ஆலிஸ் மன்றோ: நோபலை திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமை

ஸிந்துஜா
“ஒரு சிறுகதை என்பது நாம் பின்பற்றும் சாலை அல்ல… அது ஒரு வீட்டைப் போல. நீங்கள் அதன் உள்ளே போய் சற்று நேரம் தங்குகிறீர்கள்; முன்னும் பின்னும் அலைகிறீர்கள். விருப்பப்படும் இடத்தில் உட்காருகிறீர்கள். அறையும் தாழ்வாரங்களும் எவ்வாறு அமைந்துள்ளன என்று பார்க்கிறீர்கள். ஜன்னல் வழியாக வெளியில் தெரியும் உலகம் எவ்வளவு மாறுதலாகக் காட்சியளிக்கிறது என்று உணருகிறீர்கள். நீங்கள் ஒரு விருந்தினராக, வாசகராக அந்த அடைக்கப்பட்ட இடத்தில் உங்கள் மாற்றத்தை எதிர்கொள்கிறீர்கள். அந்த இடம் போதுமானதாக, சுலபமாக அல்லது வளைவுகளுடன் திருப்பங்களுடன் உள்ளதா, வசதியாக அலங்காரமாக இருக்கிறதா என்று பார்க்கிறீர்கள். நீங்கள் மறுபடியும் மறுபடியும் அந்த வீட்டுக்குள், கதைக்குள், புகுந்து பார்க்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் அது முன்பு பார்த்ததைவிட வித்தியாசமாகப் பெரிதாக இருக்கின்றது. அது தனது தேவைக்காகக் கட்டப்பட்டது, நீங்கள் இளைப்பாறவோ அல்லது உங்களை மருட்டவோ அல்ல.”
ஆலிஸ் மன்றோ
ஆலிஸ் மன்றோ மீது அவருடைய வாசகர்கள் எல்லையற்ற பிரியமும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் என்று சொல்வது தேய்வழக்கு. மார்கரெட் அட்வுட் அவரை, “அகில உலக இலக்கிய சன்னியாசினி” என்று தெரிவித்த கருத்தில் ஆலிஸின் வாழ்க்கையைப் பற்றிய பார்வையும் அவரது எழுத்தின் ஆற்றலும் ஒருங்கே வெளிப்படுகின்றன.
ஜோனதன் ஃப்ரெசன் அவரை ஓர் “இமாலய சாதனை”யாகக் கண்டார்.
ஆலிஸ் மன்றோவுக்கு பரிசளித்த நோபல் குழு, அவர் இருபது பக்கங்களில் ஒரு கதையில் சாதித்து விடுவதை பலரின் நாவல்கள் சாதிக்க முடிந்ததில்லை என்று குறிப்பிட்டது. (உலகில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த வந்த நோபல் பரிசு நிர்வாகத்திடமிருந்து பதிமூன்றாவது பெண்மணியாக நோபல் பரிசை ஆலிஸ் மன்றோ பெற்றார்.)
ஆலிஸ் மன்றோவுக்கு பெரும் ஆதரவளித்து அவர் கதைகளைப் பிரசுரித்த, ‘நியுயார்க்கர்’ பத்திரிகை, “ஆலிஸ் இலக்கிய உலகுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்” என்று கூறியது.
ஆலிஸ் மன்றோ பற்றி இரண்டு சித்திரங்கள்…
பரிசு கிடைத்தவரிடம் அதைப் பற்றி அறிவிக்க நோபல் பரிசு குழு எவ்வளவு முயன்றும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவரை நன்கு அறிந்தவர்களாலும் கூட இந்த விஷயத்தில் உதவ முடியவில்லை என்று பரிசை அறிவித்த குழுவின் செயலர் கூறினார். அவருடைய சமகாலத்திய எழுத்தாளர்களான, இதே நோபல் பரிசு கிடைக்க வெகுகாலம் முயன்று கொண்டிருந்த இலக்கிய ஆளுமைகளுக்கு முன்னால் இத்தகைய அடங்கிய ஆத்மாவை நினைத்துப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
கிளின்டனில் வாழ்ந்து கொண்டிருந்த அவர் தன் பெண் வசிக்கும் விட்டோரியாவுக்குச் சென்றிருந்தார். விடியற்காலை நான்கு மணிக்கு அவரது பெண் அவரைப் படுக்கையிலிருந்து எழுப்பி நோபல் பரிசு கிடைத்த விஷயத்தைச் சொன்னாள். “தூக்கத்தின் பிடியிலிருந்து விலகாமலிருந்த என் அம்மாவுக்கு இதைக் கேட்டதும் தாங்க முடியாத வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன” என்று அவள் நிருபர்களிடம் கூறினாள்.
இரண்டாவது சித்திரம்…
இதே அமைதியும் அடக்கமும் அவரை எல்லோராலும் விரும்பப்படும் பெண்மணியாக ஆக்கிவிட்டன. அவர் தன் பிராபல்யத்துக்காக அவருடைய சமகாலப் படைப்பாளியான அட்வுட்டைப் போல அரசியல் அமைப்பை சார்ந்திருக்கவில்லை. ஒவ்வொரு முறை நோபல் பரிசு அறிவிக்கப்படும் போது கூடவே சச்சரவுகளும் புகார்களும் பலரால் எழுப்பப்பட்டு மாதக்கணக்கில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும். ஆனால், ஆலிஸ் விஷயத்தில் பொறாமைக் குரல் ஒன்றுகூடக் கேட்கவில்லை. சக படைப்பாளியான அட்வுட்டிலிருந்து, கனடாவின் பிரதமர் வரை அவருக்குக் கிடைத்த நோபல் பரிசு பற்றியும் அதற்கான அவரது தகுதி பற்றியும் பெருமிதத்துடன் பேசினார்கள்.
“இந்த நோபல் பரிசு ஆலிஸ் மன்றோவுக்குக் கிடைத்ததால் இன்று தெருவில் நடக்கும் ஒவ்வொரு கனடிய குடிமகனும் தன் தலை சற்று உயர்ந்து நிற்பதாக உணர்ந்தபடி மகிழ்ச்சியுடன் செல்வான்” என்று பிரதமர் கூறினார்.
நோபல் பரிசைப் பொறுத்தவரை சிறுகதைக்கென்று நோபல் பரிசு பெற்ற படைப்பாளி ஆலிஸ் மன்றோ ஒருவர் மட்டுமே. சிறுகதை இலக்கியம் என்பது ஏதோ நாவலை அண்டிப் பிழைப்பது, அது நாவலுக்கு அடுத்தபடியான கட்டத்தில் இருப்பது போன்ற நிழல் எண்ணங்களைத் தூரத் தள்ளிப் போட்ட பெருமை ஆலிஸின் சிறுகதைகளுக்கு உரியது. ஆனாலும் அடிமனதில் அவருக்குத் தன்னால் பல நாவல்களைப் படைக்க முடியவில்லையே என்ற குறை இருந்தது.
ஆலிஸ், ‘யுவதிகளின், பெண்டிரின் வாழ்க்கை’ என்று ஒரு நாவலை மட்டும் எழுதியிருக்கிறார். ஒரு முறை அவரின் முகவரான வெர்ஜீனியா பார்பர், “ஆலிஸின் சிறுகதைகள் வெகு நீளமானவை. அதனாலேயே அவர் நாவல் எழுதவில்லையே என்று வருத்தப்பட வேண்டியதில்லை!” என்று கூறினார்.
ஆலிஸ், தனது முதல் சிறுகதையைப் பத்தொன்பதாவது வயதில் (1950) எழுதினார். இரண்டு வருட ஸ்காலர்ஷிப்பில் பல்கலைக்கழகத்தில் படித்த சமயம் இது எழுதப்பட்டது. இந்த நாட்களில் அவர் ஓட்டல் பணியாள், புகையிலை சேகரிப்பவர், நூலகக் குமாஸ்தா என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். ஆலிஸின் முதல் சிறுகதைத் தொகுதியான, ‘இதமான நிழல்களின் நடனம்’ கனடாவின் மிக உயரிய இலக்கியப் பரிசான, ‘கவர்னர் ஜெனரல் இலக்கிய விருது’ பெற்றது. அப்போது இப்பரிசைக் குறிப்பிட்டு விக்டோரியா நகரப்பத்திரிகை ஒன்று, “பரிசை எதிர்பார்க்காத ஒரு தாய்க்குக் கிடைத்த இலக்கிய விருது” என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டது.
“இதைத் தொடர்ந்து வெளிவந்த ‘யுவதிகளின், பெண்டிரின் வாழ்க்கை’ (1971) என்ற நாவலில், மனித வாழ்வின் திகைப்பூட்டும் அச்சுறுத்தும் அம்சங்களை முன்னிறுத்தி, ஒன்றிணைந்த கதைகளாக இணைத்து எழுதியது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. “நீ யாரென்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?’ (1978) என்னும் அவரது மற்றொரு சிறுகதைத் தொகுதி மறுபடியும் ‘கவர்னர் ஜெனரல் இலக்கிய விருது’ பெற்றது. இத்தகைய அரிய விருதினை மூன்று முறை அவரது வாழ்நாளில் பெற்றார் என்பது அவரது திறமைக்கும் சாதனைக்கும் ஓர் எடுத்துக்காட்டு.
1980லிருந்து 2012 வரையிலுமான காலகட்டத்தில் ஆலிஸ் நான்கு வருடங்களுக்கு ஒரு முறையாவது ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இவரது கதைகள் உலகப் புகழ் பெற்ற ‘அட்லாண்டிக்’, ‘ஹார்ப்பர்ஸ்’, ‘நியூயார்க்கர்’, ‘பாரிஸ் ரிவ்யூ’ ஆகிய இதழ்களில் வெளிவந்தன. இருபத்தோர் வருடங்களில் ‘நியூயார்க்கர்’ அவருடைய முப்பத்து நான்கு கதைகளை வெளியிட்டுப் பெருமை தேடிக்கொண்டது. ஆலிஸ் எது எழுதினாலும் முதலில் ‘நியூயார்க்கருக்குத் தர வேண்டும் என்று அப்பத்திரிகை ஆலிஸுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது!
‘நியூயார்க்கர்’ பத்திரிகை ஆசிரியரும் பிரசுரகர்த்தருமான டக்ளஸ் கிப்சனுடன் ஆலிஸ் தொடர்ந்து பழகி நீண்ட கால நண்பராக விளங்கினார். எனவே, டக்ளஸ் பிரசுராலயத்தை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் செய்ய வந்தபோது ஆலிஸ் கனடா மாக்சிமில்லன் பிரசுராலயத்திலிருந்து தனது, ‘காதலின் முன்னேற்றம்’ என்னும் சிறுகதைத் தொகுதிக்கு வாங்கிய முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். 2011இல் கிப்சன் வெளியிட்ட அவரது நினைவுக் குறிப்புகள் நூலுக்கு ஆலிஸ்தான் முன்னுரை எழுதினார்.
ஆலிஸ், அவர் வாழ்ந்த சிறு நகர சூழலை ஒரு பிரத்தியேக அன்புடனும் முழுக் கவனத்துடனும் அவரது கதைகளில் சித்தரித்தார். கற்பனை ஓரளவுக்கு இருந்தால் போதுமானது என்னும் கொள்கைப் பிடிப்புடன் வெளிவந்த படைப்புகளில், அவரது வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களே சம்பவங்களாக, அவர் சந்தித்த மனிதர்களே பாத்திரங்களாக நடமாடியதால் அக்கதைகளின் உண்மைத் தன்மையால் இலக்கிய வாசகர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.
அவரது காலத்திய இலக்கியப் படைப்பாளிகளான வில்லியம் ஃபாக்னர், ஃப்ளானரி ஓ’கார்னர் ஆகியோரது எழுத்துக்களிலும், அவர்களது கிராமிய சூழல்களும், அபிலாக்ஷையற்ற கடும் உழைப்பாளிகளாக மனிதர்களின் சித்திரங்களும் அப்போது பிரபலமாகியிருந்தன. இந்த எழுத்தாளர்களின் பாத்திரங்களில் காணப்பட்ட ஆக்ரோஷமும் வெறியும் ஆலிஸின் கதைகளில் இல்லை. மாறாக அவர்கள் எளிமையின் வடிவாகவும் எதிர்ப்படும் அனுபவங்களுக்கு அடங்கி ஒடுங்கி நடமாடுபவர்களாகவும் இருந்தார்கள்.
ஆலிஸின் எழுத்தில் காணப்பட்ட செழுமையை அவரது வித்தியாசமான வார்த்தைகளில் காணலாம்: “விசேஷமான கவைக்குதவாத ஞானம்”, “ஒரே சமயத்தில் விளையாட்டுத்தனத்தையும் தீவிரத்தின் நுட்பத்தையும் காண்பித்த அவள்”, “கீச்சிட்ட படியே துள்ளி ஓடும் மகிழ்ச்சி!”….
ஆலிஸ் தனது வாழ்வின் அனுபவங்களாகப் பெற்றதையும் அவர் படித்த நூல்களிலிருந்து கற்றதையும் கொண்டு எழுதப் புகுந்ததாகச் சொல்லியிருக்கிறார். ‘அவருடைய சொந்த வாழ்க்கையே ஒரு நாவல்தான்; அதை அவர் சிறுகதைகளாக எழுதினார்’ என்று கார்டியன் இதழ் ஒருமுறை குறிப்பிட்டது.
1930களில் போரின் காரணமாக உலகம் எதிர்கொண்ட பொருளாதார வீழ்ச்சியின் போது, ஆலிஸ் தனது இளமைக் காலத்தை கழித்தார். சாலையின் முடிவிலிருந்த அவரது வீடு, நாற்பது வயதிலேயே பார்கின்சன் வியாதியில் சிக்குண்ட அவரது தாய், அதனால் வீட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டிய சுமை, பல்கலைக்கழகத்து உதவித்தொகையைப் பெற அவர் பட்ட கஷ்டங்கள், புத்தக புழுவாயிருந்த ஒரு மாணவனோடு அறியாத இளம் வயதில் ஏற்பட்ட திருமணம், இளம் வயதுத் தாய்மை, விவாகரத்து – இவற்றினால் மனதில் படிந்த கழிவிரக்கமும் குற்ற உணர்ச்சியும் அவரைப் பீடித்துத் தள்ளிய போது, அவர் மனநிம்மதியையும் ஆறுதலையும் பெற்றது படைப்பியக்கத்தின் மூலமே.
ஆலிஸின் எழுத்துக்கள் செக்காவின் எழுத்துக்களுடன் பல விமர்சகர்களால் ஒப்பிடப்பட்டுப் பாராட்டைப் பெற்றது. கதைகளில் கதைக் கருவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நிகழ்வுகளின் இயக்கத்தில், உண்மையின் பல முகங்கள் அலட்சியமாகத் தம்மை வெளிப்படுத்துவதை ஆலிஸ் உரத்த குரல் தவிர்த்து எழுதியிருப்பதைப் படிப்பது, ஒரு நூதன வாசக அனுபவம். திடீரென்று எதிர்ப்படும் ஓர் தரிசனம், அது தீர்த்துவிடும் பிரச்சினை, குழப்பமான கட்டம், ஒரு புதிய நோக்கில் ஆழமாக அதே சமயம் ஆரவாரமற்று நோக்குவதில் ஏற்படும் பிரகாசம் ஆகியவை ஒரு சிறுகதையைப் பல விதமாக நோக்கும் வாய்ப்பைத் தருகின்றன.
ஆலிஸ் ஆரம்பக் காலக் கதைகளில் வரும் இளம் பெண்கள் தமது வயதுடன், குடும்பத்தை எதிர்கொள்ளும் சங்கடமான தருணங்களை, அவர்கள் வாழ்ந்து வரும் சிறு நகரங்களின் சூழலுடன் புனைவாகத் தந்தார். ஆனால், பிற்காலத்தில் அவருடைய ‘வெறுப்பு, சிநேகம், விருப்பு, காதல் திருமணம்’ என்னும் சிறுகதைத் தொகுதியும் ‘விலகல்’ என்னும் தொகுதியும் அவர் எழுத்தில் நடுத்தர வயதுப் பெண்களின் மன உளைச்சல்கள், அவர்களது தனிமை, கணவன் – மனைவி உறவுகள் ஏற்படுத்தும் ஒவ்வாமை, வயதாவது போன்றவற்றை பரிசீலித்தன.
செக்கோவும் ஜாய்சும் தன்னை பதித்த எழுத்தாளர்கள் என்ற ஆலிஸின் கதைகளில் இவ்விருவரின் தாக்கம் ஆரம்பக் காலத்தில் அதிகம் காணப்பட்டது. ஆலிஸின் முதிய தலைமுறையைச் சார்ந்த ஜேன் ஆஸ்டனுடன் அவர் எப்போதும் ஒப்பிடப்பட்டார்.
தனது தாயைப் பற்றிய உணர்வுகள் அவரது வாழ்க்கையைப் பாதித்தன என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டார். “நாம் வளரும் போது தாயின் தாக்கங்கள் நம்மிடமிருந்து விலகியிருப்பது அவசியம்; ஒரு தாய் தனது ஆசைகள் தேவைகள் ஆகியவற்றுக்காகக் குழந்தைகள் மீது செலுத்தும் அதிகாரம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நமது வாழ்க்கையை நாம்தான், நம் தாய் அல்ல, தீர்மானிக்க வேண்டும். நமக்கென்று நாம் விதித்துக் கொள்ளும் நியதிகளையும் எல்லைகளையும் ஒட்டி நடக்க நாம் பிரயத்தனபடாத வரையில் வாழ்க்கை திருப்தி தராத ஓர் போராட்டமாகவே முடியும். இதைத்தான் நான் செய்தேன். எங்கள் குடும்பத்தில் என் தாய் ஓர் அதிகாரம்மிக்க சக்தி வாய்ந்த மனுஷியாக நடமாடினாள். அவளைப் பிரிந்து நான் வந்தது என் முக்திக்காக நான் செய்த முடிவு!”
ஆலிஸின் சிறுபிராயம் இனிமையற்றதாக இருந்தாலும் எழுத ஆரம்பித்ததன் மூலம் தனது தனி உலகைப் படைத்துக் கொண்டார். அங்கு வெளியுலகில் யாரும் செய்யத் துணியாத காரியங்களைச் செய்யும் தனித்தன்மை நிறைந்த பிரகிருதி என்றொரு எண்ணம் தனக்கு ஏற்பட்டு விட்டதாகக் கூறியிருக்கிறார். அன்றைய சூழலில் பெண் எழுதுவது என்பது ஆண்களால் மதிக்கப்படாததாயிருந்தது. பெண்களை மதிக்காமலிருந்த சமூகச் சூழ்நிலையை அவர் வெறுத்தார். “இருபத்தி ஐந்து வயதுக்குள் ஒருத்திக்குத் திருமணம் ஆகாவிட்டால் அவள் வாழ்க்கையில் பெரிய தோல்வியை அடைந்தவள்” என்று அன்றைய சமூகம் கருதியதாக ஆலிஸ் கூறினார்.
ஒரு நிகழ்வின் வெவ்வேறு பரிமாணங்களை அவரது சிறுகதைகளில் வெளிப்படுத்தினார். இதனாலேயே அவர் தான் முன்பு எழுதிப் பிரசுரமான கதையையே சில வருடங்கள் கழித்துப் புதிய புனைவாக மாற்றி எழுதும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ‘ரீப்பரைக் காப்பாற்று’, ‘வேட்கை’ என்ற இரு சிறுகதைகளை முறையே 1998லும் 2004லும் இரண்டு வித்தியாசமான கதைகளாக எழுதினார். ‘அதிகாரங்கள்’ என்னும் கதையை எட்டு கதைகளாக வெவ்வேறு காலங்களில் எழுதினார்! ‘வீடு’ என்ற கதையை மூன்று விதத்திலும் ‘மரக்கட்டை’ என்னும் கதையை இரண்டு விதத்திலும் முப்பது வருட இடைவெளியில் திரும்ப எழுதினார்.
‘வீடு’ கதையில் வரும் பாத்திரங்களின் குணங்கள், கதைக் கரு, கண்ணோட்டம், வார்த்தைகளின் ஒளியமைப்பு, இடைச் சொற்கள், நிறுத்தக்குறிகள் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள். போதாதென்று கதாபாத்திரங்களும் மாறுகிறார்கள். 1980இல் நடுத்தர வயது, 2009இல் முதியவர். 1980இல் வெளியிடப்பட்ட கதை மூன்று பிரிவுகளை அடங்கியிருந்தது. 2009இல் அது எட்டு பிரிவுகளாக உருவெடுத்து வந்தது!
தன்னுடைய ‘விலகல்’ தொகுதி வெளிவருவதற்கு முன் ஃபுரூப் பார்க்க மறுத்துவிட்டார், “மறுபடியும் மறுபடியும் திருத்திக்கொண்டே இருப்பேன்” என்று.
ஆலிஸ், 1980ல் தனது படைப்புகளைக் கல்கரி ஆவணப் பல்கலைக்கழகத்துக்குக் கொடையாக அளித்தார். அவை பல்கலை வளாகத்தில் இருபத்தாறு அடி நீள இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டன!
“நான் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தைச் சேர்ந்த எழுத்தாளர் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், நான் குறிப்பிட்ட இடத்தை வைத்துத்தான் எழுத வேண்டும் என்று நினைத்து எழுதுவதில்லை. என் சிறுகதைகளில் இடத்திற்கு ஒரு இடம் உண்டு! ஆனால், அது எதேச்சையாக வருவது. பிரயாசைப்பட்டு அல்ல. சமையலறையில் தரையை மூடியிருக்கும் மெருகிட்ட துணியை நீக்கினால் உள்ளே குகைகள் அடர்ந்து கிடப்பதைப் பார்க்கலாம் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறதா? இதுவரை பார்த்திராத, கேட்டிராத, கேள்வியெழுப்பும் வியப்பைத் தரும் சூழல்களையே நான் என் எழுத்தில் கொண்டு வருகிறேன்” என்று ஒரு பேட்டியில் ஆலிஸ் தெரிவித்தார். இதுவே அவரது சிறுகதைகளின் உயிர்நாடியாக இருப்பதை அவரைத் தீண்டும் இலக்கிய வாசகர் உணருவது நிச்சயம்.
ஸிந்துஜா <weenvy@gmail.com>