகாலத்தில் அந்தணர்களென்றும், பிராமணர்களென்றும் அழைத்து வந்தார்கள்”. அயோத்திதாசர் வரையறைப்படி பார்த்தால் இவ்விரு சொற்களையும் சொற்களஞ்சியத்திலிருந்தே எடுத்துவிடவேண்டியது வரும்.

அந்தணர், பார்ப்பனர் என்னும் இவ்விரு சொற்கள் மட்டுமே சங்ககாலத்தில், தமிழ்ச் சிந்தனை மரபில் உலவிய சொற்கள். வைதீக, புராணீக மரபுகள் செல்வாக்குப் பெறத் தொடங்கிய கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான், அதாவது பல்லவர் காலத்திற்குப் பிறகுதான் பிரம்மனின் தலையிலிருந்து பிறந்ததாகச் சொல்லப்படும் பிராமணர்களின் புராணீகங்கள் உருவாகின்றன. இந்தியாவின் வடபகுதியில் குப்தர்களின் ஆட்சியில் வைதீகம் செல்வாக்குப் பெற்று சமண, பௌத்த சமயங்கள் விரட்டப்பட்டதும் இந்தக் காலம்தான்.

பிராமணச் சொல் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது என்பதை நாம் ஆராயப் புகுவோமானால் வைதீகத்தின் செல்வாக்கு தமிழ்ச் சிந்தனை மரபில் எப்படி படிப்படியாகப் புகுத்தப்பட்டது என்பதையும் ஆராய வேண்டிவரும். அயோத்திதாசர் சிந்தனையின்படி எல்லா ஆசைகளையும் துறந்த மேலோர், உயர்ந்தோர் மட்டுமே அந்தணர்களாகக் கருதப்பட்ட காலம் போய், வேள்வியில் தங்களைக் கரைத்துக் கொண்ட, வேறு எந்த உழைப்பிலும் தங்களின் கவனம் செலுத்தாத ஆரியப் பெருமக்கள் எப்படி பார்ப்பனர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் சங்கத்தமிழ் வழி நாம் நிறுவலாம்.

தமிழ் ஆரியர் பண்பாட்டுக் கலப்பிற்குப் பின்னரான சூழலில் எழுதப்பட்டுள்ள பல பாடல்களை சங்க இலக்கியத்தில் காணலாம். இக்காலத்தைப் போல அக்காலத்திலும்கூட ஆரியப் பண்பாட்டையும் பார்ப்பனர்களையும் உயர்த்திப் பிடித்த பெரும்புலவர்கள் இருந்திருக்கிறார்கள். அதே சமயம் ஆரியப் பண்பாட்டை எதிர்த்தும், தமிழ்ச் சிந்தனை மரபைத் தூக்கிப்பிடித்தும் பாடல்கள் பாடிய புலவர்களும் சங்ககாலத்தில் இருந்திருக்கிறார்கள்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய பாடல் இது.

ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின் ‘ என
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின்,
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ, வாழிய, குடுமி – தம் கோச்
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! (புறம் 9)

பழந்தமிழர்கள் பசுக் கூட்டத்தையும் பார்ப்பனரையும் பெண்டிரையும் போற்றியதாக இப்பாடல் உணர்த்துகிறது.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர்கிழார் பாடிய பாடல் இது:

ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள ‘ என,
‘ நிலம் புடை பெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் ‘ என,
அறம் பாடின்றே ……(புறம் 34)

பசுவின் பால்மடியை அறுத்து தீவினை புரிபவர்களுக்கும், மகளிர் கருவைச் சிதைத்தவர்களுக்கும், பார்ப்பனருக்கு தீமை புரிந்தவர்களுக்கும் அவரவர் தீவினையைப் போக்க வழிகள் உள்ளன. ஆனால், ஒருவன் செய்த நன்றியை சிதைத்தவர்க்குத் தீவினையிலிருந்து உய்வே இல்லை.

இவ்விரு பாடல்களையும் நாம் ஒப்புநோக்க நாம் அறிவது என்னவென்றால், பார்ப்பனர் என்னும் புனிதம் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அக்காலத்திலேயே, பார்ப்பனர்களின் மீது ஏற்றப்பட்டிருந்த புனிதத்துக்கும் மேலாக ஒருவன் செய்த நன்றியை நம் தமிழ்ச் சிந்தனை மரபு உயர்வாகக் கருதியிருக்கிறது. அப்படியிருக்க பார்ப்பனர் என்னும் சொல்லே கெட்ட சொல்லாகக் கட்டமைக்கப்பட்டு வரும் இக்காலத்தையும் நோக்கும்போது தமிழ்ச் சிந்தனை மரபின் வீழ்ச்சியைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

செ. சண்முக சுந்தரம்” <c.shanmughasundaram@gmail.com>

Amrutha

Related post