முகங்கள் | அரவிந்தன்

 முகங்கள் | அரவிந்தன்

ஓவியம்: சைமன் ஹோல்டன்

 

ஹாய் மாலினி!”

“ஹாய் ஷங்கர்! வி.பி. உங்கள கூப்டார்.”

“ஓ.கே.”

ஷங்கர் நாற்காலியில் உட்கார்ந்து மடிக்கணினியைத் திறக்க ஆரம்பித்தான்.

“ஸிஸ்டம்லாம் அப்றமா ஆன் பண்ணிக்கலாம். மொதல்ல வி.பி.ய பாத்துட்டு வந்துடுங்க ஷங்கர். ஏதோ அர்ஜன்ட் போலருக்கு. மூணு வாட்டி இன்டர்காம்ல கூப்டுட்டாரு!”

“அவ்ளோ என்ன அவசரம்?”

“யாருக்குத் தெரியும்?” என்று தோள்களைக் குலுக்கிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் மாலினி. ஷங்கர் பத்து நிமிடங்கள்தான் தாமதமாக வந்திருந்தான். உட்காரவும் கூடாத அளவுக்கு என்ன அவசரம் என்று குழம்பியவனாக எழுந்து சென்றான்.

கதவை மெதுவாகத் தட்டிவிட்டு நழைவதற்குள் உள்ளேயிருந்து “கம், கம்…” என்று சத்தமாகக் குரல் கேட்டது. உள்ளே போனால் வி.பி. ராமச்சந்திரனுக்கு எதிரில் ஜே.எம்.டி. கருணாகரன் நாயர் உட்கார்ந்திருந்தார். இருவருக்கும் தனித்தனியாக “குட்மார்னிங் சார்” என்றான். “லேப்டாப் எங்க?” என்றார் ராமச்சந்திரன்.

“சார் நீங்க அவசரமா வரச் சொன்னதா மாலினி சொன்னாங்க…”

“யெஸ் ஷங்கர். அசவரம்தான். அதுக்காக வெறுங்கையோட வந்தா என்ன பேசறது? எல்லா ஃபிகர்ஸ் அண்ட் பேக்ட்ஸ் ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருக்கீங்களா?”

“ஜஸ்ட் எ மினிட் சார். இதோ கொண்டுவந்துர்றேன் சார்.”

“ஹரியப் ஷங்கர். டயமாச்சு. டென் தர்ட்டிக்கு நாங்க ரஹேஜா டவர்ஸ்ல இருக்கணும். இந்த ட்ராஃபிக்ல எப்படி போறதுன்னு கொஞ்சம் யோசிச்சி பாருங்க.”

“தோ சார்…” என்று வெளியே ஒடினான். ‘சென்னைல டிராஃபிக் அதிகமா இருந்தா அதுக்கு நா என்னடா பண்றது வெண்ண’ என்று மனதுக்குள் புலம்பியபடி ஓடினான்.

அவசரமாக ஓடி வந்தவனைப் பார்த்து மாலினி, “ஹே… என்ன இந்த ஒட்டம்?” என்றாள்.

“ஸ்போர்ட்ஸ் டே ஈவன்டுக்காக ப்ராக்டீஸ் பண்றன்” என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை எடுத்துக்கொண்டு விரைந்தான். ‘குட் ஜோக்’ என்று அவள் பதில் சொன்னது அவனுக்குப் பின்னால் மங்கலாகக் கேட்டது. லேப்டாப்பில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்று தெரியவில்லை. பத்தரை மணிக்கு ரஹேஜா டவரில் இருக்க வேண்டுமென்றால் இங்கே 15 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பில்லை. 15 நிமிடங்கள் லேப்டாப் தாக்குப் பிடிக்கும்.

“கமான், ஸிட், ஸிட்…” என்றார் வி.பி. ராமச்சந்திரன். ஜே.எம்.டி. அமைதியாக உட்கார்ந்திருந்தார். மேஜை மீது லேப்டாப்பை வைத்து அதைத் திறக்கப் போனான்.

“இங்க பாருங்க ஷங்கர்” என்று ராமச்சந்திரன் தன்னுடைய லேப்டாப்பை அவர்களை நோக்கித் திருப்பினார். தானும் பார்க்க வசதியாகச் சற்றே தன் நாற்காலியை நகர்த்திக்கொண்டார். விசைப் பலகையைத் தன் மடி மீது வைத்துக்கொண்டு மவுசை வைத்து இயக்கினார். இரண்டும் தொலையுணர் கருவிகள் என்பதால் தூரத்திலிருந்தே இயக்கினார்.

திரையில் ஒரு பிபிடி பிரசன்டேஷன் ஓடியது. ஷங்கர் செய்ததுதான் அது. 100 கோடி மதிப்புள்ள புதிய திட்டத்திற்கான வரைவு அது. போன மாதமே அதைச் சமர்ப்பித்துவிட்டான். வாடிக்கையாளரிடமிருந்து பதில் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. பதினைந்தாவது ஸ்லைடில் நிறுத்தினார். “படிங்க” என்றார். படித்தான்.

“இந்த எடத்துல கிளாரிட்டி இல்லன்னு கிளையன்ட் ஃபீல் பண்றாங்க” என்றார்.

“உங்க கிட்ட கேட்டுதானே சார் போட்டேன்…”

“நா சொன்னத நீங்க ஃபுல்லா அப்சர்வ் பண்ணிக்கல ஷங்கர். நானும் அவசரத்துல டச் பண்ணாம அனுப்பிட்டேன். இப்படி ஒரு ஸில்லி மிஸ்டேக் பண்ணியிருப்பீங்கன்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? நீங்க என்ன ஃபிரஷ்ஷரா?” என்றார் குரலைச் சற்றே உயர்த்தியபடி.

“சார்…” என்றான் தயக்கத்துடன்…

“நோ எக்ஸ்ப்ளனேஷன் ஷங்கர். ஐ ஆம் நாட் இன்ட்ரெஸ்டட் இன் எக்ஸ்க்யூஸஸ் அன்ட் எக்ஸ்ப்லனேஷன்ஸ். ஐ வான்ட் டெலிவரி. ஐ வான்ட் எஃப்லாலஸ் ட்ராஃப்ட். காட் மை பாயின்ட்?” என வெடித்தார்.

“சார்….”

“எதுவும் பேசாதீங்க. எம் மண்டையே வெடிச்சிடும்போல இருக்கு” என்று இரண்டு கைகளையும் காதுகளுக்கு மேல் வைத்து அழுத்திக்கொண்டார்.

அப்போது அவர் மடியிலிருந்து விசைப்பலகை கீழே விழுந்தது. எடுத்துக்கொண்டு நிமிரும்போது அவர் முகம் இன்னும் சிவந்திருந்தது. நல்லவேளை குனியும்போது கண்ணாடி கீழே விழவில்லை என்று ஷங்கர் நினைத்துக்கொண்டான்.

அந்த இடத்தில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று விளக்கினார். முற்றிலும் புதிய அம்சங்களைச் சொன்னார். போன முறை இதைப் பற்றியெல்லாம் பேசவே இல்லை. ஆனால், “இந்த முறையாவது கரெக்டா பண்ணி ஈவினிங் எவ்வளோ நேரமானாலும் அனுப்பிட்டு போங்க” என்ற சொல்லும்போது ஷங்கரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வி.பி. இன்று வழக்கத்துக்கு அதிகமாக விறைப்பும் முறைப்பும் காட்டுவதைப் பார்த்தால் நாயரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பான் என்று தோன்றியது.

“நோட் த பாயின்ட்ஸ்” என்று ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தார். ஷங்கர் குறித்துக்கொண்டான்.

“சீக்கிரமா போய் வேலய ஆரம்பிங்க” என்றார். ஷங்கர் எழுந்துகொண்டான். அப்போது கருணாகரன் நாயர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

“இது எவ்ளோ இம்போர்டெண்டுன்னு நிங்ஙள்க்கு மனசிலாகுதா?” என்று கேட்டார்.

“யெஸ் ஸார். ஷ்யூர் ஸார்” என்றான் படபடப்புடன்.

“பீ கேர்ஃபுள்” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

“ராம், இத ஷங்கர் பண்றாரா அவங்க தாத்தா பண்றாரான்றதெல்லாம் எனக்குத் தெரியாது. ஈவ்னிங் ஐ நீட் திஸ். இட் ஈஸ் யுவர் ரென்பான்ஸிபிலிட்டி” என்று வி.பி.யைப் பார்த்துச் சொல்லிவிட்டு ஜே.எம்.டி. வேகமாக வெளியேறினார்.

ஷங்கர் பம்பியபடி இருக்கைக்கு வரும்போது மணி 10.45. ரஹேஜா டவர்ஸ் என்ன ஆயிற்று. என்ன எழவுக்காக லேப்டாப்பைக் கொண்டு வரச் சொல்லி மிரட்டினான். போனமுறை இதையெல்லாம் சொல்லாதது அவன் தப்பு. ஆனால், இப்போது என்னிடம் எகிறுகிறான். மாலைக்குள் எல்லாக் கணக்குகளையும் போட்டு அறிக்கையை முடிப்பது சாத்தியமே இல்லை. ஆனால், முடிக்காவிட்டால் கொட்டையை நசுக்கிவிடுவான். ஷங்கர் மனதுக்குள் புலம்பிக்கொண்டே வேலையைத் தொடங்கினான்.

“என்ன ஷங்கர், ஏதாவது ப்ராப்ளமா?” என்றாள் மாலினி.

“ப்ராப்ளம் இல்லாம நமக்கு என்னிக்கு விடிஞ்சிருக்கு?”

 

ந்தப் பையனும் பெண்ணும் ஒடுங்கியபடி நின்றிருந்தார்கள். சாலையோரத்தில் ஒரு காரும் அதன் பின்னால் ஒரு பைக்கும் நின்றிருந்தன. காரை பைக் இடித்திருப்பதற்கான அடையாளம் தெரிந்தது. வாட்டசாட்டமாக ஒரு ஆள் அந்தப் பையனைப் பார்த்து முறைத்துக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தான். அனேகமாக அவன் அந்தக் காரை ஓட்டி வந்தவனாக இருக்கலாம். அவன் அந்தப் பையனை அடித்திருப்பான் என்பது தெளிவாகத் தெரிந்தது. சிவாவுக்குக் கோபம் வந்தது. அவர்களைச் சுற்றிலும் சிறு கூட்டம் நின்றிருந்தது. காரை ஓட்டி வந்தவனின் பேச்சு ஆணித்தரமாக இருந்தது. யாரும் அவன் பேச்சில் குறுக்கிடவில்லை.

சிவா தன்னுடைய பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு நான்கைந்து பேருக்கு போன் செய்தான். போனை பத்திரமாகப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அந்தக் கூட்டத்தை நெருங்கினான். அந்தப் பையன் அருகே சென்று, “என்னப்பா பிரச்சினை” என்றான். போக்குவரத்து நெரிசலில் முன்னால் போன கார் திடீரென்று நின்றதில் தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் லேசாக இடித்துவிட்டதாகச் சொன்னான். அவர் முகவரி கொடுத்தால் நாளைக்கு வந்து பழுது பார்ப்பதற்கான பணத்தைத் தந்துவிடுவதாகச் சொன்னான். அதுவரை தன்னுடைய மொபைலை அவரிடம் தந்துவைப்பதாகவும் போலீஸ், பெற்றோர் என்ற விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சொன்னான்.

“அடிச்சாரா?” என்று கேட்டான் சிவா. அந்தப் பையன் பரிதாபமாகத் தலையசைத்தான். அந்தப் பெண்ணும் கண்ணீர் கசியும் கண்களுடன் அதை உறுதிப்படுத்தினாள்.

சிவா கார் ஒட்டி வந்தவனைப் பார்த்துத் திரும்பினான். அவன் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்துவான் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். சிவா அவன் கண்களை நேராகப் பார்த்து, “பையனை எதுக்காக அடிச்சீங்க?” என்று கேட்டான். தெளிவான உறுதியான குரலில் கேட்டான். அந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. “உன் வண்டிய இடிச்சிருந்தா சும்மா வுட்ருப்பியா?” என்றான். “எதுக்காக அடிச்சீங்க?” என்று மறுபடியும் கேட்டான். “வண்டிய ரிப்பேர் பண்ணாம இங்கேருந்து ஒரு இஞ்ச் நகர மாட்டேன்” என்றான் அவன். இளைஞனின் பைக் சாவி அந்த ஆளிடம் இருந்தது. “ஏன் அடிச்சீங்க?” என்றான் சிவா.

“நீ என்ன கேட்டதையே கேட்டுக்கிட்டு இருக்க? வண்டிய இடிச்சா அடிக்கத்தான் செய்வாங்க” என்றான் அந்த ஆள்.

“இடிச்சதுக்கும் அடிச்சதுக்கும் சரியா போச்சு. அந்த வண்டிய எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு நயா பைசா கிடைக்காது” என்றான் சிவா.

“நீ என்ன பெரிய ரவுடியா இல்ல போலீஸா பஞ்சாயத்து பண்ண வந்துட்ட? இங்கேர்ந்து ஒரு அடி அந்தப் பையன் நகர முடியாது. நான் யார் தெரியுமா?” என்றான்.

“கொஞ்ச நேரத்துல அஸிட்டென்ட் கமிஷனர் பேசுவாரு. அவர் கிட்ட நீ யாருன்னு சொல்லு” என்றான் சிவா. பிறகு நிதானமாக ஒரு சிகரெட் பற்றவைத்தான். “உனக்காச்சு, எனக்காச்சு. பாத்துரலாம்” என்றான். அதற்குள் அவன் அழைத்திருந்த நண்பர்கள் வந்தார்கள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. காவலர்கள் வந்தார்கள். பஞ்சாயத்து நடந்தது. பையனுடைய முகவரி, தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டார்கள். வண்டியைப் பழுதுபார்க்க நியாயமாக என்ன செலவு உண்டோ அதற்கு நான் உத்தரவாதம் என்றான் சிவா. அவனுடைய நண்பரும் காவல்துறை அதிகாரியுமான துரைசாமி காவலர் மூலம் அந்த ஆளிடம் தொலைபேசியில் பேசினார். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றார். அரை மணிநேரத்தில் விவகாரம் முடிந்து கூட்டம் கலைந்தது.

 

ன்னிக்கு என்ன டிஃபன்?”

“இட்லி”

“நேத்துதான இட்லி பண்ணின? தினமும் எப்டி இட்லி சாப்புட்றது?”

“மாவு இருக்கு. இன்னிக்கு பண்ணலன்னா புளிச்சிபோயிடும்.”

“மாவு புளிச்சா தோச ஊத்திருவியே, அப்புறம் என்ன?”

“இன்னிக்கு ஒரு நாள்தான?”

“என்னால முடியாது. நீங்கல்லாம் சாப்டுங்க. எனக்கு ரெண்டு சப்பாத்தி போட்டுக் குடு.”

“உங்களுக்கு மட்டும் சப்பாத்தின்னா பசங்க கேக்க மாட்டாங்களா?”

“கேட்டா சுட்டு குடு.”

“அப்ப இட்லி மாவ என்ன பண்றது?”

“கூடக்கூட பேசாத. எனக்கு இட்லி வேணாம். பசங்கள சமாளிக்கறது உன் தலவலி. நா ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷன்ல இருக்கேன். கடுப்பேத்தாத.”

“…. ….. …..”

“என்னா முணுமுணுப்பு?”

“ஒண்ணுமில்ல”

 

டேட்டிங் சர்வீஸ் வேண்டுமா? தொடர்புகொள்ளுங்கள்’ என்ற செய்தி வந்திருந்தது. கூடவே ஒரு எண். நீண்ட யோசனைக்கும் தயக்கத்துக்கும் பிறகு பிரசாத் அந்த எண்ணை அழைத்தான். சிறிது நேரம் மணியடித்தது. பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்களில் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “சொல்லுங்க சார், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று ஒரு பெண் குரல் இந்தியில் கேட்டது. ஆங்கிலத்தில் பேச முடியுமா என்று இவன் ஆங்கிலத்தில் கேட்டான். சற்றே தடுமாற்றம் நிறைந்த ஆங்கிலத்தில் அந்தப் பெண் தொடர்ந்தாள்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

“இந்த எண்ணிலிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. டேட்டிங் சேவை தருவதாகச் சொன்னது.”

“ஆமாம் சார். நாங்கள் டேட்டிங் சேவை நிறுவனம் நடத்துகிறோம்.”

“என்ன சேவை வழங்குகிறீர்கள்?”

“எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்தால் நாங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ற பெண்களின் தொடர்புகளைக் கொடுப்போம். நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்களோ அந்த ஊரில் இந்தச் சேவையைப் பெறலாம்.”

“சேவை என்றால்”

“உங்கள் விருப்பத்திற்கேற்ற பெண்ணைச் சந்திக்கலம். பேசலாம். வெளியில் போகலாம்.”

“அவ்வளவுதானா?”

“உடல் உறவும் வைத்துக்கொள்ளலாம்.”

பிரசாத்துக்கு மனம் பொங்கியது.

“எவ்வளவு செலவாகும்?”

“நாங்கள் உங்களுக்கு மேடம்களின் தொடர்பைக் கொடுப்போம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். பணம் தர வேண்டாம்.”

“இலவசமாகவா?”

“பதிவுக் கட்டணம் உண்டு சார். மேடமுக்குப் பணம் தர வேண்டாம். அவர்கள் யாரும் பாலியல் தொழிலாளி கிடையாது. உங்களைப் போலத்தான்.”

“ஓ… அப்படியானால் எங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தருவதுதான் உங்கள் சேவையா?”

“ஆமாம் சார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?”

“சென்னை.”

“சென்னையில் எங்களுக்கு நிறைய மேடம்ஸ் இருக்கிறார்கள். கல்லூரி மாணவிகள், திருமணமானவர்கள், விவாகரத்து ஆனவர்கள், விதவைகள் என்று பலர் இருக்கிறார்கள்.”

“நான் அடுத்த வாரம் ஹைதராபாத் போவேன். அங்கே இந்தச் சேவை கிடைக்குமா?”

“இந்தியா முழுவதும் கிடைக்கும் சார்.”

“பெண்களை நான் எப்படித் தேர்ந்தெடுப்பது?”

“இரண்டு மாதங்களுக்கு 2100 ரூபாய். வாரத்திற்கு இரண்டு மீட்டிங். பணம் கட்டினீர்கள் என்றால் உங்களுக்கு வாட்ஸப்பில் மேடம்ஸ் புகைப்படங்கள், விவரங்களை அனுப்புவோம். உங்கள் வாட்ஸப் எண் இதுதானே?”

“ஆமாம்.”

“அதில் வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்புகிறோம்.”

“மற்ற தகவல்களையும் சேர்த்து அனுப்புங்கள்.”

தொலைபேசியில் சொன்ன விவரங்களுடன் கூடுதலாகச் சில விவரங்களும் வந்தன. கணக்கு விவரமும் வந்தது. வாட்ஸப் செய்தியில் பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு உண்டு என்று ஒரு வரி இருந்தது. அந்த எண்ணை மீண்டும் அழைத்தான்.

“சொல்லுங்க சார்?”

பிரசாத் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான்.

“எங்கள் தொடர்பில் சில மேடம்கள் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் திருப்திப்படுத்தினால் பணம் தருவார்கள்.”

“எவ்வளவு?”

“5000, 10000….”

“ஓஹோ…..”

“சார், எப்போது பதிவு செய்கிறீர்கள்?”

“யோசித்துச் சொல்கிறேன்.”

“இவ்வளவு தூரம் விசாரித்துவிட்டு இப்போது இப்படிச் சொன்னால் எப்படி?”

“விவரம் தெரியாமல் முடிவெடுக்க முடியாது. விவரம் தெரிந்தாலும் உடனடியாக முடிவெடுக்க முடியாது. யோசிக்க வேண்டும்.”

“எவ்வளவு நாள் ஆகும் சார்?”

“இரண்டு வாரங்கள்.”

“இரண்டு வாரங்களா?”

“ஆமாம்.”

“சரி சார்.”

பிரசாரத்தின் மனம் பரபரக்க ஆரம்பித்தது. கல்லூரி மாணவிகள், இல்லதரசிகள், விதவைகள், விவாகரத்து ஆனவர்கள். அவனால் தான் கேட்டதையும் படித்ததையும் நம்ப முடியவில்லை. பெரிய இடத்துப் பெண்கள் சிலர் இதற்குப் பணமும் தருவார்கள். யார் கண்டது. இதுபோன்ற தொடர்புகள் ஆழமாகவும் உருவாகலாம். முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது.

ஆனால், கைப்பேசி, இணையம் ஆகியவை வழியாகப் பாலுறவு ஆசைகாட்டிப் பணம் பிடுங்கும் கும்பலைப் பற்றி அவன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். பணம் கட்டுவதன் மூலம் தன்னுடைய வங்கிக் கணக்கு விவரம் அவர்களிடம் போய்விடும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வித்தையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். சந்திக்க வரும் பெண்கள் நம்மைப் போல இல்லாமல் இந்த நிறுவனத்தின் ஆட்களாக இருக்கலாம். அவர்கள் ஏதாவது படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டலாம். உறவு வைத்துக்கொள்ளலாம் என்று கூட்டிப்போய் அந்த இடத்தில் நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டு மிரட்டிப் பணம் பிடுங்கலாம். யூடியூப், இணையம் என்று மானத்தை வாங்கிவிடுவேன் என்று கூறி மிரட்டலாம். எப்படி நம்புவது?

இத்தனை சந்தேகங்களையும் தாண்டிப் பிரசாத்துக்குச் சபலம் எழுந்தது. என்னதான் ஆகிறது என்று பார்த்துவிடலாம் என்று நினைத்தான். ஆனாலும் பயம் நீங்கவில்லை. மாட்டிக்கொண்டால் பணம் போகும் என்பதோடு மானம் போகும். வீட்டிலும் மற்ற இடங்களிலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும்.

சபலமும் அச்சமும் அலைக்கழித்ததில் பிரசாத் குழம்பினான். தேவநாதனிடம் பேசலாம் என்று முடிவு செய்தான். தேவநாதன் முன்னணி ஊடகம் ஒன்றில் குற்றவியல் செய்திகளைக் கையாள்பவன். அவனிடம் யோசனை கேட்கலாம். ஆனால், தனக்கு என்று சொல்லி எப்படிக் கேட்பது?

நெடுநேரம் யோசித்த பிறகு ஒரு முடிவோடு தேவநாதனை அழைத்தான். “அர்ஜென்டா பேசணுமா?” என்றான் அவன். “இல்ல. எப்ப கூப்படலாம்?” “நானே எட்டு மணிக்கு மேல கூப்பட்றேன்.”

தேவநாதன் ஒன்பது மணிக்குக் கூப்பிட்டான். கைப்பேசித் திரையில் அவன் எண்ணைப் பார்த்ததும் பிரசாத் எழுந்து வெளியில் வந்தான்.

“சொல்லு ப்ரோ” என்றான் தேவநாதன்.

“என்னோட டிஸ்டன்ட் ரிலேட்டிவ் ஒருத்தர். மிடில் ஏஜ். அவருக்கு ஒரு ப்ராப்ளம்” என்றான் பிரசாத்.

பிரசாத்தின் உறவினர் செந்தில்நாதனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. மனைவி வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்தார். விவாகரத்துக்குப் பின் அவரையே கல்யாணம் செய்துகொண்டுவிட்டார். செந்தில்நாதனுக்கு வசதி இருக்கிறது. குழந்தைகள் இல்லை. மனதில் ஆசை இருக்கிறது. ஆனால், இன்னொரு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. அப்போதுதான் தற்செயலாக டேட்டிங் சேவை நிறுவனம் பற்றித் தெரியவந்தது. ஆனால், நேரடியாகப் பணம் கட்டிச் சேர்ந்துகொள்ள பயமாக இருக்கிறது. ஏதாவது வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்று பயப்படுகிறார். என்ன செய்யலாம்?

“அவருக்குதான் வசதி இருக்குல்ல? செக்ஸ் ஒர்க்கர்கிட்ட போக வேண்டியதுதானே?” என்றான் தேவநாதன்.

பாலியல் தொழிலாளியிடம் போவதென்றால் செலவு அதிகம் ஆகும். இவர்களோ இரண்டு மாதத்திற்கு 2100. அதில் 12 சேவைகள் என்கிறார்கள். அதில் சில பெண்கள் நமக்கே பணம் தருவார்களாம். இதைவிட்டுவிட்டுப் பாலியல் தொழிலாளியிடம் ஏன் பணம் செலவு செய்ய வேண்டும்?

“அதில்ல தேவா. அவருக்கு வேண்டியது செக்ஸ் மட்டுமல்ல. துணை. கம்பேனியன்ஷிப்.”

“அப்படீன்னா கல்யாணம் பண்ணிக்க சொல்லு.”

“அதுதான் வேண்டாம்னு முடிவோட இருக்காரே. இதோ பார் தேவா. அவர் கிட்ட நான் எல்லா ஆங்கிள்லயும் பேசிப் பாத்துட்டேன். அவரு இந்த ஆப்ஷன் பெட்டர்னு ஃபீல் பண்றாரு. நீ க்ரைம் ரிப்போர்ட்டரா இருக்கறதால உங்கிட்ட கேட்டு செய்யலாம்னு பாக்கறேன்.”

“க்ரைம் ரிப்போர்ட்டரா இருக்கறதாலதான் இவ்ளோ கேள்வி கேக்கறேன். இன்னிக்கு செக்ஸ் இண்டஸ்ட்ரி மாதிரி பணம் பிடுங்கற இண்ட்ஸ்ட்ரி வேற எதுவும் இல்ல. டீன் ஏஜ் பசங்கள்லேந்து பல்லுபோன கெழவன்வரைக்கும் இதுல சிக்கி சின்னாபின்னமாயிருக்காங்க. லேடீஸும் இந்த மாதிரி முயற்சில இறங்கி மாட்டிட்டு முழிக்காறங்க. போன மாசம்கூட என் பழைய ஃப்ரெண்டு ஒருத்தி இதுமாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்டா. சொசைட்டில நல்ல பொசிஷன்ல இருக்கா. எப்படியாவது இதுலேந்து காப்பாத்து தேவ்னு கெஞ்சினா. எப்படியோ பிரச்சினைய முடிச்சி குடுத்தேன்.”

“அதுனாலதான் உங்கிட்ட வந்துருக்கேன்.”

“உட மாட்டியே…. நீ நம்பர், மெசேஜ் எல்லாத்தையும் ஃபார்வேர்ட் பண்ணு.”

எல்லாவற்றையும் அனுப்பிய பிரசாத் இந்த நிறுவனத்தின் மூலம் சந்திக்கக்கூடிய பெண்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். கல்லூரி மாணவிகள் வேண்டாம் என்று முடிவு செய்தான். 35 வயதான பெண்களில் இல்லத்தரசிகள், விதவைகள், விவாகரத்தானவர்கள் ஆகிய வகைமைகளிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தான்.

தேவா ஒரு வாரம் கழித்து அழைத்தான்.

“சொல்லு தேவா.”

“இந்த பர்டிகுலர் கம்பெனிய பத்தி பெரிசா யாருக்கும் தெரியல. நம்பர போட்டா தகவல் எல்லாம் கரெக்டா வருது. ட்ரூ காலர் ஐடிய பாத்துட்டு அந்த நம்பரை செக் பண்ணிட்டுதான் கால் பண்றாங்கபோல. இதுவரைக்கும் இவங்கள பத்தி ரிப்போர்ட் எதுவும் வந்தா மாதிரி தெரியல. ஆனா அவங்க இவ்ளோ சீப்பா ஆஃபர் பண்றத பாத்தா சந்தேகம் வருது. அடுத்தடுத்த கட்டத்துல வேற வேற காரணம் சொல்லி கூடுதலா பணம் டிமாண்ட் பண்ணுவாங்கன்னும் சிலர் சொல்றாங்க. பண விஷயத்துல ரிஸ்க் எடுக்கத் தயாரா இருந்தா உங்க ரிலேட்டிவ எக்ஸ்பெரிமென்ட் பண்ண சொல்லு. அவர் நம்பர், ஆல்டர்னேட்டிவ் நம்பர் எல்லாம் எங்கிட்ட குடு. எதுனா பிரச்சின வந்தா பாத்துக்கலாம். டேட்டிங்ன்றது இல்லீகல் இல்லன்றதுனால போலீஸ்கிட்ட போறதுக்கு பிரச்சன எதுவும் இருக்காதுன்னு நெனைக்கறேன்.”

“தேங்ஸ் தேவா. நான் அவர் கிட்ட சொல்லிடறேன்.”

இன்னமும் பிரசாத்துக்கு முழு தைரியம் வரவில்லை. எல்லாம் சரியாக அமைந்தால் அதிருஷ்டம்தான். தவறாகிப் போனால் என்ன செய்வது? பிரச்சினை வந்தால் தேவாவிடம் என்ன சொல்வது? பதிவுசெய்த பிறகு வேறொரு காரணம் சொல்லிப் பணம் கேட்டால் என்ன செய்வது?

பிரசாத் நெடுநேரம் யோசித்தான். ராத்திரிக்கு என்ன டிபன் வேண்டும் என்ற கேட்ட மனைவியிடம் எரிந்து விழுந்தான். தொலைக்காட்சியை சத்தமாக வைத்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த மகனைத் திட்டினான். பிறகு ஒரு திட்டம் தீட்டினான்.

செந்தில் பயப்படுகிறார். அவருக்காக நானே அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பதிவுசெய்துகொள்ளப்போகிறேன். முழுமையாக விவரம் அறிந்துகொண்டு அவருக்குச் சொல்லப்போகிறேன். இதில் எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேவாவுக்கு இது பிடிக்கவில்லை. “தேவையில்லாத வேலைல எறங்கற. வார்ன் பண்ணிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்.”

“செந்தில்நாதன் எனக்கு ரொம்ப வேண்டியவர் தேவா. அவருக்காக இந்த உதவிய நான் செஞ்சிதான் ஆகணும்.”

 

ன்ன ஆச்சு மாலினி, இன்னிக்கு ரொம்ப நேரமா உக்காந்துருக்கீங்க?”

“அத ஏன் கேக்கறீங்க ஷங்கர்…. ஒரு அசைன்மென்ட் முடிக்கணும். அது முடியாம ஜவ்வு மாதிரி இழுக்குது. என்ன பண்றதுன்னு தெரியல.”

“கட்டைய எடுத்து சட்டுனு மாட்டி ஸ்க்ரூ பண்றா மாதிரிதானே உங்க அசைன்மென்ட் எல்லாம் இருக்கும். கட்ட எப்படி ஜவ்வா மாறிச்சி?”

“அட போங்கப்பா. ஜோக்கெல்லாம் கேக்கற மூட்ல இல்ல. அடுத்த மாசம் எம் பையனுக்கு டென்த் எக்ஸாம் ஆரம்பிக்குது. அவனோட ஒக்காரணும். இந்த அசைன்மென்ட் முடிச்சிட்டா ரெண்டு வாரம் லீவு போடலாம்னு இருக்கேன்.”

“அதுல என்ன பிரச்சனன்னுதான் கேக்கறேன்.”

“ட்ரெய்னீ ரெக்டூட்மென்ட் ஸ்கீம் ஒண்ணு போயிட்டு இருக்குல்ல? அதுக்கான ஸ்ட்ராட்டஜி பிளானிங் பண்ணணும்னு வி.பி. குடுத்தாரு. போன வருஷம் பண்ணினா மாதிரி பண்ணி குடுத்தேன். இந்த வருஷம் பார்ட்னர்ஸ் அதிகமா சேந்துருக்காங்க, ட்ரெய்னிங் மாட்யூலும் மாறுது, ட்ரெய்னீஸ அப்சார்ப் பண்ற பாலிசிலயும் சேஞ்ச் இருக்குன்னு சொல்லி ரீவொர்க் பண்ண சொல்லிட்டான். இந்த எழவையெல்லாம் முன்னாலயே சொல்லியிருக்கக் கூடாதா சனியன் புடிச்சவன். டீடெய்ல்ஸ் கேட்டேன். பார்ட்னர்ஸ் கிட்டேந்து வந்த மெய்ல்ஸ், ஹெச்.ஆர். கம்யூனிகேஷன்ஸ் எல்லாத்தையும் அனுப்பிட்டான். இப்ப அதையெல்லாம் பாத்து டீட்டெய்ல்ஸ் எடுக்கணும். அதுதான் பேசிக் டேட்டா. அப்புறம் அதை ப்ராசஸ் பண்ணணும். அதுக்கப்புறம் ஸ்ட்ராட்டஜி அவுட்லைன் குடுக்கணும்.”

“சிக்கல்தான். நீங்கள் ஒண்ணு பண்ணுங்க. டீட்டெய்ல்ஸ் எடுத்து பென்ட்ரைவ்ல எங்ககிட்ட குடத்துருங்க. மெயில்ல அனுப்பினா ரெக்கார்ட் ஆயிடும். பென்ட்ரைவ்ல குடுங்க. நான் வீட்டுக்கு எடுத்துட்டு போய் ப்ராசஸ் பண்றேன். எடுக்க எடுக்க குடுத்துடுங்க. நான் டக்குனு முடிச்சிடுவேன். நீங்க அப்புறமா ஒரு வாரத்துல ஸ்ட்ராட்டஜி அவுட்லைன் போட்டுரலாம்.”

“நெஜமாவா சொல்றீங்க ஷங்கர்? உங்களுக்கு டயம் இருக்குமா?”

“நைட்லதான் பண்ணபோறேன். ஒருவாரம் ஓடிடி பக்கம் போகாம இருந்தா போச்சு. அப்புறம் சேத்துவெச்சு பாத்துக்கலாம்.”

“தேங்ஸ் ஷங்கர்.”

“இட்ஸ் ஓகே. டீட்டெய்ல்ஸ் எடுங்க மொதல்ல.”

ஷங்கர் கிளம்பினான். “டயமாயிடிச்சே மாலினி, உங்களை டி.நகர்ல ட்ராப் பண்ணட்டுமா?”

“அஞ்சு நிமிஷம் வெயிட் பண்றீங்களா?”

“நான் வண்டிய எடுத்துட்டு மெயின் கேட் பக்கத்துல நிக்கறேன். வந்துடுங்க.”

மாலினி தனசேகரை அழைத்தாள். “நீ நேரா வீட்டுக்கு வந்துரு. என்னை என் கலீக் ட்ராப் பண்ணிடுவாரு.”

“யாரு? மாதவனா?”

“இல்ல. அவர் எப்பவோ ரிசைன் பண்ணிட்டாரு. இது ஷங்கர். நைஸ் கய்.”

“ஓ… ஃபைன்… சரி, பை….”

“வெயிட், வெயிட். லீவு போட முடியாதுன்னு சென்னேன்ல, இப்ப போட முடியும்னு தோணுது. தேங்ஸ் டு ஷங்கர். ட்ரெய்னீ ஸ்கீம்ல அவர்தான் ஹெல்ப் பண்றாரு. சீக்கிரம் முடிச்சிடலாம்னு நெனைக்கறேன்.”

“ஓ… பரவால்லியே…”

“யா. நைஸ் கய். லேடீஸ்க்கு ஹெல்ப் பண்ணிட்டு ஏதாவது ஒரு விதத்துல அட்வான்டேஜ் எடுக்கற டைப் இல்ல. ஸோ, நோ வொரீஸ்…”

“சூப்பர் சூப்பர்… சரி வா, வீட்ல பேசிக்கலாம்… பை…”

“பை…”

 

மூர்த்தி, ஃப்ரீயா இருக்கியா?”

“ஒர்க் போயிட்ருக்கு சார். பரவாயில்ல சொல்லுங்க.”

“காஃபி சாப்படலாமா?”

“ஷ்யூர் சார். கான்டீனுக்கு வந்துரவா?”

“கான்டீன் வாணாம். அங்க நம்ல கம்பெனி ஆளுங்க எதிர்ல எதுவும் பேச முடியாது. நீ எதிர்க்க இருக்கற டீக்கடைக்கு வந்துரு.”

“சரி சார்.”

ஷங்கர் கிளம்பினான். அந்த டீக்கடையில் மாலை அருமையான சட்னியுடன் சுடச்சுட போண்டா பஜ்ஜி வகையறாக்கள் கிடைக்கும். ஆளுக்கு ஒரு தட்டு போண்டா வாங்கிக்கொண்டு ஓரமாக வந்தார்கள். அக்கம்பக்கத்து அலுவலகங்களில் பணிபுரியும் பலரும் தத்தமது அலுவலகங்களில் டீ, காபி, நொறுக்குத் தீனி வகையறாக்கள் கிடைத்தாலும் இந்த டீக்கடைக்கு வந்து போண்டா, பஜ்ஜி, வடை என்று எதையாவது சாப்பிட்டு டீ குடிப்பது வழக்கம். ஷங்கர் ஐந்து ஆண்டுகளாக இந்தக் கடையின் வாடிக்கையாளர். நாளுக்கு நாள் கடையின் வியாபாரம் வளர்வதைப் பார்த்துவருகிறான். ‘டீயும் பஜ்ஜியும் வித்தே கோடீஸ்வரனாயிருப்பான். எதையெதையோ படிச்சி கிழிச்சி நாம என்ன சம்பாரிச்சிட்டோம்’ என்று நினைத்துக்கொள்வான்.

“சொல்லுங்க சார்…” என்றான் கிருஷ்ணமூர்த்தி.

“போன வாரம் கம்பெனி விஷயமா பேங்ளூர் போயிருந்தல்ல?”

“ஆமா சார். ட்ராவல் ரிப்போர்ட், அக்கவுண்ட்ஸ் எல்லாம் சப்மிட் பண்ணிட்டேன்.”

“பாத்தேன். ரிப்போர்ட்டை மேல அனுப்பிட்டேன். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்ல இன்னும் சைன் பண்ணல.”

மூர்த்தியின் முகம் மாறியது. “ஏன் சார், ஏதாவது ப்ராப்ளமா? கணக்கெல்லாம் கரெக்டாதானே குடுத்துருந்தேன்…”

“அதுதான் ப்ராப்ளம்.”

மூர்த்தி குழம்பினான். ஷங்கர் தொடர்ந்தான்.

“டூர் போயிட்டு வந்த பிறகு உன் கைல எவ்ளோ நின்னுது?”

“புரியல சார். எங் கையலயா… ஒண்ணுமில்ல சார்.”

“மூர்த்தி, நீ இந்த கம்பெனில சேந்து எவ்ளோ நாள் ஆகுது?”

“ரெண்டு வருஷம் ஆகப்போகுது சார்.”

“நான் வந்து ஆறு வருஷம் ஆகுது. இந்த கம்பெனிய பத்தி உன்னவிட எனக்கு நல்லா தெரியும்.”

“ஆமா சார். நீங்க சீனியர்…”

“என்ன மயிறு சீனியர்…. எப்பவும் சீட்டுல ரெண்டு ஊசிய சொருகி வெச்சிருக்கான் அந்த வி.பி. பாத்து பாத்து ஒக்கார வேண்டியிருக்கு. கொஞ்சம் அஜாக்ரதயா இருந்தாலும் குண்டி பழுத்துரும்.”

மூர்த்தி ஒன்றும் பேசவில்லை.

“இவனுங்க கோடிக்கணக்கா சம்பாரிக்க எத்தனையோ டகால்டி வேல பண்றாங்க. பல டுபாகூர் வேலைகளுக்கு நானும் என்னப்போல நெறய சீனியர்ஸும் உடந்தை. எங்களுக்கு என்ன குடுக்கறான்? எல்லாத்தையும் அவனே உட்டுக்குறான். நமக்கு சீட்டுல ஊசிய சொருவி எப்பவும் டென்ஷன்ல வெக்கறான். இவனா எதுவும் குடுக்க மாட்டான். நாமாதான் எடுக்கணும்.”

“புரியல சார்…”

காலியான தட்டை எடுத்துக்கொண்டு ஷங்கர் நடந்தான். அதைத் தொட்டியில் போட்டுவிட்டுக் கை கழுவிக்கொண்டு டீ போடும் இடத்துக்குப் போனான். மூர்த்தியும் பின்தொடர்ந்தான்.

டீ வாங்கிக்கொண்டு மறுபடியும் ஓரமாக வந்து நின்றார்கள். மூர்த்தி அடிக்கடி கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே ஷங்கரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“கணக்கெல்லாம் கரெக்டா குடுக்க கூடாது. கம்பெனிக்காக ரெண்டு நாள் டூர் போனா நம்ம கைல ரெண்டாயிரம், மூவாயிரம் நிக்கணும். எப்டி கணக்க எழுதறதுன்னு நான் சொல்லித்தரேன். வேற ஸ்டேட்மென்ட் குடு.”

“சார்… இது தப்பில்லயா சார்…”

“ஒரு மயிறும் தப்பில்ல. அவன் நம்பள தினமும் சூத்தடிக்கறான். நாம என்னிக்கோ ஒருநாள் திருப்பி அடிக்கறோம். இவுனுக்கெல்லாம் இதுதான் சரி. இன்னும் கொஞ்ச நாள் போனா நீயே தெரிஞ்சிப்ப. போனவாட்டி அப்ரைசல்ல உனக்கு எவ்ளோ குடுத்தான்?”

“ஒண்ணுமேயில்ல சார். ரொம்ப கம்மி.”

“பாத்தியா. நீ மாடு மாடு மாரி உழைக்கற. அவன் உன்ன குப்புற படுக்கவெச்சி சூத்தடிக்கறான். நீயும் காட்டிகினே இருப்ப. ஒருநாள் சூத்து புண்ணாயிடுச்சின்னு அழுவ. மருந்து போடறதுக்காவது பணம் வேணாமா?”

மூர்த்தி பரிதாபமாகப் பார்த்தான்.

“ரொம்ப யோசிக்காத. இந்த ஆபீஸ்ல எம்.டி. வெரிக்கும் இததான் பண்றானுங்க. எல்லாத்தையும் பாத்துட்டுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். மூவாயிரம் ரூபா உனக்கும் எனக்கும் பெருசு. கம்பெனிக்கு அது பிச்சக்காசு. நமக்கு தர வேண்டியத அவன் நியாயமா தர்ரதில்ல. நம்ம இப்டி எட்த்துக்க வேண்டித்தான். நீ ஏழு மணிக்கு மேல சீட்டுக்கு வா. எப்டி கணக்கு எழுதறதுன்னு சொல்லித்தரேன்.

மூர்த்தி தயக்கத்துடன் தலையாட்டினான். ஷங்கர் பணம் கொடுப்பதற்காகக் கல்லாவுக்குச் சென்றான்.

 

சிவா எலியட்ஸ் கடற்கரை அருகே உள்ள சிறிய பழரசக் கடைக்குப் போய்ச் சேர்ந்தபோது இரவு மணி பத்து இருக்கும். கடை மூடியிருந்தாலும் கடையின் பெயர்ப் பலகை பளிச்சென்று தெரியுமளவுக்குப் பலகைமீது ஒரு விளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது. பைக்கை நிறுத்திவிட்டுக் கைப்பேசியின் கூகிள் வரைபடத்தை மூடிவிட்டு சிவா அந்தக் கடைவாசலை நெருங்கினான். மகேஷும் அவன் காதலி ஆஷாவும் கையைக் கட்டியபடி ஓரமாக நின்றிருந்தார்க்ள. மகேஷ் ‘ஏண்டா லேட்டு” என்பதுபோல ஒரு பார்வை பார்த்தான். காவல் அதிகாரியைப் பார்த்து சிவா, “ஸாரி சார், இவங்க வீட்டுக்குப் போய் டாகுமெண்ட்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வர லேட்டாயிடிச்சு” என்று மகேஷுக்கும் சேர்த்து பதில் சொன்னான். ஆஷா கையில்லாத டி- ஷர்ட்டும் கணுக்காலுக்கு மேல் ஏறிய இறுக்கமான ஜீன்ஸும் போட்டிருந்தாள். மருட்சியோடு சிவாவின் கண்களை ஒருமுறை பார்த்துவிட்டுக் கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

சிவா காவல்துறை அதிகாரியிடம் அமைதியாகவும் நிதானமாகவும் பேசினான். அதிகாரி மகேஷின் வண்டிக்கான ஆவணங்கள், அவனுடைய அடையாள அட்டை ஆகியவற்றைப் பார்வையிட்டார். சிவா அங்கே வருவதற்கு முன்பே சிவாவின் நண்பரான காவல்துறை அதிகாரி இந்த அதிகாரியை அழைத்துப் பேசிவிட்டதால் பிரச்சினை எதுவும் ஆகவில்லை.

“உங்க ஃப்ரெண்ட கூப்டுங்க” என்றார் அதிகாரி.

சிவா, மகேஷை அழைத்தான். ஆஷாவும் உடன் வந்தாள்.

“இவ்வளோ நேரத்துக்கு மேல இந்த மாதிரி எடத்துக்கு ரெண்டு பேர் மட்டும் தனியா வர்ரது சேஃப் கிடயாது. பெரிய ஆபீஸ்ல வேல பாக்கறீங்க. படிச்சிருக்கீங்க. இந்த சிம்பிள் மேட்டர் உங்களக்குத் தெரியாதா? இங்க ஒரு மாசத்துக்கு எவ்ளோ சம்பவம் நடக்குது தெரிமா? லவர்ஸ் தனியா இருக்கணும்னு இங்க வராங்க. அவங்க தனியா வருவாங்கன்னு தெரிஞ்சே ரவுடீஸ் அவங்கள டார்கெட் பண்றாங்க. ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? ஏம்மா, உனக்காவது தெரிய வாணாம்? அதுல வேற இவரு எந்த டாகுமென்ட்டும் இல்லாம ட்ராவல் பண்றாரு. லைசன்ஸ் இல்லாம வண்டியே எடுக்கக் கூடாது. உங்க பேக்ரவுண்ட பாத்துதான் உடறேன். இனி இந்த மாதிரி பண்ணாதீங்க” என்றார்.

மகேஷும் ஆஷாவும் நன்றியோடு தலையசைத்தார்கள். மகேஷ் அதிகாரியிடம் “தேங்க் யூ சார்” என்று கை கொடுத்தான். அவர் மிடுக்கோடு கை குலுக்கிவிட்டு, “பத்ரமா போங்க” என்றார். சிவா, “தேங்க்யூ சார்” என்று கை குலுக்க முன்வந்தபோது, “நீங்க லைசன்ஸ் வெச்சிருக்கீங்களா?” என்று அதிகாரி கேட்டார். அவர் பக்கத்தில் நின்றிருந்த காவலர் மெலிதாக முறுவலிப்பதை சிவாவால் பார்க்க முடிந்தது. சிரித்துக்கொண்டே தன் பர்ஸை எடுத்து ஓட்டுநர் உரிமம், நிறுவன அடையாள அட்டை ஆகியவற்றைக் காட்டினான்.

உரிமத்தைப் பார்வையிட்டவாறே, “துரைசாமி சாரை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார்.

“சின்ன வயசிலிருந்தே பழக்கம். நானும் அவரும் காலேஜ் ஃபுட்பால் டீம்ல ஒண்ணா விளையாடியிருக்கோம்.”

“ஓ… இப்பவும் வௌயாடுவீங்களா?”

“ப்ச…. இல்ல சார். ஐ.டி. இண்டஸ்ட்ரி என்னைப் போல ஸ்போர்ட்ஸ் பர்சன்ஸையெல்லாம் காயடிச்சிடிச்சி.”

அதிகாரி புன்னகை புரிந்தார். “உங்க பேர் என்ன?” என்றார்.

“சிவா.”

“இதுல வேறமாரி போட்ருக்கு?”

“சிவஷங்கர்.”

“இல்லியே…”

சிவா சிரித்தபடி, “சிவ ஷங்கர் பிரசாத்னு போட்டிருக்கும் சார்” என்றான்.

“போலீஸ்ல, கவர்ன்மென்ட் டிபார்ட்மென்ட்ல எல்லாம் பேர கேட்டா முழுசா அஃபிஷியல் பேர சொல்லுங்க. அதுதான் முறை” என்றார் அதிகாரி.

“சரி சார்.”

“கௌம்புங்க. உங்க ஃப்ரெண்டை சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க.”

“தேங்க்யூ சார்.”

அரவிந்தன்” <aravindanmail@gmail.com>

d.i. aravindan

 

 

Amrutha

Related post