நோபல் உரை, 1993 | டோனி மாரிசன்
![நோபல் உரை, 1993 | டோனி மாரிசன்](https://amruthamagazine.com/wp-content/uploads/2025/02/toni-morrison-nobel-lecture-850x560.webp)
நோபல் உரைகள் | 3 | தமிழில் : ஸிந்துஜா
நோபல் கமிட்டியின் செயல்பாடு, அதைச் சார்ந்துள்ள நடுநிலைமை அல்லது இல்லாமை, படைப்பு உயர்ந்ததா அல்லது மட்டமா என்று ஒவ்வொரு முறையும் பரிசு முடிவைத் தெரிவிக்கும் போது எழும் சர்ச்சைகள் எழுந்து, எழுந்தது போல் அடங்கியும் விடுகின்றன. ஆனால், உலக இலக்கியங்களுக்குத் தரப்படும் பரிசுகள் பலவற்றுக்கும் முன்பாக நோபல் பரிசு இன்றும் ஓர் உயர்ந்த பீடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
நோபல் உரைகள் எப்போதும் இலக்கிய ஆசிரியனின் காலத்திய சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலைச் சூழல்களைப் பிரதிபலிக்கும் விதத்தில்தான் வெளிப்படுகின்றன. இந்த உரைகளில் காணப்படும் ஒரு பொது அம்சம் படைப்பாளிகளின் இளமைக் காலமும் அவர்களின் படைப்புகளில் ஆழமாக அது பதிக்கும் விவரணைகளும்தான். இவ்வுரைகள் வாசகர் மனதில் எழுப்பும் சீரிய சிந்தனைகளும் ஆழமான புரிதல்களும் அவற்றைப் பேருரைகளாக மாற்றி விடுகின்றன. ஆனால், அவற்றை என்றும் மாறாத புனித வாக்குகளென சடுதியில் தீர்மானத்துக்கு வரவேண்டிய அவசியத்தை உண்டாக்காது, படைப்பாளியின் நோக்கம், அவன் எழுத்து பிரதிபலிக்கும் சமூகச் சூழல், இலக்கியப் பரப்புக்குள்ளேயே நிகழும் ஒத்த அல்லது மாறுபட்ட கருத்தாழங்கள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்கின்றன.
நோபல் உரைகளை அம்ருதா வாசகர்களின் முன் வைக்கிறோம் – மாதம் ஒன்றாக.
ஸிந்துஜா
டோனி மாரிசன் நோபல் உரை, 1993
“முன்னொரு காலத்தில் ஓர் வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்குப் பார்வை இல்லை; ஆனால், புத்திசாலி.” அல்லது அது ஓர் ஆண் மகனா? ஒரு வேளை ஒரு குரு; அல்லது குழந்தைகளைத்
தாலாட்டும் தெருப் பாடகன்? இக்கதையை நான் கேட்டிருக்கிறேன். இதையே வேறு பல மொழிகளிலும்.
“முன்னொரு காலத்தில் ஓர் வயதான பெண்மணி. பார்வையற்றவள். புத்திசாலி.”
நான் அறிந்திருந்த காலத்தில் இந்தப் பெண்மணி அமெரிக்கக் கறுப்பு அடிமை. நகரத்துக்கு வெளியே ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறாள். அவளது ஞானம் கேள்விக்கு அப்பாற்பட்டது. முன்னோடிகள் எவரையும் கொண்டிராதது. அவளது மக்களைப் பொருத்த வரை அவள் இட்டதுதான் சட்டம்; வரம்பு மீறலும் அவளது அதிகாரத்திற்கு உட்பட்டது. அவளுக்குத் தரப்பட்ட மரியாதையும் எல்லை கடந்து மக்களிடம் ஏற்படுத்திய பிரமிப்பும் சொல்லவொண்ணாதவை. நகரத்தில் இம்மாதிரியான கிராமிய ஆற்றல் எப்போதும் வணங்கத்தக்கதாகவே இருந்தது.
ஒரு நாள் சில இளைஞர்கள் அவளது தீர்க்க தரிசன மகிமையை ஒப்புக்கொள்ளாதவர்களாய் அவளைத் தேடி வந்தனர். அவர்களது குறிக்கோள் அவளது பித்தலாட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது. அவர்கள் திட்டமிட்டது இதுதான்: அவளது வீட்டுக்குள் நுழைந்து அவளிடம் ஒரேயொரு கேள்வியைக் கேட்டு அவளைப் பதிலளிக்கச் செய்வது. பார்வையற்ற அவளிடம் ஒருவன் கேட்கிறான்: “அம்மா, என் கையில் ஒரு பறவையை வைத்திருக்கிறேன். அது உயிருடன் இருக்கிறதா அல்லது செத்துவிட்டதா?”
அவள் பதில் அளிக்காமல் இருக்கிறாள். மறுபடியும் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது: “என் கையில் உள்ளது உயிருள்ள பறவையா அல்லது செத்துவிட்ட ஒன்றா?”
அப்படியும் அவள் பதிலளிக்கவில்லை. அவள் பார்வையற்றவள். அதனால், பறவையை விடுங்கள், வந்திருப்பவர்களைக் கூட அவளால் காண முடியாது. அவர்களின் குறிக்கோள் என்னவென்று அவளுக்குத் தெரிந்திருந்தது.
முதியவளின் நீண்ட மௌனம் வந்திருப்பவர்களைச் சிரிப்பில் ஆழ்த்தியது.
இறுதியாக அவள் பேசுகிறாள். அவள் குரல் மென்மையாக, ஆனால், கண்டிப்பு நிறைந்ததாக எழுகிறது: “எனக்குத் தெரியாது. நீ வைத்திருக்கும் பறவைக்கு உயிர் உள்ளதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அது உன் கையில் இருக்கிறது.”
அவள் சொன்னதை இவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்: அது இறந்திருந்தால் அப்படி இறந்த பறவையைத்தான் நீ எடுத்துக்கொண்டு வந்தாய்; அல்லது அதை நீ கொன்றுவிட்டாய். அது உயிருடன் இருந்தால், அதை நீ இப்போதும் கொல்ல முடியும். அது உயிருடன் இருப்பது உன் முடிவைப் பொறுத்தது. எப்படியிருந்தாலும் அதற்கு நீதான் பொறுப்பை ஏற்க வேண்டியவன்.”
அவளுடைய நிராதரவற்ற நிலையையும் தங்கள் அதிகாரத்தையும் காண்பிக்க வந்த இளைஞர்கள், அவளைக் கேலி செய்ததற்காக மட்டுமல்ல, அரக்கத்தனமாக ஓர் உயிரைக் கொலை செய்ததற்காகவும் அவர்களே பொறுப்பு ஏற்கவேண்டுமென தண்டிக்கப்படுகிறார்கள். அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து விடுபட்டு அதனை எவ்வாறு நற்செயல்களுக்கு உபயோகப்படுத்த முடியும் என்று அந்த மூதாட்டி வழிகாட்டுகிறாள்.
கையிலிருந்த சிறிய பறவையைப் பற்றிய யூகம் என்னை எப்போதும் கவருவதாய் இருக்கிறது. குறிப்பாக என் எழுத்து இப்போது என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதை நினைக்கையில். நான் அந்தப் பறவையை மொழியாகவும் அந்த மூதாட்டியைப் படைப்பாளியாகவும் பார்க்கிறேன். பிறக்கும் போதே அவளுடன் ஒட்டிக்கொண்டுவிட்ட மொழி எப்படிக் கையாளப்படுகிறது, வலம் வருகிறது, ஏன் தேவையற்ற மோசமான செயல்களுக்குப் பிறரால் உபயோகப்படுத்தப் படுகிறது என்னும் கவலைகளைக் கொண்டிருக்கிறாள். படைப்பாளியாக அவள் மொழியை ஓரளவு அமைப்பு சார்ந்ததென்றும் ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்குவது என்றும், ஆனால், பெரும்பாலும் விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது என்றும் நினைக்கிறாள். ஆகவே இளைஞர்கள் அவள் முன் வைக்கும், “அது உயிருடன் உள்ளதா? அல்லது இறந்துவிட்டதா?” என்னும் கேள்வி யதார்த்தமானதுதான். ஏனெனில் மொழி அழிவற்றதல்ல; ஒருவரின் பலத்தின் மேல் நின்று உயிர் வாழ நினைப்பது. அவளைத் தேடி வந்தவர்கள் கையில் இறந்த பறவை இருந்திருந்தால் அதன் சாவுக்கு அவர்களே பொறுப்பு. அவளைப் பொறுத்தவரை உயிர்ச் சக்தி இல்லாத ஒரு மொழி பேசப்படுவதிலிருந்தும் எழுதப்படுவதிலிருந்தும் விலகிச் சென்று மரித்து விடுகிறது. முடக்கப்பட்டுவிட்ட தனது நிலமையைப் பார்த்து அம்மொழி அடங்கிக் கிடக்கிறது. உயிரற்ற அந்த மொழி தணிக்கை செய்யப்பட்டுக் கிடக்கிறது. அதனின் அடக்கு முறைக்குள் அது காண்பதெல்லாம் தன்னை ஒரு போதையிலிருக்கும் நார்சிசிஸ்ட் என்றுதான். தனிமைப்பட்டு அடக்குமுறையால் ஏவப்பட்டும் உள்ள அது இறக்கும் தருவாயிலும் அதன் செயல்களின் விளைவுகளால் பேராளுமைகளை முறியடிக்கின்றது. மனசாட்சியைத் தடுத்து நிறுத்துகிறது. மனித வளத்தைப் புதைக்கப் பார்க்கிறது. எந்த விசாரணையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அது, பொய்களை, புனைசுருட்டுகளை வெளிப்படுத்துகிறது.
அரசுமொழி அறியாமைக்குத் தரும் அங்கீகாரம் கலவரமூட்டக் கூடியது. இருந்தும் அது அங்கே நடமாடிக்கொண்டு இருக்கிறது – ஊமையாக, பாதகங்களைப் புரிந்துகொண்டு, அழிவிற்கான உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டு, பள்ளிச் சிறார்களை மயக்கிக்கொண்டு, கொள்ளை அடிப்பவர்களுக்கு இடம் தந்துகொண்டு, நிலையான ஒருங்கிணைந்த அமைப்பு என்னும் மாயை மக்களிடம் ஏற்படுத்திக்கொண்டு.
அலட்சியத்தினாலோ துருப்பிடித்தோ உதாசீனத்தினாலோ இகழ்ந்தோ அரசாணையினாலோ ஒரு மொழி இறக்கும் போது அவள் மட்டுமல்ல, மொழியின் பயனாளர்களும் மொழியை உருவாக்குபவர்களும் அந்தச் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவளுடைய நாட்டில் புரிதலையும் அன்பையும் வழிகாட்டலையும் போதிக்கவல்ல மொழியின் பலத்தை, வயதுக்கு வந்தவர்கள் ஒதுக்கி விட்டுவிட்ட நிலையில், பேச முடியாதவர்களின் குரல்களை வெளியுலகத்துக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பைத் துறந்துவிட்ட நிலையில், குழந்தைகள் தங்களின் நாக்குகளைத் துண்டித்துவிட்டு துப்பாக்கிகளை ஏந்துகிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். நாக்கைத் துண்டித்துக்கொள்ளும் தற்கொலை முயற்சி குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்ததாகச் சொல்ல முடியாது. அரசை ஏற்று நடத்தும் முதிர்ச்சியில்லாத தலைகளும் அவர்களின் ஏஜெண்டுகளும் உபயோகிக்கும் ஒரு தூக்கியெறியப்பட்டு விட்ட மொழி, சுதந்திரத்தைப் பேணாது, அடக்குமுறைக்கும் கீழ்ப்படிதலுக்கும் வீரவணக்கம் செலுத்தும் மனிதர்களை உருவாக்கிவிட்டது. மொழியின் நுணுக்கம், இறுக்கம், அச்சத்தையும் அடிபணிதலையும் ஒதுக்கி சேவை செய்யும் பணிவு ஆகிய பரிமாணங்களை உதறிவிட்டு அடிமையாக அதைப் புரளவைத்த பெருமை இந்த மொழிச் சிதைப்பாளர்களின் வெற்றி என்று கொண்டாடப்பட்டது.
அடக்கு முறையில் இயங்கும் மொழி வன்முறையைத் தூண்டவல்லது. அத்தகைய வன்முறை ஞானத்தை ஒடுக்குகிறது. அது இருட்டடிப்புச் செய்யும் அரசின் மொழி; போலித்தனம் மிக்க ஊடகங்களின் மொழி; பேராசிரியர்கள் சிரமப்பட்டு கடினமானதொன்றாக மாற்றித் தரும் மொழி; விஞ்ஞானத்தில் மாற்றம் பெற்ற தொழில் முறை மொழி; அறநெறி சிறிதும் இல்லாத வழக்குமன்ற மொழி; சிறுபான்மையோரைத் தூக்கி எறியும் மொழி; உதட்டளவில் இலக்கியமும் உள்ளத்தளவில் வெறுப்பும் கசடும் கலந்த வெறியுடன் வரும் மொழி – இவற்றை நாம் மறுத்து ஒதுக்க வேண்டும். மாற்றியமைக்க வேண்டும். வெளியுலகத்தின் முன்பு இவற்றை அம்பலப்படுத்த வேண்டும். மேற்சொன்ன குறைபாடுடைய மொழி உயிரின் இரத்தத்தைக் குடிக்கிறது. தீங்குகளை மடியில் போட்டுத் தாலாட்டுகிறது. தேசப்பற்றைத் தனது அகன்ற உடைக்குள் மறைத்து வைத்திருக்கும் பாசிசக் காலணிகளால் துளைத்தெடுக்க முயலுகிறது. அயராமல் மூளைச் சலவை செய்யும் பணியில் ஈடுபடுகிறது. பாலியல் மொழி, இனவெறி மொழி, ஆஸ்திக மொழி – இவை எல்லாமே அடக்குமுறைக்கு இணங்கி புதிய ஞானத்தையோ புதிய கருத்துக்களின் பரிமாற்றத்தையோ வெளி வராமல் தடுத்து ஆட்கொள்ளுகின்றன.
புத்திக்கூர்மையுள்ள கூலிப்படையினர், மனநிறைவு கொள்ளாத சர்வாதிகாரி, கொள்ளை அடிப்பதில் குறியாய் இருக்கும் அரசியல்வாதி / கும்பல் தலைவன், அடகு வைக்கப்பட்ட பத்திரிகையாளன் ஆகிய இவர்கள் அனைவரும் தன் கருத்துக்களால் ஈர்க்கப்பட மாட்டார்கள் என்று முதிய பெண்மணி அறிந்திருந்தாள். மால்கள், விசாரணை மன்றங்கள், தபால் அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், படுக்கையறைகள், பெரும் நகரச் சாலைகள் ஆகிய இடங்களில் உள்ள மக்கள் வசம் ஆயுதங்கள் நிரம்பிக் கிடக்கும். அவர்களைக் கிளர்ச்சியூட்டும் வசனங்களினால் உண்மைகளை மறைத்து வரும் மொழியை விரும்ப வைப்பார்கள். வன்முறை, சூடு ஆகியவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் சாதுர்யமான மொழியைக் கையாளுவார்கள். வாத்துகளின் கழுத்தை நெரித்து அவற்றின் வாய் வழியே உணவைத் திணித்து அவற்றின் ஈரல்கள் பெரிதான பின் அந்த வாத்துகளை உணவாக மாற்றும் விதம் எல்லோரும் அறிந்ததுதான். இதையே பின்பற்றி பெண்களிடம் ஏதோ ஓர் இனிய உருமாற்றம் பெற்ற மயக்கு மொழியை முன்வைத்துத் தடுமாற்றமடையச் செய்வார்கள். ஆராய்ச்சி என்ற பெயரில் புலன் விசாரணை செய்யும் மொழி முன் வந்து நிற்கும். அரசியல் சரித்திரம் என்னும் பெயர்களில் பல லட்சக்கணக்கான மக்களைத் துன்பத்துக்கு உள்ளாகி ஊமையாக்கி விடும் வல்லமை பொருந்தியவர்களாக இருப்பார்கள். திருப்தி அடையாத பிரகிருதிகளை மயக்கும் மொழியை உபயோகித்து அப்பிரகிருதிகள் தம் அண்டை வீட்டாரையே வெறுக்கக் கிளம்பி விடும் மோதலை ஏற்படுத்தி விடுவார்கள். கர்வம் மிக்க போலி மொழியைப் படைப்பாளிகள் மீது செலுத்தி அவர்கள் தங்களையே மட்டமாகவும் ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் உணர வைத்து விடுவார்கள்.
சொற் சாதுர்யம், கவர்ச்சி, அறிஞர்களின் நட்பு என்ற மயக்கும் கவர்ச்சிகரமான குண நலங்களையும் மீறி அவற்றின் கீழே மொழியின் இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிறது. – அந்தப் பறவை ஏற்கனவே இறந்திருந்தால்.
எந்தத் துறையாகட்டும், அறிவாற்றல் கொண்டு விளங்கும் சரித்திரம், மேதைமை நிறைத்த சூழலை வளர விடாது தடுக்கும் புல்லுருவிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தியும் கேள்வி கேட்டும் இயங்காவிடில் அது என்ன மாதிரியான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அந்த முதியவள் நினைத்தாள். பாபல் கோபுரத்தின் வீழ்ச்சி துரதிஷ்டவசமானது என்பது பெரும்பாலோரின் கருத்து. பல்வேறு மொழிகளின் கனமும் அதனால் ஏற்பட்ட கவனச் சிதைவும் கோபுரக் கட்டமைப்பின் தோல்வியை ஏற்படுத்தின. ஒரு சீரான மொழியமைப்பு, கட்டிடத்தைக் காப்பாற்றி சுவர்க்கத்தை அடைய வழிகோலியிருக்கும். யாருடைய சுவர்க்கம் என்று அவள் வியக்கிறாள். என்ன மாதிரியானது? மற்ற மொழிகளை மற்றவர்களின் கருத்துக்களை, மற்றவர்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தால், அவசரப்பட்டு சுவர்க்கத்தை அடைய முயற்சித்திருக்க வேண்டியிருந்திருக்காது. அவ்வாறு அவர்கள் நடந்து கொண்டிருந்தால் அவர்கள் கற்பனை செய்து வைத்திருந்த சுவர்க்கத்தைக் தங்கள் காலடிகளில் கண்டிருக்கக் கூடும். சிக்கலானதும் பிடிவாதமானதுமான எண்ணம் – சுவர்க்கம் என்பது வாழ்க்கை என்று நினைத்ததுதான் – அது வாழ்க்கைக்குப் பின்னால் வருவது என்றறியாது இருந்ததினால்.
அவளைத் தேடி வந்தவர்கள் மொழி என்பது பலவந்தப்படுத்தி உலா வருவது என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள். அத்தகைய நோக்குடன் அவர்கள் அங்கிருந்து கிளம்புவதை அவள் விரும்பவில்லை. ஒரு மொழியின் உயிர்த்துடிப்பு அதை உபயோகிப்பவர்கள் – பேசுவோர், படிப்போர், எழுதுவோர் – மூலம் சித்திரம் தீட்டப்படுவது போல் விளங்க வேண்டும். அதன் நிதானம் பல சமயங்களில் அனுபவத்தின் மாற்றாக வெளிப்பட்டாலும் அது பதிலியாக விளங்க வாய்ப்பில்லை. உண்மைக்கு அருகாமையில் அர்த்தம் வெளிப்படாத போது மொழி வளைந்து முன்வந்து சரி செய்துவிடுகிறது. அமெரிக்கா ஒரு சுடுகாடாக ஆகிவிட்டது என்று நினைத்த அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஒருவர், “இவ்வுலகம் நாம் என்ன சொல்கிறோம் என்பதையோ, நமக்கு நேர்ந்த அவலத்தையோ நினைக்காது. ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அது மறக்காது” என்றார்.
அவருடைய சாதாரணமென்று தோன்றும் இவ்வார்த்தைகள் ஆழ்ந்த துக்கத்தை அடக்கியிருந்தது. ஆறு லட்சம் உயிர்கள் இனப் போராட்டப் பேரழிவில் இறந்து போனார்கள். இவ்வார்த்தைகள், நினைவுச் சின்னத்துக்காகவோ அலட்சியத்துடனோ உதிர்க்கப்படாமல், கனம் ஏற்றும் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல், கவனத்தைக் கலைக்காது வெளி வந்தன. அவை மிகுந்த மரியாதையுடன் வாழ்வின் கைப்பற்ற முடியாத பெருந் துயரத்தைச் சுட்டிக் காட்டின. இப்படிக் காண்பிக்கப்பட்ட மரியாதை முதியவளை ஈர்த்தது. வாழ்க்கையை மொழி ஒருக்காலும் ஈடுகட்ட முடியாது என்று அவள் நினைத்தாள். அப்படித்தான் இருக்க வேண்டும். அடிமைத்தனத்தையோ இன அழிப்பையோ போரையோ மொழி அடக்கியாள முடியாது. அது அம்மாதிரித் தன்னால் முடியும் என்ற அகந்தையைக் கொள்ளலாகாது. அதனுடைய வீச்சு, அதனுடைய சோபை விளக்கவொண்ணாத தருணத்தை அடையும் நிலையில் இருக்க வேண்டும்.
ஆளுமை மிக்க அல்லது பணிவுகொண்ட, ஆழப் புதைந்த, வெடித்துச் சிதறுகிற, புனிதத் தன்மையை ஏற்காத ஒன்றாக மொழி இருக்கலாம். அது பெரிதாகச் சிரிக்கலாம். அல்லது விசும்பலான அழுகையுடன் வெளிப்படலாம். கறைபடாத மொழியின் மௌனம் அறிவுச் செல்வத்தை நோக்கிப் பாய்கிறது; அழிவை நோக்கி அல்ல. ஓர் இலக்கியம் தடை செய்யப்படுவதற்குக் காரணம் அது எழுப்பும் கேள்விகள் என்பதை அறியாதவர் யாராவது உண்டா?அது விமரிசனத்தை ஏந்தி இருப்பதால் இகழப்படுகிறதா?. மாற்றுக் கருத்துக்களைக் கொண்டது என்பதால் அழிக்கப்படுகிறதா? நரம்பில்லாத நாக்கால் எவ்வளவு பேர் துன்புறுத்தப்படுகிறார்கள்?
வார்த்தை – வேலைப்பாடு என்பது கண்ணியம் மிக்கது என்று அவள் நினைக்கிறாள். ஏனெனில் அது உற்பத்தி ஸ்தானம். நமது வேறுபாடுகளை மனித விருப்பு வெறுப்புகளை அர்த்தப்படுத்துகிறது. நாம் இறக்கிறோம். வாழ்வின் அர்த்தம் இதில்தான் பொதிந்திருக்கிறது. நாம் மொழியை உருவாக்குகிறோம். நம் வாழ்க்கையின் அர்த்தமாக அது இருக்கலாம்.
“முன்பொரு காலத்தில்….” வந்தவர்கள் மூதாட்டியிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள். யார் இந்தச் சிறார்கள்? அவர்கள் அவளிடம் வந்ததன் நோக்கம் என்ன? “பறவை உங்கள் கைகளில் உள்ளதா?” என்ற கடைசி வரிகள் மூலம் எதை அறிந்தனர்? அது அவர்களைத் தெளிவுபடுத்தியதா? அல்லது மாட்டிவிட்டதா? ஒரு வேளை அந்தச் சிறார்கள் காதில் விழுந்தது: “இது என்னுடைய பிரச்சினை அல்ல. நான் வயதானவள். பெண், கறுப்பினத்தவள், கண் தெரியாதவள். இப்போது நான் அறிந்து கொண்டதெல்லாம் என்னால் உங்களுக்கு உதவ முடியாது என்பதைத்தான். மொழியின் எதிர்காலம் உங்கள் வசமுள்ளது.”
அவர்கள் அங்கே நிற்கிறார்கள். அவர்கள் கையில் எதுவும் இல்லையோ? அவர்களின் வருகையே ஒரு தந்திரமோ? இதற்கு முன் வந்திராத இடத்தில் அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்றும் அவர்கள் விளையாட்டுப் பிள்ளைகள் அல்ல என்றும் உணர்த்துவதற்காக இச்செய்கையில் ஈடுபட்டார்களோ? குறுக்கிட்டும்
பெரியவர்கள் உலகில் தங்களை முன்னிறுத்தியும் தங்களைப் பற்றி – தங்களிடம் அல்ல – பெரியவர்கள் கொண்ட தப்பிப்பிராயங்கள் சரியல்ல என்று வற்புறுத்தவா? அவசரமான கேள்விகள் அவர்கள் முன் நிற்கின்றன. உதாரணமாக, “எங்களிடம் இருக்கும் பறவை உயிருடன் இருக்கிறதா?” என்பது போன்று. உண்மையில் இக்கேள்வி அர்த்தப்படுவது, “வாழ்க்கையென்றால் என்ன என்று யாராவது சொல்கிறீர்களா? சாவு என்றால் என்ன?” இது ஏதோ தந்திரமாகவோ முட்டாள்தனமாகவோ கேட்கப்படவில்லை. ஒரு புத்திசாலியின் கவனத்தைக் கோரும் கேள்வி இது. வாழ்க்கையையும் சாவையும் எதிர்கொள்ளும் முதிர்ந்த புத்திசாலியான ஒருவர் பதிலளிக்காவிடில் வேறு யாரைத்தான் போய்க் கேட்பது?
ஆனால், அவள் பதில் தருவதில்லை. தன் ரகசியத்தைத் தனக்குள் வைத்துக்கொள்கிறாள். அவளுடைய கருத்து அவளுடனேயே இருந்துவிட்டுப் போகட்டும் என்று. அவளுடைய சுருக்கென்ற பேச்சு, சார்பற்ற நிலைப்பாடு, விலகியிருத்தல், தனிமையில் உறைந்திருத்தல், மேம்பட்ட தனித்த ஒரு வாசம்…
அவள் அறிவித்ததைத் தொடர்ந்து மேலும் ஒரு வார்த்தை வரவில்லை. அந்த மௌனம் ஆழமானது. சொல்லப்பட்ட வார்த்தைகளை மீறிய அர்த்தம் கொண்டது. இளைஞர்கள் எரிச்சலுடன் அந்தத் தருணத்தில் தமது மனதுக்குத் தோன்றும் வார்த்தைகளை வெளியிடுகிறார்கள்.
“பேசாமலிருப்பதால் நீங்கள் உங்கள் தோல்விகளை விவரிக்கும் வார்த்தைகளை ஒதுக்குகிறீர்கள். நீங்கள் சொன்னதையும் செய்ததையும் நாங்கள் மிகுந்த கவனத்துடன் பார்த்தாலும் அவை எதையும் அறிந்துகொள்ள விடவில்லை. பெருந்தன்மைக்கும் விவேகத்துக்கும் நடுவில் ஒரு சுவரை எழுப்பிவிட்டீர்கள்.”
“எங்கள் கைகளில் உயிருடனோ இறந்தோ பறவை எதுவும் இல்லை. எங்களிடம் இருப்பது நீங்கள்தான். உங்களிடம் எங்களுக்கான கேள்வி: எங்கள் கைகளில் ஒன்றும் இல்லை என்பதை உங்களால் பொறுத்துக்ககொள்ள முடியவில்லையா? உங்களால் ஊகிக்கக் கூட முடியவில்லையா? உங்களது இளமைக் காலத்தில் மொழி என்பது ஒரு மாஜிக் போலத் தோன்றியது உங்களுக்கு நினைவில்லையா? கண்களுக்குப் புலப்படாததைக் கற்பனை தூக்கி நிறுத்திக் காட்டியதே? கேள்விகளும் கோரிக்கைகளும் பதில்களைத் தரும்படி வேண்டி நின்ற போது பதில் உங்களிடம் இல்லை என்று கோபப்பட்டீர்களே?
எங்கள் பிரக்ஞையை அடைய உங்களைப் போன்ற கதாநாயகிகளும் கதாநாயகர்களும் மேற்கொண்ட சண்டையை நாங்களும் ஆரம்பிக்க வேண்டுமா? உங்கள் சண்டையின் இழப்பினால் எங்கள் வசம் இப்போது எதுவுமில்லை. உங்கள் கற்பனைதான் மிச்சம். உங்கள் பதில் கலைத்தன்மையுடன் இருக்கிறது. ஆனால், அந்தக் கலைத்தன்மை எங்களை மட்டுமில்லை, உங்களையும் அவமானமாக உணரச் செய்கிறது, உங்களின் பதிலில் உள்ள தற்பெருமை மிக ஆபாசமாக இருக்கிறது. எங்கள் கைகளில் எதுவும் இல்லாத போது நீங்கள் காண்பிப்பது தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட பொருளற்ற எழுத்துப் பிரதிதான்.
எங்களை நெருங்கி, உங்கள் மென்மையான விரல்களால் வருடி, நாங்கள் யாரென்று அறியும் வரை எந்தவித அறிவுரையும் தராமல் மௌனமாக இருந்தால் என்ன? நாங்கள் ஆடிய நாடகம் உங்கள் கவனத்தைப் பெறுவதற்காக ஆடியது. நாங்கள் இளையவர்கள். முற்றாத பிஞ்சுகள். எங்களின் இந்நாள் வரையிலான குறைந்த வாழ்க்கையில் எங்களிடம் சொல்லப்பட்டதெல்லாம் ‘பொறுமையாய் இரு’ என்பதுதான். இன்று பேரழிவை நோக்கிச் செல்லும் இவ்வுலகில் இதற்கு என்ன அர்த்தம்? கவிஞன் ஒருவன் சொன்னது போல், “வெறுங் கையால் முழம் போடுவதில் அர்த்தமில்லை.” எங்கள் பாரம்பரியம் என்பது அவமதிப்பைத் தரும் ஒன்று. நீங்கள் உங்களுடைய வயதான வெளிறிய கண்களால் நாங்கள் பெற்ற வதையையும் திறமை மங்கி சாதாரணத்துடன் வளைய வருவதையும் பார்த்து நின்று கொண்டிருக்க வேண்டுமா? தேசியம் என்ற பொய்ச் சரடை அணிந்துகொண்டு எங்களையே ஏமாற்றிக்கொள்ளும் முட்டாள்களாக நாங்கள் வலம் வர வேண்டுமா? சென்ற காலம் என்னும் நஞ்சு கலந்த நீரில் நாங்கள் இடுப்பு வரை நிற்கையில் எங்களிடம் கடமை என்று போதனை செய்ய உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?
நீங்கள் எங்களைச் சிறுமைப்படுத்துகிறீர்கள். எங்கள் கைகளில் இல்லாத பறவையையும். எங்கள் வாழ்க்கைக்கான அர்த்தம் எங்கு உள்ளது? பாடல், இலக்கியம், கவிதை என்னும் வைட்டமின்கள் எதுவுமில்லாது வாழ்க்கையுடன் சம்பந்தமில்லாத சரித்திரத்தைக் காட்டி எங்களைப் பலசாலியாக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்களா?
நீங்கள் வயதானவர். புத்திசாலியான பெண்மணி. உங்களைத் தற்காத்துக்கொள்ள முயல வேண்டாம். எங்களது உயிர்களைப் பற்றி யோசியுங்கள். உங்களின் உலகைப் பற்றிக் கூறுங்கள். ஒரு கதையைப் போல. தீவிரமான கதை உருவாக்கப்படும் போது நாங்களும் உருவாக்கப்படுகிறோம். உங்கள் புரிதல் சவாலுக்கு இலக்காகும் போது நாங்கள் உங்களை அதற்காகப் பழிக்க மாட்டோம். உங்கள் வார்த்தைகள் சூடேற்றப்பட்டு விட்டால் அவை தீக்கிரையாகி தீப்புண் மட்டுமே மிஞ்சும். அறுவைச் சிகிச்சை மருத்துவரின் திறமையான கைகளை போல் உங்கள் வார்த்தைகள் ரத்தக்காயம் இருக்கும் இடங்களில் தையல் போடும். எங்களுக்குத் தெரியும் உங்களால் எப்போதுமே சரிவரச் செய்ய முடியாது என்று.
மனவெழுச்சி எப்போதும் போதுமானதாக இருப்பதில்லை. திறமை கூட அப்படித்தான். ஆனால், முயலுங்கள். உங்களுக்காகவும் எங்களுக்காகவும் செய்யுங்கள். தெருவெங்கும் உங்கள் பெயர் முழங்க வேண்டும் என்னும் நினைப்பைத் தவிருங்கள். உலகின் இருட்டானதும் வெளிச்சமானதுமான பகுதிகளில் எவற்றைக் காண்கிறீர்கள்? ‘இதை நம்பு, இதற்குப் பயப்படு’ என்றெல்லாம் சொல்ல வேண்டாம். நம்பிக்கை என்னும் விரிந்த அழகான குட்டைப் பாவாடையைக் காண்பியுங்கள். அச்சத்தை மூடி மறைக்கும் அழுத்தச் சமனத்தகடை நீக்கிக் காண்பியுங்கள். கண் பார்வையற்ற வயதான மூதாட்டியே, உங்களின் வசமிருக்கும் மொழியைப் பயன்படுத்தி மொழியால் செய்ய முடிவதெல்லாம் என்னென்னவென்று விளக்குங்கள். பயமுறுத்தும் பெயரில்லாத விஷயங்களைப் பற்றி மொழி ஒன்றுதான் விளக்கம் தர வல்லது. மொழிதான் தியானம்.
பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லித் தாருங்கள். அதன் மூலம் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் அறிந்துகொள்கிறோம். விளிம்பில் நகர்வது எது? இந்தப் பிரதேசத்தில் வீடற்று இருப்பது என்பது எப்படி இருக்கும்?
நீங்கள் அறிந்தவற்றிலிருந்து திசைமாற்றம் நிகழ்வது உவப்பானதா? உங்களை விரும்பாத இடங்களுக்குச் சென்று வாழ்வது எப்படியிருக்கும்?
ஈஸ்டரின் போது கடற்கரையோரங்களை அணுக விடாமல் தடுக்கப்படும் கப்பல்கள், தரையில் கிடக்கும் சூல்கொடி ஆகியவற்றைப் பற்றிக் கூறுங்கள். பெரும் சாமான்களை அடைத்து வைக்கப்படும் வேகன் பெட்டிகளில் அடைபட்டுக் கிடக்கும் அடிமைகள், அவர்கள் மென்குரலில் பாடும் பாடல்கள் நினைவுறுத்தும் பனிப்பொழிவு பற்றிச் சொல்லுங்கள். இந்த அடிமைகள் இறங்க வேண்டிய அடுத்த இடம்தான் அவர்களுடைய இறுதி நிறுத்தம் என்பதை அவர்கள் எப்படி அறிந்தார்கள்? எப்படி அவர்கள் தங்கள் கைகளைக் கூப்பி பிரார்த்தனை செய்கையில் இறங்கும் உஷ்ணத்தையும் சூரியனையும் நினைக்கிறார்கள்? தலையை உயர்த்தி அவர்கள் நிமிர்ந்து பார்க்கையில் தங்கள் முகத்தைத் தூக்கிக் கொடுப்பது போலக் காணப்படுவதேன்? அவர்கள் ஒரு விடுதியின் முன் சென்றடைகிறார்கள். டிரைவரும் சக ஊழியரும் விளக்கை எடுத்துக் கொண்டு விடுதியின் உள்ளே செல்ல இந்த அடிமைகள் இருட்டில் மெல்லிய குரலில் பாடலை இசைக்கிறார்கள். குதிரைக் குளம்புகள் பனியைத் துழாவி ஆவியைக் கிளப்புகின்றன. அப்போது எழும் ஒலியும் உருகலும் குளிரில் உறைந்து கிடைக்கும் அடிமைகளை மயக்குகின்றன.
“விடுதியின் கதவு திறக்கிறது. வெளிச்சத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு பையனும் பெண்ணும் நிற்கிறார்கள். வேகனுக்குள் வந்து படுக்கையில் அமர்கிறார்கள். இப்போது கையில் விளக்கும் ஆப்பிள் ரசக் குடுவையும் ஏந்தியிருக்கும் அவன் இன்னும் மூன்று ஆண்டுகளில் துப்பாக்கியைப் பிடித்திருப்பான். அடிமைகளின் வாயில் அவர்களிருவரும் ஆப்பிள் ரசத்தை ஊற்றுகிறார்கள். ரொட்டியும் மாமிசத் துண்டும் தவிர அந்தப் பெண் தரும் இன்னொன்று: அவள் அளிப்பதை பெற்றுக்கொள்ளும் அடிமையின் பார்வையை. ஆண்களுக்கு ஒரு ஈடும் பெண்களுக்கு இரண்டு ஈடுகளும் தருகிறாள். அடுத்த நிறுத்தம்தான் அவர்களது கடைசி இடம். இப்போது நின்றிருக்கும் இடமல்ல என்பது ஆதரவைத் தரும் உணர்வைக் கொண்டதாக இருக்கிறது.”
இளைஞர்கள் பேச்சை நிறுத்தி விட மௌனம் சூழ்கிறது. அதை உடைத்துக் கொண்டு முதியவள் பேசுகிறாள்:
“இறுதியாக நான் உங்களை இப்போது நம்புகிறேன். நீங்கள் கைப்பற்றிய பறவை உங்கள் கைகளில் இல்லை என்பதை நம்புகிறேன். இது எவ்வளவு அழகாயிருக்கிறது – நான் இருவரும் சேர்ந்து உருவாக்கியிருப்பது!”
“ஸிந்துஜா” <weenvy@gmail.com>
![sinthuja](https://amruthamagazine.com/wp-content/uploads/2023/07/Sinthuja-2021-06-04-1-1.jpg)