தருமமிகு சென்னை 3 | சென்னையின் பெண் தெய்வங்கள் | சந்தியா நடராஜன்

 தருமமிகு சென்னை 3 | சென்னையின் பெண் தெய்வங்கள் | சந்தியா நடராஜன்

 

மாயவரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்புகிறபோது சட்டைப் பையிலிருந்த பேனாவைக் காணவில்லை. எங்கே தவறவிட்டேன் என்று தெரியவில்லை. அதிகபட்சம் அந்தப் பேனாவின் விலை ஐந்து ரூபாய் இருந்திருக்கலாம். வந்த வழியே பேனாவைத் தேடிக்கொண்டு சென்றேன். எங்கும் தட்டுப்படவில்லை. பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வண்டிக்காரத் தெரு மாரியம்மன் கோயிலருகே வந்தவுடன் மாரியம்மனிடம் பேனா கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். அழுகை அழுகையாக வந்தது. எனது வேண்டுதல் பலிக்கும் என்ற நம்பிக்கையில் வீட்டுக்குச் செல்ல முற்பட்டேன். குனிந்த தலையோடு வந்த வழியே பேனாவைத் தேடிய வண்ணம் சென்றேன். காவிரிக் கரைக்கருகில் கௌரி தியேட்டர் எதிரில் என் தொலைந்து போன பேனா சாலையில் கிடந்ததைக் கண்டெடுத்தேன். ஏதோ புதையல் கிடைத்தது போல மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன். அன்று முதல் மனம் உளைச்சலுக்கு ஆளான பல்வேறு காலக்கட்டங்களில் ‘அவளிடம்’ முறையிட்டு வந்திருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைவு. விடுதலை ஆசிரியர், திராவிட கழகப் பொதுச்செயலாளர் கீ.வீரமணி எங்கள் பள்ளிக்கு அழைக்கப்பட்டிருந்தார். முதல் முறையாக ஒரு நாத்திகரின் சொற்பொழிவைக் கேட்டேன். பேச்சாற்றல் என்றால் என்ன என்பதை உணர்ந்த தருணம் அது. ஒரு பள்ளி மாணவனின் நம்பிக்கையத் தவிடு பொடியாக்கிச் சிதறடித்த பேச்சு. பிறகு கடவுள் குறித்த எண்ணற்ற நூல்களைத் தேடிப்பிடித்துப் படிக்க வைத்த பேச்சு. அன்றிரவு ஒரு பைத்தியம் பிடித்தவனைப் போல மனம் சிதைந்து குழப்பத்தில் இருந்தேன்.

ஆனால், தெய்வதம் என்றொரு சித்தம் உண்டாக்கிய நிலையிலிருந்து இன்றுவரை மனம் மாறா அன்புடன் ஏக இறைவனைத் தொழுது வருகிறது. அதே நேரத்தில் மனிதம் போற்றாத எந்தச் சமய வாதங்களையும் கோட்பாடுகளையும் என் மனம் ஏற்பதில்லை.

தமிழகத்தில் எத்தனையோ கோயில்களும் கடவுளர்களும் இருந்தாலும் கிராமங்கள்தோறும் நகரங்கள்தோறும் காவல் தெய்வங்களுக்குக் குறைவில்லை. ஐயனார், வீரன், முனீஸ்வரன் போன்ற நாட்டார் தெய்வங்களுக்கு இணையாகக் காளி, மாரி, பிடாரி போன்ற பெண் தெய்வங்களும் மக்கள் மனத்தில் நீங்காது நிலைபெற்றிருக்கின்றன. சென்னை மாநகரிலும் திரும்பிய திசை எல்லாம் ஒரு பெண் தெய்வம் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

 

சென்னைக்கு வந்த புதிதில் நான் தங்கியிருந்த மேன்ஷனுக்கு அருகில் ஜாம்பஜாருக்கு எதிரே தேவராஜ் முதலி தெருவில் ரேணுகா பரமேஸ்வரி ஆலயம் ஒன்று இருந்தது. அங்கு ஆடி மாதத்தில் ‘கூழ்’ ஊற்றுவார்கள். ‘கூழ் ஊற்றும் வைபவம்’ நான் அறியாதது. ‘நாளைக்கு எங்க ஏரியாவுல கூழ் ஊத்தறாங்க சார் – நாளைக்கு லீவு வேணும் சார்’ என்று சொல்லி ஒரு நோட்டீஸ் கொடுத்துவிட்டு நன்கொடை கேட்பார்கள், வடசென்னையிலிருந்து வரும் எங்கள் அலுவலக ஊழியர்கள். திருமண அழைப்பிதழையும் நோட்டீஸ் என்றே அவர்கள் சொல்வார்கள்.

‘ரேணுகா பரமேஸ்வரி’ பல்வேறு பெயர்களில் அருள் பாலிக்கிறாள். ரேணுகா தேவிக்கு எல்லம்மா, மாரியம்மா என்ற பெயர்கள் உண்டு. சௌகார்பேட்டையில் தங்க சாலைத் தெருவும் என்.எஸ்.சி போஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் சின்ன கடை மாரியம்மன் கோயிலும் ரேணுகா பரமேஸ்வரி ஆலயம்தான். இந்தக் கோயில்களில் அம்மன் சிலைகள் முன்பாக கழுத்தளவில் மட்டுமே இருக்கும் ‘அம்மன் சிரசு’ காணப்படும். ரேணுகா யாகத்தீயில் பிறந்தவள். திரௌபதியும் அக்னியில் பிறந்தவள்தான். இந்தப் பெண் தெய்வங்கள் ஏன் நெருப்போடு விளையாடுகிறார்கள்? பக்தர்களையும் தீமித்து வழிபடச் சொல்கிறார்கள்!

ரேணுகா ஜமதக்னி முனிவரின் மனைவி; பரசுராமனின் தாய். ஆற்றில் நீரெடுக்கச் சென்றபோது வானில் சிற்றின்பத்தில் லயித்திருந்த இளம் கந்தர்வ தம்பதிகளின் பிம்பத்தை ஆற்று நீரில் கண்ட ரேணுகவின் மனம் ஒரு கணம் சற்று தடுமாறியது. இதைக் கண்டுணர்ந்த முனிவன், தாயின் துரோகத்திற்காக அவளது தலையைத் துண்டிக்குமாறு மகன் பரசுராமனை ஏவ, அவரும் தந்தை சொல்லுக்கு அடிபணிந்து தாயின் தலையைத் துண்டித்தார். பிறகு தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்ப்பித்தார் என்று பழங்கதை சொல்கிறது. அதனால்தான் ரேணுகா பரமேஸ்வரி ஆலயங்களில் ‘அம்மன் சிரசு’ கருவறையில் விக்ரகமாகக் காட்சியளிக்கிறது.

ரேணுகா என்ற பெயர் கொண்ட பெண்கள் ஆந்திராவில் அதிகம். தமிழ் நாட்டில் சென்னையிலும் ‘ரேணுகா’க்கள் பரவலாக உண்டு.

சென்னையில் எல்லையம்மன், கெங்கையம்மன், காளியம்மன், ரேணுகா பரமேஸ்வரி, கருமாரியம்மன், அங்காள பரமேஸ்வரி என எண்ணற்ற பெண் தெய்வங்கள் காவல் தெய்வங்களாகக் காத்து அருள் செய்கின்றன. பொதுவாக அடித்தட்டு மக்களும் விளிம்புநிலை மக்களும் இத்தெய்வங்களின் தீவிர பக்தர்களாக மட்டுமின்றி முரட்டு பக்தர்களாகவும் இருக்கிறார்கள். ஆடு, கோழி போன்ற விலங்கினங்கள் பலியிடப்படும் கோயில்களும் உள்ளன. முதுகெங்கும் அலகு குத்தியபடி அலகு காவடி சுமப்பதும் வாயில் வேல் குத்திக்கொள்வதும் தென்னங்குலையை, முதுகில் குத்திய அலகில் கயிற்றால் கட்டி தெருக்களில் இழுத்துச் செல்வதும் தீச்சட்டி சுமப்பதும் இக்கோயில்களின் திருவிழாக்காலக் காட்சிகள்.

 

நான் சென்னை சுங்க இல்லத்தில் பணியாற்றியபோது சிவானந்தம் என்று ஒரு மூத்த சுங்க அதிகாரி இருந்தார். சென்னை சைதாப்பெட்டை இளங் காளியம்மன் கோயிலுக்கு எதிரே ஒரு பழைய வீட்டில் வசித்து வந்தார். இளங்காளியம்மன் கோயிலை அவர்கள் குடும்பமே பரம்பரை பரம்பரையாகப் பராமரித்து வந்தது. அக்கோயிலின் அறங்காவலர் அவரே. காலையில் இளங்காளியம்மனுக்கு உரிய பூசைகளைச் செய்துவிட்டு அலுவலகத்திற்கு வருவார். இளங்காளியம்மனுக்குப் பக்தர்கள் பயப்படுகிறார்களோ இல்லையோ சிவானந்தத்தை சக சுங்க அதிகாரிகள் பயம் கலந்த மரியாதையுடன் அணுகுவார்கள். சிவானந்தம் யாருக்கும் அஞ்சாதவர். எதற்கும் இணங்காதவர். எப்போதும் பணிக்குத் தயாராக இருப்பவர். குடியரசுத் தலைவர் விருது பெற்ற தகுதிமிக்க அந்த அதிகாரி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு காலம் இருக்கும்போதுதான் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். சிவானந்தத்துக்குச் சுங்க இல்லமும் இளங்காளியம்மனும்தான் ஒட்டுமொத்த வாழ்வானது. பொன்னேரியில் இருக்கும் எட்டியம்மன் கோயிலுக்கும் அசோக் நகர் காவல்துறை பயிற்சி நிறுவனத்திற்கு அருகில் உள்ள காளி கோயிலுக்கும் சிவானந்தம் குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலர்கள். சிவானந்தத்தின் தந்தை துரைசாமி முதலியார், அவரது முன்னோர்கள் என நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த மூன்று காளி கோயில்களையும் சிவானந்தத்தின் மரபினரே நிர்வகித்து வருகின்றனர். இந்தக் காளி கோயில்களில் உற்சவ காலங்களில் ‘கிடா வெட்டு’ நடந்த பின்பே அம்மன் உலா தொடங்கும். இவை எல்லாம் பிடாரி கோயில்கள்; உக்கிர தேவதைகளின் கோயில்கள். பங்குனி மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று இந்தக் கோயில்களில் விழா நடைபெறும். ஆடிப்பூரம் அன்று 108 பால்குடம் எடுப்பார்கள். தைப்பூசத்திற்குக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்; வீதி உலா இருக்காது. சைதாப்பேட்டையின் எல்லைக்காளி இளங்காளியம்மன்; ஜாபர்கான்பேட்டையின் எல்லைக்காளி அசோக் நகர் காளி. பொன்னேரியைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு எல்லைக்காளி எட்டியம்மன். சிவானந்தத்தின் வாரிசுகள் தந்தை செய்த திருப்பணியைத் தொடர்ந்து வருகிறார்கள்.

சென்னை அசோக் நகர் மாந்தோப்பு காலனியை அடுத்த சாமியார் மடம் பகுதியில் 1990களில் ஒரு காளி உபாசகர் வழிபாடு நடத்தி இருக்கிறார். அவரிடம் அருள் வாக்கு கேட்கச் சுற்று வட்டாரத்தினர் வந்துகொண்டு இருந்திருக்கிறார்கள். அப்படி அருள் வாக்கு கேட்கச் சென்றவர்களில் ஒருவர் எனது நண்பர் ’விருட்சம்’ இலக்கிய இதழின் ஆசிரியர் அழகிய சிங்கர் என்கிற சந்திர மௌலி. அழகிய சிங்கருக்கு வீட்டுப் பிரச்சினையோ அலுவலகப் பிரச்சினையோ எதுவும் இருந்ததில்லை. எல்லாம் எய்தியவர் அவர். இடர்ப்படக் காரணம் எதுவும் இருந்ததில்லை. இருந்தாலும் அவரும் அருள்வாக்கு கேட்கச் சென்றார். அவரது கேள்வியில் காளி உபாசகர் கலங்கிப் போயிருப்பார். அவரது கேள்வி இதுதான்: ‘நான் ஒரு கதாசிரியர். குமுதம் பத்திரிகைக்குக் கதைகள் எழுதி அனுப்பி வருகிறேன். ஆனால், என் கதைகள் எதுவும் பிரசுரமாவதில்லை. இப்போதும் ஒரு கதை அனுப்பியிருக்கிறேன். என் கதை வருமா?’ காளி உபாசகர், ‘வரும்’ என்று சொல்லியிருக்கிறார். அழகிய சிங்கரும் கதை வரும் என்று ஒவ்வொரு வாரமும் குமுதம் இதழைத் தவறாது வாங்கி வந்துகொண்டிருந்தார். கதை குமுதத்தில் வரவில்லை. ஆனால், ‘வரும்’ என்ற அருள்வாக்கு மட்டும் பொய்க்கவில்லை. இறுதியில் கதை தபாலில் திரும்பி வந்தது. இந்த நிகழ்ச்சியை அழகிய சிங்கர் அவருக்கே உரித்தான நகைச்சுவையோடு சொல்வார்.

அழகிய சிங்கர் இன்னொரு அம்மன் உபாசகர் குறித்தும் சொல்லியிருக்கிறார். மாம்பலத்தில் ‘பொட்டு மாமி’ என்று அழைக்கப்படும் பெண்மணி ஒருவர் வீட்டிலேயே பூஜை செய்து அருள்வாக்கு சொல்லி வந்தாராம். ஆனால், அவர் தற்போது மாம்பலத்தில் இல்லையாம்! இன்னும் அசோக் பில்லரிலிருந்து செல்லும் நடைபாதைகளில் குறி சொல்லும் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். மன பாரம் தாங்க முடியாத எளிய மனிதர்களின் மனம் எங்காவது ஒரு தீர்வு கிட்டாதா என்று அலை பாய்ந்தபடியே இருக்கிறது. இவர்களுக்கு ஓர் இதம் தரும் சொல் அன்றைய தினத்துக்கான ஆறுதல்.

அசோக் நகரின் 7ஆவது நிழற்சாலை தொடங்கி 12ஆவது நிழற்சாலை வரை உள்ள பகுதி முழுவதும் ஓரளவு வசதி படைத்தவர்களும் வளமிக்கவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். ஐஏஎஸ் அதிகாரி இராமகிருஷ்ணன் முதல் உள்துறை செயலாளராக இருந்த நாகராஜன் வரை இந்த வரையறையில் அடங்குவர். இயக்குநர் விக்ரம் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் பலரும் வாழும் பகுதி. ரோஜா கம்பைன்ஸ், காஜா மொகிதீன், ஆஸ்கார் ரவி போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் அலுவலகங்களும் இதே பகுதியில் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் சிவன் கோயில், விநாயகர் கோயில்கள், இந்து அறநிலையத்துறைக்கு உட்படாத ஆஞ்சனேயர் ஆலயம், ஒரு வைதீகமான மாரியம்மன் கோயில் எல்லாம் உண்டு.

ஆனால், 12ஆவது நிழற்சாலைக்குப் பின்னால் உள்ள வாழ்விடங்களில் ஓரிரு தெருக்களைத் தவிர எளிய மனிதர்கள் வாழும் இடங்கள் அதிகம். காசி சிக்னலுக்கு எதிரே செல்லும் பிள்ளையார் கோயில் தெருவின் இருபுறங்களும் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவை. இப்பகுதியில்தான் ஆர்.வி. காலனி என்கிற ஆர். வெங்கட்ராமன் காலனி உள்ளது. இந்தக் காலனியில் நூறு அடிக்கு ஒரு மாரியம்மன் கோயிலைக் காண முடியும். பிரதான பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு கீற்றுக் கொட்டகையில் இருந்த முத்து மாரியம்மன் கோயில் மீனாட்சி சுந்தரேசர் ஆலயமாக மாறிவிட்டது. இன்னும் கோயில் வளாகத்தில் ஒரு பகுதியில் மண் சூழ முத்துமாரியம்மன் இருக்கிறாள். கோயிலின் பின் பகுதியில் முனீஸ்வரன் வாயில் சுருட்டுடன் ஆறடி உயரத்தில் காட்சி தருகிறார். அதே சாலையில் இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால் இன்னும் இரண்டு அம்மன் கோயில்கள் வரும்.

ஆர்.வி. நகர் 69ஆவது தெருவில் ரங்கசாமி சித்தர் பீடத்தால் நிர்வகிக்கப்படும் அம்மன் கோயிலில் இரவு நெடு நேரம் வரை பூஜைகள் நடைபெறுவதுண்டு. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் கூட்டம் மிகும். நூறு சதுர அடி இடத்தில்தான் சாலையை ஒட்டியபடி அம்மன் அமர்ந்திருக்கிறாள். கோயிலின் இடதுபுறத்தில் உள்ள ஒரு குறுகிய இடைவெளியின் வழியே உட்புகுந்து அம்மன் இருக்கும் இடம் நோக்கி மண்டியிட்டு வணங்குகிறார்கள் பக்தர்கள். இடைவிடாது கூடைகளிலிருந்து மலர் எடுத்துத் தூவித் தொழுதபடி இருக்கும் பூசாரிகள் பக்தர்கள் மீதும் ரோஜாப்பூக்களை வீசியபடி இருக்கிறார்கள். அக்கோயிலை ஒட்டி கோகுலம் பிராண்டு பேரீச்சம்பழ நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இக்கோயிலின் புரவலர்களில் ஒருவர் என்கிறார்கள் அத்தெருவாழ் மக்கள்.

ஆர்.வி. நகர் 69A தெருவில் நுழைந்தவுடன் வலதுபுறத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் உள்ளடங்கி இருக்கிறது ஓர் அங்காள பரமேஸ்வரி கோயில். இக்கோயிலும் ஒரு 100 சதுர அடி அளவில் ஆறடி அம்மன் சிலையுடன் கூடியது. இந்த அங்காளம்மனுக்குத் தினமும் வழிபாடு நடத்தி வருவது சிவசங்கரி என்கிற திருநங்கை. இவரது சீடராகச் செயல்படுவதும் ஒரு திருநங்கைதான். வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு டோக்கன் வாங்கி, சிவசங்கரியிடம் அருள்வாக்குப் பெறலாம். கூட்டத்தில் ஒருவராக இருந்து குறி கேட்கக் கட்டணம் ரூபாய் முந்நூறு. தனிப்பட்ட முறையில் ஒரே குடும்பத்தினர் பிரத்யேகமாக அருள்வாக்குப் பெற விரும்பினால் கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். சில சினிமாகாரர்களின் வருகை அருள்வாக்குப் பெற வருவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஏவல், பில்லி, சூன்ய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்புவோரும் இக்கோயிலுக்கு வந்து தீர்வு காண விரும்புகிறார்கள்.

மாசி மாத அமாவாசை நாளன்று சிவசங்கரி தனது சீடர்கள் சூழ சைதாப்பேட்டை மயானத்திற்குச் செல்கிறார். அங்கு மகிஷன் உருவ பொம்மை செய்து அதன் குடலை உருவும் சடங்குகளையும் பூஜைகளையும் செய்துவிட்டு மீண்டும் ஊர்வலமாகக் கோயிலுக்கு வருகிறார்கள். தாரை தப்பட்டைகளின் சத்தத்தில் செவிப்பறை அதிரும். திருப்பதி குடைகளை ஒத்த சிறு குடைகளை ஏந்தி வருவார்கள். சிவசங்கரி அம்மாளின் வாயிலிருந்து அரக்கு கலரில் ஒரு செயற்கை நாக்கு தொங்கியபடி இருக்கும். கழுத்து நிறையப் பூ மாலைகள் இருக்கும். பார்ப்பதற்குக் கொஞ்சம் அச்சமாக இருக்கும். கோயிலை அடைந்தவுடன் பக்தர்கள் சூழ்ந்துகொண்டு உரித்த தேங்காயை ஒவ்வொருவராகத் தருவார்கள். வாங்கும் தேங்காயை சாலையில் நின்றபடியே அங்காளம்மனுக்கு எதிரே ஓங்கி அடித்து உடைப்பார் சிவசங்கரி அம்மா. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அம்மாவை வணங்கி அருள் பெற்றுச் செல்கிறார்கள். கோயிலை ஒட்டியபடி இருக்கும் சிறு அறையில் அங்காள பரமேஸ்வரியின் சின்ன விக்ரகம் உள்ளது. அங்குதான் சிவசங்கரி அருள்வாக்குச் சொல்கிறார்.

ஜாபர்கான்பேட்டையில் திருநங்கைகள் அதிக அளவில் தென்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் 1980களின் இறுதியில் திருநங்கைகளானார்கள் என்கிறார், இதே பகுதியில் பாசமிகு மருத்துவர் என்று பெயரெடுத்துள்ள மருத்துவர் மகமூத் பேகம். இந்தத் திருநங்கைகளில் பலர் கடப்பா நகரத்தில் இயங்கிய சில மருத்துவமனைகளில் தங்கள் பால் இன மாற்றத்துக்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் என்று சொல்கிறார்கள். அந்தச் சிகிச்சையில் ஏற்பட்ட குறைகளால் ஏதேனும் அவதிக்கு உள்ளாகும் திருநங்கைகளுக்கு பரிவுடன் மருத்துவம் பார்த்திருக்கிறார் ஆர்,வி, நகர் 72ஆம் தெருவில் வசித்து வந்த உருது பேசும் இஸ்லாமியரான மகமூத் பேகம். மருத்துவத்திற்கு மேலாக இன்சொல் பேசி இதமளிக்கும் மருத்துவராக இப்பகுதியின் எல்லாத் தரப்பு மக்களாலும் பாராட்டப்படுகிறார் மகமூத் பேகம். சிவசங்கரி, சிவசங்கரனாக இருந்த காலத்திலிருந்து ஆர்வி நகரின் பெரிதும் அறியப்பட்ட மருத்துவர் மகமூத் பேகத்திடம் ஐந்து நிமிடம் பேசினால் ஆயுள் பரியந்தம் அவருக்கு நீங்கள் அடிமை ஆவீர்கள்.

 

1980களில் ஜாபர்கான்பேட்டை நிழல் உலக மனிதர்களின் கோட்டை என்று அறியப்பட்டிருந்தது. அப்போது கிண்டியிலிருந்து அசோக் நகர் வர அடையாற்றின் மீது பாலம் கட்டப்படவில்லை. ஆற்றைத் தரைப்பாலம் மூலமே கடக்க வேண்டும். 100 அடி ரோடு போடப்படவில்லை. இரவில் ஆள் அரவமே இருக்காது. நடுநிசி அச்சமூட்டும். தனியாக வருவதற்குப் பயப்படுவார்கள். ஜாபர்கான் பேட்டையில் குடியிருக்க முன்வரமாட்டார்கள். அத்தகைய பகுதியில் இத்தனை அங்காளம்மன்கள் எப்படி நிலைபெற்றன. இங்கு மட்டும் இல்லை, சென்னை மாநகரின் விளிம்பு நிலை மக்கள் வாழ் இடங்கள் அனைத்திலும் காவல் தெய்வங்களாகப் பெண் தெய்வங்கள் அங்காளம்மன்களாகவும் மாரியம்மன்களாகவும் வழிபடப்பட்டு வந்துள்ளன. கிராமங்களில்கூட அடித்தட்டு மக்கள் வாழும் இடங்களில் காளி கோயில்களே அதிகம் உள்ளன. ஆனால், சிறுதெய்வக் கோயில்கள் வளர்ச்சி பெற்று வருவாயும் பெருகும்போது ஆகம கோயில்களின் வடிவமும் செயல்பாடும் பெற்றுவிடுகின்றன. பூசாரிகள் மறைந்துபோகிறார்கள்.

சென்னை தம்புச் செட்டிதெருவில் உள்ள காளிகாம்பாள் கோயில், விஸ்வகர்மா இனத்தினரால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அறங்காவலர் குழுத் தலைவராக இருப்பவர் பிரம்மஸ்ரீ EMS மோகன் ஆச்சாரி. அறங்காவலர்களாக பிரம்மஸ்ரீ சர்வேஸ்வரன் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ V சீனிவாசன் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ இரா. இராஜேந்திரகுமார் ஆச்சாரி, பிரம்மஸ்ரீ J.ரமேஷ் ஆச்சாரி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். பூஜைகள் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டு வருகின்றன. சத்ரபதி சிவாஜி 1677ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் நாள் இந்த ஆலயத்திற்கு வருகை புரிந்ததாக இக்கோயிலுக்குள் நுழையுமிடத்தில் ஒரு கல்வெட்டு பதித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்நிகழ்வு குறித்த சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும். தரிசனத்துக்குக் கட்டணம் வசூலிக்காத கோயில். ஆனால், அசைவ வாசனையே வீசாத காளி கோயில்.

சைதாப்பேட்டை இளங்காளியம்மன் உயிர்ப்பலி கோரும்; பூசாரிகளால் பூஜிக்கப்படும். தம்புச்செட்டி தெரு காளிகாம்பாள் சந்நிதியில் சிவாச்சாரியார்கள் நிற்கிறார்கள். அங்கே ஆகம கோயிலுக்குள் நுழைந்த உணர்வே ஏற்படும்.

பெரம்பூர் லட்சுமி அம்மன் கோயில் தீமிதித் திருவிழாவில் சந்தனம் பூசிய முகத்துடனும் மேனியுடனும் மாலை புனைந்து கைகளில் வேப்பிலைக் கொத்துகளுடன் தீக் கங்கின்மீது நடந்து செல்கிறார்கள்; ஓடுகிறார்கள். தலையில் கரகத்துடன் அல்லது அலகு காவடியுடன் அல்லது வாயில் குத்திய வேலுடன் தீ இறங்குகிறவர்களையும் பார்க்க முடிகிறது. தீ மிதிப்போரில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் பாட்டாளி வர்க்கத்தினர் என்பது பார்வையிலேயே தெரிந்துவிடுகிறது. அர்ச்சகர்களோ கோயில் குருக்களோ சமூகத்தின் மேலடுக்குகளைச் சார்ந்தவர்களோ தீ மிதிக்க முன்வருவது என்பது அரிதான செயல். அவர்கள் எல்லாம் தீமிதித் திருவிழாவின் பார்வையாளர்களே.

கடந்த மார்ச் 24ஆம் தேதி (24.03.2024) எனது நண்பர் நாகராஜனுடன் பாடியநல்லூர் மொண்டியம்மன் நகர் வ.உ.சி. தெருவில் வசிக்கும் அவரது தந்தையாரைப் பார்த்துவிட்டு அந்த ஊர் அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழாவைக் காணச் சென்றிருந்தேன். புழல் சிறைச்சாலையையும் புழல் ஏரியையும் கடந்து சென்றால் ரேவதி ஸ்டோர்ஸ் என்ற பெரிய துணி மாளிகை கண்ணில் படும். சென்னையில் உள்ள ஒரு பெரிய துணிக்கடை அதிபரின் சம்பந்தியாம் ரேவதி ஸ்டோர்ஸ் உரிமையாளர். அதற்குப் பிறகு சில ‘பாயா’ கடைகள் இருக்கின்றன. பாடியநல்லூர்காரர்கள் பாயா பிரியர்களாக இருக்கலாம். பிறகு இடதுபுறம் செல்லும் சாலை மொண்டியம்மன் நகருக்கு இட்டுச் செல்கிறது. போகும் வழியில் இருக்கும் ஒரு சிறிய கோயில் மொண்டியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு அடுத்து வருவது வ.உ.சி. தெரு. ஒரு கார் நிறுத்தும் அளவிற்கு மட்டுமே தெருக்கள் இருக்கின்றன. வ.உ.சி. தெருவில் நுழைந்து நீண்டு கிடக்கும் அதன் மறு கோடிக்குச் சென்றால் அகன்ற மைதானம் போன்ற இடத்தில் புழல் ஏரிக்கரையில் ஓர் ஆலமர நிழலில் முனீஸ்வரன் கோயில் ஒன்று உள்ளது. அங்கிருந்து தீச்சட்டி ஏந்தியபடி கூட்டம் கூட்டமாக, சாரை சாரையாக அம்மன் பக்தர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் தீச்சட்டி ஏந்தினாலும் பார்ப்பதற்கு ஆண்கள் ஆண்களாக இல்லை. தீச்சட்டியின் அளவும் ஒரு சிறிய அண்டாவை ஒத்திருக்கிறது. ஆண்கள் கால்களில் சலங்கை கட்டியிருக்கிறார்கள். சிலர் பரத நாட்டியம் ஆடுபவரைப் போல உடை அணிந்திருக்கிறார்கள். நெஞ்சிலும் முகத்திலும் சந்தனப் பூச்சு. அதன்மேல் அங்கங்கே குங்குமத் தீற்றல். இரு தோள்களிலும் வேப்பிலைக் கொத்துகள். கழுத்து நிறைய, குறைந்தபட்சம் மூன்று மாலைகள். மீசை சிரைக்கப்பட்ட முகம். புல்லாக்கு அணிந்த மூக்கு; காதில் தோடு; மையிட்ட புருவம்; ஆண்டாள் கொண்டையுடன் சிகை ஆங்காரம். உடற்கட்டில் மட்டும்தான் ஆண்பாவம். ஒரு தீச்சட்டி ஏந்தியைச் சுற்றிப் பத்து இருபது பேர் உடன் வருகிறார்கள். காது கிழிய டிரம் அடிக்கும் பேண்ட் கோஷ்டியில் குறைந்தபட்சம் அறுவர். தீச்சட்டி ஏந்தியவர் பேண்ட் சத்தத்திற்கு ஏற்ப உக்கிரமாக ஆட்டம்போடுகிறார். ஒருவர் கற்பூர தீபம் காட்டி வருகிறார். வந்து வணங்கும் தெருவாசிகளுக்கு விபூதியோ குங்குமமோ அளித்து ஆசிர்வதிக்கிறார் தீச்சட்டி ஏந்தி. களைப்படைகிறபோது அங்கங்கே போடப்படும் மடக்கு நாற்காலிகளில் தொடைமீது தீச்சட்டியை வைத்துக்கொண்டு அவர் இளைப்பாறுகிறார். அப்போது தீச்சட்டிக்காரரின் மிடுக்குக் ஒப்பாராய் டாடா பிர்லா, அம்பானி வம்சத்தினரைக் கூட நிறுத்த இயலாது,

பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை ஒரு தீச்சட்டிக் குழு கடந்து போனால், அடுத்த குழு 50 மீட்டர் தூரத்தில் கண்ணில் படுகிறது. சிலர் வாய் வழியே ஒரு கம்பியைச் செலுத்திக்கொண்டு செல்கிறார்கள். கம்பியின் இருபுறமும் வளைந்து சுருள் சுருளாக இருக்கிறது. சுருளின் முனையில் வேல் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒரு குழுவில் ஒரு பெண், சாமி வந்து ஆடிக்கொண்டே போகிறாள். ஒரு குழு உடல் முழுவதும் பச்சை வண்ணத்தையோ நீல வண்ணத்தையோ பூசிக்கொண்டு நாடக நடிகர்கள் போலத் தீச்சட்டி ஏந்திச் செல்கிறார்கள். இந்தத் தீச்சட்டி அணிவகுப்பு இழையறாது வந்துகொண்டே இருக்கிறது. டிரம் அடிப்பவர்கள் மட்டும் ஆயிரம் பேருக்குக் குறைவிருக்காது.

இந்தத் தீச்சட்டிக் குழுக்கள் வ.உ.சி தெரு வழியாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் செல்கிறார்கள். இன்னொரு இடத்திலிருந்து தலைக்கு மேல் முளைப்பாரி ஏந்திய பெண்கள் வரிசையாக வருகிறார்கள். போகும் வழியில் பொருட்காட்சி நடைபெறுகிறது. ராட்சச ராட்டினங்கள் சுழன்றுகொண்டிருக்கின்றன. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நாங்கள் இந்தத் திகில் நிறைந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த ஆண்டு நடைபெறுவது 59ஆவது தீமிதி விழா.

பாடியநல்லூர் கோயிலை உருவாக்கியவர்கள் இங்கு வந்து குடியேறிய பர்மா அகதிகள். பர்மாவில் இதேபோல ஓர் அங்காளம்மன் கோயில் இருக்கிறதாம். அங்கு விழா நிகழும் அதே நாளில் பாடியநல்லூரிலும் தீமிதி நிகழுமாம். தெலுங்கு பேசும் தமிழர்கள், முக்குலத்தோர் நிறைந்த இப்பகுதி தீமிதி நாளில் பக்திப் பரவசத்தில் மூழ்கிக் கிடக்கிறது. 4 மணிக்கு நடைபெறும் தீமிதிக்காகச் சவுக்குக் கட்டைகள் நான்கடி உயரத்திற்குக் குவிக்கப்பட்டு தீ மூட்டப்பட்டு எரிந்துகொண்டிருந்தன. திகிலில் நெஞ்சம் தஞ்சமடைந்திருந்ததால் சுட்டெரிக்கும் வெயிலை உணரவில்லை.

புலம் பெயர்ந்தவர்கள் குலதெய்வக் கோயிலிலிருந்து பிடிமண் எடுத்துவந்து ‘வாழும் ஊரில்’ வழிபாடு செய்வது என்பதை பர்மாவிலிருந்து பாடியநல்லூருக்கு வந்திருக்கிற அங்காளம்மன் வழிபாடு உணர்த்துகிறது. தென் தமிழகத்து மக்களிடம் இந்த ‘பிடிமண்’ கலாசாரம் வேர்பிடித்து நிலைத்திருக்கிறது. பிடிமண் பண்பாடு குறித்து மேலும் அறிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், தோழர் நல்லக்கண்ணு போன்றவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

தற்போது சென்னை மாநகரத்தில் கிராமிய உணவுகள் மட்டுமல்ல, கிராம தெய்வங்களும் புலம் பெயர்ந்து குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள். கருப்பண்ண சுவாமிக்கு ஆழ்வார் திருநகரில் ஓர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். திரைப்படத் துறையில் ஸ்டண்ட் மாஸ்டராக புகழ்பெற்று நிலைத்து நிற்கும் கனல்கண்ணன் இயல்பு வாழ்க்கையில் ஒரு பூசாரியாகவும் இருக்கிறார் என்றால் நம்ப முடியுமா? உண்மையில் அவர் ஓர் இந்து மதப் பற்றாளர். இந்து முண்ணனி இயக்கத்தின் மாநில கலை பண்பாட்டுப் பிரிவின் செயலராகப் பணியாற்றி வருகிறார். ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு முன்பாக அமைந்துள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் நாளே இந்து மத எழுச்சி நாள்’ என்று பேசியதால் அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது. ஒரு கிறித்துவ மத போதகர் குறித்து காணொளி ஒன்றைப் பதிவிட்டதால் கைது நடவடிக்கைக்கு ஆளானவர். கனல் கண்ணன் சென்னை மதுரவாயில் கிருஷ்ணா நகரில் சுடலை மாடனுக்கும் இசக்கியம்மனுக்கும் ஒரு கோயில் கட்டியிருக்கிறார். தெய்வத் திருவுருவங்களுக்கு அவரே வழிபாடும் செய்கிறார். ஒவ்வொரு மாதக் கடைசி வெள்ளிக் கிழமையிலும் கிடா வெட்டி அன்னதானம் செய்து வழிபாடு நடைபெறுகிறது. நெல்லைக்காரர்களுக்குச் சுடலைமாடனும் இசக்கியம்மனும் குலதெய்வங்களாகவோ இஷ்டதெய்வங்களாகவோ இருக்கும் என்பதால் சென்னைவாழ் நெல்லைவாசிகள் மதுரவாயலுக்கு வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். மேற்கு மாம்பலம் உமாபதி தெரு விரிவில் கல்கத்தா காளி இடம் பெயர்ந்து காட்சித் தருகிறாள். கோயிலும் பார்ப்பதற்கு வங்காள கோயிலாகத் தெரிகிறது. கோயிலில் வழிபாடும் கல்கத்தா வழிபாடாகவே இருக்கிறது.

யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
– மகாகவி பாரதி

சந்தியா நடராஜன் <sandhyapathippagam@gmail.com>

Sandhya Natarajan

Amrutha

Related post