பெடெரிகோ ஃபெலினி: தன்னை அறிதலின் கலைஞன்

 பெடெரிகோ ஃபெலினி: தன்னை அறிதலின் கலைஞன்

மூலம்: பிளேபாய் இதழ் 

தமிழில்: ஸிந்துஜா 

 

 நீங்கள், ‘எனக்கு சிவப்பாக, நீலக் கண்களுடன், ரோஜா நிறக் காதுகளுடன், பொன்னிற முடியுடன், ஏழு பவுண்டு மூன்று அவுன்சு எடையுடன், சிறந்த விரல்களுடன் குழந்தை பிறக்க வேண்டும்!’ என்று சொல்ல முடியாது. நீங்கள் மணந்துகொண்ட பெண்ணுக்கு பிரசவ சமயத்தில் உதவி புரியலாம். ஆனால், குழந்தை எப்படிப் பிறக்கிறதோ அப்படித்தான் இருக்கும். அது உங்களுக்கு விதிக்கப்பட்டது. குழந்தை பிறக்கும்போது, ‘அதற்கு நீலக் கண்கள் இல்லை. அது கருப்பைக்குள் போகட்டும்என்று நீங்கள் கூற முடியாது.

 ஃபெலினி

  

 ஃபெலினி, வணிகத் திரைப்படச் சூழலுக்கு மாற்றாக புதிய திரைப்பட உலகை உருவாக்க முயன்றவர்களில் முக்கியமானவர். பொது மக்களை அடிமைப்படுத்தி, கேளிக்கைப் படங்களைத் தொடர்ந்து வெளியிட்ட திரைப்படத்துறையை நிராகரித்து, மக்களின் மனசாட்சியை உலுக்கும், கேள்வி கேட்க வைக்கும் படங்களை ஃபெலினி தயாரித்தார். கனவையும் நிகழ்காலத்தையும் ஒன்று சேர்த்தும், சுயசரிதையோடு கற்பனைக் கதையைக் கலந்தும், தன்னுடைய படைப்பாற்றலை சொந்த வாழ்க்கையின் பிரச்சினைகளோடு இணைத்தும், அவர் தயாரித்த படங்கள் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தன.

 ஃபெலினி எடுத்தஓட்டோ யீ மெஸ்ஸோஎன்ற மனநலப் பகுப்பாய்வுத் திரைப்படம் அவரை ஒரு முன்னோடி இயக்குனராக வெளி உலகத்துக்குக் காட்டியது. அப்படத்தின் அடிச்சரடை வைத்து அதை ஒற்றி எழும் மனநலப் பிரச்சினைகளை வைத்து இன்றும் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருபத்து மூன்று முறை அவரது படங்கள் அகாதெமிப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு எட்டு முறை பரிசுகளை பெற்றுள்ளன. 1993இல் ஃபெலினிக்கு திரைப்பட சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 1985இல் வெனிஸ் திரைப்படத் திருவிழாவில்கோல்டன் லயன்வாழ்நாள் சாதனையாளர் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

 1966இல் பிளேபாய் இதழ் ஃபெலினியைப் பேட்டி கண்டது. திரைப்படம் சார்ந்தது மட்டுமில்லாமல், மத இணக்கம், வாழ்வின் நிலையாமை, சமூகத்தின் கட்டுப்பாடுகள், அவை தனி மனிதனைப் பாதிப்பது எவ்வாறு, பாலுணர்வுச் சுதந்திரம், திருமணமும் ஆண்களும் பெண்களும் போன்ற வெவ்வேறு விஷயங்களில் அவர் கொண்டிருந்த திடமான ஆழமான, சில சமயம் அதிர்ச்சியளிக்கும் சிந்தனைகளை இந்த நீண்ட பேட்டியில் ஒருவர் காணலாம்.

 

உங்கள் நண்பர்களுக்கு மத்தியில் நீங்கள் ஒரு பெரிய கதை சொல்லி என்ற பெயர் இருக்கிறது. ஆனால், அதில் ஒருவர், ‘நீங்கள் ரீல் விடுவதையும் உண்மையைப் போல் முழுநிறைவு அளிக்கும் விதத்தில் சாதித்துக் காட்டிவிடுவீர்கள்என்று கூறியிருக்கிறார்.

‘முழுநிறைவு’ என்றா சொன்னார்? அது போதும் எனக்கு. என்னைப்போல் கற்பனையுலகில் பெரும் பொழுதைச் செலவழித்துக் கொண்டிருப்பவன் அசாதாரணமான கட்டுப்பாடுடன் இருந்தால்தான் உண்மையை மட்டுமே தெரிவிப்பவனாக இருப்பான். இதனால்தான் ஒரு நீதிமன்றத்தின் முன்னால் நான் சகிக்கப் போதாத சாட்சியாகப் பார்க்கப்படுவேன். ஒரு பத்திரிகையாளனாகவும் அப்படியே. நான் என்ன பார்த்தேனோ, அதை நான் விரும்பும் வண்ணம்தான் சொல்ல முடியும். நடந்ததை அப்படியே டாக்குமெண்டரியாக விவரிப்பது எனக்குக் கடினம்.

உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றிக்கூட நீங்கள் கதை விடுவதாகக் கூறுகிறார்கள். உங்கள் முதல் காதலியைப் பற்றி நாலைந்து வித்தியாசமான கதைகளை அந்தந்த சந்தர்ப்பத்தில் சொல்லியிருப்பதாக இன்னொரு நண்பர் கூறியிருக்கிறார்.

ஏன் கூடாது? இன்னும் எத்தனையோ கதைகளை அவள் மேல் சொல்லலாம்! எப்பேர்ப்பட்ட பேரழகி அவள்? அவளைப் போல் இல்லாத சாதாரணப் பெண்கள் மீதும்கூட ஜனங்கள் உண்மைக்கு மாறாகப் பொய்யுரைத்துப் பேசுகிறார்கள். அதனாலென்ன? இதற்காக நீங்கள் என்னைப் பொய்யன் என்று கூறினால் எனக்குக் கவலையில்லை. ஒரு கதை சொல்லி அவன் சொல்லும் கதையின் பரிமாணத்தை விரித்தும் ஜோடித்தும் கற்பனையைக் கலந்தும் சொல்ல அவனுக்கு முழு உரிமை இருக்கிறது. என் படங்களில் வாழ்க்கையை இப்படித்தான் சித்தரிக்கிறேன்.

உங்களைப் பலர் பலவிதமாக மந்திரவாதி, சர்க்கஸ் ரிங் மாஸ்டர், சமூகத்தை நையாண்டி செய்பவர், நவீன ஒழுக்கவாதி என்றெல்லாம் கூறினாலும் நீங்கள் ஒரு கதை சொல்லி மட்டும்தான் என்கிறீர்களா? 

இதெல்லாம் சுவாரஸ்யமான பதவிகள்தான். ஆனால், அடிப்படையில் நான் ஒரு கதை சொல்லி. அதற்கு சினிமாவை ஒரு சாதனமாகப் பயன்படுத்துகிறேன். நான் சினிமாவை விரும்பக் காரணம், அது வாழ்க்கையைத் திரும்ப உருவாக்க முயலுகிறது. பெரிதாகவும் விரிவாகவும் காட்டுகிறது. எனக்கென்னவோ ஓவியத்தை விட, இசையை விட, இலக்கியத்தை விட சினிமா வியக்கத்தக்க வகையில் வாழ்க்கையைத் திரும்ப எடுத்துக் காட்டுகிறது. அது வெறும் கலை உருவம் மட்டுமல்ல. வாழ்க்கையின் புதிய உருவத்தைப் படைக்கிறது. வாழ்வின் ஏற்றத்தை, முன்னோக்குதலை வெளிப்படைத்தன்மையை சினிமா அதன் இயல்பான கவித்துவ முறையில் எடுத்துச் சொல்ல முயலுகிறது. நான் இந்த முறையில்தான் கதையைச் சொல்லுகிறேன்.

பெரும்பாலான விமரிசகர்கள் உங்கள் கதை சொல்லும்உத்திஈடு இணையற்றது என்று ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், நீங்கள் சொல்லும் செய்திகள், தெரிவிக்கும் நீதிகள், அவற்றின் அர்த்தங்கள் ஆகியவற்றை எதிர்க்கிறார்களே?

இந்த விமரிசகர்களுக்கு என் படங்கள் புரிகின்றனவா என்ன? மக்கள் என் படங்களை ரசிப்பது போதாதா?

உங்கள் படங்கள் கேளிக்கைகளை முதன்மையாக வைத்தா எடுக்கப்பட்டன? அவற்றின் வசூல் நிலைமை படங்களின் தத்துவ முனைப்புக்கு முன்னால், இரண்டாம் பட்சமாகத்தானே இருக்க வேண்டும்?

நான் பிரபலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தத்துவ முனைப்பு பற்றி பேசுவது நேர விரயம். ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு அதன் நோக்கங்கள் என்னவாக இருந்தன என்று நான் கவலைப்படுவதில்லை. நோக்கங்கள் உங்கள் முயற்சிகளை எடுத்துச் செல்லப் பயன்படுபவை. மிகச் சிறந்த ஆக்கங்கள் அவற்றின் ‘மூல முதலான’ நோக்கங்களிலிருந்து வேறுபட்டு வெளி வந்தவை. பிளெய்ஸ் பாஸ்கல் அவருடைய ‘நினைவுகள்’ தொகுப்பைத் தர நினைத்த போது, ‘கடவுள் என்று யாரும் கிடையாது’ என்ற நிலைப்பாட்டை அவரது மனம் கொண்டிருந்தது. ஆனால், ‘நினைவுகள்’ தொகுப்பு வெளிவந்த போது அது அதற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தது.

‘லா டோல்சே விட்டா’ (நல்வாழ்வு) படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நான் எடுக்க நினைத்தது ரோம் நகரின் ஆத்மா எப்படி இருந்தது என்பது பற்றியும், மக்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றியும்தான். ஆனால், கடைசியில் வெளி வந்தது என்னவோ ஓர் இழிவான அறிக்கை. ஒரு நகரத்துக்குப் பதிலாக அது சித்தரித்தது ஒரு சுவரோவியத் தெருவை.

செழிப்பு நிறைந்த வாயா வினிஸ்ட்டே தெருவுக்கு நான் போகமாட்டேன். நான் பணக்காரர்கள் நடத்தும் விழாக்களில் பங்கு பெறுவதில்லை. ஏன் அப்படி என்று எனக்குத் தெரியாது. இடதுசாரிப் பத்திரிகைகள் அந்தப் படம் ரோம் நகரைப் பற்றியது என்று எழுதினார்கள். அது ரோம் நகரமாக இருக்க வேண்டியதில்லை. அது பாங்காக் அல்லது அதைப் போன்ற ஆயிரக்கணக்கான நகர்களில் ஒன்றாகக்கூட இருக்கலாம். அதை நான் சோடாமையும் கொமோராவையும் பற்றிய படமாக, எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் சித்தரிக்கும் படமாக, எடுக்க நினைத்தேன். நான் ஒரு ஆவணத்தை உருவாக்க விரும்பினேன். டாக்குமென்டரியாக அல்ல.

உங்கள் படங்களில் காணப்படும் பொதுச் சரடு என்ன?

என் தேடுதலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக நான் என் வாழ்வில் சந்தித்தவற்றை என் படங்கள் பேச வேண்டும்.

எதற்காக இந்தத் தேடல்?

என்னை நானே என்னிலிருந்து விடுவித்துக்கொள்வது பற்றி. இப்படிப் பார்க்கும் போது என் படங்களுக்கு இடையே உள்ளடக்கத்திலோ, பாணியிலோ எந்தவித வித்தியாசமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என் கடந்த கால வாழ்க்கை, என் மீது திணிக்கப்பட்ட படிப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடுவது; என்னை விடுவித்துக்கொள்வது பற்றித்தான் என் படங்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை பரிசீலித்த வண்ணம் உள்ளன. பலவிதமான பாத்திரங்கள், அவை வெளிப்படுத்தும் சாயல்கள், நெருக்கடிகள் இவற்றிலிருந்து என்னை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

8 ½ படப்பிடிப்பில் பெடெரிகோ ஃபெலினி

எந்த மாதிரி உங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

எனது இளம் பிராயத்தில் என் மீது திணிக்கப்பட்ட பிரயோஜனமில்லாத சுமைகளை என் முதுகிலிருந்து இறக்கி வைத்துவிட விரும்புகிறேன். அர்த்தம் இழந்த சப்தங்களினால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை பற்றி எனக்குத் தெரிந்தவற்றை உதற விரும்புகிறேன். இதன் மூலம் எனக்குப் புதிய வாழ்க்கையும் புதிய ‘நானு’ம் தரும் ஒரு கன்னித்தன்மை கிடைக்கலாம்.

யாருக்கும் பொருந்தாத, ஆனால், எல்லோரையும் கட்டிப் போடும் ஓர் ஆகிருதியிடமிருந்து தப்பிச் செல்ல விரும்புகிறேன். இன்று நான் செல்லுமிடங்களில் இளைஞர்கள் கூட்டமாகத் திரிவதை ஓரக்கண்ணால் பார்க்கிறேன். ஆனால், நான் இளைஞனாக இருந்த போது என் வயதையொத்தவர்கள் வெவ்வேறு திசைகளில் தனித் தனியாகப் பயணித்தோம். நாம் ஒரு எறும்புக் கூட்டத்தை சமூகமென்று கட்டமைக்க முயலுகிறோமா? மற்ற எந்த விஷயத்தைக் காட்டிலும் இதுதான் என்னை மிகவும் அச்சப்படுத்துகிறது. மனிதனின் மேன்மையும் உயர்வும் கூட்டத்திலிருந்து விலகித் தனித்துச் செயல்படுவதில்தான் இருக்கிறது. அவன் எவ்வாறு இந்தக் கூட்டத்திலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்கிறான் என்பதை அவனது போராட்டமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்மானிக்கின்றன. இவற்றைத்தான் என் படங்கள் விசாரிக்கின்றன.

இதற்கு உங்கள் படம் ஒன்றின் மூலம் உதாரணம் தர முடியுமா?

‘8 ½’ படத்தில் சமூகம் விதிக்கும் நியதிகளால் பதிக்கப்படும் அதன் கதாநாயகன் கிடோ, அவனது இளமையில் எதிர்கொள்ளும் குற்ற உணர்வு, ஏமாற்றங்கள் ஆகியவை பற்றி விவரித்திருக்கிறேன்.

நாமெல்லோரும் இளமையில் ஒரே மாதிரியான கல்வி முறையினால் அடக்கப்பட்டவர்கள். நாம் வளர்ந்து பெரியவர்களாக ஆகும் போது நாம் சந்திப்பது மோதல்களை! நமக்குக் கற்பிக்கப்பட்ட நற்குணங்களின் மேன்மை, லட்சியவாதங்கள், நீதி போதனைகள் ஆகியவை எல்லாம் நாம் தொடர வேண்டிய வாழ்க்கையில் இடம்பெறுவதில்லை. நாம் சந்திக்கும் நிதர்சன வாழ்வு இப்போதனைகளுக்கு எதிராக இயங்கி நமக்கு ஒருவித மன அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகின்றது. ஒரு சாதாரண மனிதனின் இயல்பான வாழ்க்கையை உருத் தெரியாமல் அடித்து விடுகின்றது. போதிக்கப்பட்டவை, நடைமுறை வாழ்க்கைக்குச் சற்றும் சம்பந்தமில்லாதவை என்பதை அதிர்ச்சியுடன் உணருகிறோம். இது நம் எல்லோரின் வாழ்க்கையிலும் நடக்கிறது.

பள்ளியில் கற்றுக்கொண்டதும் வீட்டில் சொல்லித் தந்ததும் தேவாலயத்தில் அறிவுறுத்தப்பட்டதும் உண்மையிலிருந்து வெகு தூரம் விலகி நிற்பதைப் பார்க்கிறீர்கள். கற்றவை எல்லாம் உங்களின் உண்மையான இருப்பை, உள்ளுணர்வை, வளர்ச்சியைத் தடுத்தாட் கொள்ளுகின்றன என்பது உங்களுக்கு உறைக்கிறது. இதனால் இறுதியில் ஒரு பிளவு உண்டாகிறது: ஒன்று, அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது அவற்றின் முன்னால் மண்டியிட்டு சரணடைந்துவிட வேண்டும்.

நீதிபோதனை உருவாக்கும் லட்சிய நிலைக்கும், மனக்கிளர்ச்சி காணும் யதார்த்த நிலைக்கும் இடையே எப்போதும் ஒரு போராட்டம் நடக்கிறது. இது கிரேக்கர்களிடமிருந்து ஆரம்பித்த ஒன்று. உடல் சார்ந்த அழகை முன்னிறுத்துவதை கிரேக்கர்கள் கொண்டாடினார்கள். அதனால், அழகற்ற ஒருவர் விலக்கப்பட்டவராகவும் தாழ்த்தப்பட்டவராகவும் வெளியாளாகவும் கருதப்பட்டார். பிறகு கிறிஸ்தவம் நெறி சார்ந்த அழகியலை முன்னெடுத்தது. இது மேலும் ஒரு சிக்கலில் உங்களை மாட்ட வைத்தது. நீங்கள் கிரேக்கக் கடவுளை போல் அழகானவரல்ல; கிறிஸ்துவ சமயம் எடுத்தாண்ட தூய மனிதனாகவும் நீங்கள் இருக்கவில்லை. அழகின்மையும் புனிதமின்மையும் கொண்டு அவமதிப்புடன் வாழ வேண்டிய பிரகிருதியாக நீங்கள் ஆகிவிட்டீர்கள். மனிதர்களும் உங்களை விரும்புவதில்லை, கடவுளும் கூட. எனவே, நீங்கள் வாழ்வுக்கு வெளியே நிற்க வேண்டியதாயிற்று.

இன்று?

சற்று மாறுதலான முறையில் அதே சிக்கல்கள் தொடர்கின்றன. இதிலிருந்து தப்பிக்க முயன்றவர்கள் வெற்றியைச் சந்திக்கவில்லை. இதிலிருந்து தப்பிக்க ஒரு சாதாரண வழி இருக்கிறது. நீங்கள் அழகானவரில்லையா, அதனாலென்ன? போனால் போகட்டும். நீங்கள் தூயவரில்லையா? சரி, அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். இப்படிச் சொல்லும் மனநிலையைப் பெற வேண்டுமென்றால் உங்களை நீங்கள் பரிபூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்.

‘தன்னை அறிந்து உணர்தல்’ வாழ்வில் வளர்ச்சியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும். நமது இளமையில் நம் மீது நடந்த மூளைச் சலவையிலிருந்து உருவாக்கப்பட்ட, பொய்களும் கற்பனைகளும் கட்டுக் கதைகளும், அடைய முடியாத, ஆனால், நிர்பந்தப்படுத்தப்பட்ட ஒழுக்க சீலங்களும் புனிதங்களும், ‘தன்னை அறிந்து உணர்தல்’ ஏற்படும் போது உங்களை விட்டு விலகிச் சென்றுவிடும்.

உங்கள் பழைய வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்ற பின் அடுத்தது என்ன?

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வாழ முடியும். ஒரு கோழையைப் போல சென்ற காலத்தைப் பற்றிய கனவுகளில் புதையுண்டு கிடப்பதிலிருந்து அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளில் மூழ்கிக் கிடப்பதிலிருந்து விடுதலை அடையலாம்.

எதிர்காலத்தில் என்றால் எப்படி?

எதிர்காலத்தில் நாம் என்னவாக இருப்போம் என்று கற்பனை செய்துகொள்வது, அதற்கு ஆயத்தப்படுத்திக்கொள்வது, திட்டங்கள் தீட்டுவது, எதிர்காலம் என்னவோ நம் கட்டுப்பாட்டில் இருந்து நம்மால் கட்டி ஆள முடிந்த ஒன்று என்னும் பிரமையில் ஆழ்ந்திருப்பது – இவைகளைத் தவிர்த்துவிட வேண்டும். எதிர்காலம் நமக்கு வெளியே இருப்பது அல்லது நம்மைக் கடந்து நிற்பது என்பது நமது கற்பனையே. என்ன நடக்குமோ அதை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் நாம் கற்க வேண்டிய பாடம். அதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருப்பதோ அல்லது என்னவாகுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பதோ அல்ல. எதிர்காலம் என்பது ஏற்கனவே இங்கு இருப்பதுதான். இன்றே அதனுடன் வாழ்வதுதான். விழித்திரு! வாழ்ந்திரு!!

உங்களின் பெரும்பாலான கதாநாயகர்கள் அவர்களின் ஆன்மீகத் தேடலுக்குப் பின் தம் வாழ்க்கையைத் தாம் அறிந்த வண்ணம் வாழ விரும்புகிறார்கள்; என்றாலும் பலர் இதையே விதியின் வழி செல்லும் விழிப்புணர்வாகத்தானே காண்கிறார்கள்?

இல்லையில்லை. விதியின் வழியல்ல. வாழ்க்கையின் நியதியைப் புரிந்துகொண்ட அனுபவத்துடன் அவர்கள் தாங்கள் அமைத்துக்கொண்ட வாழ்க்கையை நேசிப்பவர்களாக விளங்குகிறார்கள். ‘8 ½’  படத்தில் கிடோ தனது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவது என்பது தோல்வி அல்ல. உண்மையில் அது வெற்றி பெற்றவனின் மறு வருகை. இறுதியில் அவன் தன் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது அவற்றுடன் வாழ்ந்தாக வேண்டும் என்று புரிந்துகொள்ளும் போது வாழ்வில் தீர்மானங்கள் மறுக்கப்படுவதை ஒப்புக்கொள்ள வேண்டுமென உணருகிறான்.

அவனே கூறுவது போல, “எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இறையருளால் உருவாக்கப்பட்ட வடிவம் நான். அதைப் புரிந்துகொள்ள என்னால் ஆகாது. அதை புரிந்துகொள்வதிலும் எனக்கு இஷ்டமில்லை” என்கிறான். “மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வந்து சேரும் இந்த அகன்ற காட்சியை உற்சாகத்துடனும் பேரன்புடனும் எந்தவித எதிர்பார்ப்பும் உந்துதலும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்” என்று சொல்கிறான்.

அவன், தான் எவ்வாறு இருக்கிறோமோ அப்படியே இருப்பதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறான் – இப்படி இருந்திருக்கலாமோ, அப்படி இருந்திருக்கலாமோ என்ற தடுமாற்றங்களும் சஞ்சலங்களும் இன்றி.  ‘8 1/2’  உறுதிபட நிறுத்திக்காட்டும், நம்பிக்கை தரும் முடிவு இதுதான்.

ஜூலியட் ஆஃப் தி ஸ்பிரிட்ஸ்படமும் இதே நீதியை விளக்குவதுதானோ?

ஆம். ஆனால், அது மற்றொரு தளத்தில் இயங்குகிறது. நலிந்த குரலில் சொல்லப்படுகிறது. அதில் யதார்த்தம் மிகவும் கம்மி. ஜூலியட் மனிதமனத் தத்துவத்தில் அடங்கியிருக்கும் கட்டுக்கதைகளைத் தீண்டிப் பார்க்கிறாள். எனவே, அவற்றில் நீதி போதனை புரியும் சாயல்கள் காணப்படுவதைப் பார்க்கிறாள். அவை திருமணம் என்னும் கட்டமைப்பைச் சித்தரிப்பதுடன் தனிமனிதரின் நிலைப்பாட்டையும் எடுத்தோதுகிறது.

இந்தப் படம் ஓர் இத்தாலிய பெண், நவீன சமூகத்தில் அவள் மீது திணிக்கப்படும் மத வாதங்களையும் நீர்த்துப் போன பழங்கதைகளையும் எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பது பற்றியது. இந்த மனித மனத் தத்துவத்தின் தவறான தாத்பர்யம் திருமணத்துக்குப் பின் பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் என்று அபத்தமாக உளறுகிறது. அவள் வளர்ந்து பெரியவளாகையில் அபத்தத்தை உணருகிறாள். அவளால் அதை எதிர்கொள்ள முடிவதில்லை. புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. ஆகவே, அவள் நினைவுகளில் அமிழ்ந்திருக்கும் இளம் பருவ வாழ்க்கையையும் புராணங்களில் உபதேசிக்கப்பட்ட எதிர்காலத்தையும் எதிரொலிக்கும் ஓர் உலகில் புகுந்துகொள்கிறாள். அங்கே அவள் எது செய்தாலும் இளம் பருவத்தில் கற்றுக்கொண்டவையே வெளிப்படுகின்றன. எதிர்கால வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகள் கோரமாய்த் தோன்றுகின்றன. இறுதியில் நிகழ்காலம் என்பது அவளுக்குத் தினமும் தொலைக்காட்சியில் பார்க்கும் வணிகக் காட்சிகள்தான். இவைகளிலிருந்து விடுபட்டு அவள் மீண்டு வருகையில் அவள் காண்பது: அவளை விட்டு விலகிச் செல்லும் அவளது கணவன்!

இது அவளுக்கு எதிர்பாராத தைரியத்தைத் தருகிறது. தான் இதுவரை பயந்து கொண்டிருந்தது நடந்துவிட்டது என்று ஆகிவிடும் போது தன்னால் என்ன சாதிக்க முடியும், தன்னுடைய உண்மையான சக்தி எது என்று உணர்ந்து தைரியத்துடன் வாழ்க்கையைப் பார்க்கிறாள். உதவாக்கரையான தன்னுடைய படிப்பும், முட்டாளாகத் தன்னை அடித்த மதமும் தனக்குள் ஏற்படுத்திய கற்பனை ராட்சதர்களைக் கண்டே இதுவரை தான் அஞ்சியதாக அவள் தெளிவடைகிறாள்.

‘ஆவிகள் தேவையானவை, அவற்றுக்கு நன்றி செலுத்துவது அவசியம்’ என்று ஜூலியட் நினைக்கிறாள். அப்படி நன்றி தெரிவிப்பதால் இனி அவள் அவைகளைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. அவைகளை வெறுக்க வேண்டியதில்லை. அவைகளும் மனதுக்குகந்த இங்கிதம் நிறைந்தவைகளாக ஆகிவிடுகின்றன.

இதில் மக்களுக்கான தெளிவான செய்தி என்று ஏதாவது இருக்கிறதா?

நாம் எல்லோரும் கற்றுக்கொள்ளும் பாடம் ஒன்று இருக்கிறது: ஜூலியட் கடைசியில் கற்றுக்கொண்ட மாதிரி! திருமணம் என்பது வெற்றிபெற வேண்டும் என்றால் அதை ஒரு ஆரம்பமாகக் கருத வேண்டும்; சந்தோஷம் தரும் முடிவாக அல்ல. திருமண வாழ்வு நின்று நிலை பெற நாம் மெனக்கெட வேண்டும். மனித வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் அல்ல திருமணம் என்பது. அது மரபு சார்ந்த வழக்கம் அல்ல. திருமண பந்தம் என்பது சமூக நீதி என்னும் கோட்பாட்டைக் கேள்விக்குறியதாக ஆக்க வேண்டும். சிந்தாந்தங்களைக் கட்டிக்கொண்டு அழாமல் அவற்றை எப்போதும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

எந்த மாதிரி?

திருமணமாவதற்கு முன்பு உடலுறவு; திருமணத்துக்குப் பின் வேறொருவுடன் உறவு. மனிதன் ஒருதார மண உறவுக்கு அடங்கியவனல்லன். திருமணம் மனிதனது இயல்பான உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் கொடுங்கோலான அடக்குமுறை. இதற்கு மாறாக ஒரு பெண், தன் உலகை ஒரு தனி மனிதனின் பின்னால் உருவாக்கிக்கொள்கிறாள். ஒரு மனிதனின் மிகப் பெரிய துக்கம் இன்று என்னவென்றால், பலபேருடன் உறவுகொள்ளும் அவனின் தேவைக்கு இன்றைய நாகரிக சமுதாயம் அவனை ஒற்றைப் பிரகிருதியுடன் வாழும்படி முடக்கிப் போடுகிறது. இத்தகைய நிலைமை இல்லாமலிருந்தால் அவன் இன்னும் சுவராஸ்யமான ஒரு பரிணாம வளர்ச்சியை உருவாக்கி இருப்பான்.

நீங்கள் கத்தோலிக்க சர்ச் கற்பிப்பதை நிராகரித்துப் பேசுகிறீர்கள். நீங்கள் கத்தோலிக்கர்தானே?

இத்தாலியில் ஒருவர் பிறப்பினாலும் பூகோள நியதியினாலும் கத்தோலிக்கராய் இருப்பதைத் தவிர்க்க முடியாது. கடலில் பிறப்பது மீனாகத்தானே இருக்க முடியும்? இத்தாலியில் பிறந்த ஒருவனால் கத்தோலிக்க சூழலில்தான் மூச்சுவிட முடியும். இத்தாலியக் குழந்தை சர்ச்சுக்குப் போவதும் ஐக்கியப்படுத்தப்படுவதும் கத்தோலிக்க இறுதிச் சடங்கைப் பார்ப்பதும் தவிர்க்க முடியாது. தம்மைப் பாமரக் கூட்டம் என்று அழைத்துக்கொள்பவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது; எப்படி இது இத்தாலியில் நடக்கிறது என்று எனக்குப் புரிபடாவிட்டாலும்! விரைவில் இத்தாலியில் உள்ள ஒவ்வொருவரும் தாம் கத்தோலிக்கரா அல்லவா என்று முடிவு செய்யத்தான் வேண்டும்.

நீங்கள் ‘8 ½’ படத்தில் காண்பித்துள்ள கத்தோலிக்கப் பாதிரியாளர்களின் சித்திரம் மூலம் நீங்கள் கத்தோலிக்கரல்ல என்று பல கிறிஸ்து சமயத்தவரை நினைக்க வைத்திருக்கிறீர்கள், இது சரியா? 

அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் மிகவும் மதப்பற்றுள்ளவன். என் வாழ்வில் எண்ணற்ற புதிர்களின் எல்லைகளை அறிய முடிந்ததில்லை. அதே சமயம் அவற்றை மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன். இது கத்தோலிக்க எதிர்ப்பா அல்லது மத எதிர்ப்பா? கத்தோலிக்க சம்பிரதாயங்களால் பீடிக்கப்பட்ட நம் குழந்தைகளை விடுதலைக்கு இட்டுச்செல்ல வேண்டும். ஏனெனில், அது அவர்களைக் கூண்டுக்குள் அடைத்துவிடும் ஆபத்து இருக்கிறது.

‘8 ½’ படத்தில் கிடோவின் கத்தோலிக்க ஆசிரியர்கள் உணர்ச்சிகளற்ற பயங்கரமான ஆட்கள். உண்மையான கிறிஸ்துவப் பணி என்பது மக்களின் அறியாமையை அழிப்பது என்று பணியாற்றிய இருபத்தி மூன்றாம் போப் ஜானுக்கும் இந்தப் பயங்கர கத்தோலிக்க ஆசிரியர்களுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. ஒரு பொய்யான, தவறுகள் நிரம்பிய கத்தோலிக்கக் கல்வி, குற்ற உணர்வுகளையும் வேஷங்களையும் தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்குகின்றது. இத்தகைய நிலைமையில் நான் அவற்றைத் தவறு என்று சுட்டிக்காட்டுவதுடன் நில்லாமல் அவற்றை ஒழிக்கும் முயற்சிகளையும் புரிவேன்.

கெட்ட பெண்’, ‘நல்ல பெண்என்ற இரட்டை வேட நீதி போதனைகளை வைத்துப் பெண்களை பிரிப்பதும் இது சர்ச்சுகளின் கைங்கர்யம் ஒழிக்கப்பட வேண்டியதென்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. எம்மைப் போன்ற கத்தோலிக்கர்களுக்கு ஒன்று அவள் மென்மையான, ஒழுக்கம் நிரம்பிய, தாய்மையும் தூய்மையும் நிரம்பிய குணசீலியாக இருக்கிறாள். அல்லது வேசியாக, தறி கெட்டுத் திரிபவளாக கொடுமையானவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஒருத்தி டான்டேயின் பீட்ரிஸ் போல வெண்ணிற தேவதையாக நடமாடுகிறாள். இன்னொருத்தி தன் குழந்தையைத் தானே விழுங்கக் காத்திருப்பவள் போல் நிற்கிறாள். இந்த இரு நிலைப்பாடுகளுக்கான தொடர்பைக் கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில், பெண் என்பது யார்? அவள் ஆணுக்குள் அடங்கிக் கிடப்பவள்.

பெண்ணைப் பற்றிப் பேசுகையில் நம் மனதின் வளர்ச்சியுறாத இருண்ட பிரதேசங்களில் அவளை நாம் எவ்வாறு கண்டிருக்கிறோம் என்று பரிசீலிக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மனிதரிடையே ஆண் – பெண் வித்தியாசம் இருக்கவில்லை. அல்லது குறைந்தது பெண்ணைத் தேவதையாகக் கொண்டாடும் நிலை இல்லாமல் இருந்தது. அதன் பிறகுதான் பிளவு உண்டாக்கப்பட்டது. ஏவாள், ஆதாமிடமிருந்து பிரிக்கப்பட்டாள். ஆகவே, ஆணின் பிரச்சினை என்பது பிரிக்கப்பட்ட பெண்ணைத் தேடிக்கண்டு பிடித்துத் தன்னோடு இணைத்துக்கொள்வது என்பதாயிற்று. இது முக்கியமானதற்குக் காரணம் அவன் தேடிய பெண் அவன் எதிர்பார்ப்புகளின் எல்லை. சுயதரிசனத்தைக் காண்பதற்கான கண்ணாடி.

ஆனால், ஒரு ஆண், தனது பெண் என்று கருத்துபவளை விடுதலை செய்யாதவரை அவன் முழுமை அடைந்தவனல்லன். அவன், அவளை அடிமையாக அல்லது தலைக்குப் பின் ஒளிவட்டம் சூழும் சன்னியாசினியாகக் கருதாது, தன்னுடன் முழுமையாக இயைந்து இயங்கும் ஒரு உயிரோட்டமுள்ள பிரகிருதியாக நினைக்க வேண்டும். பாலுறவில் அவளைத் தன்  சிநேகிதியாக அவன் பாவித்து நடந்துகொள்ள வேண்டும்.

உங்களுடையபொக்காசியோ 70’ல் அனிதா எக்பெர்க் விளம்பரப் பலகையில் அவரை சிற்றின்பத்தைத் தூண்டும் பெண்ணரசி என்று பிரம்மாண்டமாக சித்தரித்தது, ‘பெண் என்பவள் அவளுக்கான முழு உரு, ஆணின் பாலியல் அடிமை இல்லைஎன்னும் உங்கள் சித்தாந்தத்தை எடுத்துக் காட்டவா?

 ஆம். செக்ஸ் பற்றிய கட்டுக்களில் அடங்கிக் கிடைக்கும் ஆண், அந்தப் பிரும்மாண்டப் பெண் உருவைப் பார்த்து ஏங்கி, தனது வேஷங்களைக் களைந்து, அவளை அடைய வேண்டும் என்கிற வெறி தலையெடுத்து, அவன் தனது கனவுகளில் புரள வேண்டும். இந்த மீமிசைக் கற்பனையில் (Fantasy) அவன் மூழ்குவது தவிர்க்க இயலாது.

அப்படியென்றால் இன்று பாலுணர்வுச் சுதந்திரத்தைப் பரப்பும் திரைப்படங்கள், பத்திரிகைகள், இரவு விடுதிகள் ஆகியவை ஓர் ஆரோக்கியமான போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்று நீங்கள் வரவேற்கிறீர்களா? நிர்வாண ஓவியங்களும் கூடப் பரவ ஆரம்பித்துவிட்டன.

அவை எல்லாம் நல்லதற்கே. தெளிவற்ற புதிர் மூடிய திரைகளைக் கலைத்துவிட்டு, ‘பாலுணர்வு தீங்கு’ என்ற பிரமையை அவை ஒழிக்கின்றன. சிறையிலிருக்கும் ஓர் ஆண், பெண்ணின் அவயவங்களை நினைத்து எப்படித் தடுமாறுகிறான்? விடுதலை பெற்றதும் அவன் நேராகத் தன் சிநேகிதியைத் தேடிச் செல்லுகிறான். அப்போது அவனது மனதில் நிரம்பியிருப்பது இந்தத் தீங்கு என்று கற்பிக்கப்பட்ட பாடங்களே. பெண்ணுடலைத் தீண்டியிராத காலத்தைத் திரும்பப் பெரும் முயற்சியாக அவன் அவளுடன் இன்பம் தேடுகிறான். அவனது ஆசைகள் தளர்ந்து போகும் சமயம் மறுபடியும் அவன் தன் திரைகளுக்குள் போய் சரணடைந்து விடுகிறான்.

ஒரு நிர்வாணப் பெண் அவளைப் பற்றிய மர்மங்களையும் இழந்துவிடுகிறாள் என்கிறீர்களா?

பார்வைக்கு இலக்காகும் மர்மங்கள் மட்டும். அவள் நம்மில் பாதி என்ற நிலையில் ஆடைகளை அணிவித்து மூடுவது என்பது யாருக்கும் கிட்டாத சம்பத்தை பூமிக்கு அடியில் ஒளித்து வைப்பதற்குச் சமம்.

உங்கள் படங்களில் வரும் பெண்கள், மோகம் எழுப்புபவர்களாக, இரையாகிறவர்களாக, வேட்டைக்காரிகளாக, அல்லது துறவியாகத் தோற்றமளிப்பதில் உங்களின் செயலூக்கத்தை இழந்த ஆண் கதாபாத்திரங்களைக் காட்டிலும் உயிரோட்டம் உள்ளவர்களாகக் காணப்படுகிறார்களே, அது ஏன்?

என் பெண் பாத்திரங்கள் – அனிதா எக்பர்க்கோ, ஸாந்த்ரா மைலோவோ – படைப்பதற்குச் சவாலாய் இருக்கிறார்கள். ஒரு பெண், ஆணை விட கபடம் மிக்கவளாக விலகிச் செல்பவளாக பாலுணர்வைத் தூண்டுபவளாக ஊக்குவிப்பவளாக இருக்கிறாள்.

லா டோல்ச்சே விட்டாவில் வசீகர அழகிக்கான பாத்திரத்திற்கு, திரையுலக வாழ்வின் கடைசிப் படியில் நின்று கொண்டிருந்த, அனிதா எக்பெர்க்கை தேர்தெடுக்க உங்களைத் தூண்டியது எது?

நான் மனதில் உருவாக்கிக் கொண்டிருந்த சித்திரத்தை முழுமையாக அவள் நிவர்த்தி செய்தாள். அவ்வளவுதான். அவளுடைய கடந்த காலப் பின்னணி முற்றிலும் தேவையற்றது.

அதற்கு முன் ஹாலிவுட்டில் பெரிதாக எதுவும் சாதிக்காத அவரை எப்படி அகில உலக செக்ஸ் அவதாரமாக நீங்கள் மாற்றினீர்கள்?

அவளிடமிருந்த பாலுணர்வைத் தூண்டும் நுண்ணிய சக்தியை என்னால் உணர முடிந்தது. இதில் ஒன்றும் வினோதமாக எதுவும் செய்து விடவில்லை. நான் மற்ற நடிகர்களிடம் வெளிக்கொணர்ந்த திறமையைத்தான் எக்பெர்க் விஷயத்திலும் செய்தேன்.

அது எப்படி?

நல்லது. நான் கற்பனை செய்து வைத்திருக்கும் பாத்திரத்துக்கான நபர் – அது தெருவில் திரிபவராக இருந்தாலும் சரி, அல்லது திரையுலகில் அனுபவம் பெற்றவராயிருந்தாலும் சரி – நான் கூறுவது எல்லாம், சகஜமாக சாதாரணமாக இரு, உன்னிடம் உள்ள மனத் தடைகளை உதறி விடு, டெக்னிக்குகளைப் பற்றிக் கவலைப்படாதே என்பதுதான். அவர்கள் தங்கள் இயல்பான நடை உடை பாவனைகளுடன் சிரித்துக்கொண்டும் கோபித்துக்கொண்டும் அழுதுகொண்டும் இருக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பேன். அதாவது அவர்களிடம் இயல்பாகப் படிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதுதான் என் வேலை.

ஒவ்வொருவரிடமும் கலைக்க முடியாத உள்ளொளி ஒன்று இருக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானது. அபூர்வமானது. போலியில்லாதது. அனிதா எக்பெர்க்கிடமும் ஸாந்த்ரா மைலோவிடமும் அது இருந்தது. சூழ்நிலை சரியாக அமைக்கப்பட்டால் யாரிடமிருந்தும் அவர்களது சந்தோஷ, துக்க,கோப உணர்ச்சிகளை அவர்களின் சொந்த பாணியில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கொண்டு வந்துவிடலாம். ஒரு பாத்திரத்தின் இயல்பை நான் யாரிடமும் திணிப்பதில்லை. அதே மாதிரி அவரது உழைப்பைக் கட்டுப்படுத்துவதில்லை. மாறாக அந்தப் பாத்திரத்துக்கு அவர் மேலும் வலிமை சேர்க்கிறாரா என்று பார்த்துக் கொண்டிருப்பேன். இதனால் என் பாத்திரங்கள் செழுமையாகவும் திருப்தி தருவனவாகவும் அமைந்து விடுவதாக நான் நினைக்கிறேன். அதனால், பார்வையாளர் அந்தப் பாத்திரத்தில் தன்னை இனம் கண்டுகொள்வது நடந்து விடுகிறது.

பெரும்பாலான நடிகர்கள் ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்க பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அல்லது வேறு யாரோ ஒரு பிரபலத்தைப் போல நடிக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். ஆனால், நீங்கள் நடிகர்களே அவர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்கிறீர்களே?

அப்படியில்லை. ஒருமுறை தன்னையே அலசிப் பார்க்கும் பயிற்சி ஒருவருக்கு இருந்தால், வெளியுலக உதவி அவருக்குத் தேவைப்படுவதில்லை. இந்த சுயபரிசோதனை அவரது நடிப்பைச் செம்மைப்படுத்துகிறது. முக்கால்வாசி நேரம் ஒரு நடிகரின் சொந்தக் குணம் அவர் செய்யும் பாத்திரத்துக்கு ஓரளவுதான் ஒத்துப்போகும். அப்போது நான் அவரிடம் பாத்திரத்தின் முன் இயல்பாக இருப்பதைக் குறைத்துக்கொள்ளச் சொல்கிறேன். ஒரு சமயம் நடிகரிடம் பாத்திரத்தின் குணத்தோடு முழுக்க முழுக்க அவரின் குணம் ஒத்துப்போனால் கூட அவரிடம் இயல்பாக இருப்பது பற்றி பேசுகிறேன். முழுக்க முழுக்கத் தன்னையே பாத்திரத்தில் பிரதிபலிப்பதும் ஆபத்தாகவும் சில சமயம் அதிகப் பிரசங்கித்தனமாகவும் ஆகிவிடும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது பாத்திரத்தின் உருவாக்கத்தைப் படிப்படியாக நிலைநாட்டும் விதத்தில் நடிக்குமாறு கூறுகிறேன். அவருடைய ஆழ்மனதின் நடமாட்டமும் எதிர்வினையும் அவர் பாத்திரத்துடன் ஒன்றிவிட, நடிகராக அவருடைய தனித்துவம் ஒரு வியக்கத்தக்க சாதனையை ச் சுட்டிக்காட்டும். பிரசவ வலிக்கு நிகராக அவர் நடிப்பை வெளிக்கொணரும் போது அவருடைய ஆற்றலும், சினிமாவின் தொழில்நுட்பமும் ஒன்றுக்குள் ஒன்று கரைந்து ஆழ்ந்த பரவச நிலையை உருவாக்கும். ‘8 ½’ படத்தில் கதாநாயகன் கிடோவாகத் தன்னைப் பாவித்து ஒன்றி நடித்த மார்சலோ மாஸ்ட்ரியான்னியின் சிகர நடிப்பு ஓர் உதாரணம்.

ஆக, அந்தப் படம் மற்றவர்கள் கூறுவதைப் போல உங்கள் ஆன்மிக சுயசரிதமா?

ஆம். நான் என்னைப் பற்றியும் என் அந்தரங்க ரகசியங்களைப் பற்றியும் ஒரு கதை எழுதினேன். பின்பு என்னை அப்படியே பிரதிபலித்து உள்வாங்கிக்கொண்ட ஒரு மனிதனைக் கண்டேன். அவன் என் கற்பனையின் மறுபிறவி என்று நினைத்தேன். படப்பிடிப்பு அரங்கில் ஒருவித பிடிபடாத சூழல் ஏற்பட்டது போல எனக்குத் தோன்றிற்று. என்னைச் சுற்றி உடலற்ற உருவம் சுழலுவதாக நம்பினேன்.

உங்களுக்கு மார்சலோவுடன் நெருங்கிய பழக்கமா?

நாங்கள் படப்பிடிப்புக்கு வெளியே அதிகம் சந்தித்ததில்லை. என்றாலும் எங்களிடையே ஒருவித அன்னியோன்னியம் நிலவியிருந்தது. ஒரு ஆளுயுரக் கண்ணாடி, “நீதான்…. இல்லை நீ இல்லை…” என்று சொல்வது போல் மிக விசித்திரமானது. எங்களிருவருக்குமான தோழமையின் அடிப்படை இது. ஆனால், அவர் எளிமையும் திறமையும் மிக்க மனிதர் – துள்ளாட்டம், பாசாங்கு, பேதைமை என்று காட்டுவதில் என் தம்பியைப் போல. அவரது தொழில் திறமையின் உபாசகன் நான். அவர் ஒரு மகத்தான நடிகர்.

நீங்கள் வேறு நடிகர்களிடம் இத்தனை ஈடுபாட்டுடன் பணி புரிந்திருக்கிறீர்களா?

இல்லை. ஆனால், எனக்கு எல்லா நடிகர்கள் மீதும் பிரியம் உண்டு. ஏனெனில், அவர்கள் என் கைப்பாவைகள்! அவர்கள் உலகின் மிகச் சிறந்த நடிகர்கள். நான் வெகு மூர்க்கமாக அவர்களை ஆதரிப்பவன்.

உங்கள் மனைவி ஜூலியட்டா மாசீனா உங்கள் படங்களில் நடித்திருக்கிறார். உங்களது குடும்ப உறவால் அவரை இயக்குவது உங்களுக்கு எளிதாய் இருந்ததா? அல்லது கஷ்டப்படுத்தியதா?

இரண்டுமே! நாங்கள் வேலை செய்யும் போது அவள் ஒரு லட்சிய நடிகை. பொறுமை, கீழ்ப்படிதல், சாந்தம், தீவிரம் அனைத்தும் கொண்ட நடிகை. கஷ்டப்படுத்துவது அவளல்ல – நான்தான். மற்ற நடிகர்களைக் காட்டிலும் அவளிடம் நான் பொறுமை இழந்தவனாக இருப்பேன். நான் நினைப்பதை அவள் வெளிக்கொணராவிட்டால் நான் எரிச்சலைடைந்து விடுவேன். அவளுடன் சேர்ந்து நான் செய்யும் படத்தில் எனக்கு அவள்தான் முதன்மையான பாத்திரம். மற்றவர்கள் நினைவில் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேருவார்கள். ஆனால், அவள்தான் நடுநாயகமாக இருப்பாள். எனவே, அவள் மீது எரிச்சலடையும் போது, “ஜூலியட்டா ! நீதான் முதலில் பிறந்தவள். மற்றவர்கள் எல்லாம் உனக்குப் பிறகுதான். என் மனதில் மற்றவர்களை விட நீதான் வெகுநாள் குடியிருக்கிறாய். நீ ஏன் சரியாகச் செய்யமாட்டேன் என்கிறாய்?” என்று கேட்க வேண்டும் போலிருக்கும்.

உங்கள் அபிப்பிராயத்தில் அவர் சிறந்த நடிகையா?

மிகச் சிறந்த நடிகை! அவள் என் மனைவியாக இல்லாமல் இருந்திருந்தால்கூட அவள் நடிப்பின் மீது என் நாட்டம் இருந்திருக்கும். அவளது மிமிக்ரி எனக்கு மிகவும் பிடிக்கும். அவளது உருண்டை முகம், மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அருமையாக எடுத்துக் காட்டும். அவளுடைய மென்மையும் நுண்மையான பண்பும் என்னை மிகவும் ஆகர்ஷிப்பவை. அவளது ‘பாணி’ என்னால் உருவாக்கப்பட்டது. அவள் மனிதத் தன்மை கொண்ட வித்தியாசமான பெண்.

மனைவியாக?

நிறைய இருக்கின்றன. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அது கஷ்டமாக இருந்தாலும் சொல்கிறேன், நாங்கள் வெகுகாலமாகச் சேர்ந்து வாழ்கிறோம். அன்றொரு நாள் ஒரு படப்பிடிப்பில் எங்கள் இருபத்தியொன்றாவது திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருந்தோம். இருபத்தியொரு வருடங்கள்! ஆனால், இதுவும் அவ்வளவு நீண்ட காலம் இல்லைதான். இன்னும் நாங்கள் தேடிச் செல்ல வேண்டியவை ஏராளமாக உள்ளன. நாம் எதை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்?

உங்கள் மனைவி….

அவள் மென்மையும் பரிவும் அக்கறையும் கொண்ட பெண்மணி. படப்பிடிப்பில் இருக்கும் போது என் காலுறை ஈரமாக இருக்கிறதா என்று விசாரிப்பாள். இந்தப் பெண்கள்தான் எப்படி என்று உங்களுக்குத் தெரியுமே! அவள் என் மனைவி மட்டுமல்ல, என் ஊக்கத்தின் வேர். கடந்து சென்ற வருஷங்களில் அவள் எனக்குக் கிரியா ஊக்கியாக இருந்திருக்கிறாள். அவள் எனது சில உணர்வுகளின், சில மனநிலையின், சில நடத்தைகளின் குறியீடு. எங்கள் வாழ்க்கையுடன் இணைந்த எங்கள் சந்தோஷம், துக்கம், கண்ணீர், சிரிப்பு – இவைகள்தான் என் படைப்புகள் உருவாகக் காரணம்.

உங்கள் வேலையில் அவர் எவ்வளவு தூரம் உதவி புரிந்திருக்கிறார்?

கதிரவனும் மழையும் நிலத்திற்கு போல அவள் என் வாழ்க்கையை அமைத்துத் தருகிறாள். நான் நிலத்தில் பதிக்கும் விதைகள் செடியாகின்றன. அவற்றிலிருந்து எப்போதாவது என் திரைப்படங்கள் என்னும் மலர்கள் உருவாகின்றன.

உங்கள் உவமையைப் பின்பற்றிக் கேட்க விரும்புகிறோம்: எங்கிருந்து இந்த விதைகள் வருகின்றன?

எனக்குப் புலப்படுவதில்லை. திடீரென்று எங்கிருந்தோ ஒரு ஐடியா வருகிறது. அதை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். வாரங்கள், மாதங்கள், வருஷங்கள் கழித்து அது உருவம் பெறுகிறது. அதன் மேல் என் திரைக்கதையை ஆரம்பிக்கிறேன்.

புகைப்படங்களில் காணப்படும் உருவங்கள் உங்கள் படத் தயாரிப்புக்கு ஓர் ஊக்கியாக இருப்பதால் அவற்றை ஆழ்ந்து கவனிக்கிறேன் என்று ஒரு முறை சொல்லி இருக்கிறீர்கள்?

அது எனக்கு ஒரு சடங்கு போலப் பழக்கமாகிவிட்டது. நான் ஒரு திரைப்படம் எடுக்கும் போது நூற்றுக்கணக்கான தேர்வுக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான முகங்களைப் பார்க்கிறேன். இப்புகைப்படங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. என் பாத்திரங்களுக்கான முகங்களைத் தேடும் போது இவற்றை உபயோகிக்கிறேன்.

ஒரு படம் ஆரம்பிக்கும் போது அதைத் தள்ளிக்கொண்டே போவதாகவும், ஒரு கட்டத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை உங்கள் மீது திணிக்க வேண்டியிருக்கிறது என்றும் சொல்கிறார்களே?

உண்மை அதுவல்ல. போகவும் இந்தத் ‘தள்ளிப் போடலுக்கு’ நான் மட்டுமே காரணம் இல்லை. வெளி விவகாரங்கள் – உதாரணமாக தயாரிப்பாளரைக் கண்டுபிடிப்பது, அல்லது ஒப்புக்கொண்ட ஒரு தயாரிப்பாளர் திடீரென்று உங்கள் மீது நம்பிக்கை இழந்துவிடுவது – இவையெல்லாம் என் அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல. ஆனால், தள்ளிப்போடுவது எனக்கும் நன்மை பயக்கிறது. படம் எடுப்பதற்கான சூழல் அமைய நான் மிகவும் மெனக்கெடுகிறேன். நல்ல சூழ்நிலை என்பது என் படைப்புகள் உயிருடன் நடமாட ஆக்சிஜன் கூடாரம் கிடைப்பது போல. கையெழுத்துப் பிரதி, உடைகள், புகைப்படங்கள், ஓரிடத்துக்குப் போய் வருவது, ஒரு பெண்ணைச் சந்திப்பது, தயாரிப்பாளருடன் சண்டை போடுவது, அலுவலகத்தை மாற்றுவது, வீட்டைச் சுற்றி வெட்டியாக நடப்பது என்று எவ்வளவோ ரகளை. ஒரு படம் உருவாகும் போது நான் ஓயாமல் சிந்திக்கிறேன். நான் இயக்கும் படம் நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த உருவத்திலிருந்து மாறுபடலாம். முதல் இரண்டு மூன்று வாரங்களிலேயே அது உயிர்பெற்று நடமாடத் துவங்கி விடுகிறது. அதன் பின் நான் அதை இயக்குவதில்லை. மாறாக அது என்னை இயக்குகிறது. என்னை அதன் பக்கம் இழுத்துக்கொள்கிறது.

நீங்கள் படம் எடுக்க ஆரம்பிக்கும் முன்னேயே உங்கள் கையெழுத்து படிவத்தை விரிவுபடுத்தி வைத்துக்கொள்வதாகவும் போகப்போக காட்சிகளையும் வசனங்களையும் முன்னேற்பாடு எதுவும் இன்றிச் செய்வதாகவும் ஒரு கருத்து உலவுகிறது.

நான் கலாரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தற்கொலை செய்துகொள்ள இதைவிடச் சிறந்த வழி வேறெதுவும் கிடையாது. நான் படப்பிடிப்பு அரங்கிற்கு வரும் போது கையில் ஒரு கையெழுத்துப் பிரதி வைத்திருக்கிறேன். இது நடிகர்களுக்கு உதவும் பொருட்டு என் கையில் இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கும் கையில் ஏதோ விஷயம் வைத்திருக்கிறான் என்ற நம்பிக்கையை இது ஊட்டுகிறது. உண்மையில் நான் செய்வது எல்லாம் என் வசமுள்ள யோசனையை, எப்படிப் படம் எடுக்க வேண்டும், நான் எதிர்பார்ப்பதை அப்படம் அளிக்க என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும் என்பதுதான். அரங்கை அடைந்ததும் காமிரா ஓட ஆரம்பிக்கிறது. எங்காவது மாறுதல்களை புகுத்த வேண்டுமென்றால் அவசியத்துக்கு ஏற்ப நடிப்பை மெருகேற்ற முயலுகிறேன். ஏதோ நான் முதன்முதலில் நினைத்துவிட்டதால் அதைக் கண்மூடித்தனமாக, ஒரு வெறியுடன், ஒரு பரிசுத்த வேதம் என்று பின்பற்றமாட்டேன்.

நீங்கள், “எனக்கு சிவப்பாக, நீலக் கண்களுடன், ரோஜா நிறக் காதுகளுடன், பொன்னிற முடியுடன், ஏழு பவுண்டு மூன்று அவுன்சு எடையுடன், சிறந்த விரல்களுடன் குழந்தை பிறக்க வேண்டும்!” என்று சொல்ல முடியாது. நீங்கள் மணந்துகொண்ட பெண்ணுக்கு பிரசவ சமயத்தில் உதவி புரியலாம். ஆனால், குழந்தை எப்படிப் பிறக்கிறதோ அப்படித்தான் இருக்கும். அது உங்களுக்கு விதிக்கப்பட்டது. குழந்தை பிறக்கும்போது, “அதற்கு நீலக் கண்கள் இல்லை. அது கருப்பைக்குள் போகட்டும்” என்று நீங்கள் கூற முடியாது.

படம் எடுக்க ஐந்து மாதங்களுக்கு முன்பு பத்து பக்க வசனம் எழுதிய போது யார் நடிக்கப் போகிறார்கள் என்று தெரியாது. எந்த மொழியில் படம் எடுக்கப்படும் என்பதுகூட. எங்கே எடுக்கப்படும் என்றும் தெரியாது. அந்தக் காட்சி ஒரு பூங்காவில் நடப்பதாக எழுதியிருப்பீர்கள். ஆனால், வரும் நடிகரும் அவரது முக பாவனையும் பார்க்கில் அந்த வசனத்தைப் பேசச் சரியாக இருக்காது. அல்லது ஒரு நடிகை அணிந்திருக்கும் உடை அவள் வசனத்துக்குப் பொருத்தமாக இல்லாமல் இருக்கும். அதே போல இரு நடிகர்களுக்கு இடையே பேச வேண்டிய வசனத்தின் போது, நீங்கள் க்ளோசப்பில் ஒரு நீரூற்று அல்லது காணக்கிடைக்காத அபூர்வமான ஒரு மரச்சாமானை எடுக்கிறீர்கள். அந்தக் காட்சிக்கும் அவ்விரு நடிகர்கள் பேச வேண்டிய பத்து பக்க வசனத்தை அர்த்தம் இழந்த சப்தமாக்கி விடும். இதனால்தான் நான் முன் முடிவுகளோடு படம் இயக்குவதில்லை என்று கூறுகிறேன். எவ்வித ஆயத்தமின்றி இயங்குவது எனக்கு சுலபமாயிருக்கிறது.

ஒரு படம் எடுத்து முடிந்ததும் எப்படி உணருகிறீர்கள்? தேங்கிப் போய்விட்டவராக, இயங்கும் சக்தியை இழந்தவராக உணர்ந்திருக்கிறீர்களா?

என்னவொரு வினோதமான கேள்வி! என்னைப் பொறுத்தவரை ஒரு படம் திடீரென்று முடிந்து விடுவதில்லை. அது ஒரு எதிரொலியை அல்லது அடிச்சுவடை ஏற்படுத்துகிறது. அதில் நான் வாழ்கிறேன். படம் முடிந்தாலும் அது என் கூடவே இருப்பதாக, ஒலிப்பதாக உணருகிறேன். அம்மாதிரி உணர்வு என்னை விட்டு விலகும் போது புதிய சூழ்நிலை என்னை எதிர்கொள்கிறது. ஒரு புதிய வசந்தத்தை சந்திப்பது போல. புதிய படம் – அதன் புதிய நபர்களுடன், வளர்ச்சி பெற வேண்டிய கதையுடன் என்னை வந்தடைகிறது. நான் இதுவரை வெட்டியாகக் காலம் கழித்ததில்லை. நான் இயக்குனராக ஆன முதல் நாளைப்

போலவே இன்றைய தினத்தையும் புதிதாகச் சந்திக்கிறேன். நான் சிந்தனையில், தோல்வியால் கையாலாகாத்தனத்தால் பதிக்கப்பட்டவனா? இருக்கலாம். ‘8 ½’ படம் இந்த மாதிரி சிந்தனையைத் தோற்றுவித்தது. ஆனால், நான் காலாவதியாகி விடுவேன் என்று நம்பவில்லை. அப்படி ஏற்பட்டால், நான் பேசுவதை நிறுத்திவிடுவேன். ஆனால், இப்போதும் உற்சாகத்துடனும் படைப்பூக்கத்துடனும் நடமாடி வருகிறேன்.

நீங்கள், உங்கள் படம் உட்பட யாருடைய படத்தையும் பார்ப்பதில்லை என்பது உண்மையா?

ஆமாம். உண்மைதான். நான் ஒரு படத்தை முடிக்கும் போது அடுத்த படத்துக்கான உருவம் எழுந்து விடுகிறது. அது ஒரு பொறாமை பிடித்த காமக்கிழத்தி போல. அது போக நான் நிகழ்காலத்தில் வாழ விரும்புகிறேன். கடந்த காலத்தில் அல்ல. மற்றவர்களின் படத்தை எப்போதாவது பார்க்கிறேன். நான் படங்களைப் பார்ப்பதைவிட அவற்றை உருவாக்குவதை மிகவும் விரும்புகிறேன்.

நீங்கள் நிச்சயம் உங்கள் சமகாலத்தவரின் படங்களைப் பார்த்திருப்பீர்கள்.

சில அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு சில படங்களைப்  பார்த்திருக்கிறேன்.

குரோசாவாவின் படங்கள்?

அவருடைய ‘செவன் சாமுராய்’ மட்டும். அவர் இன்று உயிருடன் இருப்பவர்களில் சினிமா பற்றி முழுமையாக அறிந்த சிறந்த மனிதர். அவர் கதை சொல்லும் விதத்தைப் பார்க்கையில் என் உடன் பிறந்தவரைப் போல எனக்குத் தெரிகிறார்.

இங்மர் பெர்க்மன் பற்றி?

அவர் மீதும் அவர் படைப்புகள் மீதும் பெரும் மரியாதை வைத்திருக்கிறேன். அவருடைய எல்லாப் படங்களையும் நான் பார்த்ததில்லை. அவரது தொழிலில் அவர் தலை சிறந்தவர். இரண்டாவதாக அவரது படைப்புகள் புதிர்கள் நிறைந்தவை. முரண்களில் திளைப்பவை. ஆகவே, அவரால் பார்வையாளர்களை அயர வைக்க முடிகிறது. அதனாலேயே மற்றவர்களை பற்றிப் பேசும் அருகதை அவருக்கிருந்தது. மற்றவர்களும் அவற்றை செவிமடுக்கிறார்கள். பழம் பெரும் கலைஞராக அவர் ஓர் அறையில் நடுநாயகமாக அமர்ந்து பார்வையாளர்களுக்கு கதைகள் சொல்லி, பாடல்களை இசைத்து, கிடாரை மீட்டி, கவிதைகளை வாசித்து, எவரையும் கவர வல்லவர். உங்கள் கவனத்தை எளிதாகக் கவரும் மந்திரவாதியைப் போன்றவர். நீங்கள் அவருடைய கருத்துக்களுடன் ஒத்துப் போகாவிட்டாலும் அவர் பேச்சின் வசீகரம் உங்களைக் கட்டிப் போடும். அவர் பேசும் விதமும் உலகைப் பார்க்கும் தீவிரமும் உங்களைக் கவர்ந்திழுக்கும். சினிமாக் கலையை முற்றிலுமாகக் கற்றுணர்ந்த மேதை அவர்.

அன்டோனியானி?

அவரது சீரான நோக்கம், ஆழ்ந்த நேர்மை, சமரசம் செய்துகொள்ளாமை ஆகியவற்றால் நான் கவரப்பட்டவன். அவருடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது. அவரது திரைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு மறுக்கப்பட்டன. சமரசத்துக்கு உடன்படும் வேறொருவர் என்றால் இவ்வளவு துன்பங்களை சந்தித்திருக்க மாட்டார். ஆனால், அன்டோனியானி தனது தனித்த பாதையில் தான் நம்புவதைச் செய்து பயணித்தார். அவரைப் பிற்காலத்தில் பெரும் மேதை என்று கொண்டாடினார்கள். இது என் மீது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. தான் என்ன சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த கலைஞன் அவர். அது மிகவும் முக்கியமானது.

ட்ரஃபால்ட்?

சங்கடமாக இருக்கிறது. அவருடையது எதையும் நான் பார்த்ததில்லை. மன்னிக்கவும்.

டி ஸீகா?

சாதனை மன்னர். அவரது நடிகர்களின் தலைவர். நவயதார்த்த உலகின் பின்புலத்தில் எழுந்து வந்தவர். மிகச் சிறந்த இயக்குனர். சில சமயங்களில் மற்றவர்களால் அடைய முடியாத உயரத்தைத் தொட்டவர். அதற்கு காரணம் அவரது போர்க் காலப் பின்னணி அவருக்குத் தந்த கௌரவம்.

சில விமரிசகர்கள் உங்களை நவயதார்த்த இயக்குனர்களுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?

ஆம். அறுபதுக்களின் நவயதார்த்தத்தைச் சேர்ந்தவன்தான் நான். நாற்பதுக்களில் இருந்த ரியலிசத்துக்கு முற்றிலும் வேறுபட்டு நாங்கள் நின்றோம். நாங்கள் பெரும் லட்சியங்களுடன் உள்ளே வந்து காயம்பட்டு நைந்து போயிருந்த சமயம். அப்போது நவயதார்த்தம் திரைப்பட உலகைக் கவ்வி, கட்டுப்பாடுகளுக்குள் சிதைந்து கிடந்த கலைஞர்களை விடுவித்து, அவர்களை உயர்ந்த பீடத்துக்கு இட்டுச் சென்றது. மக்கள் சினிமாவை ஆளுவதைத் தடுத்து நிறுத்தி, சினிமா மக்களை ஆளும் நிலைக்கு மாற்றத்தைக் கொண்டு வந்தது. நவயதார்த்தம் சினிமாவுக்கு சுதந்திரத்தைத் தர முடிந்ததும், சினிமாக் கலைஞர்கள் ஒரு தூரிகை அல்லது பேனாவைப் போல் சினிமா மீடியத்தை உபயோகித்தார்கள்.

லா டோல்ச்சே விட்டாவெளியான பிறகு அமெரிக்காவிலிருந்து வெள்ளம் போல் உங்களுக்குத் திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஹாலிவுட்டில் நீங்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என்று நினைத்தீர்களா?

முடியாதுதான். இருந்தாலும் முயன்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அமெரிக்கப் பயணத்தின் போது என் கவனத்தைக் கவர்ந்தவற்றைப் பற்றி ஒரு படம் செய்யலாம். நான் எப்படி எடுக்க வேண்டும் என்று சரியாக முடிவெடுத்தாலும், உருவாக்கப்படும் படம் என்னை சங்கடத்துக்கு உள்ளாக்கித் தோல்வியைத் தரும் என்றே நினைக்கிறேன்.

ஏன்?

இத்தாலியில் நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெளிவாகத் தெரியும். என் நடிகர்களை இயக்குவது பற்றி, சூழ்நிலைகளை எப்படி நம்பத் தகுந்த விதத்தில் சித்தரிப்பது என்பது பற்றி, நான் நடிப்பு பற்றிச் சொல்வதைப் புரிந்துகொண்டவர்களுடன் பேசுவது பற்றி எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கிறது. ஒரு எக்ஸ்ட்ரா நடிகைக்கு, ஒரு வரி கொடுத்து நடிக்கச் சொல்லிக் கற்றுக்கொடுத்த பின், அந்த ஒரு வரி வரும் சில நொடிக் காட்சிக்கு அவள் உண்மைத் தன்மை கொடுத்துவிடுவாள். ஆனால், இதையே ஒரு அறிமுகமற்ற கூட்டத்துடன், முன்பின் தெரியாத நாட்டில் எப்படி நிர்வகிப்பது? உதாரணமாக ஒரு பாஸ்டன் கார் டிரைவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் என்ன மாதிரி உடையணிந்து இருப்பான் என்றோ, ப்ராங்கில் உள்ள ஒரு மருந்துக் கடை கேஷியர் தன்னைத் திட்டும் ஒரு பெண் கஸ்டமரைப் பார்த்து எப்படிப் புன்னகை செய்து சமாளிப்பான் என்றோ, எனக்குத் தெரியாதே! தினத்துக்கு ஆயிரம் முறை நான் தவறுகள் செய்து என்னையே மாய்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஏனென்றால், திரைப்படவியல் ஒருவரின் திறமையின் உச்சத்தின் வெளிப்பாடு. எல்லாவற்றின் மீதும் எல்லோர் மீதும் கட்டுப்பாடு வைத்திருக்க வேண்டும்.

கதாநாயகியின் உள்ளாடை, கதாநாயகனின் மீசை, மேஜையின் இடது பக்கம் மட்டுமே வைக்கப்பட வேண்டிய தீப்பெட்டி என்று எல்லாவற்றின் மீதும் தீவிரக் கவனம் இருக்க வேண்டும். அமெரிக்காவில் இது எனக்குப் பெரும் தடைக்கல். இதனால்தான் ஒரு படைப்பாளி அவனது தாய்மொழி, கலாச்சாரம், அவனது சமூக மற்றும் நாட்டுப் பழக்க வழக்கங்கள் இவற்றில் ஊறியவனாக இருக்க வேண்டும். அதனால்தான் முற்றிலும் வேறுபட்ட அமெரிக்கா அல்லது இன்னொரு நாட்டில் கால்பதிக்க என்னால் முடியாது போலிருக்கிறது.

ஒருவேளை உங்களுக்கான சரியான விலை கிடைத்தால்?

பணத்தில் எனக்கு நாட்டமில்லை. பணம் கிடைத்தால் நல்லதுதான். ஆனால், அதன் மீது வெறிகொள்ள வேண்டியதில்லை. நான் ரோமுக்கு வரும் போது எனக்குப் பதினெட்டு வயது. ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன். மதிய உணவுக்கான பணம் என்னிடம் இருந்ததில்லை. எனக்கு உணவுதான் – பணமல்ல – முக்கியமானதாக இருந்தது. என்னிடம் பணமிருப்பதில்லை எப்போதுமே. காப்பி குடிக்கக்கூட நண்பர்களிடம்தான் கடன். பணம் தன்னை விரும்பாதவர்களிடம்தான் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறது. ஓரளவு என்னிடமும் இப்போது பணம் வரத் தொடங்கி இருக்கிறது!

உங்களுக்கான புகழும்கூட. இதிலும் நீங்கள் பற்றற்றவர்தானா?

தவிர்க்க முடியாத போது வேறு வழியில்லை. ஆனால், புகழ் ஒருவனின் நேரத்தையும் அந்தரங்கத்தையும் கபளீகரம் செய்ய முயலுகிறது. நான் ஓரளவு விளம்பர வேதாளங்களைத் தவிர்த்தாலும் ‘8 ½’ படத்துக்குப் பின் மேலும் மேலும் என் அந்தரங்க உலகை ஊடுருபவர்கள் அதிகமாகிவிட்டனர். நான் அமெரிக்காவுக்குச் சென்ற போது ஓர் இளம் பெண் மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்னிடம் இருப்பதாகக் கூறினாள்; என்னிடம் ஏதோ சமையல் குறிப்பு இருப்பதை போல. அவர்கள் எனக்குப் போன் செய்த வண்ணமாக இருந்தார்கள். ஓட்டல் தாழ்வாரங்களில் காத்துக் கிடந்தார்கள். என்னிடம் அவர்கள் எதிர்பார்க்கும் தாயத்துகள், விடைகள், அமுதம் எதுவும் இல்லையென்றேன். ஆனால், அவர்கள் நம்பவில்லை. நான் ஒரு இயக்குனர். துறவியோ மனநல மருத்துவரோ இல்லை. நான் என்ன செய்ய வேண்டுமோ அதை என் வேலையில் காட்டுகிறேன்.

முன்பொரு தடவை பேசுகையில் நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கையில் இருந்து தப்பிக்க விரும்புவதாகச் சொன்னீர்கள். இதில் வெற்றி கிடைத்ததா?

ஓரளவு. எனது இளமைப் பருவக் கல்வி பற்றிய குற்ற மனப்பான்மை ஓரளவு குறைந்துவிட்டது.

செக்ஸ்?

அல்லது நீதி போதனைகளைக் களைந்து உணர்ச்சிகளைப் புத்திசாலித்தனமாகக் கையாளுவது! இதில் நான் என்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டியதில்லை. குற்ற உணர்வுகள் எதுவும் இல்லாமல் புத்துணர்வுடன் இருக்கிறேன். ஆனால், முதிர்ச்சியாக நான் நடமாட வேண்டிய காலம் வந்துவிட்டது இல்லையா? என் வயதுக்கு ஒருவன் முதிர்ச்சி பெற்றவனாக நடமாட வேண்டியது அவசியம். ஆனால், இந்தப் புரிதல் உணர்வும் திடீரென்று ஒரு உணர்ச்சிப் பெருக்கில் நிலை குலைந்துவிடும் சாத்தியமும் இருக்கிறது.

ஒரு பெண்ணுடன்?

எனக்குத் தெரியாது, யாருடன் அல்லது எதனுடன் என்று. ஆனால், வாழ்வில் இதெல்லாம் நடக்கும் சாத்தியம் நிச்சயம் இருக்கிறது.

உங்களைப் பற்றிய நிச்சயம் உங்களுக்கு இருக்கிறதா?

நான் தற்பெருமையாக இதைச் சொல்லவில்லை. உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டேன். முன்பை விட அமைதியாக இருக்கிறேன். இளமையில் இருந்த வேகத்தையும் திறனையும் ஓரளவு இழந்துவிட்டேன். ஆனால், நம்பத்தகுந்த ஒரு மத இணக்கம் – என் உடன் பிறந்தது – என்னுள் இருக்கிறது. நான் அதிர்ஷ்டம் நிரம்பிய வாழ்வைப் பெற்றவன். அதனால், அதிக வலியையோ துக்கத்தையோ என் வாழ்வில் உணரவில்லை.

வயதாகிக் கொண்டிருப்பது பயத்தை அதிகரிக்கிறதா?

இல்லை.

சாவைப் பற்றி?

சாவு என்பது ஒரு வினோதமான நினைப்பு. அதைப் பற்றி நினைப்பதை விட பேசுவது கஷ்டமானது. நமக்கு உண்மையில் சாவு என்றால் என்னவென்று தெரியாது. ஆனால், அதை பற்றிய தெளிவற்ற பயம் நம்மை எப்போதும் கவ்வுகிறது. மரணம் ஒரு தொன்மையான கண்டம். அந்தத் தொலைவிலிருக்கும் இடத்தைப் பற்றி பலரும் பேசிக் கேட்டிருக்கிறோம். சிலர் சொல்கிறார்கள் அங்கு நிலம் இருக்கிறது என்று. பலர் இல்லை என்கிறார்கள். சிலர் அதை மிகவும் அழகான இடம் என்கிறார்கள். பலர் அதைத் தூஷிக்கிறார்கள். சிலர் அது இவ்வுலகைக் காட்டிலும் சிறந்தது என்கிறார்கள். மற்றவர்கள் வாழ்வதைவிடச் சிறந்தது வேறு என்ன இருக்கிறது என்கிறார்கள். சாவு மௌனம் பொதிந்தது. நாம் கடைசியாகப் போய்ச் சேர வேண்டிய இடம் அதுதான்.

அது உங்களை அச்சுறுத்துகிறதா?

ஆமாம். இல்லை. வாழ்க்கையைப் போல் சாவையும் ஒருவன் நேசித்து ஆர்வத்துடன் அரவணைத்துக் கொள்ள வேண்டும். பயத்துடன் அல்ல. இரண்டையுமே ஒரு நம்பிக்கையுடன் நெருங்கக் கூடாது. நம்பிக்கை எப்போதும் நாணயத்தின் மற்றொரு பக்கமான பயத்தை போற்றிப் பாடும். பற்றுதான் நமக்கு வேண்டும். நம்பிக்கை அல்ல. ‘எல்லாமே புனிதமானவை, அவசியமானவை, பயன்படுபவை, எல்லாமே நன்றாக நடக்கும்’ என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

“வாழ்க்கை மலட்டுத்தனமும் வறட்சியும் நிரம்பியது; நாமெல்லாம் தனித்திருப்பவர்கள்; ஒடுக்கப்பட்டவர்கள்” என்று ஒரு கலைஞன் நினைத்தால் அவனை நான் புரிந்துகொள்ள சாத்தியமில்லை. எல்லாவற்றையும் இவ்விதம் மறுதலிக்கும் அவன் எதற்காகக் கலையை உருவாக்கப் பிரயத்தனப்பட வேண்டும்?

அப்படியென்றால் ஆர்வமும் பற்றும்தான் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும் அருமருந்துகள் என்கிறீர்களா?

‘ஒரு முழு வாழ்க்கையை’ என்று வைத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி என்பது ஒரு தற்காலிக நிலை. துக்கத்துக்கு முன் வருவது. ஆனால், நம் அதிர்ஷ்டம் இன்று எதிர்மாறாக நடக்கிறது. ஒரு விதத்தில் இது எல்லாமே களியாட்டம் நிரம்பிய திருவிழாதானே?

ஸிந்துஜா <weenvy@gmail. com>

Amrutha

Related post