கல்யாண்ஜி: பார்த்தவன், பார்த்தல், பார்த்தலுக்குப் பிறகு

 கல்யாண்ஜி: பார்த்தவன், பார்த்தல், பார்த்தலுக்குப் பிறகு

ஷங்கர்ராமசுப்ரமணியன்

 

ந்நியத்தன்மையும், ஆனால் வசீகரமும் கொண்ட பெயராக, எனது கல்லூரி இளங்கலை கணிதம் முதல் ஆண்டில், தமிழ் பாடம் வழியாக அறிமுகமானவர் கல்யாண்ஜி. நாம் பெரும்பாலும் சாமானியம் என்று எண்ணியோ, அனிச்சையாகவோ, பழக்கமாகவோ கவனிக்காமலோ, ரசிக்காமலோ, பாராமல் கடக்கும் காட்சிகளை, நிகழ்வுகளை, சின்ன அழகுகளை, சிறிய நுட்பங்களை, ஒரு ஓவியனின் நுட்பத்தோடு பார்ப்பதற்கும் அவதானிப்பதற்குமான விழிப்பையும் கல்வியையும் அளிப்பவராக முதல் கவிதையிலேயே எனக்கு அறிமுகமானார். அந்தக் கவிதையின் தலைப்பே ‘வாழ்க்கை’. மிக எளிய கவனிப்புகள் தான்; கவனிப்புகளை அடுக்கிக்கொண்டு போய், ‘என் கக்கத்துக் குடையைப் போல பெரிதாகக் கிழிந்து போச்சோ அவன் வாழ்க்கை’ என்று சொல்லும் போது, அதன் தலைப்பான ‘வாழ்க்கை’யும் வாசகனுக்குள் சேர்ந்து ஒட்டுமொத்த துக்கமாகக் கவிழ்ந்துவிடுவதைத் திரும்ப திரும்ப அந்தப் பிராயத்தில் படித்து உணர்ந்திருக்கிறேன்.

வாழ்க்கை

இறக்கை சிலுப்பும் காக்கையை
எச்சில் இலையைத் தின்றபடி
யோசனை செய்யும் பசுமாட்டை
நனைந்த குரலில் பூ விற்று
நடந்து போகும் சிறு பெண்ணை
ஓட்டல் புகையை ரோட்டின்மேல்
பெட்ரோல் சிதறிய கோலத்தை
பாராமல் ஏன் அவன் மட்டும்
பரிசு சீட்டை விலை சொல்லிக்
கூவுகின்றான்? என் கக்கத்துக்
குடையைப் போல பெரிதாகக்
கிழிந்து போச்சோ அவன் வாழ்க்கை

பார்த்தல் மூலம் பார்த்தவனைக் கடக்க முயல்கிறோம். பார்த்தல் மூலம் பார்த்தவன் அபூர்வமாக இல்லாமல் போகிறான். சில சமயங்களில் பார்த்தலுக்குப் பிறகும் பார்த்தவன் தன் உரைப்பின் வழியாக எஞ்சுகிறான். பல வேளைகளில் பார்த்தலையே பிரசாரமாக்கி, பார்த்தவன் தன்னைப் பார் தன்னைப் பார் என்று சுயபிம்பத்தின் நிச்சயத்தில் நிகழ்ச்சி முழுவதும் நீங்காமல் படர்ந்து நிற்கிறான். கல்யாண்ஜி என்ற கவிஞன் தொடர்ந்து வாசகனுக்குக் கொடுக்கும் அனுபவங்கள் இவை.

 

Cyclamens என்ற பூச்செடியின் கருப்பு வெள்ளைப் புகைப்பட அட்டையுடன், அக்காலத்திய புத்தகங்களின் அச்சு நேர்த்திக்கு மேம்பட்ட ஒரு தரத்தில், ‘கல்யாண்ஜி கவிதைகள்’ என்ற பெயரில் தாரணி பதிப்பகம் வெளியிட்டிருந்த தொகுப்பை, லக்ஷ்மி மணிவண்ணன் எனக்கு அவர் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த போது எடுத்துக் கொடுத்தார்.

காட்சிகள், ஓவியங்களின் ஒரு பிரமாண்டமான ஊர்வலத்தை, எனக்குப் பரிச்சயமான திருநெல்வேலி ஊரின் பண்பாட்டுச் சாயலோடு இந்தக் கவிதைகளில் கல்யாண்ஜி நிகழ்த்தியிருந்தார். நெல்லையப்பர் கோயில் யானையை, தேரை, கோயில் வாசல் கடையில் பரத்தியிருக்கும் வண்ண வண்ணமான குங்குமத் தூளை கவனிப்பதற்கும் அவதானிப்பதற்குமான ஒரு போதனை முறை கல்யாண்ஜி மற்றும் வண்ணதாசனுடைய படைப்புகள்.

‘கல்யாண்ஜி கவிதைகள்’ தொகுப்பில், நான் இன்றுவரை நினைவில் வைத்திருக்கும் கவிதைகள் இரண்டு. ஆத்மாநாமின் ‘நன்றி நவிலல்’ கவிதை போலவே. ‘என்னை இத்துடனாவது விட்டதற்கு நன்றி’ என்ற அவரது முடிப்பை மறக்கவே முடியாதது போன்ற இரண்டு கவிதைகள்.

எல்லாம்
அடைய முடியும் தூரத்தில்
இடையில்
தடையாய்
எச்சில் பருக்கைகள்

எழுத்தும் இலக்கியமும் லட்சியமாகத் தெரிந்த எனக்கு, அன்றாட வாழ்வும் அதில் என்னைப் பொருத்திக்கொள்வதும் சிரமமாக மிக இளம்வயதிலேயே தொடங்கியிருந்த நாட்களில் இருந்து சமீபம் வரை, இந்த வரிகள் திரும்பத் திரும்ப  மேலெழுந்து கொண்டே இருப்பவை. நான் அதை சோற்றுப் பருக்கைகள் என்றே நினைவில் வைத்திருக்கிறேன். அந்தப் பருக்கைகளுக்கும் நமது லட்சியத்துக்கும் இடையில்தான் எத்தனை பெரிய பள்ளத்தாக்கும் மௌனமும்.

அந்தப் பிராயத்துக்கேயுரிய, இணைவிழைவு, பாலுறவுக்கான ஏக்கம், முன்னிலை ஒன்று அற்ற இயலாத காமத்தின் வலியைத் தேக்கிவைத்திருக்கும் இந்தக் கவிதையையும் என்னோடு நான் அடையாளம் கண்டிருக்கிறேன்.

முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை.

 

தாமிரபரணியை மையமாகக் கொண்டு தமிழ் நவீன இலக்கியத்தில் சாதனை படைத்த வண்ணதாசன், விக்ரமாதித்யன், வண்ணநிலவன், கலாப்ரியா நால்வரில் வயதிலும் எழுத்தனுபவத்திலும் மூத்தவர் கல்யாண்ஜி என்ற வண்ணதாசன். தமிழ் கவிதையில் தனித்துவமான பங்களிப்பை நிகழ்த்திய கலாப்ரியா, விக்ரமாதித்யனுக்கும், சில சிறந்த கவிதைகளை எழுதியிருக்கும் வண்ணநிலவனுக்கும், அவர்கள் கவிதைக்கான வெளிப்பாட்டுக்கு மூல உருவையும் மரபையும் அளித்தவரும் வண்ணதாசன் தான். அவர்களது கவிதைக்குத் தாய்க்கோழி வண்ணதாசன் என்ற அவதானம் எனக்கு இருக்கிறது. சொல்முறையில் வண்ணநிலவனின் கவிதைகளிலும் கலாப்ரியாவின் ஆரம்பக்கட்ட கவிதைகளிலும் விக்ரமாதித்யனின் கவிதைகளிலும் மூலவராக கல்யாண்ஜி பங்களித்திருக்கிறார்.

கலாப்ரியாவின் சிறந்த கவிதையான ‘பிற்பகல்’ கவிதைக்கும், வண்ணதாசனின் ‘கைதவறிக் கீழே விழுந்த கடலை எல்லாம் சாமிக்கு’ என்று தொடங்கும் கவிதைக்கும் ஒற்றுமை உண்டு. கலாப்ரியாவோ ‘பாண்டி விளையாட்டின் முதல் உப்பை நான் கடவுளுக்குக் கொடுத்தது கிடையாது’ என்று பிற்பகல் கவிதையைத் தொடங்குகிறார்.

எனது கல்லூரிப் பருவத்தில் கல்யாண்ஜி கவிதைகளும் அவரது ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ சிறுகதைத் தொகுதியும் என்னில் மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. படைப்பையும் தாண்டி அதை எழுதிய ஆளுமை மேலும் வசீகரத்தையும் ஏக்கத்தையும் சில எழுத்தாளர்களாலேயே உருவாக்க முடியும். வாசிக்கத் தொடங்கியபோது பாலகுமாரனிடம் ஏற்பட்ட மயக்கம் போன்று, கல்யாண்ஜி என்ற வண்ணதாசனிடமும், பிரபஞ்சனிடமும் எனக்கு குறுகிய காலம் இருந்தது.

வண்ணதாசன், கலாப்ரியா, வண்ணநிலவன், விக்ரமாதித்யன் உடன் ஷங்கர்ராமசுப்ரமணியன்

ரு தேர்ந்த நுட்பமான சிறுகதையாளராக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்யாண்ஜிக்கு, கவிதைக் கலை, கவிதைத் தருணங்கள் சார்ந்த தீர்க்கமும் ரசனையும் உண்டு. அவர் தொடர்ந்து கவிதைகளை எழுதினாலும், சிறுகதைக் கலையிலிருந்த கவனத்தையும் நுட்பத்தையும் விசிறி, பரத்தி சிதறடிப்பவராகவே கவிதையில் தொடர்ந்து இருக்கிறார்.

சுயபிம்பத்தின் சுமை, சுயபிம்பத்தின் சிறைக்குள் மிக ஆரம்பக்காலத்திலேயே அகப்பட்டுக் கொண்டது, மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. தன் பிம்பத்தின் சாயல் கொண்டு அவர் கவிதையில் சொல்லிய உரைப்புகள் எல்லாம் இன்றும் வெகுஜன வாசகர்கள் இணையத்தில் வெவ்வேறு வடிவங்களில் அதிகமாகப் பகிரும் வாழ்த்து அட்டைப் பொன்மொழிகளாக ஆகியுள்ளன. முகநூல், இணையம் போன்ற தொடர்பு ஊடகம் வண்ணதாசனுக்கு அவரது சிறுவயதிலேயே கிடைத்திருந்தால், அவர் கவிதை என்ற வடிவத்துக்குள் இத்தனை பொன்மொழிகளையும் கடிதங்களையும் புதுக்கி எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

நான் வித்தியாசமானவன், நான் மென்மையானவன், நான் அன்பானவன், நான் தனியானவன், நான் அழகை ரசிப்பவன், நான் அழகின் ஆராதகன், நான் சுமை தாங்கி என ஏராளமான அறிவிப்புகளை அவர் செய்துகொண்டே இருக்கிறார்.

ரகசியங்கள், காதல் கடிதங்கள், புலம்பல்கள், கிசுகிசுப்புகள், அலம்பல், ஆர்ப்பரிப்பு, சுயபடாடோபம், ஏவல், சாடை, பிரதாபம், டைரிக் குறிப்பு எல்லாவற்றையும் ஏற்கும் வடிவம்தான் கவிதை – ஆனால் அவை வெறும் பாவனைகளாகவே ஏற்கப்படும்.

‘வாழ்க்கை தொடர்ந்து இப்படியேதான் இருந்திருக்கிறது இந்த வயதுவரை. வாழ்க்கையின் எந்தப் பல் சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டிநுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கறை சார்ந்திருக்கிற உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும்’ என்ற கல்யாண்ஜி கவிதைகள் புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு ஒரு அறிவிக்கையைப் போலத்தான் இப்போது தொனிக்கிறது. இப்படி ஒருவர் சொல்வதற்கு வாழ்க்கை அனுமதிக்கிறதா, அல்லது அப்படி அவர் சொல்வதற்கு விரும்புகிறாரா? என்ற கேள்வி இப்போது ஏற்படுகிறது. அப்போது இவன்தான் கவிஞன் என்ற ஆர்ப்பரிப்பை ஏற்படுத்திய வரிகள் இவை. அந்தக் கவிதைத் தொகுதியின் முதல் கவிதையே ஒரு கோஷம் போலத்தான் இருக்கிறது இப்போது.

கோஷம் எதுவும் போடாமல்
கோஷத்திற்கு எதிர்
கோஷம் தேடாமல்
நடைபாதையில் நின்று
ஊர்வலம் பார்ப்பது
சுவடற்றது
சரித்தரிம் சொல்லும்
இயக்க விதிகளுக்கு
இணங்காதது
காலம் திணிக்கும்
பொறுப்புகளைப்
புறக்கணிப்பது
வீட்டு வேலி மூங்கிலில்
மத்தியானம் உட்கார்ந்திருக்கும்
மீன்கொத்தி போல
இடம் பொருள் ஏவல் அற்றது.
வாஸ்தவம்
எல்லாவற்றுடன்
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
என் வரி உண்மையானது
பாசாங்கற்றது.

கல்யாண்ஜி எதையும் வலியுறுத்தாமல், எதையும் பிரசாரம் செய்யாமல், எதையும் வன்மையாகத் திணிக்காமல் பாசாங்கில்லாமல், அனுபவத்தை, தனது செய்தியை நிகழ்த்தக் கூடிய உத்தேசம் கொண்டவரென்பதை இதுபோன்ற கவிதைகளின் வழியாகத் தெரிவிக்கிறார். ஆனால், அவரது இத்தனை ஆண்டுக்கால படைப்பியக்கத்தில் அவரது வலியுறுத்தல், பிரசாரம், சார்பு, வன்மை எல்லாமே அவரது உத்தேசத்தைத் தாண்டி அவரது மொழியில் படர்ந்திருக்கத்தான் செய்கிறது. மென்மையைக் கூட அழுத்தும்போது, குழந்தையைக் கூட அழுத்தும்போது….நிகழ்வது போல.

கல்யாண்ஜி கவிதைகள் தொகுதியில் இடம்பெற்ற புகழ்பெற்ற கவிதை ஒன்றுண்டு.

கோரைப் பல்லிலிருந்து
பீரிட்ட உறுமல்
கழுத்துப் பட்டியை மீறி
முன்சென்றது

தொய்வற்ற சங்கிலியின்
விறைத்த கண்ணிகள்
வளர்ப்பு மனிதனின்
வியர்த்த உள்ளங்கையை
இழுத்தன.

நாய்கள் மேல் ஒரு அபிமானம்
எனக்கும் உண்டு

ஆனாலும்
ஒன்றின் மீதான அபிமானம்
ஒருநாளும் என்னை
இழுத்துச் செல்லாது தெருவெங்கும்

ஒன்றின் மீதான அபிமானம் ஒருநாளும் என்னை இழுத்துச் செல்லாது என்று சொல்கிறான் கவிதை சொல்லி. ஆனால், சுயபிம்பத்தின் மீதான அதீத அபிமானம், கல்யாண்ஜியை கவிதை இருக்கும் தெருவைத் தாண்டி எத்தனையோ தெருக்களுக்கு இழுத்துத்தான் சென்றுள்ளது காலத்தில்.

ஒன்றைப் பார்க்கும் போது அந்த அனுபவத்தில் பேதம் இல்லை. இது வேண்டாம், இதுதான் வேண்டுமெனும்போது, இதுவே மேல், இது அல்ல என்னும்போதும் பேதம் தோன்றிவிடுகிறது. அங்கே அன்பும் அழகும் மென்மையும் கூட இம்சை ஆகிவிடுகிறது.

வேண்டும் வேண்டாம் என்ற பேதமில்லாத அழியாத காட்சிகளையும் சமீபம் வரை கல்யாண்ஜி படைத்திருக்கிறார். என்னைக் கவர்ந்த அவரது சமீபத்திய கவிதை.

சீலைக்காரி அம்மனின்
காலகாலக் களிம்பு ஏறிய
வெண்கலமணி விளிம்பில்
அசையாது அமர்ந்திருந்தது தட்டான்.
யாருமற்ற வெளியெங்கும்
அதிர்ந்து கொண்டிருந்தது
அரசிலைகளின் ஆதிக் குலவை.
காதுயர்த்தித் திரும்பிப் பார்த்துவிட்டு
தன் வழி நடக்கிறது ஒரு
காமதேனு.

ஷங்கர்ராமசுப்ரமணியன் <shankarashankara@gmail.com>

Amrutha

Related post