ஆணாதிக்கச் சிந்தனையும் ஒருதலைக் காதல் கொலைகளும் – பிரபு திலக்

 ஆணாதிக்கச் சிந்தனையும் ஒருதலைக் காதல் கொலைகளும் – பிரபு திலக்

காதலிக்க மறுத்ததால் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு மாணவி கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோல், சென்ற மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சத்யாவை அவளது முன்னாள் காதலனாக சொல்லப்படும் சதிஷ் ரயில் முன் தள்ளி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்யா பள்ளியில் படித்து வந்தபோதிருந்தே, 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சதீஷ் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார். சத்யா அவரை பொருட்படுத்தாத நிலையில் தோழிகள் உதவியுடன் அவளது செல்போன் எண்ணை வாங்கி தனது காதலை கூறியுள்ளார். அதை சத்யா முதலில் ஏற்கவில்லை. ஆனாலும், தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன்கள் செய்வதுபோல் தொடர்ந்து சத்யாவை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

பல ஆண்டுகளாக பின் தொடர்ந்து வந்த சதீஷின் காதலை ஒரு கட்டத்தில் சத்யாவும் ஏற்றுக்கொண்டார் என கூறப்படுகிறது. ஆனால், அதன்பிறகு மனம் மாறிய சத்யா அவருடன் போனில் பேசுவதையும் மெசேஜ் அனுப்புவதையும் குறைத்ததுடன், அவருடனான நட்பையும் படிப்படியாக நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்யா படிக்கும் கல்லூரிக்குள் சென்று, ‘என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்… நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். நீ இல்லை என்றால் நான் இல்லை’ என்று கூறி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து சத்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் தனது மகளை பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக சதீஷ் மீது புகார் அளித்துள்ளனர். அப்போது ‘இனி சத்யாவை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று கடிதம் எழுதிக்கொடுத்து அந்த வழக்கை முடித்துள்ளார். ஆனால், அதன் பின்னரும் விடாமல் சத்யாவை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இதனையடுத்து சத்யாவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கி திருமணத்துக்கும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில்தான், இந்த தகவல் தெரிந்து ஆத்திரமடைந்த சதீஷ், ‘தனக்கு கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என்ற எண்ணத்தில், ரயில் முன்பாக தண்டவாளத்தில் சத்யாவை தள்ளி கொலை செய்துள்ளார்.

தான் காதலிக்கும் பெண்ணை தன் உடமையாக கருதி, அவளுக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் – உரிமைகள் இருக்கிறது என ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆணாதிக்க எண்ணத்துடன், இப்படி ‘தனது உடமை வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என அழிக்க நினைக்கும் மனோபாவத்தால் கொல்லப்பட்ட கல்லூரி மாணவிகளில் சுவாதி முதல் பெண்ணும் அல்ல, சத்யா கடைசிப் பெண்ணும் அல்ல.

சென்ற ஆண்டு, தனியார் நர்சிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த 21 வயதான ஸ்வேதா என்ற மாணவி தாம்பரம் ரயில்வே குடியிருப்பு பகுதி அருகே வந்தபோது, அங்கு வந்த ஒரு தலைக்காதல் வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்தில் ஓங்கி குத்தினார். இதனால் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு ஸ்வேதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திருச்சி, திருவெறும்பூர், நொச்சிவயல் புதூரை சேர்ந்த வித்யாலட்சுமி என்ற பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவியை, ஒருதலைக்காதல் நபரும் அவரது இரண்டு நண்பர்களும் சேர்ந்து, விஷம் கலந்த குளிர்பானத்தை, கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றி குடிக்கவைத்து கொலை செய்தனர்.

கடலூர், காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த எம்.எஸ்., டபிள்யூ. பட்டபடிப்பு மாணவி மகாலட்சுமி காதலிக்க மறுத்ததால் கல்லூரி வாசலிலேயே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

திருவையாறை அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஆஷா அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித் என்பவரை காதலிக்க மறுத்ததால் பேருந்தில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டார்.

இவர்களைப் போல் பலர்; காதலிக்க மறுத்ததாலேயே, அவர்களை காதலிப்பதாக சொன்னவர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

தொழில் நுட்ப அறிவியல் வளர்ச்சி, எழுத்தறிவு வளர்ச்சி, பெண்கள் படிப்பதும் வேலைக்குப் போவதும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் புள்ளி விவரங்கள் – இவற்றை எல்லாம் கணக்கில்கொண்டு முன்னேறி விட்டதாக நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் நிலையில், இந்த கொலைகள் பல கேள்விகளை எழுப்புகிறது.

இத்தகையை கொலைகளுக்கு பின்னால் நம் திரைப்படங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. விருப்பமில்லாத ஒரு பெண்ணை தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து இடையூறு செய்வது பாலியல் குற்றம். “ஸ்டாக்கிங் எனப்படும் இந்த செயல், அதை எதிர்கொள்ளும் பெண்களிடையே அச்சத்தைத் தூண்டுகிறது. இது அவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாகச் சீர்குலைக்கிறது” என்று மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்விதழான டெமிடா குறிப்பிடுகிறது.

ஆனால், விரும்பும் பெண்ணை அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் விடாமல் பின்தொடர்ந்து செல்வது, அவருக்குப் பேச விருப்பமில்லை என்றாலும் பேச முயன்று அவருடைய தனியுரிமையைத் தொந்தரவு செய்வது, அவரை கட்டாயப்படுத்தி தன்னிடம் பேசுமாறும் தன்னை விரும்புமாறும் அழுத்தம் தருவது ஆகிய ‘கதாநாயகன்’ செயல்பாடுகளை நம் திரைப்படங்கள் இயல்பாக்கியுள்ளன.

இந்நிலையில், பெண்கள் காதலை மறுக்கும்போது, அதனால் தனது நாயகத்தன்மைக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாக ஆண் ஆத்திரமடைகிறான். “ஓர் ஆண் மகனான என்னையே நீ வேண்டாமனெ மறுக்கிறாயா” என்ற ஆணாதிக்க மனப்பான்மை மேலோங்கி, வன்முறையைக் கையில் எடுக்கிறான்.

கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு தங்கள் விருப்பங்களை, உரிமைகளை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய தைரியத்தை வழங்கியுள்ளது. இதனால் ஒருவரைப் பிடிக்கவில்லை அல்லது ஓர் உறவில் நீடிக்க விருப்பமில்லை என்றால் அதை தைரியமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், ஆண்கள் மத்தியில் இது புதிதாகத் தெரிகிறது. அதை நடைமுறையில் ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், ஆணாதிக்க உலகத்திற்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தங்களுடைய ஆதிக்கத்தை இழப்பதாக அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. அதுவே இத்தகைய வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம்.

இது மாற வேண்டும் என்றால், நம் ஆண் குழந்தைகள் வளர்ப்பு முறையில் இருந்து கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் நாம் ஆண் குழந்தைகளுக்கு தோல்வி என்பது வாழ்வில் இயல்பானது என்பதைச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில்லை. குறிப்பாக அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, அவர்கள் நினைப்பதெல்லாம் கிடைத்துவிடும் என்ற மனப்பான்மையில் வளர்ப்பதும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதோடு சேர்த்து, அவர்கள் பார்க்கக்கூடிய திரைப்படங்களில் பெண்ணை மட்டமாக நடத்துவதும், ஸ்டாக் செய்வதும் நாயகத்தன்மையோடு பார்க்கும் வகையில் இருப்பது, அவர்களின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.

ஒரு பெண்ணின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்காமல் நடக்கும் வன்முறைகளுக்குத் தொடக்கமே ஆணாதிக்கச் சிந்தனை தான் என்று ஆய்வுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது, இடைவெளியைக் கொடுப்பது ஆகியவற்றை ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். இதுமட்டுமின்றி, காதலிப்பதே தவறு என்ற எண்ணத்தில் இருந்து வெளியேறி, ஒரு பெண்ணை காதலிப்பது எவ்வளவு இயல்போ அதுபோல் அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவிப்பதும் இயல்பு என்பன போன்ற உரையாடல்களை நம் சமூகத்திலுள்ள குடும்பங்கள் ஆண் குழந்தைகளிடம் தொடங்கவேண்டும்.

prabhu thilak

Amrutha

Related post