தமிழ்நாடும் பீகாரும்: கருணாநிதியும் லாலுவும் – கெளதம் ராஜ்

 தமிழ்நாடும் பீகாரும்: கருணாநிதியும் லாலுவும் – கெளதம் ராஜ்

மிழ்நாடும் பீகாரும் இன்றைக்கு சமூக பொருளாதார ரீதியாக முரண்பட்ட நிலையில் இருக்கும் மாநிலங்கள். ஆனால், அரசியல் ரீதியாக இவ்விரு மாநிலங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி என்பது இயக்கமாக 1916 தொடங்கி 1967இல் அரசியல் அதிகாரமாக நிலைபெறுகிறது. பீகாரில் விடுதலைக்கு பின்னான லோஹியா முன்னெடுத்த சோசியலிச கொள்கைகளால் உந்தப்பட்டு எமர்ஜென்சி காலகட்டத்தில் வலிமையடைந்து மண்டல் அமலுக்கு வந்த நேரத்தில் அரசியல் அதிகாரமாக நிறைவை எட்டியது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் முகமாக 70 ஆண்டுகளுக்கு மேலாக கலைஞர் விளங்கினார் என்றால் பீகாரில் லாலு பிரசாத் விளங்கினார். லோஹியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் லாலுவுக்கு முன்னோடிகளாக விளங்கினர். கலைஞருக்குப் பெரியாரும் அண்ணாவும் போல்.

இவர்கள் இருவருடைய வாழ்க்கைக்கு நடுவிலும் பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது. லாலு பிரசாத்தின் வாழ்க்கை வரலாறு நூலான ‘Gopalganj to Raisina Road’, ஏ.எஸ் பன்னீர்செல்வம் எழுதி ஆங்கிலத்தில் வெளியாகி பின்னர் தமிழில் சந்தியா நடராஜன் மொழிபெயர்த்திருக்கும் கலைஞர் வாழ்க்கை வரலாற்று (Karunanidhi A LIfe) ஆகிய இரு நூல்களையும் அடிப்படையாக வைத்து ஒரு ஒப்பியல் நூல் அறிமுகக் கட்டுரையாக இது அமைகிறது. ஒரு தன் வரலாறும், வேறொருவரால் எழுதப்படும் வாழ்க்கை வரலாறும் இக்கட்டுரையில் ஒப்பிடப்படுகிறது. இது சம்பவங்களின் ஒப்பீடு தானே ஒழிக்க நூல்களின் இலக்கண இலக்கிய ஒப்பீடல்ல.

கலைஞருக்கு நூற்றாண்டு விழா எடுக்கப்படும் தருணத்தில் லாலு பிரசாத் யாதவ் தனது 75ஆவது வயதை நிறைவு செய்திருக்கிறார். கலைஞரை விடக் கால் நூற்றாண்டு இளையவர் லாலு. பீகாரின் முற்போக்கு தேர்தல் அரசியலும் தமிழ்நாட்டை விடக் கால் நூற்றாண்டு இளையதுதான்.

விளிம்புநிலை மக்களை அதிகாரம் நோக்கியும் சுயமரியாதை நோக்கியும் நகர்த்திய முற்போக்கு இயக்கங்களின் பிரதிநிதிகள் கலைஞரும் லாலுவும். கொண்ட கொள்கையில் சமரசங்களுக்கு இடமில்லாமல் முடிந்த வரையில் அவ்வியக்கங்களின் பாதையையும் பயணத்தையும் தீர்மானிக்கும் சக்திகளாகத் தமிழ்நாட்டில் கலைஞரும் பீகாரில் லாலுவும் விளங்கினர். அடுத்த கட்ட அரசியல் தலைமையை வார்த்தெடுப்பதிலும் இவர்கள் இருவரின் செயல்பாடு திருப்திகரமானது. தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலினும் பீகாரில் தேஜேஷ்வியும் இந்திய ஒன்றிய அரசியலில் இன்றைக்கு முக்கிய சக்திகள். பாஜகவுக்கு கடும் எதிர்ப்பினை வழங்கும் ஜனநாயக சக்திகளாக இவர்கள் இருவரையும் சொல்லமுடியும். தமிழ்நாட்டிலும் பீகாரிலும், ஏன் இந்திய ஒன்றிய அளவிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிக அணுக்கமான கூட்டணி காட்சிகளாக இவ்விரு காட்சிகளையும் சொல்லலாம். ஊழல் புகார்கள் மூலம் இவ்விரு கட்சிகளையும் முடக்கி விடலாம் என்று நினைத்த காங்கிரஸ் கட்சியே இன்றைக்கு திமுகவையும் ஆர்.ஜே.டியையும் நம்பி இருப்பது அரசியல் நகை முரண்.

Karunanidhi - A.S. Panneerselvamபாஜக இன்றைக்குப் பெரிதும் அஞ்சும் இவ்விரு இயக்கங்களையும் கடந்த காலங்களில் தலைமையேற்று நடத்திய கலைஞர், லாலு ஆகியோரில் சிறு வயது அனுபவங்கள் உருக்கமானவை. உணவுக்கு, சுயமரியாதைக்கு, சுய அங்கீகாரத்திற்கு இவர்கள் இருவருமே ஏங்க வேண்டி இருந்தது. இவர்கள் சார்ந்திருந்த அரசியல் இயக்கங்கள் தான் இருவரது ஒரே நம்பிக்கையாக இருந்தது. அவ்வியக்கங்கள் மூலமே அரசியல் வெளியில் இவர்களது முகம் பரிட்சயப்பட்டது. பேச்சு, எழுத்து ஆகியவை இருவரது தனித் தன்மையாக இருந்தது. அரசியல் புலத்தில் கலைஞருக்கு மொழி அடையாளம் முதன்மையானதாக இருந்தது; லாலுவுக்கு அவர் பேசிய மொழியே சிறப்பு அதிகாரத்தை வழங்கியது. விளிம்பு நிலையினரின் முன்னேற்றம், இட ஒதுக்கீடு, மாநில சுயாட்சி, அரசியல் நிர்வாகம் ஆகிய புள்ளிகளில் இவர்கள் இருவரும் உடன்பட்டு இருந்தனர். சுயமரியாதையும் சமத்துவமும் சமுக நீதியும் மதச்சார்பின்மையும் இவர்கள் கொண்டிருந்த முக்கிய கொள்கைகளாக விளங்கியது. இதற்கான தொடர் வேட்கையே அரசியலில் கலைஞருக்கும் லாலுவுக்கும் நிரந்தர இடத்தை வழங்கியது.

சாதி ரீதியாக லாலுவை விடக் கலைஞர் வறியவர். மாநில அளவில் லாலு பிரசாத்தின் சமுதாய பின்புலம் அவருக்கான உந்தும் சக்தியாக இருந்தது. அவர் அந்த சாதியின் பிரதிநிதியாக மட்டுமே அறியப்படவில்லை என்றாலும் அவருக்கான வலிமையைத் தீர்மானித்ததில் ‘யாதவ்’ என்ற அடையாளமும் முக்கியமானதாக இருந்தது. பொருளாதார ரீதியில் அவர்கள் மிகப் பின்தங்கியே இருந்தார்கள். தமிழ்நாட்டில் ராமதாஸ் போன்றவர்கள் எட்ட தவறிய இடத்தை பீகாரில் லாலு எட்டி இருந்தார்.

lalu prasad yadav - Nalin Vermaகலைஞரின் சாதிய பின்புலம் இதற்கு நேர் மாறானது. எண்ணிக்கை பலம், அதிகார பலம் என்ற இரண்டுமற்ற ஒரு சாதியில் கலைஞர் பிறந்திருந்தார். அவரது சாதிய அடையாளம் ஒரு கட்டத்தில் அவர் சார்ந்திருந்த இயக்கத்தில் உள்ளவர்களுக்கிடையில்கூட வெறுப்பையும் புறக்கணிப்பையும் ஏற்படுத்தியது. திமுகவிலிருந்து அதிமுக பிளவுக்கும் அதைத் தொடர்ந்த சிறு சிறு கட்சிகளின் பிளவுகளுக்குப் பின்னாலும் கலைஞரின் சாதியும் ஒரு காரணமாக இருந்தது.

1990களுக்கு பின்னர் லாலு பிரசாத் சார்ந்திருந்த கட்சியும் பெரும் பிளவுக்கு உள்ளானது. ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ், நிதிஷ் குமார், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் விலகினர். ஒரு கட்டத்தில் லாலு புது கட்சி தொடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஜனதா தள் (JD) கட்சி உடைந்து ராஷ்ட்ரிய ஜனதா தள் (RJD) உருவானது. அதிகார போட்டியும் பதவி ஆசையும் பாஜக-காங்கிரஸ் ஏற்படுத்திய நெருக்கடியும் பீகாரில் கட்சி பிளவுக்குக் காரணமாக அமைந்தது.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் சூழல் பீகாரில் இருக்கவில்லை. மக்கள் எளிதாக மதவாதத்திற்கும் பிரிவினை அரசியலுக்கும் ஆட்படுபவர்களாக விளங்கினர். நிலவியல் தன்மையும் பொருளியல் சூழலும் அவர்களுக்கு மிகப் பெரிய குறைபாடாக இருந்தது. சந்தை, அதை நீட்டிக்கக் கடல் வணிகம், அதன் மூலம் ஏற்பட்ட சிந்தனை பரிமாற்றம், போர், அயல் நாட்டு உறவு, இலக்கிய மேம்பாடு, மொழி வளம் ஆகியவை தமிழ்நாட்டுக்கு ஒரு செழுமையான பண்டைய வரலாற்றினை ஏற்படுத்தி இருந்தது. மொழி என்பது தமிழ் அரசியல் வெளியின் துருவ நட்சத்திரமாக இருந்தது. பீகாரில் மன்னர்கள் வரலாறும் அவர்கள் நிகழ்த்திய போர்களின் வரலாறும் இந்து-முஸ்லீம் பிரிவினை வரலாறுமே எஞ்சி இருந்தது. ராமாயணம், மகாபாரதம் என்ற பிற்போக்கு இலக்கியங்களை அவர்கள் தூக்கிக் கொண்டாடினார். லாலு தனது நூலை ஒரு மகாபாரத மேற்கோளோடு தான் முடிக்கிறார். லாலுவின் இந்தி பின்னணியும் அவரை ஒன்றிய அமைச்சரவை வரை கொண்டுசேர்க்கும் முக்கிய புள்ளியாக அமைந்தது. தமிழ்நாட்டில் முற்போக்கு அரசியலின் நிலை இதற்கு நேரெதிராக இருந்தது. “ராமர் எந்த காலேஜில் இன்ஜினியரிங் படித்தார்” என்ற பகுத்தறிவு சார்ந்த கேள்வியை ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்யும் இடமாகத் தமிழ்நாடு விளங்கியது. லோஹியாவுக்கும் பெரியாருக்கும் இருந்த கொள்கை முரண்பாடும் தேசிய-குடியரசு-ஜனநாயக அரசியல் குறித்த இவ்விரு இயக்கங்களும் கொண்டிருந்தும் சிந்தனையும் இந்த வேறுபட்ட அரசியல் போக்கிற்குக் காரணமாக இருந்தது.

அத்வானியைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் இன்றைக்குப் பீகார் முழுமையாக பாஜக பிடியில் சென்றிருக்கவும் வாய்ப்புண்டு. ரத யாத்திரை தமிழ்நாட்டை முழுமையாகத் தவிர்த்ததையும் இங்குக் கவனிக்க வேண்டும். இருவேறு அரசியல் சூழல் நிலவிய மாநிலங்களிலிருந்து இரண்டு ஆளுமைகள் உருவெடுத்தார்கள். சுயமரியாதையும் சமதர்மமும் சமூக நீதியும் அவர்களது மிக முக்கிய கொள்கைகளாக இருந்தன. தமிழ்நாட்டிலிருந்த பகுத்தறிவு மரபு பீகாரில் இல்லாமலிருந்தது. தமிழ்நாட்டில் அதிமுகவைப் போல் பீகாரில் நிதிஷ்குமார் பாஜகவுக்கு வளைந்து கொடுப்பவராக இருந்தார். உடனுக்குடன் நிறம் மாறிக் கொள்ளவும் அவரால் முடிந்தது. பல நேரங்களில் லாலுவுடன் இணைந்து கொள்ளவும் நிதிஷ்குமாரால் முடிந்தது. பாஜகவுக்கு எதிராக யாரையும் உடன் சேர்த்துக்கொள்ளும் பண்பினை கொண்டிருந்த லாலு அதற்கான விலையைக் கொடுக்கவும் தயாராகவே இருந்தார்.

பாஜக எதிர்ப்பு என்பது கல்லூரி நாட்கள் முதலே லாலு ரத்தத்தோடு ஊறிப் போன ஒன்றாக இருந்தது. 1999இல் குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லாமலும் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முரசொலி மாறனின் முன்னெடுப்பு இன்றி பாஜக-திமுக கூட்டணியும் சாத்தியம் ஆகி இருக்காது. அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் பொருட்டு அடிப்படை கொள்கையில் எவ்வித சமரசமும் இல்லாத ஒரு கூட்டணியை திமுகவினால் அமைக்க முடிந்தது. இதற்கு முன்னோடியாக அண்ணா-ராஜாஜி கூட்டணியைக் குறிப்பிடலாம். ஜெயலலிதா தலைமையில் மாநில அரசியலில் ஏற்பட்ட நெருக்கடி ஒன்றிய அரசியலில் இடம்பெற்றிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. கலைஞர் இந்த காலத்தில் மிக நூதனமாகச் செயல்பட்டார்.

இருவரும் சந்தித்த நெருக்கடிகளிலும் ஒற்றுமைக்குப் பஞ்சமில்லை. மிசா சட்டம் அதில் முதன்மையானது. கலைஞர் எமெர்ஜென்சி காரணமாக ஆட்சியை இழந்தார். தனது அரசியல் வாரிசுகளான முரசொலி மாறனும் மு.க. ஸ்டாலினுக்கும் மிசாவில் கைதானார்கள். லாலு பிரசாத் மிசா கைதியானார். தனது மகளுக்கு மிசா என்றே பெயர் வைத்தார். எமெர்ஜென்சியை இந்தியாவின் ‘Holocaust’ என்றார் லாலு. இந்திராகாந்தியை ஹிட்லர் போன்று புனைந்து வரையப்பட்ட ஓவியம் முரசொலியில் வெளியானது.

அடுத்த ஒற்றுமை…. மண்டல் பரிந்துரையைச் செயல்படுத்துவதில் இருவருக்கும் இருந்த அரசியல் விருப்பத்தின் (Political Will) விளைவாக ஏற்பட்டிருந்தது. வி.பி. சிங் மண்டல் ஆணைய அறிக்கையை நடைமுறைப்படுத்த இவர்கள் இருவரும் முக்கிய காரண கர்த்தாக்களாக திகழ்ந்தனர்.

அடுத்த ஒற்றுமை சோனியா காந்தியைப் பிரதமர் ஆக்குவதில் இருவரும் கொண்டிருந்த உறுதியினால் ஏற்பட்ட ஒன்றாகும். லாலு மிகப் பிடிவாதமாக சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என்று நினைத்தார், தேர்தலில் வென்றும் சோனியா காந்தியால் பிரதமர் ஆகா முடியாமல் போனது இந்துத்துவ சக்திகளின் வெற்றி என்றே இருவரும் கருதினர்.

இறுதி ஒற்றுமை, பாஜக போன்ற பொது எதிரியை வீழ்த்த பல தரப்பு கொள்கைகளை கொண்ட ஒரு நிலையான கூட்டணியை ஏற்படுத்துவதை இருவரும் முதன்மையாகக் கருதினர். அப்படியான சூழலில் தான் இவர்கள் இருவருக்கும் 2G என்ற பெயரிலும் மாட்டுத் தீவன ஊழல் என்ற பெயரிலும் துரோகம் இழைக்கப்பட்டது. இந்த துரோகம் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது. இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் நெருக்கடிகளுக்கு இவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமும் ஒரு காரணம்.

பாஜகவின் பிடியிலிருந்து நாம் மீளவும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளவும் கலைஞரும், லாலுவும் நமக்கான கலங்கரை விளக்காக இருப்பார்கள் என்பதை இவர்களின் வரலாற்றைப் படிப்பதன் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

Gautham Raj

 

Amrutha

Related post