நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: ஒரு தவப்பயன் – சந்தியா நடராஜன்

 நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: ஒரு தவப்பயன் – சந்தியா நடராஜன்

ந்த நூற்றாண்டு தொடங்கியபோது எழுந்தது புதுமைப்பித்தன் பதிப்பகம். புதுமைப்பித்தன் பெயரில் ஒரு மாத இதழும் ஒரு பதிப்பகமும் தொடங்க வேண்டும் என்ற எனது நெடுநாளைய கனவு நிறைவேறியது. மாத இதழும் முறையாகப் பதிவு செய்யப்பட்டது. 2000ஆவது ஆண்டில் 13 நூல்கள் வெளியிடப்பட்டன. பதிப்பகத்தின் உரிமையாளர் எனது துணைவி சந்தியா நடராஜன். பக்க பலமாக நின்றவர், சந்தியாவின் தந்தை திரு.சௌந்தரராஜன். பதிப்பகப் பணிகளை முன்னெடுத்துச் சென்றவர் கவிஞர் இளையபாரதி. எல்லாம் நல்லபடியாக நடந்தேறி வந்த வேளையில் பேரிடியாய் ஒரு செய்தி வந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘புதுமைப்பித்தன்’ பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு வழக்குத் தொடரப்பட்டது. தொடர்ந்தவர் புதுமைப்பித்தனின் மகள் திருமதி தினகரி சொக்கலிங்கம். இந்த வழக்கு சுமுகமாக முடிந்தது. இன்றுவரை தினகரி அன்போடு பழகிவருகிறார்.

அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் பதிவானதே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒரு வழக்கறிஞர் மூலமாகக் கேள்விப்பட்டு அந்தச் செய்தியைச் சொல்லி அனுப்பியவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர், சிகரம் செந்தில்நாதன். அந்த வழக்கில் எங்கள் சார்பாக வாதாடியவரும் அவரே. ஒரு தனி நபருக்காக மட்டும் அந்த வழக்கில் அவர் ஆஜராகவில்லை. ‘புதுமைப்பித்தன் தனிச் சொத்து அல்ல; தமிழ்ச் சொத்து’ என்று உணர்ந்து அக்கருத்துக்கு வலிமை சேர்ப்பதும் அவரது நோக்கமாக இருந்தது. ‘புதுமைப்பித்தன் பதிப்பகம்’ தொடர்ந்து செயல்பட சமரசத் தீர்வு கண்ட பின்பும் புதுமைப்பித்தன் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதில் தீவிரம் காட்டினார் செந்தில்நாதன்.

புதுமைப்பித்தன் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன. இக்காரியம் ஈடேறியதில் தமிழகத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினருக்கும் பெரும்பங்கு உண்டு. முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் தீவிர ஆர்வம் கொண்டு உழைத்து புதுமைப்பித்தனை நாட்டுடைமையாக்கும் பணியில் துணை நின்றார். புதுமைப்பித்தன் மீது மாறாக் காதல் கொண்ட பித்தன், கவிஞர் இளையபாரதியின் செயல் தீவிரம் அளவிடற்கரியது. இத்துணை வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னும் புதுமைப்பித்தன் குடும்பத்தினருடன் நானும் இளையபாரதியும் இன்றுவரை ஒரு சுமுகமான உறவு கொண்டிருக்க, செந்தில்நாதன் வழக்கறிஞர் என்ற நிலையில் இல்லாமல், புதுமைப்பித்தன் பற்றாளர் என்ற நிலையில் செயல்பட்டதே காரணம்.

புதுமைப்பித்தன் நூற்றாண்டை ஒட்டி சென்னைப் பல்கலைக் கழகத்தில் புதுமைப்பித்தன் அறக்கட்டளை ஒன்றை நிறுவுவதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவரும் அவரே. அந்த அறக்கட்டளை நிறுவுவதற்கு எப்போதும் போல அவர்மீது நன்மதிப்புக் கொண்ட இடதுசாரித் தோழர்களே இந்த முயற்சிக்கும் துணை நின்றனர். இறுதிக் கட்டத்தில் திரட்ட வேண்டிய நிதியில் துண்டு விழுந்தது. முன்வந்தவர்களில் சிலர் பின்வாங்கினார்கள். பற்றாக்குறையை ஈடுசெய்ய பிரளயன் கைகொடுத்தார். அவரது நாடகம் ஒன்று மேடையேற்றப்பட்டது. கிடைத்த வசூல் மூலம் இலக்கை எட்ட முடிந்தது. தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பாக நடைபெற்ற புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவில் கடற்கரய் ஆற்றிய உரை போற்றத்தக்கதாக இருந்தது. இப்படியாக வழக்கறிஞர் செந்தில்நாதனுடன் ஏற்பட்ட தொடர்பு இருபதாண்டுகளுக்கும் மேலாக பாசப்பிணைப்புடன் வலுப்பெற்று வளர்ந்து வருகிறது.

புதுமைப்பித்தன் பதிப்பகம் சந்தித்த சிக்கலின்போது உருவானதுதான் சந்தியா பதிப்பகம். கடந்த இருபது ஆண்டுகளாகச் சிகரம் ச.செந்தில்நாதன் படைப்புகள் அனைத்தும் இந்த இரண்டு பதிப்பகங்கள் மூலம்தான் வெளிவந்துள்ளன. ஓர் இடதுசாரி எழுத்தாளர் என்று மட்டுமே அறியப்பட்டவரின் முகம் இன்று ஒரு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளராகக் காட்சியளிக்கிறது. பொதுவாக இடதுசாரிகள் பக்தி இலக்கியங்களில் கை வைக்கமாட்டார்கள். பாரதியையும் கம்பனையும் தொடர்ந்து பேசிவந்த தோழர் ப.ஜீவானந்தம் இதற்கு விதிவிலக்கு. இந்தப் பாதையில் நடைபோட்ட இன்னொரு கம்யூனிஸ்ட்காரர் ஜெயகாந்தன். அவரது சுயசிந்தனை அவரது ஏற்ற இறக்கங்களுக்குக் காரணமாய் இருந்தது. வழக்கறிஞர் ச.செந்தில்நாதனின் பார்வை வித்தியாசமானது. ஒரு பழகிய பாதையில் நடைபோட்டுக் கொண்டே புதிய பாதைகளைக் கண்டறிவதுதான் அவரது செயல்பாடு.

‘மதம் ஒரு அபின்’ என்ற மார்க்ஸின் பிரகடனம் இடதுசாரி இயக்கத்தில் மையம் கொண்டிருக்கிறது. கடவுள், பக்தி என்ற சொற்களைக் கடந்தவர்கள் கம்யூனிஸ்டுள். மனிதம் மட்டுமே மார்க்கம் என்பது அவர்களது மதம். இந்த இடத்தில் மதம் என்ற சொல்லைக் ‘கொள்கை’ என்ற பொருளில் ஏற்கவும். ஆனால், கடவுள் கொள்கையில் நமது வழக்கறிஞரின் நோக்கும் போக்கும் வேறுபட்டவை. அவரது வாதமும் விவாதமும் பெருந்திரள் நம்பிக்கையைக் கருத்தில் கொண்டவை. அந்த நம்பிக்கையைப் பொருட்படுத்துபவை; புறக்கணிக்காதவை.

கடவுள் இல்லை என்பதுதான் அவர் கருத்து. ஆனால், அதையே ஒரு முக்கியப் பிரச்சாரமாகச் செய்து கொண்டிருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. ‘சாதாரண ஏழை எளிய மக்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கடவுள் வணக்கம் ஒரு ஆறுதலாக இருந்தால் நாம் குறுக்கிட்டு அவர்களைச் சிறுமைப்படுத்தும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக அறிவியல் சிந்தனைகளை வளர்க்க வேண்டும்’ என்று வழக்கறிஞர் முருகவேள் கண்ட நேர்காணல் ஒன்றில் தெளிவாகப் பேசுகிறார் சிகரம் ச.செந்தில்நாதன்.

அவரது சமயப் பார்வை சைவத்தைத் தமிழ்மொழி சார்ந்ததாகவும் தமிழினம் சார்ந்ததாவும் முன்வைக்கிறது. ‘முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான்’ என்று முருகன் குறித்துப் பாடும் அருணகிரிநாதரை ஒரு தமிழ் உணர்வாளராக முன் நிறுத்துகிறார் ச.செ.

“வள்ளலாரின் திரு அருட்பாவை நாம் ஒதுக்கினால் மக்கள் நம்மை ஒதுக்குவார்கள். இந்தப் பக்தி இலக்கியங்களை, தமிழை ஒதுக்கிவிட்டுப் பார்க்கக்கூடாது. தமிழனுக்காக ஒலித்த குரல் பக்தி இலக்கியம் என்று பார்க்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் திராவிட இலக்கியத்தின் கூறுகளில் மிக முக்கியமானது பிராமணிய எதிர்ப்பு. பிராமணிய எதிர்ப்பை முன்னிலைப்படுத்தும் பக்தி இலக்கியம் உண்டு” என்று உரத்த குரலில் தனது சுய சிந்தனையை, தான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் பொதுப் போக்குகளிலிருந்து விலகி நின்று வெளிப்படுத்தியிருக்கிறார் ச.செந்தில்நாதன்.

அவரது பேச்சைப் போலவே எழுத்தும் இருக்கும்; செயலும் இருக்கும். இக்கால இலக்கிய நிகழ்வுகளில் அவரது மேடைப்பேச்சைப் பலமுறை கேட்டிருக்கிறேன். பேசும் பொருளிலிருந்து விலகாத இவரது பேச்சில் ஆழமும் விரிவும் தெளிவும் இருக்கும்.

குரலில் அழுத்தமும் உறுதியும் இருக்கும். வைரத்தின் கூர்மை இருக்கும். ஆனால், யாரையும் காயப்படுத்தாத அந்தப் பேச்சு, எதிரியைக் கலக்கமுறச் செய்யும். வழக்கறிஞரல்லவா? வாதத்திறமை நீதிமன்றத்தோடு நிற்காது. மக்கள் மன்றத்திற்கும் வந்து இறங்கும். இவரைப் போலவே கனகச்சிதமாக, பேசுபொருள் சட்டகத்துக்கள் மட்டுமே நின்று ஆழ்ந்த கருத்துகளைத் தனது உரையில் வெளிப்படுத்தும் இன்னொரு எழுத்தாளர் ச.செந்தில்நாதன் போற்றும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஒத்த சிறகுகள் கொண்ட பறவைகள் ஒன்றாகத்தானே பறக்கும்.

மேடைப் பேச்சு பற்றிக் குறிப்பிடும்போது என்னையறியாமல் ஜெகே என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த ஜெயகாந்தனின் முகம் மனத்திரையில் எழுகிறது. அவரது குரலும் ஒலிக்கிறது. அவர் மக்கள் செல்வாக்குப் பெற்ற எழுத்தாளராக வலம் வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போற்றிப் புகழ்ந்த எழுத்தாளர். பாரதியும் வள்ளுவரும் அவர் சித்தத்தில் ஜீவித்திருந்தவர்கள். அதனால் தமிழ் அவர் பேச்சைக் கேட்டது. நாம் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அவர் சொன்ன இடத்தில் சொல் நின்றது. வேண்டிய போது நின்ற இடத்திலிருந்து சீறிப்பாய்ந்தது. தமிழகத்து எழுத்தாளர்களில் நிகரற்றவராய், நெஞ்சுரம் வாய்த்தவராய் இன்றுவரை தமிழகம் ஜெயகாந்தனைக் கொண்டாடி வருகிறது. ‘பாரதியின் ஆன்மிகப் பார்வை’ என்ற ஜெயகாந்தனின் உரை இணையத்தில் கேட்கக் கிடைக்கிறது. அது நம் காலத்தின் நற்பேறு. ஜெயகாந்தன் நம் காலத்து நாயகனாக வாழ்ந்தார். அவருக்குப் பிறகு நவீன இலக்கிய மேடைகளில் அப்படிப்பட்ட ஆற்றல்மிகு குரலைக் கேட்பது அரிதாகிவிட்டது. இன்று பலரும் உரையாற்றுவதில்லை; கட்டுரை எழுதி வந்து வாசித்து விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஜெயகாந்தனை முதன்முதலாகக் கடுமையாக விமர்சித்து ‘ஜெயகாந்தன் திசை மாறிப் போகிறார்’ என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்படும் தாமரை பத்திரிகையிலேயே எழுதியவர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன். அக்கட்டுரை கட்சியையும் கட்சி சார்ந்த ‘தாமரை’யின் வாசகர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. விளைவு தாமரையின் ஆசிரியராக இருந்த தி.க.சி. தமது பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. இப்படி ஒரு வாத விவாத நிபுணத்துவம் கொண்ட விமர்சகராகவும் பத்திரிகையாளராகவும் தமிழருக்கு அறிமுகமான ச.செ தொடங்கிய இலக்கிய இதழ்தான் ‘சிகரம்’.

‘சிகரம்’ முதல் இதழின் வெளியீட்டு விழா இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாளில் (26 ஜூன் 1975) நிகழ்ந்தது. இருந்தும் ‘அவசர நிலை’யின் தணிக்கைகளுக்குள் அகப்படாத பத்திரிகையாக சிகரம் இதழ் தப்பி வந்தது ஒரு விந்தை. சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் தொழிற்சங்கக் கூடத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் வி.பி. சிந்தன், பி.ஆர். பரமேஸ்வரன், இளவேனில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிகரத்தில் ஒளி ஏற்றியவர்கள் இளவேனில், இளையபாரதி, வைகறைவாணன், பாரதி விஜயன், பெ.நா. சிவம், கி.த. பச்சையப்பன், முருகு. இராசாங்கம் ஆகியோர். இவர்களில் முதல் இருவர் மாயவரத்துக்காரர்கள்; எங்கள் ஊர்க்காரர்கள். 1975-இல் தொடங்கி 1982 வரையில் சிகரம் இயங்கியது. சிகரத்தில் வெளிவந்த படைப்புகளைத் தொகுத்து ஒரு நூலாக்கி ‘சிகரம்’ சார்பில் சந்தியா பதிப்பகம் 2005-இல் வெளியிட்டது. சிகரம் இதழ்களில் வல்லிக்கண்ணன், டி.செல்வராஜ், மேலாண்மை பொன்னுச்சாமி, ராஜம் கிருஷ்ணன், கமலாலயன், பா. செயப்பிரகாசம், கோணங்கி, என்.ஆர். தாசன், உதயை மு.வீரையன் உள்ளிட்ட பலர் சிறுகதை எழுதியிருக்கிறார்கள். இந்த வரிசையில் முதல் நான்கு எழுத்தாளர்கள் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.பி. சிந்தன், கோ. ராஜாராம், வைகறைவாணன், கே. முத்தையா, கோமல் சுவாமிநாதன், ந. அரணமுறுவல் முதலிய எழுத்தாளுமைகளின் கட்டுரைகள் சிகரத்தில் இடம்பெற்றன. தணிகைச் செல்வன், கொ.மா. கோதண்டம், தமிழன்பன், புவியரசு, வ.ஜ.ச. ஜெயபாலன், கந்தர்வன், தேனி சீருடையான், பாவண்ணன் ஆகியோர் சிகரத்தில் பங்களிப்பு செய்த கவிஞர்கள்.

ச.செ., தான் எடுத்த முடிவிலும் கொண்ட கொள்கையிலும் பற்றுறுதி மிக்கவர். ஆனால், அவரது செயல்பாட்டில் கனிவும் நிதானமும் நிழல்போலக் கூட வரும். கடுஞ்சொல் பேசாதவர். காரியத்தில் உறுதி கொண்டவர். வாக்கில் தெளிவு இருக்கும். மாற்றானையும் மாற்றும் சொல்திறம் இருக்கும். எல்லோரையும் அணைத்துச் செல்லும் பண்பிருக்கும்.

16.12.2018 அன்று ‘எழுத்துப் போராளி தோழர் சிகரம் ச.செந்தில்நாதன் படைப்புலகம்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முழுவதும் ஒரு தோழருக்காகத் தோழர்களால் நடத்தப்பட்டது. அது ஒரு முழுநாள் நிகழ்வு. காலை முதல் இரவு வரை கைகுலுக்கிக் கொண்ட கரங்கள் எல்லாம் செங்கொடி பிடித்த கரங்கள். பேசியவர்கள் எல்லாம் இடதுசாரிகள். இவர்கள் மத்தியில் அமைதியும் ஆன்மிகமும் தவழ்ந்த முகத்துடன் ஒருவர் பேச வந்தார். அவர்தான் அமுதசுரபியின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன். அவரது இருப்பே எனக்கு ஆச்சரியமளித்தது. ‘இவர் எப்படி இங்கே?’ என்ற வினா என் மனத்தில் எழுந்தபடியே இருந்தது. கூட்டம் முடிந்து வீடு திரும்பும்போது நான், திருப்பூர் கிருஷ்ணன், ச.செ. எல்லாம் ஒரே காரில் வந்தோம். அப்போது மனதில் இருந்த வினா வெளிப்பட்டு ‘அமுதசுரபி’ ஆசிரியரின் செவியில் ஒலித்துவிட்டது.

திருப்பூர் கிருஷ்ணன் சொன்னார்: “நானும் செந்தில்நாதனும் வல்லிக்கண்ணனும் ஒன்றாகவே பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்ற காலம் ஒன்றிருந்தது. அப்போது அவரிடம் பச்சை கலர் அம்பாசிடர் கார் இருந்தது. அது எப்போதும் எங்கள் வாகனமாகவே இருக்கும்” என்று ச.செ. மீது தான் கொண்டிருந்த நட்பையும் அன்பையும் அவருக்கே உரிய குரல்மொழியில் சொல்லிக்கொண்டு வந்தார். ச.செ.வின் முகத்தில் நெகிழ்ச்சி தெரிந்தது. உதடுகளில் ஓசையின்றிக் குமிண் சிரிப்பு மலர்ந்தது. ‘நட்புக்கும் நாகரிகத்திற்கும் இலக்கணம் கண்டவர் திருப்பூர் கிருஷ்ணன்’ என்கிறார் ச.செ. இப்படி இலக்கியத்தில் எல்லாத் தரப்பினரையும் மனித நேயம் என்ற பண்பால் வென்றெடுத்தவர் ச.செ.

கடந்த இருபத்து இரண்டு ஆண்டுகளில் பெற்ற ச.செ.வின் கேண்மை என்பது சந்தன மரத்தில் கட்டிய தேன்கூடு போன்றது. அவர் அறிமுகப்படுத்தி வைத்த மேன்மைமிகு மனிதர்களின் நெஞ்சில் எனக்கும் இடம் கிடைத்தது. மரியாதை மிக்க அந்த மாபெரும் மனிதர்களிடத்தில் மரியாதையின் எல்லையைக் கடந்து அன்பின் வெளியில் உரையாடிக் கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்களில் அவரது மூத்த சகோதரர் இராசமாணிக்கம் முதலாமவர். ‘மனம் ஆன்மா மறுபிறவி’, ‘பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும்’, ‘ஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம்’, ‘பகவான் ரமணர்’, ‘சமூகப் போராளி சுவாமி விவேகானந்தர்’, ‘ஹிட்லர்’, ‘ஜின்னா’ ஆகியவை ச.இராசமாணிக்கம் எழுதி சந்தியா பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ள நூல்கள். கலில் ஜிப்ரானின் ‘The Prophet’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.

இரு சகோதரர்களில் இளையவர் கம்யூனிஸ்ட்; மூத்தவர் காங்கிரஸ்காரர். இருவருமே சாயா அன்பினில் சளைத்தவர்கள் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை இருவர் குடும்பமும் இணைந்து சுற்றுலா செல்வது வழக்கம். மாதொருபாகனை வணங்குவதில்லையே தவிர மாதொருபாகனாய் வாழ்பவர் ச.செ. எந்தப் பொது நிகழ்ச்சிக்கும் தனது இணையர் லட்சுமிகாந்தம் அம்மாள் இல்லாமல் வக்கீல் சார் வரவே மாட்டார். திருமதி. லட்சுமிகாந்தம் சேலம் சாரதா கல்லூரியின் முன்னாள் துணைப்பேராசிரியர். தற்போது சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மருமகள் காந்திமதியின் துணையோடு ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். ச.செ.வின் மகன் சண்முகசுந்தரம் தந்தைக்குத் துணையாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். ச.செ.வின் குடும்பம் நல்ல குடும்பம்; இனிய குடும்பம்.

ச.செ. மூலம் எனக்குக் கிடைத்த இன்னெரு மாணிக்கம் ஒரு காந்தியவாதி. முன்னாள் தமிழக சட்டமன்ற சபாநாயகர் திரு.செல்லபாண்டியன் அவர்களின் மருமகன் திரு. அ.பிச்சை. அடிநாள் முதல் அவர் எழுதியுள்ள ‘காந்தியச் சுவடுகள்’, ‘இதுதான் இந்தியா’, ‘என் பார்வையில் இந்திய அரசியல்’, ‘காந்தி என்கிற காந்தப்புலம்’ உள்ளிட்ட அனைத்து நூல்களும் என் கைபட்டு வெளிவந்தவைதான். இவர்கள் மூவரும் எண்பதைக் கடந்தவர்கள். இருந்தாலும் இவர்களின் பள்ளித் தோழன் போலவே பழகி வருகிறேன். குடும்ப நண்பர்களாக, குடும்ப உறவுகளாக எங்கள் பிணைப்பு செம்மை ஏறி நிலைத்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மூல ஊற்றாய் நிற்பவர் மரியாதைக்குரிய செந்தில்நாதன். சந்திப்புகள் ஒரு மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றக்கூடும்; வாழ்வை வளம் பெறச் செய்யும்.

பொருநராற்றுப் படையில் பரிசில் வேண்டி, காட்டு வழியில் வரும் ஒரு புலவனைப் பரிசில் பெற்று வருபவன் சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு ஒரு தவப்பயனாம். பரிசில் தேடி வருகிறவன் வேறு பாதையில் சென்றிருந்தால் அவனை ஆற்றுப்படுத்தியவனைச் சந்திக்க இயலாமல் போயிருக்கலாம். நெடுஞ்சுரம் கடந்து வந்தவன் அல்லலுக்கு ஆட்பட்டிருப்பான்.

அறியாமையின் நெறிதிரிந்து ஒராஅது
ஆற்றெதிர் படுதலும் நோற்றதன் பயனே
(பொருநர்: 53-60)

என்ற சங்கப்பாடல் வரிகள் செந்தில்நாதனை நினைக்கும்போதெல்லாம் நினைவுக்கு வருகிறது. அவருடானான சந்திப்பு ஒரு தவப்பயன்.

 

(தொடரும்)

சந்தியா நடராஜன் <sandhyapathippagam@gmail.com>

Sandhya Natarajan

 

Amrutha

Related post