ஆனந்த்பிரசாத்தின் ‘சொல்லப்படாத கதைகள்’ | பொ. கருணாகரமூர்த்தி

 ஆனந்த்பிரசாத்தின் ‘சொல்லப்படாத கதைகள்’ | பொ. கருணாகரமூர்த்தி

ஆனந்த பிரசாத்

சொல்லப்படாத கதைஆனந்த்பிரசாத்; பக்கங்கள்: 296, விலை: 350₹; காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோயில்629001; தொலைபேசி: +914652278525; மின்னஞ்சல்: kalachuvadu@sabcharnet.in

 

ந்நூல் ஆனந்த்பிரசாத்தின் பகுதியான சுயவரலாறாகவும் அவர் மாலுமியாகப் பரதேசங்கள் உழன்ற கடல் வாழ்வின் வரலாறாகவும் இளைஞனாக ஈழத்தில் வாழ்ந்த காலத்தின் ஈழஅரசியலாகவும் இருப்பதால், சமீபத்தில் தமிழில் வெளிவந்த நூல்களிலே பிரத்தியேக கவனம்பெறுகிறது.

நானும் ஆனந்த் பிரசாத்தும் சமகாலத்தைய மாணவர்களாக இருந்ததோடு, சொற்ப புள்ளிகளால் பல்கலைக்கழகத்துள் நுழையும் வாய்ப்பை இழந்தவர்கள். அடுத்து என்ன செய்வதென்று அலமலங்கும் பொதுநியதியோடு திணறிக்கொண்டு, வாழ்வுதரும் பொருண்மிய அழுத்தத்தால், பொறுப்புக்களால், அடுத்து எதையாவது செய்யவேண்டி நாட்டைவிட்டு வெளியேறியவர்கள். ஆதலாலும் அவரது இந்தச் `சொல்லப்படாத கதைகள்’ என்னை மேலும் ஆகர்ஷிக்கின்றது. நாட்டைவிட்டு வெளியேற முயன்றவர்கள் முன்னேயும் மூன்று தேர்வுகளே இருந்தன. முதலாவது ஐரோப்பிய நாடொன்றிலோ கனடாவிலோ அகதியாக குடியேறுவது; இரண்டாவது மத்திய கிழக்கு நாடுகள் எதிலாவது (unskilled) நிபுணத்துவமற்ற தொழிலாளர்களாகப் போய்விடுவது, அடுத்தது கிரேக்க அல்லது ஸ்பானியக் கப்பல்கள் எதிலாவது வைப்பர் / ஒயிலர் போன்ற சிற்றூழியர்களாகச் சேர்ந்துவிடுவது.

1980களின் ஆரம்பத்தில் கீழ்மத்தியதரக் குடும்பத்து இளைஞர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை / மனையை விற்றோ, அம்மா / அக்காவின் மீதமிருக்கும் சீதன நகைகளை அடகுவைத்தோ / விற்றோ, வெறும் 500$ வரையில் புரட்ட முடிந்தவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தரைமார்க்கமாகவே இந்தியா – பாகிஸ்தான் – ஆப்கனிஸ்தான் – ஈரான் – ஈராக் – துருக்மினிஸ்த்தான் – செகோஸ்லேவாக்கியா – கிரேக்கம் என்று வேலை தேடிப் புறப்பட்டார்கள். இவர்களில் சிறுவீதமானவர்கள் நாடுகளைக் கடக்கும்போது பாலைவெளிகளிலும் ஆறுகளிலும் அடிபட்டும், பனிச்சேறுகளில் அகப்பட்டும் திரும்பியே வராமல் போனவர்களுமுண்டு.

திருமலையைச் சேர்ந்த ஆனந்த்பிரசாத்தும் அவரின் தோழர் அருள்ஜோதியும் ஏதாவதொரு கப்பலில் தொற்றிக்கொண்டு விடுவது என்றமுடிவு எடுத்த நிலையில், திருமலையில் ஜெகநாதன், பாலசிங்கம் என்று பிரபல கப்பல் ஏஜெண்டுகள் பலர் இயங்கிக் கொண்டிருக்க, யாழ்ப்பாணத்துக்கு வந்து ரொஹான் கந்தப்பாவிடமும் அந்த டைட்ஸ்கேர்ட் அக்காவிடமும் மாட்ட நேர்ந்ததை வாழ்க்கை கற்பித்த பாடமென்கிறார் ஆனந்த்பிரசாத்.

அக்காவோ இவர்களிடம் பணத்தைப் (30,000) பக்குவமாக வாங்கிக்கொண்டு விமானச் சீட்டை வாங்கிச் சென்னைவரை கூட்டி வந்தும் விடுகிறார். நீங்கள் மும்பாய் போனதும் அங்கே உங்களுக்காகக் காத்திருக்கும் ரொஹான் உடனேயே கப்பலில் ஏற்றிவிடுவார் என்பதுபோல்ச் சொல்லிவிட்டுச் சென்னையில் மாறிவிடுகிறார் அக்கா. இவர்கள் சென்னையில் ரொஹான் கந்தப்பா குழுமத்தால் கப்பல் ஆசைகாட்டி மூன்று மாதங்களின் முன்னதாகக் கூட்டிவரப்பட்ட விஜயனைச் சந்திக்கிறார்கள். இரண்டு நாட்கள் சென்னையில் ஒரு லொட்ஜில் தங்கிவிட்டு அங்கிருந்து தொடரியைப் பிடித்து விஜயனுடன் மும்பாய் வந்திறங்கினால் அங்கேயும் விஜயனைப் போல் ஜெயக்குமார் என்றொரு அப்பாவிப் பையனையும் சந்திக்கிறார்கள். பிறநாட்டு வாழ்வின் `அந்தரிப்பும் அலைக்கழிப்பும்’ அங்கேயே தொடங்கிவிடுகிறது.

கட்டைக்கவுண் அக்காவின் மூலம், பம்பாயில ரொஹான் உங்களை 1000, 1500$ சம்பளத்தில ஏற்றிவிடுறதுக்கு கிரேக்கக் கப்பலை இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறாரென்று சொல்ல வைத்து, காசைச் சுருட்டிக்கொண்ட ரொஹான் கந்தப்பா, இவர்களை கப்பல் ஏஜெண்டுகளிடம் அழைத்துப்போய் வேலை ஏதாவது இருக்காவென்று விசாரித்து தண்ணிகாட்டிக் கொண்டிருந்தான்.

கையில் செலவுக்குப் போதிய பணமில்லாது இவர்கள் நால்வரினதும் நாட்கள், மும்பாயின் லொட்ஜ்களிலும் வீதிகளிலும் ‘ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் சீமென்ஸ்’ கிளப்பிலும் ‘புனித ஃப்ரான்சிஸ்’ தேவாலயத்திலும் ‘கேட் ஒஃப் இன்டியா’விலும் விக்டோரியா டேர்மினலுக்கு எதிராக இருந்த ஹொட்டலிலுமாக இரண்டு மாதங்களைக் கழித்ததே பிரசாத்தின் கஷ்டஜீவிதத்தின் முதல் அவத்தை.

பின்னர் விஜயனும் இவரும், சீமென்ஸ் கிளப்பில் கரம்போர்ட் விளையாடிக் கொண்டிருந்த சிங்கள நபரொருவரின் உதவியுடன், இவர்கள் முன்னரும் பல கப்பல்களில் (இல்லாத பெயர்களில்) வேலைசெய்த அனுபவஸ்தர்கள் என்பதுபோன்ற போலியான சிடிஎஸ் சேர்டிபிகேட் (Certificate of discharge Seaman) ஒன்றைத் தயாரித்துக்கொண்டு ஏதென்ஸுக்கு வந்து, ஒருவாறு எம்.வி. ஔரோரா எனும் கிழட்டுக் கப்பலில் Able Seaman ஆகச் சேர்ந்துவிடுகிறார்கள்.

ஆங்கில பாடத்தில் டியூட்டரி நடத்திக் கொண்டிருந்த அருள்ஜோதிக்கு இவரளவுக்குக்கூட நல்லூழ் வேலை செய்யவில்லை. அவர் இலங்கைக்கே திரும்பிப் போய் புளொட் இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறார். மும்பாயில் பிரியாவிடை கொடுத்த பிறகு அவரைப் பிரசாத் காணவே இல்லையாம்.

 

ப்பலுக்குள் முன்னர் எப்போதும் காலே பதித்திராத பிரசாத்துக்கும் விஜேயுக்கும் அக்கப்பலில் ஏலவே பணிபுரிந்து கொண்டிருந்த சிங்களத் தோழர்கள் கீர்த்தியும் ரஞ்ஜித்தும் உதவுகிறார்கள். தளத்தில் அவர்கள் பார்க்க வேண்டிய வேலைகளான கயிறுகளில் முடிச்சுக்கள் போடுவதிலிருந்து, அவதானிப்பு அறையிலிருந்து வரும் ஆணைகளுக்கிணங்கச் சுக்கான் பிடித்துக் கப்பலைச் செலுத்துவது, நங்கூரமிறக்கி நிலைகொள்வது, துறையை அடைந்ததும் கப்பல் பக்கவாட்டில் இறங்குதுறையோடு உராயாமல் பக்குவமாகக் கட்டுவது, வரையிலுமான அனைத்து வேலைகளையும் துவேஷங்கள் எதுவுமின்றிக் கற்றுக்கொடுக்கிறார்கள். இவர்கள் மெல்ல மெல்லக் கிரேக்க மொழியில் தேறுவதும் கப்பலின் பணிகளை இலகுவாக்குகின்றது.

கிரேக்கத்தின் துறைமுகமொன்றிலிருந்து வியட்நாமுக்கு கோதுமை மாவு மூட்டைகளை நிவாரணமாக எடுத்துச்சென்ற முதற் பயணத்திலேயே வங்காள விரிகுடாவில எம்.வி. ஔரோறா புயலில் அகப்பட்டுவிடுகிறது. கடல்நீர்ப் பரப்பில் கப்பல் காணாமற்போவதும் பின் மீண்டெழுவதுமாக இருந்ததாம். புயலில் எழுந்த பேரலைகள் கப்பலின் பாக்கவாட்டில் மோதிச் சிதறி `ஹாட்ஸஸ்’ எனப்படும் சரக்குச் சேமிப்புக் கிடங்குக்குள் வழிந்ததால் மாவின் ஒரு பகுதி நனைந்து கெட்டுப்போய்விட, நிவாரணமாக அதைக் கொடுக்க முடியாதாகையால், அவற்றைக் கடலிலேயே கொட்டிவிடும்படி சரக்கை அனுப்பிய கொம்பனி `ஆக்ஞை’ அனுப்புகிறதாம். கப்பல் ஓடிக் கொண்டிருக்கையிலேயே கப்பலின் சிப்பந்திகள் அனைவருமாகச் சேர்ந்து மாவு மூடைகளைக் கடலில் தூக்கிவீசவும், கடலில் கரைந்த மாவு நீண்ட மைல்கணக்கான தூரத்துக்குக் கப்பல் நகர்ந்த வழியெங்கும் வெள்ளை நிறப்பட்டிபோல தொடர்ந்து கொண்டிருந்ததாம். இதைப் பிற கப்பல்கள் எதுவாவது கண்டு, சர்வதேச கடல்மாசு படுத்துவதைக் கண்காணிக்கும் அதிகார நிறுவகத்துக்கு அறிவித்திற்றாயின், இக்கப்பலின் சேவை உரிமரத்தையே மீளெடுத்துவிடுவார்கள்.

பிரசாத், எம்.வி. ஔரோறாவில் பணியாரம்பித்து ஒரு வருஷம் பூரணமாகுமுன்பு, அக்கிழவியை `ஸ்கிறாப்’ பண்ணிவிடுவார்கள் என்றொரு வதந்தி கப்பலில் கிளம்பவும், பயந்து போய்விடுகிறார். அதுவரை உழைத்ததும் சம்பாதித்ததும் அக்காவின் நகைகளை மீட்கவே போதாது. மீண்டும் மும்பாயைச் சென்றடைந்து காத்திருந்து இன்னொரு கப்பலில் ஏறுவதென்பது அவருக்கொரு கொடுங்கனவு.

ரஞ்ஜித்தோ, “அப்படி ஒன்றும் நடவாது மச்சான், பயப்படாத. புதிய பிஸ்டன்கள் மாற்றிய பிறவு கிழவி மணிக்கு 26 கடல்மைகள் ஓடுறாள். எப்படியும் இன்னும் கொஞ்சக் காலத்துக்கு வைத்து ஓட்டவே பார்ப்பார்கள்” என்று தென்பூட்டுகின்றான். அவனது வாய் மூர்த்தம் அப்படியே கிழவி மீண்டும் ஓட ஆரம்பிக்க அவர்களுக்குத் தொடர்ந்தும் அதில் வேலை செய்யமுடிகிறது.

anand parasadஇதுபோன்று பல சுவாரஸியமான சம்பவங்களாலும், கப்பலில் பணிசெய்ய நேர்ந்தபிறகு உடன் பணிபுரிய நேர்ந்த பன்னாட்டு மாலுமிகளின் நடத்தைகள் மற்றும் அவரவரது தனிக் கதைகளாலும், நனவிடை தோய்தல் பின் நிகழ்வு உத்தியில், பழைய நண்பர்கள், 70/80களின் அரசியல் நிகழ்வுகள் என பல்தளங்களில் விரிவுகொள்ளும் அத்தியாயங்கள் மாறிமாறி அடுக்கப்பட்டுள்ளமையால், வாசிப்பில் சோர்வைத் தராது நகர்கிறது புதினம்.

கப்பல் மத்தியதரைக் கடலூடாக நகர்ந்து சூயெஸ் கணவாயை நோக்கி போகையில் கடலின் இருமருங்கிலும் உள்ள நகரங்களிலிருந்து வரும் வெளிச்சங்களும், அலெக்ஷான்டிரியா போன்ற துறைமுகங்களின் வெளிச்ச வீடுகளிலிருந்து தெறிக்கும் வெளிச்சக்கதிர்களும், கடலின் மேற்பரப்பிலும் அதிலுள்ள கப்பல்களிலும் பட்டுத் தெறிப்பதும்; மேலும் செல்ல ஐக்கிய அமீரகத்தின் மீன்பிடிக் கப்பல்கள் செறிவாக மின்மினிகளைப் போல கடலில் மிதந்து கொண்டிருக்கும் அழகும் வார்த்தை வயப்படுகின்றன, அபூர்வமான கடற்பறவைகள் தலைகீழாகப் பறந்து வந்து கடலில் குத்தி மீன்களைப் பிடித்துக்கொண்டு பறப்பதையும், அங்குவீசும் சீதளம் நிறைந்த காற்றுத்தடவித் தரும் சுகத்தையும் தன் கவித்துவ மொழியில் எழுதுகின்றார்.

 

சோதி என்று இவரது நல்ல நண்பரொருவர், திருமலை நகரில் மிதியுந்துத் திருத்தகமொன்றை வைத்து நடத்தி, தன் ஜீவனத்தை நகர்த்திக் கொண்டிருந்தார். பிரசாத்தின் மிதியுந்துக்கு ஏதாவது திருத்தம் செய்வித்தால் அதற்குரிய கிரயமாக இசைக் கலைஞராகிய பிரசாத் ஒரு பாட்டுப்பாடினால் போதும். சற்றே பெரிய திருத்தமென்றால், `இன்றொருநாள் போதுமா’ போன்றதொரு கர்நாடக இசையுடனான உருப்படியைப் பாடவேண்டும். அவரது திருத்தகம் இருந்த நிலம் நகர சபைக்குச் சொந்தமானதென்று அடிக்கடி நகரசபையால் பிடுங்கியெறியப்படுகிறது. சோதியும் தளர்விலாது தன் திருத்தகத்தைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறார். விளைவாக அவர் கைது செய்யப்பட்டு மிலேச்சத்தனமாக ஆண் குறியில் மிதியுந்தின் கம்பியைச் செலுத்தித் துன்புறுத்தப்படுகின்றார்.

சில ஆண்டுகளின் பின்பு, எம்.வி. ஔரோறா மத்திய தரைக் கடலை கடந்துபோய் ஐக்கிய அரபின் அமீரகத்தின் ஜெட்டா துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டப்பட்டிருக்கையில், அதற்கு எரிபொருள் நிரப்புவதற்காக மாலுமிச் சீருடையில் வந்த சோதிக்கு, துணைசெய்ய கொஞ்சம் நரையும் போட்டுத் தாடியும் வைத்துக்கொண்டு வந்த பிரசாத்தை யாரென்றே கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

எம்.வி. ஔரோறாவில் நீண்டகாலமாக Able Seaman ஆகப் பணிபுரியும் செல்வராஜா எனப்படும் கொழும்புத் தமிழ் பேசும் தமிழரொருவர் கொழும்பில் மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையம் வைத்திருந்த ஒரு பணக்கார அப்பாவின் மகன். அப்பா தியாகராஜன் நம்பிக்கையின் நிமித்தம் அளவுக்கு விஞ்சிய உதிரிப் பாகங்களைக் கடனாக, ராகமவில் பல்வகை வாகனங்களையும் திருத்தும் திருத்தகம் வைத்திருந்த சவரிமுத்து எனும் ஒரு வாடிக்கையாளருக்குக் கொடுத்து, அவர் அவற்றுக்கான கிரயம் எதையும் திருப்பாமல் ஒரு மழை இரவில் காணாமல் போய்விடவும், அப்பாவின் வியாபாரம் முறிவடைந்து போகிறது. சவரிமுத்துவின் வீட்டையும் HNB வங்கி கையகப்படுத்தி விடுகிறது. தனித்துப்போய்விட்ட சவரிமுத்துவின் அழகிய மனைவி வாஸந்தியையும் அப்பா அழைத்துக்கொண்டு மருதானையில் ஒரு சிறிய வீட்டில் குடியேறிவிடுகிறார். எதிர்பாரத வாழ்வியல் திருப்பங்களால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிட்ட நிலமையில் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக செல்வராஜா இக்கப்பலில் வந்து மாய்ந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல் விஷ்ணுபட்டேல் என்றொருவர் ஏறத்தாழப் பணி ஒய்வுபெறும் வயதையும் (65) கடந்து அக்கப்பலில் தேர்ட் ஒஃபிஸராகக் பணிசெய்து கொண்டிருந்தார். நல்ல மனிதரான அம்மனிதருடனான ஒரு சம்பாஷணையின்போது, பிரசாத், இந்தவயதில் அவர் இன்னும் கப்பலிலோடி உழைக்க வேண்டிய அவசியமென்னவெனக் கேட்டபோது, அவர் தன் வாழ்க்கையிலுள்ள சோகத்தை விவரிக்கின்றார். `என் மகன் விஜய் ஒரு கெமிக்கல் இஞ்ஜினியர், மகள் லக்ஷ்மி ஒரு பட்டயக் கணக்காளர். இருவரும் நல்ல சம்பளத்தில் போபால் இரசாயனக் கொம்பனியில் பணிபுரிந்தார்கள், மகனுக்கு இரண்டு குழந்தைகள், மகளுக்கும் இரண்டு குழந்தைகள். என் பிள்ளைகளுக்கு உத்தரவாதமான வருமானம், எனக்கு 4 பேரக்குழந்தைகளென மகிழ்ச்சியாக வாழ்ந்தவேளையில் 1984ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம்தேதி, இரசாயன நச்சுவாயுக் கசிவு விபத்து ஏற்பட்டு உடல்வெந்து இறந்தபோன இரண்டாயிரம்பேரில் என் பிள்ளைகளும் அடக்கமானார்கள். பிள்ளைகளின் இழப்பை எண்ணியெண்ணி என் மனைவியும் சித்தப்பிரமைக்காளாகி விட்டாள். ஊருக்குத் திரும்பி எனக்கு யாரையும் எதிகொள்ளும் திராணியில்லை, கால்களை இழந்துவிட்ட பறவையொன்று பிரபஞ்ச வெளியில் காற்றில்தான் தூங்கமுடியும் என்றொரு கவிதை படித்திருக்கிறேன், அதைப்போல் நானும் தொடர்ந்து கடலோடிக் கொண்டிருக்கிறேன்’ என்றாராம்.

மருதானை ரவியென்றொருவர், எம்.வி. ஔரோறா உட்பட வேறும் சில கப்பல்களுக்குச் சொந்தமான குழுமத்தின் பங்குதாரரான கப்டன் நிகோஸ் அர்க்கைஸ் என்றொருவர், இன்னொரு பங்குதாரரும் கண்டபடி மாலுமிகளை வாயில் வந்தபடி வைதுகொண்டிருப்பவருமான இஞ்ஜினியர் கொறிந்தஸ் பனயோதிஸ் என்றொருவர், இப்படி அக்கப்பலில் பணிபுரியும் ஒவ்வொருவரிடமும், நிவர்த்திக்கமுடியாத கோபம், துரோகம், துன்பியல் நிறைந்த கதைகள் பல உள்ளன. இப்புதினம் என்கிற மரத்திலுள்ள கிளைகளில் அக்கதைகளையும் முடிந்த அளவில் சேர்த்துக்கொண்டு முன் நகர்கின்றார் பிரசாத்.

16,17ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிலிருந்து உலகத்தின் கிழக்கு ஆபிரிக்கா, ஸ்வாஹில், சிஷேல்ஸ், மொறீஷியஸ், கினித்தீவுகள், மலேஷியா, ஃபுஜி, கயானாத்தீவு, ஜமேக்கா எனப் பல பாகங்களுக்கும், நாட்டின் பண்ணைகளை வளப்படுத்தவும் வீதிகளை நிர்மாணிக்கவும், கூலிகளாகவும் அடிமைகளாகவும் தென்னிந்திய மக்கள் கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறார்கள். அடிமை வர்த்தகம் ஸ்வாஹில் வியாபாரிகளால் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது என்கின்றன சரித்திரக் குறிப்புகள். அடிமைகளாக ஏற்றிச்செல்லப்பட்ட பெண்களை இவ்வியாபாரிகளும் கப்பலின் சிப்பந்திகளும் தம்மிஷ்டத்துக்குப் பெண்டாண்டார்களாம். அவ்வாறு பெண்களைப் `பெண்டாண்டவர்கள்’ அவ்அடிமைகளின் `கப்பல்க் கணவர்கள்’ என அழைக்கப்பட்டார்கள். அதற்கொப்பான சம்பவமொன்று எம்.வி. ஔரோறாவின் பணிக்காலத்தில் பிரசாத்துக்கும் ஏற்படுகின்றது.

1969 – 1973களில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்ததும், நாட்டில் ஏற்பட்ட தாங்க முடியாத வறுமை பஞ்சம் காரணமாக வியட்நாமிய மக்கள் ஆண் பெண்ணென்ற பேதமின்றிப் பலநாடுகளுக்கும் வள்ளங்கள் மூலம் அபாயகரமான பயணங்களை மேற்கொண்டு, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, யாவா, சுமாத்திரா, போர்ணியோ, அவுஸ்திரேயாவென்று தஞ்சமடைந்ததை நாம் அறிவோம். பிரசாத் வியட்நாம் போர் அந்நாட்டில் உண்டு பண்ணிவைத்த சீரழிவுகளையும் சற்றே நூலில் விவரணஞ் செய்துள்ளார்.

வியட்நாமுக்குச் செல்லும் கப்பல்கள் அங்கிருந்து புறப்படுமுன் யாராவது அதன் ஹட்ஸுகளுக்குள்ளோ, இதர பதுங்கக்கூடிய இடங்களிலோ திருட்டுத்தனமாக ஏறி ஒளிந்திருக்கிறார்களாவென நுணுகிப் பார்ப்பார்கள். அவ்வாறே எம்.வி. ஔரோறாவும் வியட்நாமை விட்டுப் புறப்படுகையில் (துறைமுகத்தின் பெயர் சொல்லப்படவில்லை) இரண்டு விடலைப் பெண்கள் செல்வராஜா, ரவி, பிரசாத் ஆகியோரின் தயவால் கப்பலின் அடியில் வந்துநின்ற வள்ளத்திலிருந்து கயிற்றேணி மூலம் ஓசைப்படாது மேலேறி டெறிக்கோடு (கிறேன்) சேர்ந்தாற் போலிணைந்துள்ள பெட்டிபோன்றவொரு கட்டமைப்புக்குள் ஒளிந்துகொண்டு விடுவார்கள். கப்பல் துறையைவிட்டுப் புறப்பட்டுக் கணிசமான தூரம் சென்றபின் பசிமயக்கத்துடன் இருந்த அவ் யுவதிகளை செல்வராஜிண் கபினில் ஒருவரும் பிரசாத்தின் கபினில் ஒருவருமாக ஒளித்து வைத்திருக்கிறார்கள். இப்படி அகதிகளைத் தெரிந்தே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பது கப்பலின் நிர்வாகத்துக்குத் தெரியவந்தால் இவர்கள் வேலையிலிருந்து தூக்கப்படுவதுடன் கப்பல் அடுத்து அடையும் நாட்டின் அரசினால் தண்டனைக்குமாளாகலாம்.

இவ்வேளை கப்பல் மலாக்கா கணவாயினூடு கடந்து செல்கின்றது. தொலைவில் இருமருங்கிலுமுள்ள நகரங்களிலிருந்து வரும் வெளிச்சங் ரம்மியமாக இருக்கின்றன. அமைதியான கடலின் அழகும் அருகில் மிதந்து கொண்டிருக்கும் இதர கப்பல்கள்களில் இருந்துவரும் வெளிச்சங்களின் அழகையும் கடலில் பறந்துசெல்லும் கடற்பறவைகளின் அழகையும் வர்ணிப்பதில் பிரசாத் தானொரு கவிஞனென்பதை இரண்டாவது முறையும் நிரூபித்துவிடுகின்றார்.

கப்பல் மலாக்கா கணவாயைக் கடந்து அடுத்த தரிப்பான பாங்கொக் நகரின் `பாக்னம்’ அடைய 2 வாரங்களாகின்றன. அது வரையில் அந்தப் பெண்கள் இருவரையும் தமது ஒருவருக்கான ஒடுங்கலான கட்டிலில் ஏனைய மாலுமிகள் கண்ணிற்படாத மறைத்துப் படுக்கவைத்து / சாப்பாடு வழங்கி / குளிக்க வைத்து அழைத்து வருகிறார்கள். தன் கட்டிலைப் பகிர்ந்து இரண்டு வாரங்கள் வந்தவளால் செல்வராஜாவின் கற்புக்கென்னாயிற்றோ தெரியாது, அது முற்றிலும் சஸ்பென்ஸ். ஆனால், பிரசாத்தின் கபினுக்குள் வந்தளது கூந்தலில் தென்சீனத்துக் கடலின் வாசனை வருகிறதாம். `பாக்னம்’ துறையிலிருந்து எம்.வி. ஔரோறா சிங்கப்பூரையடைய மேலும் ஒருவாரமாகியிருக்கலாம். பிரசாத்தின் கடுமையாக வேலை செய்துசெய்து இறுகிப் போயிருந்த முதுகையும் தோட்பட்டைகளையும் அம்மங்கை இதமாக வருவருடிச் சுகம் கொடுக்கிறாள். பின் சுகங்களின் எல்லை விரிகிறது. அவளின் உளதோ இலதோவெனத் துணியமுடியாத மார்புகளை ஸ்பரிசித்தபடி இடைவெளியிலாது நெருக்கியபடி எம்.வி. ஔரோறாக் கிழவி வெகுமதியாகக் கொடுத்த தேன்நிலவைக் கழித்ததையும் அவளது கப்பல்க் கணவனாக வாழ்ந்ததையும் நேர்மையுடன் பதிவுசெய்கின்றார்.

நாவலின் இறுதி அத்தியாயத்தில் தனது முதல் நாலுவருட கடல் வாழ்வை முடித்துக்கொண்டு மீண்டும் மும்பாய்க்கு வந்துசேரும் பிரசாத், ஃப்றின்ஸ் ஒஃப் வேல்ஸ் சீமன்ஸ் கிளப்புக்கு அண்மையாக இவரிடம் 30,000 ரூபாய்கள் பணத்தை வாங்கிக்கொண்டு தண்ணிகாட்டிய ரொஹான் கந்தப்பாவைத் தற்செயலாகக் காணநேர்கிறது. `ஒரு கடலோடி தன்னுடன் எப்போதும் ஒரு கத்தியை வைத்துக்கொள்வது அவனது தற்பாதுகாப்புக்கு நல்லது’ என்ற அறிவுரையுடன், கிரேக்கத்தின் `திஸ்ஸலோனிக்’கில் களுரஞ்ஜித் வாங்கிக்கொடுத்த கத்தியை எடுத்துகொண்டு, ரொஹான் கந்தப்பாவைச் சொருகப்போகவும் களுரஞ்ஜித்தே வந்து அவரைத் தடுத்தாட்கொண்டு விடுகிறார். சங்கீதத்தில் ஆற்றலும் + லயவாத்தியங்கள் வாசிப்பதில் தேர்ச்சியுமுடைய ஒரு கலைஞனால் ஒரு கொலையைப் பண்ணவே முடியாது. இறுதியான இக்கதை மட்டும் எனக்குக் கொஞ்சம் நாடகீயமாகப்படுகிறது. அச்சம்பவம் அன்றைக்கு அரங்கேறியிருந்தால் ஆனந்த்பிரசாத்தையும் கூடவே அவரது சொல்லப்படாத கதைகளையும் நாமும் இழந்துவிட்டிருப்போம்!

 

ம்.வி. ஔரோறாவை விடவும் பின்நாட்களில் பல கப்பல்களில் பணிசெய்த அனுபவங்களையும் சொல்லப்படாத கதைகளின் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்துள்ளார் ஆனந்த்பிரசாத். இன்னும் பல சுவாரஸியமான சம்பவங்களை அவரது கவித்துவமொழியில் அதில் எதிர்பார்ப்பதோடு இரண்டாவது சுவைத்தலுக்கும் வாசிப்பு அனுபவத்துக்கும் இப்போதே என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளேன். ஆனந்த் பிரசாத்துக்கு என் பாராட்டுக்களும் அமோக வாழ்த்துக்களும்!

பொ. கருணாகரமூர்த்தி <karunah08@yahoo.com>

karunaharamoorthy

Amrutha

Related post