அயோத்தி: மதங்களைக் கடந்த மனிதநேயம் – அ. இருதயராஜ்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தமிழ் திரைப்படம் பார்த்த அனுபவம். காரணம், ‘அயோத்தி’ திரைப்படம் எடுத்துக்கொண்ட கதைக்களம், மையக்கருத்து, பார்வையாளர்களோடு ஒன்ற வைக்கின்ற ஒளிப்பதிவு, நெஞ்சை வருடுகின்ற ஆழமான வசனங்கள், மனித உணர்வுகளை துல்லியமாக பதிய வைக்கக்கூடிய இசை – எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது. திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்ற வகையில், அந்தந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களையும் நிகழ்வுகளையும் சீர்தூக்கி பார்த்து, அதை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கின்ற வேலையை சிறப்பாக செய்திருக்கின்து. மதம், சடங்குகள் சம்பிரதாயங்கள், பாரம்பரியம், மூட பழக்க வழக்கங்கள் இவை அனைத்திற்கும் மேலாக தியாக உணர்வும் மனிதாபிமானமும் உயர்வானது என்பதை உரக்கச் சொல்லுகின்ற படமாக ‘அயோத்தி’ அமைந்திருக்கின்றது. எனவேதான் இது குறித்து பேசவும் சிந்திக்கவும் விவாதிக்கவும் நாம் முயற்சி எடுக்கிறோம்.
‘அயோத்தி’ எந்தவிதமான வணிக ரீதியான விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் எடுக்கப்பட்டிருக்கின்றது. முழுக்க முழுக்க கதையும் கதை சொல்ல வருகின்ற செய்தியும்தான் இங்கே மையமாக இருக்கின்றது. இந்த வகையில், நவீன தமிழ் சினிமா வரலாற்றில் பல படங்கள் முத்திரை பதிக்கின்றதாக இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘அயோத்தி’ திரைப்படமும் ஆழமான தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகின்ற ஒரு மைல் கல்லாக அமையக்கூடியது.
உணர்வுகளைத் தொடும் அழுத்தமான திரைக்கதை
படத்தின் பெயரைப் பார்த்த உடனே பார்வையாளர்கள் சற்று குழப்பம் அடைவார்கள். ‘அயோத்தி’ என்ற பெயரை தாங்கி இருப்பதால், ஒர் அரசியல் படமாகவோ அல்லது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டுகின்ற பிரச்சினையை மையமாக கொண்டதாகவோ இருக்கும் என்கின்ற சந்தேகத்தோடுதான் நானும் திரையரங்கத்திற்குள் சென்றேன். அதற்கேற்ற வகையில் படமும் வட மாநிலத்தில் உள்ள அயோத்தியில்தான் தொடங்குகிறது. ஆனால், பத்து நிமிடங்கள் கழித்து அப்படியே திரைக்கதை மதுரை மற்றும் ராமேஸ்வரத்திற்கு நகர்கின்றது.
அயோத்தியில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பம். கணவன், மனைவி, மகள், மகன் என்று வாழ்கின்ற அந்த குடும்பத்தில் பல்ராம் (யாஷ்பால் ஷர்மா) என்பவர் குடும்பத் தலைவராக இருக்கிறார். இவர் கோவிலுக்கு அருகில் பூமாலை விற்கின்ற ஒரு பாரம்பரியமிக்க இந்து மதத்தைச் சார்ந்தவர். இந்து மத சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மிக இறுக்கமாக கடைபிடிக்கின்றனர். அதோடு ஆணாதிக்கத்தின் உச்சத்திற்கே சென்று, அவர் சொல்வதும் அவர் நினைப்பதும்தான் குடும்பத்தில் நடக்க வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு பிற்போக்குவாதி. மனைவி, பிள்ளைகளை அன்பால் அல்ல அதிகாரத்தால், அறியாமையால் அடக்கி ஆளுகின்ற ஆணாக இருக்கிறார். வீட்டிற்கு வந்தாலே மனைவி, பிள்ளைகள் எல்லோரும் நடுங்கக் கூடிய வகையில் அவருடைய சொல்லும் செயல்பாடும் நடத்தையும் இருக்கின்றது.
தீபாவளியன்று குடும்பத்தோடு இராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார், பல்ராம். மதுரை வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் பயணித்தவர்கள், மதுரையில் இறங்கியவுடன் பிரச்சினைகளைச் சந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.
மதுரையிலிருந்து வாடகை டாக்ஸி எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் நோக்கி செல்லுகின்ற பொழுது, பலராமின் ஆணவத்தாலும் அடாவடித்தனத்தாலும் ஓட்டுநரோடு மோதல் போக்கு ஏற்படுகிறது. ஒரு வாடகை காரில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. மிகவும் அநாகரிகான முறையில் பான்பராக்கை வாயில் போட்டு எச்சிலை துப்புவது, ஏசி இல்லையா என்று மிரட்டுவது என காரில் பயணிக்கின்ற எல்லோரையும் எரிச்சலுக்கு உள்ளாக்குகிறார். “இன்னும் வேகமாக போ” என்று ஓட்டுநரை அதட்டுகிறார். பல்ராம், தன்னை இந்தியில் அசிங்கமாகத் திட்டுவதை அறிந்த ஓட்டுநர், வண்டியை ஓட்டிக்கொண்டே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஒர் இடத்தில் வாக்குவாதம் முத்திப் போகவே, பலராம் ஓட்டுநரைக் கன்னத்தில் அடித்து விடுகிறார். எனவே, இருவருக்கும் ஓடுகின்ற வண்டியில் சண்டை ஏற்பட்டு விபத்து ஏற்படுகின்றது. இதற்கு ஓட்டுநர் எந்த விதத்திலும் காரணம் இல்லை.
ராமேஸ்வரத்திற்கு சென்று தெய்வத்தை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கின்ற வழியில் தெய்வ உருவில் இருக்கின்ற மனிதனை மதிக்கத் தெரியாத மனிதனை திரையில் பார்க்கிறோம். இந்த விபத்து ஏற்பட்டதற்கு தெய்வம் காரணமா அல்லது மனிதர் காரணமா என்ற கேள்வி கூட மனதில் எழுகின்றது.
கார் விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு பல்ராம் மனைவி இறந்துவிடுகிறார். மனைவி இறந்துவிட்டாள் என்கின்ற சோகம் கூட பல்ராம் முகத்தில் இல்லை. பிள்ளைகள் மட்டுமே அழுது கொண்டிருக்கின்றனர். அவருடைய எண்ணமெல்லாம் இறந்த மனைவியின் உடலைத் தன்னுடைய சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அவளுடைய ஆன்மா சாந்தியடையுமளவுக்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதைச் சுற்றியே வட்டமடிக்கிறது. அப்படி செய்தால் அவள் மோட்சம் அடைவாள் என்கின்ற எண்ணம்தான் அவருக்கு மேலோங்கி இருக்கிறது.
விபத்தில் இறந்த மனைவி உடலை, உடற்கூராய்வு செய்து, பின்பு எம்பாம் செய்து, விமானத்தின் வழியாக இறந்த உடலை அயோத்திக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கேயும் பல்ராம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இறந்த உடலை எடுத்துச் செல்லுகின்ற இந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்களும் பெற்ற உதவிகளும்தான் ஒட்டுமொத்த படம்.
தமிழ்நாட்டில் பல்ராம் குடும்பத்துக்கு உதவ முன்வருகின்ற நபர்கள் ஒவ்வொருவரும் தமிழில்தான் பேசுகிறார்கள். என்றாலும், படம் முழுவதும் பல்ராமின் குடும்பத்தினர் இந்தி மொழியில் தான் பேசுகிறார்கள். இது அவர்கள் உணர்வு தளத்திற்குள் நாம் எளிதில் செல்வதற்கு உதவுகின்றது. ஒருவேளை அவர்கள் ஹிந்தியில் பேசாமல் தமிழிலேயே பேசியிருந்தார்கள் என்றால், நாம் படத்தோடு ஒன்றியிருக்க முடியாது. ஹிந்தியில் பேசுகின்ற வடமாநிலத்தவரும் இவ்வளவு ஆழமாக உணர்வுகளை வெளிகொணறும் வகையிலே இயல்பாக நடித்திருக்க முடியாது.
படத்திலே காட்சிக்கு காட்சி அழுகையும் துன்பமும் கண்ணீரும் வெளிப்பட்டாலும் அதற்கு இணையாக இன்னொரு பக்கம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. மனித வாழ்விலே மகிழ்ச்சி ஒருபுறம் இருக்கின்றது. துன்பம் இன்னொரு புறம் சமமாக பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. இப்படி துன்பம், மகிழ்ச்சி இரண்டையும் பக்கத்தில் பக்கத்தில் காட்டுவது திரைக்கதைக்கு வலுவூட்டுகிறது.
திரைக்கதையில் மரணம் ஒரு மையமான செய்தியாக இருக்கிறது. முன்பின் தெரியாத மனிதர்களின் உதவி பாதிக்கபட்ட குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. இதன்மூலம் மதங்களைக் கடந்த மனித நேயம் தான் எல்லாவற்றுக்கும் மேலானது என்பதை திரைக்கதை ஆழமாகச் சொல்கிறது.
ஆணாதிக்கமும் மத சம்பிரதாயங்களும்
ஆணாதிக்கத்திற்கும் மத சம்பிரதாயங்களுக்கும் நெருங்கிய தொடர்பும் உறவும் இருக்கின்றது என்பதை இந்த திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. அயோத்தியில் பூமாலை கட்டி, அங்கு வருகின்ற பக்தர்களிடம் விற்கிற ஒரு சாதாரண பூ வியாபாரிதான் பல்ராம். மிகவும் பிற்போக்குத்தனமானவர். பூ வாங்க வருகின்ற சாதாரண மனிதர்களிடம் கடமையாகப் பேசுகிறார்; ஆனால், அங்கு வருகின்ற கோவில் பூசாரியிடம் சிரித்து பேசுகிறார். அவர் வீட்டிற்கு வருகின்ற பொழுது முகத்தை இறுக்கமாக வைத்திருக்கிறார். வீட்டில் பல்ராம் சொல்வது மட்டும்தான் நடக்க வேண்டும். அவர் நினைத்ததை மட்டும்தான் மனைவியும் இரு பிள்ளைகளும் செய்ய வேண்டும். மனைவி அவரைப் பார்த்து நடுங்குகிறார். பிள்ளைகள் அப்பா வந்தவுடன் பயத்திலும் வீதியிலும் இருக்க வேண்டிய சூழல். தெய்வத்தை வழிபடுவது, நேர்ச்சை செய்வதற்காகப் புனிதப் பயணம் மேற்கொள்வது என்று அனைத்தையும் தீர்மானிக்கிறவராக அவரே இருக்கிறார்.
சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஒரு மனிதன், தெய்வத்திற்கு எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? அல்லது தெய்வத்திற்கு செய்கின்ற எல்லா செயல்களையும் எப்படி சரி என்று சொல்வது? ஆனால், அவரது அப்பாவி மனைவி, தன்னுடைய கணவன் ராமேஸ்வரம் சென்று புனித நீரில் குளித்தால், ஒரு வேலை மாறுவான்; அவன் நல்ல மனிதனாக வாழ்வான் என்கின்ற ஆசையை தன்னுள் கொண்டிருக்கிறாள். அவளது எல்லா ஆசையும் கனவும் விபத்தில் முடித்து விடுகின்றது.
வைதீக மதங்கள் அனைத்தும் பெண்ணை அடிமைப்படுத்துவதற்கான பல்வேறு கூறுகளை வழிபாட்டுக்குள்ளும் சடங்குகளுக்குள்ளும் வைத்திருக்கின்றன. ஒரு பெண் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது. அவள் பூப்படைந்தவுடன் கோவிலுக்குள்ளேயே வரக்கூடாது. மாதவிடாய் காலங்களில் தெய்வத்தை வழிபடக்கூடாது என்ற பல்வேறு சட்டதிட்டங்களை பெண்களுக்கு மட்டும் உருவாக்கி வைத்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக கணவனை இழந்த மனைவி, விதவை என்கின்ற நிலையை ஏற்றபின் அவளின் நிலைமையோ இன்னும் மோசமாக இருக்கிறது. வீட்டில் நடக்கின்ற நல்ல வைபவங்களுக்கு கூட அவள் செல்ல முடியாது. கணவன் இறந்த பிறகு அவளுக்கு உணர்வுகள் கிடையாது. வாழ்க்கையே கிடையாது என்கின்ற ரீதியிலே அவளை சமூகம் மைய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறது.
சொந்த மனைவி, பிள்ளைகள் என்றாலும்கூட ஆணாதிக்க திமிர் கொண்ட ஒரு ஆண், அவர்களுடன் எவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார் என்பதை அந்த குடும்பம் மதுரையில் இறங்கியவுடன் பல்ராம் நடத்தையில் பார்க்க முடிகின்றது. நீண்ட பயணத்துக்கு பின் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று மகள் சொல்லுகின்றாள். அதற்கு தாயும் தயக்கத்துடன் பரிந்துரை செய்கின்றாள். ஆனால், தந்தை, ‘கோவிலுக்கு போகிறதுக்கு முன்பாக ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள். நாம் விடியும் முன்பு இராமேஸ்வரம் செல்ல வேண்டும். கொஞ்சம் அடக்கிக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லி வற்புறுத்தி அவர்களை காரில் ஏற்றுகிறார். ஒரு கழிப்பறைக்குச் செல்லுகின்ற சுதந்திரம்கூட பெண்ணுக்கு இல்லை என்பதை அழுத்தமாக அந்த காட்சி பதிவு செய்கின்றது. அதேபோல மனைவி இறந்த உடனையே, ‘அவளின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பக்கூடாது. மத முறைப்படி மனித உடம்பில் கத்தி படாமல், அறுபடாமல் ஈமச்சடங்கு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவளின் ஆன்மா சாந்தி அடையும்’ என்பதில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். மனைவி இறந்ததைப் பற்றிய கவலையைவிட, மத சடங்குகளின் படி அவள் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார். அதற்காக அயோத்தியில் உள்ள ஒரு பூசாரியோடு தொடர்புகொண்டு பேசுகிறார்.
மனைவி உடலில் எந்த கத்தியும் படாமல்தான் அவள் எரிக்கப்பட வேண்டும் என்பது அவரது மத சாஸ்திரம். எனவே, அதை மனதில் வைத்துக்கொண்டு உதவி செய்த செய்ய வந்த சசிக்குமாரிடமும் அவருடைய நண்பர்களிடமும் பல்ராம் சண்டை போடுகிறார். உடற்கூறாய்வு செய்யக்கூடாது, மத சாஸ்திரப்படிதான் உடல் எரிக்கப்பட வேண்டும் என்று இவர் பேசுவது அறிவாளி போலவும், உதவி செய்ய வந்தவர்கள் முட்டாள் போலவும் தான், நமக்கு தோற்றம் அளிக்கும்.
தன்னுடைய மனைவி உடலை விமானத்தின் மூலம் எடுத்து செல்வதற்கு, மொழி தெரியாத ஊரில் அவர் கையறு நிலையில் இருக்கிறார் என்பதை ஒருபோதும் அவர் உணரவில்லை. இதுதான் மேட்டிமைத் தனத்தின் உச்சகட்டம்.
ஒரு வழியாக பேசி உடற்கூறாய்வு முடிகிறது. பின்னர் உடலைப் பெற்றுக்கொண்டு பிணச்சீராய்க்கு அனுப்ப வேண்டும். அப்பொழுதுதான் அதை விமானத்தில் ஏற்ற முடியும் என்பதை மருத்துவர்கள் சொன்ன பிறகும் அங்கேயும் சண்டை போடுகிறார்.
‘உடற்கூறாய்வு செய்ததால் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்; இப்பொழுது பிணச்சீராய்க்குச் சம்மதிப்பதன் மூலமாக இன்னும் கூடுதலான பாவம் செய்வேன்’ என்று வாதாடுகிறார். கோபத்தில் கத்துகிறார். நீங்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள் என்று எல்லோரையும் திட்டுகிறார். என்னுடைய மனைவியின் ஆன்மா எப்படி சாந்தியடையும்? அவள் எப்படி பரலோகம் போவாள்? என்பது தான் அவருடைய கவலையாக இருக்கின்றது. மனைவி இறந்தது அல்ல, அவள் எப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் அவருடைய கவலை. அந்த இடத்தில் மகள் வெடித்து கிளம்புகிறாள்.
முடிந்தவுடன் கடைசியாக எல்லோரும் முகத்தை பார்த்த பிறகு சவப்பெட்டியை மூட வேண்டும். அதற்கு முன்பாக ராமேஸ்வரம் கொண்டுவந்த தீர்த்தத்தை தெளித்து விடுகிறார். இதிலே இயக்குநர் படம் பார்ப்பவர்களின் சென்டிமென்டை தொட்டுச் செல்கிறார்.
மரணம் கற்றுத்தரும் வாழ்க்கை பாடம்
எல்லா மனிதருக்கும் பிறப்பு இருப்பது போல இறப்பும் நிச்சயம் இருக்கின்றது என்பதை மனிதன் மறந்த செயல்படுகிறான். ஆனால், ஒரு நாள் மரணம் அவனுடைய வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ள முடியாத பாடங்களைச் சொல்லித் தந்துவிட்டு போகிறது.
தெய்வத்தைத் தேடித்தான் அவர்கள் இராமேஸ்வரத்திற்கு புனித பயணம் மேற்கொண்டார்கள். ஏன் அவர்கள் விபத்தில் மாட்டிக்கொள்ள வேண்டும்? பாசத்திற்குரிய அம்மாவை இழந்து நிற்கும் இரண்டு பிஞ்சு உள்ளங்கள்; மொழி தெரியாத ஊரில் எப்படி இறந்த பிணத்தை தன்னுடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியும் என்கின்ற தத்தளிப்பு அங்கே வெளிப்படுகிறது. ஆனாலும், அம்மாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கு உதவ வருகின்றவர்களிடம் எல்லாம் சண்டை போடுகின்ற அப்பாவின் முரட்டுத்தனம். இது எல்லாமே புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கின்றது. திசை தெரியாத ஒரு சூழலில் அந்த மரணம் முன்பின் தெரியாத மனிதர்களை ஒன்றிணைக்கின்ற பாலமாக இருக்கின்றது. அவள் தன்னுடைய மரணத்தின் மூலமாக கணவனுக்கு பாடம் புகட்டுகிறாள்.
குடும்பத்தோடு ராமேஸ்வரத்திற்கு கிளம்புகின்ற பொழுது எல்லாம் நன்றாக அமையும் என்ற எண்ணம்தான் அவர்களிடத்தில் இருந்திருக்கும். இடையில் இப்படி ஒரு விபத்தை சந்தித்து, அதில் ஜானகி இறந்து போவாள் என்று ஒருபோதும் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அந்த மரணத்துக்கு வழிவகுத்தது பல்ராமின் அரக்கத்தனமான செயல்பாடுதான். மனித வாழ்வில் இப்படி சின்ன சின்ன தவறுகளால்தான் பெரிய மரணங்களை சந்திக்க வேண்டிய சூழல் அமைந்து விடுகின்றன.
வயது முதிர்ந்து, உடல் நோய் கண்டு, மருத்துவ சிகிச்சை பலனின்றி இறப்பதை ஓரளவுக்கு புரிந்துகொள்ள கூடியதாக இருக்கின்றது. ஆனால், ஒரு தனி மனிதனின் ஆணவ போக்கால், கட்டுக்கடங்காத கோபத்தின் காரணமாக, கிறுக்குத்தனமாக நடந்து கொள்வதன் வழியாக மரணத்தைத் தேடிக்கொள்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த காரில் பயணிக்கின்ற பொழுது, பல்ராம் ஓட்டுநரோடு இயல்பாக பழகி இருந்தால், மரியாதையாக நடத்தி இருந்தால், சண்டை போடாமல் இருந்திருந்தால், விபத்து நடந்திருக்கவே முடியாது. மரணம் நடந்திருக்காது. மனிதன் தெரிந்தே செய்கின்ற தவறான செயல்களாலும் திமிர் பிடித்த எண்ணங்களாலும்தான் விபத்தையும் மரணத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறான் என்பதையும் இந்த படம் நமக்கு புரிய வைக்கிறது.
விபத்தில் ஏற்பட்ட அந்த மரணம்தான் பல்வேறு நல்ல விஷயங்களையும் நமக்கு கற்றுத் தருகிறது. முன்பின் தெரியாத ஊரில், மொழி தெரியாத அந்த ஓட்டுநரின் நண்பர் சசிகுமார் தான் உதவிக்கு ஓடி வருகிறார். காரில் பயணித்த பலராமின் தவறுதலால்தான் விபத்து நடந்தது என்பதை அறிந்தும் அந்த பிள்ளைகளின் முகத்தை பார்த்து உதவி செய்ய முன்வருகிறார். ஒரே நாளில் அவர் எடுக்கின்ற முயற்சியில்தான், இறந்த உடலுக்கு எல்லா விதமான மருத்துவ ரீதியான சம்பிரதாயங்களையும் முடித்து, விமானத்தில் அனுப்ப முடிகிறது. மதங்களைக் கடந்த மனித நேயம் அங்கே உயர்ந்து நிற்கின்றது.
மருத்துவ சம்பிரதாயங்களை முடிப்பதற்கு அப்பா மீண்டும் மீண்டும் தடையாக இருக்கிறார் என்று தெரிந்த உடனேதான் மகள் வெடித்து கிளம்புகிறாள். அப்பாவை பிடித்து தள்ளி, ”வாழும்போது எங்க அம்மாவை நிம்மதியா வாழ விடவில்லை. செத்த பிறகு அவருடைய சாந்தியை பத்தி பேசறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? ஓட்டுநரை வேகமாக ஓட்டு வேகமாக ஓட்டு என்று சொல்லி கலவரத்தை ஏற்படுத்தியது நீதான். எங்க அம்மாவ கொன்றது நீ தான். ஒரு கணவனா, ஒரு அப்பாவா எங்களுக்கு என்ன செஞ்சிருக்கீங்க?. யாருன்னு தெரியாத இவங்க காலையிலிருந்து நமக்கு உதவி செஞ்சுட்டு இருக்காங்க. வாய மூடிட்டு ஓரமா ஒதுங்கி உட்காருங்க. எங்க அம்மாவை நாங்க கூட்டிட்டு போகிறோம்” என்று தைரியமாக பேசும் அவளுடைய வார்த்தைகள் அற்புதமானவை. அவை நெஞ்சை தொடுகின்ற வகையில் இருக்கின்றது.
அந்த தருணத்தில்தான் பல்ராமும் யோசித்துப் பார்க்கிறார். தன்னுடைய அரக்கத்தனத்தை அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். மனைவியின் சடலத்துக்கு முன்னால் மண்டியிட்டு கதறி அழுகிறார். அந்த அழுகையில் தன்னுடைய மனைவியின் மரணம் குறித்து யோசிக்கிறார். மனைவியின் மரணத்திற்கு முன்னால் அவருடைய ஆணாதிக்க சிந்தனை, அடாவடித்தனம், முரட்டுத்தனம், பிற்போக்குத்தனம் எல்லாம் சுக்கு நூறாய் உடைகிறது. ஒரு மரணம் மிகப்பெரிய பாடத்தை கற்றுத் தருகிறது.
மனித வாழ்வின் கையறு நிலை
ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் மேடு பள்ளங்கள் இருக்கின்றன. கஷ்டங்களும் நஷ்டங்களும் வந்து போகின்றன. துன்பங்களைச் சந்திக்கிறோம். தோல்விகளைச் சந்திக்கிறோம். இவற்றோடு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்ற நிலையையும் சந்திக்கிறோம்.
பல்ராமின் குடும்பம், முன்பின் தெரியாத ஊரில், புதிய ஒரு இடத்தில், உதவி செய்ய யாருமே இல்லாத ஒரு சூழலில், ஒரு கையறு நிலையைச் சந்திக்கிறது. எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில், தன்னுடைய நண்பன் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளானது என்பதை தொலைபேசி வழியாக தெரிந்துகொண்ட சசிக்குமார் அவனுக்கு உதவி செய்ய மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். புகழ் என்ற இன்னொரு நண்பனோடு மருத்துவமனைக்கு வந்த அந்த நேரம் முதல், பல்ராம் குடும்பத்தினர் நிலை பார்த்து, அவர்களை விமானத்தில் அனுப்புவது வரை, அன்றைய நாள் முழுவதும் பம்பரமாக சுழன்று இருவரும் உதவி செய்கிறார்கள். பல்வேறு தடைகளைச் சந்திக்கிறார்கள். அந்தத் தடைகளில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளையும் தேடுகிறார்கள்.
அன்றைக்குதான் தீபாவளிக் கொண்டாட்டம். வீட்டிலிருந்து நண்பர்களோடு தீபாவளியைக் கொண்டாடியிருக்கலாம். அவர்களுக்கு எவ்வளவோ முட்டுக்கட்டைகளும் முரண்பாடுகளும் வந்து முன்நிற்கின்றன. அதேநேரம், இது சாத்தியம் இல்லை என்ற சூழல் வருகின்ற போதும், அடுத்து நல்லது நடப்பதற்கும் உதவிகளை பெறுவதற்குமான வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கின்றது என்பதையும் திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்கின்றது. மனிதன் தன்னுடைய கையறு நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு உதவ நல்ல மனிதர்களும் தாராள மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. இதன்மூலம் இந்த உலகம் இன்னும் எவ்வளவு அழகானது என்பதை படம் சுட்டிக்காட்டுகிறது.
இறந்த ஜானகியை உடற்கூறாய்வு செய்து, மருத்துவ ரீதியான சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்து, அவர்களை விமானத்தின் மூலம் சொந்த அனுப்புவதற்கு ஒரே நாளில் ஏழு வகையான சான்றிதழ் பெற வேண்டும் என்பது ஒரு சவால். அடுத்து அவர்களுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்வதிலே சிக்கல். சவப்பெட்டி கொண்டு வருவதில் பிரச்சினை. உடல்கூறாய்வு (Post-Mortem) முடித்தவுடன், பிணச்சீராய்வு (Embalming) செய்வதற்கு தடைகள்… இப்படி பல இருக்கின்றன. எத்தனை எத்தனைத் தடைகளை அவர்கள் தாண்டி வரவேண்டி இருக்கிறது.
உதவி செய்ய வந்தவருக்கு ஏன் இவ்வளவு துன்பங்கள் என்கின்ற கேள்வி கூட பார்வையாளர் மனதில் எழலாம். ஆனால், அப்படிப்பட்ட சவால் மிக்க சூழலிலும் கையறு நிலையிலும் நம்பிக்கை பிரகாசமாக வெளிப்படுகின்றது. ஏனென்றால், ஒவ்வொரு தடையும் ஏற்படுகின்ற பொழுதும் அதற்கு நேர் மாறாக உதவி செய்வதற்கும் பலர் முன் வருகின்றனர் என்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
தீபாவளி தினத்தன்று உதவி செய்ய முன்வருகிற மருத்துவர்கள், சான்றிதழில் கையெழுத்திடுவதற்கு வருகின்ற மருத்துவமனை டீன், சவப்பெட்டியை இலவசமாக கொண்டு வந்து தருகின்ற அந்த தனி மனிதர், தன்னுடைய புது பைக்கை விற்றுவிட்டு அவர்களை அனுப்பி வைப்பதற்காக செலவழிக்க முன் வருகின்ற சசிக்குமாரின் நண்பன்; கடைசியிலே ஒருவர் தான் விமானத்தில் பயணிக்க முடியும் என்கின்ற நிலையில், யாராவது இருவர் விட்டுக் கொடுத்தால் அவர்களுக்கு பதிலாக இந்த இறந்த குடும்பத்தில் இருவர் பயணிக்க முடியும் என்ற நிச்சயமற்ற சூழலில், தாராளமாக முன்வந்து தங்களுடைய டிக்கெட்டில் அவரகளை பயணம் செய்ய சொல்லுகிற அந்த மூத்த தம்பதியர்; இப்படி எல்லோருமே மாமனிதர்களாக நம் முன்னே காட்சியளிக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாகவும் பிறரன்பை உணர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
படத்தில் வெளிப்படும் மதநல்லிணக்க கூறுகள்
மதங்கள் மனித வாழ்க்கையை பண்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்வதற்கும் அதை இன்னும் மேம்படுத்துவதற்கும்தான் மதங்கள் உதவ வேண்டுமே ஒழிய மனிதர்களை பிரிக்கக்கூடாது என்று தான் எல்லோருமே விரும்புகிறார்கள். ஆனால், மதத்தின் அடிப்படையில் சண்டைகளை மூட்டுவதற்கும் பிரிவினையை ஏற்படுத்துவதற்கும் ஒரு சில சித்தாந்தங்கள் தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபடுகின்றன. இதை முறியடிக்கிற வகையிலே, மக்கள் தங்கள் வாழ்வியல் சூழலில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சமாதானத்துடனும் அன்பு உறவுகளுடனும் வாழ்கிறார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன.
குறிப்பாக அடித்தட்டு மக்கள் மத்தியில் மதங்களைக் கடந்த மனிதநேயம் இயல்பாக வெளிப்படுகின்றது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என்று எல்லோரும் இணக்கமான வகையிலே வாழ்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மத விழாக்களின் போது மற்ற மதத்தவர்களுக்கு உணவு பரிமாறுவதும் இனிப்பு வழங்குவதும், வீட்டு நிகழ்வுகளில் மதம் கடந்து கலந்துகொள்வதும் இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது.
‘அயோத்தி’ படத்திலும் இந்த மத நல்லிணக்கம் மிக அருமையாக வலியுறுத்தப்படுகின்றது. அது மறைமுகமான செய்தியாக இருந்தாலும் ஆழமான செய்தியாக இறுதியிலே வெளிப்படுகின்றது. அயோத்தியில் இருந்து வந்த ஒரு இந்து குடும்பத்துக்கு, பலராமின் முரட்டுத்தனம் – பிடிவாதம் எல்லாம் கடந்து உதவும் சசிக்குமார், தான் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதை கடைசி வரை வெளிப்படுத்தாமல் இருந்தது இன்னும் கூடுதலான பெருமையை படத்துக்கு சேர்க்கிறது. பாரம்பரியமிக்க ஒரு இந்து குடும்பத்தில் இருந்து வருகின்ற பல்ராமுக்கு, ஒரு இஸ்லாமியர் உதவி செய்ய முன்வருகிறார் என்று தெரிந்திருந்தால், அங்கே இன்னும் சண்டை கடுமையாக இருந்திருக்கும். சசிகுமார் உதவியைக்கூட அவர் நிராகரித்து இருக்கலாம். மத அடையாளத்தை மறைத்துவிட்டு, துன்பத்தில் இருக்கின்ற மனிதனுக்கு இன்னொரு மனிதன் சுத்தமான மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவுகிறார் என்பதை மட்டுமே முன்னுறுத்திய விதம் பாராட்டுக்குரியது.
கடைசியில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக கண்ணீரோடு பல்ராம் சசிகுமாரைப் பார்த்து உன் பெயர் என்ன என்று கேட்கின்ற பொழுதுதான் சசிகுமார், “அப்துல் மாலிக்” என்று சொல்லுவார். உடனே பல்ராம் கண்ணீர் மல்க ஓடி வந்து அப்துல் மாலிக்கை கட்டி அணைப்பார். அப்போது, ‘அன்பு மொழி பேசும் போது எல்லாம் மாறுமே’ என்ற பாடல் வரி ஒலிக்கும். உடனே பலராமின் மகள், அடுத்த வருடம் நாங்கள் ராமேஸ்வரத்திற்கு வருவோமா என்பது தெரியவில்லை. ஆனால், அப்துல் மாலிக் அண்ணாவை பார்ப்பதற்கு கண்டிப்பாக வருவோம் என்று அழுதுகொண்டே சொல்லுவாள். பார்வையாளர்கள் எல்லோருடைய கண்களிலும் கண்ணீர். மதங்களைக் கடந்த மனிதநேயமே மகத்துவமானது என்பதை ‘அயோத்தி’ படம் அருமையான வகையில் நிரூபிக்கிறது.
அ. இருதயராஜ் சே.ச <iruraj2020@gmail.com>