மலக்குழி மரணம் எனும் சமூக அவலம்! – பிரபு திலக்

 மலக்குழி மரணம் எனும் சமூக அவலம்! – பிரபு திலக்

லக்குழி மரணங்கள் குறித்த கவிதைக்காக கவிஞரும் திரைப்பட உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சமூக அவலம் மீதான அக்கறையிலும் ஆதங்கத்திலும் உருவான ஒரு படைப்பு மதப் பிரச்சினையாக்கப்பட்டுள்ளது. கடவுளாக இருந்தாலும், மலக்குழியில் இறங்கினால், அவர்களின் நிலை என்னவாகும் என்ற விடுதலை சிகப்பியின் கற்பனையை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மலக்குழியில் இறங்கி மரணமடையும் மனிதர்கள் குறித்து என்ன அக்கறை கொண்டிருந்திருக்கிறார்கள்?

கழிவு நீர் தொட்டியில் / பாதையில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது சட்டவிரோதம் என்றபோதும், இந்த ஆபத்தான / அறுவெறுப்பான சூழலில் பணிபுரியுமாறு மனிதர்கள் அனுப்பப்படுவதும் நச்சுவாயு தாக்கி அவர்கள் மரணம் அடைவதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகின்றன. இத்தகைய அவலங்களைத் தடுக்க மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது ஒலிக்கும். ஆனால், அது கண்டுகொள்ளப்படாமல் போவதே தொடர்ந்து நிகழ்கிறது என்பதையே சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

கழிவு நீர் தொட்டிகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியளவில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது என அண்மையில் மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உட்பட பல்வேறு நிலைகளில் இந்தியளவில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் சூழ்நிலையில், மலக்குழி மரணங்களிலும் நாமே முன்னணியில் இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்தபடி, இந்தியா முழுவதும், கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 308 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 52 பேரும் உத்தர பிரதேசத்தில் 46 பேரும் ஹரியானாவில் 40 பேரும் மகாராஷ்டிராவில் 38 பேரும் டெல்லியில் 33 பேரும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது இறந்துள்ளனர்.

2018க்கு முந்தைய ஆண்டுகளிலும் இதுதான் நிலை. 2017ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 92 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவை அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட தகவலின் அடிப்படையிலான எண்ணிக்கைதான். பதிவு செய்யப்படாதவற்றையும் கவனத்தில் கொண்டால் இந்த எண்ணிக்கை கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ்நாட்டில் மரணம் அடைந்த அனைவரின் குடும்பத்துக்குமே தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இழப்பீடு வழங்குவதில் தமிழ்நாடு அரசு விரைவாக செயல்பட்டிருந்தாலும், மலக்குழி மரணங்களை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைதான் இந்தத் தொடர் மரணங்கள் உணர்த்துகிறது.

இத்தனைக்கும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிகளை ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவாகரத்துறை வழங்கியுள்ளது. இதில் இயந்திரங்களை பயன்படுத்திதான் கழிவுநீர்த் தொட்டிகைளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், மனிதர்களைப் பயன்படுத்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி மனிதர்களைப் பயன்படுத்துவதால்தான் இதுபோன்ற மரணங்கள் ஏற்படுகின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்து 46 வருடங்கள் கழித்து, 1993இல்தான் மனிதர்கள் மலம் அள்ளுவதை ஒட்டுமொத்தமாக தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், அதனையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் 2013இல் இன்னொரு சட்டம் இயற்றப்பட்டது. அரசு பரிந்துரைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் இந்தப் பணி அனுமதிக்கப்படலாம் என திருத்தப்பட்டது. அப்படியே முழுதும் இயந்திரங்களால் கழிவு அகற்றப்பட்டாலும் அவசரகால அடிப்படையில், இயந்திரங்களை பயன்படுத்த முடியாத சூழலில் மனிதர்கள் இதில் ஈடுபடலாம் என்றும் சேர்க்கப்பட்டது. மலம் அள்ளுவது என்று சொல்லாமல் ‘ஆபத்தான தூய்மைப்பணி’ என்றும் வரையறை செய்தது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது ஆனால், எது சுத்திகரிக்கப்பட்ட கழிவு என்பது குறித்த சட்ட மற்றும் நடைமுறை தெளிவு இல்லை.

இது ஒரு மறைமுக ஒப்புதலை அளித்தது. நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட சட்ட மாற்றங்கள் இவை என விளக்கமளிக்கப்பட்டாலும், மனிதர்கள் மலம் அள்ளுவதை மறைமுகமாக தொடரவே இது வழிவகுத்தது. நடைமுறையில் இந்தப் பணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் ஈடுபட்டு வருவதற்கு காரணமானது.

தொடர் அழுத்தங்கள் காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன் மீண்டும் இந்த சட்டம் திருத்தப்பட்டது. நூறு சதவிகிதம் இயந்திரமயமாக்கல், மனிதர்களை மனிதக் கழிவு அகற்றும் பணி செய்ய நியமிப்போர் மீது வழக்கு தொடுக்கும் அதிகாரம் என மாற்றப்பட்டது. மரணம் விளைவிக்கக் கூடும் என்று தெரிந்தே ஆபத்தான பணியில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக, இதற்கு காரணமானவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்க இயலும்.

இன்னொரு பக்கம்… பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடிகள் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 பிரிவு 3 (1) (J), பட்டியல் சாதி (அ) பழங்குடி அல்லாத ஒருவர் பட்டியல் சாதி (அ) பழங்குடியினரை கையால் கழிவுகளை அள்ள வைத்தல் அல்லது பணிக்கு அமர்த்துதல் அல்லது அவ்வாறு பணியமர்த்த அனுமதித்தல் ஆறு மாதங்களுக்குக் குறையாமல் ஐந்தாண்டுகள் வரை தண்டிக்கக்கூடிய குற்றம் என்கிறது. இச்சட்டத்தின் கீழான விதி 7, சிறப்பு அதிகாரம் பெற்ற துணைக் கண்காணிப்பாளர் மூலம் இத்தகைய சம்பவங்களில் விசாரணை நடத்த ஆவண செய்யவேண்டும் என்கிறது.

Viduthalai Sigappi
விடுதலை சிகப்பி

ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும் கழிவுநீர் தொட்டி, கழிவு நீர் பாதையில் சுத்தம் செய்ய தனிநபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசும் அவ்வப்போது எச்சரிக்கும். கைகளால் மலம் அள்ளும் பணித்தடை மற்றும் மறுவாழ்வளித்தல் சட்டம் 2013இன்படி, தங்கள் வீடுகளிலுள்ள செப்டிக் டேங்க் மற்றும் கழிவுநீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய எந்தவொரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டணைக்குரிய குற்றமாகும் என்று

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பும் தெரிவிக்கிறது. மேலும், ஒரு கட்டிடத்தில் கழிவு நீர் தொட்டி அல்லது கழிவு நீர் பாதை சுத்தம் செய்யும் போது சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ வீட்டு உரிமையாளர் / கட்டிட உரிமையாளர்/ வாடகைக்கு குடியிருப்போர், நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரரே பொறுப்பாவார்கள். சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் கட்டிட உரிமையாளர்/ வாடகைக்கு குடியிருப்போர்/ ஒப்பந்ததாரர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவரின் குடும்பத்தை சார்ந்த வாரிசுதாரர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும். கழிவுநீர் பாதையும் தொட்டியும் இயந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும்.

மனிதர்கள் மூலம் கழிவு நீர் பாதை அடைப்பு அகற்றுவதை, கழிவு நீர் தொட்டிகள் சுத்தம் செய்வதை கண்டறிந்தால் உடனடியாக கட்டணமில்லா அழைப்பு எண் 14420இல் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னும் பெரிய மாற்றம் இல்லை என்பதையே சமீப ஒன்றிய அமைச்சர் விவரங்கள் வெளிப்படுத்துகிறது.

 

பெரும்பாலும் என்ன நடக்கிறது? கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304-Aன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.

அறிவார்ந்த சமூகம் என பெருமைப்பட்டுக்கொள்ளும் நிலையில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிடும் அவல சூழல் நிலவுவது வெட்கப்படத்தக்கது.

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்திட ரோபோக்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக பெருவாரியாக எழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இன்னும் அதில் பெரிய முன்னேற்றம் இந்தியா முழுமைக்கும் எங்கும் ஏற்படவில்லை. இத்தனைக்கும், 2019ஆம் அண்டிலேயே தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் முனிசிபாலிட்டியில் வெற்றிகரமாக ரோபோ பயன்படுத்தப்பட்டது. இந்தியன் ஆயில் கார்பரேசனால் இலவசமாக வழங்கப்பட்ட இந்த ரோபோவை வெற்றிகரமாக பயன்படுத்தியது மாவட்ட நிர்வாகம். ஒரு முன்னுதாரணம் இருந்தும் அதனை பின்பற்றாமல், பாதுகாப்பு உபகரணங்கள்கூட இல்லாமல்தான் மலக்குழிக்குள் மனிதர்கள் இன்னும் இறக்கப்படுகிறார்கள்.

முப்பது வருடங்களாக ஒரு சட்டம் நடைமுறையில் இருந்தும் ஒரு செயலை தடுக்க முடியவில்லை என்பதை, நம் அரசுகளின் ஒட்டுமொத்த தோல்வி என்பதோடு இந்திய மனநிலையின் பிரதிபலிப்பாகவும்தான் கொள்ள வேண்டும். இது ஒரு இழிவு என்ற உணர்வு நம் சமூகத்துக்கு இருந்திருக்குமானால் இது என்றோ மறைந்திருக்கும். இதன் பின் இருக்கும் சாதிய கட்டமைப்பும் மக்கள் மனநிலைகளும்தான் மாற்றம் நிகழ தடையாக உள்ளன எனபதை தனியே விளக்க வேண்டியதில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சமீப உத்தரவு ஒன்று ஒரு நம்பிக்கையை விதைத்துளளது. கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடு பல்வேறு சமூக பொருளாதார குறியீடுகளில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும், ஒரு குறியீட்டில் மட்டும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அது என்னவென்றால், கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்திகரிக்கும்போது, உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கைதான். அதனைத் தவிர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த அரசுக்கு உள்ளது. தமிழ்நாட்டில், தொழில் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் முன்னணியில் இருக்கிறோம். அப்படியிருக்கும்போது, நம்மால் ஏன் இந்த அவலநிலையை மாற்ற முடியவில்லை என்பதை நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாதாளச் சாக்கடைகளையும் கழிவுநீர்த் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவர்களின் விவரங்களை சமீபத்தில் ஆய்வு செய்தேன். இத்தகைய இறப்புகள் பெரும்பாலும் நகரப் பகுதிகளில் நடைபெறுகின்றன. கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது அப்பணியாளர்கள் உயிரிழக்கும் நிலையை மாற்றுவதற்காக, சென்னை பெருநகரப் பகுதியில் நவீன இயந்திரங்களையும் கருவிகளையும் பயன்படுத்தி, தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றி, கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை அடுத்த நான்கு மாதங்களில் முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இந்தப் புதிய திட்டத்திற்காகக் காத்திராமல், இனிமேல் தமிழ்நாட்டில் எந்தவொரு இறப்பும் கழிவுநீர் சுத்திகரிப்பால் நேரக்கூடாது என்பதை மனதில் கொண்டு, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பேரூராட்சித் துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளால் உயிரிழப்புகளுக்கான இழப்பீடு வழங்குவதிலும் குற்றவியல் நடவடிக்கைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகிறது. சில இனங்களில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில இனங்களில் Prohibition of Employment of Manual Scavengers Act சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழும்போது, அவற்றை எப்படி கையாளவேண்டும், என்னென்ன நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும் என்பதற்கு ஒரு நெறிமுறை வகுக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

இந்த இறப்புகளைத் தவிர்க்கும்பொருட்டு, விரைவில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென்று, கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்தப் பணியில் ஈடுபடுபவர்களிடமும் இப்பணியில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்துவோர்களிடமும், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இனி வருங்காலங்களில், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி, அதன் வாயிலாக, இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்‌ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழ்நாட்டில் அதைத் தடை செய்தவர் கலைஞர் கருணாநிதி. இதற்காக வரலாறு எப்போதும் அவரை நினைவில் வைத்திருக்கும். இதுபோல், மனித மலத்தை மனிதர்களே அகற்றும் முறையை மு.க. ஸ்டாலின் ஒழித்தால், வரலாற்றில் நிச்சயம் நினைவுகூறப்படுவார்.

Prabhu Thilak

Amrutha

Related post