திருமணம் மற்றும் மணவிலக்கு: பெண்ணை கட்டுப்படுத்துவது எது?

சாரா நந்தினி
சமீபத்தில் வெளியான ‘ஷ்யாம் சிங்க ராய்’ என்ற திரைப்படத்தில் ‘women is not a commodity’ என்ற முழக்கம் இடம்பெற்றிருந்தது. பெண்ணைப் பண்டமாகப் பார்க்கும் திரைத்துறையில், வணிக குப்பைகளுக்குப் பெயர் போன தெலுங்கு சினிமாவில் இத்தகையொரு முழக்கம் இடம்பெற்றது முக்கியத்துவம் வாய்ந்தது. மட்டுமல்லாது, இந்திய சமூகம் பிற்போக்குத்தனமான ஆணாதிக்க குணங்களை வெளிப்படுத்தும் இந்தத் தருணத்தில் ‘பெண் ஒரு பண்டமல்ல’ என்கிற முழக்கம், பாலின சமத்துவம் என்ற நீண்ட நெடிய போராட்டக்களத்தின் தொடக்கப் புள்ளியாகிறது.
தொழிற்நுட்பத்தின் அத்தனை வசதிகளை அனுபவித்தாலும் இந்திய சமூகம் நிலவுடைமை ஆணாதிக்க சமூகமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் ஒருவர் தனது 18 ஆண்டுக் கால திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாகவும் இது தானும் தனது மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் அறிவித்தார். அவர் திருமணம் செய்திருப்பது மிகப் பெரும் நடிகரின் மகளை. சினிமா உலகத்தில் மணவிலக்கு இயல்பான ஒன்று. பெண் நடிகர்கள் மணவிலக்கு பெரும்போது, ‘உச்சு’ கொட்டி வரவேற்கும் சராசரி ரசிகர் மனம், ஒரு நடிகரின் மணவிலக்கு அறிவிப்பைக் கண்டு பதற்றமடைகிறது. பொதுவான நுகர்வு பண்டமாகப் பார்க்கப்படும் பெண் நடிகருக்குத் திருமணமாகி நடிக்கும்போது, ரசிக மனம் ஏற்க மறுக்கிறது. அதே நடிகர் மணவிலக்கு பெரும்போது வரவேற்கப்படுகிறது. ஆண் நடிகர்கள் திருமண உறவைக் கடந்த வேறு உறவுகளில் இருக்கும்போது ரசிக மனம் இயல்பாகவே அதைக் கடக்கிறது. அதை ஆணின் பெருமைக்குரிய விஷயமாகவும் ரசிக மனம் பேசுகிறது. பெண் நடிகர்களை ‘பொது மகளிராக’ப் பார்க்கும் ரசிக மனம், ஆண் நடிகர்களை இந்திய சமூகத்தின் ஆதர்ஷமான மாதிரி குடும்பத் தலைவராகப் பார்க்கிறது. இந்தக் குடும்பத் தலைவர் எத்தனை பெண்களுடனும் உறவாடலாம்; அவர் குற்றமற்றவர். புரையோடிப்போன ஆணாதிக்க உளவியலின் எடுத்துக்காட்டுகள் இவை. இத்தகைய சமூகச்சூழலில் மிகப்பெரும் நடிகர்கள் மணவிலக்கு அறிவிப்பது அரிதான ஒன்றாகவே உள்ளது.
பெண்ணை பண்டமாகக் கருதி, அவரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்திக்கொள்ளும் சமூகச் சூழலில், ஆண் ஒருவர் மணவிலக்கு கோரினாலும்கூட அது முற்போக்கான நடவடிக்கையே. சமத்துவத்தை அடைவதில் குறை உள்ளது என்றபோது, ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் ஒரு திருமண உறவில், இருவரின் இணைவு என்பதே முதன்மையானது. எந்தக் காரணமாக இருந்தாலும் பிணக்கு வந்து, பிரிவதென்று முடிவானால், அதிக இழப்புகளுக்கு உள்ளாகும் பெண்ணுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பது சட்டம் வழங்கியிருக்கும் பாதுகாப்பு. ஆனால், மணவிலக்கை மிகப்பெரும் மானக்கேடாகப் பார்க்கும் இந்திய சமூகம், இணைந்து வாழ முடியாது என முடிவெடுத்த இருவரை பல்வேறு காரணங்களை கூறி, இணைந்து வாழ வற்புறுத்துகிறது.
“குழந்தைகளின் கதி என்னாகும்?”
“ஆணின் பாதுகாப்பு இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியுமா?”
“குடும்ப மானம் போகும்!”
“ஆண்கள் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள்!”
“நல்ல மனைவியாக இருந்தால் போதும், அட்ஜஸ்ட் செய்து வாழ்…”
இப்படி எண்ணற்ற காரணங்கள் கூறி, தொடர்புடைய இருவரையும் சமூகம் இணைந்து வாழ வற்புறுத்தும். மேற்கண்ட நடிகரின் மணவிலக்கு அறிவிப்பால் பதற்றமடைந்த, அந்தப் பெண்ணின் தந்தையான மிகப் பெரும் நடிகரின் ரசிகர்கள், சமூக ஊடகங்களில் ‘தன் தலைவரின் குடும்ப மானம் போய்விட்டதாக’ அங்கலாய்க்கிறார்கள்; அவருடைய மகளையும் நடிகரையும் சாபமிடுகின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த பலர், பெரிய நடிகரின் மனச்சுமையைக் குறைக்க, மணவிலக்கு அறிவித்த இருவரையும் முடிவை பரிசீலிக்கும்படி கோரிக்கை வைக்கிறார்கள்; பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. இந்தக் காட்சிகள் நம் சமூகத்தில் அவ்வப்போது நமது அருகாமையிலும் நடப்பவைதான்.
மிகக் கொடூரமாக நடந்துகொள்ளும் ஒருவனுடன் வாழவே முடியாமல், தன் தாய்வீட்டைத் தேடி வரும் பெண்ணை இந்தச் சமூக எப்படி நடத்துகிறது? அவனுக்கு தண்டனைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக, அந்தப் பெண்ணிடம் மேலே பட்டியலிட்ட விஷயங்களைச் சொல்லிச் சொல்லி ஒரு குற்றவாளியுடன் வாழ்நாளெல்லாம் வாழ வற்புறுத்துகிறது.
குழந்தை பெண்ணாகப் பிறக்கும்போது, சுமையான பண்டமாகக் கருதும் சமூகம், அந்தப் பண்டத்தை ஏதோ ஒரு ஆணிடம் ஒப்படைத்துவிட நினைக்கிறது. அந்தப் பெண்ணின் திருமண தேர்வு, படிப்பு, பணி, தனிப்பட்ட வளர்ச்சி குறித்த விருப்பங்களை ஒருபோதும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதிக படிப்பறிவு உள்ளதாக கூறிக்கொள்ளும் மாநிலத்தில், ஆணவக் கொலைகள் அதிகரிப்பதும் பணிக்குச் செல்லும் பெண்களின் விகிதம் மிகக் குறைவாக இருப்பதும் இதையே உணர்த்துகின்றன. குடும்பத்தின் பொருளாதார நலன் கருதியும்கூட, ‘குடும்பத்தை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும்’ காரணம் காட்டி பெண்களை பணிக்கு அனுப்பாத ஆண்கள் நிரம்பிய சமூகம் இது. ஆணாதிக்க சமூகத்தின் அடக்குமுறைக்கான காரணங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. அதற்கு மூலமாக இருப்பது பெண்ணை பண்டமாகப் பார்க்கும் சமூக நிலையே.
ஃபிரெஞ்சு பெண்ணியவாதியான லூஸ் இரிகாரே (Luce Irigaray) எழுதிய ‘சந்தையில் பெண்கள்’ (Women on the Market) என்ற தலைப்பிலான கட்டுரை, மார்க்சிய அடிப்படையில், ஆண்களுக்கிடையே பெண் எப்படி பண்டமாகப் பரிமாறிக்கொள்ளப்படுகிறாள் என்பதை விவரிக்கிறது. அதில் அவர், ஒட்டுமொத்த சமூகமும் பெண்கள் இப்படி பரிமாறிக்கொள்ளப்படுவதை முன்னிறுத்துவதாகக் கூறுகிறார். ஒரு பெண்ணின் பரிமாற்ற மதிப்பு சமூகத்தால் தீர்மானிக்கப்படுகிறது, அவளுடைய பயன்பாட்டு மதிப்பு இயல்பான குணங்களால் மதிக்கப்படுகிறது என்பது இரிகாரேயின் வாதம். ஒரு பெண்ணின் சுயமானது அவளது பயன்பாடு மற்றும் பரிமாற்ற மதிப்புகளுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவள் பரிமாற்ற மதிப்பிற்கு மட்டுமே விரும்பப்படுகிறாள் என்கிற இரிகாரே, இந்த அமைப்பு மூன்று வகையான பெண்களை உருவாக்குகிறது எனப் பட்டியலிடுகிறார். முதலாவது தாய், பயன் மதிப்புள்ளவர்; கன்னி, பரிமாற்ற மதிப்புள்ளவர்; மற்றும் பாலியல் தொழிலாளி, பயன்பாடு மற்றும் பரிமாற்ற மதிப்பு இரண்டையும் உள்ளடக்கியவர்.
“ஒரு பெண் இரண்டு உடல்களாக பிரிக்கப்படுகிறாள்: அவளுடைய இயற்கை உடல் மற்றும் அவளது சமூக மதிப்புள்ள பரிமாறக்கூடிய உடல். பெண்கள் தங்கள் சொந்த உடலிலிருந்து அந்நியப்பட்டு, அதற்குப் பதிலாக ஆண்களின் கலாச்சார விழுமியங்களால் வடிவமைக்கப்பட்ட வடிவங்களாகவும் ஆணாதிக்க ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவும் ஆகின்றனர். பெண்களுக்குச் சொந்த மொழி இல்லை; அவர்கள் வெறுமனே கிளிகள் போல் ஆண் மொழியை பிரதிபலிக்கிறார்கள்” என்கிறார் இரிகாரே. தான் பட்ட துயரத்தைத் தனது மகளும் அனுபவிக்கும்போது, அதிலிருந்து வெளிவர உதவாமல் மேலும் மேலும் தன் மகள் துயரப்பட அந்தத் தாய் ஏன் விழைகிறாள்? அவள் ஆணாதிக்க ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் ஆண் மொழி பேசும் கிளிப்பிள்ளையாகவும் இருப்பதால் அது நிகழ்கிறது.
“ஆண்களுக்கிடையிலான பரிமாற்றங்களில் பெண்கள் பயன்படுத்தும் பொருள்களாகவும், மதிப்பை தாங்குபவர்களாகவும் மாறும்போதுதான் அவர்கள் மதிப்புமிக்கவர்களாக மாறுகிறார்கள்” என இரிகாரே 70களில் எழுதிய ஆய்வின் சாரத்தை, இப்போதும் நம் சமூகம் எடுத்துக்காட்டுகிறது. துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு, கணவனுடன் வாழும் பெண்ணுக்கு சிலை வைத்து வழிபடும் ஊர் இல்லையா இது?!
அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில்,விருப்பமில்லாத மனைவியைக் கட்டாய வல்லுறவு கொள்ளும் கணவனின் செயலை குற்றத்துக்குரியதாக அறிவிக்க வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கு விசாரணை பல விவாதங்களைக் கிளப்பியதோடு, ஆணாதிக்க இந்திய சமூகத்தின் கீழான முகத்தையும் வெளிப்படுத்தியது.
பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தியத் தண்டனை சட்டங்கள், இங்கிலாந்தின் குற்றவியல் சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டவை. 1736இல் மேத்யூ ஹேல் என்ற இங்கிலாந்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் எழுதிய ‘குற்றவியல் சட்டங்கள்’ நூலில் சொல்லப்பட்டதன் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டங்கள் வடிவம் கொண்டன. மேத்யூ ஹேலின் கூற்றுப்படி, ‘திருமண ஒப்பந்த அடிப்படையில், தனது சட்ட பூர்வ மனைவியை அவரது விருப்பமின்றி உறவு கொண்டால், கணவர் பாலியல் வல்லுறவு குற்றவாளி ஆகமாட்டார். மனைவி, தன் கணவனுக்குத் தன்னை இந்த வகையில் ஒப்புக்கொடுக்கப்பட்டவர். அதை அவர் திரும்பப் பெற முடியாது’.
இந்தியத் தண்டனை சட்டங்கள், இங்கிலாந்து சட்டங்களின் அடிப்படையில் இயற்றப்பட்டிருந்தாலும் காலப்போக்கில் அவை மாற்றம் கொள்ளவே இல்லை. ஆனால், இங்கிலாந்தில் இப்போது மனைவியின் விருப்பத்துக்கு இணங்காமல் உறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்பட்டு, தண்டனைக்குரியதாக மாற்றப்பட்டுள்ளது. காலனி ஆதிக்கத்தை விரட்டியடித்துவிட்டாலும் அது தந்த ஆணாதிக்கத்தைக் கடைப்பிடிப்பதில் நம் சமூகம் கூச்சப்படுவது இல்லை. மதங்கள், கலாச்சாரங்கள், நிலப்பரப்புகள் கடந்து ஆணாதிக்கம் உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரியானது. அளவுகள் மட்டும் வேறுபடலாம். இங்கிலாந்து சமூகம் சற்று முன்னேறியுள்ளதாக தன்னைக் காட்டிக்கொள்கிறது. இந்திய சமூகமோ தன்னை ஆகக் கீழான பிற்போக்கு சமூகம் எனக் காட்டிக்கொள்கிறது.
‘திருமண வல்லுறவுகள்’ குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒருவேளை சட்டமாக்கப்பட்டால் இந்திய ஆண்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி, ‘திருமணம் செய்ய மாட்டோம்’ என சமூக ஊடகங்களில் ஆண்கள் டிரெண்ட் செய்தார். 68 லட்சத்துக்குக்கும் அதிகமான ட்விட்கள் இந்த ஹேஷ் டேக்கின் கீழ் பதிவு செய்யப்பட்டதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. தன் இணையை, மனைவியை ‘பாலியல் பண்டமாகத்தான் பார்க்கிறோம்’ என அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களாகவும் இந்த ட்விட்களை நாம் பார்க்கலாம்.
திருமண வல்லுறவுகளைக் குற்றமாக்குவது உள்ளிட்ட சட்ட சீர்திருத்தங்கள் அவசியம் தேவை. எனினும், பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஏராளமான சட்டங்கள் இங்கே உள்ளன. ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்தான் பெரும் தொய்வு உள்ளது. இந்தச் சமூகம் நிலவுடைமை சமூகக் கூறுகளோடு நீடிப்பது தொய்வுக்கான காரணங்களில் முதன்மையானது. படிப்பு, பணி இவற்றின் அடிப்படையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் சூழல் உள்ளபோது, ஒரு ஆணை நம்பியிருக்கும் நிலை பெண்ணுக்கு இல்லை. திருமண வாழ்வில் துன்புறுத்தப்படும்போது, ஒத்துவாழ முடியாத நிலை வரும்போது அதிலிருந்து விலகுவதை சமூகம் இயல்பானதாகக் கடக்க வேண்டும். மணவிலக்குகள் குறைவாக உள்ளதால், சமூகத்தில் ஆண் – பெண் உறவுச் சிக்கல்கள் குறைவாக உள்ளன என அர்த்தமாகிவிடாது; எதார்த்தத்தில் அப்படி இல்லவும் இல்லை. மணவிலக்குகள் உறவுச் சிக்கல்களைக் குறைக்கும்; சமூகத்தை உற்பத்தி வளமிக்கதாக மாற்றும். திருமண வாழ்வில் பரஸ்பர ஒப்புதலுடனான உறவு என்பது பாலின சமத்தின் அளவுகோலாக மாறும். ஒட்டுமொத்தத்தில் பழமையான கருதுகோள்களைக் கைவிடுவது சமூகத்தை முன்னேற்றும்; நாகரிகமானதாக மாற்றும். இதை ஆண்களும் ஆண்மொழியில் பேசும் பெண்களும் சிந்திக்க வேண்டும்.