எட்வர்ட் ஆல்பி: சண்டைக்கார, ஆர்ப்பரிக்கிற, கோபக்கார, திறமைசாலியான (இன்னும் வேறென்ன வேண்டும்!) அமெரிக்க நாடகாசிரியர் 

 எட்வர்ட் ஆல்பி: சண்டைக்கார, ஆர்ப்பரிக்கிற, கோபக்கார, திறமைசாலியான (இன்னும் வேறென்ன வேண்டும்!) அமெரிக்க நாடகாசிரியர் 

ஸிந்துஜா 

 

“நான் ஒரு ஐரோப்பிய நாடக ஆசிரியன்தான் போலும்! பிராட்வேயில் நாடகம் நடத்தாத நாடக ஆசிரியர்கள் யார் யார் என்று பாருங்கள்: ஷேக்ஸ்பியர், மார்லோ, மோலியர், இப்சன், செக்காவ், பெக்கெட், ஜெனே! இவர்களில் ஒருவர் கூட பிராட்வே பக்கம் வரவில்லை!

 – 1991ல் அளித்த ஒரு நேர்காணலில் ஆல்பி.

 

ட்வர்ட் ஆல்பியின் உலகப் புகழ்பெற்ற நாடகமான ‘வர்ஜினியா உல்ஃபைக் கண்டு யாருக்குப் பயம்?’ வெளிவந்த போது ‘நியூயார்க் டைம்ஸ்’ அவரை, ‘நம்பிக்கை இழந்த ஒரு தலைமுறையின் நாடக ஆசிரியர்’ என்று வருணித்தது. அதற்குப் பின் உலகப் பிரசித்திப் பெற்ற பிராட்வே தியேட்டரில் அந்நாடகம் தொடர்ந்து பத்தொன்பது மாதங்கள் ஓடி பெரும் கவனத்தைப் பெற்றது.

அது ஒரு மூன்று மணி நேர மூவரங்க நாடகம். கெட்ட வார்த்தைகள், தொடர்ந்து மது அருந்துதல், பாலுறவு வர்ணனைகள் ஆகியவற்றில் அமிழ்ந்தெடுத்த இந்த நாடகத்தில் கல்லூரியில் வேலை பார்க்கும் நடுத்தர வயதினான ஜார்ஜும் அவன் மனைவி மார்த்தாவும் அவர்களது வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் கடித்துக் குதறிக் கொண்டும் (அநியாயத்துக்குக் கெட்ட வார்த்தைகள்!) ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்துகொண்ட ரகசியங்களை வெளியில் சொல்லி அவமானப்படுத்தியும் நடமாடுகிறார்கள்.

ஜார்ஜும் மார்த்தாவும் குடித்துவிட்டு ஒரு பார்ட்டியில் இருந்து தங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். ஜார்ஜின் உடன் வேலை பார்க்கும் நிக் என்பவனும் அவனது மனைவியும் ஜார்ஜின் வீட்டுக்கு வருகிறார்கள். சற்று நேரத்துக்குப் பின் நால்வருக்குமிடையே கருத்து மோதல்களால் வார்த்தை யுத்தம் நடை பெறுகிறது. இரண்டு ஜோடிகளும் அவரவர் துன்பங்கள், எதிர்கொண்ட நம்பிக்கைத் துரோகங்கள், அடிபணிய வைக்க மற்றவர்கள் செலுத்திய ஆதிக்கங்கள் பற்றி ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு நடமாடுகிறார்கள். நால்வரும் தங்கள் வாழ்வின் ரகசியங்களைப் பொது வெளியில் போட்டு உடைக்கிறார்கள். அப்போது குழந்தைப் பாக்கியம் இல்லாத ஜார்ஜ் தன்னுடைய ‘கற்பனை’க் குழந்தையைக் கொல்லப் போவதாக அறிவிக்கிறான். இறுதியில் மோதல்கள் முடிந்து ஜார்ஜும் மார்த்தாவும் தத்தம் வருத்தங்களைப் பங்கீட்டுக்கொள்ளும் ஜோடியாய் நின்று உலகைப் பார்க்கிறார்கள்.

இந்த நாடகத்திற்குக் கண்டனங்களும் புகழ்மாலைகளும் ஒரு சேர வந்தன. “நமது வாழ்க்கையைத் திரைகளற்று வாழ்வது எப்படி?” என்பதைத்தான் தான் சொல்ல முயன்றதாக ஆல்பி கூறினார். புகழ் பெற்ற அமெரிக்கத் திரைப்பட விமரிசகரான ஸ்டான்லி காஃப்மன், “சென்ற பத்தாண்டின் தலைசிறந்த நாடகம்; சமரசமில்லாது வாழ்க்கையின் போலித்தனங்களை உரித்துக் காட்டியிருக்கிறார் ஆல்பி” என்று புகழ்ந்தார்.

சிலரை அதிர்ச்சிக்கும் பலரை வியப்பிற்கும் இட்டுச் சென்ற இந்நாடகம் புதிய அமெரிக்க நாடக எழுத்தின் வரைமுறைகளை எழுப்பியது. நாடகத்தின் கூர்மையான வசனங்கள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றன. மதுவின் கிறக்கத்தில் மார்த்தா கூறுவதைக் கேளுங்கள்:

நானும் ஜார்ஜும் எப்போதும் எங்களுக்குள் கதறி அழுது கொண்டே இருக்கிறோம். என்ன செய்வது? நாங்கள் கதறுகிறோம். எங்கள் கண்ணீர் முத்துக்களைச் சேகரிக்கிறோம். ஐஸ் டிரேயில் அவற்றைப் போட்டு ஐஸ் பாக்சில் வைக்கிறோம். அவை கட்டி தட்டியதும் எங்களின் மதுக் குவளைகளில் போட்டு அருந்துகிறோம்!

அமெரிக்காவின் – குறிப்பாக மணமான அமெரிக்கர்களின் – பண்பற்ற வாழ்க்கை முறைகளைத் தன் கூர்மையான பார்வையாலும் எழுத்தாலும் ஆல்பி அவதானித்தார். இந்நாடகம் திரைப்படமாக வந்தது. படத்தில் நாடக அங்கத்தினர்களைப் போலத் தம் குடும்ப வாழ்வில் பூசல்கள் கொண்ட ரிச்சர்ட் பர்ட்டனும் எலிசபெத் டெய்லரும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்தார்கள்! இப்படம் வெளியாவதற்கு முன் சென்சார் அனுமதி கிடைக்கப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஆனால், பின்னாளில் இப்படத்தில் நடித்ததற்காக எலிசபெத் டெய்லருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

ஆல்பிக்குப் பெயரையும் புகழையும் இந்நாடகம் அள்ளித் தந்தாலும் அவர் அதைப் பற்றிக் குறிப்பிடுகையில், “என் கழுத்தைச் சுற்றிய ஆபரணமாக இது மிளிர்ந்தாலும் இதன் பளு தாங்க முடியாததாக இருக்கிறது” என்றார்.

புலிட்சர் விருதுக்கு தேர்வுக் குழு அங்கத்தினர்கள் இந்நாடகத்தைப் பரிந்துரைத்தார்கள். ஆனால், தேர்வுக் கமிட்டியில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகம், “இந்த நாடகம் அமெரிக்க வாழ்க்கையின் முழுமையைத் தரத் தவறிவிட்டது” என்று கூறி விருது தர மறுத்துவிட்டது. குடும்பத்தின் குலைவை, மெருகை அல்ல, நாடகம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறப்பட்டது.

அவ்வருடம் வேறெந்த நாடகமும் விருதுக்குத் தகுதியாக இடம் பெறவில்லை. கமிட்டியின் செயலை எதிர்த்து தேர்வுக் குழுவில் இருந்த பாதிக்கு மேற்பட்ட அங்கத்தினர்கள் பதவி விலகினார்கள். நான்கு பத்தாண்டுகள் கழித்து, ஏன் இன்றும் கூட, இந்நாடகம் அமெரிக்க நாடக சரித்திரத்தில் ஓர் மைல்கல் என்று கொண்டாடப்படுகிறது.

Edward Albee
டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மார்ச் 1971இல் பேசும் ஆல்பி. அவர் பேசுவதைக் கேட்க கூடியவர்கள்

‘வர்ஜீனியா’ நாடகத்துக்குப் புலிட்சர் விருது மறுக்கப்பட்டாலும் அதன் பிறகு. ‘நுண்ணிய சமநிலை’, ‘கடற்காட்சி’, ‘மூன்று உயரமான பெண்கள்’ ஆகிய மூன்று நாடகங்களுக்கும் அவருக்குப் புலிட்சர் விருது கிடைத்தது. ஆல்பி, உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியர்களான யூஜின் ஓநீல், டென்னஸி வில்லியம்ஸ், ஆர்தர் மில்லர் ஆகியோரின் வாரிசாகக் கருதப்பட்டார்.

இத்தகைய வியக்தியின் பின்புலம் எவ்வாறு இருந்தது?

ஆல்பி பிறந்த இரு வாரத்துக்குள் அவரை அமெரிக்காவின் தியேட்டர் சங்கிலி என்று விளங்கிய கீத் ஆல்பி நிறுவனத்தின் சொந்தக்காரர் ரீட் ஆல்பி தத்து எடுத்துக்கொண்டார். கீத் ஆல்பி பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து நாடு முழுவதும் தியேட்டர்களை உருவாக்கி நிர்வகித்தது. அவர்களின் நாடகக் குழுக்கள் ஊர் ஊராகச் சுற்றி மக்களிடையே நாடகம் நடத்தும் இயக்கத்தை வளர்த்தது. பின்னாட்களில் இந் நிறுவனம் திரைத்துறையிலும் கால் வைத்தது. இப்பின்னணியில் ஆல்பிக்கு இளமைக்காலம் தொட்டே நாடகங்களின் தொடர்பு உண்டாயிற்று. ஆனால், கலை மீது அவருக்கு ஏற்பட்ட காதலை அவரது வளர்ப்புப் பெற்றோர் ஆதரிக்கவில்லை. “அவர்கள் என்னை ஒரு கார்ப்பரேட் கொள்ளைக்காரனாக ஆக்க விரும்பினார்கள்!” என்றார் ஆல்பி. இதனால் அவருக்கு ஆரம்பம் முதலே அவர்கள் மீது ஈடுபாடு ஏற்படவில்லை.

ஆல்பியின் படிப்பு விவகாரமும் சுமுகமாக இருக்கவில்லை. ஒழுங்காக அவர் வகுப்புக்கு வருவதில்லை என்று இரண்டு பள்ளிகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார். பட்டப்படிப்பின் போது பாதியிலேயே வகுப்புகளுக்குச் செல்லுவதை நிறுத்திவிட்டார். இருபதாவது வயதில் குடும்பத்தை விட்டு வெளியேறினார். அவரது வளர்ப்புத் தந்தையை சாகும் வரை அவர் பார்க்கவில்லை. வளர்ப்புத் தாயையும் 17 வருடங்கள் கழித்துப் பார்த்தார். இருவரிடமும் அவர் சகஜமான உறவு கொண்டிருக்கவில்லை. அக் குடும்பத்தில் இருந்த வரை தனக்கு எப்போதும் ஓர் அறையில் அடைக்கப்பட்டு மூச்சுத் திணறும் உணர்வே இருந்தது என்று ஒருமுறை கூறினார்.

இதற்குப் பின் வந்த பத்து வருஷங்களை அவர் தனது வளர்ப்புப் பாட்டனார் கொடுத்த ஓர் சிறிய சொத்தை வைத்தும் சில இடங்களில் வேலை பார்த்து சம்பாதித்தும் வாழ்க்கையை ஓட்டினார். 1950களில் மன்ஹாட்டனில் நிலவிய கலை இலக்கியச் சூழ்நிலை அறிமுகப்படுத்திய பல்வேறு நுணுக்கங்கள் – இசை, தியேட்டர், திரை, இலக்கியம், ஓவியம் சார்ந்தவை – அவருள் கிளர்ச்சியை ஏற்படுத்தின. பலவித சோதனை முயற்சிகளுக்குப் பிறகு நாடகமே தனது இயங்கு தளம் என்று கண்டுகொண்டார்.

‘மிருகக்காட்சி சாலையின் கதை’ என்னும் அவரது முதல் நாடகம் பெர்லினில் அவரது முப்பதாவது வயதில் அரங்கேறியது. அதற்கு அடுத்த வருடம் அது பிராட்வேயில் நடைபெற்றது.

அரட்டையில் ஈடுபாடு உள்ள ஓர் மனிதன், பூங்காவில் உட்கார்ந்திருக்கும் போது அங்கு வந்த ஒருவரிடம் பேச்சுக் கொடுத்து, இறுதியில் அவனை வன்முறையில் ஈடுபடச் செய்கிறான். இதற்காக, மனிதனின் அந்நியமாதலை இரக்கமோ பயமோ இன்றி வெளிப்படுத்தியவர் என்று உலக அரங்கில் ஆல்பி புகழப்பட்டார். அமெரிக்க நாடக உலகில் அபத்த நாடகத்தைக் கொண்டு வரும் முயற்சியாக இது கருதப்பட்டது பிரசித்துப் பெற்ற எழுத்தாளர் நார்மன் மெய்லர் இது துணிச்சலான முயற்சி என்று பாராட்டினார்.

அமெரிக்கக் கனவின் விரக்தியான உள்கட்டு வித்தியாசமானது.  சுயபச்சாதாபம், அறிவுசார் இயங்குதலைக் கலைத்துப் போடுவது ஆகிய இரண்டு செயல்களும் மனிதரிடையே எவ்வளவு நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி விடுகின்றன என்பதை ஆல்பியின் நாடகங்கள் கவனத்தில் கொண்டன. மனித மனம் கொண்டுள்ள வக்கிரங்கள் வாய் வார்த்தைகளாக வெளிப்படுகையில் அவை கேட்பவர் மீது செலுத்தும் வன்முறையையும் அதிர்ச்சியையும் வலியையும் முதல் புலிட்சர் விருது (1967) பெற்ற ‘நுண்ணிய சமநிலை’ நாடகம் விவரிக்கிறது.

பணியிலிருந்து ஒய்வு பெற்ற கணவன், அவரது மனைவி இருவரும் ஒரு மாதிரியாகத் தங்கள் ஓய்வுக் காலத்தைக் கழிக்கிறார்கள். நான்காவது முறையாக விவாகரத்து பெற்ற அவர்களது பெண் அவர்களை வந்து அடைகிறாள். அந்த வீட்டில் வாய்த் துடுக்கு மிகுந்த மனைவியின் சகோதரியும் வசிக்கிறாள். பெண் வந்து சேரும் சமயம் அவள் பெற்றோரின் பழைய நண்பர்கள் வேறு – கணவனும் மனைவியும் – அங்கு வந்து தங்குகிறார்கள்.

இந்த நாடகம் மூன்று விதமான கருத்தோட்டங்களை உள்ளடக்கியிருக்கிறது. ஒன்று தடுமாற்றம். இது வாழ்க்கையின் இயல்பான கதியைப் பாதிக்கும் விஷயம். நாடகத்தில் வரும் மனைவி, தான்தான் குடும்பத்தைத் தங்குபவள் என்னும் ஆழ்ந்த நம்பிக்கையில் இயங்குகிறாள். ஆனால், குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் வெளியேயிருந்து வந்தவர்களும் அவ்வளவு எளிதாக அவள் கட்டுக்குள் அடங்க மறுக்கிறார்கள். இது அவளை மிகவும் தடுமாற்றத்திற்கு உள்ளாக்குகிறது.

இரண்டாவதாகக் கற்பனையில் வாழும் சுகம். ஆல்பியின் நாடகப் பாத்திரங்கள் நிஜவாழ்வின் கடுமையான தருணங்களிலிருந்து தப்பி ஓட விழைபவர்கள். இந்த ஓட்டத்துக்கு அவர்களுக்குத் துணை புரிவது மது. ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு பாத்திரமும் மதுவின் பிடியில் சிக்கி இருப்பதை பார்க்கும் போது மதுவே நாடகத்தில் ஒரு பாத்திரமோ என்கிற சந்தேகத்தை உண்டாக்குகிறது!

மூன்றாவது அச்சம். வெளியிலிருந்து வரும் ஜோடி அவ்வாறு திடீரென வரக் காரணமென்ன? இருட்டுக்குப் பயந்து வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நாடகத்தில் வரும் மனைவி, “அதனால்தான் இரவில் நாம் எல்லோரும் தூங்கி விடுகிறோம்!’ என்கிறாள். இருட்டு ஒருவிதமான வியாதி; அதை அவர்கள் இருவரும் தனது வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என்று அவள் குற்றம் சாட்டுகிறாள்.

 

ண் – பெண் உறவுகளின் சிக்கல்களினால் ஏற்படும் பிரச்சினைகளையும் போராட்டங்களையும் சித்தரிக்கும் ‘கடற்காட்சி’ நாடகம் (1975) ஆல்பிக்கு இரண்டாவது புலிட்சர் விருதை வாங்கித் தந்தது. அதீதக் கற்பனை, நகைச்சுவை, அங்கதம் இவற்றோடு கலந்த அபத்த நாடகமாக இது வெளி வந்தது.

இந்த நாடகத்தில் ஒய்வு பெற்ற ஒரு கணவனும் அவரது மனைவியும் அவர்களின் பிணக்குகள் பற்றி விசாரம் கொண்டு அவற்றை எப்படித் தீர்ப்பது என்று விவாதிக்கக் கடற்கரைக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் சந்திப்பது கடலிலிருந்து வெளிவரும் ஒரு ஆண் – பெண் மீன் ஜோடியை. மனிதர்களைப் போல அவை உயரமான உருவம் கொண்டிருக்கின்றன; அவைகள் நடந்துகொள்வதும் மனிதர்களைப் போல. அவை இரண்டும் மனித ஜோடியான கணவன் – மனைவியிடம் கடல் வாழ்க்கையில் தாங்கள் படும் துன்பம், சுவாரஸ்யமற்ற வாழ்க்கை ஆகியவற்றால் வெறுப்படைந்து கடலை விட்டு நிலத்துக்கு வர முடிவு எடுத்துள்ளதாய்க் கூறுகின்றன. இரு ஜோடிகளும் பேசி முடிக்கையில் மீன் ஜோடி நிலத்தில் வாழ்பவர்களுக்கு இவ்வளவு துன்பங்களா என்று கசப்புற்று மீண்டும் கடலுக்குள் செல்வதாகக் கூறுகின்றன. ஆனால், மனித ஜோடி அவைகளைத் தடுத்து நிலத்தில் வாழ அவர்களுக்கு வசதி செய்து தருவதாகக் கூறுவதால் அவை திரும்பிப் போகும் முடிவை மாற்றிக்கொள்கின்றன.

ஆல்பியின் இந்த நாடகம் வழக்கத்துக்கு விரோதமாக மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருந்ததாகப் பார்வையாளர்கள் கூறினார்கள். விமர்சகர்களும் நாடகத்தை வரவேற்று அதன் மகிழ்ச்சியான முடிவுக்காக ஆல்பியைப் பாராட்டினார்கள்.

ஆனால், இதற்குப் பின் வந்த ஆல்பியின் நாடகங்கள் விமர்சகர்களின் கண்டனங்களைத் தாங்கி வந்தன.

‘வர்ஜினியா உல்ஃபைக் கண்டு யாருக்குப் பயம்?’’ நாடகம் 2006இல் லண்டனில் அப்பல்லோ அரங்கத்தில் நிகழ்த்தப்பட்டபோது, பில் இர்வின் (ஜார்ஜ்), கேத்லீன் டர்னர் (மார்த்தா)

‘மூன்று கை மனிதன்’ என்னும் நாடகத்தை, ‘ஆல்பியின் பைத்தியக்காரத்தனமான படைப்பு’ என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ விமர்சகர் கிழிகிழியென்று கிழித்திருந்தார். ஆல்பியின் படைப்பு உலகம் இத்துடன் முடிவடைந்தது என்று பலரும் முடிவு கட்டினார்கள். அவர் ஐரோப்பாவில் நாடகத் தயாரிப்புகளுக்காக நேரத்தைச் செலவிட்டார். ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றி நாடக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

ஆனால், 1990களில் அவர் வாழ்க்கையில் மகத்தான திருப்பம் ஏற்பட்டது. பிராட்வேக்கு வெளியே இயங்கிய சிக்னேச்சர் தியேட்டர் கம்பனி 1993-94 நாடக சீசனை ஆல்பியின் படைப்புகளுக்காக மட்டுமே ஒதுக்கித் தந்தது. அதே சமயம் வினேயர் தியேட்டர் கம்பனி அவரது ‘மூன்று உயரமான பெண்கள்’ நாடகத்தை வெளியிட்டது. மூன்றாவது புலிட்சர் விருதை இந்த நாடகம் ஆல்பிக்கு வாங்கித் தந்தது.

இந்த நாடகத்தில் ஒரு பெண்ணின் இளம் பருவம், நடுத்தர வயது, வயதானவள் என்ற கோலம் சித்தரிக்கப்படுகிறது. முதல் அங்கத்தில் வயதான பெண்மணியுடன், நடுத்தர வயது மாதுவும் இளம் பெண்ணும் கூட இருந்து நடத்திச் செல்லுகிறார்கள். இரண்டாம் அங்கத்தில் ரூபமாக வயதானவளும் மற்ற இருவரும் அரூபமாகவும் காட்சிப்படுத்தப் படுகிறார்கள். அவமானம், சந்தோஷம், வருத்தம், நிறைவு ஆகியவற்றால் சூழ்ந்திருந்த தன் வாழ்க்கையை ஒரு 90 வயது மூதாட்டி விவரிக்கிறாள். சிறுவயதில் அடைந்த சந்தோஷங்கள், யுவதியாய் உற்சாகமாய் வளைய வந்த நாள்கள், வாழ்க்கை அவளுக்குத் தந்த திருப்தி ஆகியவற்றின் நினைவுகளில் மூதாட்டி இளைப்பாறுகிறாள்.அப்போது அவள் வாழ்க்கையில் அடைந்த துயரங்கள், வஞ்சிக்கப்பட்ட தருணங்கள் ஆகியவையும் அவளுக்கு நினைவுக்கு வருகின்றன. அவள் கணவனின் அடல்ட்ரி, ஓரினச் சேர்க்கையில் பிடிப்புக்கு கொண்டு வளைய வரும் ஒரே மகன் ஆகியோரைப் பற்றியும் பேசுகிறாள்.

அவளை பார்க்க மகன் வருகிறான். அவள் சொல்வதையெல்லாம் கேட்கிறான். ஆனால், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கடைசியில் எழுந்து போகிறான். நாடகத்தில் வரும் தாய் – மகன் உறவு ஆல்பியின் சொந்த வாழ்க்கையோடு தொடர்புடையது என்று ஒரு கருத்து நிலவியது.

இதற்குப் பிறகு அவர் வெளியிட்ட நாடகங்கள் பெரும் வெற்றியை அடைந்தன. மற்றொரு புதிய நாடகமான ‘ஆடு அல்லது சில்வியா யார்?’ என்ற நாடகம் 2002ஆம் ஆண்டின் சிறந்த நாடகத்திற்கான டோனி விருதை வென்றது.

மகிழ்ச்சியான மணவாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கட்டிடக் கலைஞன் சில்வியா என்னும் ஆடுடன் உறவு வைத்துக்கொள்ளும் போது அவனது மண வாழ்க்கை எவ்வளவு பெரிய நரகமாக்கி விடுகிறது என்பதை நாடகம் சித்தரித்தது. இதை பற்றிக் குறிப்பிடுகையில், “ஒவ்வொரு நாகரீகமும் சமூகத்தின் மீது காரணமற்ற விதிகளைக் கொடூரமாகத் திணிக்கிறது. நினைத்துப் பார்க்க முடியாத ஓர் நிகழ்ச்சி எவ்வாறு குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கிறது. எவ்வாறு அந்தப் பிரச்சினைத் தீர்ப்பது என்று இந்த நாடகம் பரிசீலிக்கிறது. மக்கள் தாங்கள் கொண்டிருக்கும் வாழ்க்கையின் மீதான மதிப்புகள் உண்மையாகவே மதிப்பு மிக்கவைதானா என்று புதிதாக யோசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார் ஆல்பி.

“அதிர்ஷ்டம் இருந்தால், இந்த நாடகத்தின் பார்வையாளர்கள் நாடகம் நடக்கும் போது எழுந்து நின்று, கைக்குக் கிடைக்கும் பொருள்களை எல்லாம் எடுத்து நாடக மேடை மீது வீசுவார்கள் என்று நான் நம்புகிறேன்!” என்று அமெரிக்க நாடக ஆசிரியரும் பத்திரிகையாளருமான ஸ்டஈவன் டிராக்மன்னுக்குத் தந்த நேர்காணலில் ஆல்பி குறிப்பிட்டார்!

பின் வந்த இந்த நாள்களில் அவரும் மிகவும் மாறிவிட்டார். எப்போதும் சுடுசொற்களை அள்ளித் தெளிப்பவராய் இருந்த அவர் அதையெல்லாம்  குறைத்துவிட்டார். ஆரம்ப காலங்களில் அவரிடம் இருந்த முரட்டுப் பிடிவாதம் எவரையும் தள்ளி நின்றே அவருடன் பேச வைத்தது. அவரது மேதைமையும் திறமையும் அவருக்குத் தந்த முரட்டுத்தனமான காலம் போய் அவர் மென்மையான சுபாவம் கொண்டவராக மாறி விட்டார். காமிராவுக்கு முன்னால் நிற்கும் போது கூடப் புன்னகை செய்யாத முகத்துடன் காணப்படுவார் என்று அவருக்குப் பெயர் இருந்தது. தன் படைப்புகளின் மீது திருத்தமோ மாறுதலோ செய்ய அவர் யாரையும்  அனுமதித்ததில்லை. எட்வர்ட் ஆல்பியின் நாடகத் தயாரிப்பு என்றால் அது எட்வர்ட் ஆல்பியின் ஆளுகையில் மட்டுமே என்று நிர்ணயித்திருந்தார். நாடகக் கொட்டகையின் கூடாரமாக இருக்கட்டும் அல்லது பதிப்பிக்கப்பட்ட நாடகப் பிரதியாக இருக்கட்டும் கொட்டை எழுத்தில் அவர் பெயர்தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்.

“நான் என் படைப்புகளை மறு திருத்தமோ மறு பரிசீலனையோ செய்ய மாட்டேன். பெர்னார்ட் ஷா செய்தார், மற்றவர்களுக்கு எளிதில் புரிய வேண்டும் என்று. நான் இங்கிதமானவன்தான் – யாரும் என் வழியில் குறுக்கிடாதவரை!” என்றார்.

 

ல்பி தனக்குத் தோன்றும் நாடகக் கருத்துக்களைப் பல மாதங்கள், சில சமயம் பல வருடங்கள் மனதில் ஊறப் போட்டுக்கொண்டு ஒரு வரி கூட எழுதாமல் இருந்திருக்கிறார். எழுந்தவுடன் தோன்றிய மறு நிமிடம் பேப்பரைக் கையில் எடுத்த விடுவார். அவருடைய புகழ்பெற்ற ‘வர்ஜினியா’ நாடகத்தின் தலைப்பு ஒரு முறை க்ரீன்விச் வில்லேஜில் இருந்த பார் ஒன்றின் கண்ணாடியில், ‘வர்ஜினியாவைக் கண்டு பயப்படுவது யார்?’ என்று எழுதப்பட்டிருந்ததிலிருந்து எடுத்துக் கொண்டதுதான். அவர் ஏன் தினப் பிரச்சினைகளை பற்றி – வியட்நாம் போர், இனப் போராட்டம், வாட்டர்கேட் ஊழல், அமெரிக்கா ஈடுபட்ட யுத்தங்கள், எய்ட்ஸ் வியாதி – எழுதவில்லை என்று கேட்கப்பட்ட போது, “இத்தகைய பிரச்சினைகள் எழுதப்பட்ட நாள்களின் கொண்டாட்டத்திற்கு மட்டும்தான்; காலம் கடந்து நிற்கும் எழுத்து என்பது மனிதர்களைப் பற்றியும் சமூகக் கொடுமைகளைப் பற்றியும் விசாரணை செய்யும் வல்லமை வாய்ந்தவை” என்றார்.

 

ல்பி, அவரது இளமைக் காலத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். மதுவைப் போல ஓரினச் சேர்க்கையும் அவர் எழுத்தில் அடிக்கடி இடம்பெற்றது. பெண்களின் வலிமையைப் பற்றி அவர் தீர்மானமான முடிவுகளைக் கொண்டிருந்தார். “என் நாடகங்களில் வரும் பெண்கள், ஆண்களை விடப் பலமடங்கு தைரியசாலிகள். மனித வாழ்க்கையில் சோதனைகளைச் சந்தித்துப் போராடுவதில் அவர்களின் பங்குதான் அதிகம். அவர்களைப் பலகீனமானவர்கள் என்று சொல்லும் ஆண்கள்தான் பலகீனமானவர்கள்” என்றார்.

ஆல்பியின் நாடகங்கள் பார்வையாளர்களைக் களிப்பூட்டுவதற்காகப் படைக்கப்பட்டதல்ல. மாறாக அவர்களின் சிந்தனை ஓட்டத்திற்கு அவரது நாடகங்கள் தீனி கொடுத்தன. “என் நாடகத்தைப் பார்த்துவிட்டு ஒரு ரசிகர் நேரே வீட்டுக்குச் சென்று படுக்கையில் விழுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று ஒரு பேட்டியில் கூறினார். அதனால்தான் அவரது நாடகங்களில் அமெரிக்க ஆண்கள் பெண்களின் மனப் போராட்டங்கள், வக்கிரங்கள், துயரங்கள் ஆகியவை ஆழமாகப் பரிசீலிக்கப்பட்டன. குடும்பம் என்னும் ஸ்தாபனத்தின் அடிப்படை நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் விவாதித்தார். 1989இல் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடை பெற்ற நாடக இயக்க இளைஞர்களின் கூட்டத்தில் பேசுகையில், “தீர்மானிக்கப்பட்ட விதிகளை மீறி சிந்திப்பதும் செயல்படுவதும் மனிதகுல முன்னேற்றத்திற்கு அடிகோலும்” என்று கூறினார்.

“டென்னஸி வில்லியம்ஸுக்குப் பிறகு ஒரு புதிய பாஷையை ஆல்பி தனது நாடகங்களில் புகுத்தினார். இதற்காக அவருக்கு அமெரிக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறது” என்று நாடக ஆசிரியர் டெரன்ஸ் மெக்னல்லி கூறியிருக்கிறார். அவர் ஆல்பியுடன் பல வருடங்கள் இருந்து ஆல்பியின் நாடகங்களில் இடம்பெற்ற சொல்லாட்சியையும் இறுக்கத்தையும் ரசித்தவர். “ஆல்பியின் நாடக வசனங்களின் ஒலி அவரால் திறம்பட செதுக்கப்பட்ட ஒன்று. அதைப் பிறர் எளிதாகப் பின்பற்ற முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

ஸிந்துஜா” <weenvy@gmail.com>

sinthuja, t.r. natarajan

Amrutha

Related post