சாரா கேன்: துருப்பிடித்த எல்லைகளை தூக்கி எறிந்த ஆளுமை – ஸிந்துஜா

 சாரா கேன்: துருப்பிடித்த எல்லைகளை தூக்கி எறிந்த ஆளுமை – ஸிந்துஜா

சாராவின் ஒரு நாடகம் – பெத்ராவின் காதல் – என்னை வெகுவாக அச்சுறுத்திவிட்டது. அச்சுறுத்தும் அளவு அதில் என்ன இருந்தது என்று கேட்கலாம். ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து சீறி வந்த ஆக்ரோஷம். பக்கமே ஆக்ரோஷமாக உருவெடுத்திருந்தது. அதைத் திருப்புவதும் ஆக்ரோஷம் நிரம்பிய செயலாகிவிட்டது. சாரா கேன் உடையற்று நின்றாள், அவளது பூச்சுக்களற்ற படைப்பைப் போல. மறைக்கும் தோல் எதுவும் அவளிடம் இருக்கவில்லை.

ஹெரால்டு பின்டர்

 

நாடகம் ஆரம்பித்து இருபது நிமிஷங்களுக்குள் எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றித் தூக்கி வாரிப்போடும் அந்தக் காட்சி ஆரம்பிக்கிறது. நாடகப் பிரதியில் எழுதப்பட்டது போல, ‘டிங்கர் ஒரு பெரிய கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு கார்லின் நாக்கை வெட்டிப் போட்டான். எந்தவித சத்தமுமின்றி கார்ல் விடை கொடுப்பது போலக் கையை அசைத்தான். திறந்த வாய் வழியே ரத்தம் சீறிப் பாய்ந்தது.’

நாடகத்தின் ப்ரி-வியூ பார்க்க வந்திருந்த சிறிய கூட்டத்தில் அப்போது சிறிய சலசலப்பு ஏற்பட்டது. பார்வையாளர் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்துவிட, நாடகம் நடத்துபவர்கள் விரைந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்த நாடகம் மேடையேறுவதற்கு முன்னால் பல நாள்கள் நடந்த பயிற்சிப் பட்டறையில் ஐந்து பேர் இம்மாதிரி மயக்கம் போட்டு விழுந்தனர். சுமார் நாற்பது பேர் தாங்க முடியாமல் பாதி நாடகத்தில் எழுந்து போய்விட்டார்கள்.

சாரா கேன் என்னும் 27 வயது நாடக ஆசிரியையின் ‘கழுவுதல்’ என்னும் நாடகம் ஏற்படுத்திய அனுபவங்கள் இவை. நாக்கை அறுக்கும் காட்சி மட்டுமல்ல, ஒரு பெரிய இரும்புக் கம்பியை ஆசனத் துவாரத்தில் சொருகுவது, தகாத உறவுமுறைப் புணர்ச்சி, மின் பாய்வு, கற்பழிப்பு, பாலுறவு உறுப்புகளின் மீதான அறுவை சிகிச்சையென்று அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளையும் வசனங்களையும் அடங்கியிருந்த அந்த நாடகம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தின.

இதை எழுதியது ஒரு பெண் என்பதைப் பலராலும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த மயக்கமடைவது, அதிர்ச்சியுறுவது ஆகிய செயல்களுக்குப் பின்னால் ஒருவர் தீர்மானிக்க வேண்டியது, – வன்முறை, செக்ஸ் போன்ற கோட்டாலைகளைக் கண்டும், அவற்றில் பொதிந்திருக்கும் அச்சமூட்டும் இருட்டைக் கண்டும், காணாதது போல் ஒருவர் போக வேண்டுமா என்பதுதான் சாராவின் கட்சியாக இருந்தது.

‘கழுவுதல்’, சாரா கேனின் மூன்றாவது நாடகம். பல்கலைக்கழக வளாகமொன்றில் இக்கதை நடக்கிறது. புகழ்பெற்ற பிரெஞ்சுக் கட்டுரையாளரான ரோலண்ட் பார்த்ஸின், ‘காதலில் வீழ்வது என்பது வதை முகாமை நாடிச் சென்று தங்குவதற்கு ஒப்பாகும்’ என்ற கருத்து தன்னை வெகுவாகக் கவர்ந்ததன் விளைவாக இந்த நாடகத்தை எழுதியதாக சாரா கேன் சொன்னார்.

சாரா கேனின் முதல் நாடகமான ‘தகர்த்தல்’ அவர் மாணவியாக இருந்த போது எழுதியது. 1995இல் அது முதல்முறையாக அரங்கேறிய போது நாடகத்தில் வந்த இடையறாத வன்முறைக் காட்சிகள் பார்வையாளர்களிடம் மிகுந்த கொந்தளிப்பை எழுப்பியது. “இம்மாதிரி வன்முறை நிரம்பிய நாடகம் பொதுவாக ஆங்கில வரலாற்றில் இருந்ததில்லை” என்று ‘ரேடியோ 4’ ஒளிபரப்பில் இயக்குநர் கேட்டி மிஷல் கூறினார். ‘டெய்லி மெயில்’ நாடக விமரிசகரான ஜாக் டிங்கர், “இது குமட்டலை ஏற்படுத்தும் ஒரு சீழ் பிடித்த நாடகம்” என்றார்.

பெரும் வணிகப் பத்திரிகைகளும் சிற்றிதழ்களும் இம்மாதிரி நாடகத்தை ஆதரிக்கக் கூடாது என்று சூடான விவாதங்களை எழுப்பின. ஆனால், இந்நாடகத்தை அரங்கேற்றிய ‘ராயல் கோர்ட் தியேட்டர்’ இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாமல் சாராவை ஊக்குவித்தது. பின்னொரு நாளில் இந்த நாடகம் நியூயார்க்கில் அரங்கேறிய போது, “கடந்த பத்தாண்டுகளில் பெரும் பிரமிப்பை ஏற்படுத்திய நாடகம்” என்று நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்தது. பல்வேறு விமர்சகர்களின் எதிர்ப்புக் குரல்களை மீறி சாரா, சமூகத்தின் மிக முக்கியமான கலைஞர் என்னும் பேரைப் பெற்றார். அங்கீகரிக்கப்பட்ட மரபுகளை எதிர்த்து எழுந்த உரத்த குரல்களில் (IN -YER-FACE) ஒன்றாக சாரா கருதப்பட்டார்.

 

Sarah Kane - Drama

‘கழுவுதல்’ நாடகத்தில் நாக்கை அறுக்கும் காட்சி

 

கர்த்தல்’ நாடகத்தில், ஓட்டல் அறை ஒன்றில் கேட் என்னும் பெண்ணுடன் பத்திரிகையாளனும் ஓரினச் சேர்க்கையாளனுமான இயான் என்பவன் தங்குகிறான். அவன், அவள் உடல் மீது செலுத்த முயற்சிக்கும் செயலை அவள் எதிர்க்கிறாள். அவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்கிறான். நாடகம் இருட்டான பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. யுத்தகளத்துக்கு நிகரான வன்முறைப் புணர்வு, கற்பழிப்பு, நரமாமிசம் உண்பது என்னும் எல்லைகளுக்குள் படர்ந்து செல்கிறது.

‘தகர்த்தல்’ பார்வையாளர்கள் முன் வைக்கும் செய்தி – யுத்தத்தில் மட்டுமல்ல, நமது சாதாரண வாழ்க்கையிலும் அட்டூழியங்களும் அநியாயங்களும் நடந்த வண்ணமாய் இருக்கின்றன; இவற்றின் இயங்குதளம் ஆணின் கைகளுக்குள் இருக்கிறது என்பதைத்தான்.

புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்களான ஹெரால்ட் பின்டர் , கேரில் சர்ச்சில் ஆகியோரின் பாராட்டுகளை இந்நாடகம் பெற்றது. இந்த நாடகத்தை எதிர்த்தவர்கள் பின்னாட்களில் ஆதரவுக் குரல்களை அளித்தார்கள். ‘தி கார்டியன்’ பத்திரிகையின் நாடக விமரிசகரான மைக்கேல் பில்லிங்டன், “ஐந்து வருடங்களுக்கு முன் நான் சாரா கேனின் இந்த நாடகத்துக்குப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தேன். ஆனால், நேற்றிரவு இந்த நாடகத்தைப் பார்த்த போது அதன் வலிமை எனக்குப் புரிந்தது” என்றார்.

 

பெத்ராவின் காதல்’ நாடகத்தில் சாரா, ரோமானிய துன்பவியல் நாடகமான செனகாவின் ‘பெத்ரா’வை நவீன வாழ்க்கைக்கு இழுத்து வந்து இன்றைய உலகின் போக்குகளைப் பரிசீலிக்கிறார். மூலக் கதையில் உள்ளது போல இந்நாடகத்தில் பெத்ரா தனது மாற்றாம் புதல்வன் ஹிப்போலிட்டஸ் மீது காதல் கொள்கிறாள். அவனை நெருங்கும் போது அவளை அவன் மறுக்கிறான். ஹிப்போலிட்டஸ் மூலம் அவள் தனது மகளையும் கணவனையும் பற்றி அறியும் போது மனம் உடைகிறாள். தற்கொலை செய்து கொள்ளும்முன் தன் சாவுக்கு ஹிப்போலிட்டஸ்தான் காரணம் என்று சொல்ல அவன் சிறைக்குச் செல்கிறான். சிறையிலிருந்து வெளியே வரும் போது அவனும் அவனது சகோதரியும் அவனது தந்தையாலேயே கொலை செய்யப்படுகிறார்கள். வன்புணர்வும் சாவும் நிரம்பிக் கிடக்கும் இந்த நாடகத்தை, “இது எனது காமெடி நாடகம்” என்றார் சாரா!

 

ங்குதல்’ சாராவின் முந்திய நாடகங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது. வழக்கமான வன்முறை அம்சங்கள் நீங்கியிருந்தன. ஏ, பி, சி, டி என்னும் நான்கு பாத்திரங்களைச் சுற்றி எழுப்பப்பட்ட இந்நாடகத்தை சாரா ‘மேரி கெல்விடன்’ என்னும் புனைப்பெயரில் வெளியிட்டார். நாடகம் உடல் வன்முறை சித்தரிப்புகளைத் தவிர்த்து, உணர்ச்சிகளால் கவ்வப்பட்ட மனித மன நிலைகளை சித்தரித்தது.

இந்த நாடகத்தைப் பற்றிப் பேசுகையில் சாரா குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். “நாடக ரிகர்சலின் போது பீட்டர் ஹிக்கி நடிப்பதைத் திடீரென நிறுத்த வேண்டியாயிற்று. அவருக்கு முகத்தின் ஒரு பக்கம் பக்க வாதத்தால் இழுக்கப்பட்டு விட்டது போல ஆகிவிட்டது. நாங்கள் பயந்து விட்டோம், ஏதோ மாரடைப்புதான் என்று. பிறகு டாக்டர் வந்து பார்த்துவிட்டு, “பயப்பட ஒன்றுமில்லை. நாடகப் பிரதி தந்த நெருக்கடி நடிகரின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு ஓவர் ஆக்டிங் செய்துவிட்டதால் இப்படி ஆயிற்று” என்றார். ஆனால், அந்த நிலைமையிலும் பீட்டர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதை நிறுத்தவில்லை. இம்மாதிரி நிகழ்ச்சிகள்தான் நாடகத்தில் உணர்ச்சிகளைத் தெளிவாகக் காட்டுவதற்கும் நடிப்பின் உச்சத்தை வெளிப்படுத்துவதற்கும் வழி செய்து பார்வையாளர்களை ஈர்க்கின்றன” என்றார் சாரா.

 

சாராவின் கடைசி நாடகமான ‘4.48 – மனச்சிதைவு’ அவர் இறப்பதற்கு சற்று முன்பாக எழுதப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக முழுமையற்ற தன்மையைச் சித்தரித்த இந்நாடகம் மிகமிகக் குறைந்த பாத்திரங்களையும்  குறைவான நடிகர்களையும் கொண்டு உத்திகளற்றும் இருந்தது. 4.48 என்று குறிப்பிடப்படுவது அதிகாலை நேரம் 4.48 மணியை. அந்த அதிகாலை சாரா தன் மனநோயால் பாதிக்கப்பட்டு எழுந்து விடும் நேரம்.

சாரா மன அழுத்தத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு தனது இருபத்தெட்டாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

“ஸிந்துஜா ” <weenvy@gmail.com>

sinthuja, t.r. natarajan

 

Amrutha

Related post