முத்து மகரந்தன் கவிதைகள்

 முத்து மகரந்தன் கவிதைகள்

ஓவியம்: ரேவதி நந்தனா

1. கல் வெட்டாங் குழி

வெயில் மின்ன பாசி படர்ந்து
மாணிக்க படிகமாய்
ஓர் கல் வெட்டாங் குழி.

ஒரு காலத்தில்
துவைக்க குளிக்கவென
ஊருக்கு அது ஒரு வரம்.

மஞ்சள் புடவையில்
அவள் விழுந்து மிதந்த
இரவுக்கு பிறகு
யாதம் புழங்காமல்
கருநீலம் படியவாயிற்று இப்போது.

பாறை இடுக்கில் முளைத்த
மஞ்சணத்தி மர கிளையொன்று
அந்தக் குழியில் தாழ,
பாறைக்கும் கிளைக்கும் இடையே
நீர் மேல் வலை பின்னி
காத்திருக்கிறது ஒரு சிலந்தி.

அருகாமையில் மேயும் ஆடுகளின்
தாக ஒலிகள்
அந்த வலையில் தொங்க

பக்கத்து சுடுகாட்டில் எரிந்தவர்களின்
அஸ்தி கலயம் உடைக்கப்பட்டு.
அதில் எங்கும் மிதக்கிறது
செவ்வரளி பூக்களும்
அதே மஞ்சள் புடவை நிற
கேந்திப் பூக்களும்.

பாறை எங்கும் எறும்புகள்
தடம் ஊர
மனிதர்கள் ஊரா
நீரோ பாழாய்.

2. சில வேண்டுதல்கள்

ஜன்னலில் வந்தமரும் சிட்டுக்குருவிக்கு
அரிசி அள்ளிப் போடுகிறாள்
என்னைப் பார்த்தவாறே
எதிர் வீட்டுச் சிறுமி.
அவளின் குழந்தைமை மனம்
பாடப் புத்தகங்களால்
நசுங்கி விடக் கூடாதென

***

தண்ணீர் நின்றுவிட்ட குழாயடியிலிருந்து
வெறுங் குடத்துடன் திரும்புகிறேன்.
கூப்பிட்டு சிந்தச்சிந்த ஊற்றி
கொடுக்கிறாள்
பக்கத்து வீட்டுப் பெண்.
அவளின் கன்னிமை குணம்
அவளின் சாராய புருஷனின் வார்த்தைகளில்
செத்து விடக் கூடாதென.

***

ரேஷன் கடையில் கெரசி ஊற்றுவதாய்
கடைக் கோடி வீட்டுக்கு
குரல் கொடுக்கிறாள்
கீழ் வீட்டுப் பாட்டி.
பிளாஸ்டிக் கேனுடன் நான் ஓடுகிறேன்
அவரின் முதிர்மை கரிசனம்
அவரின் வறுமையால்
வற்றிப் போகக் கூடாதென.

3. டிக்டாக் பெண்கள்

வெள்ளித் திரையில் மின்னும் பெண்
நூற்றொரு தொழில் நுட்பத்தின் வார்ப்பு.
இவளோ பக்கத்து வீட்டுப்பெண்.
நாம் எட்டிப் பார்க்கிறோம்.
அல்லது நாம் பார்ப்பதற்கென்றே
தன் சாளரங்களை திறந்து வைக்கிறாள்.
ஏசி கேரவனோ
துளிர்க்கும் வேர்வையை ஒற்றி எடுக்கும்
டச்சப் பாயோ இவளுக்கு இல்லை.
அடுப்பாங்கரை சமையலின் போது பூத்த
வேர்வைப் பூக்களோடு தான்
நம் முன் வந்து நிற்கிறாள்.
ஜெலிஜெலிக்கும் பகட்டு ஆடைகள்
இல்லை இவளிடம்.
குழந்தையின் மூக்குறிஞ்சி துடைத்த
நைட்டியுடன் தான் நம்முள் வந்து
நடன மாடுகிறாள்.
கடந்த காலங்கள் கட்டமைத்து வைத்திருந்த
பெண்மை பற்றிய புனிதத்தை
தன் ஆட்டத்தின் மூலம் உடைக்கிறாள்.
தன் அத்தனை மன அழுத்தங்களையும்
சபை முன் போட்டு உடைக்கிறாள்.
‘ஆணே பார்.! பார்.!
நானும் உன்னைப் போலவே
ஒரு சக மனித உயிர்’யென்று.

4. பின் ஓர் பொழுது

வேர்களுக்கு தெரியாமல்
துளிகள் பதுக்கிய
இலைகளும் பூக்களும்
காற்றுடன் கூடி
சம்போகம் கொண்டு
நெக்குருகி நெக்குருகி
நீர் வடிய
களியாட்டம் போடுகிறது
மழை வெறித்த
பின் ஓர்
மாலைப் பொழுதில்.

5. தெய்வத் திருமேனிகள்

muthu magaranthanநுட்ப தட்ப வெப்பம் கொண்ட
உன் தளிர் மேனியில் பரவும்
என் ஒட்டுண்ணி விரல்கள்
சாறு உறிஞ்சிக்
களிக் கூத்து நிகழ்த்தும்
பேரிரவு.
பூரிப்பில் மினுங்கும்
உன் வதன எழில்
மாறன் கைக் கணை
மலர்க் கூர் முனை.
ஒரு மொந்தை கள் கலயம் மேல்
பற்குறி பதித்ததின் பதிலுக்கு
உடலெங்கும் விதைக்கிறாய்
நகக் குறி வடுக்களை.
களமாடிக் களைத்து
விலகும் உடலிடை
ஓடி வந்து
இருள் விலக்கி
பாயும் ஒளிக் கதிர்கள்,
வெட்கத்தின்
மோப்ப ரேகைகளை
வரி வரியாய் படர்த்துகிறது
நம் தெய்வத் திரு மேனிகளில்.

6. பச்சோந்தி

நேற்று
எட்டிப் பறிக்கும் உயரமே யுள்ள
அந்த கறிவேப்பிலை மரத்தின்
ஒரு கொப்பில் உட்கார்ந்து
பூச்சி பிடித்துக் கொண்டிருந்தது
இலையோடு இலையாய்
நிறம் மாறி
இந்த பச்சோந்தி.

இன்றோ
வீதியை கடந்து அடுத்த மரத்திற்கு
போகும் போது
தற்செயலாய் வந்த
ஒரு வண்டியின் டயரில் சிக்கி
நசுங்கி படிந்து கிடக்கிறது.
நிலத்தோடு நிலமாய்
நிறம் மாறி
அதே பச்சோந்தி.

நேற்று பார்த்தது போலவே
இன்னும் பார்க்கத்தான் முடிகிறது.

வேறெதும் செய்ய இயலா
இல் வாழ்வு தனில்.

7. பைசாசம்

உன்னிடம் சொல்ல
என்ன இருக்கிறது என்னிடம்.
எப்படி பெற்றாய் ஏழு பிள்ளைகளை.
பின்னும்
ஒரு ஓநாயை போல் சப்தமின்றி
என் மனம் புகுந்து
காதல் வளர்த்தாயே.
ஆனாலும் திமிர் பிடித்தவள் நீ
அந்த திமிர்தான் உன் அழகு
என்பதைச் சொல்ல
சாவு வீடு சரியான இடமா.
கூகை இலை பறிக்க
காட்டுக்குப் போன இடத்தில்
கரடி தாக்கி உன் கணவன்
இறந்த போது
அழ மறுத்து நின்றாயே
பிள்ளைகளை அணைத்துக் கொண்டு.
பதினாறாம் நாள் காரியத்தில்
மாட்டு மூத்திரத்தை கோமியமென
வீடெங்கும் தெளிப்பதாக
வைதிகளை அடிக்கப் போனாயே.
சித்தம் கலங்கி அன்றிரவே
மண்ணெண்ணய் ஊற்றி.
எரித்துக் கொண்டு
அவனுடனேயே போய்விட்டாய்.
இப்போது எதற்கு வந்தாய்
கடும் நிசியில் நடு இரவில்
கதவோரத்தில் உள் அரவம்
கேட்டுக் கண் திறக்கிறேன்.
உள் நுழைந்து தாழிடும் சப்தம்.
உன் கொலுசின் உடுக்கை ஒலிக்கு
மயங்கிச் சரிவேனோ
நீ இழுக்கும் இழுப்புக்கு
இறங்கிப் போவேனோ
தெரியவில்லையே தெய்வமே.
காதுக்குள் கேட்கிறது உன் குரல்!
சாம்பல் நிற அரூபம்
தெளிவாக தென் படவில்லை யெனினும்
ஸ்பரிசத்தை உணர முடிகிறது புலன்களால்.
அங்கே இங்கே கடிக்கும் பொய்வலி.
என் போர்வைக்குள் புகுந்து கிடக்கிறாய்
விடிந்த பின்னும் எழ மறுக்கிறாய்
எழுந்து போ உன் சுடுகாட்டுக்கு.
ஒலியற்ற என் கத்தலை கேட்டும்
கள்ளத் தனமாய்
அதைப் பிடித்து தொங்குகிறாய்
என்னைப் பற்றி அக்கறை இல்லையா
சித்திரவதை தான் உன் தொழிலா.
பேயை காதலிப்பவன் பாடு பெரும்பாடா.
உன் பிள்ளைகளை நினைத்துக் கொள்.
இப்போது போய் விடு.
போகும் முன்
எங்கே அந்தப் பாட்டை
ஒரு முறை பாடு.
நானே வருவேன்
உன் மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே
எனை அழைக்கும் வானுலகே.
ஆமாம் அப்படித்தான்.
அதே கரகரத்த குரல்தான்.
பாடிக்கொண்டே சந்தோசமாய் போ.
திரும்பி வருவதாக இருந்தால்
ஞாபகம் இருக்கட்டும்.
இரவில் மட்டும் வா
இப்போது போ

8. ஒரு பேயின் கவிதை

ஓரு நல்ல கவிதை
யாரோ ஒரு கவிஞன் முலம்
தன்னை எழுதிக் கொள்கிறது.
பின்
அதை வாசிக்கும் வாசகன் வழியே
தன்னைத் தானே
வாசித்தும் கொள்கிறது.

9. வேறு

ஆகச் சிறந்த கவிதை யொன்றை
எழுதத் தொடங்கி விட்டேன்.
ஒரு வேளை
முடிக்க முடியாமல் போனாலும்
அதை தொடர்ந்து எழுத
என்னைப் போலவே வரவிருக்கும்
என் போன்ற ஒருவனுக்காய்
அதை விட்டுச் செல்வேன்.
அது எழுதி முடிக்கும் வரை
எங்கும் போக மாட்டேன்.
இங்கே தான் எங்கேயாவது
சுற்றிக் கொண்டிருப்பேன்
ஆவியாக அல்லது
பேயாக.

10. மணம்

சுகந்தம் கமழும்
சுக பாஷினி
தலைமுடி திருத்தி
நறுமலர் சூடும் நாரீ.
இரு கை அக்குளில்
மோப்பக் குழையும்
அனிச்சம்.
அல்குல் முடிகளோ
மனோரஞ்சிதம்.
முழங்காலில் மின்னும்
பூனை முடிகள்
பொன்னிற மின்னல் துளிகள்
எத்தனை கோடி
இன்பம் வைத்தாய்
எம் இறைவா.!

11. கள்ளி பூத்தக் காலம்

சப்பாத்திக் கள்ளியின்
முட் பழம் தின்று
அரிக்கும் நாவை
தம் தம் நாவால் நிரவி
நாம் கொடுத்துக் கொண்ட
முத்த கணங்கள் யாவும்
அப்படியே உறைந்து விட்டது
காலத்தின் சட்டகத்தினுள்
கருப்பு வெள்ளை புகைப் படமாய்.
கன்னியின் இரு புறமும்
திறந்த பக்கங்களில்
கற்றாழை முள் கொண்டு
பால் வடிய நாம் எழுதி
காற்று வாசித்த இணை பெயர்கள்
இன்றும் காய்ந்து தெரிகிறது
பறவை எச்சங் கூடி
வெறும் பெயர்களாய்.
நினைவின் ரகசிய திறவு கோல்
பத்திரமாய் நம்மிடம் தான்.
இருப்பிட வரைபடத்தைத் தான்.
தொலைத்து விட்டு நிற்கிறோம்.
இதை இதைக் கேள் இவளே!
தூர தேசம் ஏகும் பறவையாய்
காலம் ஏகிப் போகும் புரவியின்
கடிவாளம் நன் கையில் தானே.
அதைக் கொஞ்சம் தளர்த்தி விடுவோம்.
அப்போது தெரியும்
ஏதோ ஒரு காலத்தின் ஆழத்தில்
நாம் கூழாங்கற்கள் பொறுக்கித் திரிந்ததும்
கரையின் விளிம்பில் காலார நடந்து போனதும்.
அந் நிகழ்வின் அதிர்வு நீள் ஆறாய்
ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்னும் நம் மன வெளியில்.
அப்போது எழுந்த ஒரு ஆழிப் பேரவையில்
நாம் தூக்கி எறியப் பட்டோம்.
எதிர் எதிர் திசையில்.
நாம் கட்டி வைத்திருந்த நாற்புறக் கோட்டை
உருகிப் போனது ஊரார் கண்களின் நெருப்பில்.
பெறாமையின் தீய வடிவங்கள்
சுட்டுப் பொசுக்கியது நம் சிற்பங்களை,
வார்ப்பட உலோகம் கலவையல்ல.
வார்த்தது தான் வறட்சி மிக்க மூளைகள்.
ஓயாத பேச்சு. ஒழியாத கத்தல்.
அமைதி என்பது புத்தனின் கிழிந்த அங்கி,
பிடி கடுகோ பன்றி இறைச்சியோ
சாவைத் தான் சொல்கிறது சரிதம்
பேய்களின் உலகில்
யார் தான் மிஞ்ச முடியும்
கடவுள்கூட
இல்லையா இவளே.
கள்ளியின் பூக்கும் காலம்
முடிவுக்கு வந்து விட்டது.
முட்பழங்கல் பழுத்துக் கிடக்கின்றன
புதியவர்கள் தின்க வருகிறார்கள்.
புதிய இணை பெயர்கள் தொடங்குகின்றன.
நாம் நம் திறவு கோல்களையும்
கடிவாளத்தையும் உதறிவிட்டு
கால நதியில் ஓடிக் கொண்டிருக்கிறோம்
அந்திமக் கடல் நோக்கி.
அதோ! அங்கே தூரத்தில்
ஒரு புதிய நதி
தன் ஊற்றுக் கண்ணை திறக்கிறது.

12. புலிநகக் கோடுகள்

பூ வைக்க முடியா கைம் பெண்ணெனினும்
பூ போட்ட சேலையால் முக்காடிட்டு
என் கண் எதிர் நோக்காது
சுவர் பார்த்து பேசும் பெண் பாவாய்!
உன் சொற்களின் உப்பு வாடையோ
காற்றில் வீசும் உன் கண் நீர் தீவலையோ
என் மன வெளியில் பெய்த ஈவை
அர்ச்சுனன் அம்புகளாய் தடுத்தன
உன் வாய் உதிர் சொற்களின் கூர் விளிம்பு.
நீயோ இப்போது
இரவின் பிடியில் அலைக்கழியும் மின்மினி.
கிளைகளில் சிக்கி ஊளையிடும் காற்று.
கதவோரம் தயங்கி நின்று
ஒரு விரலொலியின் சொடுக்கலோடு உள் நுழைந்து
கெளரவமாய் கட்டிய நூதனம் நழுவ
கண்களால் அழைத்தபடி நிற்கிறாய்.
எந்திரங்களுக்கு ஈந்தது போக
மீந்த சதைகளைக் கொண்டு
உன்னை போர்த்துகிறேன்.
நம் ரத்தங்களில் மேக்மாவின் பாய்ச்சல்.
என் இளம் பட்டுப் பூச்சிகளை
உன் முகப் பவுடரின் மணப் புகை
மூச்சு முட்ட வைக்கிறது.
மெல்லிய இதழ்களை கொறித்தும்
மகரந்தப் பொடிகளை நக்கியும்
வயிறு வளர்க்கின்றன
நம் உடல் உரப் பூச்சிகள்.
இப்போது நம் இருவருக்குமே
ஆதி மனிதனின் முகம்.
வெளியெங்கும் நிரம்பி
அறைக்குள்ளும் கசிகிறது மாமிச வாடை
எழும்பித் தணியும் நீள் மூச்சுகளோடு
உன் திரட்சியில் என் வேர்வை குமிழிகள்.
என் உடலெங்கும் உன் சதையின் தூசுகள்.
அதுவரை கனத்துக் கிடந்த
உன் துக்கத்தின் குடம் உடைய
பொங்கும் கண்ணீரோடு
அழுது அரற்றுகிறாய்.
சுற்றிலும் சிதறுகின்றன
உன் ஒப்பாரிப் பிள்ளைகள்.
அறையின் புழுக்கம் தாளாது
வெளியே வந்த போது
ஆளற்ற வீதியில் சுற்றித் திரிந்த
நாயொன்றை கண்டேன்.
என்னைப் போலவே எதிர்பட்டது
அதுவும் அதற்கு நானும்.
புகை படிந்த என் சுவர்களை
துடைக்க வந்து
திரும்பிப் போகிறாய்
புலி நகக் கோடுகள் கிறுக்கி.

Amrutha

Related post