விளாடிமிர் நபக்கோவ்: ருஷ்யாவின் அகதி; அமெரிக்காவின் ஜார்!

 விளாடிமிர் நபக்கோவ்: ருஷ்யாவின் அகதி; அமெரிக்காவின் ஜார்!

ஸிந்துஜா

 

“இலக்கியம் என்பது புதிய கண்டுபிடிப்பு (Invention). கதை என்பது வெறும் சுருட்டல். ஒரு கதையை எவராவது உண்மைக் கதை என்று சொல்வாராகில் அது கலையையும் உண்மையையும் அவமானப் படுத்தும் சொல். ஒவ்வொரு தலைசிறந்த படைப்பாளியும் பெரிய ஏமாற்றுக்காரன்தான். இயற்கையைப் போல. ”

நூறு வருடங்களுக்கு முன்பு இயந்திரத் துப்பாக்கிக் குண்டு மழைக்கு அஞ்சித் தப்பித்து, ரஷ்யாவிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கானவர்களில் விளாடிமிர் நபக்கோவின் குடும்பமும் இருந்தது. அவர்கள் பல நூற்றாண்டுகளாக ரஷ்யாவில் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். நபக்கோவின் தந்தை ரஷ்ய அரசில் அமைச்சராக இருந்தார்.

நபக்கோவ், ரஷ்யாவில் அவரது பதினெட்டாம் வயது வரை செல்வத்தில் புரண்டு வளர்ந்தார். ரஷ்யன், ஆங்கிலம் பிரெஞ்சு என்று மூன்று மொழிகளில் பேசவும் எழுதவும் தேர்ச்சி பெற்ற அவர் அறுபத்தெட்டு ரஷ்யக் கவிதைகள் அடங்கிய ‘கவிதைகள்’ என்ற புத்தகத்தை அவரது பதினேழாவது வயதில் கொண்டு வந்தார். அதைப் படித்த அவரது வகுப்பாசிரியர் இனிமேல் இது போன்றவற்றை எழுதக்கூடாது என்று கண்டித்தார். அப்போதைய பிரபல ரஷ்யக் கவியான ஹிப்பியஸ் ஒரு சமூக நிகழ்வில் நபக்கோவின் தந்தையைச் சந்தித்த போது, “விளாடிமிர் ஒருக்காலும் எழுத்தாளனாக முடியாது” என்றாள்!

1917இல் ஏற்பட்ட அக்டோபர் புரட்சியின் போது பலர் போல்ஷ்விக்குகளிடமிருந்து தப்பித்து வெளிநாடுகளில் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நபக்கோவின் குடும்பம் அவர்களுடைய அளவற்ற செல்வத்தைத் துறந்து, அம்மாதிரி வெளியேறிய போது, ஒரு மட்டமான கிரேக்கச் சரக்குக் கப்பலில்தான் அவர்கள் பிரயாணிக்க வேண்டியிருந்தது. அவர்கள் கான்ஸ்ட்டாண்டிநோபிளை அடைந்த சமயம் அகதிகளின் அதிக எண்ணிக்கையால் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. சீறும் கடலின் நடுவே பல நாட்கள் பிரயாணம்செய்தார்கள். உண்பதற்கு நாய் பிஸ்கட்டும் படுத்துறங்கப் பெஞ்சுகளும் அவர்களுக்குக் கிடைத்தன. ஒரு டால்கம் பவுடர் டப்பாவுக்குள் குடும்ப நகைகளை ஒளித்து வைத்து பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள்.

நபக்கோவ், அவருடைய இருபதாவது பிறந்த நாளன்று ஏதன்ஸில் இறங்கினார். அதற்குப் பிறகு ரஷ்யாவின் பக்கம் அவர் திரும்பவில்லை. ஐரோப்பாவிலிருந்ததன் மூலம் அவர் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜில் படித்தார். பட்டம் பெற்றதும் அவர் பெர்லினில் இருந்த குடும்பத்துடன் சேர்ந்து கொண்டார். அங்கு நபக்கோவ், அவரைப் போல ரஷ்யாவிலிருந்து தப்பித்து வந்த யூதப் பெண் வேராவைச் சந்தித்தார். 1920களில் ஜெர்மனியில் ரஷ்யர்கள் அடங்கிய சமூகம் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது. வியாபாரிகள், கால்பந்து டீம்கள், இசைக் குழுக்கள் ஆகியோர் தவிரப் புத்தகப் பிரசுலாயங்களும் தோன்றின. ஒரு சமயம் எண்பத்தியாறு ரஷ்யப் பதிப்பகங்கள் ஜெர்மனியில் இயங்கின. அவர்களின் வாசகர்கள் ரஷ்யர்களாக இருந்தனர். இதைப் பற்றிக் கேலியாகக் குறிப்பிடுகையில் “முனைப்பாக இங்கு எழுதப்படும் ரஷ்யா ஏற்கனவே இறந்துவிட்ட நாகரிகத்தின் சின்னம்தான்” என்றார், நபக்கோவ். அவரும் அநேக புத்தகங்களை எழுதினார். ‘அலைஸ் இன் ஒண்டர்லாண்ட்’டை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தார்.

நபக்கோவ், 1925இல் அவர் வேராவை மணம் செய்துகொண்டார். இருவரும் வேலை பார்த்தாலும் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே, நடுத்தரத்துக்குக் கீழே என்ற செல்வ நிலையில்தான் வாழ முடிந்தது. ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின், ஜெர்மனியில் உள்ள யூதர்களின் நிலைமை மோசமாயிற்று. வேரா வேலை பார்த்து வந்த யூதக் கம்பனியை நாஜி அதிகாரிகள் மூடச் செய்தனர். வேரா வேலையை இழந்ததால் அவர்கள் இப்போது வேறிடத்துக்குச் செல்ல முடிவு செய்தனர். அந்த ஜோடி அதிகார பூர்வமாக நாடற்றும் கலாச்சார ரீதியாக அனாதைகள் போலவும் இருக்க வேண்டியதாயிற்று. எங்கு வேலை கிடைத்தாலும் செல்ல முடிவெடுத்து, அது பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா, தென்னாப்பிரிக்கா என்று எங்கு இடம் கிடைத்தாலும் செல்லத் தயாராயிருந்தனர். அமெரிக்காவில் எங்காவது குக்கிராமத்தில் இருக்கக்கூடத் தயார் என்று அவரிடம் தொடர்பு வைத்திருந்த ஒரு மஸசூசெட்ஸ் நண்பரிடம் கூறினார். பாரிஸில் இருந்த ஒன்றுவிட்ட சகோதரனுக்கு எழுதிய கடிதத்தில், ‘நாங்கள் பசியினால் மெதுவாக இறந்து கொண்டிருக்கிறோம். ஆனால், யாரும் எங்களை பற்றிக் கவலைப்படவில்லை’ என்று எழுதினார்.

நபக்கோவ்

இறுதியில் நபக்கோவுக்கு பாரிஸில் தங்க விசா கிடைத்தது. அவருடன் வந்த வேராவுக்கும் வேலை கிடைத்தாலும் இருவரும் வெவ்வேறு ஊர்களில் தங்கி வேலை பார்க்க வேண்டியிருந்தது. பாரிஸில் இருக்கும் போது அவர் அமெரிக்காவில் இருந்த பிரசுரகர்த்தர்களை அணுகினார். அவருடைய ஏஜென்ட் ரஷ்ய மொழிபெயர்ப்புகளைக் கொண்டு வந்தாலும் அவை அமெரிக்கர்களால் பெரும்பாலும் விரும்பப்படவில்லை என்றாள். அதைப் பற்றிப் பேசுகையில் நபக்கோவ் “அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை பற்றிய நாவல்கள் பெரிய போர்” என்றார். அவருடைய மற்றொரு நாவலைப் படித்த ஓர் அமெரிக்கப் புகலிட நிறுவனம் அவருக்கு அமெரிக்காவில் சொற்பொழிவுகள் ஆற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கிறிஸ்துவ அகதிகளுக்கான ஓர் அமெரிக்கக் குழுவிடம், “நான் அமெரிக்காவில் காலூன்றி நிற்பேன் என்னும் நம்பிக்கை என்னிடம் இருக்கிறது” என்றார்.

1940ஆம் ஆண்டு மே பத்தொன்பதாம் தேதி, பிரான்சின் கோட்டையை ஜெர்மனி பிடித்ததாக சர்ச்சில் அறிவித்த அன்று, நபக்கோவ் குடும்பம் அமெரிக்காவை நோக்கிப் புறப்பட்டது. அதற்கு ஒரு மாதம் கழித்து பாரீஸின் வீதிகளை ஜெர்மனியின் படைகள் ஆக்கிரமித்தன.

இருபதாண்டுக் காலமாக வெளியேற்றப்பட்டவர்களாய் நடமாடிக் கொண்டிருந்த நபக்கோவ் போன்றவர்கள் அகதிகளாக மாற வேண்டிய சூழ்நிலை எழுந்தது. அமெரிக்காவில் வேராவுக்குப் பகுதி நேர வேலை கிடைத்தது. நபக்கோவ் கல்லூரி மாணவர்களுக்கு ட்யூஷன் எடுத்தார். அப்போது எழுதுவதற்கு அதுவரையும் அதற்குப் பின்னும் யாரும் முயன்றிராத, ஆங்கில நடையை நபக்கோவ் உருவாக்கிக் கொண்டார். அப்படியிருந்தும் இதைப் பற்றிப் பேசுகையில், “எனது இயற்கையான, வளம் கொழிக்கும் , கட்டற்ற, எளிதில் பயிலக்கூடிய ரஷ்ய மொழியை விட்டுவிட்டு இரண்டாந்தர ஆங்கில மொழியில் எழுத வேண்டிய கட்டாயம், தனிப்பட்ட முறையில் எனக்கேற்பட்ட துக்கம்தான்” என்றார்.

இத்தகைய ‘இரண்டாந்தர’ ஆங்கிலத்தில் நபக்கோவ் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற படைப்புகளை உருவாக்கினார்! அவை ஐரோப்பாவின் மிகப் பெரும்பாலான வாசகர்களைச் சென்றடைந்தது. அவை ரஷ்யாவைச் சென்றடையவில்லை என்பது பற்றித் தனக்கு வருத்தம் எதுவுமில்லை என்றார் நபக்கோவ். “அவர்கள் என்னிடமிருந்து மதிப்பு மிகுந்தவற்றைப் பறித்துக்கொண்ட சந்தோஷத்தை அவர்களுக்கு நான் அளிக்க விரும்பவில்லை” என்றும் கூறினார். “ரஷ்யா மிக மோசமான கழிசடை நாடு என்பதில் தனக்கு வேறொரு அபிப்பிராயம் இல்லை; இருபத்தோர் ஆண்டுகளை வெளியேற்றப்பட்டவராக நிற்க வைத்த நாட்டின் மீது கோபம் எதுவும் இல்லை” என்றார்.

புரட்சிக்கு முன் அளவற்ற செல்வத்தில் புரண்ட தான், அங்கிருந்து வெளியேறி வாழ்க்கையை வாடகை வீடுகளிலும் ஓட்டல்களிலும் செலவழிக்க நேர்ந்தது பற்றிப் பேசுகையில், கம்யூனிஸ்ட்டுகள் அவரிடம் இருந்தவற்றைப் பறித்துக்கொண்ட பின், எதையும் தனக்கென்று சேர்த்துக்கொள்ளும் ஆசையும் விட்டுப் போய்விட்டது என்றார்.

நபக்கோவ் குடும்பம் (1907). வலமிருந்து மூன்றாவது, இளம் விளாடிமிர் நபக்கோவ். தந்தை விளாடிமிர் டிமிட்ரிவிச், தாய் எலெனா இவனோவ்னா ஆகியோர் நிற்கிறார்கள்.

 

விளாடிமிர் நபக்கோவின் ‘லோலிதா’ 1955இல் வெளியாகி அதற்குப்பின் தொடர்ந்து முப்பது வருஷங்கள் உலகின் கவனத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கிய வண்ணமாக இருந்தது. சமூகம் நிர்ணயித்திருந்த வரைமுறைகளையும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் வெற்றிகரமாகக் கலைத்துப்போட்ட அந்நாவல் பலநாடுகளில் தடை செய்யப்பட்டது. நாவல் தீண்டிய விஷயம் பன்னிரண்டு வயதுச் சிறுமியின் மீது தீராத காதலும் காமமும் கொண்டு தடுமாறும் முப்பது வயதுப் பேராசிரியரின் எண்ணங்களும் தடுமாற்றங்களும் சிக்கல்களும் எத்தகைய வாழ்வுக்கு அவரை இட்டுச் செல்கின்றன என்பதைப் பற்றியது. முதிராச் சிறுமியின் மீது உன்மத்தக் காதலை வெளிப்படுத்தும் உணர்ச்சிமிக்க வரிகளில், வாசகன், காதலனின் அயோக்கியத்தனத்தை மறந்துவிடும் அபாயத்துடன் நாவல் செல்லுகிறது.

‘லோலிதா’ நாவலுக்குக் கிடைத்த பிரும்மாண்டமான வரவேற்பைப் பற்றிப் பேசும் போது, இந்த நாவலை எழுதியதற்காக அவர் எப்போதாவது வருந்தியதுண்டா என்று கேட்கப்பட்டது. “லோலிதாவின் மீது அசாத்தியப் பிரேமையுடன் வளைய வரும் ஹெர்பர்ட் ஹெர்பர்ட் என்னும் கதாநாயக வில்லனின் சிறிய கறுப்பு டயரியைத் தூக்கி எறிந்துவிடும் மனநிலையில் இரண்டு முறை இருந்தேன்” என்றார். ஆனால், லோலிதாவை எழுதியதற்காகத் தான் ஒரு பொழுதும் வருந்தியதில்லை என்ற அவர் ‘லோலிதா’ ஒரு அழகிய புதிர் என்று வர்ணித்தார். அதன் கட்டமைப்பும் தீர்வும் வாசகர்களை மிகவும் ஆகர்ஷித்துத் தன்னுடைய மற்ற நாவல்களைப் பின் தள்ளிவிட்டது என்றும், ஆனால், அதில் தனக்கு வருத்தமேதும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

பன்னிரெண்டு வயதுச் சிறுமியாகச் சித்தரிக்கப்படும் லோலிதா பெரும்பான்மையோர் பார்வையில் விசித்திரமான பாலுணர்வுகளைத் தூண்டுபவளாகக் (Queer) காட்சியளிக்கிறாள். லோலிதாவில் அமெரிக்கர்களின் செக்ஸ் வாழ்க்கைப் பற்றி ஒரு தூக்கிய (High brow) பார்வையுடன் அவர் எழுதியதாக வந்த கண்டனத்தை அவர் மறுத்தார். அமெரிக்காவை நிந்திப்பதைத் தன் எழுத்துக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றார்.

திரைப்படமாக வெளிவந்த ‘லோலிதா’ பெருத்த வரவேற்பைப் பெற்றது. உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஸ்டான்லி குப்ரிக் இதை இயக்கினார். திரைக்கதை: நபக்கோவ்.

 

லக்கிய உலகிலும் திரையுலகிலும் வெற்றியையும் புகழையும் செல்வத்தையும் கொணர்ந்த நாவல், அவரை அப்போது ஏற்றுக்கொண்டிருந்த கார்னெல் பல்கலைக்கழக வேலையை உதறித் தள்ளிவிட வைத்துவிட்டது.

நபக்கோவ்

கற்பிக்கும் ஆசிரியப் பணியை மிகவும் நேசித்த அவர் மாணவர்களுக்கு ரஷ்ய, ஐரோப்பிய இலக்கியங்களைப் பற்றிய உரைகளை நிகழ்த்தி வந்தார். ஆனால், அறுபது வயதில், அதுவும் குளிர் காலத்தில் ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவது அவருக்குச் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பி, பனி படர்ந்த சாலைகளில் காரைச் செலுத்தி, பல்கலைக் கழகத்தில் மாடிப்படிகளியேறி மாணவர்களிடம், “ஜேம்ஸ் ஜாய்சின் டப்ளின் நகரைக் கரும்பலகையில் வரைந்து விளக்கி” அல்லது “செயின்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கும் மாஸ்கோவுக்கும் இடையில் 1870இல் சென்ற ரயில் வண்டியின் பின்புலத்தில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல்களை விமரிசித்து” என்று வேலை மிகவும் கஷ்டமாக இருந்தது.

நபக்கோவின் ‘இன்விடேஷன் டு எ பிஹெட்டிங்’ என்னும் சிறுகதையில் எம்மி என்னும் பன்னிரண்டு வயதுப் பெண் அவளை விட இருமடங்கு மூத்த ஆண் மீது காதல் கொள்கிறாள். ‘பெண்ட் சினிஸ்டர்’ என்னும் மற்றொரு கதையில் கதாநாயகன், அவனுடன் நாடகத்தில் அவன் மடியில் உட்கார்ந்து மகளாக நடிக்கும் சிறுமியை அனுபவிப்பதாகக் கனவு காண்கிறான். “இம்மாதிரிக் கதைகளில் நடுத்தர வயது மனிதர்கள் வாலிபப் பருவத்துக்கு வரும் சிறுமிகளுடன் உறவு கொண்டாடுவதாக எழுதுகிறீர்களே, உங்கள் சொந்த வாழ்க்கையும் இப்படிதானா” என்று சிலர் வெகுண்டெழுந்தார்கள். இதற்குப் பதிலளிக்கையில், லோலிதாவை தான் படைத்திராவிட்டால் இம்மாதிரிக் கேள்விகளை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்; ஒரு எழுத்தாளனின் வாழ்க்கைக்கும் அவனது கற்பனையில் உருவாகும் எழுத்துக்கும் ஊகங்களின் பேரில் முடிச்சுப் போடுவது அபத்தமானது என்றார்.

ரஷ்யாவில் பிறந்து, இங்கிலாந்தில் பிரெஞ்சு இலக்கியம் படித்து, ஜெர்மனியில் வாழ்ந்து, அமெரிக்காவில் குடியேறிய நபக்கோவ், தன்னை எப்போதும் அமெரிக்கன் என்றே அறிவித்துக்கொண்டார். 1940இல் அமெரிக்காவில் குடியேறிய அவருக்கு 1945இல்தான் குடிமகன் உரிமை தரப்பட்டது. அமெரிக்காவில் பெரும் நூலகங்களில் பொழுதைக் கழித்த அவர் அமெரிக்க அறிவுஜீவிகளுடன் நட்புக் கொண்டாடுவதில் அதிக அக்கறை காட்டினார். ஐரோப்பாவை விட அவருக்கு அமெரிக்காவில் அதிக நண்பர்களும் வாசகர்களும் கிடைத்தார்கள்.

ரஷ்யாவையும் ஐரோப்பாவையும் கண்டுணர அவருக்கு நாற்பது ஆண்டுகள் பிடித்தன. ஆனால், அதிக அளவு அமெரிக்க வாழ்வு அனுபவம் இல்லாத சூழலில் அவர் லோலிதாவை எழுதினார். அவருக்குப் பன்னிரண்டு வயதான ஒரு அமெரிக்கச் சிறுமியின் மனவுணர்வுகள் பற்றிச் சிறிதும் பரிச்சயம் இருக்கவில்லை. அமெரிக்காவையும் அந்தச் சிறுமியையும் அவர் கண்டெடுக்க வேண்டியதாக இருந்தது. அவரது இளமையில் ஐரோப்பாவில் இருந்து கொண்டு எழுதியதற்கும் ஐம்பது வயதில் லோலிதாவையும் அமெரிக்காவையும் அதன் தரவுகளையும் உள்வாங்கிக் கொண்டு மிகக் குறைந்த காலகட்ட அளவுக்குள் எழுதியதற்கும் மிகுந்த வேறுபாடுகள் இருந்தன என்று ஒரு பேட்டியில் நபக்கோவ் கூறினார். இந்தப் பின்னணியில் லோலிதாவுக்குக் கிட்டிய மிகப் பெரும் வெற்றி பல விமர்சகர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிற்று.

 

பக்கோவ், அவரது இளம் பிராயத்திலிருந்தே வண்ணத்துப் பூச்சிகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். சுமார் நாலாயிரம் வகையான வண்ணத்துப் பூச்சிகளை அவர் சேகரித்து வைத்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. இதில் இருபதுக்கும் மேற்பட்டவை அவருடைய கண்டுபிடிப்புகள். அவற்றிற்கு தனது நாவல்களில் வரும் பாத்திரங்களின் பெயர்களைச் சூட்டினார்.

அமெரிக்காவில் குடியேறியவுடன் நபக்கோவ் ஹார்வர்ட் விலங்கியல் அருங்காட்சியகத்தில் வேலை பார்த்தார். இன்னும் ஊக்கத்துடன் அவர் வண்ணத்துப்பூச்சிகளின் பின்னால் சென்றதும் அப்போதுதான்.

 

பக்கோவ், எப்போதும் முதல்தர எழுத்தையே மதித்தார். இரண்டாம் தரம் என்கிற சொல்லுக்கே அவர் இடம் கொடுக்கவில்லை. அவருடைய முடிக்கப்படாத இறுதி நாவலான , ‘தி ஒரிஜினல் ஆஃ ப் லாரா’வை அவர் இறந்ததும் தீ வைத்துக் கொளுத்தி விட வேண்டும் என்று மனைவியிடம் கூறினார். ஆனால், அவரது மறைவுக்குப் பின் வேரா அதை நிறைவேற்றவில்லை. வேரா, அவளது மரணத் தருவாயில் தன் மகனிடம் அவனது தந்தையின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்றுமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், அவனும் அதை நிறைவேற்றவில்லை. நபக்கோவ் இறந்து முப்பத்திரண்டு வருடங்கள் கழித்து அந்தப் புத்தகம் வெளியாயிற்று.

நபக்கோவ்

அவர் ஆங்கிலம் , பிரெஞ்சு, ரஷ்யன் என்று மூன்று மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்ததை, “என் மூளை ஆங்கிலம் பேசுகிறது; என் மனது ரஷ்ய மொழியை; என் காதுகள் பிரெஞ்சு மொழியை” என்றார். ருஷ்ய மொழியைப் போலவே ஆங்கிலத்திலும் திறமையாக எழுதக் கூடிய ஒரே ருஷ்ய எழுத்தாளராக அவர் காலத்தில் விளங்கினார்.

ஒரு எழுத்தாளனின் எழுத்தும் படிப்பும் மூன்று தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நபக்கோவ் கருதினார்: ஒன்று, கதை சொல்பவனாக, இரண்டாவது படிப்பிக்கும் ஆசிரியனாக, மூன்றாவது மயக்கும் திறன் பெற்றவனாக!

மேலும் விவரிக்கிறார்:

“அந்தச் சிறுவன் புலி, புலி என்று கத்தியதும் நியண்டர்தால் பள்ளத்தாக்கிலிருந்து வெளிவந்த புலி அவன் கால்களைப் பற்றிய போது இலக்கியம் பிறக்கவில்லை. அந்தச் சிறுவன் வராத புலியை வைத்து “புலி வருகிறது, புலி வருகிறது” என்று பொய்யாய்க் கதறிய தருணத்தில்தான் இலக்கியம் உருவாயிற்று. பலமுறை புலி வருகிறது என்று ஏமாற்றியவன் ஒரு நாள் புலியால் அடித்துச் சாப்பிடப்பட்டது யதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. புலியைப் பற்றிய கற்பனையைப் பையன் அவிழ்த்து விட்டதற்கும் நிஜமாகவே அந்தப் புலி வெளி வருவதற்கும் இடையே இருந்த கணத்தில் விகசிக்கும் நிகழ்வே இலக்கியம். இந்த உள்ளொளிதான் கலை இலக்கியத்தின் அடிப்படை; அதன் ஊன்றுகோல்.

“இலக்கியம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு. கதை என்பது வெறும் சுருட்டல். ஒரு கதையை எவராவது உண்மைக் கதை என்று சொல்வாராகில் அது கலையையும் உண்மையையும் அவமானப்படுத்தும் சொல். ஒவ்வொரு தலைசிறந்த படைப்பாளியும் பெரிய ஏமாற்றுக்காரன்தான். இயற்கையைப் போல.

“மறுபடியும் புலியும் சிறுவனும் கதைக்குப் போய்ப் பார்ப்போம். அவன் கனவிலிருந்த புலியைப் பார்த்ததாக சிறுவன் வேண்டுமென்றே பொய் சொல்லும் போது அங்கு ஒரு கண்டுபிடிப்பு நிகழ்கிறது. அவனுடைய விஷமம் கதையாக மாறிவிடுகிறது. ஆனால், அவன் புலிக்கு இரையான பின் நாம் அவனைப் பற்றி பேசி, அவன் அனுபவத்தை ஒரு பாடமாகத் தரிசிக்கிறோம். அப்போது அந்த சிறுவன் ஒரு மயக்கும் மந்திரவாதி. அவன் ஒரு கண்டுபிடிப்பாளன்.

“ஒரு கதைசொல்லி கேளிக்கைகள் நடத்துகிறான். எளிய வழிமுறைகளில் அது உணர்ச்சிகளைத் தூண்டி வாசகனை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. யாரும் சென்றிராத ஒரு தலத்தை அடைவதுபோல, வான்வெளிப் பயணம் செல்வது போல அது இருக்கலாம். இதிலிருந்து அடுத்த கட்டமாக ஆசிரியனை அடையும் போது அவன் ஒரு பிரசங்கியாக, ஒழுக்கம் போதிப்பவனாக, தீர்க்கதரிசியாக இருக்கக்கூடும். நாம் ஓர் ஆசிரியரிடம் படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கையின் நுணுக்கங்களையும் அறியும் பொருட்டுச் சென்றடைகிறோம். இங்கிருந்து நாம் மயக்கும் திறன் வாய்ந்த தேவனைப் போன்ற ஒருவரைச் சந்திக்கையில், அவரது நாவலோ கவிதையோ ஏற்படுத்தும் மனஎழுச்சி, வெளித் தெரியவரும் படைப்பாளியின் மேதாவிலாசம், அந்த எழுத்தில் காணக் கிடைக்கும் புதிய நடை, படிமம், வடிவப்பொலிவு ஆகியவை ஓர் இலக்கியத்தின் தாத்பர்யங்களை உணர்த்துகின்றன. மயக்கம் புனைவு, கற்றல் ஆகிய மூன்றும் குழைந்து உள்ளொளியுடன் ஓர் ஒளிரேகையை ஏற்படுத்தும் தருணம் – புனைவின் எலும்பிலும் கற்பனையின் ஊனிலும் உவந்து வந்து – எழுத்தின் மகிமையை உணர்த்துகின்றது.

“காலத்தைக் கடந்து நிற்க வல்ல நல்ல படைப்பின் தரத்தை இனங்காண ஒருவர் தெரிவு செய்யக் கூடிய சூத்திரமாவது, குறுகத் தரிக்கும் கவிதையின் அழகும் விஞ்ஞானத்தின் உயிரோட்டமும் கலந்திருக்கின்றனவா என்று பார்ப்பது மூலம்தான். புத்திசாலியான ஒரு வாசகன் தன் மனதின் மூலமோ, மூளையின் மூலமோ அல்ல, தனது முதுகுத்தண்டு மூலம் ஒரு நூலின் ஜீனியஸ்ஸை அறிகிறான்! ஒரு கலைஞன் ஆரம்பத்தில் தான் சீட்டுக்கட்டுகளால் கட்டும் மாளிகையை, இரும்பாலும் கண்ணாடிகளாலுமான மாளிகையாக மாற்றி விடுவதை, வாசிப்பு நேசமும் அறிவுத் தேடலும் நிறைந்த ஒரு வாசகன் கண்டுகொள்கிறான்.

நபக்கோவிடம் ஒரு முறை ஒரு பேட்டியில் “நீங்கள் எழுதும் முறையைப் பற்றிச் சொல்ல முடியுமா? அதாவது விஷயங்களைக் கையாளுவதற்கு முன்னால் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளுகிறீர்கள் என்பது பற்றி” என்று கேட்டார்கள்.

நபக்கோவ்: “மாட்டேன். எந்தக் கருவையும் பரிசோதனைக் களத்தில் இறக்கிவிடக் கூடாது. வேண்டுமானால் வேறு சிலவற்றைச் சொல்லுகிறேன். வெவ்வேறு சமயங்களில் நான் எடுத்துக்கொள்ளும் – படிப்புகளுக்கான – குறிப்புகளை அட்டவணைப்படுத்தி அவைகளை அட்டைகளாக (cards) மாற்றி வைத்துக் கொள்கிறேன். உதாரணமாக: “நிலவுத் தேவதை (Selene); சைபீரியாவில் உள்ள பழைய நகரமான Selenginsk; சதைக்கனி; நூலில் தொங்கும் சிறிய வண்ணத்துப் பூச்சி; The News Bon Ton இதழின் ஐந்தாவது பாகம் 312வது பக்கம் – விபச்சாரிகள் ‘நகரப் பெண்டிர்’ என்று அழைக்கப்படுகிறார்கள்; இளைஞன் கனவில் கால்சட்டையை மறைக்கிறான். வயதானவன் கனவில் பொய்ப் பல்செட்டை மறைக்கிறான்; நாவலைப் படிப்பவன், அதைப் பற்றி தன் சொந்த அபிப்பிராயத்தைக் கொள்ள சில பகுதிகளைப் படிக்காமல் புரட்டுகிறான்; நரம்பு, எலும்பு, தசைகளை சமன் செய்யும் மருந்து; ஆங்கிலத்திலேயே படுமட்டமான வார்த்தை.

“மழைக்குப் பிறகு – ஒரு பறவை, இரண்டு பறவைகள், மூன்று பறவைகள், அல்லது ஒன்றுமே இல்லை; சகதி படிந்த வாகன டயர்கள்; சூரியன்; பிரக்ஞையற்ற காலம்; சிறு மிருகங்களின் உலகம்; நாம் வார்த்தைகளை அல்ல, அவற்றின் நிழல்களை ஆராதிக்கிறோம்; ஜேம்ஸ் ஜாய்சின் தவறு என்னவென்றால் அவரது சிந்தனையில் உருவாக்கிய பிரமாதமான பாடல் வரிகளை அதிகமான வசனநடையை உபயோகித்துப் பாழ்படுத்திவிட்டார்; மரியாதையைப் பற்றிய நையாண்டிப் பேச்சு”

பேட்டி காண்பவர்: இம்மாதிரித் தொடர்பற்ற குறிப்புகள் எப்படி உங்கள் படைப்புகளுக்கு உதவுகின்றன?

நபக்கோவ்: நாவலை எழுத ஆரம்பிக்கும் போது இம்மாதிரி கிளர்ச்சியூட்டும் உதிரி வார்த்தைகள், வாக்கியங்கள் சிக்குகின்றன. ஒரு பறவை எப்படிக் கற்பனை செய்கிறது என்று இதுவரை எவராவது கண்டறிந்திருக்கிறார்களா? அப்படியே அது கற்பனை செய்தாலும் அதனுடைய கூடு, முட்டைகள் பற்றி இருக்குமா? அதேபோல, மேற்சொன்ன குறிப்புகள், நினைவு அலைகள் நான் எழுதும் போது, என் கற்பனையை முட்டி மோதும் போது அச்சமயம் புரண்டு வரும் வார்த்தைகளுடன் இவற்றை இணைத்துப் பார்த்து, உரசி, மெருகேற்றி எனக்குத் தெரிய வராத ஒரு கட்டிடத்தை எழுப்ப முயலுகிறேன். முதல் அதிர்ச்சி என்னை எதிர்கொள்ளும்போது இதைத்தான் நான் எழுத வேண்டும் என்று உறுதி செய்துகொள்கிறேன். இந்த நடமாட்டம் என் சிந்தனையில் – வெற்றுத் தாளில் அல்ல- உருவாகி வளர்கிறது. அது எவ்வளவு தூரம் சென்று நிற்கும் என்பதையும் நான் அனுமானித்து விடுகிறேன்.

 

பக்கோவுக்கு சதுரங்க விளையாட்டில் சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்திருக்கிறது. பின்னாட்களில் வேறு ஈடுபாடுகள் அவரைக் கவர்ந்து விட்டன. எனினும் சதுரங்க விளையாட்டில் உள்ள சிக்கல்கள் அவரை எப்போதும் வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தன. இச்சிக்கல்களைப் பற்றி எழுதி, ‘போயெம்ஸ் அண்ட் பிராப்லம்ஸ்’ என்னும் கவிதைத் தொகுப்பை வெளிக் கொண்டு வந்தார். .

நபக்கோவ் மற்ற கலைகளைப் பற்றி, எழுத்தாளர்களை பற்றி அதிரடி விமர்சனங்களை பொதுவெளியில் வைக்கத் தவறவில்லை. இசையைப் பற்றிக் கூறுகையில், இசை கேட்கும் செவிகள் தனக்கில்லை என்றும் ஒரு இசைக் கச்சேரியில் தன்னால் ஐந்து நிமிஷங்களுக்கு மேல் உட்கார முடியாது என்றும் கூறினார். நவீன ஓவியத்தைப் பற்றி பேசுகையில் பழங்குடி ஓவியத்துக்கும் அரூப ஓவியத்துக்கும் தான் பெரிய வித்தியாசத்தைக் காணவில்லை என்றார். “இவற்றில் தனிநபரின் திறமைதான் முக்கியமானது. நவீன ஓவியம் என்று கூறி வழக்கில் உள்ள சாதாரண இடங்களை ஒத்தியெடுப்பதும் கோட்பாடுகளைக் கட்டமைத்துப் பூசி மெழுகுவதும் ஏற்கத்தக்கது அல்ல.

“மூட்டமும் தேமலுமாய்ப் பெருமளவில் நூறாண்டுகளுக்கு முன்பு வளைய வந்த சித்திரங்களை நவீன ஓவியம் மாற்றாகக் காண்பிக்கிறது. இத்தாலிய யுவதிகள், அழகான பிச்சைக்காரர்கள், பாழடைந்த சரித்திரச் சான்றுகள் ஆகியவை நவீன ஓவியத்தில் புகுந்து கொள்கின்றன. இந்தப் புற்றீசல்களுக்கு நடுவே நாம் ஒரு சிறந்த கலைஞனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அவனுடைய தூரிகையிலிருந்து வெளிப்படும் புதிய தரிசனம் விஷய ஞானம் ஒளியின், நிழலின் அமைதி, வன்முறையோ, மெல்லசைவோ, உணர்ச்சிக்கேற்ப வளைந்து தரும் கோடுகள் ஆகியவை அத்தகைய கலைஞனின் பிரசன்னத்தை எடுத்துக் காட்டும். பொதுக் கருத்துக்களல்ல, தனியாளின் உள்ளொளியின் தரிசனமே முக்கியம். ஒரு கலைப் பிரதி சமூகத்துக்கு என்ன சேவை செய்கிறது என்பது அர்த்தமற்ற கேள்வி. அது ஒரு தனிநபரின் புரிதலுக்கு காத்திருக்கிறது. எனக்கு எனது வாசகன்தான் முக்கியம் என்பது போல” என்றார்.

மனைவி வேரா உடன் நபக்கோவ்

உலகப் புகழ் பெற்ற பல எழுத்தாளர்களைப் பற்றி நபக்கோவ் அதகளமாய் விமரிசனங்களை வீசுகிறார்:

பெர்டோல்ட் பிரெக்ட்: செல்லாக் காசு. என்னைப் பொறுத்தவரை கவைக்குதவாதவர்.

ஆல்பர்ட் காம்யூ :இவரை நான் வெறுக்கிறேன். இரண்டாந்தர, வறண்ட, ஊதிப் பெரிதுபடுத்தப்பட்ட எழுத்தாளர்; மட்டமான எழுத்து.

டி. எஸ். எலியட்: நிச்சயம் முதல்தர எழுத்தாளரல்ல.

தாஸ்தோயெவ்ஸ்கி: உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு எழுதிய கீழ்த்தரமான எழுத்தாளர். மதிக்கப்படாத ஒரு பத்திரிகை ஆசிரியரை விட மோசமான தீர்க்கதரிசி. காமெடியன். அவருடைய பிற்போக்குதனமான ஜர்னலிசத்தை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அவருடைய ‘குற்றமும் தண்டனையும்’ பெரிய வளவளா உபந்நியாசம்.

பால்சாக்: மிகவும் சாதாரணமான எழுத்தாளர், யதார்த்தம் என்று எப்போதும் நாடகீயமான எழுத்து அவருடையது.

வில்லியம் ஃபாக்னர்: ஆறின பழங்கஞ்சியைத் திரித்து மயங்கிய எழுத்து.

ஈ.எம். ஃபார்ஸ்டர் : அவர் எழுதிய ஒரே நாவல் ‘எ பாஸேஜ் டு இண்டியா’. அது சகிக்கவில்லை.

ஹெமிங்வே: சிறுவர்களுக்கான எழுத்தாளர். கான்ராடை விடச் சிறப்பான எழுத்தாளர். ஹெமிங்வேக்கு என்று எழுத்தில் ஒரு தனி நடை இருக்கிறது. ஆனால், முதிர்ச்சியான சிந்தனை, உணர்ச்சிகள் பற்றிச் சொல்லக் கூடிய எதையும் அவர் படைக்கவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் Bells, Balls and Bulls தான்.

டி.எச். லாரன்ஸ்: கழிவு எழுத்து.

எஸ்ரா பவுண்ட்: நிச்சயமாக இரண்டாந்தரம். பெரிய போலி. பித்தலாட்டக்காரர்.

சார்த்தர் : காம்யூவை விட மட்டமான எழுத்து.

ஸிந்துஜா <weenvy@gmail.com>

Amrutha

Related post