2000 ஆண்டுகளாக தமிழ் மொழியை தமிழர்கள் காப்பாற்றி வருகிறார்கள் – சொ. சாந்தலிங்கம்

நேர்கண்டவர்: தினகரன் ஜெய்
முனைவர் சொ. சாந்தலிங்கம், விருதுநகரில் இளங்கலை விலங்கியல் படிப்பை முடித்த இவர், மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் தமிழ் இலக்கியத்தை முடித்தார். பின்னர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்திய கல்வெட்டியல் படிப்பில் பட்டயக் கல்வியைப் பயின்றார். ‘தொண்டை மண்டலம்: நாடுகளும் ஊர்களும்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழ்நாடு தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்து, இறுதியில் உதவி இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார். தற்போது பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராக உள்ளார். மேலும் ‘தொல்லியல் கழகம்’ எனும் அமைப்பின் துணைத்தலைவராகவும் உள்ளார். இவரது ‘வரலாற்றில் தகடூர்’, ‘சித்திரமேழி’, ‘மதுரையில் சமணம்’ போன்ற நூல்கள் மிக முக்கியமானவையாகும். பொ. இராசேந்திரனுடன் இணைந்து ‘கோவில் கலை’, ‘மாமதுரை’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் திருக்கோவில் உலா என்ற நூல் உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட நூல்களையும் Studies in archaeology, Jainism in Pandya Nadu என்ற ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.
மதுரையில் உள்ள சாந்தலிங்கம்இல்லத்தில் ‘அம்ருதா’ இதழுக்காக பதிவு செய்யப்பட்ட நேர்காணல் இது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக வெளிவந்ததை ஒட்டி சோழர்கள் மீண்டும் பேசுபொருளாக ஆனார்கள். அப்போது, பார்ப்பனீயத்தை சோழர்கள் பாதுகாத்தார்கள் என்ற வாதம் சிலரால் முன்வைக்கப்பட்டது. இது ஏற்புடையதா?
சோழர்கள் முழுக்க முழுக்க பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்ற வாதம் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் சோழர் கால ஆட்சி என்பது கி. மு. 846இல் தான் தொடங்குகிறது. சங்க காலத்தில் சோழர்கள் இருந்தார்கள். அதற்குப் பிறகு 600 ஆண்டு காலம் என்ன ஆனார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. கி.பி. 846இல் சோழர் ஆட்சி தொடங்கி 1279இல் முடிவடைகிறது.
பொதுவாக சோழர்கள், பார்ப்பனீயத்தை ஆதரித்ததாக முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால், தமிழ்நாட்டில் சோழர்களுக்கு முன்னோடியாக கோவில் பண்பாட்டை உருவாக்கியவர்கள் பல்லவர்கள். அவர்கள் ஆந்திர பகுதியில் இருந்து வந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு பல்லவ சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். பல்லவர்கள் தான் கற்களால் கோவில் கட்டி வழிபடக்கூடிய ஒரு மரபை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன்பு மண்ணாலும் மரத்தாலும் செங்கற்களாலும் கட்டப்பட்ட கோவில் வழிபாட்டு முறைகள் இருந்தன. அவையெல்லாம் கால வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்ட காரணத்தாலே கல்லால் கோவில் கட்டி நிரந்தரமான கோவில்களை அமைத்து அதில் பூசைகளை செய்வதற்காக ஆந்திர பகுதியிலிருந்து பிராமணர்களை கொண்டு வந்து குடியமர்த்தினார்கள். எனவே, கோவில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு முக்கியமான அங்கமாக, இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் அதிகார மையமாக செயல்பட்டது. கோவில் நிர்வாகத்தின் அமைப்பைக் கொண்டே ஊர்களை நிர்வாகம் செய்வது, ஊரிலிருந்து வரி வசூல் செய்வது போன்ற அனைத்து பணிகளையும் அரசர்கள் செய்தனர்.
எனவே, கோவில் வழிபாட்டு முறையின் தொடக்கம் என்பது பல்லவர் காலத்திலே தொடங்கிவிட்டது. தொடர்ந்து பல்லவர், சோழர், பாண்டியர் பகுதி வரை நீடித்தது. ஆனால், சோழர்கள் காலத்தில்தான் நிறைய கோவில்கள் கட்டப்பட்டன. அதுவும் குறிப்பாக சோழ நாட்டிலே நீர் வளமும் நிலவளமும் மிகுந்த ஒரு நிலப்பரப்பாக இருந்த காரணத்தால் ஊர் தோறும் கோவில்கள், ஊருக்கு இரண்டு மூன்று கோவில்கள் என்று சோழர்கள் கட்டினர். சைவ, வைணவ கோவில்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் கட்டப்பட்டன. அவ்வாறு கட்டுகின்றபோது அதிலே பணி செய்வதற்கு நிறைய பிராமணர்கள் தேவைப்பட்டார்கள். அவர்களைக் கொண்டு வந்து குடியமர்த்தி அவர்களுடைய வாழ்வாதாரங்களுக்காக நிலங்களை வழங்கும்போது பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள் என்று வழங்கினார்கள். எனவே, அந்தக் கோவில் பூசை பணிகள், கோவில் நிர்வாகப் பணிகள் என்று பிராமணர்களுடைய செல்வாக்கு அல்லது ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், அரசு நிர்வாகத்தில் பல்வேறு தரப்பினரும் பதவிகளில் இருந்தனர். படைத்தலைமையிலேயோ அல்லது வேறு சில நிர்வாக மட்டத்திலேயோ பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக இருந்தார்கள். எனவே, முழுக்க பார்ப்பனிய ஆட்சியாக சோழர்கள் ஆட்சி இருந்தது என்று சொல்வதற்கில்லை.
வைதீகம், சோழர்களின் ஆட்சியில் தான் புத்துயிர் பெற்றது என்றும் சமஸ்கிருதம் வளர்த்தெடுக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்படுகிறதே…
இதை குற்றச்சாட்டு என்று சொல்ல முடியாது. திராவிட நாடு முழுவதும் சமஸ்கிருதம் பரவியது. ஆனால், தமிழ் மொழி தன்னைத் தனியே தக்கவைத்துக் கொண்டது. சமஸ்கிருதம் முழுக்க முழுக்க தன்னை புதுப்பித்துக் கொண்டே போனது. இன்று சேர நாட்டில் உள்ள கேரளாவிலோ கர்நாடகத்திலோ ஆந்திராவிலோ இருக்கக்கூடிய எழுத்து முறையை பார்த்தால் அவர்கள் சமஸ்கிருத எழுத்து முறையை அப்படியே ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் எந்த காலத்திலும் சமஸ்கிருத எழுத்து முறையை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. தமிழ் மொழி தனித்து இயங்கக்கூடிய வல்லமை பெற்ற காரணத்தாலேயே இன்று வரை தனித்து இயங்குகிறது. எனவே, சமஸ்கிருதம் இங்கே ஆட்சி மொழியாகவோ அதிகார மொழியாகவோ பேச்சு மொழியாகவோ எழுத்து வழக்கிலேயோ நிர்வாக மொழியாகவோ ஒருநாளும் இருந்ததில்லை. பூஜை மொழியாக, சடங்கு மொழியாகத்தான் இருந்தது. இன்றும் இந்தியா முழுக்க இருக்கிறது.
கோவில்களில் சமஸ்கிருதம் மந்திரங்களாக ஓதப்பட்டது. சடங்குகளிலும் யாகங்களிலும் ஓதப்பட்டதே தவிர சமஸ்கிருதம் செல்வாக்கு பெறவில்லை. வைணவர்கள் தங்களுடைய உரைகளை மணிபிரவாள நடையிலே எழுத ஆரம்பித்த போது தான் சமஸ்கிருதக் கலப்பு அதிகமாக ஏற்பட்டது. மற்றபடி சமஸ்கிருதம் ஒரு மொழியாக கோவிலிலேயே தேங்கிகொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், கல்வெட்டுகள் எழுத தொடங்கிய போது தான் இன்று எப்படி நம்மிலே பலர் ஆங்கிலத்தை கலந்து கலந்து பேசுவது இயல்பாக ஆகிவிட்டதோ அதுபோல கல்வெட்டு எழுத்துக்களிலும் சமஸ்கிருத சொற்கள் இடம்பெற்றன. உதாரணமாக தேவதானம், பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் என்று சில சொற்களைக் கிரந்த எழுத்துக்களில் எழுதினார்கள். சமஸ்கிருதத்திற்கென்று உருவாக்கப்பட்ட எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்கள். அவற்றில் தான் எழுதினார்கள் எனவே, சமஸ்கிருத மேலாண்மை என்பது தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் இல்லை.
பிராமணர்கள் எதற்காக ஆதித்த கரிகாலனை கொலை செய்ய வேண்டும்?
ஆதித்த கரிகாலனின் கொலை குறித்து பேசும் போதெல்லாம் பிராமணர்களை மட்டும் குறிப்பிட்டு பேசுகிறார்கள். கரிகாலனைக் கொலை செய்தது முழுக்கவே பிராமணர்கள் என்று சொல்ல முடியாது. அந்த கொலையில் பலரும் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படிபட்ட தண்டனை ராஜராஜனால் கொடுக்கப்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. உடையார்குடி கல்வெட்டைச் சான்றாகக் செல்லலாம். ராஜராஜனின் மெய்க்கீர்த்தி தொடங்கும் போதே காந்தளூர் சாலை களமறதருளி என்று வரும்.
அந்தச் காந்தளூர் சாலை என்பது இப்போதைய ஆய்வாளர்களின் கருத்துப்படி படை வீரர்களைத் தயார் செய்கிற ஆயுதப் பயிற்சி கூடமாக, ராணுவ பள்ளியாக செயல்பட்டு இருக்க வேண்டும். இந்த ராணுவ பள்ளி செயல்பாட்டால் சோழ நாட்டிற்கு அடிக்கடி படையெடுப்புகள் நடந்தபடியே இருக்கும். தொடர்ந்து மோதல் இருந்து கொண்டே இருக்கும். அவ்வாறாக காந்தளூர்ச் சாலை என்பது ஒரு ராணுவ பயிற்சி பள்ளியாக இருக்கிறது. அதை நாம் முதலில் அழித்தால்தான் அங்கிருந்து தொடர்ந்து வீரர்கள் வருவதற்கு வாய்ப்பில்லாம் போகும் என்பதற்காக காந்தளூர் சாலையை அழித்திருக்கிறார் ராஜராஜன். காந்தளூர் சாலை என்பது பிராமணர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு பள்ளியாகக் கூட இருக்கலாம். அங்கே பயிற்சிகள், வேதங்கள், உபநிஷத்துக்கள் போன்றவற்றோடு போர்க்கலையும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த காந்தளூர் சாலையை ராஜராஜன் ஒழித்தார். காரணம் அங்கிருந்து வந்தவர்கள் மூலமாகத்தான் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் காரணமாகவே காந்தளூர் சாலையை அழித்தார். ஆனால், ஒரு சிலர் செய்த தவறுக்காக அனைத்து பிராமணரையும் அவர் தண்டிக்கவில்லை. அதற்குப் பின்னர் தான் பிரம்மதேயங்கள் அதிகமாகக் கொடுத்திருக்கிறார். ‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையே தண்டிக்கக்கூடாது’ என்பதில் ராஜராஜசோழன் தெளிவாக இருந்திருக்கிறார்.
ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவில் கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டே கட்டப்பட்டதாக கூறப்படுகிறதே…
இப்படி ஒரு பார்வையே தவறானது. அவ்வாறு பார்க்க கூடாது. ரஷிய அதிபர் தோழர் குருஷேவ் தாஜ்மஹாலை பார்த்த போது, “இதை கட்டுவதற்கு எத்தனை ஆயிரம் தோழர்களின் ரத்தம் பாய்ச்சப்பட்டு இருக்கும்?” என்று கேட்டதாகக் கூறுவார்கள். அது குருஷேவுடைய பார்வை. ஆனால், என்னைப் பொறுத்த அளவில் கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களால் அல்லது எங்கிருந்தோ கொண்டு வந்த சொத்துக்களால் கட்டப்பட்டவை இல்லை என்பதுதான். மாறாக சில சிற்பங்களை வெளியிலிருந்து கொண்டு வந்தார்கள் என்று சொல்லலாம். நமது பகுதியில் இல்லாத வழிபாட்டு முறை என்று பாலா பாணி அம்மன் வழிபாடு போன்றவற்றை சொல்வார்கள். அம்மன் வழிபாட்டை போன்ற இந்த காளி வழிபாட்டுச் சிற்பங்கள் தமிழ்நாட்டிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தபோது வடக்கில் இருந்து சில சிற்பங்களை ராஜேந்திர சோழன் கொண்டு வந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்குப் பக்கத்திலேயே காட்சிப்படுத்தியிருக்கிறார். அதுபோல துவாரபாலகர் சிற்பம் என்ற சிற்பத்தை ராஜேந்திரனின் மகன் கொண்டு வந்து தாராசுரத்திலே காட்சிப்படுத்தியிருக்கிறார். அப்படி மிக அரிதான சிற்பங்களை இங்கே கொண்டு வந்து தமிழ் மக்களுக்குக் கோவிலிலே காட்சிப் படுத்தியிருக்கிறார்களே தவிர பெரும் செல்வத்தை கொள்ளையிட்டு கோவிலை கட்டினர் என்று சொல்வதற்கில்லை.
நமது நாட்டில் வளங்கள் நிரம்ப இருக்கின்றன. முதலில் சொன்னது போல கோவில் என்பது வழிபாட்டிற்காக மட்டும் கட்டப்பட்டது அல்ல. கோவில் ஒரு நிர்வாக இயந்திரம். ஊரிலே ஒரு கோவில் இருந்தது என்று சொன்னால் பலவிதமான தொழில்கள் அங்கே பெருகுகின்றன என்று பொருள். நான் ஏற்கனவே சொன்னது போல தஞ்சைப் பெரிய கோவிலில் 1100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி என்றால் எவ்வளவு பெரிய நிறுவனமாக அந்த கோவில் செயல்பட்டு இருக்க வேண்டும்? எவ்வளவு வருவாய் வந்திருக்க வேண்டும். எவ்வளவு நிலங்கள் அதற்கு சொந்தமாக இருந்திருக்க வேண்டும். அவை பற்றிய, செல்வ வளங்கள் குறித்த பதிவு கிடைத்திருக்கிறது. எனவே, கோவில் என்பது ஒரு கிராமத்தின் நிர்வாக அமைப்பு. இன்று ஒரு வருவாய் துறை அலுவலகம், ஒரு மாவட்ட அலுவலகம் போல செயல்பட்டிருக்கிறது. கோவில் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சமூக மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விவசாயிகளுக்கு நிலங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். கால்நடை மேய்ப்பவர்களுக்கு அங்கு சேரக்கூடிய ஆடுகளைச் சாவாமூவா முக பேராடு என்று சொல்வார்கள் அவற்றை பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள். பொன்னும் பொருளையும் வங்கிகளிலே சேர்த்து வெள்ளம் பஞ்சம் போன்ற காலங்களில் மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். மேலும், வங்கிகளாக செயல்பட்டு வட்டிக்கு கொடுத்திருக்கிறார்கள் அதேபோல ஆடற்கலைஞர்களுக்கு, கூத்தர்களுக்கு பணி, எழுத்தர்களுக்குப் பணி, கணக்கர்களுக்குப் பணி என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய வேலைவாய்ப்பு நிறுவனமாகவும் ஒரு கோவில் செயல்பட்டு இருக்கிறது. எனவே, தமிழக வரலாற்றில் கோவில் என்பது தவிர்க்க முடியாத ஒரு நிர்வாக அமைப்பாகவும் வழிபாட்டுத் தலமாகவும் இருந்திருக்கிறது என்று தான் பார்க்க வேண்டுமே தவிர இன்றைய கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது பலவிதமான விமர்சனத்தை தான் உண்டாக்கும்.
சோழர் ஆட்சியில் அடிமை முறை இருந்ததா…?
எல்லா ஆட்சிகாலத்திலும் அடிமை முறை இருந்தது. அடிமை முறை என்றால் தங்களைத் தாங்களே அடிமையாகக் கொடுத்துக் கொள்வது அல்லது வேறு சிலருக்கு அடிமையாக விற்பனை செய்வது. கடந்த 18ஆம் நூற்றாண்டு வரை இந்த அடிமை முறை இருந்தது என்பதற்கு கல்வெட்டு சான்றுகளும் ஓலைச்சுவடி சான்றுகளும் இருக்கின்றன.
மூவேந்தர் ஆட்சி காலத்தில் இருந்து தான் தமிழகத்தில் தீண்டாமை புழக்கத்தில் வந்ததாக ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். குறிப்பாக சோழர்களின் நிலை என்ன…?
வேளாண் குடி மக்கள், போர்க்குடி மக்கள் என்று தான் பார்க்கப்பட்டார்கள். சாதி என்ற சொல்லாடலே சோழர் காலத்தில் தான் வருகிறது. குறிப்பாக ராஜராஜ சோழன் கல்வெட்டில் தான் பறைச் சுடுகாடு, பள்ளச் சுடுகாடு, வேளாண் சுடுகாடு என்று வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சுடுகாடுகள் இருந்திருக்கின்றன என்று அறிகிறோம். ‘தீண்டாதார்’ என்ற வார்த்தை பாண்டிய நாட்டை பொருத்தவரையில் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் அதாவது உத்தரகோசமங்கை கல்வெட்டில்தான் வருகிறது. தீண்டாதார் என்றுதான் வருகிறதே தவிர என்ன சாதி என்ற விபரம் அதில் இல்லை. ஆனாலும் கூட புறஞ்சேரி என்ற வார்த்தை சிலப்பதிகார காலத்தில் வருகிறது. மதுரையிலே முக்கியமான நகரம் மைய நகரம் என்று ஒன்று இருந்தது. அதைத் தாண்டி புறஞ்சேரி ஒன்று இருந்தது. அந்தப் புறஞ்சேரியில் வாழ்ந்தவர்கள் யார் என்று நாம் சரியாகச் சொல்ல முடியாது. இடைக்குல மடந்தை என்று சொல்லக்கூடிய மாதுரியிடம் கண்ணகியை அடைக்கலமாக வைத்தார்களே அவர்களே கூட புறஞ்சேரியில் வாழ்ந்தார்கள் என்று பார்க்கிறோம். எனவே, தீண்டாமை, தீண்டாதார் என்ற சொற்கள் 10ஆம் நூற்றாண்டிற்கு பிறகு வந்த சொல்லாடல்கள்தான்.
நிலங்களைப் பறிப்பது, அடிமை முறை விபச்சாரம் பெண்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று தேவரடியாராக மாற்றுவது என்றெல்லாம் பேசப்படுகிறதே. இது உண்மையா…?
இவை யாவும் ஆதாரமற்ற கட்டுக்கதைகள். நிலங்களை வெவ்வேறு பணிகளுக்காக மாற்றி கொடுத்திருக்கிறார்கள். பிராமணர்களுக்குக் கொடுத்தது போல வேளாண்மை நிலங்களை சிலருக்குப் பணிகளுக்காக கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக தேவரடியார்களுக்கும் கொடுத்து இருக்கிறார்கள். தச்சர்களுக்கு கூலியாக நிலங்களை கொடுத்திருக்கிறார்கள். வேலை வாங்கிக் கொண்டு நிலங்களைக் காணியாக கொடுக்கும் வழக்கமும் இருந்தது. வலுக்கட்டாயமாக நிலங்களைப் பறித்தார்கள் என்று கூறுவது ஆதாரமற்ற செய்தி. பெண்களுக்கு அதாவது தேவரடியார்களுக்கு அடையாளம் இடும் முறை இருந்தது. அதாவது, வைணவ கோவிலைச் சார்ந்த தேவரடியார் என்றால் சக்கரத்தை அவரது உடலில் அடையாளமாக இடுவதும் சைவ கோவிலை சேர்ந்த தேவரடியார் என்றால் திரிசூலத்தை அடையாளமாக சூடு இடுவதும் வழக்கமாக இருந்திருக்கின்றன. ஒரு பெண் கோவில் பணியை விட்டு விலகி வேறு ஊருக்கு சென்று இந்த முத்திரையின் மூலமாக தேவரடியாள் என்று தன்னை அடையாளப்படுத்தி பணிக்கு சேருகிற வழக்கம் இருந்தது. இந்த முத்திரையைக் காட்டி வேலை பெற்ற ஒரு செய்தியும் கூட கல்வெட்டிலே இருக்கிறது. இதை நாம் பார்க்கின்ற கண்ணோட்டத்தில் தான் இதன் பொருள் இருக்கிறது. அந்த காலத்து சமுதாயம் அவ்வாறு இருந்தது என்று தான் நாம் பார்க்க வேண்டுமே தவிர, இன்றைய 21ஆம் நூற்றாண்டு கண்ணோட்டத்தில் அதைக் கடுமையாக விமர்சனம் செய்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போலாகும். இது நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.
தேவரடியார்கள் என்றால் என்ன?
தேவரடியார்கள் என்றால் தேவர்களுக்கு தொண்டு செய்வது என்று பொருள். அதில் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. எனவே, கோவில்களில் என்னென்ன பணிகள் செய்வார்களோ அவர்கள் தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊதியம் உண்டு. பட்டச்சோறு அதாவது சட்டிச்சோறு கொடுப்பார்கள். நிலங்களைக் கொடுப்பார்கள். வீடுகளும் கொடுத்து இருக்கிறார்கள். எனவே, தேவர்களுக்குத் தொண்டு செய்பவர்கள் தான் தேவரடியார்கள். பின்னால் அது கொஞ்சம் கொஞ்சமாக அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தேவதாசி முறை என்றாகி விட்டது. ஆரம்பத்தில் தூய்மையான சொல்லாகவும் தூய்மையான கோவில் பணி செய்யக்கூடிய தொண்டூழியர்களாகவும் தான் அவர்கள் இருந்தார்கள்.
சோழர்களின் ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்றும் அது ஓர் முற்போக்கான ஆட்சி, ஜனநாயக பண்போடு சோழர்கள் இருந்தனர் என ஒரு தரப்பு வாதிடுகின்றனரே…
பொற்கால ஆட்சி என்று சொல்வதையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக சோழர்களின் ஆட்சி ஒரு வலிமையான ஆட்சி என்று நான் சொல்லுவேன். நானூறு ஆண்டு காலம் தமிழகம் முழுமையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட ஆட்சியாக சோழருடைய ஆட்சி இருந்தது. அதுபோல வரி விதிப்பதற்காக நாட்டையே முழுமையாக அளந்து மண்டலங்களாக கோட்டங்களாக, நாடுகளாக, கிராமங்களாகப் பிரித்து அவற்றிற்கான வரி வசூலை ஒழுங்குபடுத்தி, முறையான வரி வசூலை செய்தனர். கோவில்களில் தவறு நடந்தால் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறாக நிர்வாக முறையைக் கட்டமைத்து ஸ்திரமிக்க ஆட்சியை கட்டமைத்ததற்கு சோழர் காலத்தைத்தான் நாம் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். பல்வேறு பணிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. தமிழகம் எங்கும் நிறைய கோவில்கள் கட்டப்பட்டன. ஒரு ஊரை நிர்வாகம் செய்வதற்கு நிர்வாக அமைப்பாக கோவிலை வைத்துக்கொண்டு சோழர்கள் நிர்வகித்தனர்.
சோழர்கள் குறித்துப் படிக்கும் போது அனிருத்த பிரம்மராயர், பரகேசரி, ராஜ ராஜ சோழ ராஜகேசரி என்று படிக்க வேண்டி உள்ளது. இந்த பரகேசரி என்பதற்கு பொருள் என்ன?
பரகேசரி என்பது சமஸ்கிருதச் சொல். கேசரி என்றால் சிங்கம் என்று பொருள். பரகேசரி என்றால் வேற்று நாட்டு மன்னர்களுக்கு சிங்கம் போன்றவன் என்று பொருள். ராஜகேசரி என்றால் ராஜாக்கள் பலருக்கும் சிங்கம் போன்றவன் என்று பொருள். தன்னை உயர்த்திச் சொல்வதற்கான பட்டம் இது. சோழர்களுக்கு உரியது. அப்பா பரகேசரி என்றால் மகன் ராஜகேசரி என்று பட்டம் சூட்டி கொள்வான். அதே போல பாண்டியர்களும் மாறவர்மன், சடையவர்மன் என்ற பட்டத்தை சூட்டிக் கொள்வர். அது மாதிரியான ஒரு பட்டம் தான் இந்த பரகேசரி.
ஒரு தொல்லியல் ஆய்வாளராக மூவேந்தர்களின் சாதி குறித்து உங்கள் பதில் என்ன…?
மூவேந்தர்கள் பற்றிய சாதி தகவல்கள் எந்த கல்வெட்டிலும் இல்லை. அவர்கள் தங்களைச் சத்திரிய சிகாமணி என்று தான் சொல்லிக் கொண்டனர். சத்ரிய சிகாமணி என்றால் போர் வீரர்களில் மணி போன்றவன் என்று பொருள். சத்திரிய சிகாமணி வளநாடு என்று தான் ஆண்ட பகுதிக்கு பெயர் சூட்டினர். எனவே, தங்களை, மன்னர் மரபு என்பதை, நால்வர்ண பகுப்பிலே சத்திரியர்கள் என்றுதான், அதாவது ராஜாக்கள் என்று சொல்லிக்கொண்டதால், இவர்கள் தங்களை சத்திரிய பரம்பரை என்று சொல்லிக்கொண்டனர். என்ன சாதி என்று வெளிப்படையாக மூவேந்தர்கள் காட்டிக் கொள்ளவில்லை. நாம் அடையாளப்படுத்தவும் முடியாது.
தற்போது கீழடியில் கிடைத்த தமிழ் எழுத்துக்களை எந்த நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருத முடிகிறது?
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடியில் நான்காம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கிடைத்த பானை ஓட்டு பொறிப்புகளை கால கணிப்புக்கு உட்படுத்தி புளோரிடா மாநிலத்தில் உள்ள பீட்டா அனலிசிஸ் முறையில் ஆய்வு செய்து ஒரு முடிவைப் பெற்று இருக்கிறது. அதன்படி கிமு 580 காலத்தில் அதாவது இன்றைக்கு சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றுகள் என்று தெரிவித்திருக்கிறார்கள். எனவே, அவர்களால் சொல்லப்படுகிற அறிக்கையின் அடிப்படையில் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டவை என்று உறுதியான முடிவுக்கு வருகிறோம்.
கீழடியில் கிடைக்கப்பெற்ற தடயங்களின் மூலம் வணிக தொடர்பு பற்றி எம்மாதிரியான முடிவுக்கு வர முடிகிறது?
அந்த தடயங்களில் சில ரோமானியப் பானை, ஓடுகள் கிடைத்திருக்கின்றன. அதோடு வேறு சில பானை ஓடுகள், சூது பவள மணிகளால் செய்யப்பட்ட சில மாலைகள் போன்ற பொருள்கள் கிடைத்திருக்கின்றன. சூது பவள மணியின் மூலக் கற்கள் தமிழ்நாட்டை சேர்ந்ததில்லை. அவையெல்லாம் குஜராத் போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டவை. எனவே, அங்கிருந்து கொண்டுவரப்பட்ட கற்களாக, மணிகளாக இருக்கலாம். ரோமானியப் பானை ஓடுகளைக் கொண்டு ரோமானியர்களோடு தமிழர்களுக்கு வணிகம் இருந்தது என்பதை உறுதியாக அறிகிறோம்.
இயக்குனர் பா. ரஞ்சித் கூறிய குற்றச்சாட்டு அல்லது கருத்து என்று கூட வைத்துக்கொள்வோம். அதற்கு ஆதாரம் இருக்கிறதா…
நிலங்கள் பறிக்கப்பட்டதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. சில நிலங்களை பிராமணர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே உரிமைபட்ட, ஒருவரின் நிலத்தை எடுத்து வேறு ஒருவரிடம் கொடுத்திருப்பதையும் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். இன்று தஞ்சாவூரில் பூண்டி வாண்டையார் கல்லூரி இருக்கின்ற பகுதியில் 1008 ஆந்திர பிராமணர்களுக்கு லோகமா தேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் ஒவ்வொருவருக்கும் சுமார் எட்டு ஏக்கர் வீதம் 1008 பேருக்கு கொடுத்திருக்கிறார்கள். இது மாதிரி பல சதுர்வேதி மங்கலங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இவை யாவும் பிராமணர்களுக்காக கொடுக்கப்பட்ட பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள். இவற்றைக் கணக்கிட்டால் குறைந்தபட்சமாக தமிழ்நாட்டில் 600 இடங்களாவது தேறும். தமிழ்நாடு முழுவதும் இவை போன்று பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலப்பகுதிகள் உண்டு. ஒருவர் விவசாயம் செய்து கொண்டிருந்த நிலத்தை இன்னொருவருக்கு மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர பறிமுதல் செய்ததில்லை. அவ்வாறு மாற்றி கொடுக்கின்ற போது குடி நீக்கி கொடுப்பது குடி நீங்கா கொடுப்பது தேவதானம் என்றெல்லாம் சொல்வார்கள். குடி நீங்கி உழுபவர்கள் அதாவது நிலமற்றவர்கள் உடல் உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் அல்லவா அவர்களையும் சேர்த்தே தேவதானமாக கொடுப்பதாகும். குடி நீங்கா தேவதானம் என்று சொன்னால் நீ உனக்கு இஷ்டப்பட்டவர்களை வைத்துக்கொண்டு வேலை செய் என்பதாகும்.
ரஞ்சித் சொல்வது ஒரு பகுதி உண்மை. பள்ளர், பறையர் மக்களின் நிலங்களை பறித்துக் கொடுத்ததாக பொருள் கொள்ள முடியாது. இது போன்ற பிரம்மதேயங்கள் ராஜராஜ சோழன் மட்டும் செய்யவில்லை பல்லவர் காலத்திலேயே பிரம்மதேயங்கள் வந்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால் சங்க காலத்திலேயே பிரம்மதேயங்கள் என்ற சொல் வந்து விட்டன. அந்த காலத்தில் இருந்து பிரம்மதேயங்கள் நிலக் கொடைகள் வருகின்ற நமது பாண்டிய நாட்டு பகுதியிலே வேள்விக்குடி, தளவாய்புரம், இளையான்புத்தூர் செப்பேடுகள் இந்த மூன்று செப்பேடுகளும் இதைத் தான் சொல்கின்றன. ஏற்கனவே நிலங்களை யார் வைத்திருந்தார்களோ அவர்களிடத்திலிருந்து பறித்து வேறு பிராமணர்களுக்கு கொடுத்தபோது அவர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு வரும்போது கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள் அதைத்தான் வேள்விக்குடிச் செப்பேட்டில் பார்க்கிறோம். எனவே, இது ராஜராஜ சோழன் மீது மட்டும் சுமத்தக்கூடிய குற்றச்சாட்டு அல்ல, தமிழ்நாட்டில் மூவேந்தர்கள் மீதும் இந்த குற்றச்சாட்டுக்கு இடம் உண்டு.
கீழடியில் உள்ள தடயங்களின் வழியாக அன்றைய மக்களின் தொழில் குறித்து எம்மாதிரியான முடிவுக்கு வரலாம்…
இப்போதைக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு நெசவு தொழிலை செய்திருக்க வேண்டும் என்பதான முடிவுக்கு வர முடிகிறது. அவை தவிர சுடுமண்ணல் ஆன பொம்மைகள் காதணிகள், சங்கு வலையல்கள் கிடைக்கின்றன. கைத்திறன் தொழிலை அவர்கள் செய்திருக்கின்றனர். ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன என்றும் நாம் முடிவுக்கு வர முடிகிறது.
வேளாண்மை மட்டும் பிரதானமான தொழிலாக கொண்டு வாழ்ந்ததாக முடிவுக்கு வரலாமா
அந்த இடத்தை பொறுத்த அளவில் நமக்கு கிடைத்த சான்றுகளில் வேளாண்மைக்கான சான்று எதுவும் இல்லை இதுவரை வெளிப்படவும் இல்லை
வழிபாட்டுத் தடயங்கள் கிடைக்கப்பெற்றதா?
தமிழ்நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் எந்தவிதமான சமய வழிபாட்டு சான்றுகளும் கிடைக்கவில்லை. அதாவது சங்ககாலம் என்று சொல்லக்கூடிய 2600 ஆண்டு காலம் என்ற வரையறையை நாம் இப்போது வைத்துக்கொண்டால் அந்த காலத்தில் எந்தவித சமய சான்றுகளும் நமக்கு கிடைக்கவில்லை. அதற்கு மாறாக வேறு சில இடங்களில் அகழாய்வு செய்த போது சூடு மண்ணால் செய்யப்பட்ட பெண் தெய்வ உருவங்கள் கிடைத்திருக்கின்றன அவற்றின் காலத்தை கி.மு. பத்து அல்லது ஒன்பது என்று வரையறை செய்திருக்கிறோம் எனவே, இப்போது கீழடியை பற்றி மட்டும் சொல்வோமானால் இதுவரை எந்த சமய சான்றுகளும் கிடைக்கவில்லை. ஆதிச்சநல்லூரில் சங்க காலத்திற்கு முன்பே பெண் தெய்வ உருவம் கிடைத்துள்ளது.
தமிழின் தொன்மை குறித்து இதுவரை நிலவி வந்த கருத்துக்களுக்கு கீழடி எந்த வகையில் நமக்கு உறுதியான சான்றாக அமைந்துள்ளது……
தமிழின் தொன்மை குறித்து 2004 வரை நாம் கொண்டிருந்த கருத்து என்னவென்றால் வட இந்தியாவில் இருந்து வந்த சமண துறவிகள்தான் தமிழ்நாட்டிற்கு எழுத்தை கொடுத்தார்கள் என்று கருதினோம் ஆனால், 2004இல் புலிமான் கோம்பை கல்வெட்டு கண்டறியப்பட்ட பின்னர் அந்த கருத்து மறுக்கப்பட்டது. புலிமான் கோம்பையில் மூன்று நடுகற்கள் கிடைத்திருக்கின்றன. அவை சாமானிய மக்களின் இறப்பு சடங்குகளோடு தொடர்புடையவை. அதில் எந்தவிதமான வட சொற்களும் இல்லை. தனி தமிழில் எழுதப்பட்டவை. இதனுடைய காலத்தை கிமு 4ஆம் நூற்றாண்டு என்று வரையறை செய்கிறோம் அதற்குப் பிறகுப் பொருந்தல் அகழாய்விலேயே கிடைத்த எழுத்து பொறிப்பு கிமு 490 காலத்தைச் சேர்ந்தது என்று அமெரிக்கா ஆய்வின் முடிவை பெற்ற போது, கிமு 500 என்று முடிவு செய்தோம். அதற்குப் பிறகு நடைபெற்ற கொடுமணல் அகழாய்வில் 500க்கும் மேற்பட்ட பானை ஓடுகளிலேயே தமிழில் எழுதப்பட்ட குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பி முடிவுகள் எட்டப்பட்ட போது, கிமு 450 வாக்கில் இந்த எழுத்துக்கள் எழுதப்பட்டன என்ற ஒரு முடிவைப் பெற்றோம். அவற்றை எல்லாம் மாற்றுகின்ற வகையிலே இப்போது கீழடியில் நாலாம் கட்ட அகழாய்வில் கிடைத்த எழுத்துச் சான்றுகள் சுமார் கிமு 6ஆம் நூற்றாண்டுக்கு அதாவது 580 ஆண்டு வாக்கில் இவை எழுதப்பட்டன என்ற ஒரு கருத்தை கொடுத்திருக்கிறது ஒரு நெடிய போராட்டத்திற்குப் பிறகு 10 ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு நாம் மிக தொன்மையான எழுத்துக்கள் கிமு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று நாம் கருதுகிறோம்.
இப்போது தமிழ் மொழி அதற்கு முன்னதாகவே பேச்சு வழக்கில் இருந்திருக்க வேண்டும் அல்லவா…
நிச்சயமாக ஒரு மொழி எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பாக பேச்சு வழக்கில் இருந்திருக்கும். தொகுக்கப்பட்ட சங்க பாடல்கள் எல்லாம் வாய்மொழிப் பாடல்களாக பாடப்பட்டு பிறகு எழுதப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன. உலகில் பல்வேறு தொன்மையான மொழிகளில் உள்ள இலக்கியங்கள் எல்லாம் குறிப்பாக இலியாத், ஒடிசி போன்ற எகிப்து ரோமானிய இலக்கியங்கள் எல்லாம் வாய்மொழி பாடல்களாக இருந்தவை தான் என்பதை மேலைநாட்டு அறிஞர்கள் சொன்னதை மேற்கோள் காட்டி பேரறிஞர் கைலாசபதி சொல்லி இருக்கிறார். தமிழ் சங்கப் பாடல்களும் வாய்மொழி பாடல்களே என்பதை ஒப்பியல் இலக்கிய துறைகளிலே பணி செய்த தமிழண்ணல், கதிர் மகாதேவன் போன்ற பேரறிஞர்கள் நிறுவி இருக்கிறார்கள். எனவே, அந்த வகையில் பார்த்தால் பேச்சு வழக்கு நெடுங்காலம் இருந்திருக்கிறது. பிறகு கல்வி அவர்களுக்கு கிடைத்திருக்கிறது, கல்வியின் மூலமாக பாடல் புனையப்படும் அளவுக்கு ஞானம் பெற்று இருந்திருக்கிறார்கள். நமது கருத்துப்படி கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே சாமானிய மக்கள் மத்தியில் எழுத்து இருந்திருக்கிறது. அது மிக முக்கியம். பானை ஓட்டு குறிப்புகள் அரசர்களுடையதோ செல்வந்தர்களுடையதோ அல்ல; மிகப் பெரிய செல்வந்தர்கள் பயன்படுத்தியதும் அல்ல. சாமானிய மக்களுடைய பயன்பாட்டில் இருந்திருக்கிறது. எனவே, மிகத் தொன்மையான எழுத்தறிவுக்கு உரியவர்கள் தமிழர்கள் என்பதை இதன் மூலம் அறிகிறோம்.
கீழடியில் கிடைத்த சான்றுகளை வைத்து வேளாண்மை மட்டுமே தொழில் என்ற முடிவுக்கு வரலாமா?
முடியாது. ஆதியில், கற்காலத்தில் வாழ்ந்த போது வேட்டை தொழிலில் இருந்தார்கள். புதிய கற்காலம் என்று வருகிறபோது மீன்பிடித் தொழிலோடு வேளாண்மை தொழிலையும் செய்தார்கள். அதற்குப் பிறகு உருவான இரும்புக்காலத்தில் இரும்பின் பயன்பாடெல்லாம் வருகின்ற போது பல்வேறு தொழில்கள் உருவாயின. வேளாண்மை உப தொழிலாகவும் குடிசைத் தொழிலாகவும் மாறியது. இவை பற்றி நமக்கு சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
வழிபாடு அற்ற சமூகம் தான் இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வர முடியுமா…
தங்களுடைய மூதாதையர்களைத்தான் வழிபட்டனர். தாய் தெய்வங்களை வழிபட்டார்கள். தங்களுக்காக உயிர் நீத்த வீரர்களை வழிபட்டார்கள். புறநானூறு 335ஆவது பாடலிலே ‘கல்லே பறவையின் பரவின் அல்லது நெல்லுக்குத்துப் பரவும் கடவுளும் இலமே’ என்று ஒரு தொடர் வருகிறது. நாங்கள் நடுகல்லைத் தவிர வேறு எந்த கல்லுக்கும் எந்த தெய்வத்துக்கும் எந்த கடவுளுக்கும் நெல் அல்லது அரிசி அல்லது உணவு சமைத்து வழிபடுவதில்லை என்று அறிகிறோம். எல்லோரும் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட மக்கள் அப்படிப்பட்ட பண்பாட்டுக்கு உரியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளே மிகத் தொன்மையானது. 1904இல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கூட வயிறு புடைத்த ஒரு தாயின் உருவம் தான் கிடைத்திருக்கிறது. எனவே, வீர வழிபாட்டுக்குரியதாக சமூகத்தை, மூதாதையரை வழிபட்ட மக்களாக இருந்திருக்கின்றனர். இப்போது நாம் பார்க்கக் கூடிய தெய்வங்கள் அப்போது இல்லை.
கீழடியில் சமயம் குறித்து நமக்கு ஏதும் தடயம் கிடைத்திருக்கிறதா…?
இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஆழத்திற்கு மேல் கிடைக்காது. தெய்வ உருவங்கள் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் மேல் அடுக்குகளில் அதாவது 10, 8 நூற்றாண்டு அடுக்குகளில் கிடைக்க வாய்ப்பு உண்டு. தாய் உருவம், பால் குடிக்கின்ற குழந்தை உருவம் உள்ள உருவங்கள் கிடைக்கலாம். வேறு சில உருவங்கள் கிடைக்கக்கூடும். ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அகழாய்வுகளில் சமயம் சார்ந்த வழிபாடு சார்ந்த தடயங்கள் இதுவரை வெளிப்படவில்லை.
வைகைக் கரை தமிழ் பண்பாடு என்று கீழடி நாகரீகத்தை பெயர் வைத்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன…
பெயர் வைப்பதில் தவறில்லை. ஏனென்றால், எல்லாமே நதிக்கரை நாகரிகங்கள் தான். வைகைக் கரையில் இப்படியான பரந்துபட்ட விரிவான நாகரீகம் இருந்திருக்கின்றது. எழுத்து அறிவு பெற்ற பண்பாட்டுச் செழுமை மிக்க நாகரீகம் இருந்திருக்கிறது. வைகைக்கரை முழுவதும் 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் இருக்கின்றன என்று கணக்கிட்டு குறிப்பாக இப்போது நாம் கீழடியை பார்க்கின்றபோது புள்ளிமான் கோம்பை கூட வைகை நதியின் கரையில் தான் இருக்கிறது. எனவே, அவ்வாறு வைகை நாகரிகம் என்று பெயரிடுவதில் எந்த தவறும் இல்லை.
கீழடி ஆய்வுகள் குறித்து பல்வேறு அரசியல் பேசப்படுகிறது. முக்கியமாக கீழடியை குறிப்பிட்டு பேசும்போது திராவிடம் என்று சொல்லாடலை பேசுகிறார்களே, இது ஏற்கக் கூடியதுதானா?
என்னை பொறுத்த அளவில் தமிழர் நாகரீகம் என்பதே போதுமானதாகும். திராவிடம் என்ற சொல் இந்தியாவில் முதன்முதலில் கி.பி. 1ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சொல்லாகும். கி.மு. 1ஆம் நூற்றாண்டிலேயே ‘சமவயங்க சுத்த’ என்ற சமண நூல் எழுதப்பட்டது. அந்த நூலில் இந்தியாவில் இருக்கக்கூடிய 18 வகையான எழுத்துக்களைச் சொல்லுகின்ற போது ஒன்றுபம்மி இன்னொன்று தமிழி என்று சொன்னார்கள். அந்தத் ‘தமிழி’ என்பது நமது தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்த எழுத்தாகும். அதாவது எழுத்து வகை. ஆனால், கிபி 1ஆம் நூற்றாண்டில் புத்த நூலான லலித விஸ்தரம் என்ற நூலில் 64 வகையான எழுத்து வகைகளின் பட்டியல் இருக்கிறது. அதில் ‘தமிழி’ என்பது இல்லை. அதற்கு மாறாக திராவிடி என்ற சொல் உள்ளது. அந்த காலகட்டத்தில் தமிழி என்றாலும் திராவிடி என்றாலும் ஒன்றுதான். தமிழி, தமிழ் என்று உச்சரிக்க முடியாதவர்கள்; அதாவது, ஏற்கனவே பாவாணர் சொன்னது போல, தமிழை தெளிவாக உச்சரிக்க முடியாதவர்கள் தமிழி, திராவிட, திராவிடி என்ற உச்சரித்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கி.பி. 1ஆம் நூற்றாண்டை பொறுத்தளவில் தமிழி என்றாலும் திராவிடி என்றாலும் ஒன்றுதான். அதை இப்போதைய கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. இப்போது தமிழ் தேசியம், திராவிட பண்பாடு போன்ற ஆய்வுகளின் கண்ணோட்டத்தோடு கருத்தைப் புகுத்த கூடாது. ஏனென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் தேசியமும் இல்லை, திராவிட கருத்தாக்கமும் இல்லை. தமிழில் இருந்து பிரிந்தது தான் மற்ற மொழிகள் என்பதை அனுபவ ரீதியாக உணர்கிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு பலர் தயங்குகிறார்கள். இன்று தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய கல்வெட்டுகளை போன்று அதற்கு சமமாக கேரளாவிலோ அல்லது கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ இவ்வளவு தொன்மையான எழுத்துக் கல்வெட்டு கிடைக்கவில்லை. கேரள பகுதியில் ஒரு சில தமிழி கல்வெட்டுகள் கிடைத்து இருக்கின்றன. ஆனாலும் கூட அங்கிருக்கும் பெருவாரியான படித்த சமூகம் என்று சொல்லக்கூடிய மக்களே நாங்கள் மலையாளிகள் தனியானவர்கள் என்று பிரித்துப் பேசுகிறார்கள். மூவேந்தர்களில் சேரர்கள் தமிழர்கள் என்று நாம் பேசினாலும்கூட இப்போது மலையாளிகள் மற்றும் தமிழைச் சார்ந்தவர்கள் கூட ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள்.
அவர்களை விட கர்நாடகக்காரர்களும் ஆந்திரக்காரர்களும் ஒரு தெளிவற்ற முடிவுகளில் இருக்கிறார்கள். அதை நாம் மறுப்பதற்கு இல்லை. ஆனால், அவர்கள் சமஸ்கிருதத்தை தங்களுடைய மொழிகளில் ஏற்றுககொண்டார்கள். தமிழ் தனித்துவம் வாய்ந்த மொழியாக அன்றிலிருந்து இன்று வரை நிலைக்கிறது. அவர்கள் சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டதால் அவற்றின் மொழி அழிந்துவிட்டது. தனித்தன்மை போய்விட்டது. ஆனால், தமிழர்களின் தனித்தன்மை இன்றும் அப்படியே இருக்கிறது. தமிழிலே வர்க்க எழுத்துக்கள் கிடையாது. வடமொழிக்கும் மற்ற மொழிகளுக்கும் வர்க்க எழுத்துக்கள் உண்டு. இதனால் அவர்கள் பேசுகின்ற மொழியால் 10% கன்னடமும் தொண்ணூறு சதவீதம் சமஸ்கிருதமும் கலந்து விட்டது. அவர்கள் அதனை அறியாமல் இருக்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நான் பட்டடக்கல் என்ற பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தேன். அந்தப் பகுதியினுடைய சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பட்டாபிஷேகம் என்ற வார்த்தையைக் கூறினார். சாளுக்கிய மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்துகொண்ட அந்த இடத்தை விளக்கிக் கூறும்போது பட்டாபிஷேகம் என்று கூறினார். அதற்கு நான், “பட்டாபிஷேகம் என்பது சமஸ்கிருதச் சொல், அதை நீங்கள் கன்னடத்தில் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர், “கன்னடத்திலும் பட்டாபிஷேகம் என்றுதான் கூறுவோம்” என்றார். எனவே, கன்னடத்திற்கும், சமஸ்கிருதத்திற்கும் வேறுபாடு தெரியாத மக்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், தமிழர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஓரளவுக்கு படித்தவர்கள் எது தமிழ் சொல் எது வடசொல் என்று பிரித்து அறிந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் வடமொழியை நமது எழுத்து மரபிலே ஏற்றுக் கொள்ளாததுதான். எனவே, இதுதான் அவர்களுக்கு எரிச்சல் உண்டாக்கும் விதமாக இருக்கிறது. 2000 ஆண்டுகளாக தமிழ் தனித்து இயங்குகிறது. ஒரு சில சொற்கள் நம்மை அறியாமல் தமிழ்மொழியில் கலந்து விட்டாலும் கூட தொண்ணூறு சதவீதம் தனித் தமிழாகவே இயங்குகிறது. இதனைத் திராவிட மொழி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் தமிழர்கள், தமிழ் மொழியை தனித்துவமாக காப்பாற்றி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அதில் நமக்குப் பெருமையும் கூட.
தினகரன் ஜெய் <dinakaranjai20@gmail.com>