நாம் கற்பனை என்று நினைப்பதை யாரோ எங்கோ செயலாக உருக்கொடுக்கிறார்கள்!

 நாம் கற்பனை என்று நினைப்பதை யாரோ எங்கோ செயலாக உருக்கொடுக்கிறார்கள்!

சாரா கேன்

நேர்கண்டவர்: டன் ரெபல்லாட்டோ

தமிழில்: ஸிந்துஜா

 

(சாரா கேன் குறித்த அறிமுகக் கட்டுரையை படிக்க)

 

நீங்கள் திர்கொண்ட மிக வன்மையான கண்டனங்களும் தனிநபர் சாடல்களும் வேறு எந்த ஒரு நாடக ஆசிரியருக்கும் நேர்ந்ததாக எனக்குத் தோன்றவில்லை. இதற்குக் காரணம் என்ன?

அவர்களுக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை, தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன். படைப்பைப் பற்றி ஒன்றும் சொல்லத் தெரியாத போது படைப்பாளி மீது வந்து விழுகிறார்கள். விட்டால் நடிகர், இயக்குனர் மீதுகூட. ‘தகர்த்தல்’ நாடகத்துக்கு நிகழ்ந்தது என்ன? (என் மற்ற நாடகங்களுக்கான வெளிப்பாடுகளை இந்நாடகத்தின் விமரிசனங்கள் திரை போட்டு மூடிவிட்டன!) ஒவ்வொருவரும் ‘தகர்த்தல்’ மீதான விமரிசனத்திலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். மைக்கேல் பில்லிங்டன் (‘தி கார்டியன்’ இதழைச் சேர்ந்தவர்) வேறு எந்த நாடகத்தையும் விமரிசித்ததை விட இந்நாடகத்தைப் பற்றி அதிகமாக எழுதியிருக்கிறார்.

இந்நாடகத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்த அன்றிரவு என்ன நடந்தது? நாடகம் நடக்கத் தேர்ந்தெடுத்த இடம் ஒரு நடமாட்டமில்லாத இடம். கூட்டம் நடக்கவிருந்த கட்டிடத்தில் இருந்த பெரும்பாலோர் நாடகம் நடப்பதை விரும்பவில்லை. நடந்த தேதியையும்கூட கிறிஸ்துமஸ்ஸுக்குப் பிறகு என்று வைத்தார்கள். ஏனென்றால், அந்த நாள்களில் நாடக அரங்குகள் பக்கம் மக்கள் வருவதில்லை என்று. கூட்டம் நடந்த இடத்தில் இரண்டு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு கூட்டம் என்றால் நெரிசல் தாங்க முடியாதென்றும் பத்திரிகையாளர்கள் தவிர மற்றவர்களும் கலந்துகொள்வார்கள் என்பதாலும்.

நான் அரங்க வெளியில் கடைசியில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் முன் வரிசையில். பத்திரிகையாளர்களும் மூன்று பெண்மணிகளும் அங்கு காணப்பட்டனர். வந்திருந்தவர்கள் வெள்ளையர்கள், நடுத்தர வயதினர், நடுத்தர வர்க்கத்தினர்.

அந்த நிமிடத்தில் என் நாடகக் கதாநாயகனும் ஒரு நடுத்தர வயதுப் பத்திரிகையாளன் என்பது என் நினைவுக்கு வந்தது. அவன்தான் அவன்கூடத் தங்கியிருந்த அவனது சினேகிதியை அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவன். அதன்பிறகு தன் உறுப்பையே சிதைத்துக் கொண்டவன். வந்திருந்த பார்வையாளர்கள் இந்த நாடகத்தை ரசிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. மறுநாள் பெரும் ரகளை. என் ஏஜெண்டுக்குப் போன் மேல் போனாகக் கால்கள். சிற்றேடுகள், “எங்கே அவள் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறாளா? பகல் பதினோரு மணிக்கா?” என்று கேட்டுச் சீறி வந்த கேள்விக் கணைகளை ஏஜென்ட் எனக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், உண்மையில் நான் செய்ய விரும்பியது என்ன? இதற்கு முன் எவரும் தொடாத ஒரு நாடக உருவத்தைக் கொண்டு வர விரும்பினேன். நான் சொல்ல விரும்பியதெல்லாம், “பாருங்கள், கடந்த இருபது வருஷங்களில் இம்மாதிரி உருவம் கொண்ட நாடகம் வந்திருக்கவில்லை. இதை நான் உங்கள் முன்னால் வைக்கிறேன்” என்பதுதான். ஆனால், இதுநாள் வரை கண்டிராத ஒரு புது உத்தியை, பார்வையை அவர்கள் அறிய முயலுவதற்குப் பதிலாக அதை ஏற்க மறுப்பவர்களாக ஆகிவிட்டார்கள். மைக்கேல் பில்லிங்டன், “ஆகா இது சிறப்பான நாடக அம்சங்களைக் கொண்டிருக்கிறது’ என்றோ, “இது சர்ரியலிசம். எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் இதை நான் வரவேற்றுப் பார்க்கமாட்டேன்” என்றோ சொல்லியிருந்தால் அதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், “இந்த நாடக ஆசிரியை மனப் பிறழ்வு கொண்டவள். அதனால் அவளைப் பூட்டிய அறையின் உள்ளே வைக்க வேண்டும்” என்றுதான் அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

‘டெய்லி மெயில்’ பத்திரிகை இன்னும் ஒரு படி மேலே போய், “இந்த நாடகத் தயாரிப்புக்கு செலவழிக்கும் பணத்தை வைத்து முதலில் நாடக ஆசிரியைக்கு மருத்துவமணையில் சிகிச்சை தரவேண்டும்” என்று எழுதியது. படைப்பைத் தாக்குகிறோம் என்று படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வு, உடல் நிலைமை பற்றி எழுதியது மிகவும் வருத்தத்துக்குரியது.

உங்களின் எல்லா நாடகங்களின் விமரிசனங்களிலும் ஒரு லிஸ்ட் இருந்தது; என்னென்ன கோரமான காட்சிகள், எத்தனைக் காட்சிகள் என்றெல்லாம்…

ஆமாம். இந்த லிஸ்ட் என்பதே படு அபத்தம். அவைகள் சுட்டிக் காட்டியதென்ன? “இன்னும் வயதுக்கு வராத மனவளர்ச்சி குன்றிய பெண்ணின் படைப்பு” என்றெல்லாம்தான். நாடகத்தைப் பார்த்தவர்கள் அரைகுறை விமரிசனங்கள் எழுதினார்கள் என்றால், நாடகத்தைப் பார்க்காத அந்த அரை குறை விமரிசனத்தைப் படித்தவர்களும் நாடக விமரிசனம் எழுதினார்கள்! அவர்களுக்கு உண்மையின் தரிசனம் வேண்டியிருக்கவில்லை. பொய்யின், புரட்டின் கனம், செய்தி என்ற பெயரில் வந்தால் போதும்.

இந்த லிஸ்ட் எண்கள் அடங்கியது. உண்மைகளை அல்ல. எனவே, அவை விமரிசனம் ஆகா. இத்தகைய சூழ்நிலை எனக்கென்றில்லை, மற்றவர்களுக்கும் ஏற்படுவதுதான்.

ஒரு விமரிசகன் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டிய உள்ளொளி பற்றிய தீர்மான அபிப்பிராயங்களை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். ஒரு விமரிசகன் என்பவன் யார்? அவன் எவ்வாறு செயல்புரிய வேண்டும்?

அவன் சாகக் கிடக்க வேண்டும்! (சிரிப்பு) அல்லது ஏதாவது செய்ய வேண்டும். இது ஒரு நகை முரண். ஒரு நல்ல விமரிசகன் என்பவன் ராணுவ ரகசியங்களைக் காப்பவன், கிறிஸ்துவ விஞ்ஞானி, கலப்படமற்ற காதலன்! எல்லாம் சேர்ந்ததுதான். அநேகமாக பெர்னார்ட் ஷா ஒரு சிறந்த விமரிசகர். அவர் எழுத்தாளரும்கூட. ஒரு நல்ல எழுத்தாளன் நல்ல விமரிசகனாக இருக்க சாத்தியமுண்டு என்று நான் நினைக்கிறேன். விமரிசனம், தான் உறுதியாக நம்பும் செயல் என்று மனப்பூர்வமாக உணராத ஒருவர் எழுதும் போது அவ்வெழுத்து அவர் விரும்பியோ விரும்பாமலோ அடுத்தவரை அழிப்பதில் குறியாயிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டி விடுகிறது. ஆனால், அதைத் தொடர்ந்து செய்கிறார். அவரே வேறொரு கலை வடிவத்தின் மீது தனது விமரிசன ஆற்றலைச் செலுத்தும் போது தயவு தாட்சண்யம் எல்லாம் பார்க்கின்ற ஒரு முற்றிலும் மாறுபட்ட மனிதராகி விடுகிறார்.

எனக்கு நாடகங்களை விமரிசிப்பது பிடிக்கும். ஒரு முறை ‘அப்சர்வர்’ இதழில் என்னை ஹெரால்ட் பின்டரின் ‘ஆஷஸ் டு ஆஷஸ்’ நாடகத்தை விமரிசிக்கும்படிக் கேட்டார்கள். பின்பு அவர்களே போன் செய்து, “அது உங்களுக்கு மிகச் சிறந்த படைப்பாகத் தெரியவில்லை என்று சொன்னால் நல்லது” என்றார்கள். ‘சரி, இது ஏதோ செட்டப். இதில் நாம் தலையிட வேண்டியதில்லை’ என்று விலகிவிட்டேன். நாடக ஆசிரியர்கள் மற்ற நாடக ஆசிரியர்களின் படைப்புகளை விமரிசிப்பது சுவாரஸ்யமான விஷயம்தான். ஆனால், விமரிசனம் உண்மையாக உளப்பூர்வமாக இருக்க வேண்டும்.

sarah kane

உலகளவில் விமர்சக சிந்தனைகளின் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஜெர்மனியில் என் பல படைப்புகள் தயாரிக்கப்பட்டன. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் கூட்டம் அங்கு நடந்தது. அங்கு வந்தவர்கள் எல்லோரும் என் படைப்புகள் அனைத்தையும் படித்திருந்தார்கள். புத்திசாலித்தனமாகக் கேள்விகளைக் கேட்டார்கள். முரட்டுத்தனமாகவோ கனிவற்றோ யாரும் பேசவில்லை. நாடகங்களைப் பார்க்க அவர்கள் திறந்த மனதுடன் வந்திருந்தார்கள். ஒருவர் தனக்குப் பிடித்த செயலைச் செய்யும் போது காட்டும் ஈடுபாட்டை அவர்கள் என் நாடகங்களை ரசிப்பதில் காட்டினார்கள். இது முற்றிலும் எதிர்பாராத சந்தோஷம் தரும் அனுபவமாக இருந்தது.

நான் வழக்கமாய்ப் பேட்டிகள் தருவதில்லை. அப்படியே தரும்போதும் வருபவர், “நான் உங்கள் நாடகங்களைப் பார்த்ததில்லை” என்று ஆரம்பித்தபடி வருவார். “நீங்கள் ஜெர்மானியர்களைப் பற்றிச் சொல்வதெல்லாம் உண்மையா?” என்று கேட்பார். என்னைப் பொறுத்தவரை, ஜெர்மானிய விமரிசகர்கள் கெட்டிக்காரர்கள். ஆனால், அங்கு தயாரிக்கப்படும் நாடகங்கள் அவ்வளவு உசத்தியில்லை.

அவர்கள் அங்கு என் படைப்புகளில் சில மாற்றங்கள் செய்து நாடகங்களை மேடை ஏற்றியிருந்தார்கள். அவை எனக்குப் பிடித்திருந்தன. பெல்ஜியத்தில் சிறார்கள் மீது முறைகேடடான பாலினத் தாக்குதல் நடத்திய ஒரு கும்பலைப் பற்றி ‘பிரெஸ்ஸெல்ஸ்’ பத்திரிகைகளில் செய்தி வந்தது. அச்சமயம் இந்த செயலைப் பின்புலமாக வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தையை அடக்கம் செய்வதாகக் காண்பிக்கும் சமயம் பார்வையாளர்களில் பலரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது என் இயக்க முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விதமாகக் கொண்டுவரப் பட்டாலும் அது அவர்களது பண்பாட்டை எதிரொலிக்கிறது என்று நான் ஏற்றுக்கொண்டேன்.

ராயல் கோர்ட், புஷ் போன்ற தியேட்டர்காரர்களால் உருவாக்கப்பட்ட நாடகங்களில் நேச்சுரலிசம் மேலோங்கி இருக்கும். அவர்கள் எப்படி உங்களை எடுத்துக்கொண்டார்கள்?

ஆமாம், எனக்கும் ஆச்சரியம் தரும் விஷயம்தான் அது. அவர்களின் தரத்துக்கு என் படைப்புகள் ஈடுதானா என்று என் மனதில் சந்தேகம் இருந்தது. நான் உதவியாளராகப் புஷ் நிறுவனத்தில் சேர்ந்தபோது என் வேலை அங்கு வரும் நாடக ஸ்க்ரிப்டுகளைப் படித்துப் பார்ப்பதுதான். அதில் முக்கால்வாசி குப்பையாக இருக்கும். அவற்றை யாராவது தயாரிக்க முன் வந்திருந்தால் அவை மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று எழுதித் தரத் தயாராயிருந்தேன். நாடகத்தில் வடிவம் பற்றிய பிரக்ஞை இல்லாமல் எழுதப்பட்ட படைப்புகள் அவை.

சில விஷயங்கள் உங்களை பிடித்து இழுத்து எழுதச் சொல்லும். உங்களுக்கே சில விஷயங்கள் பற்றி எழுத வேண்டும் என்றிருக்கும். நான் காதலைப் பற்றி எழுத எப்போதும் ஆவல் கொள்கிறேன். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் பின்புலமாக உங்கள் உள்ளத்தில் நாடகத்தின் வடிவம், உருவம் பற்றிய பிரக்ஞை இருக்க வேண்டும். உருவ நேர்த்தி இல்லாது உருவாக்கப்படும் ஒரு நாடகம் தோல்வியைத்தான் தழுவும். ஒரு புஷ் நாடகம் எப்படி சிறப்பாக அமையும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். அத்தகைய இமேஜை அவர்கள் உங்களில் உருவாக்கி விடுகிறார்கள்.

‘தகர்த்தல்’ வந்தபோது பார்வையாளர்களுக்கு நானும் ராயல் கோர்ட்டும், இரு உயிரற்ற முண்டங்கள் யாருடைய பின்புறத்திலோ தொங்கிக் கொண்டு போவதாகவும், அது கடற்கரையில் நிகழ்வதாகவும், யாருடைய பாலியலையோ ஆராய்வதாகவும், ஒரு கற்பனை தோன்றி இருக்கக்கூடும். இப்படிப்பட்டதையே நாங்கள் நாடகமாக்க விழைந்தோம். இத்தகைய கற்பனையின் கூறும் அதை விரும்பும் நானும் என் நாடகங்களில் இணைந்திருக்கிறோம்.

ஸ்காட்லாந்து நாடக ஆசிரியர்கள் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ் ஹன்னான், டேவிட் க்ரெய்க், டேவிட் ஹர்ரோவர் போன்றவர்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஓ எனக்கு ஸ்காட்லாந்து மிகவும் பிடிக்கும். ‘ஏங்குதல்’ முதன்முதலாக ‘ட்ராவர்ஸ்’ தியேட்டரில் அரங்கேறியது என் வாழ்க்கையில் மிகப் பெரிய நிகழ்வு. நீங்கள் சொன்ன மூவரும் என் விருப்பத்துக்குரிய படைப்பாளிகள். இங்கே லண்டனில் நாடக ஆசிரியர்கள் என்று ஒரு படையே தேசிய அங்கீகாரம் பெறத் துடித்துக்கொண்டு நடமாடுகிறது. இங்குள்ள பத்திரிகை ஊடகமும் நேர்மையான மதிப்பீடுகளுடன் இயங்குவதில்லை. இல்லாவிட்டால் எப்படி டேவிட் க்ரெய்க்கை விட ஜோ பென்ஹால் பிரபலமாக இருக்க முடிகிறது? லண்டன் மிக அதிகமான நாடக ஆசிரியர்கள் என்ற ஜாதியை உருவாக்குகிறது. அவர்களில் முக்கால்வாசிக்கும் மேல் மோசமான படைப்பாளிகள். இன்று தலைசிறந்த மூன்று நாடக ஆசிரியர்கள் ஸ்காட்லாந்தில்தான் இருக்கிறார்கள்! இங்கு லண்டனில் ஏதோ பெரிய கோளாறு இருக்கிறது.

எப்படி எழுதுகிறீர்கள்?

எழுதும் விஷயத்தைப் பொறுத்து எழுத்து அமைகிறது. நான் எம்மாதிரி நிலையில் இருக்கிறேன் என்பதைப் பொறுத்தும். எழுத ஆரம்பித்த காலத்தில் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதி விடுவேன். அவற்றில் குப்பைகளும் இருக்கும். அவற்றில் உருவம் இருந்ததில்லை. ‘தகர்த்தல்’ என் முதல் படைப்பு என்றாலும் வித்தியாசமாக அமைந்தது. இன்று எழுத்து பற்றி, உருவம் பற்றி இருக்கும் அனுபவ அறிவு அன்றிருக்கவில்லை. உதாரணமாக ‘ஏங்குதல்’ எழுதும் போதே இரண்டு பக்கம் வருவதற்குள் அதனுடைய வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்று பிடிபட்டு விட்டது. ‘தகர்த்த’லில் அது எனக்குக் கிடைக்க ஆறு மாதங்கள் ஆயின.

‘தகர்த்தல்’ எழுதிக் கொண்டிருக்கும் போது யதேச்சையாக ஒருநாள் இரவு தொலைக்காட்சியைப் பார்த்தேன். அதில் ஒரு வயதான பெண்மணி, பாஸ்னியாவைச் சேர்ந்தவள், “எங்களைக் காப்பாற்றுங்கள். ஏதாவது செய்து எங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க உதவுங்கள்” என்று ஐ.நா. சபையிடம் உருக்கமாக வேண்டுகோள்கள் விடுத்து அழுது கொண்டிருந்தாள். இதற்கு முன்னால் எவ்வளவு பேர் இது மாதிரி கதறியிருக்கிறார்கள்? எவ்வளவு பேருக்கு உதவி கிடைத்தது? யாரும் உதவி செய்யப் போவதில்லை என்று நான் எண்ணினேன். நான் இங்கே ‘தகர்த்த’லில் ஓர் ஆணும் பெண்ணும் அறையில் தங்கியிருக்கிறார்கள். அவர்களிருவருக்கும் நடக்கும் சண்டையில் கோபமுற்று அந்த ஆண் அவளை பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான் என்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அங்கு யுத்தம் நடக்கும் பாஸ்னியாவில் இதே பாலியல் பலாத்கார விஷயம் நடக்கிறது. இரண்டிற்குமான தொடர்பு என்று  ஏதோ என்னை அலைக்கழித்தது.

திடீரென்று ‘அது விதை; இது மரம்’ என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. யுத்தம் உருவாக்கும் விதைகள் சமாதானக் காலத்தில் மரங்களாக வியாபித்து விடுகின்றன என்று எனக்குத் தோன்றிற்று. நாகரிகத்துக்கும் யுத்தக் காலத்துக்கும் இடையே உள்ள மெல்லிய சுவரைத் தகர்த்தால் எதையும் யாரையும் சிதைத்துவிட முடியும் என்ற கதை உருவாயிற்று.

‘இரண்டு தனி நபர்களுக்குள் அறைக்குள் நடக்கும் பலவந்தத்தை எப்படி வெளியுலகப் பலாத்காரத்தோடு இணைப்பது?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. நான் உடனே டேவிட் க்ரெய்க்குடன் பேசினேன். ஒரு சோக நாடகீயச் செயலின் மூன்று கூறுகள் – நேரம், இடம், செயல் – பற்றி அரிஸ்டாட்டில் கூறியதை டேவிட் எனக்கு நினைவுறுத்தினார். எனக்குப் புதிய பாதை கிடைத்ததை போல உணர்ந்தேன். இடத்தை மட்டும் மாற்றாமல் வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் – நேரம், செயல் – மாற்றி எழுத முடியும் என்று தீர்மானித்தேன்.

அப்போது எனக்குள், இதற்கு ஏதாவது முன்னோடி உண்டா என்று கேள்வி எழுந்தது. இம்மாதிரி வேறு யாராவது செய்திருந்தால் அதைப் பின்பற்ற எனக்கு விருப்பமில்லை. ஆனால், அம்மாதிரி இல்லை என்று அறிந்ததும் நாடகத்தில் வேண்டிய மாறுதல்களை என் விருப்பத்திற்கேற்ப செய்து முடித்தேன்.

‘தகர்த்தல்’ எழுதும் போது முன்னேற்பாடாக எதையும் நான் செய்யவில்லை. ஆனால், அதற்குப் பின் வந்த படைப்புகளைப் பொறுத்தவரை, அவற்றுக்கான ஆதாரங்களை எழுதுவதற்கு முன் திரட்டி வைத்துக் கொண்டேன்.

‘கழுவுதல்’ இன்னொரு விதமான அனுபவம். நான் சொல்வதைப் பலர் நம்பாமல் போகக் கூடும். ஆனால், அதுதான் நடந்தது. யதார்த்தம் என்று சொல்லிக்கொண்டு வரும் நூற்றுக்கணக்கான படைப்புகள் என்னை ஈர்க்கவில்லை. எனவே, நான் எடுத்தாளப் போகும் கதை ஒரு நாவலாகவோ டிவி. தொடராகவோ சினிமாவாகவோ எடுக்கப்பட முடியாததாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ‘கழுவுதல்’ ஒரு நாடகமாகத்தான் விளங்கும். அதற்கு வேறுவிதமான வழிகள் சாத்தியமில்லை. என்னுடைய இந்த நிலைப்பாட்டை நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். மக்கள் விரும்பும் யதார்த்தப் பூர்வமான படைப்பாக அது இருக்க சாத்தியமில்லை. கால்களை வெட்ட வேண்டுமென்றோ, அவற்றை நிஜ எலிகள் இழுத்துச் செல்ல வேண்டுமென்றோ நான் நிர்ப்பந்திக்கவில்லை. ஒரு காட்சி எந்த மாதிரி பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது என் கையில் இருக்கிறது. ஆனால், அதைத் திறம்படச் செய்வது என்பதை நாடக இயக்குநரும் மேடை நிர்வாகியும் தீர்மானிக்கிறார்கள்.

‘கழுவுத’லில் நீங்கள் நடித்திருக்கிறீர்களே!

நான் அதில் நடிக்கும் நடிகையை மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டுவிட்டு  அந்தப் பாத்திரத்தில் நடித்தேன் என்று ஏகப்பட்ட வதந்திகள். உண்மையில் அந்த நடிகையின் நாய் அங்கிருந்த மற்றொரு நாயின் மேல் காதல் செய்யத் தொடங்கிற்று. அதைத் தடுத்து இழுக்கும் போது நடிகை பேலன்ஸ் தவறிக் கீழே விழுந்துவிட்டார்.

இதுதான் சாரா கேன் என்பது! (சிரிக்கிறார்)

இருக்கலாம்! நடிகைக்கு ஸ்லிப் டிஸ்க் ஏற்பட்டு விட்டதால் நடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. எனக்கோ தயாரிப்பை நிறுத்தி வைக்க மனமில்லை. கதையும் வசனங்களும் எனக்குள் ஊறிக் கிடந்ததால் நானே நடிக்க முன்வந்தேன். நான் நடிக்க வேண்டும் என்று நடிகைகளைக் கீழே தள்ளி விடுவதில்லை.

sarah kane

நடிக்கும் போது அது உங்கள் எழுத்துக்கான படிப்பினைகள் என்று ஏதாவது தந்ததா?

நிறைய. நடிப்பு என்பது எவ்வளவு கஷ்டம் என்பதையும் எவ்வளவு சுலபம் என்பதையும் கற்றுக்கொண்டேன்! ஒவ்வொருவரும் அதைக் கஷ்டமான செயலாக மாற்ற முயற்சிக்கிறார்கள். அது அப்படியில்லை. உண்மையில் அது மிக மிக எளிதான காரியம். அதனுடைய எளிமைதான் அதைக் கஷ்டமாகக் காண்பிக்கிறது. நான் நடிப்பைப் பற்றி முழுவதுமாகப் பேச முடியாது. ஆனால், ‘கழுவுதல்’ நடிப்பின் எளிமைத் தன்மையைப் புரிந்துகொள்ள வாய்ப்பளித்தது. நானூறு மக்களுக்கு முன் உடம்பில் ஒரு துணி இல்லாமல் நிற்பது மிக மிகக் கஷ்டமான காரியம் என்று தோன்றலாம். உங்கள் உள்ளுணர்வு ஓடிப்போ என்று அதட்டும். ஆனால், அது மிகவும் எளிதான செயல். நான் விரும்புவதென்ன? நான் உணர்வது என்ன? அவ்வாறு என்னால் எவ்வாறு உணர முடிகிறது? ‘கழுவுத’லில் நான் ஒரு சுவற்று ஓட்டை வழியே வெளியே போகிறேன். மூன்றரை நொடியில் எல்லா உடைகளையும் களைந்தாக வேண்டும். மேடையின் பின்புறத்தைச் சுற்றி வந்து மாற்று சுவற்று ஓட்டை வழியே உள்ளே வர வேண்டும்.

பார்வையாளர்கள் அப்போது கூச்சலிட்டார்கள்.

நீங்கள் அப்போது அங்கு இருந்தீர்களா?

இல்லை. அவர்கள்…

உண்மைதான். ஒரே கூச்சல்.

யாருக்காக எழுதுகிறீர்கள்?

எனக்காக. என்னைத் தவிர வேறு யாருக்காகவும் இல்லை. நரகத்திலிருந்து விடுபட எனக்கு எழுத்து தேவையாக இருக்கிறது. ஆனால், அது கூட முற்றிலும் சாத்தியப்படாததாகவே இருக்கிறது. ஒரே ஒரு தடவை என் தந்தைக்காக ஒரு காமெடி நாடகம் எழுதினேன். அதைத் தவிர வேறு யாருக்காகவும் நான் எழுதியதில்லை.

பார்வையாளர்கள் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதுண்டா?

‘தகர்த்தல்’ நாடகத்தை அவர்கள் விரும்புவார்கள் என்று நினைத்தேன். ஆனால், பெரும்பாலும் வெறுப்பைக் காண்பிப்பவர்களைச் சந்திப்பதில் அது முடிந்தது. நான் எழுதி முடித்து ரிகர்சல் எல்லாம் முடிந்த பிறகு பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நான் நினைத்துப் பார்ப்பதுண்டு, நாம் எதிர்பார்ப்பது எப்போதும் கை கூடுவதில்லை, இது பெரும்பாலானவர்களுக்கும் பொருந்தும். அதனால், நான் எழுதும் போது ஒரு குறிப்பிட்ட தருணம் அல்லது ஐடியா என்னைத் தாக்கினால் நான் சொல்ல விரும்புவது என்ன என்பது எனக்குப் பிடிபட்டு விடும். நாடகம் காண வருபவரில் ஒருவராவது என்னைப் போன்றே உணர்வார் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.

நீங்கள் மட்டுமீறிய விஷயங்களை எடுத்தாள்வதே மற்றவர்கள் பொங்கி எழட்டும் என்பதற்காகத்தானா?

என் மட்டுமீறிய எழுத்துக்கள் என்று நீங்கள் குறிப்பிடுவற்றை எழுதுவதன் மூலம் நான் உண்மைகளைச் சொல்ல விரும்புகிறேன். அவை உண்மை என்பதால் அவற்றால் தாக்கப்பட்டவரின் மனநிலை எப்படி இருக்கிறது? அது கிலேசத்தையும் நடுக்கத்தையும் எரிச்சலையும் பார்ப்பவரிடத்தில் எழுப்பலாம். ஆனால், அதற்காக நான் உண்மையை எழுதுவதை என்னால் தவிர்க்க முடியாது.

‘தகர்த்த’லில் வரும் வன்முறைக் காட்சிகள் தவிர்க்கப்பட முடியாதவை. பில் புஃபோர்டின், ‘அமங் தி தக்ஸ்’ கட்டுரைத் தொகுப்பில் ஒரு காட்சி இடம்பெறும். இந்தக் கட்டுரைத் தொகுப்பே வன்முறை நிகழ்ச்சிகளைப் பற்றிய விமரிசன நூல்தான். கால்பந்தாட்ட மைதானத்தில் ஒரு போலீஸ்காரன் இங்கிலாந்து கால்பந்து அணியைச் சேர்ந்தவனாக வேஷமிட்டு வருபவன், திடீரென்று எதிராளி கால்பந்தாட்டக்காரனின் கண்களைக் கடித்துத் தரையில் துப்பிவிட்டு அவனைக் கீழே போட்டுத் துவைப்பான். பிறகு எதுவுமே நடக்காதது போல அங்கிருந்து போய்விடுவான். இதை படித்துக்கொண்டு வரும்போது இப்படியெல்லாம் ஒரு மனிதனால் நடந்துகொள்ள முடியுமா என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அது ஒரு உண்மைச் சம்பவம். ‘தகர்த்தல்’ ரிகர்சலின் போது நான் எழுதிய காட்சிகளைக் கண்டு அதிர்ந்தவர்கள் ஏராளம்.

உங்களிடம் இரண்டு கேள்விகள். ‘ஏங்குதல்நாடகத்தில் பாத்திரங்களின் பால்வகை (Gender) பற்றி?

என்னைப் பொறுத்தவரை ‘ஏ’ வயதான மனிதன், ‘பி’ வயதான பெண்மணி. ‘சி’ இளைஞன், ‘டி’ யுவதி. பாத்திரங்கள் அவர்களைத் தாங்களே உணர்த்திக்கொள்ளட்டும் என்பதால் இம்மாதிரியெல்லாம் நான் குறிப்பிட்டுச் சொல்வதில்லை. ‘ஏங்குத’லில் உங்களை அவஸ்தைப்படுத்தும் காட்சிகள் உண்டு. ஒரு மனிதன், “நான் இன்று எழுந்திருக்கும் போது எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது” என்றோ; அவன், “நான் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றோ கூறுவது பொதுவாக விநோதமானதாகக் கருதப்படும். ஆனால், இது மாதிரி நடக்கக்கூடும் என்று சொல்லிக்கொண்டு ஒரு ஜெர்மனி நாடகத் தயாரிப்பாளர் என்னைத் தேடி வர சாத்தியமிருக்கிறது! (சிரிப்பு)

‘ஏங்குத’லில் எனக்கென்று பிரத்தியேகமான அர்த்தங்கள் உள்ளன. உங்களில் யாரும் அதை அறிய முடியாது. அவற்றைச் சொல்லி விவரிக்கும் உத்தேசமும் எனக்கில்லை. இந்த ஏ, பி, சி, டி, யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அதை உங்கள் இஷ்டப்படி தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால், டி.எஸ். எலியட் போல ‘வேஸ்ட் லேண்டு’க்கு நோட்ஸ் எழுத மாட்டேன். ‘வேஸ்ட் லேண்டை’ப் படிக்கக் கையில் எடுத்தவர்கள் கவிதையைப் படிப்பதற்குப் பதிலாக நோட்ஸ் படிப்பதில் மும்முரமாகி விட்டார்கள். உண்மையில் நோட்ஸ் கவிதையை விட நீளமாக இருந்தது பரிதாபம். ஒன்று நான் விளக்கங்கள் தர வேண்டும்; அது என் வாழ்க்கையை விளக்கமாகச் சொல்லிக்கொண்டே போவது; அல்லது பேசாமலிருக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். இதனால் என் படைப்பு யாருக்கும் பிடிக்கவில்லையா? ரொம்ப நல்லதாகப் போயிற்று.

‘கழுவுதல்’ நாடகத்தில் ஒருவனின் ஆசன வாயில் இரும்புக் கம்பி சொருகப்பட்டு அது தோள் வழியாக வரும். அதை பார்த்ததும் நடுங்கிவிட்டேன். இது உண்மையா கற்பனையா?

உண்மைதான். பாஸ்னியாவில் செர்பிய ராணுவத்தினர் முஸ்லிம்களை இம்மாதிரிதான் கழுவேற்றியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைப் பிடித்து இம்மாதிரி கம்பியைச் சொருகி தலை கீழாகத் தொங்கவிட்டார்கள். நாலைந்து நாள்கள் பொறுக்க முடியாத வலியில் துடித்து அவர்கள் இறந்து போனார்கள். மிகவும் துரதிர்ஷ்டமான மரணங்கள் அவை. நாம் கற்பனை என்று நினைப்பதை யாரோ எங்கோ செயலாக உருக்கொடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இரண்டாம் கேள்வி. திரைப்படங்கள் பற்றி?

நான் நாடகங்கள் எழுதுகிறேன். திரைப்படங்களுக்கு நான் எழுதியதில்லை. எனக்கு சினிமா அவ்வளவாகப் பிடிக்காது. நான் டாரண்டினாவின் திரைப்படங்களை எண்ணிப் பார்க்கிறேன். அவரது படங்களில் வன்முறை கிடையாது. காதலைப் பற்றியும் அவர் படங்கள் எடுத்ததில்லை. திரைப்படங்களைப் பற்றிய திரைப்படங்களை அவர் இயக்குகிறார். மற்றவர்களின் படங்களை, சரித்திரப் படங்களைக் குறிப்பெடுத்து இயக்குகிறார். நான் அப்படியில்லை, மற்றவர் நாடகங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என் படைப்புகள் யாருடைய படைப்பையும் பிரதி எடுப்பதில்லை. காதலைப் பற்றிப் படைப்பது எனக்கு மிகவும் இஷ்டம். நிர்வாணக் காட்சிகள் பற்றிக் குற்றம்சொல்ல என்னிடம் ஏதுமில்லை. அது கதையுடன் ஒத்துப்போகிறதா என்றுதான் பார்க்கிறேன். நாம் பேசும் பொருளோ சந்திக்கும் தருணமோ அவை எப்போதும் உண்மையுடன் கைகுலுக்க வேண்டும்.

உங்கள் படைப்பு, நாடகங்கள் இவற்றின் மீதான எதிர்காலம் பற்றி?

எல்லாவற்றையும் இழுத்து மூடி விடுவார்கள்! இல்லை, எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு எதிர்மறைப் பாதிப்பை ஏற்படுத்துபவளாக என்னை நினைக்கிறேன். ‘தகர்த்தல்’ வெளியான இரு வாரங்கள் கழித்து ‘ராயல் கோர்ட்’ என்னிடம் ஒரு படைப்பைக் கொடுத்தார்கள். அதில் கட்டிடத்தின் அடித்தளப் பகுதியில் மூன்று பேர் ஒரு மனிதனை சுட்டுக் தின்கிறார்கள். இதை எழுதிய ஆள் ‘தகர்த்த’லைப் பார்த்திருப்பானோ என்று எனக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. என் நாடக வரிகளும் அதில் காணப்பட்டன. இது எதிர்மறைப் பாதிப்பில்லாமல் வேறென்ன?

நேர்மறைப் பாதிப்பு என்று கூற வேண்டுமானால் நேச்சுரலிசம் என்று நான் கருதும் நெருடலான சமாச்சாரத்தை இப்போது நாடகங்களில் விலக்கி வைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். சமீபத்தில் நிக் கிராஸ்ஸோ தயாரித்த நாடகம் இயற்கையியல் என்னும் வாதத்தை முற்றிலும் நிராகரித்து எழுதப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். இது பெரிய விஷயம். நாம் எழுதுவது ஐம்பது வருஷங்களுக்குப் பின்னும் நிற்குமா? நாமே ஐம்பது வருஷங்கள் இருப்போமா? இதுதான் கேள்வி.

சாவுக்குப் பின் வாழ்வு என்கிறார்கள். என் மறைவுக்குப் பின் என் படைப்புகளுக்கு என்ன ஆகப் போகிறது என்று நான் அறியப் போவதில்லை. நல்ல நாடகங்கள் எதிர்காலத்திலும் எழுதப்படும் என்பது என் நம்பிக்கை. இப்போது குப்பைகள் அதிக அளவில் வருகின்றன. சாதாரணத்துக்குக் கீழானவை புகழப்படுகின்றன. ஆனால், இது காலங்காலமாக நடந்து வருவது. பெரும்பாலான நல்ல நாடகங்கள் பின்னோக்கிய பார்வையில்தான் அவற்றுக்கு உரிய இடத்தைப் பெறுகின்றன என்பதுதான் உண்மை.

நாங்கள் ராயல் கோர்ட்டில் ‘கழுவுதல்’ நாடகத்தை செய்து கொண்டிருந்த ஒரு நாளில் குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் எங்கள் நாடகங்களைப் பார்க்க வருவது குறித்துப் பேச்சு எழுந்தது. அப்போது ஒரு டி.வி.யில் வந்த ஒரு காட்சி காண்பிக்கப்பட்டது. ‘சார்ஜெண்ட் மஸ்க்ரேவ்ஸ் டான்ஸ்’ என்ற நாடகத்திலிருந்து. அதில் நடிக்கும் ஒரு நடிகன் சொல்வான்: “எனக்குப் புரியவில்லை. இது ஒரு மிகச் சிறப்பான நாடகம் என்று நாம் நம்புகிறோம். ஆனால், நேற்று இரவில் ஒரு ஆள் கூட நாடகத்தைப் பார்க்க வரவில்லை.” ஆனால், அந்த நாடகம்தான் இன்று உலகில் மிகச் சிறந்த நாடகங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. எனக்கென்னவோ இம்மாதிரிப் புறக்கணிக்கப்படுபவை பின்னாளில் மிகச் சிறந்த பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன. இன்று கூட நெரிசலுடன் பார்க்கப்படுபவை காலத்தின் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு ஏதோ ஓரங்களில் கிடக்கின்றன.

இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

இப்போது எழுதும் நாடகத்தின் பெயர் ‘4.48 – மனச்சிதைவு’. இது ‘ஏங்குதல்’ போல வித்தியாசமானது. மனங் கலைந்து திரிவது பற்றியது. ஒரு மனிதனின் மனதில் பிரத்தியட்சத்துக்கும் கற்பனைகளுக்கும் இடையே உள்ள திரையை நீக்கும் போது நிகழ்வது என்ன என்பதை நாடகம் பரிசீலிக்கிறது. விழித்திருக்கும் போது நிகழும் வாழ்க்கைக்கும் கற்பனையில் படரும் வாழ்க்கைக்கும் வித்தியாசமென்பது ஒரு கட்டத்தில் அழிந்து விடுகிறது. போக, நீங்கள் எப்போது செயலாற்றுவதை நிறுத்துகிறீர்களோ அப்போது உலகம் நடக்க ஆரம்பிக்கிறது. உதாரணமாக எனக்கு மனச்சிதைவு என்றால், நான், இந்த மேஜை, நீங்கள் என்ற வித்தியாசமெல்லாம் எனக்குத் தெரியாமல் போய்விடும். கட்டப்பட்ட எல்லைகள் அனைத்தும் நிர்மூலமாகி விடும். நானும் சில எல்லைகளைத் தகர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதில் ஒன்று உருவம், உள்ளடக்கம் பற்றிய கட்டமைப்பு. இதைச் செய்வது கடினமாக இருக்கிறது. நான் ‘ஏங்குத’லுக்குப் பின் ஓரடி முன் வைத்துப் போக ஆரம்பித்திருக்கிறேன். ‘தகர்த்த’லில் ஆரம்பித்து ‘பெட்ரோவின் காதல்’, ‘கழுவுதல்’, ‘ஏங்குதல்’ என்று வந்துள்ள என் பயணம் இப்போது இந்த இடத்துக்கு வந்திருக்கிறது. இதற்குப் பின் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு இப்போது தெரியவில்லை.

ஸிந்துஜா ” <weenvy@gmail.com>

sinthuja, t.r. natarajan

 

Amrutha

Related post