தலைக்கு மேலே ஒரு மரணம் – அ. வெண்ணிலா

 தலைக்கு மேலே ஒரு மரணம் – அ. வெண்ணிலா

ஓவியம்: விசாலந்த்ரா தாகூர்

 

கூடத்தை நிறைத்தபடி கிடத்தப்பட்டிருந்தாள் ரோஜா.

மாலை தொடுப்பதற்காக தண்ணீர் தெளித்து புத்தம்புதிதாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் இளஞ்சிவப்பு நிற ரோஜாப் பூக்களைப் போலவே இருந்தாள் அவள்.

அவள் உடம்பில் ரத்த ஓட்டம் இன்னும் நிற்கவில்லை. கால் பாதத்தில் அழுந்தியிருந்த ரத்தம் லேசாக சிவந்தபடியிருந்ததைத் தவிர அவள் உடல் முழுக்க ரத்தம் ஓடியபடிதான் இருந்தது. கைவிரல் நகங்களின் நுனிகளில் இன்னும் அந்த சிவந்த நிறம் அப்படியேதான் இருந்தது.

 

ணிகைவேல் ரோஜாவைப் பார்த்தபடி இருந்தான். அவன் முழங்கைக்குள் பனியில் நனைந்த புத்தம்புது ரோஜாவைப் போல் குழந்தை ரோஜா இருந்தாள். தன்னுடைய முழங்கைக்குள் அடங்கிவிட்ட அவளை என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். இறுக மூடியிருந்த கருவிழி மாதுளை முத்தைப் போல் ஈரத்தில் மிளிர்ந்தது. லேசாகத் தோலுரிந்து முலைக் காம்பைத் தேடியபடி மெல்ல சுழன்ற உதடு இவனை தோற்கடித்து கலங்கச் செய்தது.

கையில் வாங்கிய ரோஜாவைக் கட்டியணைத்து முத்தமிட்டு வரவேற்பதா இல்லை கசங்கிய ரோஜாவாகக் கட்டிலில் தன் கடைசி சுவாசத்தை நிறுத்தியிருந்த தாமரையை வழியனுப்புவதா? பிறப்பையும் இறப்பையும் ஒரே கணத்தில் தன்னைச் சந்திக்க செய்ய யார் சதித் திட்டம் தீட்டியது? ஜனனம் தந்த தாமரையின் ஆடையில் படிந்திருந்த ரத்தக்கறையைப் பார்த்தான். அவளின் உயிர் இந்த ரத்தத் துணுக்கின் வழியாகத் தான் சென்றிருக்குமோ? குளிர்மலையும் கடும்பாலையும் உடலின் முழுப் பகுதியையும் தாக்குவதுபோல தவித்துப் போனான். பிறப்போடு சேர்ந்து நிற்பதா? இறப்பினை பின் தொடர்வதா?

உள்ளே நுழைந்த செவிலி தணிகைவேலின் கையில் இருந்து ரோஜாவை வாங்கிக்கொண்டாள். “குழந்தைக்கு உடம்பு லேசாக உதறுகிறது, இன்குபேட்டரில் வைக்க வேண்டும்” என்றாள். தாயின் உடல் சூடு தனக்குக் கிடைக்காது என்று ரோஜா தெரிந்துகொண்டாளோ? தாமரையை ஸ்டெச்சரில் வைத்துத் தள்ளிக்கொண்டு போனார்கள். வேட்டைக்காரனின் கட்டுக் கம்பியின் கூர்முனை தன் வாயைக் கவ்வத் தொடங்கிய கணத்தில் மரணத்தின் இருளை தரிசித்துவிடும் பன்றியின் கடைசி நேர அவலக் கேவல் தணிகையின் அடிவயிற்றில் இருந்து புறப்பட்டது. “அய்யோ சாமி… நான் வாழவா சாகவா” என்று உடைந்துபோய் தரையில் மண்டியிட்டுக் கதறினான். தூரத்தில் பால் சுவைக்கத் துழாவிய சிறு உதடு பிரிந்து ரோஜா கதறி அழும் குரல் கேட்டது.

 

“இப்பொழுதும் குரலெடுத்து அழுதுவிடேன் ரோஜா…” கதறி அழுதபடியே மண்டியிட்டான் தணிகைவேல்.

‘ஏன் இந்த பதினெட்டு ஆண்டுகள்? பிறந்த உன் நாவிற்கு உன் அம்மாவின் அமுதக் கலசத்தில் இருந்து பாலமுதம் வழிந்தோடவில்லை என்றவுடன் நீ உன் மூச்சை நிறுத்தியிருக்கலாமே? ஏன் என் கை சூட்டிலேயே வளர்ந்தாய்? என் முழங்கைக்குள் அடங்கிவிட்ட உன்னை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரியாமல் நான் தப்புத்தப்பாய் செய்த எல்லாவற்றையும் குழந்தையான நீயே சரியாக்கிக் கொண்டு வளர்ந்தாயே? தாயின் அணைப்பில் வளர்ந்த குழந்தைகள் எல்லாம் ஒருவருடம் ஆகியும் பேசாமல் இருக்கும்போது நீ எட்டு மாதத்திலேயே மணிக்கதவின் தாள் திறந்தாயே? நீ பிடித்து நடப்பதற்கு என் விரல் எப்பொழுதும் கிடைக்குமோ கிடைக்காதோ என்று உனக்கு சந்தேகம் வந்துவிட்டதோ என்னவோ, சுவரைப் பிடித்து நீயாக நடக்கத் தொடங்கிவிட்டாய்.

ரோஜா… நீயும் நானும் ஒரே உலகமாகத்தானே இருந்தோம்? “பச்சைப் பிள்ளையைப் பார்த்துக்கொள்ளத் தெரியாது… என்னிடம் குடுத்துடுங்க தம்பி” என்று உன்னுடைய பாட்டி, தாமரையின் அம்மா கேட்டபோது கூட, நான் உன் முகத்தைத்தானேப் பார்த்தேன். நீ பெரிய மனுஷி மாதிரி என்னைப் பார்த்து மலரச் சிரித்தாயே… அந்தச் சிரிப்பு எனக்குத் தந்த நம்பிக்கையை என்னால் வார்த்தையில் சொல்ல முடியுமா ரோஜா? நான் ஒன்றுமே பதில் பேசாமல் உன்னைத் தூக்கிக்கொண்டு வெளியே போனவுடன், உன் பாட்டி உன் அம்மாவைத் திட்டிக்கொண்டே முந்தானையில் மூக்கைத் துடைத்தபடி ஒருநாள் முழுக்க அழுதபடியிருந்தார்களே? அப்பொழுதுகூட நான் உன்னைப் பார்த்து பயப்படவில்லையே ரோஜா? நீ எப்படியும் வளர்ந்துவிடுவாய்… என்னையும் பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கை, நம்பிக்கை என்று தனியாகச் சொல்லாமலேயே எனக்கு ஒரு நம்பிக்கை இருந்ததே ரோஜா? எங்கு தொலைத்தோம் அந்த நம்பிக்கையை? எப்பொழுது தொலைத்தோம்?

பின்மாலைப் பொழுதில் தோட்டத்து மாமரத்தின் நிழல் உன் நெற்றியில் விழுந்திருக்க, நான் அதை ஒதுங்க வைத்து சரிசெய்து கொண்டிருந்த நேரத்தில் சொல்லிவிட்டுப் போக உன் பாட்டி உள்ளே வந்தார். மாமரத்து நிழல் லேசாக உன் நெற்றியில் அசைந்தாட பாட்டி குனிந்து முத்தமிட்டு, நிமிர்ந்து, கையில் வைத்திருந்த திருநீறை உனக்குப் பூசிவிட்டு, மீதம் இருந்த திருநீறை என் தலையில் தெளித்துவிட்டு கிளம்பிப் போனார். அன்று இரவு உறக்கத்தில் நீ அழவேயில்லை… பால் ஊட்டக்கூட தோன்றாமல் நானும் உன்னுடன் தூங்கிப் போனேன்… அன்றிலிருந்து நாம் நிம்மதியாகத்தானே தூங்கினோம்?

நேற்று இரவு தூங்கப் போகும்போது என் தூக்கத்தின் முழு அமைதியை பறித்துக்கொண்டு நீ மொத்தமாய் தூங்கப் போகும் முடிவை எடுத்திருந்தாயா ரோஜா? நான் எத்தனை மரணங்களைப் பார்ப்பது? அம்மா, அப்பா, மனைவி, மகள் என்று எனக்கேன் இத்தனை மரணங்களைப் பார்க்கும் அவலம்? அதுவும் என் வாழ்வின் உச்ச நேரத்தில்? நான் என்ன தப்பு செய்தேன் ரோஜா? உன்னை ஒரு கணம் கூட நான் தவறவிட்டதில்லையே? நான் விட்டாலும் நீ விட்டதில்லையே?

நம் இருவருக்கும் இடையில் இரண்டாவது ஒருவர் வந்தால் எங்காவது தப்பு நடந்துவிடும் என்றுதானே நான் என்னை இன்னொரு மணவாழ்க்கையில் இருந்து துண்டித்துக்கொண்டேன்?

“கையில் இருப்பது பெண் குழந்தை, வளர்ந்த பெண் குழந்தைக்கு ஒரு அம்மா வேண்டாமா? வயசுக்கு வந்தால் கூட உன் பெண், ஆம்பளையான உன்னிடமா சொல்லுவாள்? அவளைப் புரிந்துகொள்ள, வழிகாட்ட ஒரு பெண் வேண்டாமா” என்று ஆளாளுக்குக் கேட்டபோதுதானே எனக்குள் இருந்த ஆண் விழித்துக்கொண்டான். உனக்காகச் சொல்லப்பட்ட காரணங்களைவிட எனக்கும் தேவைப்படுகிறது, வெளிச்சொல்ல முடியாத அவஸ்தைகளை தணிக்க வேண்டிய வயது எனக்கும் மிச்சம் இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். உன் அம்மாவின் நினைவுகள் மங்கிய நிழலாக எனக்குள் இருந்த நேரத்தில், நான் புதிதாய் இன்னொரு பெண்ணுடன் இருக்கும் திருமணப் புகைப்படம் நம் வீட்டுக் கூடத்தில் இடம் பிடித்தது.

பிறந்த கணமே நீ மரணத்தை எதிர்கொண்டவள் அல்லவா? எதையும் உணர்ந்துகொள்ளும் ஆற்றலும் பக்குவமும் உனக்கு உண்டு என்பது தெரிந்ததுதானே? இரண்டாவதாக உள்ளே வந்தவள் எனக்கு நல்ல மனைவியாக இருந்தாள். உனக்கும் நல்ல தாயாகத்தான் இருக்கிறாள் என்று நான் நம்பியிருந்தேன். என்னிடத்தில் நீ அப்படித்தான் காட்டிக்கொண்டாய். சிவந்த உன் ரோஜா நிறத்தின் முகத்திலிருந்து என்னால் எதையுமே கண்டறிய முடியாமல் போனதற்கு நான் மட்டுமே காரணம் செல்லமே… பெண்ணின் மோகத்தில் நான் மூழ்கியிருந்ததில் அசாதாரணமாக இருந்த வீடு என் கண்ணுக்குப் படவில்லை.

உன் நடவடிக்கைகளின் ஒழுங்கு சிதைந்திருப்பதைக் கூட நான் எவ்வளவு தாமதமாகக் கண்டறிந்தேன் கண்மணி? இரவு தூக்கம் வரும்வரை அக்கம்பக்கத்து வீடுகளில் நீ நேரம் கடத்தியிருக்கிறாய். தெருவில் உள்ள பெண்கள் பலர் சம்பளமில்லா வேலையாள் போல் காய்கறி வாங்கவும், பால்பாக்கெட் வாங்கவும் உன்னை விரட்டியிருக்கிறார்கள். கையில் கிடைத்த மிச்சம் மீதி உணவுப் பொருட்களை உனக்கு இரக்கத்துடன் கொடுத்திருக்கிறார்கள். உன் அம்மா இருந்தால் இப்படி வீடுவீடாகப் போகிற நிலை வந்திருக்குமா என்ற அனுதாப வார்த்தைகளால் உன் மனத் துயரத்தை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். பல நாட்களில் நீ ஒருவேலை சாப்பாடு கூட வீட்டில் சாப்பிட்டதில்லை என்று எனக்கு இப்பொழுதுதானே தெரிகிறது ரோஜா. உன் கண்பார்வையின் ஒளியில் இருந்து உன் மனப் போக்கைப் படித்துவிடும் நான், எத்தனை நாட்களாக உன்னை நிமிர்ந்தே பார்க்கவில்லை என்று தெரியவில்லையே மகளே?

மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தெருவே லேசான மயக்கத்தில் இருக்கும்போது, நீ தோட்டத்து குப்பைமேட்டிற்குப் பின்னால் இருந்த முள்ளுமரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறாயே கண்மணி… யாருமற்றத் தனிமை அனல் காற்றைவிட உன்னைத் தீய்த்திருக்க நீ அசையாமல் உட்கார்ந்திருக்கிறாய்.

ஒரு விடுமுறை நாளின் பிற்பகலில் நானும் ரேவதியும் அறைக்குள் பேசிக் கொண்டிருக்கும்போது நீ வந்திருக்கிறாய்… எப்பொழுதும்போல… உன்னைப் பார்த்தவுடன் நான் உன்னை அருகே அழைத்து, மடியில் உட்கார வைத்துப் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். நீயும் எந்த விகல்பமும் இல்லாத குழந்தையாக என்னுடன் பேசியபடியே தூங்கிப் போயிருக்கிறாய். அடுத்த நாள் நான் அலுவலகம் சென்றவுடன் ரேவதி உனக்குத் தட்டில் சாப்பாடு வைத்துவிட்டு, “இனிமே நானும் அப்பாவும் ரூமுக்குள் இருக்கும்போது நீ உள்ளே வரக்கூடாது” என்று சொல்லியிருக்கிறாள்… தங்கமே… விடுமுறை நாட்களின் பகல் பொழுதெல்லாம் நீ தெருவில் கழித்ததையும் ஆளரவமற்ற மதியப் பொழுதை முள்ளுக்காட்டின் அனல் காற்றில் கழித்ததையும் நான் எப்படியோ அறியாமல் போனேனே?

எத்தனை நாட்கள் ரேவதி உன்னைப் பற்றி குற்றம் சாட்டியுள்ளாள்… “பொம்பளைப் பிள்ளை எந்நேரமும் தெருவிலேயே பசங்கக்கூட சுற்றிக் கொண்டிருந்தால் பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க…” என்று சொல்லியிருக்கிறாளே? அதற்குப் பதில் சொல்லாமல் உன் பக்கம் நிற்பதாகக் காட்டிக்கொள்ள மௌனம் காத்தேனே தவிர… பாவி… நீ ஏன் எந்நேரமும் தெருவில் காலம் கடத்துகிறாய் என்று எனக்கு யோசிக்கத் தோன்றவில்லையே? வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டத்தைக் கொண்டு, வீட்டின் சிக்கலைப் புரிந்துகொள்ளும் நுட்பம் இந்த ஆண் மிருகத்திற்கு இல்லாமல் போனதேன்?

பிறந்தவுடன் பசியை அடக்கிப் பழக்கப்பட்ட நீ, பத்து வயதிற்குள்ளேயே உன் உணர்வுகள் அத்தனையையும் யாருக்கும் தெரியாமல் மறைத்துக்கொள்ள பக்குவப்பட்டுவிட்டாயா? என் கண்ணெதிரில் நடமாடிக்கொண்டே என் கண்களுக்கு மட்டும் கருப்புத் துணி கட்டிவிடும் வித்தையை எப்படி கற்றுக்கொண்டாய்? எல்லாம் உனக்காகத்தான் என்று நினைத்திருந்த எனக்கு என் நாளின் எந்தப் பகுதியிலும் நீ இல்லை என்பது புரியாமலேயே போய்விட்டதே தங்கமே?

எல்லோரும் உனக்கு ஒரு பெண் துணை வேண்டும் என்று சொன்ன நாளில்கூட, உனக்கு அந்தப் பெண் துணைப் பயன்படவில்லை என்று எனக்கு இவ்வளவு தாமதமாகத் தெரிகிறதே? எப்பொழுது நீ பெரிய பிள்ளையாய் ஆனாய் என்று எங்கள் யாருக்குமே சரியாகத் தெரியாமல் போய் விட்டதே. அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவிற்கு நாங்கள் தள்ளி நின்றுவிட்டோமா செல்லமே? அந்த நல்ல செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு நாங்கள் யாருமே உன் கண்ணுக்குத் தகுதி உடையவர்களாகத் தெரியவில்லையா? சொல்லவும் முடியாமல், மறைக்கவும் தெரியாமல் நீ என்ன பாடுபட்டாயோ என் மகளே?

tamil nadu

தோட்டத்துப் பின்புறம் ஒதுங்க வந்த பக்கத்து வீட்டு நாகமல்லி உன் கையில் ஒட்டியிருந்த ரத்தத்தைப் பார்த்து, உன்னிடம் துருவி துருவி கேள்விகள் கேட்டு கண்டுபிடித்திருக்கிறாள். அவளாலும் முழுமையாக உன்னிடம் இருந்து உண்மையை வாங்க முடியவில்லை. என்று நடந்ததோ? நீ எப்படி சமாளித்தாயோ? உன் ஒருத்திக்கு மட்டுமே உண்மை தெரியும். உன்னைப் பொறுத்தவரை உண்மை உன் மனக் கவசத்திற்குள் அடைக்கப்பட்ட கிளியாகிவிட்டது.

பதறியடித்து ஓடி வந்த உன் பாட்டியும் சித்திகளும் உன்னை உச்சி முகர்ந்தார்கள். ரேவதி பக்கத்தில் இருந்துப் பார்த்ததைப் போலவும், அவள்தான் நீ பெரிய பிள்ளையானதை முதலில் பார்த்ததாகவும் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தாள். நீ குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தாய். “அதுக்குத்தான் வீட்டில் ஒரு பொம்பளை இருக்கணும்னு சொல்றது” என்று முந்தானையில் மூக்கைத் துடைத்தபடி உன் பாட்டி விசும்பினார்.

சித்திகள் உன்னை விதவிதமாய் அலங்கரித்தார்கள். சிறு வயதில் அவர்களுடைய அக்காவைப் பார்த்த மாதிரியே இருப்பதாக பேசிக் கொண்டார்கள். உன் பாட்டி கண்ணில் ஈரம் கசிய நடக்கும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர் உன் கைகளை பிடித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார். உன் முகத்தில் ஒளியில்லை, சந்தோஷமில்லை. அது எங்களுக்குத் தெரிந்தாலும் நீ பயந்திருக்கிறாய் என நாங்களே காரணம் கற்பித்துக்கொண்டோம். ஒரு குழந்தையைப் புரிந்துகொள்ள முடியாமல், நாங்கள் எல்லாம் காட்சிக்குத் தொடர்பில்லாத கதை மாந்தர்களைப் போல் சுற்றிக் கொண்டிருந்தோம்.

பருவ வயதிற்கு உரிய குதூகலங்கள் இல்லாத உன்னைப் பார்த்து உன் சித்திகள் கவலை கொண்டார்கள்தான். அவர்களுக்கும் தாயற்ற சிறு குழந்தையின் ஏக்கமாகத் தெரிந்ததே தவிர, உன்னை அரித்துத் தின்று கொண்டிருக்கும் புற்று ஒன்று உன்னிடம் இருப்பதை அவர்களாலும் அறிய இயலவில்லை. நாங்கள் எல்லாம் வெகு சாதாரணமானவர்கள்தானே செல்லமே? சொற்களின் வழியாக மட்டும்தானே எங்களால் மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியும்? நீயோ எங்களிடம் முரணாக வந்துவிட்டாய். உனக்கு சொற்கள் பொருட்டே அன்று. சொற்களின் வழியாக நீ உணர்த்தியவை சொற்பமே.

பதிமூன்று ஆண்டுகள் கழித்து சித்திகளும் பாட்டியும் உன்னைத் தங்களுடன் அனுப்பச் சொல்லி மன்றாடினார்களே? அவள் அம்மா சாயலில் உள்ள சித்திகளோடு இருந்தால் கொஞ்சம் மலர்ச்சியாவாள் என்றார்களே? இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால்தான் நான் உன்னை அவர்களுடன் அனுப்பி விட்டதாக மற்றவர்கள் பேசுவார்கள் என்று ஊருக்குப் பயப்படுவதுபோல் நான் பதில் பேசினேனே? உண்மையிலும் என்னால் உன்னை விட்டுவிட்டு இருக்க முடியாதுதானே? என் எல்லாமாக நீதானே இருக்கிறாய் ரோஜா? நீ பிடிவாதம் பிடித்து நான் பாட்டியுடன் போகிறேன் என்று கிளம்பி இருக்கக் கூடாதா மகளே? உன் உயிருள்ள சிவந்த விரல்கள் இப்படி துவண்டு விழுவதை நான் பார்த்திருக்க வேண்டாமே? காலத்தின் விளையாட்டில் பலியாக்கப்பட்டது நீயா நானா? உன்னை பலிகொடுத்துக் கொண்டு என்னை பலிபீடத்தில் நிற்கவைத்துவிட்டுச் சென்றுவிட்டாயே மகளே…

கடும் கோடையில் சிறகு தீய தவிக்கும் பறவை, மழையின் முதல் துளியை தன் அலகில் வாங்கி உயிர்த்திரவத்தை அமுதமாய் பருகித் திளைக்கும். நீயும் நம் வீட்டின் தகிக்கும் தனிமையில் மூச்சுத் திணறும்போதெல்லாம் வெளிக்காற்றில் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறாய். பெரிய பிள்ளை ஆன பிறகு கண்ட நேரத்திற்கு வெளியில் போகக் கூடாது… அக்கம்பக்கத்து வீடுகளுக்கு நினைத்த நேரத்திற்குப் போகக் கூடாது என்று ரேவதி தன்னுடைய ஒரு சொல்லில் உன்னிடம் எஞ்சியிருந்த சுதந்திரத்திற்கும் தடைச் சங்கிலியைப் பூட்டியுள்ளாள். மெல்லிய வெளிச்சம் கிடைத்த சாளரமும் அடைக்கப்பட்ட விரக்தியில் உன் முகம் மொத்தமாய் ஒளியிழந்து போயிருக்கிறது. உன் பேச்சொலி முழுமையாய் அடங்கி, நீ பேசுவதை நிறுத்தியிருக்கிறாய். கடைசியாய் நீ எப்பொழுது என்னுடன் பேசினாய் என்பதே எனக்கு நினைவில் இல்லையே ரோஜா…

பத்து நாட்களுக்கு முன், மரத்தின் நிழல்கள் தழைய தழைய வீதியில் புரண்டு கொண்டிருந்த நாளில் நாம் இருவரும் கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றோம். உனக்கு எந்த கோர்ஸ் வேண்டும் என்று நான் கேட்டதற்கு, “நீயே சேர்த்துவிடுப்பா” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டு வெளியே சென்று விட்டாய். நான் பி.எஸ்.ஸி. கணிதம் சேர்க்க உன்னை அழைத்துச் சென்றேன். கல்லூரிக்குப் போய் உன்னை சேர்த்துவிட்ட நாளில் உனக்குப் புதிதாக கூற எந்த அறிவுரையும் எனக்குத் தோன்றவில்லை. அறிவுரைகள் சொல்லி உன்னை வழி நடத்துமளவிற்கு நீ என்றுமே என்னிடம் நடந்து கொண்டதில்லை. எனவே வெறுமனே “Happy college days Roja” என்று வாழ்த்தி, உன்னை விட்டுவிட்டு வந்தேன்.

இந்த பத்து நாட்களில் நான் என்ன செய்தேன்? உனக்குப் புதிய சூழல் எப்படி இருந்தது என்று எதுவுமே தெரியாத அளவிற்கு என் கண்ணை மறைத்தது எது? வேலையை மட்டும் காரணமாகச் சொல்ல முடியுமா? இரண்டு வெளியூர் கேம்புகளும் ஞாயிற்றுக்கிழமையின் அலுவலகப் பணியும் என்னை முழுமையாக உன்னில் இருந்து விலக வைத்துவிட்டதா? செல்லமே… ஒரு விநாடிகூட உனக்கு என் நினைவு வரவில்லையா? என் மீது இரக்கம் பிறக்கவில்லையா? உன்னையன்றி வேறு யார் என்னை அறிந்துகொள்ள முடியும்?

ஒரு பெண் ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு விதமான முகங்களைக் கொண்டிருக்க முடியுமா? ரேவதியை நான் வேறுபடுத்திப் பார்த்ததேயில்லை. அவள் என்னிடம் எப்படி இருந்தாளோ அப்படியே தான் உன்னிடமும் நடந்துகொள்வாள் என்று நான் எப்படி அவ்வளவு நம்பிக்கையோடு இருந்தேன். ஊர் வழக்கம் தெரியாத அப்பிராணியா நான்? காரணம் என்னவோ… எத்தனையோ… இனி அவை புரிந்தாலும் புரியாவிட்டாலும் அந்தக் காரணங்களை கண்டுபிடிப்பதின் மூலம் நீ எனக்குத் திரும்ப கிடைக்கப் போவதில்லை.

பலூனில் அடைபட்ட காற்று காரணம் புரியாத கணத்திலேயே கையில் வைத்திருந்த குழந்தையை அழ வைத்துவிட்டு வெடித்துச் சிதறுகிறது. பேதமையுடைய சிறு குழந்தையாக்கி என்னை அழ வைத்துவிட்டுச் சென்று விட்டாயே கண்ணம்மா? மகளே… உன் அளவிற்கு எனக்கு மேன்மை இல்லை… நடந்தது என்ன என்று புரியவில்லை… நீ கல்லூரியில் மயங்கி விழுந்துவிட்டாயாம்… உடன் படிக்கும் பிள்ளைகள் உனக்குத் தண்ணீர் கொடுத்து எழுப்பி உட்கார வைத்து, ஆஸ்பிடல் போக அழைத்திருக்கிறார்கள். மறுத்த உன்னைப் பாதுகாப்பாக வீட்டில் விட உடன் படிக்கும் ஒரு பையன் தன் வண்டியில் உட்கார வைத்து அழைத்து வந்திருக்கிறான்.

உன்னை அவன் வீட்டில் விட்டுச் சென்றதை ரேவதி பார்த்திருக்கிறாள். உள்ளே நுழைந்த உன்னை வழியிலேயே மறித்து, “காலேஜ் போய் பத்துநாள் ஆகலை… அதுக்குள்ள ஆள் பிடிச்சாச்சா…?” என்று விஷ ஊசிகளால் தாக்கி இருக்கிறாள். இந்த பதினெட்டு வயதில், பிறந்த அன்று வாய் விட்டு அழுதவள்தான் நீ… என்னைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்று பிறகு ஒரு நாளும் உன் கண்ணீல் நீரைப் பார்த்ததில்லை.

நான் இரவு பத்து மணிக்கு வீட்டிற்குத் திரும்பும் நேரத்திற்காக தெரு முனையிலேயே காத்திருந்த நம் தோட்டத்து வீட்டு கமலா பெரியம்மா தெருக்கோடியிலேயே என்னைக் கட்டிக்கொண்டு அழுதது… என்னவோ ஏதோ என்று பதறிய என்னை கைப் பிடித்துக் கொண்டு கமலா பெரியம்மா கீச்சு குரலில் என்னிடம் கெஞ்சியது… “ரோஜாவை அவள் பாட்டிக்கிட்ட அனுப்பிடுப்பா. அவள் எங்கியாவது கண் மறைய நிம்மதியா இருக்கட்டும். பொழுதுபோன நேரத்துல அந்தக் குழந்தை தோட்டத்துல கிணத்துப் பக்கம் உட்கார்ந்துக்கிட்டு அம்மா, ம்ம்மா…ன்னு வாய்விட்டு அழுவதை என்னால பாக்க முடியலை. என் அடிவயிறு கலங்கிப் போச்சுப்பா… உன் பொழைப்பு நாலு எடத்துக்கு ஓட்றதா இருக்கு. என் பேச்சை கேளு. இனிமே அவ இங்க இருந்தா உனக்கு உன் பொண்ணு முழுசா கெடைக்க மாட்டா. ஏன் பெரிம்மா இப்படி பேசுறேன்னு பாக்காதே. எனக்கு மனசுத் தாங்கலை. சொல்லிட்டேன்… நான் ஏழு பிள்ளையைப் பெத்தவ… ஒரு பொம்பள கொழந்த நிராதரவா நிக்கறதைப் பார்த்து எனக்கு அடி வயிறு நெருப்புப் புடிச்ச மாதிரி எரியுது” என்று என் கண்முன் இருந்த கரும் திரையை விலக்கினாள்.

நேற்று இரவு நான் நடை பிணமாய்த்தான் வீடு வந்தேன். நீ தூங்கியிருந்தாய். அப்பொழுதே எழுப்பி உன்னுடன் பேச நா துடித்தது. பெருந்துயரங்களில் இருந்து அலை ஒதுங்கிய சாந்த முகத்துடன் நீ தூங்கிக் கொண்டிருந்தாய். உன்னை எழுப்ப மனமின்றி காலையில் பேசலாம் என்று உன் காலடியிலேயே உட்கார்ந்திருந்தேன்.

விடியல் உன்னை எழுப்பியதா? நீ விடியலை முன்கூட்டி விழிக்கச் செய்தாயா மகளே? இந்த நாளுக்கு மரணத்தின் சாம்பல் நிறத்தைப் பூசி நீ ஒரு வினாடியில் முடிவெடுத்து என் கண்ணெதிரிலேயே உன் வாழ்வை நிறைவு செய்து கொண்டாயே? மகள் மரணத்தின் வாயிலில் நுழைவதை அறியா கையாலாக அப்பனாய் நான் காலடியில் கிடக்க என்னை செத்த எலி போல் புறக்கணித்து நீ மரணத்தைத் தழுவிக் கொண்டாயே செல்லமே…

என் தங்க மகளே… இரவு முழுக்க விழித்திருந்த எரிச்சலில் கண் திறக்க முடியாமல் ஆனால் உயிர் வெளியேறும் பிளிறல் ஒலி கேட்டு அலறி அடித்து எழுந்து பார்க்கும்போது உன் கடைசி விடைபெறல் உன் கண்களில் மின்னியதே…

என் முகத்திற்கு நேராகத் தொங்கிக் கொண்டிருந்த உன் கால்களைப் பார்த்தேன். மருத்துவமனையில் நீ பிறந்த அன்று செவிலி உன்னைச் சுற்றிக் கொடுத்த உன் அம்மாவின் பழம் புடவையில் உன் கால்களைக் கட்டி வைத்திருக்கிறாய்.’

“அய்யோ… தாமரை…”

“அ. வெண்ணிலா” <vandhainila@gmail.com>

A. Vennila

Amrutha

Related post