மணல் மாஃபியாவும் ஐ.நா. சபை எச்சரிக்கையும் – பிரபு திலக்

 மணல் மாஃபியாவும் ஐ.நா. சபை எச்சரிக்கையும் – பிரபு திலக்

“உலகம் முழுவதும் தற்போது அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மணல் இருக்கிறது. எல்லா நாடுகளிலும் மணல் உற்பத்தியைவிட நுகரப்படுவது அதிகமாக உள்ளது. இதனால், இந்த பூமி விரைவில் மணல் பற்றாக்குறையை சந்திக்கும். இது பல்வேறு சூழியல் நெருக்கடிகளை உருவாக்கும்” என்று சமீபத்தில் வெளியான, 22 அறிஞர்கள் தயாரித்த ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) அறிக்கை கூறுகிறது.

இதன் தொடர்ச்சியாக, “பருவநிலை மாற்றத்தால் பூமி புதுப்புது நெருக்கடிகளை சந்திக்கும் இன்றைய நிலையில், இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள மணல் மிகவும் அவசியம். உற்பத்தியைவிட அதிகமாக மணல் அள்ளப்படுவதால் ஆறுகளும் கடலோரங்களும் பாதிக்கப்படுவதோடு பல சிறு தீவுகள் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன.

தென் கிழக்கு ஆசியாவின் நீள நதியான மேக்கோங்கில் கழிமுகம் தாழ்ந்து, வளம் மிக்க வயல்களில் உப்புத் தன்மை ஏறி, அந்த பகுதி முழுவதும் பயனற்றுப் போய்விட்டது. ஸ்ரீலங்காவின் ஒரு ஆற்றில் நீரோட்டம் எதிராக மாறி கடல் நீர் ஊருக்குள் புகுந்ததோடு அது கடல்வாழ் முதலைகளையும் உள்ளே கொண்டுவந்து விட்டது.

எனவே, மணல் பற்றாக்குறையால் ஏற்பட உள்ள நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக கடற்கரை, ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறது ஐ.நா.

புவியியல் மாறுபாட்டின் ஒரு பகுதியாக பாறைகள் சிதைந்து உருவாகும் ஒரு கனிமம்தான் மணல். நதிகளின் ஓட்டத்தில் மலைகளில் இருந்து இழுத்து வரப்படும் பாறைகள், ஆறுகள் மற்றும் ஓடைகளில் மெதுவாக பயணித்து வழியெங்கும் உடைபட்டு மணலாக உருவாகின்றன. இப்படி ஆற்றங்கரை, கடற்பகுதி மற்றும் கடற்கரைகளில் குவிந்திருக்கும் மணல் திட்டுகள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதிலும் படிகப் பாறைகள், களிமப் பாறைகள் உருக்குலைந்து மணலாக லட்சக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும்.

இப்படி பாலைவனம், கடற்கரை, ஆறுகள், ஓடைகளில் உருவாகியுள்ள மணல் திட்டுகள் சுற்றுச்சூழலை சீராக்கும் வேலையை சத்தமின்றி செய்து கொண்டிருக்கின்றன. கடற்கரைகளில் மண் அரிப்பை கட்டுப்படுத்துவதுடன், புயல் எழுச்சி, கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் ஏற்படும் தாக்கங்களை தடுக்கும் வேலையை கடற்கரை மணல் திட்டுகள் செய்கின்றன. இதனால்தான் கடற்கரையில் மணல் அளவு குறையும் போது அலைகளால் நிலங்கள் அரிக்கப்படுகின்றன. கடற்கரை அருகில் உள்ள வீடுகளிலும் விவசாய நிவங்களிலும் கடல்நீர் புகுகின்றன.

பாலைவனங்களிலும் கடற்கரையிலும் ஆறுகளிலும் எண்ணற்ற உயிரினங்களின் வாழிடமாகவும் இந்த மணல் திட்டுகள் இருக்கின்றன. ஆற்றங்கரை ஓரங்களில் மணலில் உள்ள கரிம பொருட்கள்தான் சிறிய மீன்களின் உணவு. ஆற்று மணல், ஓடும் நதி நீரை பிடித்து ஈர்த்து வைத்திருக்கும் பஞ்சு போன்ற அமைப்பாகவும் செயல்படுகிறது. இதனால்தான் ஆற்றில் எங்கே தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கிறது. இதுதான் நிலத்தடிக்கு நீரை செலுத்தும் ஒரு ஊக்கியாகவும் செயல்பட்டு நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது. எனவே, ஆற்றில் அதிகப்படியாக மணல் அள்ளப்படும்போது அது நிலத்தடி நீர் பாதிப்பையும் நீர்வாழ் விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளின் வாழ்விடத்தையும் அழிக்கும். ஆற்றின் படுகை மற்றும் போக்கை மாற்றி கரைகளை அரித்து வெள்ளத்திற்கு வழிவகுக்கும்.

ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் மணல், கட்டுமானப் பணிகளில் பிரதான இடுபொருளாக இருப்பதால் முதல் இலக்காகின்றன. உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 பில்லியன் டன்னுக்கும் மேல் மணல் அள்ளப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே ஆண்டுதோறும் சராசரியாக 1.2 பில்லியன் டன் மணல் அள்ளப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மணல் மிக லாபகரமான ஒரு தொழிலாகவும் இருப்பதால் எல்லா நாடுகளிலும் மணல் மாஃபியாக்கள் உருவாகியுள்ளார்கள். இவர்களால், உலகின் முக்கிய நதிகளில் பெரும்பாலானவை அவற்றின் இயற்கை மணலில் 50 முதல் 95% வரை இழந்துவிட்டது என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

தமிழ்நாட்டின் ஆறுகளை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா போன்ற பக்கத்து மாநில கட்டுமான தேவைகளுக்கும் சேர்த்து மணல் திருட்டை சந்திக்கிறது. வடமாநிலங்களுக்கும் மாலத்தீவு உட்பட பல வெளிநாடுகளுக்கும்கூட தமிழ்நாட்டு மணல் கடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மழைக் காலமும் புதுமணலைக் கொண்டுவரும். ஆனால், தமிழ்நாட்டு ஆறுகளில் அள்ளப்படும் மணலின் அளவு, வரத்து மணலைவிடப் பன்மடங்கு அதிகம். இதனால் ஆற்றின் படுகை தாழ்ந்து போயுள்ளதை தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நதிகளிலும் பார்க்க முடியும். பல இடங்களிலும் மணலை ஆழமாகத் தோண்டி எடுத்து, ஆறுகளைப் பள்ளமாக்கி, அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடுத்துவிட்டார்கள். இதன் எதிர் விளைவுகளாக குளங்கள் வறண்டு தமிழ்நாட்டின் நீர்வளம் குறைந்துள்ளது.

ஆற்றின் தரை மட்டத்தை அளவிட்டு அந்த அளவினை நம்பியே ஏரிகளுக்கு நீரை இட்டுச்செல்லும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் மணல் அள்ளும்பொழுது அதன் ஆழம் அதிகரித்து விடுவதால் ஆற்றில் வரும் நீர் மேல் ஏறி கால்வாய்கள் வழியாக குளங்களுக்குச் செல்லாது. ஒரு பேச்சுக்காக கால்வாய்களையும் சேர்த்து ஆழமாகத் தோண்டினாலும் குளங்களின் தரை மட்டத்தை தாழ்த்த முடியாது. ஒரு வேளை குளங்களைத் தோண்டி ஆழமாக்கினாலும் பாசனம் பெறும் நிலங்களை ஆழமாக்கிட முடியாது. இதனால் ஆற்றில் நீர் வந்தாலும் குளங்கள் நிரம்பாமல் வீணாக கடலுக்குச் சென்று சேரும் நிலையை ஒவ்வொரு பெருமழையிலும் சந்தித்து வருகிறோம்.

இதற்கு ஒரு உதாரணம், வைகை. தமிழ் நாட்டின் முக்கியமான ஆறுகளில் ஒன்று வைகை. குறைவாக மழை பெறும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆற்றைதான் நம்பியிருந்தன. இந்நிலையில், வைகையில் வரம்புக்கு மீறி மணல் அள்ளப்பட்டதன் விளைவு அதனை அண்டியிருக்கும் குளங்கள் சேதமடைந்துள்ளன. இந்த அபாயத்தை வைகைப் பாசனப் பகுதி முழுவதும் காணலாம்.

மணலை அள்ள அள்ளக் குறையாமல் தந்துகொண்டிருக்கும் அட்சயப் பாத்திரங்களல்ல ஆறுகள். மணல் உருவாவதை எக்காரணம் கொண்டும் நம்மால் விரைவாக்க முடியாது. எனவே, நாம் ஆற்றிலிருந்து எடுக்கும் மணலும் இயற்கையில் உருவாகும் மணலும் ஒரே விகிதத்தில் இருந்தால் மட்டுமே சமநிலையைப் பேண முடியும்.

தமிழ்நாட்டில் எண்பதுகளில் மணல் அள்ளுவதை நெறிப்படுத்தும் பொறுப்பு ஊராட்சிகளிடமிருந்து பொதுப்பணித் துறைக்குக் மாற்றப்பட்டது. ஆனால், 1990-களில் மணலுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போனதும் மணல் அள்ளுவதற்கான உரிமை சில தனியார்களுக்கு வழங்கப்பட்டது. முறைகேடுகள் மலிந்தன. இதனால், சமூக ஆர்வலர்கள் நீதிமன்றங்களை நாடினார்கள். அதற்குப் பலன் இருந்தது. 2003-ல் தனியார்களிடமிருந்த மணல் அள்ளும் உரிமையை அரசு ரத்து செய்தது. அது பொதுப்பணித் துறைக்கு வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றமும் பல அறிவுறுத்தல்களை வழங்கியது. மணல் அள்ளும் படுகைகளை நிலவியல் துறை அங்கீகரிக்க வேண்டும். சூழலியல் துறை தடையில்லாச் சான்று வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் உரிமம் பெற வேண்டும். நான்கடி ஆழத்துக்கு மேல் மணல் எடுக்கக்கூடாது. அரசுச் செயலரின் அனுமதியிருந்தால் மட்டுமே இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டன. எனினும், அவை எல்லாம் தாள்களில் மட்டுமே உள்ளன.

பொதுப்பணித் துறையால் மணலை எல்லாப் பயனர்களுக்கும் நேரடியாக வழங்க முடியவில்லை என்று காரணம் சொல்லப்பட்டு மணலை அள்ளவும் லாரிகளில் ஏற்றவும் பயனர்களுக்கு மறு விற்பனை செய்துகொள்ளவும் ஒப்பந்தக்காரர்களை நியமித்தது. இது மீண்டும் ஆறுகள் மணல் மாஃபியா கைகளுக்கு செல்லவே வழிவகுத்துள்ளது.

“நிலமை இன்னும் கை மீறி போய்விடவில்லை; இப்போதே நடவடிக்கை எடுத்தால்கூட மணல் நெருக்கடியைத் தவிர்த்து விடலாம்” என்று கூறுகிறது ஐ.நா.

எனவே, இப்போதே விழித்துக்கொள்வோம், மணல் வளம் காப்போம்.

prabhu thilak

Amrutha

Related post