தருமமிகு சென்னை 4 | முகவரி தரும் முகவரிகள் | சந்தியா நடராஜன்

 தருமமிகு சென்னை 4 | முகவரி தரும் முகவரிகள் | சந்தியா நடராஜன்

‘அறம் செய விரும்பு’ என்ற ஔவையின் அறிவுரையை ஏற்றிப் போற்றும் அரசியல்வாதி எவரேனும் உண்டா என்றால், ‘சென்னை மாநகரில் எம்ஜிஆர் பக்தரான சைதை துரைசாமி என்ற சென்னையின் முன்னாள் மேயர் ஒருவர் இருக்கிறார்’ என்று உரக்கச் சொல்வார் முகவரி ரமேஷ். ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா என்றால் ‘ஏறும்’ என்பதற்கு நேரடி சாட்சியாக சென்னையில் வாழ்ந்து வருகிறவர் நண்பர் முகவரி ரமேஷ்.

‘தும்பிவாடி துரைசாமி’ என்றழைக்கப்பட்டவரை சைதை துரைசாமி என்று பெயர் மாற்றம் செய்தவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டபோது செயல்திறனும் சாகசகுணமும் கொண்ட 19 வயது அதிமுக இளைஞனாக உருவெடுத்தவர் சைதை துரைசாமி. ‘திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள், அதனால் அவர்கள் ராஜினமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்க வேண்டும்’ என்று எம்ஜிஆர் குரல் கொடுத்தபோது அத்தகைய மனுவுடன் முதல்வர் கலைஞரைச் சந்தித்த அந்நாளைய சென்னை துணை மேயர் சடகோபனுடன் சென்றவர் சைதை துரைசாமி. அப்போது கலைஞர் மனு கொடுத்தவரிடம் ஒரு எலுமிச்சை பழத்தை கொடுத்தாராம். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மனு கொடுத்தவரிடம் ஏன் எலுமிச்சை பழம் கொடுத்தேன் என்று விளக்கம் அளித்தாராம். அதிமுகவினர் மனப்பிறழ்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்று பொருள்படும்படி ‘தெளிவற்றவர்கள் தேய்த்துக் குளிக்கட்டும்’ என்று சொன்னாராம். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சைதை துரைசாமி ஆற்றிய எதிர்வினைதான் அவரை எம்ஜிஆரின் இதயத்தில் இடம்பெறச் செய்தது. ‘அதிமுகவின் பகத்சிங்’ என்று எம்ஜிஆர் அவரை அடையாளம் கண்டு கொண்டார்.

அதிமுக உதயமான பிறகு, ’ஏன் விலக்கினோம் எம்ஜிஆரை’ என்று விளக்கம் அளிக்கும் வகையில் சைதை தேரடித் தெருவில் ஒரு திமுக பொதுக்கூட்டம் ஏற்பாடானது. முதல்வர் கலைஞர் மேடையில் இருந்திருக்கிறார். 26 எலுமிச்சம் பழங்கள் கொண்ட மாலையுடன் திமுக கூட்டம் நடந்த மேடைக்கு அருகில் சென்று காத்துக் கொண்டிருக்கிறார் சைதை. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கூட்டம் அது. அப்போது, ‘முதல்வருக்கு மாலை அணிவிப்பவர்கள் தற்போது அணிவிக்காலம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். மேடைக்குச் செல்லும் வரிசையில் ஒரு திமுககாரரைப் போல சைதையும் நின்று நகர்ந்து மேடையேறியிருக்கிறார். அங்கிருந்த திமுக வட்டச் செயலாளர் Y.M. சைதை திமுகவுக்கு திரும்பிவிட்டதாக நினைத்து, ‘நடிகர் கட்சிக்காரர்கள் திமுகவுக்கு திரும்பி வந்திருக்கிறார்கள்’ என்று ஒலிப்பெருக்கியில் அறிவிக்கச் சொல்லவா’ என்று கேட்டாராம். அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வரிசையில் நின்று ஒரு பத்து பேர் மேடைக்குச் சென்று திரும்பியவுடன் சைதை மேடையை அடைந்திருக்கிறார். ஒலி பெருக்கி முன் யாரும் இல்லை. மேடையில் முதல்வரை சூழ்ந்தபடி கூட்டம். சட்டென்று ஒலிபெருக்கி முன் வாழ்த்தி மாலையிட வந்தவர் போல நின்று, ‘மனுகொடுக்க வந்த எங்களை தெளிவற்றவர்கள் என்று சொன்ன முதல்வரே! புரட்சித் தலைவர் எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கிய நீங்களும் அதற்காகக் கையெழுத்திட்ட 26 செயற்குழு உறுப்பினர்களும் தான் தெளிவற்றவர்கள். உங்களுக்காக இந்த எலுமிச்சை மாலை’ என்று சொல்லி கலைஞரிடம் ஒரு எலுமிச்சை பழத்தை கொடுத்துவிட்டு அந்த மாலையையும் அணிவித்திருக்கிறார். முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்லி அச்சிட்டிருந்த துண்டறிக்கைகளையும் மேடையிலிருந்தபடி வீசியிருக்கிறார். காவலர்களும் கட்சிக்காரர்களும் சுதாரிப்பதற்குள் மின்னல் வேகத்தில் நிகழ்த்தியிருக்கிறார் இந்த சாகசத்தை. அடுத்த நொடிப்பொழுதில் கட்சிக்காரர்களின் கோபத்திற்கும் காவலர்களின் தாக்குதலுக்கும் ஆளாகி சுய நினைவிழந்த நிலையில் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மயக்கம் தெளிந்த பின் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

தகவலறிந்த எம்ஜிஆர் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு சைதை துரைசாமியிடம் பேசி ஆறுதல் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆரைப் பார்க்கமாட்டோமா என்று ஏங்கியிருந்த துரைசாமிக்கு எம்ஜிஆரின் குரலை கேட்டவுடன் பட்டதுயரம் பறந்து போயிருக்கும். சைதை துரைசாமியை ’அதிமுகவின் முதல் தியாகி’ என்று அறிவித்தார் எம்ஜிஆர்.

இப்படி அரசியலில் அதிரடியாக நுழைந்த சைதை துரைசாமி மாநகராட்சியின் மேயரானார். கொளத்தூர் சட்டமன்ற தேர்தலில் இன்றைய முதல்வர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட பெருமையும் அவருக்குண்டு. 1984 முதல் 1989 வரை தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவையெல்லாம் ஒரு தனிமனிதனின் சாதனை, வெற்றி என்று வகைப்படுத்திவிடலாம்.

ஆனால், ஒரு அரசியல்வாதி சமூக அக்கறையுடன் மனிதநேய அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் ஐஏஸ், ஐபிஎஸ் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் தமிழகத் தேர்வாணையத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இலவசப் பயிற்சி அளித்து வெற்றி பெறச் செய்து வருகிறார் என்பதுதான் வியப்பளிக்கும் செய்தி. சென்னையைத் ‘தருமமிகு சென்னை’ என்று குறிப்பிட்டார் வள்ளலார். பச்சையப்ப வள்ளல் தொடங்கி ஈரமணம்கொண்ட எத்தனை எத்தனை தயாளர்களைத் தந்து கொண்டிருக்கிறது சென்னை.

 

Saidai Duraisamy
சைதை துரைசாமி

சைதை துரைசாமி வேளச்சேரியில் ஒரு திருமண மண்டபமும் கட்டி வைத்திருக்கிறார். ஏழை எளிய மக்களின் திருமண நிகழ்வுகளுக்கு கட்டணம் ஏதுமின்றி கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறார் இந்த அரசியல்வாதி. இவையெல்லாம் ஒரு பிரமுகருக்கு சாத்தியம்தான்.

ஆனால், ஏதுமற்ற கூலிவேலை செய்யும் பெற்றோர்களின் மகன் ஒருவன் தான் செய்யும் அறச்செயலுக்கு ஆதரவு கோரி எழுதிய கடிதம் கண்டு, அவனது நேர்மையையும் இலட்சியத்தையும் உணர்ந்து அவனைத் தானாகவே தேடி ஓடி உதவும் பிரமுகர் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அத்தகைய செயலாற்றியவர் சைதை துரைசாமி என்ற அரசியல்வாதி. அவரது உத்தம குணத்தை உணர்ந்து நெகழ்ச்சி அடைந்தேன்.

அப்படி உதவிகேட்டு ஒரு கடிதம் எழுதியவர்தான் ‘முகவரி’ ரமேஷ். இன்று ஆயிரம் பேர் ரமேஷின் உதவியை நாடி முகவரி அறக்கட்டளைக்குச் செல்கிறார்கள்.

யார் இந்த முகவரி ரமேஷ்?

சென்னைக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் ரமேஷ். குடும்பத்துக்கு கொஞ்சம் நிலம் உண்டு. விளைச்சல் அதிகம் இருக்காது. அப்பா கூலி வேலை செய்து பிழைக்க சென்னைக்கு வந்தார். சென்னை அண்ணா நகரில் அமைச்சர் ஆற்காட்டார் வீட்டுக்கு அருகில் நடைபாதைவாசியானர். மண் வேலைக்குப் போவதும் கட்டிட வேலைக்குப் போவதும் அவரது தினசரி வேலை. அவ்வப்போது ஊரிலிருந்து கிளம்பி அம்மாவும் சென்னைக்கு வந்து அப்பாவுடன் வேலை செய்வார். வீடுவாசல் எதுவும் இல்லை. இந்த நிலையில் 1991ஆம் ஆண்டு 8 ஆவது படிக்கும்போது ரமேஷ் ஒரு லாரியில் ஏறி சென்னை வந்தார். அது பள்ளி விடுமுறைக் காலம். நாளைக்கு 17 ரூபாய் கூலி. வறுமையின் வலியையும் உழைப்பின் வலியையும் ரமேஷ் உணரத் தொடங்கிய காலம்.

ரமேஷ் நாமக்கல் நகரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது அக்கா இதய நோயாளி ஆனார். 1998இல் ரமேஷின் அக்கா சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை கவனித்துக் கொள்ள ரமேஷும் சென்னை வந்து நடைபாதை வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டார். இதய வால்வு பழுதாகி அக்கா இறந்து போனாள். அம்மா அடிக்கடி வேலைக்காகச் சென்னை சென்று விடுவதால் ‘அக்கா’ தான் ரமேஷீன் அம்மாவாக இருந்தாள். பல ஆண்டுகள் கழித்து தான் ரமேஷுக்கு தனது அம்மா வேறு, அக்கா வேறு என்ற புரிதல் ஏற்பட்டது. அக்காவே உலகம் என்றிருந்த அவருக்கு அக்காவின் இழப்பை தாங்கமுடியவில்லை. அக்காவை காப்பாற்றியிருக்க முடியும் என்ற உணர்வு நீங்காது நிலைபெற்றது. அதற்கு தான் என்ன செய்யமுடியும் என்ற கேள்வி எழும்; ஓயும்; அலைபாயும்; அவிந்து அடங்கும். 34 வயதில் அக்கா மறைந்தாள். அவருக்கும் அக்காவுக்கும் வயதில் 14 ஆண்டு கால இடைவெளி. ஒரு மரணத்தின் தாக்கம் அவரது வாழ்க்கைப் பாதை இன்னதென்று அவருக்கு காட்டிவிட்டது.

இந்த நிலையில் 2000ஆம் ஆண்டு ரமேஷ்க்கு பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 463 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்த கஸ்தூரி என்ற பெண் அறிமுகமானாள். கஸ்தூரி பக்கத்துத் தோட்டத்தில் வசித்தவள். ஆத்தூரில் தோட்டம் என்றால் ஒரு ஏக்கர் அல்லது அரை ஏக்கர் நிலம் கொண்ட ‘காடு’ என்றழைக்கப்படும் வசிப்பிடம். அந்த நிலமே அவர்களுக்கு வாழ்வாதாரம்.

+2 படிக்க கஸ்தூரிக்கு குடும்பநிலை ஏதுவாக இல்லை. தனது இல்லாமையையும் இயலாமையையும் ரமேஷிடம் கூறி அரற்றுவாள் கஸ்தூரி. ஒருநாள் நல்ல மருத்துவர் இருந்திருந்தால் அக்காவை காப்பாற்றியிருக்க முடியும் என்ற ஒரு உணர்வெழுச்சியில், ‘கஸ்தூரி நீ நல்லா படி நான் உன்னை டாக்டராக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். சொன்னதோடு நிற்கவில்லை. தாகூர் பள்ளியில் +2 படிப்பைத் தொடர கஸ்தூரிக்கு ஏற்பாடு செய்து தந்தார். அப்பள்ளியின் இயக்குநர்களில் ஒருவரான காளியப்பன் கஸ்தூரியின் கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொண்டார்.

கஸ்தூரி +2 படித்து 1200க்கு 1136 மதிப்பெண் பெற்றாள். நல்ல மதிப்பெண் பெற்றிருந்த போதிலும் மருத்துவத் தேர்விற்கான நுழைவுத் தேர்வில் இலக்கை எட்ட முடியாமல் போனது. ஆனால், ரமேஷூம் அவரது தம்பி லட்சுமணனும் ஊக்கமும் உதவியும் அளித்து மீண்டும் நுழைவுத் தேர்வுக்கு கஸ்தூரியைப் படிக்க வைத்தார்கள். அப்போது ரமேஷ் சென்னையில் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தார்.

2003இல் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் கஸ்தூரிக்கு சீட் கிடைத்தது. ஆனால், மருத்துவக் கல்லூரி படிப்பு செலவுக்கு என்ன செய்வது? வாடிய முகத்துடன் வந்து நின்றாள். என்றைக்கோ கொடுத்த வாக்கு ஏதுமற்ற இந்த இளைஞனை வாட்டி எடுத்தது.

ஆடிட்டர் ஆபிசுக்கு வந்து போகும் பெரிய மனிதர்களிடம் உதவி கோரலாம், அது போதாது. ரமேஷின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்த கஸ்தூரியின் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கினார். அவருக்கு உறுதுணையாக நின்றார்கள். அவரது தம்பி லட்சுமணன், மங்களபுரம் சரவணன் மற்றும் நண்பர்கள். மாநில அளவில் நுழைவுத் தேர்வில் மூன்றாம் இடம் பெற்ற கஸ்தூரிக்கு சி.ஏ படித்துக் கொண்டிருக்கும் ரமேஷ் என்ன செய்ய முடியும்? யாரை பார்ப்பது? யாரிடம் உதவி கோருவது? SRM பச்சமுத்து முதல் இயக்குநர் சேரன் வரை எல்லா பெரிய மனிதர்களையும் பார்த்து வர முயற்சி செய்தார் ரமேஷ். அப்போதுதான் 2002ஆம் ஆண்டில் ‘ரமணா’ திரைப்படம் வெளியானது. அப்படத்தின் தாக்கம் திரைப்பட இயக்குநர் முருகதாஸின் மீது கவனம் கொள்ளச் செய்தது. கஸ்தூரியின் நிலையை விளக்கி முருகதாஸூக்கு ரமேஷ் ஒரு கடிதம் எழுதினார். ஏதுமற்ற ஒருவன் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநருக்கு தனக்குத் தெரிந்த ஏழை மாணவியின் மருத்துவப் படிப்புச் செலவுக்காக எழுதப்பட்ட கடிதம் அது. மனத்தூய்மை ஒன்றே அக்கடிதம் எழுதத் தூண்டியிருக்க வேண்டும். 2003 ஜூன் 24 அன்று முருகதாஸை சந்தித்தார் ரமேஷ். அந்தச் சந்திப்பின் விளைவு கஸ்தூரியின் 5 ஆண்டுகால மருத்துவ படிப்புக்கான செலவை முருகதாஸ் ஏற்க முன் வந்தார்.

இந்தச் சந்திப்பு எப்படி சாத்தியமானது? அப்போது ரமேஷ் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெங்கடேஸ்வரா ஹாஸ்டலில் தங்கி சிஏ  படித்துக் கொண்டிருந்தார். அந்த ஹாஸ்டலில் உணவுக்கென்று மாதாந்திர கட்டணம் இல்லை. நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டால் அதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். பிரபலங்களின் முகவரிகள் என்ற நூலை வாங்கி பிரபலங்களை நாடி கஸ்தூரிக்கு உதவி பெறலாம் என்று யோசித்தார் ரமேஷ். புத்தகம் வாங்க கையில் பணமில்லை. வெங்கடேஸ்வரா ஹாஸ்டலின் உணவுக் கட்டண நடைமுறை ரமேஷூக்கு கைக்கொடுத்தது. நாளைக்கு இரு வேளை உணவைத் தவிர்த்து ஒரு வேளை உணவு மட்டும் உட்கொண்டு தனது செலவைக் குறைத்து பணம் சேமித்தார். சேமித்த பணத்தால் பிரபலங்களின் முகவரி கைக்கு கிட்டியது. பிரபலங்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதத் தொடங்கினார். அப்படித்தான் இயக்குநர் முருகதாசுக்கும் ஒரு கடிதம் சென்றது. சத்தியத்தின் வாக்குக்கு யாரையும் அண்டியிருக்க வேண்டாம். இயக்குநரிடம் இருந்து ஒரு தந்தி வந்தது. தன்னை வந்து சந்திக்குமாறு கூறி தனது தொலைபேசி எண்ணையும் முகவரியையும் குறிப்பிட்டிருந்தார். அசோக் நகர் சாமியார் மடம் அலுவலகத்தில் ரமேஷ் இயக்குநர் முருகதாஸை கஸ்தூரியுடன் சந்தித்தார். ஒரு முகம் தெரியாதவன் எழுதிய கடிதம் கண்டு ஒரு முகம் தெரியாத ஏழைப் பெண்ணை மருத்துவராக்கினார் முருகதாஸ். அவரது சினிமாவில் கூட இப்படி ஒரு கதையை கற்பனை செய்திருப்பாரா முருகதாஸ்!

ஏ.ஆர். முருகதாஸ்

காக்காசு செலவில்லாமல் வெள்ளை கோட் அணிந்து மருத்துவக் கல்லூரி மாணவியாக வலம் வந்த கஸ்தூரியின் கதை ரமேஷின் ஊரான ஆரத்தி அக்கிரஹாரத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தது. ஊரக்காரர்கள் மத்தியில் ரமேஷ் ஒரு ‘பெரிய மனுஷன்’ ஆனார். தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வசதியற்றோர் ரமேஷ் வீட்டு வாசற்படியை மிதிக்கத் தொடங்கினார்கள். கஸ்தூரிக்கு கிடைத்த விடியலில் கிடைத்த உற்சாகத்தில் ரமேஷ் அளவுக்கு மீறிய நம்பிக்கை பெற்றார். 2003இல் தொடங்கி 2007 வரை ஏறக்குறைய 14 பேர்களை படிக்க வைத்தார் ரமேஷ். அவர்களில் சிலர் கலைக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் படித்து வந்தனர். குருநானக் கல்லூரியில் 5 பேர் சேர்ந்திருந்தனர். அப்போது ரமேஷ் வேளச்சேரி தண்டீசுவரம் பகுதியில்தான் வாடகைக்கு இடம் எடுத்து தங்கியிருந்தார். படித்துக் கொண்டிருந்தவர்களில் வெற்றி என்ற பையனும் ரமேஷும் அவ்வபோது பக்கத்து வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வேலை பார்த்து அதில் கிடைக்கும் சொற்ப தொகையில் எல்லோருக்கும் சமைத்து சாப்பிட வழி கண்டனர். ஆனால், அந்தத் தொகையை வைத்துக் கொண்டு பற்றாக்குறை பட்ஜெட்தான் போட முடிந்தது. வாடகையை நண்பர்களிடம் கடன் பெற்று சமாளிப்பதே போராட்டமாக இருக்கும்.

இந்த நிலையில்தான் சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் பணிகள் குறித்தும் அவரது செயல்பாடுகள் குறித்தும் பத்திரிகை வாயிலாக அறிந்து கொண்ட ரமேஷ் அவரிடம் உதவி நாடி சென்றிருக்கிறார். ஆனால், அவரை எளிதில் அணுகிவிட முடியவில்லை. அங்கிருந்த உதவியாளர்களிடம் ரமேஷின் கதை எடுபடவில்லை. ஒரு சி.ஏ படிக்கும் மாணவன் பத்து பேரை படிக்க வைக்கிறானா? என்ற சந்தேகத்துடன் ரமேஷை பார்த்திருக்கிறார்கள். இறுதியில், தான் செய்து வரும் காரியம் பற்றி சைதை துரைசாமிக்கு விளக்கமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கடிதத்தில் அவருடன் தங்கியிருந்த வெற்றியின் செல்போன் நம்பரை குறிப்பிட்டிருக்கிறார். எப்படியோ இந்தக் கடிதம் சைதை கைக்கு போய்ச் சேர்ந்துவிட்டது. கடிதத்தைப் படித்த சைதை, ரமேஷ்கூட தங்கியிருந்த வெற்றியை செல்போனில் அழத்து ரமேஷிடம் பேசியிருக்கிறார். ரமேஷின் முகவரியை கேட்டறிந்து கொண்டு உடனே தனது காரில் புறப்பட்டு வேளச்சேரி சென்று ரமேஷின் இடத்தையும் படிக்கும் பிள்ளைகளையும் கரிசனத்தோடு பார்த்திருக்கிறார்.

ரமேஷின் வாழ்க்கையில் இன்னும் ஒரு புதிய ஒளி! ஒரு புதிய பாதை!

சைதை துரைசாமி வேளச்சேரியில் தான் நடத்தி வந்த இலவச திருமண மண்டபத்தில் உள்ள அறைகளில் ரமேஷுடன் இருந்த மாணவர்களுக்கு தங்க இடமும் உணவும் தந்து உதவ முன் வந்தார். ரமேஷ் தனது பட்டாளத்துடன் அம்மா திருமண மண்டபத்தில் குடியேறினார். அங்கு நடக்கும் எல்லாத் திருமண நிகழ்வுகளின் போது இந்தப் பிள்ளைகளுக்கும் விருந்து சாப்பாடு உண்டு. அப்படி ஒரு ஏற்பாட்டை சைதை துரைசாமி வகுத்துக் கொடுத்திருந்தார். கல்யாண மண்டபத்தில் நிகழ்ச்சி பதிவு செய்யப்படும்போதே இந்த மாணவர்களுக்கும் சேர்த்து விருந்து ஏற்பாடு செய்யும்படி பதிவு செய்ய வருபவர்களிடம் அம்மா மண்டப நிர்வாகிகள் அறிவுறுத்திவிடுவார்கள். இப்படி கல்யாண சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்தார்கள் ரமேஷ் அணியினர்.

தினசரி சாப்பாட்டுக்கான மளிகை சாமான்களை ஒரு கடையில் தாராளமாகப் பெற்றுக்கொள்ளும்படி சைதை துரைசாமி கூறியிருந்தார். மாணவர்களுக்கு இடப் பிரச்சனையும் தீர்ந்தது. வயிற்றுப் பிரச்சனைக்கும் வழி பிறந்தது. மாணவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்வார்கள்.

அந்த மாணவர்களில் ஒருவர் இன்று டிபுடி கலெக்டர்; ஒருவர் ரெயில்வேயில் உயரதிகாரி. ஒருவர் ரெவன்யு இன்ஸ்பெக்டர்; ஒருவர் தாசில்தார். இப்படி அம்மா மண்டபத்தில் தங்கியிருந்த முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு வேலைக்கு சென்றுள்ளார்கள்.

இந்த மனநிறைவே இன்றுவரை முகவரியின் செயல்பாடுகளுக்கான ரமேஷின் எரிபொருளாக இருந்து வருகிறது.

சைதை துரைசாமிக்கும் அவரது எல்லா அறப்பணிகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்த ரமேஷூக்கும் இடையே பெருகிய அன்பும் நெருக்கமும் உயர்வும் தாழ்வும் பாராமல் ரமேஷின் முகவரி அறக்கட்டளை வேரூன்ற வழிசெய்தன.

2002இல் ஆரம்பித்த தனது அறப்பணி குழுவுக்கு 2006இல்தான் முகவரி என்று பெயர் சூட்டினார் ரமேஷ். 2011இல் தான் முகவரி அறக்கட்டளையாகப் பதிவானது.

முகவரி முகிழ்ப்பதற்கு முன்பே சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை ஊரரிய ஊர்போற்ற செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன் மூலம் எத்தனையோ ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாகி பணியாற்றத் தொடங்கிவிட்டார்கள். சைதை துரைசாமி மாநகர மேயர் பதவி வகித்தபோது அவரது அறக்கட்டளையில் பயின்ற மாணவர்களே அதிகாரிகளாக அவரிடம் பணிசெய்துள்ளனர். ஆனால், அவர்களை அதிகாரிகளாகவே மதித்துப் போற்றியவர் சைதை.

இந்தச் சூழ்நிலையிலும், இந்த உயரத்தில் இருந்தும் ஏழை மாணவர்களுக்காகப் பாடுபடும் ரமேஷ் தொடங்கிய அறக்கட்டளையையும் அரவணைத்து போற்றி வருகிறார் அரசியலில் செயல்படும் ஒரு மனிதர். இவை எல்லாம் சாத்தியமாகிறது இந்த ’தருமமிகு சென்னையில்’ தான்.

தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் குறித்து ரமேஷிடம் கேட்டபோது அவர் சொன்னார்: ”எங்கள் இருவருக்குமான பிணைப்பு விநோதமானது. அவர் இட்ட பணிகள் எதுவாயினும் காலம் நேரம் பாராமல் செய்து வந்திருக்கிறேன். அவர் மேயராக இருக்கும்போது சமூக ஆர்வலர்களை அழைத்து மாநகராட்சியின் ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த பணிகளை சரிவரச் செய்கிறார்களா என்பதை சரிபார்க்க ஆய்வு மேற்கொள்ளும்படி கூறுவார். அத்தகைய குழுக்களிலும் நான் இடம் பெற்றிருக்கிறேன். அரசியலில் இப்படிப்பட்ட ஒரு அதிசய மனிதரைப் பார்க்க முடியாது. பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் அவரோடு பழக்கம் இருந்தாலும் இன்று வரை நான் நேருக்கு நேர் அதிகம் உரையாடுவதில்லை. என்னை அவர் அறிந்து கொண்டார். நான் நினைப்பதை அவர் புரிந்துகொள்வார். அவர் செல்வதை நான் செயலாற்றுவேன். நாங்கள் பேசாமலே பேசிக்கொள்வோம். அவர் மட்டும் அம்மா மண்டபத்தில் இடம் தந்து முகவரி மாணவர்களை பாராமரித்து வரவில்லை என்றால் இன்றைக்கு இந்த இடத்திற்கு முகவரி முன்னேறி வந்திருக்க முடியாது.”

பிறகு ‘முகவரி’யின் வளர்ச்சி குறித்து ரமேஷ் மனம் நெகிழ்ந்து பேசினார். “நான் சிஏ படித்துக் கொண்டிருந்தபோது ‘வருமானவரி’ பற்றி வகுப்பு எடுக்க மனோகரன் என்று ஒரு ஆடிட்டர் வருவார். அவர் இந்தியாவில் உள்ள பத்து பெரும் ஆடிட்டர்களில் ஒருவர். அவரது தந்தை ஒரு சுதந்திர போரட்ட தியாகி. ஆடிட்டர்களில் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். நான் அவரது மாணவன். ஆனால், எனது செயல்பாடுகள் பற்றி கேள்விப்பட்டு ‘முகவரி’ மீது ஆர்வம்காட்டத் தொடங்கினார். முகவரியை அவருக்குத் தெரிந்த எல்லா ஆடிட்டர்களுக்கும் அறிமுகம் செய்து நிதி திரட்டி இன்றைக்கு சுமார் 40 பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ், சைதை துரைசாமி, ஆடிட்டர் டிஎன் மனோகரன் ஆகிய மூவரும் இன்றைக்கு முகவரியின் மூன்று தூண்கள். பிறகு இன்னும் பல பெரிய மனிதர்களின் தாயுள்ளத்தால் முகவரி தளர்ச்சியின்றி இயங்கி வருகிறது. அப்படி இணைந்தவர்களில் ஒருவரான ராசி சீட்ஸ் அக்ரி கம்பெனியின் சேர்மன் டாக்டர் ராமசாமி அவர்கள் 43 மாணவர்களின் கல்விச் செலவுக்கான புரவலர். அவரும் எங்கள் ஊரான ஆத்தூரைச் சேர்ந்தவர். அவரது மகள் சித்ரா செந்தில்நாதன் 16 பேரை படிக்க வைத்து வருகிறார். மேலும் சேலத்தைச் சேர்ந்த பாலாஜி ரப்பர் நிறுவனத்தின் சேர்மன் வைத்தியலிங்கம் 25 மாணவர்களை படிக்கவைத்து வருகிறார். ஸ்ரீராம் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அகிலா சீனிவாசன் ஒரே நேரத்தில் எனக்கு 20 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார். அவர் 30 மருத்துவ மாணவர்களின் முழு கல்விச் செலவை ஏற்றுள்ளார். முன்னாள் இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரி டிஎஸ்  கிருஷ்ணமூர்த்தி IRS, முன்னாள் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் டிகே ராஜேந்திரன் IPS, சென்னை வருமான வரித்துறை ஆணையர் வி. நந்தகுமார் IRS, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆணையர் ஏ. சண்முகசுந்தரம் IAS, முன்னாள் சுங்கத்துறை முதன்மை ஆணையர் சி. இராஜேந்திரன் IRS, தமிழ்நாடு காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். சிவக்குமார் IPS உள்ளிட்ட பலர் முகவரியைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.

கடந்த ஐந்து வருடங்களாக என்னைவிட முகவரியின் செயல்பாட்டுக்காக அல்லும் பகலும் சிந்திருக்கிறவர் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் சுமதி. நோக்கியா நிறுவனத்தின் ஒரு பிரிவுக்குத் தலைவராக உள்ளார் சுமதி. இன்று முகவரியின் நிர்வாகம் முழுமையையும் அற்புதமாக சீரமைத்து இயக்கி வரும் சுமதியின் சொந்த ஊர் வள்ளலார் வாழ்ந்த மேட்டுக்குப்பம். தற்போது முகவரிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார் இந்தப் பெண் வள்ளலார். முகவரிக்கு மட்டுமல்லாமல் ரமேஷுக்கும் உடன்பிறவா சகோதரியாக இருந்து அவரை பாதுகாத்து வருகிறார்.

மேலும் முகவரியில் படித்து வேலைக்குப் போய்விட்ட மாணவர்களில் மூன்று பேர் முகவரியின் அறங்காவலர்களாக இருக்கிறார்கள். அந்த மூவரில் ஒருவர் டில்லி AIIMS மருத்துவக் கல்லூரியில் M.D படித்து வரும் சந்தியா. அமெஸானில் பணியாற்றும் சரவணன் ஒருவர். கோவை மாவட்ட விவசாய அதிகாரியான வெற்றிவேல் ஒருவர். நான் முதன்முதலாக சைதை துரைசாமியைப் பார்க்கப் போகும்போது என்னுடன் வந்தவர்தான் வெற்றிவேல். முகவரிக்கு மொத்தம் ஏழு டிரஸ்டிகள். அவர்களில் மூவர் முகவரியின் முன்னாள் மாணவர்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 முகவரி மாணவர்கள் மருத்துவம் பயில்கிறார்கள். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மட்டும் 104 பேர் முகவரி மாணவர்களாகப் படித்து வருகிறார்கள். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 62 பேர் படிக்கிறார்கள்.”

எல்லாம் சரி நாட்டுக்காக உழைக்கும் நீங்கள் வீட்டுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது ரமேஷ் சிரித்துக்கொண்டே சொன்னார்: “ஒத்த பைசா கூட கொடுக்கல. எங்க அப்பா, அம்மாவ என் தம்பி பாத்துக்கிட்டான். எங்க அப்பாவும் இயல்பிலேயே மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். அதனால் எனது செயல்பாட்டுக்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை. அப்பா தற்போது உயிருடன் இல்லை. என் எதிர்கால நிலையை நினைத்து அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் மனக்கஷ்டம் இருக்கு. என் அம்மா பெயர் பட்டத்தாள்.”

கடந்த 22 வருடங்களில் ரமேஷின் முகவரியால் படித்து பயனடைந்தவர்களில் எண்ணிக்கை 700-ஐ கடந்துவிட்டது. மீண்டும் சொல்கிறேன் இந்தத் தருமமிகு சென்னையில்தான் இவ்வளவும் நடந்திருக்கிறது.

ரமேஷ் திருமணமாகாதவர். கர்மவீரர்கள் எல்லாம் வாழ்க்கையையே துணையாகக் கொண்டுவிடுகிறார்கள்.

தொடரும்

சந்தியா நடராஜன் <sandhyapathippagam@gmail.com>

Sandhya Natarajan

Amrutha

Related post