யூஜீன் ஓநீல்: நவீன அமெரிக்க நாடகத்தின் மாஸ்டர் 

 யூஜீன் ஓநீல்: நவீன அமெரிக்க நாடகத்தின் மாஸ்டர் 

நாடகமே உலகம்

ட்டி.ஆர். நடராஜன் 

 

மெரிக்கக் குடியரசுத் தலைவராவதற்கு முன், உட்ரோ வில்சன் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். ஒரு நாள் அவர் வகுப்பறையின் ஜன்னலை நோக்கி ஒரு பீர் பாட்டில் எறியப்பட்டு ஜன்னல் உடைந்தது. அந்த சேதத்தை ஏற்படுத்திய பெருமை பின்னாளில் நோபல் பரிசு பெற்ற ஒரே அமெரிக்க நாடக ஆசிரியரான யூஜீன் ஓநீலைச் சாரும்! இதன் காரணமாக அப் பல்கலைக்கழகத்தில் அவரது படிப்பு பாதியில் நின்றுவிட்டது.

ஓநீலின் தந்தை பிரபல சினிமா நடிகராக இருந்தார். தொழில் நிமித்தம் அவர் பெரும்பாலும் வெளியூர்களிலேயே இருக்க வேண்டியிருந்தது. ஓநீலின் தாய் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலேயே இருந்தாள். யாராலும் கவனிக்கப்படாது வளர்ந்த சூழலில் அவர் ஒரு கலகக்கார, குடிகார இளைஞனாக வளர்ந்தார். பாதியில் படிப்பு நின்றதால், அவர் கப்பல்களில் வேலை பார்த்தார். அத்தகைய பணி மனச் சோர்வை அளிக்க அவர் குடியிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால், கப்பல் வேலைகளை விடக் கடல் வாழ்க்கை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய பல நாடகங்களில் அவரது கடல் வாழ்க்கையின் அனுபவங்கள் இடம் பெற்றதை ஒருவர் காண முடியும்.

அவரது இருபத்தி நான்காம் வயதில் காச நோய்ச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கி ஒய்வு பெற்று வரும் போது எதிர்காலத்தில் நாடக ஆசிரியனாகத் தன் வாழ்க்கையை ஆரம்பிப்பது என்று அவர் தீர்மானித்தார். ‘பகலுக்குப் பின் வரும் இரவு’ என்னும் நாடகத்தில் காச நோய் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இடம்பெற்றன.

பெரும்பாலான அவரது நாடகங்களில் சுயசரிதையின் விள்ளல்கள் இல்லாமல் போகவில்லை. நாடக ஆசிரியனுக்கும் அவனது படைப்புக்கும் குறுகிய இடைவெளிதான் இருக்கிறது என்று அவர் ஒருமுறை கூறினார். போதை மருந்து, குடி ஆகிய பழக்கங்களில் சிக்கிய மனிதர்கள் அத்தகைய பழக்கங்கள் அவர்களைக் கவ்வியிருக்கும் வலிகளையும் கவலைகளையும் குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தவை என்று மனப்பூர்வமாக நம்பித் தடுமாறுகிறார்கள். அதே சமயம் அவர்கள் மனதில் ஏற்படும் குற்ற உணர்வுகள், வெறி, ஏமாற்றம், சலிப்பு ஆகியவற்றால் தாக்கப்பட்டு, மற்றவர்களிடமிருந்து தயவு, இரக்கம், மன்னிப்பு, பச்சாதாபம் ஆகியவற்றை எதிர்பார்க்கிறார்கள். இம்மனிதர்களின் நடமாட்டங்களையும் உணர்ச்சிகளையும் அவரது நாடகங்கள் சித்தரித்தன.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களைப் பரிவுடனும் நுணுக்கமான விவரணைகளுடனும் அவர் படைத்தார். அவரது எழுத்தில் இருந்த கூர்மை ஒருசேர வாசகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்திழுத்தது. அன்றாட நடைமுறை வாழ்க்கையில் உன்னதம், பரிசுத்தம், மேன்மை இவற்றைப் பற்றிய சிந்தனையை, அனுபவத்தை எதிர்கொள்ள முடியாதபடி பசியும் பிழைப்பும் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையினை ஆக்கிரமித்ததை அவரது நாடகங்கள் வெளிப்படுத்தின. இவ்வனுபவங்களைப் பெரும்பாலும் சந்தித்திராத நடுத்தர வர்க்கத்து, மேல்வர்க்கத்து மனிதர்கள் அவரது நாடகங்களைப் பிரமிப்புடன், கவனத்துடன் நோக்க, இவ்வாழ்க்கையில் சதாகாலமும் உழன்று கொண்டிருந்த ஜனம் தங்களை அவரது நாடகங்களில் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

 

லக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற ஒரே அமெரிக்க நாடக ஆசிரியர் ஓநீல் மட்டும்தான். இதைத் தவிர தனது நாடகங்களுக்காக நான்கு முறை புலிட்சர் விருது பெற்ற ஒரே அமெரிக்க நாடக ஆசிரியரும் அவர் மட்டுமே. அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் – விமர்சகர்களில் ஒருவரான எட்மண்ட் வில்சன் மற்றொரு பிரபல எழுத்தாளரான ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டுக்கு எழுதும் கடிதமொன்றில் இவ்வாறு கூறுகிறார்: ‘ஓநீல் ஒரு மகத்தான மனிதன். தன்னுடைய ‘அன்னா கிறிஸ்டி’ நாடகம் ஒரு குப்பையான படைப்பு; அதற்குப் புலிட்சர் விருது கிடைத்தது பெரிய ஜோக்.’

ஆனால், ஓநீல் ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்றோ, அலட்சியமாகவோ இப்படிச் சொல்லவில்லை. இன்னும் மிகச் சிறந்த படைப்புகளைத் தர வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று அவர் உறுதியாக நம்பினார். அது இனிமேல்தான் வரவேண்டும் என்கிற அர்த்தத்தில்தான் அவர் அன்னா கிறிஸ்டியைப் பற்றிக் கூறியதாக வில்சன் அபிப்பிராயப்பட்டார்.

அதேபோல் அவரது தலைசிறந்த நாடகமான ‘பகலுக்குப் பின் வரும் இரவு’, மற்றும் சிறந்த படைப்புகளான ‘பனிமனிதனின் வருகை’, ‘நெறிதவறியவருக்கென ஓர் நிலா’ ஆகியவற்றையும் மேற்சொன்ன கருத்துக்குப் பின் வந்த காலத்தில்தான் ஓநீல் எழுதினார். அவர்தான் முதல்முறையாக அறிவார்த்தமும் கலை நுணுக்கமும் நாடகங்களில் முக்கிய இடம்பெற வேண்டும் என்ற செய்தியுடன் நாடகங்களை வெளிக் கொணர்ந்தார். இப்படைப்புகளில் அவரது ஆழ்ந்த கலையுணர்வும் மனித உளவியலும் பின்னிப் பிணைந்து வெளிப்பட்டன.

ஓநீலுக்கு முன்னால் இருந்த நாடக ஆசிரியர்களின் படைப்புகளில் மெலோடிராமா முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஒருவிதப் பிரபுத்துவ மனநிலையில் படைக்கப்பட்ட அந்நாடகங்கள் ஒரே மாதிரியாகக் கார்பன் பேப்பர் பிரதிகள் போல் நடமாடின.

ஓநீலின் தந்தையும் பிரபல நாடக நடிகராயிருந்தார். அவர் தாந்தேயின் மாண்டி கிறிஸ்டாவை ஊர் ஊராகச் சென்று நாடகமாக போட்டார். ஆனால், தன் தந்தையின் நாடகங்களை ஓநீல் நிராகரித்தார். அவற்றுள் இடம் பெற்றிருந்த ஆரவாரங்களையும் அர்த்தமற்ற உணர்ச்சிக் கூப்பாடுகளையும் போலி தைரியத்தையும் அவர் நாடக அம்சங்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.

Eugene O'Neill

நீல் எழுதிய அறுபது நாடகங்களில் ‘ஆ, இருட்டிலிருந்து!’ என்னும் ஒரு நாடகம்தான் நகைச்சுவையைப் பின்புலத்தில் வைத்து எழுதப்பட்டது. அதிலும் கூட குடி, போதை, விபச்சாரம், பழி வாங்குதல், ஒடுக்கப்பட்ட இச்சை ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த விதத்தில் அவருடைய மற்ற படைப்புகளிலும் (துயரம், சோர்வு, ஏக்கம் ஆகிய உணர்ச்சிகளை வைத்து எழுதப்பட்டவை) மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன!

1920-இல் அவருடைய முதல் வெற்றிகரமான நாடகம் ‘ஜோன்ஸ் சக்கரவர்த்தி’ வெளிவந்தது. அதற்குப் பின்னால் தொடர்ந்து ‘அன்னா கிறிஸ்ட்டி’, ‘மரத்தடி வேட்கை’ ஆகிய நாடகங்கள் வெளிவந்தன. 1924-இல் அவர் எழுதிய ‘கடவுளின் குழந்தைகளும் சிறகுகளும்’ என்ற நாடகம் கலப்பினத்தைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டது. இது வெளிவந்த பின், ஓநீலுக்கு வசைகள் நிரம்பிய நூற்றுக்கணக்கான கடிதங்களும் வெடிகுண்டு மிரட்டல்களும் வந்தன.

ஓ நீலின் முக்கியத்துவம் அமெரிக்க நாடக வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல். அவரில்லாமல் ஒரு ஆர்தர் மில்லரோ, டென்னஸி வில்லியம்ஸோ அமெரிக்க நாடக உலகில் தோன்றியிருக்க முடியாது, டேவிட் மாமேட்டும் சாம் ஷெப்பர்டும் கூட. நீளமாக அமைந்திருந்தாலும் அவரது நாடகங்கள் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவனவாக இருந்தன. அவருடை ‘பனிமனிதன் வருகை’யைப் பற்றி ஒரு நிருபரிடம் விவரிக்கையில், ‘இந்த நாடகத்தில் ஒரு முக்கால் மணி நேரத்தைக் குறைக்க முயன்றேன். ஆனால், குறைக்க முடிந்ததோ கால்மணி நேரத்துக்கு மட்டும்தான். இந்த நாடகம் எட்டு மணிக்கு ஆரம்பித்து பதினொன்றே முக்கால் மணி வரை போகும்! என்ன செய்வது. அது அப்படித்தான் இருக்கும். நான் சொல்ல வேண்டியதை முழுவதுமாகச் சொல்ல அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது’ என்றார்.

1956-இல் அவர் எழுதிய ‘பகலுக்குப் பின் வரும் இரவு’ அவருடைய சொந்த வாழ்க்கையின் பல கூறுகளை உள்ளடக்கியது. 1939 முதல் 1941 வரை அவர் எழுதி முடித்த இந்த நாடகம், 1956-இல்தான் வெளியுலகுக்கு வந்தது. ஓநீலின் ‘மாஸ்டர் பீஸ்’ என்று கருதப்பட்ட இந்த நாடகம் இருபதாம் நூற்றாண்டு நாடக இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக எப்போதும் குறிப்பிடப்படுகிறது.

ஒரு நாளில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் களமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாடகத்தை எழுதி முடித்த பிறகு ஓநீல் உடனடியாக பிரசுரம் செய்ய விரும்பவில்லை. அவர் அதை பிரபல பிரசுராலயமான ராண்டம் ஹவுஸுக்கு அனுப்பி, தான் இறந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்த பின்னரே அதைப் பிரசுரிக்க வேண்டும் என்று வேண்டினார். ஆனால், ஓநீலின் விதவை மனைவி அதை ஒப்புக்கொள்ளாமல் அவர் இறப்புக்குப் பின் பிரசுராலயத்தை அணுகி அதைப் பிரசுரம் செய்யக் கூறினார். முதலில் ராண்டம் ஹவுஸ் அதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், பிறகு சட்டரீதியாக ஓநீலின் மனைவியின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாது என்று தெரிந்ததும் பிரசுரம் செய்தார்கள்.

1957-இல் அவரது நாடகம் வெளியாகியது. அந்நாடகம் காலமாகிவிட்ட ஓநீலுக்குப் புலிட்சர் பரிசை நான்காம் முறையாக வாங்கித் தந்தது.

சுவீடன் நாடக ஆசிரியரான ஆகஸ்ட் ஸ்டென்பெக்கைத் தனது ஆதர்சமாக ஓநீல் வரித்துக் கொண்டார். இலக்கியம், சரித்திரம், அரசியல், கலை என்று பல்வேறு துறைகளையும் உள்வாங்கிக்கொண்டு ஸ்டென்பெக் எழுதிய அறுபதுக்கும் மேலான நாடகங்கள், முப்பதுக்கும் மேற்பட்ட புனைவுகள் அவரது மேதாவிலாசத்தைப் பறைசாற்றியது. இயற்பியல் நாடகம், ஒற்றை நடிப்பு நாடகம், சரித்திர நாடகம் என்று விரிந்து வளர்ந்த அவரது நாடக உலகம் அடிப்படையில் உணர்ச்சி வெளியீட்டு வாதத்தையும் மீமெய்யத்தையும் பேசியது.

தனது நாடக வாழ்க்கையின் அடிப்படைகளை உருவாக்கியது ஸ்டென்பெக்தான் என்று ஓநீல் உறுதியாக நம்பினார். அவருடைய ஜீனியஸ்ஸில் ஒரு பங்காவது தனக்குக் கிட்டியதுதான் தனது எழுத்துக்கு அது பலத்தை சேர்த்தது என்று ஒரு பேட்டியில் ஓநீல் கூறினார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஓநீல் தனது எழுத்துக்குக் கிடைத்த மரியாதையும் கௌரவமும் ஸ்டென்பெக்கால் கிடைத்தவை என்றார்.

 

புதிர் நிரம்பிய மனதையும் ஆழம் நிரம்பிய ஆத்மாவின் தரிசனத்தையும் கைக்கொள்ள விரும்பும் முயற்சிகளாகவே ஓநீலின் நாடகங்கள் அமைந்தன. உயிரினங்களின் வாழ்வில் ஊடுருவி வளரும் செயலாக்க வழிமுறைகளைக் கச்சிதமாகச் சொல்லிவிட முடிவதில்லை. மனித மனதின் இயங்குமுறை கட்டுக்குள் அடங்காதது என்பதாலேயே அதன் மீது சவாரி செய்ய வேண்டும் என்கிற சவாலைத் தீவிர முயற்சியுடன் எதிர்கொள்ள மனிதர்கள் நினைக்கிறார்கக்ள். ஆத்மா என்பதன் அடிப்படையை உணர்வது, சக்தி நிரம்பிய காரியமாக முன்வந்து நிற்கிறது. வாழ்வின் இத்தகைய சிக்கல்கள் அடர்ந்த பெரும் பிரச்சனைகளை ஓநீல் தன் நாடகங்களில் எடுத்தாண்டதுதான் அவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது.

திரும்பத் திரும்ப அவரது நாடகங்கள் மனிதர்களின் சோக வாழ்க்கையைப் பற்றி பேசிய வண்ணமாக இருந்தன. துக்கம் என்பது கட்டிப் பிடிக்க முடியாத கடல் அல்லது ஏற முடியாத மலையுச்சி என்று அவர் நினைத்தார். மனித உணர்ச்சிகளைப் புடம் போட்டுக் காட்டுவது அவன் எதிர்கொள்ளும் வலிகளே என்பதை உணரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளனாகத் தான் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அவரது மூன்று நாடகங்களில் தொடர்ச்சியாகத் தனது வாழ்க்கையைச் சித்திரமாகத் தீட்டிப் பொதுவில் வைத்தார். ‘பகலுக்குப் பின் வரும் இரவில்’ கதாநாயகன் எட்மண்ட் தனக்குக் காச வியாதி வந்திருப்பதாக ஒருநாள் அறிகிறான். குடும்பத்தில் அவனது தாய் அபினுக்கு அடிமையாகி விடுகிறாள். தந்தை எப்போதும் தனது வேலை என்று வீட்டுப் பக்கம் வராமல். வெளியூரிலேயே இருக்கிறார். சகோதரன் பெரிய குடிகாரனாக மாறி விடுகிறான். இந்த நான்கு பாத்திரங்களும் தங்கள் வேதனைக்கும்

சீரழிவுக்கும் காரணம் என்று மற்றவர்கள் மீது பாய்கிறார்கள். உண்மையில் அவர்கள் தம்மைத் தாமேதான் கடிந்துகொள்ள வேண்டும்! ஆனால், இது நடப்பதில்லை.

‘நெறி தவறியவருக்கென ஓர் நிலா’ மேலே கூறப்பட்ட நாடகத்தின் தொடர்ச்சி. இதில் எட்மண்டின் சகோதரன் ஜேமி தொடர்ந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இறந்து விடுகிறான். மூன்றாவது தொடர்ச்சியாக வந்த ‘பனிமனிதனின் வருகையில்’ ஓநீல் தனிமனிதர்களை விட்டுவிட்டு ஏமாற்றங்களையும் நிறைவேற்ற முடியாத கனவுகளையும் தரும் இயந்திரம் என்று அரசாங்கத்தைச் சாடுகிறார்.

லட்சிய வேட்கையுடன், வேதாந்த விசாரங் கொண்ட, சமூகக் கட்டுப்பாடுகளை வெறுக்கும் அறிவிஜீவியாக அவரது பாத்திரங்கள் நடமாட விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்கொள்வது யாரை எல்லாம்? நிராகரிக்கும் உறவுகள், போதை மருந்து அடிமைகள், இழிநிலையைத் தம்முடன் தக்கவைத்துக் கொள்ளும் மனித ஜென்மங்கள். இதனால் ஏற்படும் போராட்டங்களும் பிரச்சினைகளும் அவரது நாடகங்களில் ஆராயப்படுகின்றன.

மற்றவர்கள் உணராதிருந்தாலும் ஓநீல் ஒரு சிறந்த சிந்தனையாளராக விளங்கியிருக்கிறார். அவரது தலைக்கனம் பிடித்த நாடகப் பாத்திரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மனிதராக அவர் நடமாடினார். தனி மனிதனின் வாழ்க்கைத் துயரங்களை மட்டுமில்லாது அரசாங்கத்தின் மெத்தனத்தையும் சாடியிருக்கிறார். 1946-இல் நடந்த ஒரு நேர்காணலில் அவர், ‘உலகின் வெற்றிகரமான நாடல்ல, மாறாக அமெரிக்கா தோல்வியைத் தழுவிய தேசம். உலகில் எந்த நாட்டிற்கும் கிடைக்காத வளங்களும் வாய்ப்புக்களும் அமெரிக்காவுக்குக் கிடைத்தன. ஆனால், தனது வளர்ச்சி வேகத்திற்கு ஏற்ப அது பலமான அஸ்திவாரத்தை நிலைநிறுத்தத் தவறிவிட்டது. தனது ஆத்மாவைத் தேடுகிறேன் என்று அது வெளியேயிருந்து வரும் சக்திக்காக அலைந்து கொண்டிருக்கிறது. இதனால் அது தன சொந்த ஆத்மாவைத் தவிர, வெளியே இருந்து வரும் என்று நம்பும் சக்தியையும் இழந்து விட்டுத் தடுமாறுகிறது” என்றார்.

ஓநீலின் நாடகங்களில் கவிதையின் மென்மையைக் காண முடியாது என்று ஒரு விமரிசகர் குறிப்பிட்டார். சம்பிரதாயங்களையும் முகமன்களையும் காப்பாற்ற அவர் ஒரு போதும் மெனக்கெடவில்லை. ‘ஓநீலால் தனது மேதைமையை முழுவதுமாக வெளிக்கொணர முடியாமல் சூழல் அவரை வஞ்சித்து விட்டது’ என்றார், விமரிசகர் எட்மண்ட் வில்சன்.

ஓநீலின் கதாநாயகனான எட்மண்ட் டிரான் அவனது தந்தையுடன் பேசும் போது, “நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்ல முடியாமல் இருக்கிறேன். வார்த்தைகள் வாயிலிருந்து திக்கித் திக்கி வருகின்றன. ஒரு திக்குவாயனாகத்தான் என்னால் இருக்க முடியும் போல. ஆனால், அட்லீஸ்ட் இது உண்மைக்குப் புறம்பானதல்ல. என்னைப் போன்ற திக்குவாயர்கள் அதிகமாக நடமாடும் இடம் இது!” என்கிறான்.

 

நீலின் மண வாழ்க்கை சிக்கல் நிரம்பியதாக இருந்தது. அவர் மூன்று பெண்மணிகளை மணந்தார். முதல் மனைவி மூலம் ஒரு ஆண் குழந்தையும் இரண்டாம் மனைவி மூலம் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தன. அவரது முதல் மகன் ஓநீல் ஜூனியர் குடிகாரனாக நாற்பது வயதில் இறந்தான். இரண்டாவது மகன் போதை மருந்துக்கு அடிமையாகி ஒரு நாள் ஜன்னலிலிருந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொண்டான். அவரது ஒரே பெண் ஊனா அவளுடைய 15-ஆம் வயதில் பிரபல ஆங்கில நடிகரான சார்லி சாப்ளினை (வயது 54) பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள். ஆத்திரமடைந்த ஓநீல் சாகும் மட்டும் அவள் தன்னைப் பார்க்கக் கூடாது என்று அவளை நிராகரித்து விட்டார்.

ஓநீலின் கடைசிப் பத்து வருஷங்களில் அவருக்குப் பார்க்கின்சன் நோயைப் போன்ற வியாதி வந்துவிட்டது. நடுங்கும் கைகளுடன் அவரால் எழுத முடியவில்லை. அவரது 65-ஆம் வயதில் காலமானார்.

1967-இல் அவரது நினைவாக அமெரிக்கத் தபால் நிலையம் 1 $ தபால் தலை வெளியிட்டு தன்னைக் கௌரவப்படுத்திக் கொண்டது.

ட்டி.ஆர். நடராஜன் <weenvy@gmail.com>

sinthuja, t.r. natarajan

Amrutha

Related post