நீட்: சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி – பிரபு திலக்

 நீட்: சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி – பிரபு திலக்

ருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை, மாநில பாடத்திட்ட மாணவர்களின், குறிப்பாக கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை ‘நீட்’ தகர்த்துள்ளதாக ஏற்கெனவே சொல்லப்பட்டு வந்ததை புள்ளி விவரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில், ‘நீட் தேர்வு’ முறையை ஆராய்ந்த ஏ.கே. ராஜன் குழு, அதில் உள்ள பல்வேறு பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. “நீட் தேர்வானது, ஒரு மாணவரிடம் படிப்படியாக மேம்படும் கல்வித் திறமைகளைக் கணக்கில் கொள்வதில்லை. கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தேர்வு முறையில் தேர்ச்சியாவதையே இந்த தேர்வு முறை முன்வைக்கிறது

கலாசார ரீதியாக, பிராந்திய ரீதியாக, மொழி ரீதியாக, சமூக பொருளாதார ரீதியாக இந்த தேர்வு முறை பாரபட்சமாக இருக்கிறது. 2010-2011இல் மருத்துவ கல்வியில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படித்தவர்களில் 2,332 பேருக்கு இடம் கிடைத்தது; சிபிஎஸ்இ மாணவர்கள் 14 பேர்தான் சேர்ந்தார்கள். ஆனால், ‘நீட் தேர்வு’ அறிமுகமான பிறகு இது வெகுவாக மாறியது. 2020-2021இல் சிபிஎஸ்இயில் படித்த 1,604 பேர் மருத்துவ கல்வியில் சேர்ந்தார்கள். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு ‘நீட் தேர்வு’ வெகுவாக உதவியிருப்பதை இந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.

‘நீட் தேர்வு’ அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, தமிழ்வழியில் படித்த 19.79 சதவீத மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. ஆனால், ‘நீட் தேர்வு’ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ் வழியில் படித்த 1.99 சதவீத மாணவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது. அதேநேரம் ஆங்கில வழி மாணவர்களின் சதவிகிதம் 69.53% ஆக உயர்ந்துள்ளது.

‘நீட் தேர்வு’ அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, 2016-17இல் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 65.17% இடங்களைக் கிராமப்புற மாணவர்களே பெற்றனர்; ஆனால், 2020–2021இல் இது 49.91% ஆகக் குறைந்துள்ளது.

முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேருவதையும் இந்தத் தேர்வு வெகுவாகக் குறைத்திருக்கிறது. 2016–17இல் மருத்துவ கல்வி இடங்களைப் பெற்றவர்களில் 24.94 சதவீதம் பேர் முதல் தலைமுறை மாணவர்கள். ஆனால், 2020 – 21ல் இந்த சதவீதம் 14.46ஆகக் குறைந்திருக்கிறது.

‘நீட் தேர்வு’ வந்த பிறகு, பல முறை தேர்வு எழுதி எம்பிபிஎஸ் இடங்களைக் கைப்பற்றுவதும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. 2010–11இல் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்களில் 92.85% பேர் முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள். ஆனால், 2020-21இல் இது 28.58%ஆகக் குறைந்துள்ளது. மீண்டும் மீண்டும் தேர்வெழுதியவர்களே 71.42% இடங்களைப் பிடித்துள்ளனர்.

‘நீட் தேர்வு’க்கு முந்தைய மருத்துவர்கள், பிந்தைய மருத்துவர்கள் எனப் பிரித்துப் பார்த்தால், ‘நீட் தேர்வு’க்குப் பிந்தைய மருத்துவர்கள் அனைவரும் வசதியான, நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இந்த புள்ளிவிவரங்களில் இருந்து நீட் தேர்வானது, பலதரப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை மருத்துவக் கல்வியில் குலைப்பது உறுதியாகிறது. சமூகத்தில் வசதியான பிரிவினருக்குச் சாதகமாக இருப்பதோடு, பின்தங்கிய நிலையில் இருப்பவர்களின் மருத்துவக் கனவைக் குலைக்கிறது. குறிப்பாக தமிழ் வழியில் படித்தோர், கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், 2.5 லட்ச ரூபாய் வருமானத்திற்குக் கீழே உள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தினர், பழங்குடியினர் ஆகியோர் இந்தத் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

‘நீட் தேர்வு’ இன்னும் ஒருசில ஆண்டுகள் தொடர்ந்து நடந்தால், தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் கிடைக்க மாட்டார்கள். மொத்தத்தில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு தமிழ்நாடு திரும்பலாம். சுகாதார கட்டமைப்பு தரவரிசையில் பிற மாநிலங்களுக்குக் கீழ் தமிழ்நாடு செல்லும் நிலையும் ஏற்படலாம்” என்று ஏ.கே. ராஜன் குழு அறிக்கை எச்சரித்துள்ளது.

பல முறை தேர்வு எழுதியவர்களே எம்பிபிஎஸ் இடங்களைக் கைப்பற்ற முடியும் என்றால், சாமானிய, கிராமப்புற ஏழை மாணவர்கள் எப்படிச் சேர முடியும்? பயிற்சி மையங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலுத்த அவர்களிடம் பணம் ஏது? கிராமப்புற ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்குப் பணம் செலுத்தி நுழைவுத் தேர்வு பயிற்சி பெற முடியாது என்பதால்தான் பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாட்டில் 2006ஆம் ஆண்டில் ‘நுழைவுத்தேர்வு ரத்து சட்டம்’ நிறைவேற்றப்பட்டு அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவை ஒருபக்கம் இருக்க ஆள் மாறாட்டம், வினாத்தாளைக் கைப்பற்றுவது போன்ற முறைகேடுகளுக்கும் ‘நீட்’ தேர்வு முறை அதிகம் வாய்ப்பளிக்கிறது. இந்த முறைகேடுகளும் சேர்ந்து அப்பாவி மாணவர்களிடம் பெரும் அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகின்றன. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி சௌந்தர்யா வரை 16 பேர் தங்களை மாய்த்துக்கொண்டுள்ளனர். இனியும் இது தொடராமல் இருக்க ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவது அவசியம் என்பதைப் பலரும் தெரிவித்துவிட்டனர்.

நீட் தேர்வு இந்தியக் கூட்டாட்சி முறைக்கும் எதிரானதாகும். இதை உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. ‘நீட் தேர்வு’ முதன்முதலில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பொழுது, இந்திய மருத்துவ கழகத்தின் பரிந்துரை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே பல மாநிலங்கள் நீட் நுழைவுத் தேர்வை ஏற்காமல் உச்ச நீதிமன்றம் சென்றன. அப்படி உச்ச நீதிமன்றம் சென்ற மாநிலங்களில், இன்றைய பிரதமர் மோடி அப்போது முதலமைச்சராக இருந்த குஜராத்தும் அடக்கம்.

2013இல் அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான மூன்று நபர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்திய மருத்துவ கழகம் பரிந்துரைத்த ‘நீட் தேர்வு’க்கு தடை விதித்தது. அந்த அமர்விலிருந்த நீதிபதிகள் அல்தாமஸ், விக்ரம்ஜித் இருவரும், “இந்திய மருத்துவ கழகமோ அல்லது வேறு எந்த ஒன்றிய அரசுக்குச் சொந்தமான நிறுவனமோ, எந்தவொரு மாநிலத்தில் நடக்கும் கல்லூரி நுழைவையும் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றதல்ல. ஏனெனில், ஒவ்வொரு மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளும் அந்தந்த மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுபவை. அதற்கான உரிமையை இந்திய அரசியல் சாசன சட்டம் எல்லா மாநிலங்களுக்கும் தந்திருக்கிறது. அப்படி தலையிட நினைப்பது ஒரு மாநிலத்தின் கல்வி உரிமையிலும் தலையிடுவதாகும். அது இந்தியக் கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும்” என்று கூறியிருந்தனர்.

அவர்கள் கூறியது போல், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ‘நீட் தேர்வு’ போன்ற ஒரு பொது நுழைவுத் தேர்வு நியாயமானதாக இருக்காது என்பதையே ஏ.கே. ராஜன் குழு அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.

மருத்துவப் படிப்புகளோடு அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு என்னும் இந்த அபாயம் நின்று விடாது. வரும் ஆண்டுகளில் பொறியியல் படிப்புகளுக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. இன்னொருபக்கம் சமீபத்தில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு தலைவர் அனில் சஹஸ்ரபுதே, “கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய முக்கிய படிப்புகளில் சேரும் மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனைச் சோதிப்பது தேவையாக உள்ளது” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியும் மருத்துவக் கல்வியும் மாநிலப் பட்டியலுக்கு மாறாத வரை இந்த ஆபத்து வளர்ந்துகொண்டே இருக்கும். எனவே, கல்வியையும் மருத்துவக் கல்வியையும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.

ஏ.கே. ராஜன் குழு அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா பொக்கோ, கொல்கத்தாவில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில், “நீட் என்பது மாநில கல்விக்கு எதிராக, ஏழைகளுக்கு எதிராக, நடுத்தர வர்க்கத்திற்கு எதிராக, கிராமப்புற மக்களுக்கு எதிராக உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் இருக்கும் நீட் பயிற்சி மையங்கள், தேசியத் தேர்வு முகமை, சிபிஎஸ்இ ஆகியவை கூட்டு வைத்துக்கொண்டு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவைத் திருடுகிறது” என்று பங்ளா பொக்கோ அமைப்பின் பொதுச் செயலாளர் கார்கா சாட்டர்ஜி கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவிலும் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் அமித் தேஷ்முக், “தமிழ்நாடு நீட் தேர்வை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாக, நீட் தேர்வு மாநிலங்களுக்கு சரியானதா, மாணவர்களின் நலனுக்கு சிறந்ததா என விவாதங்கள் எழுந்துள்ளன. நீட் தேர்வில் வெற்றிபெறும் சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேள்வித்தாள்களும் கசிந்து வருகின்றன. தேர்வில் பங்கேற்கும் போலி மாணவர்கள் குறித்தும் தகவல்கள் வந்துள்ளன. நீட் தேர்வு மாணவர்களுக்கு நன்மையா தீமையா என்பது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு, நீட் தேர்வுக்கு எதிரான இதுபோன்ற மற்ற மாநிலங்களின் குரல்களை ஒன்றிணைப்பதில் இனி தமிழ்நாடு கவனம் செலுத்த வேண்டும்.

Amrutha

Related post